கால்டுவெல் ஒப்பிலக்கணம்/025-033
கா. திராவிடர் ஆரியநாகரிகமேற்ற காலம்
திராவிட நாகரிகத் தொடக்கம் பாண்டிநாட்டுத் தமிழ். மக்களிடையேதான் என்றும், பண்டைத் தமிழர்கள் வகுத்தமைத்த முதற்பட்டினம் காமிரபர்ணி எனப்படும் பொருநையாற்றின் கரையிலிருந்த கொல்கையே யென்றும் திராவிடப் பழங் கதைகள் எல்லாம் ஒருபடித்தாகக் கூறுகின்றன. இந் நாகரிகம் தொடக்கத்தில் தற்சார்புடையதாகவே இருந்திருத்தல் வேண்டும் ; எனினும், அதன் விரைந்த வளர்ச்சி வட நாட்டிலிருந்து வந்து ஆங்காங்குச் சிறு குடியினராகத் தங்கிய ஆரியர்களின் துணைகொண்டு ஏற்பட்டிருத்தல் கூடும். இவ்வாறு வடக்கிருந்து தெற்கே போந்து குடியேறியவர் களுட் பெரும்பாலோர் பார்ப்பனர்கள். அவர்கள் காவேரியும், பொருநையும் பாயும் நிலப்பகுதிகளின் செழுமையையும் கொழுமையையும் கேள்வியுற்று நாடி வந்திருக்கலாம். இன்றேல், பழங்கதைகளின்படி, இராமனின் வீரச்செயல்களின் பெருமையைக் கேட்டும், இராமேச்சுரத்தில் இராமனே பூசை செய்த சிவலிங்கத்தின் மகிமையைக் கேட்டும் வந்தவர்களாதல் வேண்டும். முதற்கண் வந்து குடியேறிய பார்ப்பனர்களுக்குத் தலைவர் அகஸ்தியர். வேதப் பாசுரங்கள் பலவற்றை இயற்றியவர் என்றும், வேள்விகள் பல இயற்றிய தூய மாமுனிவர் என்றும், தெற்கே எட்டிய தொலை செல்பவர் என்றும் வடஇந்தியாவில் இவர் பெயர் பெற்றவர்; தென்னிந்தியாவிலோ கலைகளும், இலக்கியமும் கிராவிட மக்களுக்கு வகுத்தளித்த தமிழ்முனி என்று இவர் கொண்டாடப் பெற்றவர். (அகஸ்தியர் என்று ஒருவர் இருந்தாரென்பது உண்மையானால்) அவர் ஆரிய வங்தேறிகளின் தலைவர் என்று கூறுவதைவிட, அல்குடியேற்றக் கட்டுக் கதைக்குத் தலைவ ரவரே எனக் கூறலாம். அவர் சிறப்பாகத் தமிழ்முனி என்று வழங்கப் பெறுவதுடன் முதற் பாண்டியனான குலசேகரன் அவையில் தலைமை வகித்திருந்தாரென்றும், அவனைச் சீர்திருத்தி அறிவுறுத்தும் வகையில் மூல நூல்கள் பல இயற்றினாரென்றும், அவற்றுள் தமிழ்மொழி இலக்கணம் தலைசிறந்தது என்றும் கூறப்படுகின்றன. தமிழ்நாட்டுத் தென்புறவானில் சுடரொளி வீசி மிளிரும் விண்மீன்[1] அகஸ்தியரே என்று புராணங்கள் கூறும். கன்னியாகுமரிக் கருகில் அகஸ்தீஸ்வரர் கோவில் ஒன்றும் உள்ளது. பொருநை ஆறு தோன்றும் அகஸ்திய மலை என்னும் மலையில் இன்றும் அவர் உருமறைந்து வாழ்ந்துவருவதாக இந்துக்கள் நம்புகின்றனர்.
அகஸ்தியர் காலமோ, திராவிடரிடையே பார்ப்பனர் நாகரிகம் புகுந்த காலமோ இப்பொழுதுதான் என்று வரையறையிட்டுக் கூற முடியாது. கிரேக்கர் காலத்தே நாடு முழுமையும் பார்ப்பன நாகரிக வயப்பட்டிருந்தமையையும், பேரூர்ப் பெயர்களிற் பல வடமொழிப் பெயர்கள் கொண்டு வழங்கினமையையும், பாண்டிய அரச பரம்பரையினர் அரசு செலுத்தி வந்தமை ஐரோப்பாவிலும் தெரிந்திருந்தமையையும் நோக்க, அக்காலம் கிரேக்கர் காலத்திலும் மிக முற்பட்டதென்று மட்டும் துணியலாகும். எனினும், அக்காலம் இராமாயண காலத்திற்குப் பிற்பட்டதேயாகவேண்டும். ஆகவே, அஃது இராமாயணத்திற்கும், கிரேக்கர் வரவிற்கும் இடைப்பட்ட காலமென்னலாம். மாபாரதத்தில் கூறப்படும் திராவிட அரசர்கள் பற்றிய குறிப்பு இடைச்செருகலன்று எனக் கொள்ளப்படின், அகஸ்தியர் காலம் இராமாயண மாபாரத காலங்களுக்கு இடைப்பட்டதென்பது ஏற்படும். இவற்றின் ஐயப்பாடான காலநிலையாலும், மனுவின் காலத்தின் பழைமை மறுக்கப்படுவதாலும் (பாரதத்திலும், மனுவிலும் சீனர் குறிப்பிடப்படுவதாகத் தெரிகிறது) காலவரை யறைக்கு இவற்றுள் ஒன்றும் உதவாமற் போகின்றது. இலங்கைக்கு மகத ஆரியர் விஜயன் தலைமையிற் சென்றது இதன் காலத்தை ஒருவாறு வரையறுக்க உதவுவதுபோலத் தோற்றக்கூடும். ஏனெனில், தமிழ் நாட்டை அதற்குள் ஆரியர் நன்கறிந்திருப்பர் ஆதலின் என்க. மகாவமிசம் இதனைக் கி. மு. 550 என்று குறிக்கிறது. இதற்கு முந்தியே தமிழ்நாட்டையும் தண்டகாரணியத்தையும் ஆரியர் நன்கு அறிந்திருப்பர் என்று கூறலாம். மகாவமிசம் எழுதப்பட்ட காலம் கி. பி. 459 முதல் 477 வரை ஆகும். மகத நாட்டினர் இலங்கையிற் குடியேறிய காலம் உறுதியாக வரையறுக்கக் கூடாததா யிருப்பினும், கிறிஸ்து பிறக்கு முன்னரேயே குடியேற்றம் நடைபெற்றிருக்க வேண்டு மென்று உறுதியாகக் கொள்ளலாம். இதற்கு மொழியியல்பு ஒன்றே போதிய சான்று பகரும். தாமிரபர்ணி என்பது சிங்களம்; தாம்பபண்ணி என்பது பாலி; மகத ஆரியர் முதன் முதலில் இலங்கையிற் குடியேறிய இடத்தைத் தாமிரபர்ணி என்றே அழைத்தனர்; பின்னர் அத்தீவு முழுதையுமே தாமிரபர்ணி என்றழைத்தனர். கிரேக்கர்கள் இதனைத் தாப்ரபேனே என்று அலெக்ஸாந்தர் காலக்கிலேயே, குறித்துள்ளனர். தமிழ்நாட்டில் திருநெல்வேலியிலோடும் ஆற்றின் பெயரை இஃது ஒத்திருப்பது வியக்கத்தக்கதே. இவ் வாற்றில் வானவர் குளித்ததாகப் பாரதத்தில் கூறப்படுவதால் இப்பெயர் இவ்வாற்றின் பெயராக வழங்கியிருத்தல் தெளிவு. எனவே, இக்குடியேற்றத்தார் இலங்கையை யடையு முன் இவ்வாற்றின் கரையிலுள்ள துறையாகிய கொற்கை யிற் சிலகாலந் தங்கிப் பழகியவர்களாதல் வேண்டும் என்று உய்த்துணரலாம். இதற்கேற்ப மகாவமிசத்திற் குடியேற் றத் தலைவனகிய விஜயன் பாண்டியன்மகளை மணம் புணர்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இம் மணவினைபற்றி ஐயம் எழினும் (ஏனெனில் சிங்கள அசுரர்தம் அரசியையும் அவனே மணந்தான் என அது கூறுகிறதாதலின்), பாண்டியநாடொன் றிருந்ததென்பதும், அஃது ஆரியர் முறையையொட்டி முதற்கண் தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட தமிழரசாதல்வேண்டும் என்பதும், இலங்கையில் மகத ஆரியராட்சி எற்படுவதற்கு முன்னர் இப்பாண்டிய ஆட்சி நடைபெற்று வந்த தென்பதும் எளிதிற் றெளியப்படும். பண்டைய இந்திய வரலாறு எழுதியவர்களுள் சிங்களரே உண்மையிற் றலை சிறந்தவர்கள் என்பது ஈண்டுக் குறிப்பிடற்பாற்று.
”இண்டியன் ஆன்டிக்குவரி” என்ற வெளியீட்டில் 1872 அக்டோபர்த் திங்களில் எழுதிய கட்டுரை யொன்றில், டாக்டர் பர்னல் தென்னாட்டில் பார்ப்பன நாகரிகம் ஏற்பட்ட காலம் மிகப் பிந்தியதெனக் கூறுகிறார். கி. பி. 700-ல் வாழ்ந்த குமாரிலபட்டர் தெலுங்கு தமிழ் ஆகிய மொழிகளைப் பேசுவோர் மிலேச்சர் என்று கூறியதனால் அவர் காலத்திற்குள் பார்ப்பன நாகரிகம் இந்நாடுகளுக்குள் மிகுதியாகப் பரவியிருக்க முடியாதென்பது அவர் கருத்து.[2]
’பார்ப்பனரது உழைப்புக்குத் தென்நாடு பயன்படும் நிலமாய் இருந்த போதிலும் குடியேறிய மக்கள் மிகக் குறைவாகவே யிருந்தனர்’... ‘சில நூற்றாண்டுகள் முன்னதாகவே இலக்கியங்களில் பார்ப்பன இடப்பெயர்கள் சில காணப்படுகின்றன என்பது உண்மையே. ஆயினும், இவை பேராற்றுத் துறைகளிலும், கடற் றுறைமுகங்களிலும் காணப்பெறுப வையே. பெரும்பாலும் இவை புத்தர்களால் வழங்கப்பெற்றவை போலும்’ என்றும் பர்னெல் கூறுவர். பார்ப்பன் நாகரிகம் புகுந்த காலமும், தமிழ் இலக்கிய வளர்ச்சி ஏற்பட்ட காலமும் வேறு வேறானவையாம். பிந்தியது சமணரது முயற்சி ஆகும். ஆனாலும், திராவிட இலக்கியத்தைச் சமணர் முழு உருவாக்கினலும் அதன் கருத் தோற்றத்திலேயே பார்ப்பனத் தாக்கு ஏற்பட்டமை தெளிவு. உண்மையில் சமணர்கள் கூட திராவிட மொழிகளைச் செப்பனிட்டுப் பார்ப்பன மொழியாகிய வடமொழிக்குப் போட்டியாக்கும் வரை முதன் முதலில் தென்இந்தியாவிலும் சரி, வடஇந்தியாவிலும் சரி, வடமொழியையே பயன்படுத்தி வந்தனர். இதற்கேற்ப முதல்முதல் ஆரியச் சார்புடையவையாய்க் காணப்படும் இடப் பெயர்கள் பெரும்பாலும் பார்ப்பனச் சார்போ, புத்தச் சார்போ இல்லாதவையாய்க் காரணப் பெயர்களாகவே இருக்கின்றன. இரண்டுமட்டும் இவற்றுள் தெளிவான பார்ப்பனச் சார்புடையவை: ஒன்று குமரி; மற்றொன்று யாதவர் தலைநகராகிய வடமதுரையைப் பின்பற்றி இடப்பட்ட பெயராகிய மதுரை.
பினீஷியர்களும், சாலமன் மன்னரின் பணியாளர்களும் மலபார்க் கரையோாம் உவரி[3] வரைச் சென்று நடத்திவந்த கப்பல் வாணிபத்தில் சிந்து நதிக் கரையில் வாழ்ந்திருந்த ஆரிய வணிகர்களும் பங்கு கொண்டு உடன் சென்றவர்களாதல் வேண்டும். இந்த உவரி என்பது இந்தியாவின் மேற் கரையிலுள்ளதே யென்றும், ஆப்பிரிக்காவில் அப்பெயருடைய இடமில்லை என்றும் எர்னெஸ்ட் ரெனன்[4] என்பவர் கூறியதாக சர் எம். இ. கிராண்ட் டஃப்[5] எழுதுகிறார். இத்தகைய கப்பல் வாணிப முறையினாலேயே, செங்கடல் வணிகரிடமிருந்து திராவிடர்கள் எழுத்து முறை கற்க, அவர்களிடமிருந்து பின்னர் ஆரியர் கற்றனர் என்று டாக்டர் பர்னெலும், வடஇந்தியாவிலுள்ள லாட்[6] என்னும் மொழியின் எழுத்துக்கள் திராவிட எழுத்துக்களை யொட்டி எழுந்தவையே என்று எட்வர்ட் தாமஸ்[7] என்பவரும் கூறுகிறார்கள். இவை ஆராய்ச்சிக்குரியன. மன்னன் சாலமன் காலத்தில் ஆரியர்கள் தொலை நாடுகளுடன் கப்பல் வாணிபம் செய்து வந்ததாக வேதங்கள் கூறுகின்றன; ஆனால் எத்துறைமுகங்களிலிருந்து கப்பலேறிச் சென்றனர் என்பது ஆராய்ச்சிக் குரியதாம்.
முற்றிற்று
- ↑ Canopus
- ↑ ”தென் இந்தியாவில் கண்ட பார்ப்பன எழுத்துச் சான்றுகளால் கி. மு. 3-ஆம் நாற்றாண்டிலேயே பார்ப்பன நாகரிகத்தாக்கு ஏற்பட்டதென்பது தெளிவாகின்றது”. ”வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்தே தென்இந்தியா முற்றிலும் திராவிட அறிவும் நாகரிகமுமே நிறைந்திருததன”. என்று ஒருசிலர் கொண்ட கொள்கைக்கு இது மாறுபடுவதாகும்.
-சென்னை ஆர்க்கியலாஜிகல் ரிப்போர்ட்
- ↑ Ophir
- ↑ Prof. Ernest Renan
- ↑ Sir. M. E. Grant Duff in his Life of Ernest Renan, Professor of Semitic Languages of the College of France
- ↑ Lat
- ↑ Mr. Edward Thomas