பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று தமிழ்ச் சங்கங்கள் 391

உரையால் முதல் சங்கத்தவராகக் கூறப்பட்ட முடிநாகராயர் ஜாடியதாம். அதுபோலவே, களவியல் உரையால், இடைச் சங்கத்தைச் சேர்ந்தவர்களாகக் கூறப்பட்டவர்கள் பாடிய பாடல்கள் சிலவும் இவ்வெட்டுத் தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன. நற்றிணை 105, 228 பாடல்கள், இடைச் சங்கத்தைப் புரந்தவர்களில் ஒருவனான முடத்திருமாறன் பாடியனவாம். மேலும், முடத்திருமாறன், தன்னுடைய பாட்டு ஒன்றில், 'வில்' என்ற தமிழ்ச் சொல் இருக்க 'சாபம்' என்று சமஸ்கிருதச் சொல்லைத் தேவை இன்றி ஆண்டுள்ளான். 'வெறிகொள் சாபத்து எறிகணை (நற்றிணை 228) (தமிழர் வரலாறு: பக்கம் : 234) முச்சங்கங்கள் இருந்தன என்பது நம்ப இயலாத ஒன்று என்ற தம் கருத்துக்குத் திருவாளர், பி.டி. எஸ். அவர்கள் காட்டும் காரணங்களுள் ஆறாவது காரணம் இது. ஒரு கால அளவில் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பாகும் இத்தொகை நூல் எனக் கூறப்படும் ஒரு தொகை நூலில், எத்தொகை நூல் தொகுக்கப் பெற்ற காலத்துக்குப், பலநூறு ஆண்டுகள் கழித்து வாழ்ந்த புலவர்கள் பாடிய பாக்கள் இடம் பெறுவதும் இயலாது; அவ்வாறு இடம் பெற்றிருக்கும் ஒரு தொகை நூலுக்கு, அத்தகு பாடல்களைப் பாடிய புலவர்களின் காலத்துக்கு முற்பட்ட காலத்தை வகுப்பதும் முறையாகாது. ஒரு கால அளவில் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பாகும், இத்தொகை நூல் எனக் கூறப்படும் ஒரு தொகை நூலில், அது தொகுக்கப்பட்ட காலத்துக்கு முற்பட்ட காலத்தே வாழ்ந்த புலவர்கள் பாடியனவாகக் கூறப்படும் சில பாடல்கள் இடம் பெறுவது தவறாகாது; அது இயலக் கூடிய ஒன்றும் ஆம். அத்தொகை நூலுக்கு, ஒரு சில பாடல்களைப் பாடிய புலவர்களின் காலத்துக்குப் பிற்பட்ட காலத்தை வகுப்பதிலும் முரண்பாடு எதுவும் இல்லை.