வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்/இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியை
இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியை
திணறச் செய்தவர்
ஆயுள் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகளைப் பற்றி பல கதைகள், நிகழ்ச்சிகள் நகைச்சுவையாக எழுதப்பட்டிருக்கின்றன.
இன்ஷ்யூரன்ஸ் பாலிஸிகள் சேர்ப்பதற்காக கம்பெனிக்காரர்கள் பலவாறாகக் கஷ்டப்படுவதாகவும் கதைகளில் வர்ணிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், ஒரு நிகழ்ச்சி இதற்கு மாறாக நடந்திருக்கிறது. ஒருவர் தம்மை இன்ஷ்யூர் செய்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர் எவ்வளவு முயற்சிசெய்தும் எந்த இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியும் அவருடைய கோரிக்கையை ஏற்கவில்லை. இந்தச் சம்பவத்தைப் பார்க்கும்போது இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகளைப் பற்றி எழுதப்பட்டுள்ள நகைச்சுவை கதைகள் எல்லாவற்றையும் இது தோற்கடித்து விட்டதாகவே தோன்றுகிறது.
இன்ஷ்யூரன்ஸ் செய்துகொள்ள முன்வந்தவர் பெயர் கிளைடுபெட்டி. அவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். இளைஞராக இருக்கும்போது அவர் தம் மனம்போல் திரிவதில் நாட்டம் கொண்டவர். ஒரு சமயம், சர்க்கஸ் கம்பெனி ஒன்று அவர் இருந்த ஊருக்கு வந்திருந்தது. அந்த சர்க்கஸ் கம்பெனியில் காட்டு மிருகங்களை ஆட்டி வைப்பதைக் கண்டு கிளைடுபெட்டி அதிசயித்தார். அதைப்போல் தாமும் காட்டு மிருகங்களை ஆட்டிவைக்க வேண்டும் என்று எண்ணினார் உடனே வீட்டிற்கு வந்ததும் வீட்டிலிருந்த நாய்களை எல்லாம் ஒன்று சேர்த்து, சர்க்கஸ் வேலைகளைப் பயிற்றுவிப்பதில் முனைந்தார். சில நாட்களிலேயே வீட்டிலிருந்த ஆறு நாய்களும் அவர் சொன்னபடி செய்யலாயிற்று. பிறகு, அவர் அந்தச் சர்க்கஸ் கம்பெனிக்குச் சென்று தம்மைச் சேர்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். அவர் இளைஞராக இருப்பதைக் கண்டு சர்க்கஸ் கம்பெனிக்காரர் அவரை சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டனர். அதேபோல, பல சர்க்கஸ் கம்பெனிகளுக்கும் சென்று வேலை கேட்டார். எல்லாரும் ஒன்றுபோல், அவரைச் சேர்த்துக்கொள்ள மறுத்துக் கொண்டே இருந்தனர். கடைசியாக, ஒரு சர்க்கஸ் கம்பெனியில் அவருக்கு மிருகங்களை அடைத்து வைக்கும் கூண்டுகளைச் சுத்தம் செய்யும் வேலை கிடைத்தது. அவ்வேலையில் இருந்து கொண்டே கிளைடுபெட்டி காட்டுமிருகங்களை ஆட்டிவைக்கும் வேலைகளைக் கற்றுக்கொண்டார்.
கூண்டைச் சுத்தம் செய்யச் சென்ற அதே சர்க்கஸ் கம்பெனியில், அவர் மிருகங்களை ஆட்டி வைப்பவராக நியமனம் பெற்றார். ஆனால், ஏற்கனவே இருந்தவர்களெல்லாம் மெச்சும்படியாக கிளைடுபெட்டி மிருகங்களை ஆட்டி வைக்கலனார். ஒரே சமயத்தில் 40 சிங்கங்கள், 6 புலிகள், சிறுத்தை, ஆடு முதலியவைகளை ஒரே கூண்டில் வைத்துக் கொண்டு ஆட்டிப்படைக்கத் தலைப்பட்டார். அத்துடன் நில்லாமல் சிங்கத்தின் வாயிலும் தன் தலையை விட்டுக் காட்டலானார். இதைக் கண்ணுற்ற பொது மக்களும், மிருகங்களை ஆட்டிவைக்கும் சர்க்கஸ் நிபுணர்களும் திகைத்தனர். கிளைடுபெட்டியின் புகழ் அமெரிக்காவில் மாத்திரமின்றி பல நாடுகளிலும் பரவலாயிற்று.
கிளைடுபெட்டி உயிரைப் பணயமாக வைத்தே சர்க்கஸ் தொழிலை செய்து வந்திருக்கிறார். அவருக்கு மிருகங்களால் அபாயம் ஏற்படாமல் இல்லை. சுமார் 24 தடவை கொடிய மிருகங்களின் வாயிலிருந்து அவர் தப்பியிருக்கிறார். அவர் உடலின் பாகங்களை எல்லாம் மிருகங்கள் கடித்திருக்கின்றன. அவற்றை அவர் பொருட்படுத்தவே இல்லை. மேலும் அவர் மிருகங்களை ஆட்டி வைக்கும்போது ஒரு ஒடிந்த நாற்காலி, சாட்டை, பயமுறுத்துவதற்காக வெடிச்சப்தம் கேட்கும் துப்பாக்கி ஒன்று இவைதான் வைத்துக் கொள்கிறார். இந்த நிலையில் அவருடைய ஆயுளை இன்ஷ்யூர் செய்துகொள்வது என்றால் எந்தக் கம்பெனிதான் துணிந்துமுன்வரும்?
இந்த இன்ஷ்யூரன்ஸ் விஷயத்தைப் போல் மற்றொன்றும் இருக்கிறது. கிளைடுபெட்டி காட்டு மிருகங்களை ஆட்டிப் படைத்தாலும் அவருக்கு மிகவும் விருப்பமான பிராணி நாய்தான்! அதை சர்க்கஸ் வேலை செய்யச் சொல்வதே அவருக்கு மிகுந்த விருப்பம். சர்க்கஸ் கம்பெனியில் கொடிய மிருகங்களை ஆட்டிப் படைக்கும் கிளைடுபெட்டி வீட்டில் பிரியமான பிராணிகளான நாய்களை வேடிக்கை செய்ய வைக்கிறார். அதில் தான் அவருக்கு மகிழ்ச்சி ஏற்படுவதாகவும் கூறுகிறார்.