உள்ளடக்கத்துக்குச் செல்

சிவகாமியின் சபதம்/பரஞ்சோதி யாத்திரை/புலிகேசியின் காதல்

விக்கிமூலம் இலிருந்து
46. புலிகேசியின் காதல்


வறண்ட மலைப் பிரதேசங்களையும் அடர்ந்த வனப் பிரதேசங்களையும், நீர் வற்றி வெண்மணல் பரந்த நதிகளையும் கிளி கொஞ்சும் மாந்தோப்புக்கள் சூழ்ந்த அழகிய கிராமங்களையும் கடந்து வஜ்ரபாஹுவும் பரஞ்சோதியும் இடைவிடாது பிரயாணம் செய்து கொண்டு போனார்கள். சில சமயம் வஜ்ரபாஹு வீர ரஸம் செறிந்த பாரத யுத்தக் கதைகளைப் பரஞ்சோதிக்குக் கூறுவான். அர்ச்சுனனுடைய வில் தொழில் திறன்களையும், அபிமன்யுவின் அசகாய சூரத்தனத்தையும், பீமனுடைய கதாயுதம் நிகழ்த்திய விந்தைகளையும் பற்றி வஜ்ரபாஹு சொல்லும் போதெல்லாம் பரஞ்சோதிக்கு ரோமாஞ்சம் உண்டாகும். குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் தானும் பாண்டவர்களின் கட்சியில் நின்று வீரப் போர் செய்வதாக எண்ணிக் கொள்வான். அவனையறியாமலே அவனுடைய கைகள் வில்லை வளைத்து நாணேற்றும்; பகைவர் மீது வேலை வீசும்; வாளைச் சக்கராகாரமாய்ச் சுழற்றும்.

இன்னும் சில சமயம், வஜ்ரபாஹு ஆழ்ந்து யோசனை செய்யத் தொடங்கி விடுவான். அப்போது பரஞ்சோதி கேட்கும் கேள்விகளுக்கு அவன் விடை சொல்லமாட்டான். மேடு, பள்ளம், காடு, தண்ணீர் என்று பாராமல் குதிரையை நாலு கால் பாய்ச்சலில் விடுவான். அவன் பின்னோடு பரஞ்சோதி குதிரையைச் செலுத்திக் கொண்டு செல்வதே பெரும் பிரயத்தனமாயிருக்கும். இன்னும் சில சமயம் வஜ்ரபாஹு வாதாபி சைனியத்தின் படையெடுப்பைப் பற்றியும் பல்லவ ராஜ்யத்துக்கு வந்திருக்கும் பேரபாயத்தைப் பற்றியும் பேசுவான். அப்போதெல்லாம் அவனுடைய தொனியில் கவலை நிறைந்திருக்கும். அமைதி குடி கொண்ட அழகிய கிராமங்களின் ஓரமாக அவர்கள் போகும்போது, "ஆஹா! இந்தக் கிராமங்களுக்கெல்லாம் இன்னும் கொஞ்சநாளில் என்ன கதி நேரப் போகிறதோ, தெரியவில்லையே?" என்று சொல்லுவான்.

நீண்ட கிளைகளை நாலாபுறமும் பரப்பிக் கொண்டு குளிர்ந்த நிழல் தந்து நின்ற விசாலமான ஆலமரங்களையும், பசுமையான தென்னந் தோப்புக்களையும் பார்க்கும்போதெல்லாம் வஜ்ரபாஹு பெருமூச்சு விடுவான். "மறுபடியும் நாம் இந்தப் பக்கம் வரும்போது கண் குளிரும் இந்தப் பசுமையைக் காண்போமா?" என்பான். இந்த அதிசயமான கவலைக்குக் காரணம் என்னவென்று பரஞ்சோதி வற்புறுத்திக் கேட்டபோது வஜ்ரபாஹு கூறினான்; "அப்பனே! நீ அந்த வாதாபி சைனியத்தின் பாசறையை முழுவதும் சுற்றிப் பார்க்கவில்லை. நான் பார்த்தேன்! அந்த பிரம்மாண்டமான யானைப் படையையும் நினைத்து, இந்தப் பசுமையான மரத்தோப்புகளையும் பார்த்தால், எனக்கு கண்ணில் ஜலம் வருகிறது. ஒரு யானை ஒரு நாளில் எவ்வளவு ஆகாரம் சாப்பிடும், தெரியுமா?"

"தெரியாது, ஐயா!"

"ஆறு மரக்கால் அரிசி, ஒன்பது தார் வாழைப்பழம், இருபத்தைந்து தேங்காய், ஓர் ஆலமரத்தில் பாதி இவ்வளவையும் சாப்பிட்ட பிறகு யானையின் பசி அடங்காது!"

"அம்மம்மா!" என்றான் பரஞ்சோதி.

"இவ்வளவுக்கும் மேலே யானைப்பாகனுக்கும் அதன் வயிற்றில் இடம் இருக்கும்! ஆனால் யானைகள் சைவ விரதம் கொண்டவையாகையால் யானைப்பாகனைச் சாப்பிடுவதில்லை!"

பரஞ்சோதி சிரித்துவிட்டு, "வாதாபிப் படையில் அப்படி எத்தனை யானைகள் இருக்கின்றன?" என்று கேட்டான்.

"பதினையாயிரம் யானைகள், அப்பனே! பதினையாயிரம் யானைகள்! இவ்வளவு யானைகளும் ஒரு தடவை காஞ்சிநகர் வரையில் வந்துவிட்டு திரும்பினால் போதும்! அவை வந்துபோன வழியெல்லாம் பசுமையென்பதே இல்லாமல் பாலைவனமாய்ப் போய்விடும்."

"காஞ்சி நகரம் வரையில் வாதாபி சைனியம் வந்துவிடும் என்று அடிக்கடி சொல்கிறீர்களே, அது ஏன்?"

"பதினையாயிரம் யானைகளையும் ஐந்து லட்சம் காலாட் படைகளையும் யாரால் தடுத்து நிறுத்த முடியும் தம்பி? கடவுளே பார்த்து நிறுத்தினால்தான் நிறுத்தியது!"

"காஞ்சிக் கோட்டையை ஏன் அவ்வளவு பத்திரப்படுத்தினார்கள் என்பது எனக்கு இப்போதுதான் தெரிகிறது" என்று பரஞ்சோதி சொன்னதைக்கேட்டு வஜ்ரபாஹு ஏளனக் குரலில் சிரித்தான்.

"ஏன் சிரிக்கிறீர்கள், ஐயா?" என்று பரஞ்சோதி கேட்டான்.

"காஞ்சிக் கோட்டையை ரொம்பவும் பத்திரப்படுத்தி இருப்பதாகத்தான் ஒரு காலத்தில் நான் கூட நினைத்தேன். ஆனால் அந்த எண்ணம் எவ்வளவு தவறு என்று இப்போது தெரிகிறது."

"ஏன்? கோட்டைக்குப் பத்திரம் போதாதா?" என்று பரஞ்சோதி கேட்டான். இரகசியச் சுரங்க வழியாகத் தன்னை நாகநந்தி வெளியேற்றியது அவன் ஞாபகத்துக்கு வந்தது.

"வாதாபி யானைகள் சாராயத்தைக் குடித்துவிட்டு வந்து காஞ்சிக் கோட்டையின் கதவுகளை மோதும்போது கோட்டைக் கதவுகள் எப்படி நொறுங்கிச் சின்னா பின்னமாகப் போகின்றன என்பதை நினைத்தால் சிரிப்பு வருகிறது" என்றான் வஜ்ரபாஹு.

"இதென்ன விந்தை? யானைகள் சாராயம் குடிக்குமா என்ன?"

"யானைகளை மாமிச பக்ஷணிகளாகச் செய்ய முடியவில்லை. ஆனால் மதுபானம் செய்யப் பழக்கியிருக்கிறார்கள். வாதாபி சைனியத்தில் ஆயிரக்கணக்கான வண்டிகளில் பெரிய பெரிய சால்களில் சாராயம் கொண்டு வருகிறார்கள். யானைகளைச் சாராயம் குடிக்கச் செய்து கோட்டைக் கதவுகளை முட்டச் செய்யப்போகிறார்களாம்!"

"இது என்ன அநாகரிக யுத்தம்" என்றான் பரஞ்சோதி.

"யுத்தமே அநாகரிகந்தான், தம்பி!" என்றான் வஜ்ரபாஹு.

"எல்லா யுத்தத்தையும் அநாகரிக யுத்தம் என்று சொல்ல முடியுமா? நாட்டைக் காப்பதற்காக மகேந்திர சக்கரவர்த்தி நடத்தும் யுத்தம் அநாகரிக யுத்தமா?" என்றான் பரஞ்சோதி.

"மகேந்திர சக்கரவர்த்தியின் பெயரை மட்டும் என் காது கேட்கச் சொல்லாதே! தேசப் பாதுகாப்பை அசட்டை செய்து விட்டு ஆடலிலும் பாடலிலும் அவர் காலம் கழித்ததை நினைத்தால் எனக்குக் கோபம் கோபமாய் வருகிறது!"

பரஞ்சோதி வஜ்ரபாஹுவின் முகத்தைச் சற்றுக் கவனமாய்ப் பார்த்துவிட்டு, "அப்படியானால், காஞ்சிக் கோட்டையைப் பாதுகாக்கவே முடியாது என்று நினைக்கிறீர்களா?" என்றான்.

"வாதாபி சைனியம் நேரே காஞ்சிக்கு வந்துசேர்ந்தால் காஞ்சிக் கோட்டையைக் கடவுளால் கூடக் காப்பாற்ற முடியாது!"

"அப்படி வந்து சேராதல்லவா?"

"அதன் பொருட்டுத்தான் ஓட முயன்றவன் முதுகில் வேலை எறிந்து கொன்றேன். நாகநந்தி கொடுத்ததாகப் புலிகேசியிடம் ஓர் ஓலை கொடுத்திருக்கிறேன். அதைப்பற்றிப் புலிகேசிக்குச் சந்தேகம் தோன்றாதிருந்தால் காஞ்சியைத் தப்புவிக்கலாம்."

"நீங்கள் கொடுத்த ஓலையில் என்ன எழுதியிருந்தது, ஐயா?"

"தம்பி! அந்த விஷயத்தைப்பற்றி நீ கேளாமலிருந்தால் நான் பொய் சொல்லவேண்டிய அவசியமும் ஏற்படாது!" என்று முன்னொரு தரம் பரஞ்சோதி கூறிய வார்த்தைகளை வஜ்ரபாஹு இப்போது திருப்பிக் கூறினான்.

பரஞ்சோதி சற்று நேரம் சும்மா இருந்துவிட்டு, "ஐயா! நீங்கள் கொடுத்த ஓலையின் பலனாகச் சளுக்க சைனியம் காஞ்சிக்கு வராமல் வாதாபிக்கே திரும்பிப் போய் விடுமா?" என்று கேட்டான்.

"அப்பனே! காஞ்சி என்ற பெயரைக் கேட்டதும் புலிகேசியின் கண்களில் தோன்றிய ஆசை வெறியை நீ பார்த்திருந்தாயானால் இவ்விதம் கேட்டிருக்க மாட்டாய். என்னை அச்சுத விக்கிராந்தனுடைய சந்ததியில் வந்தவனாக நினைத்துக்கொண்டே புலிகேசி தன்னுடைய மனத்தை நன்றாக திறந்து காட்டினான்..."

"அது யார் அச்சுதவிக்கிராந்தன்?" என்று பரஞ்சோதி குறுக்கிட்டுக் கேட்டான். எந்த விஷயத்தையும் ஐயந்திரிபறத் தெரிந்து கொள்வதில் அவனுக்கு அடங்காத ஆசை ஏற்பட்டிருந்தது.

"பாண்டிய நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் மத்தியில் இருநூறு வருஷத்துக்கு முன் தனி அரசு செலுத்திய அச்சுதக் களப்பாளனைப் பற்றி நீ கேட்டதில்லையா? அந்த அச்சுதக் களப்பாளனின் வம்சம் நான் என்றதும் புலிகேசி நம்பி விட்டான். 'நீ காஞ்சி நகர் பார்த்திருக்கிறாயா?' என்று கேட்டான். 'பார்த்திருக்கிறேன்' என்றேன்; காஞ்சிநகர்க் காட்சிகளை விவரமாக வர்ணிக்கும்படி சொன்னான். நான் அவ்விதமே காஞ்சியை வர்ணித்தபோது, புலிகேசியின் முகத்தில் தோன்றிய பரபரப்பைப் பார்க்க வேணுமே! எலியைப் பார்த்த பூனையின் கண்களில் தோன்றும் ஆசைவெறி புலிகேசியின் கண்களிலும் அப்போது தோன்றியது. இராவணன் சீதையைப் பார்த்து என்ன சொன்னான் தெரியுமா தம்பி! 'என்னிடம் நீ ஆசை கொள்கிறாயா? அல்லது உன்னைக் காலைப் போஜனத்துக்குப் பலகாரமாகச் செய்து சாப்பிட்டு விடட்டுமா?' என்றானாம். அதுபோல புலிகேசி காஞ்சி நகரைக் கட்டி ஆள ஆசைப்பட்டாலும் படுவான்; அல்லது அதை அக்கினிக்கு இரையாக்க விரும்பினாலும் விரும்புவான். புலிகேசியின் காதல் விபத்திலிருந்து காஞ்சிமா தேவியைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்" என்று வஜ்ரபாஹு கூறிவிட்டு நெடிய மௌனத்தில் ஆழ்ந்தான்.