பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஜைன உரை

515

தங்கள் பாதங்களை வேண்டிக் கொள்கிறது, தங்களுக்கியல்பாகிய பெண்மை மேலும் பின்னையும் ஒரு பெண்மையுடைத்து என்று சொல்லுவர் அறிந்தோர் என்றவாறு.

முல்லை நிலம் முற்றும்

ஆக அதிகாரம் ளஉஅ க்குக் குறள் சநஉளஅ௰

இப்பால் 129. புணர்ச்சி விதும்பல்

(மருத நிலம்)

என்பது, தலைமகனும் தலைமகளும் புணர்ச்சிக்கண் விரைதல், மேல் புணர்ச்சி மிகுதியினாலே தலைமகன் பிரிந்து போகத் தக்கதாக நினைத்த குறிப்பை யறிந்த தலைமகள் அவருடனே போகாமற் பின்னையும் புணர்ச்சியை விரும்புதலால், இது குறிப்பறிவுறுததலின் பின் வைக்கப்பட்டது.[1]

1281. உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்

கள்ளுக்கில் காமத்திற் குண்டு

என்பது, பிரிதற் குறிப்பாயினனோடு[2] நீ பிணங்காமலிருக்கிற காரணம் என்ன என்று நகையாடிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது:

நினைத்தவுடனே களிக்கிறதும் கண்டவுடனே மகிழ்கிறதும் கள்ளுண்டவர்களுக்கில்லை, காமமுடையவர்களுக்குண்டு என்றவாறு. களித்தல், அறிவ[3]ழியாதது; மகிழ்தல், அஃதழிந்தது.

1282. தினைத்துணையு மூடாமை வேண்டும் பனைத்துணையும்

காம நிறைய வரின்

என்பது இதுவுமது.

ஸ்திரீகளுக்குக் காமம் பனையளவிலும் பெரிதாக உண்டாமாயின், அவரால் தினையளவும் தம் காதலரோடு பிணங்காமை வேண்டப்படும் என்றவாறு.


  1. இங்ஙனம் அதிகார முறை வைப்புக்குக் காரணம் முன்னும் கூறப்பட வில்லை பின்னும் கூறப்பெறவில்லை
  2. தலைவனோடு
  3. உணர்வு-பரிமேலழகர்)