உள்ளடக்கத்துக்குச் செல்

திருவாசகத்தேன்/குறிக்கோள் சார்ந்த வாழ்வு

விக்கிமூலம் இலிருந்து



குறிக்கோள் சார்ந்த வாழ்வு


ஞ்சை மாவட்டத்தில் மண்ணியாற்றங் கரையில் திருச்சேய்ஞலூர் என்ற ஒரு சிற்றூர் உள்ளது. இயற்கை வளங்கொழிக்கும் ஊர் அது. வேத ஆகம சாத்திரங்கள் பயின்ற அந்தணர்கள்- நித்திய வேள்வி இயற்றும் சீலமுடைய அந்தணர்கள் பலர் வாழ்ந்த ஊர் திருச்சேய்ஞலூர்க் கிராமத்தில் வேள்வி குண்டப் புகை அணைந்ததே இல்லை.

இந்த ஊரில் எச்சதத்தர்- பவித்திரை என்ற தம்பதியருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. பிள்ளையின் திருநாமம் விசாரசருமர். அவர் இளமையிலேயே வேதங்களில் ஆறங்கங்களில், சைவாகமங்களில் வியக்கத் தக்க அறிவு பெற்றிருந்தார். விசாரசருமருக்கு முறைப்படி முப்புரி நூல் அணிவித்தல், வேதங்களில் பயிற்சி தொடங்குதல் முதலிய சடங்குகள் நடைபெற்றன. விசாரசருமர் வாழ்க்கையின் இயல்பையும் குறிக்கோளை யும் உணர்ந்தார். சிவத்தைப் பூசிக்க வேண்டும் என்று தெளிந்தார்; அறிந்து கொண்டார்.

ஒருநாள் மண்ணியாற்றங்கரையில் தன்னையொத்த பிள்ளைகளுடனும் பசுக் கூட்டத்தினுடனும் சென்ற பொழுது ஒரு பசு தன்னை மேய்ப்பானை முட்டப் போயிற்று. மேய்ப்பான் தற்காப்பு அடிப்படையில் அந்தப் பசுவைக் கண்டபடி அடித்துவிட்டான். இது கண்ட விசாரசருமர் மிகுந்த வேதனையுற்று மேய்ப்பானிடமிருந்து அடிபட்ட பசுவை மீட்டார். "பசுவை அடிக்கலாமா? நாளும் பால் சொரிந்து உயிர்க் குலத்தையும் பூசை முறைகளையும் வளர்க்கும் பசுவல்லவா? பசுவின் உடம்பே புண்ணியத்தின் புதையல்" என்றெல்லாம் அறிவுரை கூறினார், அதுமட்டுமின்றி, இனி நீ பசுக்களை மேய்க்க வேண்டாம், நானே மேய்த்துக் கொள்கிறேன்' என்று கூறி அந்த அந்தணச் சிறுவர் பசு மேய்க்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். செய்யும் தொழிலுக்குச் சாதிகள் தடையில்லை என்பது பழைய மரபு.

அன்று முதல் பசுக்களை மேய்க்கும் பொறுப்பை விசாரசருமர் சிறந்த முறையில் செய்தார். பசுக்கள் மகிழ்ச்சியாக இருந்தன. நிறைய பாலும் கொடுத்தன. விசாரசருமர் பசுக்களை மிக நன்றாக வளர்த்தமையால் பசுக்கள் தாம் ஈன்ற கன்றுகளைப். பிரிய நேரிட்ட பொழுதும் வருந்தவில்லை; ஆனால் விசாரசருமரை ஒரு நொடிப் பொழுதும் பிரிய ஒருப்படவில்லை. விசாரசருமரை நினைத்தாலே பால் பொழியும் அள்வுக்குப் பசுக்களின் நின்ல வ்ந்து விட்டது. தாமே பசுக்கள் பொழியும் பாலைச் சிவபெருமானுக்கு முழுக்காட்ட விசாரசருமர் எண்ணினார். ஆதலால் மண்ணியாற்றின் மணலில் ஒரு சிவலிங்கத் திருமேனியை எழுந்தருளச் செய்து அந்த மூர்த்திக்கு, பசுக்கள் தாமே பொழிந்த, பாலைத் திருமுழுக்காட்டினார். இது நாள்தோறும் நடைபெறும் பழக்கமாயிற்று. இங்ஙனம் பால் சுரந்தமையால் வீட்டிலும் பசுக்கள் தந்த பால் குறையவில்லை. இருப்பினும் ஊர் சும்மா இருக்குமா? ஒருவன் விசாரசருமர் சிவத்தினை எழுந்தருளச் செய்து பால் முழுக்காட்டுவதைப் பசுக்களுக்குரிய அந்தணர்களிடம் கூறிவிட்டான். அந்தணர்களுக்கு யாதொரு இழப்பும் இல்லை. அவர்களுக்குக் கறந்த பாலில், யாதொரு குறைவும் இல்லை. அப்படியிருந்தும் சபையில் விசாரசருமரின் தந்தையை அழைத்து, விசாரசருமரின் அடாத செயல் பற்றிக் கூறினர். விசாரசருமரின் தந்தை எச்சதத்தர் தவறு நிகழ்ந்திருக்காது என்றும் அப்படி நிகழ்ந்திருந்தால் அதற்குத் தாமே பொறுப்பேற்பதாகவும் உறுதி கூறினார்.

மறுநாள் விசாரசருமர் வழக்கம்போல் பூசையில் அமர்ந்தார்; பூசை செய்தார். தம்முன் எழுந்தருளியிருந்த இறைவனுக்குப் பால் முழுக்காட்டினார். இச்செயலை, ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த எச்சதத்தர்விசாரசருமரின் தந்தை வெகுண்டு தடித்த கோலினால் விசாரசருமரை அடித்தார். விசாரசருமரின் சிவயோகம் கலையவில்லை. எச்சதத்தர் தீராத வெகுளியால் பால் முழுக்காட்டுக்கு என்று வைத்திருந்த பாற்குடத்தைத் தனது காலால் இடறி விடுகிறார். விசாரசருமரின் சிவயோகம் கலைகிறது. சிவ பூசைக்கு உற்ற இடர்ப்பாட்டைச் சடுதியில் உணர்கிறார். பாற்குடத்தை உதைத்த கால்களை வெட்டி விடுகிறார். எச்சதத்தர் கால்களை இழந்து வீழ்ந்தார். சிவபெருமான் அம்மையப்பராக எழுந்தருளிக் காட்சி தந்தருளி தாம் உண்பனவும் உடுப்பனவும் பெறும் சண்டேசுவரர் என்றும் பதந்தந்தருளினார்.

இந்த வரலாறு தரும் படிப்பினைகள் பலப்பல. முரண்பாடுகளும் உடைய வரலாறு இது.

பசுக்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை என்ற பாடம் மிக மிக முக்கியம். பசு இந்த நாட்டின் செல்வம். பசுக்களை முறையாக வளர்க்க வேண்டும். பசும்புல் மேயவிடுதல், நறுநீர் குடிக்கத் தருதல், குளிர் நிழலில் படுத்து இழைப்பாறச் செய்தல் ஆகியன பசுப் பாதுகாப்புக்கு முக்கியம். இத்தகைய ஏற்பாடுகள் இன்று நமது நாட்டில் இல்லை. நாம் பசுக்களை வணங்கக் கற்றுக் கொண்டிருக்கிறோமே தவிர, வளர்க்கக் கற்றுக் கொள்ளவில்லை. குடம் குடமாகப் பால் கறக்கும் இந்தியப் பசுக்கள் இன்று உழக்குகள் அளவிலேயே கறக்கின்றன. பசுக்களில் அயல் நாட்டின் மோகத்தால் உள் நாட்டினம் அருகிப் போய் கொண்டிருக்கிறது. பசுக்களில் நமது மரபு வழி வந்த இனப் பசுக்களையே முறையாக வளர்க்க வேண்டும். எனவே, கிராமம் தோறும் முறையாக அமைந்த மேய்ச்சல் தரைகள் தேவை.

மனிதக் கூட்டம், தமக்கு இழப்பில்லையானாலும் மற்றவர்கள் ஒன்றை அனுபவிக்கவிட மாட்டாது. அதனாலேயே அடிமைத் தனத்தின் துர்க்குணமாகிய பொறாமை மனித குலத்தைவிட்டு அகலவில்லை. இன்று உலகம் முழுதும் வாழும் மக்கள் உண்டு மகிழப் போதிய உணவு உண்டு. ஆனாலும் பஞ்சம் இருக்கிறது. தனி மனிதனின் பேராசையே பஞ்சத்திற்குக் . காரணம். விசாரசருமர் இறைவனுக்குப் பால் முழுக்காட்டியதில் பசுக்களில் சொந்தக்காரர்களுக்கு யாதோர் இழப்பும் இல்லை. அவர்களுக்குக் கிடைத்த பாலில் குறைவும் ஏ ற் பட வில் ைல. ஆயினும் விசாரசருமரின் வழிபாட்டிற்கு இடையூறு செய்கின்றனர். இதுதான் மனிதனின் விபரீத புத்தி.

சண்டேசுவரர் சிவயோகத்தில் அமர்ந்தருளிப், பூசை செய்கிறார். தந்தை எச்சதத்தர், தன் மகன் விசாரசருமரை அடிக்கிறார். ஆயினும் விசாரசருமரின் சிவயோகம் கலையவில்லை; பூசை நிற்கவில்லை. தன்னை மறந்து தலைவன்தாள் நினைந்த நிலை. தற்சார்பு முழுதும் அற்ற நிலை. ஆதலால், தந்தை அடித்த அடிகள் யாதொரு பயனையும் தரவில்லை. தந்தை எச்சதத்தர் பாற்குடத்தை இடறிய நிலையில் விசாரசருமருக்கு விழிப்பு வந்துவிட்டது. ஏன்? குறிக்கோளுக்கு அல்லவா இடையூறு வந்துவிட்டது. குறிக்கோளை இழந்து வாழ்வதால் பயன் என்ன? விசாரசருமரின் குறிக்கோளாகிய சிவத்திற்குத் திருமுழுக்காட்டல் என்ற குறிக்கோளுக்கு இடையூறு செய்தவரின் கால்கள் வெட்டி வீழ்த்தப்படுகின்றன.

தற்சார்பற்றுக் குறிக்கோள் சார்ந்து வாழ்ந்த நிலை, விசாரசருமரின் நிலை. இன்று நமது மக்கள் கூட்டத்திற்குக் குறிக்கோள் இல்லை. ஒரோவழி இருந்தாலும் குறிக்கோளுக்காகப் போராடுவதில்லை; வாழ்வதில்லை. எங்கும் தற்சார்பு வாழ்க்கை நிலையே மேலோங்கி நிற்கிறது. இது நமது மரபு இகந்து வாழும் முறையாம். குறிக்கோள் இலாது வாழும் வாழ்க்கை, கெட்ட வாழ்க்கை.

குறிக்கோள் அவரவர் நிலையில் அவரவர் தகுதி, விருப்பங்களுக்கேற்ப எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆதலால், குறிக்கோள் என்பது ஓர் ஒழுங்கமையுடன் அமையாது; அமையமுடியாது; அமையக்கூடாது. தான் கருதும் குறிக்கோள்களின் காரணமாக ஒருவன் செய்யும் அறமல்லாத செயல்கள் அறமாகக் கருதப்பெறும். இஃது உலக வழக்கில் சிறப்புடையது. ஒரு நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்கச் செய்யப்படும் கொலைகள், கொலைகளாகக் கருதப்படுவதில்லை. இது வரலாறு புகழும் வீரம்; தியாகம்! அதுபோலத்தான் வழிவழியாக நடைபெற்று வரும் மாந்தரினத்தின் குறிக்கோளாகிய வழிபாட்டிற்கு இடையூறு செய்யக்கூடாது. வழிபாடு குறிக்கோள். குறிக்கோளுக்ரு இடையூறு செய்தது குற்றம். குற்றத்திற்குத் தண்டனை கால்களை இழத்தல். அன்பின் மிகுதியால் பிறர் நன்மையுற- பலர் நன்மை யடையச் செய்யப்பெறும் காரியங்கள் காட்சியளவில் கொடுமை போலவும் பாபம் போலவும் தோன்றினாலும் அலுை கொடுமையும் அல்ல, பாபமும் அல்ல. காரணம் அன்பு: குறிக்கோள் வெற்றிபெறுதல். அங்ஙனமின்றிஅன்பு இல்லாமல் வரலாற்றுக்கும் மாந்தர் கூட்டத்துக்கும் பயன் இல்லாமல் செய்யப்படும் சில பணிகள் அறம் போலத் தோன்றினாலும் அவை அறம் அல்ல; குறியெதிர்ப்பு உடையன.

இந்த விசாரசருமர் பற்றி- சண்டேசுவரர் பற்றி மாணிக்கவாசகர் பாடிய திருப்பாடல் சிந்தனைக்குரியது.

மாணிக்கவாசகர் 'தீதில்லை மாணி’ என்று தொடங்குகின்றார். ஆம் விசாரசருமர் இளம் வயதினர். அவருக்குத் தீய பயிற்சி இல்லை! தீய பழக்கங்களும் இல்லை! தூய்மையான வாழ்க்கையுடன் வளரும் இளைஞர் விசாரசருமர். தந்தையின் தாளைத் தடிந்த கொலைகாரர். என்ற எண்ணம் வந்துவிடக்கூடாதே என்ற முற்காப்புணர்வுடன் 'தீதில்லை மாணி' என்றார். 'தீதில்லை' என்று மட்டும் பொருள் கொண்டால் தன் தந்தையின் எச்சதத்தரின் காலை விசாரசருமர் தடிந்தது குற்றமும் இல்லை; தீமையும் இல்லை என்பதாகும். ஏன்? வழிவழி வளர்ந்து வந்துள்ள மரபுகளைக் காக்கும் கடமை பூண்ட ஒருவர் அந்த மரபுகளையே அழிப்பதை எங்ஙனம் ஏற்க முடியும் மரபுகளை அழித்தவர்கள்- அழித்துக் கொண்டிருப்பவர்கள் வாழ்ந்தால் என்ன? இறந்தால். என்ன? அடுத்தடுத்து வரும். தலைமுறைகளுக்கு உள்ள கடமை, வரலாற்றைத் தூக்கிப் பிடிப்பதுதான். அதைக் செய்யாதவர்கள் இருப்பது எற்றுக்கு? என்று உணர வைக்கிறார் மாணிக்கவாசகர்.

எச்சதத்தர், விசாரசருமருக்கு என்ன தீங்கு செய்திருந்தாலும் மன்னிக்கப்பட்டிருப்பார். ஆனால் எச்சதத்தர் செய்ததோ திருமுழுக்குக்கு வைத்திருந்த புாற்குடத்தை இடறிவிட்டதாகும். எனவே, செழுந்தமிழ் வழக்குக்கும். தமது குறிக்கோளுக்கும் இடையூறு விளைவித்தமையால் தாதை தாள் தடியப்பட்டது. எந்த உறுப்பு தவறு: செய்ததோ அந்த உறுப்புக்குத்தான்தண்டனை தரப்பட்டது. ஆயிரம்தான் சொன்னாலும் எச்சதத்தர் தந்தை எச்சதத்தரும் வழிபடும் திருமேனிக்கு இடையூறு செய்யவில்லை. இடறிவிட்டது பாற்குடத்தையே! இந்தக் குற்றத்திற்கு காலையே வாங்குவதா? இது பாதகம் இல்லையா? என்று உலகவர் பேசுவதும் உண்மைதானே! உலகவர் பாதகம் என்று நினைந்து கூறினாலும் சோறும் பெற்றார். உடல் வளர, வாழச் சோறு தேவை. 'சோறு' என்ற சொல்லுக்குப் பயன் அல்லது வீடுபேறு என்றும் விளக்கம் கூறலாம். இளையான்குடிமாறர் வரலாற்றில் 'சோறிட்டுச் சோறு பெற்றார்' என்பார் சேக்கிழார் பெருமான். இங்கு விசாரசருமர், சண்டேசுவர் எனும் பதம் பெற்றார் என்பதனை உணர்த்த பாதகமே சோறு பற்றினவா என்றார் மாணிக்கவாசகர்.

திருசேய்ஞலூர் விசாரசருமர் குறிக்கோள் பேணினார். சண்டேசுவரர் எனும் பதம் பெற்றார்.

இன்று குறிக்கோள் சார்ந்த வாழ்வு மலர்தல் தேவை. இன்றைய உலகம் அவாவி நிற்பது குறிக்கோளுடைய மக்களேயே | குறிக்கோளுக்காகப் போராடும் மக்களையேயாம்.

தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டும்
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழப்
பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்

( திருத்தோணோக்கம்-7)