பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

516

திருக்குறள்

1283.பேணாது பெட்பவே செய்யினுங் கொண்கனைக்

காணா தமையல கண்

என்பது இதுவுமது

நம்மை அவமதித்துத் தான் வேண்டினபடியே செய்தாலும் நாயகனை என் கண்கள் காணாமல் அமைகின்றனவில்லை என்றவாறு.

1284. ஊடற்கட் சென்றேன்மற் றோழி யதுமறந்து

கூடற்கட் சென்றதென் னெஞ்சு

என்பது இதுவுமது

தோழி! காதலரைக் காணாமுன் அவர் செய்த தவற்றை நினைந்து பிணங்கி இருக்க வேண்டுமென்று சென்றேன். அவரைக் கண்டபின் என் நெஞ்சு பிணங்குகிறதை மறந்து கூடுதற்கே சென்றது என்றவாறு.

1285. எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்[1]

பழிகாணேன் கண்ட விடத்து

என்பது இதுவுமது

முன்னே எல்லா வடிவையும் கண்டிருந்து எழுதுகிற போது அஞ்சனக் கோலினது இயல்பைக் காண மாட்டாத கண்ணைப் போலக் கொண்கனைக் காணாத விடத்தெல்லாம் அவன் செய்த குற்றங்களைக் கண்டிருந்து அவனைக் கண்டவிடத்திலே அந்தக் குற்றங்களைக் காண மாட்டேன் என்றவாறு.

1286. காணுங்காற் காணேன் தவறாய காணாக்கால்

காணேன் தவறல் லவை

என்பது இதுவுமது


  1. கணவன்