பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௫. திராவிட மொழிகள் II



தமிழ் :

தமிழ்மொழி தென்னிந்தியாவெங்கணும் பரவியுள்ளது. அதனை ‘அரவ’ மென்று மழைப்பர். மேற்கே மைசூர், மேற்குத் தொடர்ச்சி மலைகள்வரை அம்மொழி பயின்றுவருகின்றது. வடக்கே சென்னைப்பட்டினம் முடியவும் அதற்குச் சற்று அப்பாலும் அது பயின்று வருகின்றது. ஈழமென்னும் இலங்கையின் வடபகுதியிலும் தமிழ்மொழியே நாட்டு மொழியாக இருந்துவருகின்றது. 1901-ஆம் ஆண்டு எடுத்த குடிமதிப்புக் கணக்குப்படி அப்பகுதியிலிருந்த தமிழரின் தொகை 953,535. தமிழ்நாட்டிலிருந்து சென்றுள்ள தொழிலாளர்கள் கூலி வேலைக்காரர்கள்மூலம் ஈழத்தைக் கடந்தும் பல பகுதிகளில் தமிழ்மொழி பயின்று வருகின்றது. இன்னுங் கூறப்புகின், வீட்டு வேலை செய்யும் வேலைக்காார்கள் மூலம் தமிழ்மொழி இந்தியாவெங்கணுமே பேசப்பட்டு வருவதைக் காணலாம். திராவிட மொழிகளுள் தமிழ் மொழியே மிகமிகத் தொன்மை வாய்ந்ததும், பெருவளம் பொருந்தியதும், மிகவுஞ் சீர்திருந்தியதுமான உயர்தனிச் செம் மொழியாகும்; சொல்வள மிகுந்தது; அளவிட வொண்ணாப் பண்டைக் காலமுதற் பயின்று வருவது. வகையும், தொகையும், தனியுமாகக் கணக்கற்ற இலக்கியங்கள் இம்மொழியில் இலங்குகின்றன. ஆனால், பெரும்பாலும் அவை யெல்லாம் மிகவுந் திருந்திய செந்தமிழ் நடையானியன்றவை; வழக்காற்றிற் பேசப்பட்டு வரும் கொடுந்தமிழ் நடையானியன்றவையல்ல.

13