பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காப்பியப் பண்புகள்

20

மிளிரும் கலைச் செல்வம்

பெருங்காப்பியப் பண்புகள் பல நிறைந்த சிறு காப்பியம் இது. கதிரெழுகாதை முதலாகச் சிலை காண் காதை ஈறாகப் பதினேழு காதைகளை உடையது. அறுசீர், எழுசீர், எண்சீர் விருத்தங்களையும், கட்டளைக்கலித்துறை, கொச்சகக்கலியினையும் கொண்டு, இடையிடை மிடைந்த நிலைமண்டில நேரிசையாசிரியங்களுடன் யாக்கப் பெற்றது.

வாழ்க்கை வரலாற்றைப் புனைவுமிகுதியின்றி அவ்வாறே காப்பியமாக எழுத முடியும் என்பதற்கு இஃது ஒரு தக்க சான்றாகத் திகழ்கிறது. சோமலெ எழுதிய பண்டிதமணி என்ற நூல், இதற்குரிய பல கருத்துக்களை நல்கியுள்ளது. எனினும் ஆசிரியர் மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையில் படித்துப் பண்டிதமணியை அறிந்தவர் என்பதனால், தாமறிந்த பல செய்திகளையும் இதில் இணைத்துப் பாடியுள்ளார். பொதுவாகக் காப்பியங்களில் மிகைப் புனவுகளையும் புராணப் போக்கினையும் நம்பவியலாக் கூறுகளையும் இணைத்துப் பாடுதல் அதன் இலக்கணமென்பர். இதில் அக்கூறுகட்கிடமில்லை. எனவே, செம்பாதிக்குமேல் படித்துக்கொண்டே செல்லும் பொழுது, உரைநடை வரலாறொன்றுக்குக் கொடுக்கப்பட்ட செய்யுள் வடிவமோ என்ற நினைவு எழுகிறது. எனினும் நடையோட்டமும் கருத்துச்செறிவும் தடைபடாக் குருதியோட்டம் போல் காப்பியத்தை உயிர்ப்புடையதாக்குகிறது. கவிஞர் பிழையற்ற முறையில், யாப்பு வடிவத்துடன் பாப் புனையவேண்டும்; தமிழைப் பிறமொழிகட்காகப் புறக்கணித்துவிடக்கூடாது; சொற்பொழிவு, எழுத்துப் போன்ற துறைகளில் ஈடுபடுவோர் முதற்கண் நல்ல தமிழ்ப் புலமையுடையராதல் வேண்டும்; கடவுளின் திருமுன்னர்த் தமிழ் வழிபாடே தழைக்க வேண்டும்; எங்கும் எதிலும் தமிழுக்கு முதன்மை நல்க வேண்டும் என்றினைய கோட்பாடுகளில் நெஞ்சார்ந்த உறுதியுடையவர். மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையில் பல்லாண்டுகள் பயின்றதால் காப்பிய வரலாறு பற்றிய சொந்த அனுபவமுடையவர். இவையனைத்தும் இக்காப்பியத்து விரவிக் கிடந்து, மணமூட்டக் காணலாம். வருணனை, உவமை, பல்வகைச்சுவை, உட்பொருள் எனக் காப்பிய நலன்கள் பொதுளிய கலைப் பெட்டகமாகவும் இந்நால் திகழ்கிறது.