பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

வெள் நிலவின் - புன்சிரிப்பாகிய வெள்ளிய நிலவினால்; முக மலர் - அவனது முகங்களாகிய தாமரை மலர்கள்; இரவினும் கிளர - அந்த இரவுப் போதிலும் ஒளி வீச.

***

அன்னபூம் சவுக்கம் சாமரை உக்கம்
        ஆதியாய் வரிசையின் அமைந்த
உன்னரும் பொன்னின் மணியினில் புனைந்த
        உழைக்குலம் மழைக்குலம் அனைய
மின்னிடைச் செவ்வாய்க் குவிமுலைப்
        பணைத்தோள் வீங்குதேர் அல்குலார் தாங்கி
நன்னிறக் காரின் வரவுகண்டு உவக்கும்
        நாடக மயில் என நடப்ப

மலர்களால் ஆன சதுர விதானம், வெண் சாமரம், ஆல வட்டம் ஆகிய அரசர்க்குரிய வரிசைகளை எல்லா அரக்கியர் ஏந்தி வந்தனர். கார்மேகம் கண்டு மகிழும் மயில் போல அந்த இராவணனைக் கண்டு மகிழ்ந்து அவன் அருகே ஆடி நடந்து அசைந்து வந்தனராம். அப்படி வந்த பெண்கள் எப்படியிருந்தார்கள்? சிவந்த வாயும், குவிந்த முலையும், நுண் இடையும் கருமேக நிறமும் கொண்டு விளங்கினார்களாம்.

***

அன்ன - அத் தன்மையதாக; மழைக் குலம் அனைய - மேகத்தின் கூட்டம் போன்று கரு நிறம் கொண்ட; மின் இடை - மின்னல் போலும் நுண் இடையுடைய; செவ்வாய் - சிவந்த வாயும்; குவிமுலை - குவிந்த பருத்த முலைகளும் கொண்ட; பணைத் தோள்-மூங்கில் போலும் வழவழப்பான தோள்களை உடைய; வீங்கு தேர் அல்குலார் - பெரிய தேர் போன்ற அல்குல் உடைய அரக்கப் பெண்கள்; பூம் சவுக்கம் –