உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புரட்சிக்கவி

47

விடுதலைக்குப் பின் பெறக்கூடிய பொற்காலத்தை 'அமரநிலை' என்றும் 'கிருதயுகம்' என்றும் குறிப்பிட்டார். விடுதலை கிடைத்தது. ஆனால் பாரதி கண்ட 'அமர நிலை' நமக்கு இன்னும் கிடைக்கவில்லை.

பாரதிதாசன் நம்பிக்கையோ இதற்கு நேர்மாறானது. இதந்தரும் சமநோக்கம் இல்லா நிலத்தில் 'நல்ல சுதந்தரம்' உண்டாகுமோ?" என்று கேள்வி எழுப்புகிறார்.

இருட்டறையில் உள்ளதடா உலகம்; சாதி
இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே!
மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின்றாரே!
வாயடியும் கையடியும் மறைவ தெந்தாள்?
சுருட்டுகின்றார் தம்கையில் கிடைத்த வற்றைச்
சொத்தெல்லாம் தமதென்று சொல்வார் தம்மை
வெருட்டுவது பகுத்தறிவே! இல்லை யாயின்
விடுதலையும் கெடுதலையும் ஒன்றே ஆகும்!

என்று முழக்கமிடுகிறார் பாரதிதாசன்.நாட்டு விடுதலைக்கு முன் சமுதாய விடுதலை தேவை என்பது பாரதிதாசன் கருத்து. சமுதாய விடுதலை ஏற்படாமல் நாம் பெறும் விடுதலை நமக்குக் கெடுதலை தான் என்று திட்டவட்டமாகக் கூறுகிறார். எனவே அவரது பாடல்கள் சமுதாய விடுதலை பற்றிய சங்க நாதமாக முழங்குகின்றன.

பேதம் வளர்க்கப் பெரும் பெரும் புராணங்கள்!
சாதிச் சண்டை வளர்க்கத் தக்க இதிகாசங்கள்
கட்டிச் சமூகத்தின் கண்ணவித்துத் தாமுண்ணக்
கொட்டி அளக்கும் குருக்கள் கணக்கற்றார்:

என்று சுதந்திரத்துக்கு எதிரான சூழ்நிலையைச் சுட்டிக் காட்டினார். சிந்தனா சக்தி சிறிதுமில்லாத, தம்தோள் உழைப்பில் நம்பிக்கை யில்லாத, பகுத்தறிவற்ற, பாமரத் தன்மை நிரம்பிய மக்களின் எதிர்காலம் பற்றி எச்சரிக்கை செய்தார்.

பெரியார் ஈ.வெ.இராமசாமி ருசிய நாடு சென்று திரும்பிய பிறகு பொதுவுடைமைக் கொள்கை பற்றிப் பிரசாரம் செய்யத்