————————————முதல் தொகுதி நடுத்தெருவில் நாற்பது நிமிஷம் * 103
போய்விடலாம் என்று எண்ணிக் கொண்டு எதிர்ப்புறம்பாங்குக் கட்டிடத்தின் ஓரமாக மழைத்துளிகள் மேலே விழாமல் ஒண்டிக் கொண்டு நின்றேன். கைக்கடிகாரத்தில் ஒன்பதரை மணி ஆகியிருந்தது. தெருவில் ஜனநடமாட்டம் மழையின் காரணமாகக் குறைந்திருந்தது. கார், பஸ் முதலியன வழக்கம்போல் போய்க் கொண்டுதான் இருந்தன. தெருவில் கணுக்கால் அளவு தண்ணிர் தேங்கியிருந்தது.
கூட்ஸ் ஷெட்டும் தபாலாபீஸும் எட்டரை மணிக்கே திறக்கப் பெற்று வேலையை நடத்திக் கொண்டிருந்தன. பள்ளிக்கூடத்துப் பெண்கள் காரிலும், வண்டியிலும், நடந்து குடை பிடித்துக் கொண்டும் கூட்டம் கூட்டமாகவும் தனியாகவும் வந்து கொண்டிருந்தார்கள். பாங்கு வேலை நேரம் பத்து மணி ஆகையால் அப்பொழுதுதான் கதவுகளையெல்லாம் ஒவ்வொன்றாகத் திறந்து கொண்டிருந்தார்கள்.
எனக்குப் பஸ் வரவில்லை! நான் இன்னமும் அங்கேதான் நின்று கொண்டிருந்தேன். தெருவிலே தண்ணீரும் என் மணிக்கட்டிலே கடிகாரமும் ஓடிக் கொண்டிருந்தன. மழையில் நனையாமல் ஒண்டி நின்றவாறே அந்த நட்ட நடுத்தெருவில் முச்சந்தியின் கலப்பில் வாழ்க்கை எந்த விதமாகப் பெருகியும், குன்றியும், வடிந்தும், தேங்கியும் ஓடுகிறது என்பதை ரசித்து நோக்கினேன். கண்களில் ஆவலும் மனத்தில் சிந்தனையும் கொண்டவனுக்கு இது ரஸமான பொழுதுபோக்கு அல்லவா?
சல்லடையில் மைதா மாவைக் கொட்டி உயரத் துரக்கிப் பிடித்தால் ‘புருபுரு’ வென்று மாவு விழுதே அந்த மாதிரி மெல்லிய சாரல் விழுந்து கொண்டிருந்தது. பாழாய்ப்போன நகர பஸ் இன்னும் வந்து சேரவில்லை. தெருவையும் கைக்கடிகாரத்தையும், பஸ் வருகிற வழியையும் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழி இல்லை.
தெருவைப் பார்ப்பது சலித்துப் போனால், பஸ் வருகிற வழியையும், அதுவும் சலித்துப் போனால் கைக்கடிகாரத்தையும் பார்த்துக் கொண்டே இருந்ததில் நேரம் கழிந்து கொண்டிருந்தது.
மணி பத்தும் ஆகி அதற்கு மேலும் ஐந்து நிமிஷம் ஆகிவிட்டது. ‘பாங்கு’ திறந்து வேலை தொடங்கிவிட்டது. பாங்கு வாசலில் ஒரு ஆட்டோ ரிக்ஷா வந்து நின்றது. சூட்டும், கோட்டும் டையுமாகக் கண்கள் தெரியாமல் கறுப்புக் கண்ணாடி அணிந்த ஒரு பெரிய மனிதர் அதிலிருந்து கம்பீரமாக இறங்கினார். புத்தம் புதிய தோல் பை ஒன்று அவருடைய கையில் இருந்தது. ‘டக் டக்’ என்று பூட்ஸ் ஒலிக்க அவர் பாங்கு வாசற்படியில் ஏறியபோது அங்கே நின்ற கூர்க்கா ஒரு வணக்கம் செலுத்திவிட்டு ஒதுங்கி நின்று கொண்டான்.
இவர் இந்த பாங்கியின் காரியதரிசியாகவோ, மானேஜராகவோ அல்லது டைரக்டருள் ஒருவராகவோதான் இருக்க வேண்டும் என்று நானாக எனக்குள் ஒரு குருட்டு அனுமானம் செய்து கொண்டேன். அனுமானம் என்பதே அறிவின் குருட்டுத்தனம்தானே?
மணிபத்தும் பத்து நிமிஷமும் ஆகிவிட்டது.குதிகால் உயர்ந்த பூட்ஸும் ஜப்பான் பட்டுக் குடையும் ‘பாப்’ செய்த தலையுமாக ஒரு ஆங்கிலோ இந்திய யுவதி, உதட்டில்