உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

பாரதிதாசன்

மனைவியும் குடும்பச் சிக்கல்கள் பற்றியோ, குழந்தைகளின் நலம்பற்றியோ, வரவு செலவு பற்றியோ, மாடுகன்று பற்றியோ பேசுவது வழக்கம். ஆனால் பாரதிதாசன் எழுதியுள்ள குடும்ப விளக்கின் தலைவி நாட்டுநலன் பற்றிப் பேசுவது வியப்புக் குரியதாக இருக்கிறது.

"நாம் தமிழரென்று சொல்லிக் கொள்கிறோம். தமிழ்நாடு முன்னேற வேண்டும் என்று விரும்புகின்றோம். ஆனால் தமிழர் நலம் பேண நமதுழைப்பையும் காசையும் செலவு செய்தோமா?" என்று தங்கம் வினா எழுப்புகிறாள்.

அதற்கு அவள் கணவரான மணவழகர், "நம் கடை வரும்படியில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு தமிழர் நலனுக்கென்றே ஒதுக்கப்படுகிறது. தமிழர் கழகத்தார் நம் கடைப்படியை மிதித்தவுடன் நம் கணக்கர் அத்தொகையை எண்ணி வைத்துவிடுவார். இதை நீ அறியாயோ?" என்று மனைவியைக் கேட்டார்.

"இழந்த பழம் புகழ்மீள வேண்டும் நாட்டில்
எல்லோரும் தமிழர்களாய் வாழவேண்டும்!
வழிந்தொழுகும் சுவைத்தமிழே பெருகவேண்டும்"

என்று வாழ்த்திவிட்டுக் குடும்பவிளக்கின் தலைவனும் தலைவியும் கண்ணுறங்கினர். 'நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்' என்ற பாரதிதாசன் கூற்று மெய்யாகிறது.

தமிழ் வளர்ப்பதை ஒவ்வொரு தமிழனும் தனது கடமையாகக் கொள்ள வேண்டும். புதிய சிந்தனைகளைத் தமிழுக்கு அறிமுகப் படுத்திச் செந்தமிழைச் செழுந்தமிழாய் ஆக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கிறார் பாரதிதாசன்.

எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்
இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்
வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக
விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெல்லாம் கண்டு
தெளிவுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்