கால்டுவெல் ஒப்பிலக்கணம்/032-033
முண்டா மொழிகளைக் “கோலேரிய[1] மொழிகள்” என்றும் அழைப்பதுண்டு ; அவ்வாறழைப்பது பிழைபட்ட தொன்ருகுமென்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இம் மொழிகளுக்கு முண்டா மொழிகள்[2] : என்ற இனப்பெயர் வகுத்தவர் பேராசிரியர் மாக்ஸ்முல்ல[3] ரேயாம். இந்தியாவில் தொன்றுதொட்டுப் பேசப்பட்டு வருவதாகக் கருதப்படும் மொழிகளுள் இம்மொழியினமும் ஒன்று ; இவ் இனமே பண்டைய இந்தியமொழி யென்று கருதுவோரு முளர். இம் மொழிகளுக்கும், மலாக்கா[4], ஆஸ்ட்ரலோனேஷியா[5] , நக்க வாரத் தீவுகள்[6] முதலிய கீழை இந்தியப்பகுதியில் வசித்து வரும் பண்டை மக்கள் சிலர் பேசும் மான்குமேர்[7] மொழியினத்திற்கும் வெளிப்படையாகத் தொடர்பேதுங் காணப்படுகின்றதில்லையாயினும், பொதுப்படையா நோக்கின் ஒரு புடை யொற்றுமை யிருப்பது புலனாகும். இவ்வொற்றுமை காரணமாகப் பண்டொரு காலத்தில் இந்தியாவின் பெரும் பகுதியிலும், கீழை யிந்தியப் பகுதியிலும் பொதுமொழி யொன்று வழங்கியிருந்திருத்தல் வேண்டுமென்று கொள்ளுதல் மிகையாகாது. அப் பொதுமொழிச் சுவடுகள் முண்டா மொழி யினங்களுள் இக்காலையளவும் நன்கு காணக் கிடைக்கின்றன ; ஆனால், கீழை யிந்தியப் பகுதிகளிலோ, அடுத்தடுத்துத் தொடர்ந்து நிகழ்ந்த பிறமொழிக் கலப்பினல் அவை காணப்படாவாயின ; ஆங்காங்கு ஒன்றிரண்டு குறிப்பாகத் தென்படுவதைக் கொண்டு பொதுமொழி ஆண்டுப் பயின்றிருந்தமை தெளியப்படும்.
முண்டா மொழிச் சொற்கள் அடுக்கியல் முறையாலியன்றனவே. இப் பண்டைச் சிறப்பு முறையை அவை எத்தகைய திரிபுமின்றி இன்றுங் கொண்டுள்ளன. ஒன்றன் பின்னொன்றாக அசைகளைச்சேர்த்தடுக்கி அமைக்கப்படும் ஒரு சொல் முழுச் சொற்றொடர் ஒன்றற்குரிய பொருளனைத்தையுங் கொண்டிலகுவதாகும். உயிருள்ளவற்றிற்கும் உயிரில்லவற்றிற்கும் பால் வேறுபாடு உண்டே தவிர, உயர்திணை அஃறிணைப் பாகுபாடு முண்டாமொழிகளி லில்லை. அம்மொழி யினங்களில் ஒருமை, இருமை, பன்மை ஆகிய மூவகை எண்கள் உண்டு. வேற்றுமை யுருபுகள் வினைச்சொற்களுடன் சேர்க்கையுறுவனவேயன்றி, பெயர்ச்சொற்களுடன் சேர்ந்து தொழிற்படுமாறில்லை. கணக்கீடு முறையில் இருபஃது இருபஃகாக எண்கள் கணக்கிடப்படுமேயன்றிப் பத்துப்பத்தாகக் கணக்கிடப்படுவதில்லை. தன்மைப்பன்மைக்குமட்டும் திராவிட மொழியினத்தைப் போன்று, முன்னிலையை யுட்படுத்தியதும், விலக்கியதுமாய இருவகைத்தாய சுட்டுப்பெயர்கள் அமைந்துள. முண்டா வினைச்சொற்றிரிபுமுறைக்கும் திராவிட வினைச்சொற்றிரிபுமுறைக்கும் ஒற்றுமையேதுங் கிடையாது. வினைச் சொற்களும் எளியனவாய் அமைவனவல்ல. எதிர்மறை வினைகள் முண்டாமொழிகளிற் கிடையா.
முண்டா மொழியினம் பயின்றுவரும் பகுதிகளிற் றலையாயது சோட்டாநாகபுரியே யாகும். வங்காளம், ஒரிஸ்ஸா, சென்னை மண்டிலங்களை யொட்டிய சிற்சில கோட்டங்கள் ஆகியவற்றில் இவ்வின மொழிகளைப் பேசும் மக்கள் காணப்படுகின்றனர். பீகார் மண்டிலத்தின் மேற்கே நெடுந்தொலைவி லுள்ள மகாதேவ மலைகளில்[8] இம் மொழிக்குரிய ஒரு குழு வினர் தனியாக வாழ்ந்து வருகின்றனர். இம்மொழி யினத்தைக் குறித்த புள்ளிவிவாங்கள் பின்வருவனவாம்:-
பேசுவோர் தொகை | |||
(1901-ஆம் ஆண்டு) | |||
கேர்வாரி[9] | 2,784,395 | ||
கூர்க்க[10] | 87,675 | ||
கறியா[11] | 101,986 | ||
ஜுவாங்[12] | 10,853 | ||
சவரா[13] | 157,136 | ||
கடபா[14] | 37,230 | ||
மொத்தம் | 3,179,275 |
இம் மொழியினத்துள் தலையாயது கேர்வாரியே; இதனைச் சேர்ந்த வரிவடிவில்லாக் கிளைமொழிகள் பலவுள; அவை இதனின் வேறுபட்டனவெனக் கருதுவோரு முளர்.
கேர்வாரி:
சங்காளீ[15] என்ற ஆர்[16], முண்டாரி[17], புமிஜ்[18], பிரார்[19], கோடா[20], ஒ[21], தூரி[22], அசூரி[23], அகரியா[24], கொர்வா[25] என்பன அக்கிளை மொழிகளே. இவற்றுள் சந்தாளி, முண்டாரி என்ற இரண்டும் இலக்கண அமைப்பு வாய்ந்தவை. சந்தாளி மொழிக்கு அகராதி யொன்று முண்டு. சிங்கபூமியைச்[26] சேர்ந்த லர்க்கா[27] என்னும் ”போர்க்” கோலர்கள்[28] பேசும் மொழி ஓ என்பதாம். சந்தாளி பயிலுமிடம் சந்தாள பரகணாக்கள்[29] என்ற பகுதியே யெனினும், இன்னும் தெற்கே நெடுந் தொலைக்கு, அஃதாவது, வங்காள மேலெல்லை யோரமாக வடஒரிஸ்ஸா வரை அது பயின்றுவருகிறது. ஏனைய மொழிகளெல்லாம் சோட்டாநாகபுரியிலும், அதனை யடுத்த ஒரிஸ்ஸா நாட்டு மலைப்பகுதிகளிலும், மத்திய மண்டிலத்திலும் பயின்று வருகின்றன.
கூர்க்கூ:
கூர்க்கூ என்னும் முண்டாமொழிவகை மகாதேவ மலைப் பகுதிகளில் வழங்கி வருகின்றது. கறியா, ஜுவாங் என்ற இரண்டினோடுஞ் சேர்ந்து இஃதொரு தனிப்பட்ட மொழி வகையாகக் கருதப்பட்டுவரினும், கேர்வாரியுடன் ஏனைய இரண்டையும் நோக்க, இதுவே பெரிதுந் தொடர்புடைய தாய்க் காணப்படுகிறது. இம் மொழியும் ஒருவாறு திருத்த முற்றதொன்றே. இதற்கு இலக்கண அமைப்பும் உண்டு.
கறியா:
இாாஞ்சியின்[30] தென்மேற்குப் பகுதியிலும் அதனை யடுத்த ஜஷ்பூர்[31], காங்பூர்ப்[32] பகுதிகளிலும் இம்மொழி பயின்று வருகின்றது. இம் மொழி பேசும் குழுவினர் இன்னுந் தெற்கே பரவி வாழ்ந்துவந்துள்ளவராகக் காணப்படினும், கறியாவாகிய தம்மொழி பேசுவதை விடுத்துத் திராவிட மொழியினத்தைச் சேர்ந்த குறுக்கம் என்பதனையோ, அன்றி, வடமொழிச் சிதைவுகளையோ அவர்கள் ஆங்காங்குப் பேசிப் பழகிவருகின்றார்கள். அதனால் இம்மொழி சிறிது சிறிதாக இறந்துபட்டுவருகின்றது.
ஜுவாங்:
ஜுவாங் என்பதும் ஏறக்குறைய கறியாவைப் போன்றதேதான். ஒரிஸ்ஸா நாட்டு மலைப்பகுதிகளிலுள்ள ஒரு வகைக் குறவர்களால் இம் மொழி பேசப்பட்டு வருகின்றது. அம் மக்கள் அணிந்து கொள்ளும் தழை உடை காரணமாக இது பத்வா[33] என்றும் அழைக்கப்படும்.
சவராவும், கடபாவும்:
ஒரிஸ்ஸா எல்லையை யொட்டிச் சென்னை மண்டிலத்தில் சவராவும், கடபாவும் பேசப்பட்டு வருகின்றன. இவ்விரு மொழிகளும் தெலுங்குமொழியுடன் இக்காலை பெரிதுங் கலந்துவிட்டன என்று கூறல்வேண்டா. கறியா, ஜுவாங் என்ற இரண்டினோடு இவற்றையும் ஒருவகையிற் சேர்த்துக் கொள்ளலாம். சவராமொழி பேசுவோராகிய சவரர்கள் மிகமிகத் தொன்மை வாய்ந்தவர்கள். பல இடங்களிற் படர்ந்து பரவியிருந்த இக் குழுவினர் வேதகாலத்திலிருந்த இந்திய-ஆரியர்களுக்கு[34] அறிமுகமானவர்கள். பிளைனி[35], டாலிமி[36] என்ற இரு மேனாட்டு வரலாற்றாசிரியர்களும் இவர்களைக் குறித்து எழுதியுள்ளார்கள். ஆனல், இக்காலை, இக்குழுவினரில் மிகவுங் குறைந்த தொகையினரே தம் மொழியாகிய சவராவைப் பேசிவருகின்றனர்.
முண்டாமொழியினத்திற்கே பொதுவாக வரிவடிவங் கிடையாது; இலக்கிய மென்பதுமில்லை.
- ↑ 1. Kolarian
- ↑ 2. Munda languages.
- ↑ 3. Prof. Max Muller.
- ↑ 4. Malacca.
- ↑ 5. Australonesia.
- ↑ 6. Nicobarese.
- ↑ 7. Mon–Khmer.
- ↑ Mahadeo Hills
- ↑ Kherwari
- ↑ Kurku
- ↑ Kharia
- ↑ Juang
- ↑ Savara
- ↑ Gadaba
- ↑ Santali
- ↑ Har
- ↑ Mundari
- ↑ Bhumij
- ↑ Birhar
- ↑ Koda
- ↑ Ho
- ↑ Turi
- ↑ Asuri
- ↑ Agaria
- ↑ Korwa
- ↑ Singhbhumi
- ↑ Larka
- ↑ Fighting Kols
- ↑ Santal Parganas
- ↑ Ranchi
- ↑ Jashpur
- ↑ Gangpur
- ↑ Patua
- ↑ Indo-Aryans
- ↑ Pliny
- ↑ Ptolemy