வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்/விடாமுயற்சியால் வெற்றி

விக்கிமூலம் இலிருந்து
12
விடாமுயற்சியால் வெற்றி பெற்றவர்


சிறுவயதில் ஏதேனும் ஒன்றைச் செய்ய வேண்டும் என்று தோன்றுவது இயற்கை. பெரியவர்களானதும் அதைச் செய்து முடிப்போமோ என்பது தான் யாரும் சொல்ல முடியாத புதிர் ஆனால், சின்ன வயதில் ஒரு தீர்மானத்திற்கு வந்து அதைச் செய்தும் காட்டியவர் அட்மிரல் ரிச்சர்ட் பையர் என்பவர்.

அட்மிரல் பேரி என்பவர் வட துருவத்திற்கு போக அரும்பாடுபட்டார். அங்கு போக அவர் பட்ட கஷ்டங்களை சொல்லவே இயலாது. இதை வர்ஜீனியா நகரத்தைச் சேர்ந்த சுமார் பன்னிரண்டு வயது உள்ள ரிச்சர்ட் பையர் பத்திரிகைகள் மூலம் படித்தறிந்ததும் அவர் மனதில் ஒரு அசட்டு எண்ணம் உதித்தது. “வட துருவத்தை நான் அடைந்தே தீருவேன்” என்று தீர்மானித்தார். இந்தத் தீர்மானத்தை அவர் 1900ம் வருஷம் தம் குறிப்பில் எழுதி வைத்தார்.

தீர்மானத்துடன் அவர் நின்றுவிடவில்லை முதலில் பல இடங்களுக்குச் சென்று பார்க்க வேண்டும் என்று எண்ணினார். அதற்காக கப்பல் படையில் சேர்ந்து நல்ல பயிற்சி ஏற்பட வேண்டும் என்று விரும்பினார். அதற்கு இணங்க அவர் கப்பல் படையில் சேர்ந்து பதினான்கு ஆண்டுகள் பல நாடுகளுக்கும் சென்றுவந்தார். பிறகு ஊர் திரும்பியதும் கல்லூரியில் சேர்ந்தார். கப்பல் படையில் இருந்தால் தன்னால் வட துருவத்திற்குப் போக முடியாது என்பதை உணர்ந்த அவர் அதற்கு ஒரு தந்திரம் செய்தார். கப்பல் படையிலிருந்து விலகிக் கொள்வதற்கு தம்முடைய உடலில் ஏதாவது ஒன்றை ஊனமாக்கிக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தார். அதன்படியே, கல்லுரியில் நடக்கும் குத்துச் சண்டை, மல்யுத்தம் முதலிய வகுப்புகளில் சேர்ந்து பழகினார். ஒருநாள் வேண்டுமென்றே மல்யுத்தம் செய்யும் போது கால் எலும்பை முறித்துக்கொண்டார். இக்காரணத்தால் அவர் தம்முடைய இருபத்திநான்காவது வயதில் கப்பல் படையிலிருந்து விலக்கப் பட்டார். கப்பல் படையிலிருந்து விடுதலை கிடைத்ததும் விமானம் ஓட்டக் கற்றுக்கொள்ள நினைத்தார் விமானம் ஒட்டுவதற்கு கால்கள் நன்றாக இருக்க வேண்டும். ஒரு கால் ஊனமான அவருக்குப் பயிற்சி அளிக்க மறுத்தனர். ஆனால், பெருத்த முயற்சி செய்து பையர் விமானம் ஒட்ட கற்றுக் கொள்ளும் வசதியைப் பெற்றார். கால் ஊனமான காரணத்தால், அவர் இரண்டு தடவை விமானத்தை வேறு ஒரு விமானத்தின் மீது மோதிவிட்டார். இதனால் அவர் விமானம் ஓட்டக் கற்றுக்கொண்டும் பலனில்லாமல் இருந்தது. அதனால் அவருக்கு விமானம் ஓட்டுவதற்கு அரசாங்கம் அனுமதி அளிக்க மறுத்தது.

அரசாங்கத்தாரிடம் வெகுவாக வாக்குவாதம் செய்து விமானம் ஓட்ட அனுமதி பெற்றார் பையர். ஆனால், அவர் வெகு நாளைய ஆவலான வடதுருவத்தைக் காணவேண்டும் என்பதற்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. பையர் இதனால் மனம் உடைந்து போய்விடவில்லை. அவர் அரும்பாடுபட்டு சில பணக்காரர்களைக் கண்டு தன் எண்ணத்தைச் சொன்னார். அந்த பணக்காரர்கள் அவருடைய எண்ணத்தை அறிந்து அவருக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தனர்.

பையர் வடதுருவப் பிரயாணத்தைத் துவக்கினார். மிகவும் கஷ்டப்பட்டு வட துருவத்தை அடைந்தார். அங்கு ஒரு அமெரிக்கக் கொடியை நாட்டிவிட்டுத் திரும்பினார். முதலில் வடதுருவத்தைக் காண வேண்டுமென்றிருந்த அவருக்கு அதைக் கண்ட பிறகு தென் துருவத்தையும் காண வேண்டும்மென்று தோன்றியது. அதனால் உடன் அங்கு செல்லவும் முயற்சி செய்தார் வடதுருவத்தை அடைந்ததுபோல் தென்துருவத்தையும் அடைந்தார். அங்கும் ஒரு அமெரிக்கக் கொடியை நாட்டி வந்தார். அவர் ஊர்திரும்பியதும், முன்னர் விமானம் ஓட்டவே அனுமதி அளிக்க மறுத்த அரசாங்கமும் உதவியளிக்க மறுத்தவர்களும், அவரை வரவேற்கக் காத்துக் கொண்டிருந்தனர். லட்சக்கணக்கான மக்கள், அவர் வரவை எதிர்நோக்கி இருந்தனர். ரிச்சர்ட் பையருக்கு கிடைத்த வரவேற்பு அமெரிக்காவில் வேறு எவருக்கும் கிடைத்திருக்காது. அமெரிக்க அரசாங்கம் அட்மிரல் பட்டத்தையும் அளித்தது. அட்மிரல் ரிச்சர்ட்தான் முதன் முதலில் வடதுருவத்தையும் தென் துருவத்தையும் கண்டவர். விடாமுயற்சியால் வெற்றி கண்டார் பையர்.