உள்ளடக்கத்துக்குச் செல்

அகமும் புறமும்/003-008

விக்கிமூலம் இலிருந்து

இலக்கியத்தில் வாழ்வு

குறிஞ்சி

அகவிலக்கியத்தில் குறிஞ்சித்திணை முதலாவதாக இருப்பது. இத்திணையில் கூறப்பெற்ற ஒழுக்கம் நடைபெறக் கூடிய இடம் மலையும் மலைசார்ந்த இடமுமாம். இது நடைபெறக்கூடிய காலம் குளிர்காலம்; பொழுது, நடுஇரவு; இடம், பொழுது என்று வகுக்கப் பெற்ற இவற்றை முதற்பொருள் என்று இலக்கணம் கூறும். பாடல் அமைவதற்கு ஒரு நிலைக்களம் போன்றது இவ்விலக்கணம் வகுக்கும் வரம்பு.

தலைவனும் தலைவியும் சந்திப்பதும், கூடுவதும், இதனுடன் தொடர்புடைய செய்திகளும் குறிஞ்சித்திணைப் பாடலில் இடம் பெறும்.

நீரின்று அமையா உலகம்

பெரியதொரு மலையடிவாரத்தில் அழகாய் அமைந்துள்ளது தலைவனுடைய வீடு. வீட்டைச் சுற்றிலும் வளமான நல்ல செடி கொடிகள் அடர்ந்துள்ளன. அந்த வீட்டின் எதிரே உள்ளது ஒரு தாமரைத் தடாகம். அக்குளத்தில் நீர் நிறைந்திருப்பதால், தாமரை நன்கு செழித்து வளர்ந்துள்ளது. குளத்தின் கரையில் உள்ளவை வானுற ஓங்கி வளம்பெற வளர்ந்த சந்தன மரங்கள். ஒரு நாள் தலைவி முற்றத்தில் வந்து நின்றாள். அப்போது கதிரவன் உதித்த காலை நேரம். குளத்தில் உள்ள தாமரை தன் தலைவனாகிய சூரியன் வரவு கண்டு, முகம் மலர்ந்து, அவனுடைய கைகளாகிய கதிர்களைத் தன் முகம் முழுவதிலும் தைவருமாறு விட்டிருக்கிறது. தாமரையின் இந்த இன்பத் திளைப்பைப் பார்த்துக் கொண்டிருந்தன தேன்ஈக்கள்.

எப்பொழுது தாமரை முகம் மலரும் என விடிகிறவரை காத்திருந்த அவ்வீக்கள், உடனே அம் மலரில் சேர்ந்து மொய்த்தன. ஏன்? தாமரையில் உள்ள தேனைக் கருதியே அவை புகுந்தன; புகுந்து தேனை உண்டன. அத்தேனை உடைய மலர் திறக்கும் வரையில் அவ்வீக்கள் அம்மலரைச் சுற்றிச் சுற்றிப் பன்னூறு தடவை வட்டமிட்டன. அம்மட்டோ! தம் இனிய குரலால் தாமரையின் பெருமையைப் பலவாறாகப் பாராட்டி யாழும் தோற்றுவிடும் இன்னிசை பாடின.

ஆனால், மலர் திறந்தவுடன் ஈக்கள் தம் பாடலை நிறுத்திவிட்டன; உடனே மலரினுட் சென்று தேனை வயிறார உண்டன; உண்ட பிறகு வாய் திறந்து மலருக்கு நன்றி பாராட்டவில்லை; அம் மலரை முன்போலச் சுற்றி வரவும் இல்லை, வாயை மூடிக்கொண்டு முன்பின் மலரைப் பார்த்து அறியாதவைகள்போல அகன்றுவிட்டன.

எந்தக் குளத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறதோ, அந்தக் குளத்தின் சொந்தக்காரியான தலைவி தன் வீட்டு முற்றத்திலிருந்து இந்த ஈக்களின் செயலைக் கண் கொட்டாமற் பார்க்கிறாள். அவளுடைய வியப்பு அதிகமாகிறது. ‘என்ன ஈக்கள் இவை! சிறிதும் நாணமில்லாமல் தாமரையைப் பாராட்டிப் பாடிச் சுற்றி வந்து அதன் தேனை குடித்துவிட்டு இப்படி வாய் பேசாமல் திரும்பலாமா? எங்கேதான் போகின்றன இவை!’ என்று மீண்டும் அவ்வ்வீக்களையே பார்க்கிறாள். பக்கத்தில் உள்ள சந்தன மரத்தை அடைகின்றன அவை. சந்தன மரப்பூவை அவை நாடுகின்றன. மறுபடியும் அதே பாடல்; அதே சுற்றல்; பிறகு அமைதியாய் இருந்து தேனை உண்ணல், இவையே அங்கும் நடைபெறுகின்றன!

இன்னுங்கொஞ்சம் தன் பார்வையை உயர்த்தினாள் தலைவி. என்ன வியப்பு! எவ்வளவு பெரிய தேன் கூடு? இந்த ஈக்களா இத்துணைப் பெரிய தேன் கூட்டைக் கட்டின! ஆம். இவையேதாம்! எத்தனையோ இடங்கள் இருக்க, ஏன் இவ்வளவு உயர்ந்த சந்தனமரத்தைப் பிடித்தன? ‘சிறுகக் கட்டிப் பெருக வாழ்’ என்ற முதுமொழிப்படி ‘பெருக’ என்ற சொல்லுக்கு ‘உயர’ என்ற பொருளை நினைத்து விட்டனவோ இந்த ஈக்கள்! காரணம் திடீரெனத் தலைவிக்கு விளங்குகிறது. ஆம்! என்னதான் தாமரை சிறந்ததாய் இருந்தாலும், அதில் கிடைக்கும் தேனுக்குத் தனி மணம் கிடையாதல்லவா? ஆகவே, தாமரைத் தேனின் பெருமை வெளிப்பட வேண்டுமானால், அது சந்தன மரத்துடனும், சந்தனப் பூவில் உள்ள தேனுடனும் சம்பந்தப்படல் வேண்டும். ஆகவேதான் தாமரைத் தேனுடன் சந்தன மரத்தைச் சம்பந்தப்படுத்தின போலும் ஈக்கள்!

இக்காட்சியில் ஈடுபட்டிருந்த தலைவிக்குத் திடீரெனத் தோழி முதல் நாள் கூறியது நினைவுக்கு வந்தது. தோழி மிகவும் அறிவாளி; குறிப்பு அறிபவள்; நேற்றுத் தலைவியிடம் பேச்சுவாக்கில் ஒரு காரியத்தையும் கூறிவிட்டாள். சில நாளாகவே தலைவன் ஒரு மாதிரியாய் இருக்கிறான்; திடீரென்று தலைவியின் நெற்றியை உற்றுப் பார்க்கிறான்; ஏன் என்று கேட்டால், ‘ஒன்றுமில்லை உன் நெற்றியில் உள்ள ஒளியைக் கண்டு. மகிழ்ந்தேன்!’ என்று கூறிவிடுகிறான். இதனைத் தலைவி பெரிதாகப் பாராட்டவில்லை. மேலும், எப்போழுதுமே அவனுக்கு அவளுடைய அழகில் ஒரு தனி ஈடுபாடு உண்டு. அவளுடைய உறுப்புக்களின் அழகை விரித்து விரித்துப் பேசுவதிலும், அதை அனுபவிப்பதிலும் அவனுக்கு விருப்பம் அதிகம். ஆனால், நேற்றுத் தோழி கூறியது தலைவியை மிகவும் அச்சுறுத்திவிட்டது. ‘தலைவன் பொருள் தேடுவதற்காக வெளிநாடு செல்லப்போகிறான்’, என்பதே தோழி நீட்டி மடக்கிக் கூறியதன் கருத்து.

அவன் பிரியப் போகிறான் என்பதைக் கேட்ட தலைவி நடுநடுங்கிவிட்டாள். பிரிவின் துயரம் என்ன என்பதை முன்னரே களவுக்காலத்தில் அவள் அனுபவித்ததுண்டு. ஆனால், தலைவனை மணந்துகொண்டு அவனுடன் குடும்பம் நடத்தும் இந்நிலையில் அப்பொழுது பிரிவால் பட்ட வருத்தம் கனவுபோல ஆகிவிட்டது; ஏன்—தலைவி அதைக் கூட மறந்துவிட்டாள். ஆனால், தோழி நேற்றுக் கூறியதை மீட்டும் நினைவில் கொண்டு வந்தபொழுது தலைவன் செய்த செயலுக்குப் பொருள் வேறுவிதமாகவே பட்டது. ஏன் அவள் நெற்றியை உற்றுப் பார்த்தான்? ஏன் அதன் ஒளியில் ஈடுபட்டதாகக் கூறினான்? இப்பொழுது அது ஒளியைத் திடீரென இழந்துவிட்டதா? ஒஹோ? அவன் பிரிந்து விட்டால், அந்த வருத்தத்தால் அவள் வாட, அவளுடைய நெற்றி ஒளியை இழந்துவிடுமே என்று அஞ்சித்தான் அப்படிப் பார்த்தானா!

‘இல்லை; அவ்வாறு இருக்க முடியாது,’ என்று தலைவி நினைத்தாள். ‘ஒரு வேளை அப்படி இருந்தாலோ?’ என்ற எண்ணம் மீட்டும் மனத்தில் முளைத்தது. அவ்வாறாயின், அவன் வாய்ச்சொல் தவறாதவன் ஆயிற்றே என்ற எண்ணம் மறுபடியும் அவள் மனத்தில் உதித்தது.

களவுக் காலத்தில் அவளை முதன்முறை சந்தித்துக் கூடிய பின்னர், இனி ஒரு கணமும் உன்னைப் பிரியேன்; பிரிந்தால், உயிர்வாழேன்! என்றல்லவா கூறினான்? இது வரை அவன், கூறிய சொல்லை மீறுபவன் என்று அறியக்கூடவில்லையே! சாதாரண மனிதர்களானால் சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி எதையாவது கூறிவிட்டுப் பிறகு அதனை மறந்துவிடுவார்கள். ஆனால் தன் தலைவனைப் பற்றி ‘உறுதியான சொல்லுடையவன்’ என்ற முடிவுக்குத் தலைவி பல நாள் முன்னரே வந்துவிட்டாள்.

சிலரிடம் பழகுவது கரும்பை அடியிலிருந்து தின்பது போல் இருக்கும். அதாவது, முதலில் ‘ஆ! ஹோ!’ என்று பழகிவிட்டு, நாட்கள் செல்லச் செல்ல வெறுப்புத் தட்டும் வகையில் நடந்து கொள்வர். ஒரு சிலர் பழக்கம் அல்லது நட்பு, நாளாக ஆக மிகச் சுவையுடையதாய் இருக்கும். அது கரும்பை நுனியிலிருந்து தின்பதுபோன்று ஆகும். தலைவனுடைய நட்பு அத்தகையதன்றோ? திருமணமாகி இத்துணை நாட்கள் கழித்தும் அந்நட்பில் தினந்தோறும் புதிய இன்பம் அல்லவா காண்கிறாள் தலைவி? ‘நீடுதோறும் இனியன் அவன்’ என நினைக்கிறாள். மேலும், அவளைப் பிரிந்து இருக்க அவனால் முடியாது என்பதையும் பலமுறை அவனே கூறியிருக்கிறான். இதுவரை பிரிந்திருந்ததும் இல்லை அவன்.

அப்படிப்பட்டவன் இப்பொழுதுமட்டும் எவ்வாறு பிரிந்து வாழப் போகிறான்? பிரிதல் என்ற ஒன்று மட்டும் அவன், அவள் இருவருக்குமே இயலாத காரியம். தாமரையில் தேன் நுகர்ந்து சந்தன மரத்தை அடைந்து தேன்கூடு வைக்கும் ஈயைப் போலத் தலைவனும் அவளுடன் இருந்து இன்பம் நுகர்ந்து உயர்ந்ததாகிய ‘இல்லறம்’ என்னும் மணம் அந்த இன்பத்திற்குக் கிடைக்குமாறு செய்துவிட்டான். வெற்றின்பம் ஒன்றையே கருதுபவனாயின், களவில் அனுபவிப்பதுடன் நின்றிருப்பான். ஆனால், இல்லறமாகிய மணத்துடன் கூடிய இன்பமாகிய தேனை அல்லவா அவன் சேகரித்தான்! இந்த ஈக்களைப் பார்த்தவுடன் தலைவிக்குத் தலைவன் செய்கின்ற செயல் நினைவுக்கு வந்தது.

அந்த நேரத்தில் தோழி உள்ளே இருந்து வெளியில் வந்தாள்; தலைவி குளத்தையும் சந்தன மரத்தையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, ஆழ்ந்த சிந்தனையில் நிலைபெற்று விட்டதைக் கண்டாள். அவளும் தலைவன் பிரிவைப் பற்றித்தான் நினைந்து வருந்துகிறாள் என்று நினைத்த தோழி, தலைவிக்கு ஆறுதலாக ஏதோ கூறத் தொடங்குகிறாள். ஆனால், தலைவி அவளைப் பேசவிட்டால் தானே! இல்லை. ‘தோழி, அவர் என்னுடைய நெற்றி அழகு கெட்டு ஒளி இழந்து போகும்படியாக ஒரு நாளும் நம்மை விட்டு நீங்க மாட்டார்’. என்று ஒரேயடியாகக் கூறி விடுகிறாள்.

நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர்
என்றும் என் தோள் பிரிபு அறி யலரே!
தாமரைத் தண் தாது ஊதி மீ மிசைச்
சாந்தின் தொடுத்த திம்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை;
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்து அருளி
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ செய்பு அறி யலரே?
                                                         (நற்றிணை—1)

(நின்ற சொல்—தவறாத சொல்; நீடு தோன்று இனியர்—நெடுங்காலம் பழகினும் இனிமையுடையவர்; மீமிசை—மேலே; சாந்தின் தொடுத்த—சந்தன மரத்தில் கட்டிய; புரைய—உயர்ச்சியை உடையன; நறு நுதல்—மணம் பொருந்திய நெற்றி; பசத்தல்—ஒளி கெட்டு விளர்த்துப் போதல்; சிறுமை உறுபவோ—சிறுமை செய்வாரா?)

இப்பாடலில் தலைவி, தலைவன்மாட்டுக் கொண்டுள்ள அன்பின் ஆழத்தைக் ‘கபிலர்’ என்ற புலவர் பெருமான் குறிக்கிறார். பெரியோர்கள் நட்பு (தலைவன் காதல்) தாமரைத் தேன், சந்தன மரத்தில் தேன் அடையானது போல உயர்ந்ததாகும். தலைவிக்குத் தலைவன் எவ்வளவு இன்றியமையாதவன் என்பதை 6,7 அடிகள் விளக்குகின்றன. உலகத்திற்குத் தண்ணீர் எவ்வளவு இன்றியமையாததோ அவ்வளவிற்கு தலைவன் தலைவிக்கு இன்றியமையாதனவாம்.

காதல் என்பது கேவலம் கடைச்சரக்காக வாங்கப்படும் இந்நாளில் இத்தலைவியின் காதற்பெருமையும் ஆழமும் அறிந்து மகிழ்தற்குரியன. நம் முன்னோர் காதலையே கடவுளை அடையும் வழியாகக் கொண்டனர் என இலக்கியம் பேசுகிறது. காதல் இத்தகையதாய் இருப்பின், ஏன் அது முடியாது என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?

*****


பொன் வளையல்

தமிழ் இலக்கியத்தில் சாவா இடம் பெற்று வாழும் கவிதைகளில் எல்லாச் சுவைகளையும் (ரசம்) காணலாம். சில இடங்களில் சில சுவைகள் ஆழ்ந்து நோக்கிய வழியே புலனாகும்படி அமைந்துள்ளன. பழந்தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியம், சுவை எட்டு எனக் கொண்டது; நகை முதலாக உவகை ஈறாக அவற்றிற்குப் பெயர்களும் தந்துள்ளது. (தொல், மெய்ப்பாட்டியல்—3) இதனுள் நகை என்ற முதற்சுவையும் உவகை என்று இறுதியாகக் கூறப்பட்டதும் ஆய்தற்குரியன. உவகை என்பது மகிழ்ச்சி என்றே கூறப்படலாம். ஆனால், மகிழ்ச்சி காரணமாகப் பிறக்கின்ற நகைக்கும் தொல்காப்பியனார் முதற்சுவையாகக் குறிப்பிட்ட நகைக்கும் வேறுபாடு உண்டு. ‘எள்ளல், இளமை, பேதைமை, மடமை’ என்ற நான்கும் காரணமாக நகை தோன்றும் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். அவ்வாறாயின், இதனை மேலைநாட்டுத் திறனிகள் கூறும் ‘Humour’ என்பதனோடு ஒருவாறு ஒப்பிடலாம். ஒருவாறு தான் ஒப்பிடல் கூடுமே தவிர, இவை இரண்டும் ஒன்று என்று நினைந்து யாரும் இடர்ப்படல் வேண்டா. நம்மவர் நகைச்சுவை தோன்றப் பேசிய இடங்களும், மேலை நாட்டார் ‘ஹ்யூமர்’ தோன்றுகிறது என்று கூறும் இடங்களும் வெவ்வேறானவை. இயற்கையில் தோன்றும் நகைச்சுவை ஒருவருடைய பேச்சின் மூலமும் செயலின் மூலமும் பிறரால் அனுபவிக்கப் பெறுகிறது. ஆனால், ஒவ்வொரு நாட்டினரின் பேச்சும் செயலும் பிற நாட்டினருடைய சொல் செயல்களிலும் மாறுபட்டவை அல்லவா? எனவே, நாம் நகை தோன்றப் பேசும்பொழுது பிறநாட்டாருக்கு அங்கே அச்சுவை தோன்றுவதில்லை. அப்பிறநாட்டார் நம்மொழியை நன்கு கற்றிருப்பினுங்கூட, நகைச்சுவை தோன்றும் இடங்களை அவர் காண்டல் இயலாது. நமது மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மட்டுமே இம்மொழியில் தோன்றும் நகைச்சுவையை நன்கு அனுபவித்தல் கூடும். ஆங்கிலப்படக் காட்சிகள் பார்க்கும்பொழுது இந்த அனுபவம் ஏற்படுதலைக் காணலாம். பேசிக் கொள்பவர்கள் விழுந்துவிழுந்து சிரிப்பார்கள்; ஆனால், அதனைக் கேட்கும் நமக்கு அந்த பேச்சு முற்றிலும் விளங்கினாலுங்கூட ஏன் சிரிக்கிறார்கள் என்பது பல சமயங்களில் விளங்குவதில்லை!

எனவே, மேலை நாட்டார் கூறும் ‘ஹ்யூமரை’ அப்படியே தமிழில் ‘நகைச்சுவை’ என்று கூறிவிட்டதாக யாரும் நினைந்துவிட வேண்டா. பிறரைப் புண்படுத்தாத முறையில் அமையவேண்டிய நகைச்சுவை, பிறரிடம் காணப்படும் குறைபாடுகளை எடுத்துக்காட்டும் பொழுது கூட, அவர்களும் சேர்ந்து நகைக்குமாறு அமைய வேண்டுமே தவிர, அவர்களை வருத்தத்தில் ஆழ்த்திவிடக் கூடாது. தம்பால் உள்ள குறைகளைத்தாம் எடுத்துக் காட்டுகின்றனர் என்று அறிந்தவிடத்தும் குறையுடையார் வருந்தாமல் ஏற்றுக் கொள்ளும் முறையில் அமைவதுதான் சிறந்த நகைச்சுவை எனப்படும். நகைச்சுவை தோன்றப் பேசும் வன்மை சிலரிடம் காணப்படும்; ஆனால், இவ்வாறு பேசுவதால் யாதொரு பயனையும் அவர்கள் எதிர்ப்பார்ப்பதில்லை. அந்த நேரத்தில் பேச்சைக் கேட்பவர்கள் கைகொட்டிச் சிரித்து ஆர்ப்பரிப்பதைத் தவிர வேறு பயனைப் பேசுபவரும் கேட்பவரும் எதிர் பார்ப்பதில்லை.

ஆனால், இலக்கியத்தில் நகைச்சுவை தோன்றும் பொழுது இவ்வாறில்லை. நகை தோன்றச் செய்வதுடன் பெரியதொரு பயனையும் கருதியே இலக்கிய ஆசிரியன் நகைச்சுவையைக் கையாள்கிறான். அவன் கருதும் பயன் தனிப்பட்ட ஒரு மனிதனைத் திருத்தவேண்டும் என்பதாகவும் இருக்கலாம். அன்றே, அவன் காலத்தில் காணப்பெற்ற சமுதாயம் முழுவதையும் திருத்தவேண்டும் என்ற நோக்கமாகவும் இருக்கலாம். இவையல்லாத மூன்றாவது வகையும் உண்டு. அகப்பாடல்களில் மருதத்திணைப் பாடல்கள் பலவற்றுள்ளும் நகைச்சுவை உண்டு. தலைவனுடைய நாட்டு வளனை விவரிக்கும் முகமாக அவனுடைய குறைபாடுகள் அனைத்தும் பேசப்பெறும். மேலாகப் பார்ப்பதற்கு நகைச்சுவை தோன்றினாலும், ஆழ்ந்து நோக்குகையில் தலைவனைத் திருத்தவேண்டும் என்ற ஆவல் அச்சொற்களுள் அடங்கியிருக்கும். எவ்வளவு பெரிய தவற்றையும் நகைச்சுவையுடன் எடுத்துக் கூறினால், பிறர் மனம் நோவாமல் எடுத்துக் கூறலாம். நற்றிணையில் வரும் நுண்மையான நகைச்சுவை ஒன்றைக் காணலாம். அது மூன்றாம் வகையைச் சேர்ந்தது.

பல வகையாலும் சிறப்பெய்திய தலைவன் அவன். அவளும் பெரிய இடத்துப் பெண்தான். அவன் கண்ட பெண்களிடமெல்லாம் மனத்தைப் பறிகொடுத்துத் தவிப்பவன் அல்லன்; அவளும் அவ்வாறே. இவ்வாறு இருந்தும், அவ்விருவரும் ஒருவரையொருவர் சந்தித்தவுடன் காதல் கொண்டனர். கண்டதும் காதல் என்று இக்காலத்தார் கூறும் வகையில் அமைந்ததன்று அவர்களுடைய காதல். பல பிறவிகளிலும் தொடர்ந்து வரும் ஒன்றுதான் தம்முடைய காதல் என்பதை அவ்விருவரும் நன்கு அறிந்து கொண்டனர். முதன்முறை இருவரும் சந்தித்துக் களவுப் புணர்ச்சியில் ஈடுபட்டனர். இதன் பிறகு பல முறையும் சந்திப்பதாகவே உறுதி பூண்டு இருவரும் பிரிந்தனர்.

முதன்முறை அவர்கள் சந்தித்தது ஒருவருக்கும் தெரியாது. விதிதான் தங்களைச் சேர்த்துவைத்தது என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். ஆனால், மறுமுறை சந்திப்பது முதன்முறை போல அவ்வளவு எளிதாய் இல்லை. தோழியின் உதவி இல்லாமல் தலைவனைச் சந்திக்க முடியாது என்பதைத் தலைவி உணர்ந்தாள்; தலைவனும் இதனை நன்கு உணர்ந்தான். எனவே, இருவரும் தனித் தனியே தோழியிடம் பேசி அவளுடைய உடன்பாட்டைப் பெற்றுவிட்டனர்.

நாள்தோறும் வந்தான் தலைவன்; தலைவியைச் சந்தித்தான். ஆனால், அதற்குமேல் அவன் ஒன்றும் செய்வதாகத் தெரியவில்லை. வாழ்நாள் முழுதும் களவொழுக்கத்தில் கழித்துவிடமுடியுமா? அவள் நினைக்கிறாள் முடியாதென்று. ஆனால், அவன் அதுபற்றிக் கவலைப்படுவதாகவே தெரியவில்லை! குடும்பப் பொறுப்பு இல்லாமலே இன்பம் பெறுவதைச் சிறந்த வழி என்று கருதிவிட்டானா? அவன் வாய்மூடி இருப்பதால் தலைவி படும் துயரை அவனுக்கு யார் எடுத்து உரைப்பார்? தலைவியே கூறுதல் நலம் என்றுகூடத் தோழி கருதினாள். ஆனால், பண்பாடுடைய அவனுக்கு இதனை எடுத்துக் கூறுதல் பொருத்தமற்றது என்று கருதினாள் தலைவி.

ஒருநாளில் எப்பொழுதோ ஒரு நேரத்தில் வருகிறான் அவன். அந்த நேரத்தில் அவன் எதிர்பார்த்து வரும் இன்பத்திற்கு மறுதலையாக அவனுடைய கடமை பற்றி நினைவூட்டுவது நாகரிகமற்ற செயலாகும் என்று கருதினாள் தலைவி. தலைவிக்குத் தோன்றும் இவ்வெண்ணங்கள் தலைவனுக்குப் புலப்பட்டதாகவே தெரியவில்லை. எத்தனை நாட்களுக்குத்தான் பொறுத்திருக்க முடியும்? தலைவன்மாட்டுள்ள அன்பு காரணமாகத் தலைவி பொறுத்திருக்கத் துணியலாம். ஆனால், ஊரார் வாய் சும்மா இராதே! சிறு துாற்றல் , பெருமழையானாற் போல ஊரார் பழிச்சொல்லும் மிகுந்துவிட்டதே! இந்நிலையில் இதற்கு ஒரு வழிகாணவேண்டும் என்று முடிவு கட்டினாள் தலைவி.

தலைவி சிறு குழந்தையாய் இருந்தபோது அவளுக்கு மருத்துவம் செய்து வந்தார் ஒரு மருத்துவர். அவளுக்கு மட்டும் என்ன? ஊரார் அனைவரும் நோயுற்றபொழுது அவரிடமே சென்றனர். அவர் எவ்வளவு அறிவும் ஆற்றலும் படைத்தவர்! அவர்,

‘நோய்நாடி நோய்முதல் நாடிஅது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.’
                                                                        (குறள்–948)

என்ற குறளை நன்கு அறிந்து கடைப்பிடிப்பவர். ஒரே நேரத்தில் இருவர் வயிற்றுவலி என்று கூறிக்கொண்டு வருவர். இருவருக்கும் வயிற்று வலிதானே என்று அவர் ஒரே மருந்தைத் தருவதில்லை. வயிற்று வலியாகிய காரியம் ஒன்றேயாயினும், அதன் காரணம் வெவ்வேறாகலாம் அல்லவா? எனவே, ஒருவருக்கு இனிய மருந்தும், மற்றவருக்குக் கசப்பு மருந்தும் தருவார். கசப்பு மருந்து உண்பவர் தம்முடைய வருத்தத்தைத் தெரிவித்து எவ்வாறாயினும் தமக்கும் இனிப்பு மருந்து தரவேண்டுவார். ஆனால், மருத்துவர் அதற்கு ஒப்புக் கொள்ள மறுத்து விடுவார். ‘நோய்க்கு மருந்தே தவிர நாவுக்கு மருந்து அன்று’, என்று கூறிவிடுவார்; இதனால், நடுவு நிலை திரியாத அறவோர் என்ற பெயரையும் பெற்றுவிட்டார். பல காலம் அவர் இவ்வாறு செய்வதைத் தலைவி கண்டிருந்தாள். இப்பொழுது அவளுக்கு அவருடைய நினைவு தோன்றிற்று. அவர் செயலை எடுத்துக் காட்டுவதன் மூலம் தலைவனுக்கு அறிவு கொளுத்த முடிவு செய்துவிட்டாள்.

நேரடியாக ஒன்றைக் கூறுவதைக்காட்டிலும் மறைமுகமாகக் கூறுவது எளிது. அவ்வாறு கூறுவதிலும் நகைச்சுவை தோன்றக் கூறுவது இன்னும் நலம் பயக்கும். ஆனால், நகைச்சுவை ததும்பப் பேசக்கூடிய நிலையிலா தலைவி இருக்கிறாள்? எல்லையற்ற வருத்தத்தில் ஆழ்ந்திருக்கும் அவளால் சுவைபடப் பேசல் இயலுமா? பேச முடியும் என்று 'சுவை இயல்' ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். ஒவ்வொருமுறையும் ஒருவன் நகைச்சுவை ததும்பப் பேசும் பொழுதும் சிரிக்கும் பொழுதும் ஆராய்ந்து பார்த்தால் ஓர் உண்மை விளங்கும். அவனுடைய உணர்ச்சிகளை ஆழ்ந்து நோக்கினால் கண்ணிர் வரவழைக்கும் ஒரு நிலையிலிருந்தே இந்த நகைச்சுவை தோன்றிற்று என்பதை அறிய முடியும்? இவ்விலக்கணத்தைத் திருப்பி வைத்துப் பார்த்தாலும் இதில் உண்மை இருப்பது விளங்கும். எல்லையற்ற துயரம் தோன்றிய பொழுதும் சிரிப்பும், சிரித்தற்கு ஏற்ற பேச்சும் தோன்ற இடமுண்டு என்பதை அறிய முடிகிறது. [For, in every case in which a man laughs humourously there is an element which, if his sensitivity were sufficiently exaggerated, would contain the possibility of tears. - The Sense of Humour by Max Eastman. P.21.] மேலே கூறப்பெற்ற தலைவிக்கு எல்லையற்ற வருத்தத்தினாலேதான் நகை ததும்பப் பேசும் வாய்ப்பு ஏற்படுகிறது.

நகைச்சுவையுடன் வரும் பேச்சு ஏதாவது ஒரு காரணம் பற்றியே தோன்றல் கூடும். அக்காரணத்தை ஆய்ந்த திறனாய்வாளர் இவ்வாறு கூறுகின்றனர்; நகைப்பேச்சு என்பது வைரம் போன்ற ஒளிபடைத்த ஓர் அனுபவமாகும்; விளையாட்டில், எதிர்பாராமல் தோன்றிய அதிர்ச்சியோ, ஏமாற்றமோ (அது மனத்திருப்தியை உண்டாக்குவதாயின்) தோன்றும் பொழுதுதான் இந்த அனுபவம் கிட்டுகிறது. [And a joke is a little node, or gem like moment in our experience created by the exact coincidence of a playful shock or disappointment with a playful or a genuine satisfaction - Ibid P.28.]

தலைவியின் எல்லையற்ற நம்பிக்கை மெள்ளத் தகர்கிறது. தலைவன் நீண்ட காலமாகத் தன் எதிர்காலம் பற்றி ஒன்றும் கவலையுறாமல் இருப்பதால், ‘இது எவ்வாறு முடியுமோ!’ என்ற ஐயம் முதலில் தோன்றிற்று, நாளடைவில் அந்த ஐயம் வளர்ந்து பெரியதாயிற்று. ஒருவேளை அவள் அவனை நெருக்கிக் கேட்ட பொழுது அவன் தட்டிக் கழிக்கும் முறையிலோ, அன்றி அவள் மனம் அமைதியடையாத நிலையிலோ பேசியிருக்கலாம். இந்த ஏமாற்றம் அவளுடைய மனத்தில் ஆழப் பதிந்து விட்டது. இதன் பயனாகவே அவளுடைய பேச்சும் மாறுபட்டு வெளிவருகிறது. ஒரு நாள் தலைவன் வந்தான்; ஆனால், தலைவியிடம் நேரே வந்துவிடாமல், ஒரு வேலி ஓரத்தில் மறைவாக நிற்கிறான். அவன் வந்து நிற்பதைத் தோழி, தலைவி என்ற இருவரும் அறிந்தனர். அவனிடத்தில் நேரிற் கூறமுடியாத ஒன்றை மறைமுகமாகக் கூற விரும்பினாள் தலைவி; அவன் இருப்பதை அறியாதவள் போலப் பேசத் தொடங்குகிறாள் தோழியை நோக்கி; தலைவன் தன்னை விட்டு நீண்ட காலம் பிரிந்திருப்பதால் தன் தோள்கள் மெலிந்துவிட்டன என்று கூறவேண்டும் அவளுக்கு. அதைத்தான் எவ்வளவு திறம்படக் கூறுகிறாள்! ஆத்திரத்துடனும் அழுகையுடனும் பேசவேண்டிய ஒரு நிகழ்ச்சியை ஆழ்ந்த நகைச்சுவை ததும்பப் பேசுகிறாள் தலைவி;

“தோழி, திருத்தமாகச் செய்ய பெற்றனவும் ஒளி பொருந்தியனவுமான வளையல்களே வேண்டுமென்று யான் அழவும், என் தந்தையார் என்ன செய்தார் தெரியுமா? கடுமையான பிணியுடையவர்கள் விரும்பிய மருந்தைக் கொடாமல், அவர்கள் நோயை ஆய்ந்து, அதற்கு ஏற்ற மருந்தையே தரும் அறமுடைய மருத்துவனைப் போலத் தந்தையார் எனது நிலையை உணர்ந்து கொண்டார். தலைவனொடு நமக்குப் பிரிவு நேரிடும்; அந்த நேரத்தில் நம்முடைய தோள் நெகிழும். அவ்வாறு நெகிழ்ந்தால், இந்த வளையல்கள் கழன்று வீழ்ந்துவிடுமே என்று ஐயுற்றவர் போல, மிகவும் இறுக்கமாக அமைந்துள்ள சிறிய வளையல்களையே போட்டு விட்டிருக்கிறார்,” என்று கருத்துப்படக் கூறுகிறாள்.

திருந்துகோல் எல்வளை வேண்டியான் அழவும்
அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கொடாது
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல
என்ஐ வாழிய பலவே! பன்னிய
மலைகெழு நாடனொடு நம்மிடைச் சிறிய
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல
நீப்ப நீங்காது வரின்வரை அமைந்து
தோட்பழி மறைக்கும் உதவிப்
போக்குஇல் பொலம்தொடி செறிஇ யோனே!
                                                             (நற்றிணை, 136)

‘தலைவன் பிரிந்தபொழுது தோள் இளைத்தாலும் கழன்று விழாத வளையல்களாகப் பார்த்து எனக்குப் போட்டு அனுப்பினார் போலும் தந்தையார்! அவர் வாழ்க!’ என்று கூறுவதில் நகைச்சுவை அமைந்துள்ளது. ஆனால், நுண்ணிதின் நோக்குவார்க்கேயன்றி மேலாகக் கற்பார்க்கு விளங்கா வகையில் அமைந்து கிடக்கிறது அந்தச் சுவை. தன் தோள்கள் இளைத்துவிட்டமையைத் தலைவன் ஆர்வமிகுதியால் காணவில்லையாகலின், சிரிப்புடன் பேசுவதுபோல அவ்வுண்மையை அவன் காது கேட்கக் கூறிவிட்டாள். என்றாலும், அந்த நகைச்சுவையும் அவளுடைய பெண் தன்மைக் கேற்ப அடக்க ஒடுக்கத்துடன் வெளிவருகிறது. வெடிச் சிரிப்புடன் வரும் சொற்களல்ல இவை; மெல்ல முல்லையரும்புப் போன்ற பற்கள் மட்டும் வெளியே தெரியும் படியான புன் சிரிப்புடன் வரும் சொற்கள்.

இலக்கியத்தில் தோன்றும் இத்தகைய நகைச்சுவைகட்கு ஒரு காரணம் கூறுகின்றனர் திறனாய்வாளர். மனித மனத்தின் ஆழத்தை அது வெளிப்படுத்துகிறது. ஆதலின், அதனைக் காண்டல் வேண்டும்.

“எதிர்பார்த்தது நடைபெறும் பொழுது தோன்றும் இன்பத்தையும், அது நடைபெறாத பொழுது ஏற்படும் துன்பத்தையும் நம் அறிவு எடை போடுகிறது. துன்பந்தான் நேரும் அந்த இக்கட்டான நிலையில், மகிழ்ச்சி தரக் கூடியது எதுவாயினும், அந்த ஒன்று கற்பனை அளவிலே தான் மகிழ்ச்சி தரும். என்றாலும், அறிவு அந்தக் கற்பனை மகிழ்ச்சியைப் பற்ற விரும்புகிறது. இவ்வாறு கற்பனை மகிழ்ச்சியைப் பெறுவதன் மூலம், இன்மையால் நேரும் துன்ப உணர்ச்சி தணிகிறது.”

[Our brain is just balancing, as we might imagine upon the Fine edge between pain and pleasure at the failure of what it had momently desired, when there looms into the void some unexpected rips apple of a thing desired more, or desired at least deeply and continuously, and with a hunger that can be relied on to be glad. And by this means that arbitrary trick of turning loss into gain is actually warrented and borne out by the facts. - Ibid. p.28.]

தலைவன் செய்த கொடுமையால் ஏற்பட்ட ஆறாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் தலைவியைத் தந்தை செய்து போட்ட இறுக்கமான வளையல்கள் பற்றிய நினைவு சிரிக்கச் செய்கிறது. ஏனைய சந்தர்ப்பமாயின், இது நகைப்பதற்குரிய செயலன்று. ஆனால், பிரிவினால் ஏற்பட்ட வருத்தத்தின் எதிரே தந்தையின் இந்தச் செயலிலும் ஒரு நகைப்பைப் பெறுகிறாள் தலைவி. இத்துணை நுண்ணிய முறையில் சுவைகளைப் பெய்து பாடும் தமிழ்க்கவிஞர் இனம் இன்று எங்கு மறைந்ததோ, தெரியவில்லை.

‘நாடனை அறியலும் அறியேன்!’

தம்முடைய நெஞ்சால் உண்மை என்று அறிந்த ஒன்றை மறைத்துக் கூற முற்படுதல் தவறாக முடியும் என்று கூறினார் வள்ளுவப் பெருந்தகையார். ஆனால், உலக மக்களிள் பெரும்பாலோர் அறிந்தும் அறியாமலும் இக்குற்றத்தைச் செய்துதான் வருகின்றனர். நெஞ்சறிந்தே பல சந்தர்ப்பங்களில் பொய்பேசுகிறார்கள். இவ்வாறு பேசுவதால் அந்த நேரத்தில் வரும் துன்பத்திலிருந்து விடுபடவே பல சமயங்களில் இவ்வாறு பொய் பேசுகின்றனர். இன்னுஞ் சிலர் பொய் கூற வேண்டிய இன்றியமையாமை இல்லாத பொழுதும் பொய் கூறுகின்றனர். இவர்களே ஒரு தனி இனத்தைச் சேர்ந்தவர்கள். காரணமில்லாமல் ஏன் பொய் கூறுகின்றனர் என்று ஆராய்ந்தால், ஓர் உண்மை விளங்கும். இவ்வினத்தார் பொய் கூறுதலை ஒரு கலையாக வளர்த்து விட்டனர். கலைப்பித்துப் பிடித்த கலைஞர்களுக்குத் தங்கள் கலையை மட்டும் மறக்க இயலாது; உணவின்றிப் பட்டினியால் வாடுவார்கள்; ஏனைய எத்தகைய கடுந் தண்டனையை வேண்டுமானாலும் அனுபவிப்பார்கள். ஆனால், அவர்கள் விரும்புகிற கரையிலிருந்து அவர்களைப் பிரித்து விட்டால், நீரிலிருந்து தரையில் எடுத்துப் போடப்பட்ட மீன் போல மூச்சுத் திணறுவார்கள். இந்த இலக்கணமும் கலைஞர் அனைவருக்கும் பொதுவானதே. எனவே, பொய் பேசுதலைக் கலை போல வளர்த்தவர்கட்கும் இது உண்மையாகும். அவர்கள் எந்தத் துன்பத்தை வேண்டுமானாலும் அனுபவிக்கத் தயங்க மாட்டார்கள். ஆனால், ஒரு நாள் மட்டும் பொய் கலவாமல் பேசவேண்டும் என்று கட்டுப்பாடு செய்துவிட்டால்—பாவம்—அவர்கள் பாடு பெருந்திண்டாட்டமாய்ப் போய்விடும்! இந்த வியப்பான பிராணிகளிடம் மற்றொரு புதுமையையும் காணலாம். அதுதான் காரணமில்லாமல் இவர்கள் பொய் பேசுவது ஒரு பயனைக் கருதிப் பொய் பேசுபவர்களை நாம் மன்னித்துவிடலாம். ஆனால், எவ்விதப் பயனையும் எதிர்பாராமல் பொய்யைப் பொய்க்காகவே பேசும் இயல்புடையவர்கள் இவர்கள். ஆதலாலேதான் இவர்களைக் கலைஞர்கள் என்று கூடக் கூறலாம் போலத் தோன்றுகிறது.

ஏனைய கலைகளில் ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லை; இரண்டு தரத்தாரும் ஒத்த மதிப்புடைய கலைஞராய் விடலாம். ஆனால், ‘பொய்க் கலை’யில் மட்டும் நம் சோதரிமார்கள் நம் பக்கத்திற்கூட வர இயலாது. ஆண் மக்களாகிய நம்முடைய இனத்தின் தனி உரிமை இக்கலை. இக்காலத்தில் வாழும் நமக்கும் மட்டும் இதனைக் கூறுவதாக யாரும் நினைத்து மகிழ்ந்துவிட வேண்டா. நம்முடைய முன்னோர்கட்கும் பொருந்தும். அதுவும் ‘காதல்’ விஷயத்தில் இது முற்றிலும் உண்மை. காதல் சம்பந்தமான விஷயங்களில் தலைவன் அஞ்சாது பொய் உரைப்பான். ஆனால் ஒன்று; அந்நாளில் பொய் பேசிய நம் இனத்தவனாகிய தலைவனுக்கும் இன்று வாழும் நமக்கும் ஒரு சிறு வேறுபாடு உண்டு. அவனுடைய பொய்யால் பிறருக்குத் தீமை ஏற்படுவதில்லை. இன்று நாம் கூறும் பொய்களால்.....?

பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த தலைவனுடைய பொய் ஒரு புறம் இருக்க, சில சந்தர்பங்களில் பெண்களும் இதனைக் கையாண்டுள்ளனர். அவ்வாறு அவர்கள் பொய் கூறுவேண்டிய இன்றியமையாமை ஏற்படுவதும் அந்தச் சமுதாய வாழ்வில் உண்டு. ஓர் ஆண் மகனும் ஒரு பெண் மகளும் சேர்ந்து தாமே களவு வாழ்க்கையில் ஈடுபட்டார்கள். அப்படி இருக்க, ஊரார் அனைவரும் அந்தப் பெண்ணைப் பற்றித்தான் அலர் (பழி) தூற்றினார்கள். அவள்மேல் வந்த பழிக்கு அவனும் சரிபாதி காரணமாவான் என்பதை ஏனோ அவர்கள் அறிவதில்லை! அறிந்தாலும் அவனைக் குற்றம் கூறுவதும் இல்லை. எனவே, தம்முடைய களவு வாழ்க்கையைப் பிறர் அறியாமல் மறைத்து ஒழுக வேண்டுமென்று அவன் கவலைப்படவே இல்லை. இவ்வாழ்க்கை வெளிப்பட்டு விடக்கூடாதே என்ற கவலையெல்லாம்—பாவம்—அந்தப் பெண்ணுக்கும் அவளுடைய தோழிக்குமே உண்டு. இதனால், சில சந்தர்ப்பங்களில் தலைவியும் தோழியும் வேறு வழி இன்றிப் பொய் பேசி உள்ளனர். இலக்கியத்தில் எங்கோ இரண்டொரு பாடல்கள் இத்தகைய காட்சியைச் சித்திரிக்கின்றன.

அத்தலைவனிடம் சில காலமாக அத்தலைவி களவில் ஈடுபட்டு வருகிறாள். இந்தச் சந்தர்ப்பத்தில் அவள் தினைப்புனத்தில் காவல் காத்து வருவது அவளுடைய களவு வாழ்க்கைக்கு மிகவும் உதவியாய் இருக்கிறது. தினைப்புனம் அவர்களுடைய வீட்டிலிருந்து நெடுந் தூரத்திற்கு அப்பால் அமைந்திருக்கிறது, நீண்ட தூரத்தில் அமைந்துள்ள அப்புனத்திற்கும் வீட்டிற்கும் அடிக்கடி சென்று வருதல் என்பது இயலாத காரியம். எனவே, தலைவியும் தோழியும் இரண்டொரு பணிப் பெண்களுமே தினைப்புனத்தில் தங்குவார்கள். தினைப்பயிர் அறுவடை ஆகிற வரையில் அவர்கள் புனத்திலேயே தங்கி இருக்க வேண்டும். வீரக்குடியில் பிறந்த பெண்கள் ஆகலின், வேறு ஆண் மக்களின் துணை இன்றி அவர்கள் மட்டுமே அங்குத் தங்கியுள்ளார்கள். ஆண் மக்களின் வாடையே இல்லாமல் ‘அல்லி ராஜ்யம்’ நடத்தும் தலைவி, ஏனைய தோழிகளோடு சேர்ந்து வாழ்க்கையை மிக இன்பமாகக் கழிக்கிறாள். என்றோ ஒரு நாள் அவள் தந்தை மகளைப் பார்த்துவிட்டுப்போக வருவான். மற்றொரு நாள் தாய் வருவாள். பிறிதொரு நாள் தலைவியின் உடன் பிறந்தார் வந்து அவளைக் கண்டு போதலும் உண்டு. அவளுடைய வாழ்க்கை தினைப்புனத்தில் நன்கு நடைபெற இன்றியமையாத பொருள் ஏதேனும் தேவைப்பட்டால், அவர்கள் அதைக் கொண்டு வந்து தந்து போவார்கள். தந்தைக்கும், அண்ணன்மார்க்கும் குடும்பத்தைத் தாங்க வேண்டிய பொறுப்பு இருத்தலின், அவர்கள் புனத்திற்கு எப்பொழுதாவது வந்தாலும் நீண்ட நேரம் தங்க இயலாது. தாயும் குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய கட்டுப்பாடு உடையவள். ஆதலால், அவளும் அடிக்கடி வரமாட்டாள். வந்தாலும், இவர்களுடன் தங்கமாட்டாள். எனவே, தலைவியின் பாடு கொண்டாட்டந்தான்!

இம்மாதிரி வாழ்க்கை நடைபெற்று வருகையிலேதான் ஒரு நாள் அவன் வந்தான்; தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்; உடன் காதலும் பிறந்தது. பின்பு இருவரும் தனியே சந்தித்தனர்; மகிழ்ச்சியுடன் காலத்தைக் கழித்தனர். தலைவனுடன் சேர்ந்த தலைவி, அந்த மலைப்புறமெல்லாம் சுற்றி அலைந்தாள்; அவனுடன் சேர்ந்தே மலைச் சுனைகளில் நீராடினாள்; அருவிகளிலும் குளித்து விளையாடினாள். இருவரும் நேரம் போவது தெரியாமல் வாழ்ந்து வரத் தலைப்பட்டனர். தலைவியின் உயிர்த் தோழிக்கு மட்டும் தலைவியின் இந்தப் புதிய வாழ்க்கை தெரியும். அவளும் தன்னால் இயன்ற அளவுக்குத் தலைவியின் வாழ்க்கை இன்பம் அடைய உதவுவாள். மற்றப் பணிப் பெண்களைப் பொருத்த மட்டில் தலைவியின் புது வாழ்வு நன்கு தெரியாது. தெரிந்தாலும், அவர்கள் அவள் செயல்களில் ஈடுபடுவதுமில்லை. அவள் நடத்தையைக் கவனிக்க அவர்கள் யார்? புனத்திற்கு வெளியிலிருந்து ஒருவரும் வாராத வரை தலைவியின் இன்ப வாழ்வு ஆற்றோட்டம் போல நன்கு நடைப்பெற்றுத்தான் வந்தது.

தாயோ, தந்தையோ வருகின்ற அந்த நேரத்தில் தலைவி பரண்மேல் நின்று கொண்டிருந்துவிடுதல் போதுமானது. என்றாவது தலைவியின் முகம் மாறுபட்டு இருப்பதாகத் தாய்க்குத் தோன்றும். அவளுடைய நடை, உடை, பாவனைகள் அனைத்திலுங்கூடச் சில சந்தர்ப்பங்களில் வேறுபாடு தோன்றுவதுண்டு. அம்மாதிரி நேரங்களில் எல்லாம் அந்தப் பைத்தியக்காரத் தாய்க்கு மகள் மேல் ஐயந் தோன்றுவதில்லை. சில சந்தர்ப்பங்களில் தங்களைப் பிரிந்து இருப்பதால் இந்த மாறுபாடு ஏற்பட்டிருந்தாலும் இருக்கலாம் என்று அவள் நினைத்துக் கொண்டு சென்றதும் உண்டு.

தாய் இவ்வாறு வந்து சென்றுகொண்டிருந்த வரை தலைவிக்கு எவ்வித துன்பமும் நேரவில்லை. ஆனால் உலகத்தில் நாம் நினைத்தவை நினைத்தபடி நடை பெறுவதில்லை அல்லவா? அவ்வாறு நடைபெற்றால், இதனை உலகம் என்றுதான் கூறு முடியுமா? ஒரு நாள் தாய் வருவாள் என்று தலைவி சற்றும் எதிர் பார்க்கவில்லை. ஏனெனில், முதல் நாள்தான் அவள் வந்து போனாள். எனவே ஊரிலிருந்து ஒருவருமே தன்னைக் காண வரமாட்டார் என்று நினைத்துவிட்டாள் தலைவி. எனவே, தலைவன் வந்தவுடன் அவனுடன் புறப்பட்டு விட்டாள். நேரம் போவதே தெரியவில்லை. அவளுக்கு. மாலை நெடுநேரம் ஆகிவிட்டது. ஏன் அதற்குள் அந்திப் பட்டுவிட்டது என்று கேட்கதான் அவளுக்குத் தோன்றுகிறது. தன்னால் காவல் காக்கப்பட வேண்டிய தினைப்புனம் என்ன கதியாயிற்றோ என்றுகூட அவள் கவலைப் படவில்லை.

அவள் எல்லையற்ற இன்பக்கடலில் திளைத்தபடியே மாலை நேரத்தில் பரணை நோக்கி வந்தாள். பரண் அமைந்திருக்கும் இடத்திற்கு சிறிது தூரம் வரை தலைவனே அவளைக் கொண்டு வந்து விட்டுவிட்டுச் சென்றான். பரண்மேல் ஏறிச் சென்றாள் தலைவி. என்ன வியப்பு! அவள் தாய் அங்கே அமர்ந்திருந்தாள். கால தேவனைக்கூடத் தலைவி அந்த இடத்தில் அஞ்சாமல் சந்தித்திருப்பாள்; ஆனால், அவளுடைய தாயை மட்டும் சந்திக்க விரும்பவில்லை. என்ன செய்வது!

எவ்விதமான ஐயமும் கொள்ளாமல், “எங்கே அம்மா இவ்வளவு நேரம் சென்றிருந்தாய்?” என்று கேட்டுவிட்ட தாயையும், அவளுடைய கேள்வியையும் சற்று எதிர்பாராத தலைவி, வாயடைத்து நின்றுவிட்டாள். அவள் தாய் வேறு விதமாகப் புரிந்துகொண்டுவிட்டாள. தன் கோபத்தை எங்கே மகன் அறிந்து கொண்டு மனவருத்தம் அடைவாளோ என்று அஞ்சிய தாய், உடனே, “ஏன் அம்மா, திணைப்புனக் காவலைக்காட்டிலும் முக்கியமான காரியம் என்ன இருக்கிறது? எங்குச் சென்றிருந்தாய்?” என்று கேட்டுவிட்டாள். ‘புனக்காவலை விட்டுவிட்டு ஏன் போனாய்?’ என்று தாய் கேட்டதும் தலைவி மிகவும் அஞ்சிவிட்டாள். தான் தலைவனுடன் இருந்ததைத் தாய் கண்டுவிட்டாளோ என்ற ஐயம் மகள் மனத்தில் தோன்றிவிட்டது. மேலும் தான் ஒரு தவற்றைச் செய்துவிடடு அஞ்சி நிற்கையில் பிறர் யாது கூறினாலும், உண்மையை அறிந்துவிட்டார்களோ என்ற ஐயம் தோன்றுவது இயல்பு. ‘பூசணிக்காய் திருடியவன் முதுகு வெள்ளை நிறம் ஏறி இருக்கும்,’ என்று கூறினால், உடனே திருடியவன் முதுகைத் தடவிப் பார்ப்பது உறுதியன்றோ? எனவே, தாயின் இக்கேள்விக்கு, நான் எங்கும் வெளியே செல்ல வில்லை, என்று விடை இறுக்க நினைத்தாள் தலைவி. நன்கு பொய் கூறிப் பழக்கப்பட்டிருந்தால், பதறாமல் இவ்வாறு கூறியிருப்பாள். ஆனால் இதற்கு முன்னர்ப் பொய் கூறிப் பழக்கம் இல்லை தலைவிக்கு. எனவே, அவளையும் மீறி மெய்ம்மை வெளிப்பட்டு விடுகிறது. மெய்ம்மையை மறைக்கவேண்டும் என்று முயன்றதால் வேடிக்கையான முறையில் விடை வெளி வருகிறது. ‘நான் தலைவனைப் பார்க்கவும் இல்லை; அவனை நான் அறியேன், சுனையில் யாருடனும் சேர்ந்து நீராடவும் இல்லை.’ என்று கூறுகிறாள்.

இவ்வாறு மகளிடம் ஒரு விடையை அந்தத் தாய் எதிர்பார்க்கவே இல்லை. இவ்விடையைக் கேட்டு அப்படியே தலையைத் தொங்கவிட்டுக்கொண்டாள் தாய். பதில் பேச அவளுக்கு வாய் ஏது? இனி மகளைத் தினைப்புனக் காவலுக்கு விடுவாளா என்பது ஐயந்தான்.

இவ்வாறு ஒரு நாள் நடந்ததாகவும் இனித்தலைவியின் நிலைமை யாதாகுமோ என்று கவலையுறுவதாகவும் தோழி கூறுகிறாள். தலைவன் பரணின் பக்கத்தே மறைந்து கொண்டிருக்கிறான். அவன் காதில் இது விழவேண்டுமாம். இதைக் கேட்டவுடன் இனித் தலைவியைச் சந்திக்க முடியாதென அஞ்சி விரைவில் மணந்துகொள்வானாம்.

இனிய தேன் பிலிற்றுகிற சாரலினிடத்துச் சிறிய தினைப்பயிரின் பெரிய கதிர்களைச் சிவந்த வாயையுடைய பசிய கிளிகள் திருடுமாறு விட்டுவிட்டு நீ எங்கே சென்றுவிட்டாய் என்று தாய் கேட்டாளே! நீ அவள் எதிரே நின்று, ‘அருவி ஒலிக்கும் மலை நாடனை நான் அறியேன்; கண்டதும் இல்லை. கிளியை ஓட்டும் கருவியைக்கொண்டு பூக்களைக் கொய்து, அவனுடன் சுனையில் ஆடவும் இல்லை,' என்று நீ பொய் கூறுவது போல மெய்யைக் கூறிவிட்டாய். அதைக் கேட்டுத் தாய் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டாள். இனி உன்னைத் தினைப்புனக் காவலுக்கும் விடமாட்டாள். நம் கதி யாதாகுமோ!’ என்கிறாள் தோழி:

யாங்குஆ குவமோ அணிநுதல் குறுமகள்!
தேம்படு சாரல் சிறுதினைப் பெருங்குரல்
செவ்வாய்ப் பைங்கிளி கவர நீமற்று
எவ்வாய்ச் சென்றனை அவண்?' எனக் கூறி
அன்னை ஆனாள் கழற, முன்நின்று,
'அருவி ஆர்க்கும் பெருவரை நாடனை
அறியலும் அறியேன்! காண்டலும் இலனே!
வெதிர்புனை தட்டையேன் மலர்பூக் கொய்து

சுனைபாய்ந்து ஆடிற்றும் இலன்' என நினைவிலை
பொய்யல் அந்தோ வாய்த்தனை! அதுகேட்டுத்
தலைஇறைஞ் சினளே அன்னை
செலவுஒழிந் தனையாள் அளியைநீ புனத்தே!'

(நற்றிணை, 147)

(யாங்காகுவமோ-நாம் இனி எவ்வாறு தப்பப் போகி றோமோ; தேம்படு சாரல்—இடம் அகன்ற மலைச்சாரல் ; பெருங்குரல்—பெரியகதிர்,வெதிர்புனைதட்டை—மூங்கிலாற் செய்த கிளியை விரட்டும் கருவி; பொய்யால் வாய்த்தனை —பொய் கூற முடியாமல் உண்மை கூறி விட்டாய்; இறைஞ்சினள்—தொங்கவிட்டாள்;அளியை — நீ இவ்வாறு குடும்பம் நடத்தப் போகிறாய் என்று பிறரால் இரங்கத் தக்கவள்).

‘மன்ற மடவை, வாழிய முருகே!’

தலைவிக்கு உற்ற துணைவியாய் உள்ள தோழியின் சிறப்பையும் அவள் தலைவிக்குச் செய்த உதவியையும் பற்றிக் கூறும் பாடல் இது;

வானை முட்டும் மலை ஒன்று. பல வளங்களும் நிறைந்துள்ளன. அங்கு. குறிஞ்சித்திணை என்றால் மலையும் மலையைச் சுற்றியுள்ள இடங்களுமே குறிக்கப்படும். இம் மலைநாட்டை ஆள்பவன் ‘நாடன்’ என்று பொதுவாகக் குறிக்கப்படுவான். அவனுடைய மலை பல வளங்களுக்கும் உறைவிடமாய் இருப்பதற்கு நீர்வளம் வேண்டுமல்லவா? அவ்வளத்தை அங்கு ஓயாமல் பெய்யும் மழை தருகிறது. ஆனால், மலையில் பெய்யும் மழை நில்லாமல் ஓடிவிடும் இயல்புடையது. எனவே, அம்மழை நீரைத் தேக்கி வைத்துக் கொள்ள, இயற்கை அன்னை குளங்கள் தோண்டி வைத்திருப்பாள். அவற்றிற்குச் ‘சுனைகள்’ என்று பெயர் கூறுவர்.

பாறைகள் மூடிய சுனைகள் பக்கம் மாந்தர் செல்லவும் அஞ்சுவர். சின்னாட்களில் அவைகளும் கடவுள் தன்மை பெற்றுவிடும். இத்தகைய கடவுட் சுனையை உடைய மலைக்கு அவன் தலைவன். அவனுடைய மலையில் உள்ள இந்தச் சுனையில் மக்கள் செல்வதில்லையாகலின், அங்குத் தேவமாதர்கள் வருவார்களாம். அவர்களைச் ‘சூர் அரமகளிர்’ என்று சங்கப் பாடல்கள் குறிக்கும். அத்தேவ மாதர்கள் அந்தத் தலைவனுடைய மலையில் உள்ள கடவுட் சுனைக்கு வந்து, அங்கு மக்கள் பறிக்க அஞ்சி விட்டுச் சென்ற மலர்களைப் பறிக்கிறார்கள். அப்பூக்களைக் கவிஞன் ‘பறியாக் குவளை’ என்றே குறிப்பிடுகிறான். பறியாக் குவளை என்றால், மக்களால் பறிக்கப்படாத குவளை மலர்கள் என்பது பொருள். மக்களால் தீண்டப்படாத அக்குவளை மலர்களை அத்தேவ மாதர்கள் பறிக்கிறார்கள்; அக்குவளையுடன்சேர்த்துக் கட்டுவதற்காக, இரத்தம் போன்று சிவந்த நிறமுடைய ‘காந்தள்’ பூவையும் பறிக்கிறார்கள்; பிறகு அவை இரண்டையும் அழகு பொருந்தக் கட்டுகிறார்கள், அந்த மாலைகளை அணிந்து கொண்டு அத்தேவ மாதர்கள் ஆடுகிறார்களாம். பலர் சேர்ந்து ஆடும் அந்நாட்டியத்திற்கு இசை வேண்டும் அன்றோ? மலையில் சுனையின் அருகே வீழ்கின்ற அருவி சிறந்த பின்னணி இசையை அமைக்கிறதாம். இயற்கையில் பிறந்து வளர்கின்ற சூர் அரமகளிர் ஆடும் ஆட்டத்திற்கு அருவியின் ‘ஓங்கார’ ஒலி நல்ல பின்னணி இசையாய் அமைந்துவிடுகிறதாம். முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த குறிஞ்சி நிலத்தில், அச்செம்மேனியனுக்கே உரிய மலையில், அவனுடைய சுனை என்று கருதி, மக்கள் நெருங்க அஞ்சுகிற சுனைக்கரையில், அச்சுனையில் பூத்த குவளை மலர்களையும் காந்தட் பூவையும் சூடிக்கொண்டு சூர் அரமகளிர் நாட்டியமாடு கின்றனர், அருவியின் ஓசையைப் பின்னணி இசையாகக் கொண்டு. எனவே, அச்சூர் அரமகளிரும் முருகனுக்கு மிகவும் விருப்பமான அடியார்கள் போலும்!

இத்துணைப் பெருமை வாய்ந்த அருவி, சுனை முதலியவற்றையுடைய மலைக்குத் தலைவன் அவன்; நம்மைப் போன்ற மனிதன்தான். எனவே, அவனுக்கும் நம்மைப் போலக் காதல் முதலிய உணர்ச்சிகள் உண்டல்லவா? அவனுக்கு ஒரு காதலி இருக்கிறாள். அவளும் அந்த மலையை அடுத்த சிற்றூரில் வாழ்ந்து வருகிறாள். நீண்ட நாளாகவே அவனுக்கும் அவளுக்கும் நட்பு உண்டு. ஆனால், பிறர் அறிய மணந்து வாழும் நிலைமையை அவர்கள் இன்னும் அடையவில்லை. ஆனால், ஒருவர் இன்றி மற்றவர் வாழ முடியாது என்று கூறும் அளவுக்குக் காதல் கொண்டவர்கள். அவன் ஏறத்தாழத் தினம் ஒருமுறை சென்று தலைவியைக் கண்டு, அவளுடன் மகிழ்ந்துவிட்டு வருவான். அப்பொழுதெல்லாம் அவளும் வீட்டில் தங்கவில்லை. அவள் வீட்டை விட்டுச் சற்றுத் தூத்தேயுள்ள தினைப்புனத்தைக் காவல் காத்து வந்தாள். அவளும் அவளுடைய உயிர்த் தோழியும் சேர்ந்து புனத்தில் காவல் காத்து இருந்தமையின், வேறு ஆடவர் துணை இல்லாமல் இருந்தது, தன்லைவன் முதன்முறை தலைவியைச் சந்தித்த பொழுது, தோழிக்குத் தெரியாமலே சந்தித்தான். ஆனால், முதற் கூட்டம் முடிந்த பிறகே, தோழியின் தயவு இல்லாமல் தாம் இருவரும் நீண்ட காலம் இவ்வாறு களவுப் புணர்ச்சியில் இருக்க முடியாது என்பதைக் கண்டு கொண்டான். எனவே, மறுமுறை தோழியைச் சந்தித்துக் குறிப்பால் தன்னுடைய காதலை அவளிடம் கூறித் தலைவியைத் தான்சந்திப்பதற்குத் தோழியின் சம்மதியைப் பெற்றுவிட்டான்.

தடைஇல்லாமல் நீண்டகாலம் அனுபவிக்கக் கூடியது என்ற இன்பம் ஒன்றும் இந்த உலகில் இல்லை. ஆதலால், தலைவனுடைய இன்பத்திற்கும் முற்றுப் புள்ளி வைப்பது போலத் திணைக்கதிர்கள் நன்கு முற்றி அறுவடையாகி விட்டது. திணைப்புனத்தில் வேலை முடிந்தவுடன் தலைவியை வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டனர். வீடு ஊரின் நடுவே இருக்கிறது. ஊருக்கோ, கட்டும் காவலும் மிகுதி. தலைவன் விருப்பம்போல வந்து தலைவியைக் கண்டு போக முடியவில்லை இப்பொழுது. எத்தனையோ முறைகள் வந்து தலைவியைச் சந்திக்க முடியாமற் போய் விட்டான். அவன் அடைந்த வருத்தம் கொஞ்சமன்று; ஆனாலும், அவன் ஆண் மகன் அல்லனோ! எனவே, தன் வருத்தத்தை அடக்கிப் பிறருக்கும் புலப்படா வண்ணம் மறைத்துக் கொண்டும், தன் பிற கடமைகளில் ஈடுபட்டும், கவலையை மறந்தும் வாழ்ந்து வருகிறான். ஆனால், தலைவியின் நிலைமை என்னாவது?

கட்டுக் காவல் மிகுந்த ஊரில், தன்னுடைய ஒவ்வொரு செயலையும் கூர்ந்து நோக்கும் தாயினுடைய பாதுகாவலில் இருந்து வருகிறாள் தலைவி. அவளுக்கு மட்டும் தலைவன் நினைவு இல்லையா? அவள் நேரம் முழுதும் அவனைப் பற்றிய நினைவிலேதான் கழிகிறது. ஆனால், அவள் படும் துயரை உயிர்த் தோழி தவிர வேறு யாரும் அறியவில்லை; அறியவும் முடியாது. அறிவதை அவள் விரும்பவும் இல்லை. ஆனால் பாரதியார் கூறியபடி, ஓய்வும் ஒழிதலும் இல்லாமல் அவன் உறவை நினைத்திருக்கிறது அவள் உள்ளம். மனத்தில் தோன்றிய இந்த வருத்தம் சும்மா விடுமா அவளை? அது மெள்ள மெள்ள அவளை அரிக்கத் தொடங்கி விட்டது. உடலில் மெலிவு கண்டு கைவளைகள் தாமாகக் கழன்று விழலாயின. உணவு செல்லவில்லை. உறக்கம் கொள்ளவில்லை; ஏதொன்றிலும் மனம் நாடவில்லை. தலைவியின் இந்த நிலையைத் தாயும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள். என்ன செய்வாள் பாவம்! அவளுக்குத் தெரிந்த கைம்முறை மருத்துவமெல்லாம் செய்து பார்த்து விட்டாள். பக்கத்து வீட்டுப் பாட்டிமார்கள் வந்து பார்த்தார்கள். ஒருமுகமாக அவர்கள் தீர்ப்பும் கூறி விட்டார்கள். தீர்ப்பு என்ன தெரியுமா? தலைவியைத் தெய்வம் பிடித்துக் கொண்டது என்பதுதான். அவள் தினைப்புனம் காவல் செய்து கொண்டிருந்த அந்த வேளையில், கடவுட்சுனை என்று தெரிந்துகொள்ளாமல் அதில் ஒருவேளை சென்று குளித்து இருக்கலாம். கடவுட் பூ என்பதை அறியாமல் அதைச் சூடி இருக்கலாம். ஏதோ ஒரு காரணத்தால் தெய்வம் அவளைத் தீண்டிவிட்டது. அதைத் தணிப்பதற்கு வழி யாது? ஒரே வழிதான் உண்டு. அவளைப் பிடித்த தெய்வக் குற்றம் நீங்கும்படியாக வேலன் வெறியாட வேண்டும். இன்று நாம் பூசாரி என்று கூறும் இனத்தான் அன்று வேலன் என்று வழங்கப்பட்டான். ஊரில் உள்ள பாட்டிமார் அனைவரும் கூடிச் சொன்ன இந்த முடிவைத் தாய் ஏற்றுக் கொண்டாள்.

வெறியாடுதலுக்கு உரிய சகல ஏற்பாடுகளும் ஆகிவிட்டன. ஆனால், இதனால் ஒரு பெரிய இடையூறு தலைவிக்கு உண்டு. உண்மையிலேயே அவளைத் தெய்வம் தீண்டியிருந்தால், வேலன் வெறியாடிய பின் அது தீர்ந்து விடும். ஆனால், அவளைத் தலைவன் அல்லவோ தீண்டியிருக்கிறான்? வெறியாடுவதால் யாது பலன்? மீட்டும் தலைவன் வந்து அவளைத் தொட்டால் ஒழிய அவளுடைய நோய் தீரப் போவதில்லை. எனவே, வெறியாடியும் தலைவியின் நோய் தீரவில்லை என்பதை ஊரார் அறிந்து விட்டால் பழி தூற்றுவார்கள். இவ்வாறு தலைவியை ஐயுற்றுப் பழி தூற்றுதலை ‘அம்பல்’ என்ற பழந்தமிழர் இலக்கியம் பேசுகிறது. கொஞ்சம் ‘கசமுச’ என்று தூற்றப்பெறும் இதுவே பெரிதாகிப் பலரும் வெளிப்படையாகப் பேசும் நிலைமையில் ‘அலர்’ எனப் பெறும்.

இந்த நிலையில் தோழிக்கு வருத்தம் மிகுதிப்பட்டு விட்டது. எவ்வாறாவது அன்னை வெறி எடுப்ப முயல்வதைத் தடுக்க வேண்டும் என்று, அத்தோழி, அன்னை காதில் விழும்படி சில வார்த்தைகளைக் கூறுகிறாள். இதுவே பாடல் அமைந்த விதம்.

“முருகப் பெருமானே, நீ நெடுங்காலம் இந்த மடமையோடு வாழ்வாயாக! தலைவியானவள், கடவுள் தன்மை பொருந்திய மலையிலுள்ள சுனைகளில் மலரும் குவளைப் பூவையும் உதிரம் போலச் சிவந்துள்ள காந்தட்பூவையும் அழகு பொருந்தக் கட்டிக் கொண்டு பெரிய மலையின் பக்கங்கள் எல்லாம் அழகுபொருந்தச் சூர் அர மகளிர் அருவியின் இனிய ஓசையைப் பின்னணியாகக் கொண்டு ஆடும் மலைக்குத் தலைவனுடைய மார்பு தந்த வருத்தத்தால் உண்டான நோய் நின்னால் ஏற்பட்ட துன்பம் அன்று என்பதை நீ நன்கு அறிந்திருந்தும், வேலன் வெறியாடும் களத்தில் இறுமாந்து அங்கே கொடுக்கப்படும் பலியை ஏற்றுக் கொள்வதற்காக வந்தவனே, நீ கடவுளாய் இருப்பினும் இருக்கட்டும்! திண்ணமாக நீ அறியாமை உடையவன்தான்!”

'கடவுள் கற்கனை அடையிறந்து அவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தள்
குருதி ஒண்பூ உருகெழக் கட்டிப்
பெருவரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்
அருவி இன்இயத்து ஆடும் நாடன்
மார்புதர வந்த படர்மலி அருநோய்
நின்அணங்கு ஆன்மை அறிந்தும் அண்ணாந்து
கார்நறுங் கடம்பின் கண்ணின் சூடி
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்!
கடவுள் ஆயினும் ஆக!
மடவை மன்ற வாழிய் முருகே!

(நற்றிணை-34)

(அடை இறந்து — இலைகளை விலக்கிக்கொண்டு; அவிழ்ந்த—மேலே மலர்ந்துள்ள குருதி—இரத்தம்; உருகெழ —அழகு பொருந்த அடுக்கம் பொற்ப—பக்க மலைகள் அழகு பொருந்த இன் இயத்து—(பின்னணியான) இனிய வாத்தியமாக; படர்மலி அருநோய்—நினைப்பதால் மிகுதிப் பட்டு நீக்க முடியாத அரியநோய்; நின் அணங்கு அன்மை —நீ தொட்டதால் வந்த வருத்தமன்று; அண்ணாந்து — — மிக்க செருக்குடன், கடம்பு—கடம்பம் பூ; கண்ணி—தலைமாலை).

சமுதாயத்தை அறிய தலைவன், தலைவி, தோழி முதலியோரை வைத்து நூற்றுக்கணக்கான அகப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் உள்ளன. குறிப்பிட்ட ஒரு தலைவன் அல்லது ஒரு தலைவி என்போரின் பெயரை வெளிப்படுத்தும் பாடல் ஒன்றுகூட இல்லை. அகத்துறை பற்றி எழுந்த பாடல்களில் தலைவன் பெயர் அல்லது தலைவி பெயர் காணப்பெற்றால் அதனை அகத்துள் சேர்க்காமல் புறத்தில் சேர்த்துள்ளனர். அகத்திணைக்கு இலக்கணம் கூறும் தொல்காப்பியம், ‘சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறா’ (அகத் திணை:57) என்று ஆணையிடுகிறதாகலின் அகப்பாடல்கள் அனைத்திலும் யாருடைய பெயரும் குறிப்பிடப்பெறவில்லை. இது ஏன் என்று சிந்தித்தால் ஓர் உண்மை நன்கு விளங்கும்.

அகப்பாடலில் வரும் தலைவன் தலைவி என்பவர்கள் அன்றைய சமுதாயம் ஒட்டு மொத்தத்திற்கும் குறியீடாக உள்ளவர்கள். அன்றையத் தமிழர்களில் ஓர் ஆண்மகன் தனியனாய்த் தோன்றி அன்பின் அடிப்படையில் ஒரு தலைவியைத் தேடிக் கொண்டான். இருவர் சேர்ந்து வாழும்பொழுது குடும்பம் அமைக்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. நூறு அல்லது மேற்பட்ட குடும்பங்கள் ஒன்று சேரும்பொழுது புறநிலையில் ஒரு கிராமம் உருவாயிற்று. அந்த கிராமத்தில் வாழ்கின்றவர்கள் அனைவரும் சமுதாயம் என்ற தொகுப்பின்கீழ் இடம் பெறலாயினர்.

சமுதாய வாழ்க்கை என்று வந்தபிறகு, தனி மனிதனுக்குள்ள உரிமைகள் சிலவற்றை இழக்க வேண்டி நேரிட்டது. கூடி வாழும் பொழுது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க வேண்டிய நிலையும் உருவாயிற்று. இதனையடுத்து ஒருவருக் கொருவரும், குடும்பத்திற்குக் குடும்பமும் சமுதாயத்தின் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினருக்கும் உதவவேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. இது எப்படி முடிந்தது: அன்பு என்ற ஒன்றின் அடிப்படையில்தான் தனிக்குடும்பம் சமுதாயத்திற்கு உதவவும், சமுதாயம் தனி ஒருவருக்கு உதவவும் முடிந்தது. அப்படியானால் இந்த சமுதாயம் சிறந்த சமுதாயமாய், குறிக்கோள் தன்மை பெற்றதாய், பிறர் கண்டு வியக்கும் சிறப்புடையதாய் வளர அஸ்திவாரமாக இருந்தது இந்த அன்பு ஒன்றுதான்.

இந்த அடிப்படையான அன்பை தனிமனிதன் எங்கே பெற்றான்? ஆம். பிறர் பற்றி அதிகம் கவலைப்படாமல் தான் உண்டு, தன் வாழ்க்கை உண்டு என்றிருந்த தலைவன் ஒரு நாள் ஒருத்தியைக் கண்டு அன்பு கொண்டு அந்த அன்பே காதலாக முதிர்வதைக் கண்டான். 'யாயும் ஞாயும் யாராகியரோ; எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்; யானும் நீயும் எவ்வழி அறிதும்' (குறு) என வரும் குறுந்தொகைப்பாடல் (40), மேலே கூறியவற்றிற்கு அரண் செய்கிறது.

ஒருத்தி மாட்டு தோன்றிய இந்த அன்பு காதலாக முதிரும்பொழுது அந்தத் தலைவன் தன்னலத்திலிருந்து விடுபடுகிறான். அவளில்லாமல் தனக்கு வாழ்வில்லை என்று நினைக்கும் அளவிற்கு அந்த அன்பு வளர்ந்து, ஓருயிர் ஈருடல் என்ற அளவிற்கு முதிர்ந்து விடுகிறது. இங்கு தலைவனுக்குக் கூறிய அனைத்தும் தலைவிக்கும் பொருந்தும். இப்படி அன்பை வளர்த்துக் கொண்டதனால்தான் தனி ஒருவனும், தனி ஒருத்தியும் சமுதாயத்தின் சிறந்த உருப்புக்களாக மலர்கின்றனர். எனவே அக இலக்கியம் சமுதாய வரலாற்றைக் கூறும் கண்ணாடி என்று கூறுவது பொருத்தமாவதைக் காணலாம். சமுதாய வரலாற்றையும் வளர்ச்சியையும் குறிக்கும் பாடல்கள் ஒரு தலைவன் அல்லது தலைவியின் பெயரைக் கூறுவது பொருத்தமற்றது, என்பது சொல்லத் தேவையில்லை. மேலே காட்டிய பாடல்கள் தமிழர் சமுதாயத்தின் அன்றைய ஒட்டுமொத்த வரலாற்றை எடுத்துக் காட்டுவனவாகும் என்பதை மனத்தில் கொள்ளுதல் நலம்.

போரும் அமைதியும்

சங்கப் புலவர்களுள் தலையாய பெருமை வாய்ந்தவர் கபிலர் ஆவார். அவர் பாண்டி நாட்டிலே உள்ள திருவாதவூரர் அந்தணர் மரபில் அவதரித்தவர். பரணர், இடைக்காடர் முதலிய புலவர் பெருமக்களோடு ஒருங்கு வாழ்ந்தவர். ஆரிய அரசனாகிய பிரகத்தன் என்பவனுக்குத் தமிழ்ச் சுவையை அறிவுறுத்துவான் வேண்டிக் குறிஞ்சிப் பாட்டு என்றதொரு பாடலைப் பாடினார். அவ்வொரு பாடலின் மூலம் தமிழ்ச் சுவையை ஓரளவு அறிந்த அவ்வரசன், தமிழை நன்கு கற்றுத் தானும் தமிழ்க் கவி இயற்றும் அளவிற்குப் புலவனாயினான். கபிலருடைய வாழ்க்கையில் மிகச் சிறந்த பகுதி அவர் வள்ளல் பாரியினிடத்து நட்புக் கொண்டிருந்ததாகும். அவர், மூவேந்தரும் பாரியைக் கொன்ற பிறகு, பாரியின் மகளிர் இருவரையும் அழைத்துக் கொண்டு சென்று, ஓர் அந்தணரிடத்து அவர்களை ஒப்படைத்தார்; பின்னர்ப் பாரியின் பிரிவுத் துயர் தாங்காமல் வடக்கு முகமாய் இருந்து, இந்திரியங்களை ஒடுக்கி, உணவு உட்கொள்ளாமல் உயிர் துறந்தருளினார்.

அவர் பாடினவற்றுள் மிகப் பெரும்பகுதி குறிஞ்சித் திணை பற்றியது. ஆகலின், ‘குறிஞ்சி பாடக் கபிலன்’ என்ற முதுமொழியும் பிற்காலத்தெழுந்தது. அவர் பாடியனவாக நற்றிணையில் 19ம், குறுந்தொகையில் 29ம், ஐங்குறு நூற்றில் 100ம், பதிற்றுப் பத்தில் 10ம், அகநானூற்றில் 16ம், ஆக 174 செய்யுட்கள் கிடைத்துள்ளன. இவற்றையல்லாமல் பத்துப் பாட்டில் ஒன்றாகிய குறிஞ்சிப் பாட்டும் அவர் பாடியதே. அப்புலவர் பெருந்தகை பாடிய நற்றிணைப் பாடலுள் ஒன்றை இங்குக் காண்போம்.

மலை போன்ற பெரிய யானையின் பிடரியில் கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகிய மலையமான் திருமுடிக்காரி அமர்ந்திருக்கிறான். அவனைச் சூழக் கடல் போல் பெரும் படை செல்கிறது. பறை கொட்டும் புலையன் மிக்க எக்களிப்போடு கொட்டிச் செல்கிறான். மிக நீண்ட தூரம் சென்ற பிறகு பகைவனுடைய புலத்தில் மலையமானின் மாட்சிமிகு சேனை புகுந்துவிட்டது. புதிய நாட்டைப் போர் செய்து வெல்லுகிற வரை அது படைகளின் வேலை. படைகள் போரிட்டு வென்று தந்த பின்னர் அரசியலாரின் வேலை தொடங்குகிது. முதல் வேலையைவிட இவ்வேலை கடினமானது. பாரியின் மாட்டுக் கழிபெருங்காதல் கொண்டு அவன் அவையில் நீண்டகாலம் வாழ்ந்த கபிலருக்கு இந்த அரசியல் துணுக்கங்கள் நன்கு பிடிபட்டிருக்கும் அல்லவா? எனவே, அவர் தகுந்த சமயத்தில் இதனைப் பயன்படுத்துகிறார்.

ஒரு தலைவியைத் தலைவன் ஒரு நாள் சந்தித்தான். அதற்கு முன்னர் அவனும் அவளும் சந்தித்ததுகூட இல்லை. ஆனால், இன்று இந்தச் சந்திப்பு எவ்வாறு ஏற்பட்டது: ‘பால்வரை தெய்வம்’ என்று கூறப்படும் ‘விதி’ தான் அவர்களைக் கூட்டுவித்தது. இதற்கு முன்னர் அத் தலைவனும் பல பெண்களைக் கண்டதுண்டு; அத்தலைவியும் பல ஆடவர்களைக் கண்டதுண்டு. ஆனாலும், இருவரும் தம் உறுதிப்பாட்டை இழந்ததில்லை, இன்று அத்தலைவனும் தலைவியும் சந்தித்தவுடன் ஒரு பெரிய போராட்டமே தொடங்கிவிட்டது. அவனும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்; இருவரும் ‘நோக்கிய நோக்கு எதிர் சென்று’, ‘இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர்’. ஆனால், இவ்வளவு விரைவில் இந்நிகழ்ச்சி நடந்துவிட்ட போதிலும், நடைபெற்ற போராட்டம் எளிதானதன்று. புதிய ஆடவன் தன் மனத்துள் இடம்பெற அவள் விரும்பவில்லை. அவள் பிறப்புடன் பிறந்த நாணமும் நிறையும் அப்புதிய ஆடவன் அவள் மனத்துள் இடம் பெறுவதைத் தடுத்து நிற்கின்றன. எனவே, அவை இரண்டும் ஒருபுறம் நின்று போரிடுகின்றன. ஆனால், அவள் மனமும் அன்பும் அவனை வரவேற்று நிற்கின்றன. ஆனால், இப் போராட்டம் பெரிய அளவில் நடைபெறுகிறது. தலைவனுடைய ‘கண்கள்’ தலைவியின் நாணம் என்ற முதற் கோட்டையை அழிக்க வேண்டும். அதனை அழித்த பிறகு உள்ளே ‘நிறை’ என்று கூறப்படும் இரண்டாவது கோட்டை Second line of defence இருக்கிறது. தலைவன் தன்னுடன் பிறந்த ‘ஆண்மை’ என்ற படைகொண்டு தலைவியின் நாணம், நிறை என்ற கோட்டைகளைத் தகர்க்கிறான். நெடுநேரம் வரை வெற்றி தோல்வி யாருக்கு என்று கூற முடியாதபடி போராட்டம் நடைபெறுகிறது. இப் போராட்டம் இந்த முறையில் ஒருவரிடம் மட்டும் நடைபெறுவதன்று. தலைவனிடம் உள்ள ‘பண்பாடு’ என்ற கோட்டையைத் தலைவியின் கண்கள் தாக்குகின்றன. இவ்வாறு இருவரும் போரிட்ட நிலைமையில் இருவருக்கும் வெற்றி கிட்டி விடுகிறது. ‘காதற்போர்’ ஒன்றிலேதான் இரண்டு கட்சியாளர்களுக்கும் வெற்றி கிடைக்கும்.

போரில் வெற்றி கிட்டியவுடன் அரசன் அமைதியை நிலைநாட்டும் வேலையை அமைச்சர்களிடம் ஒப்படைத்து விட்டு இளைப்பாறுகிறான். தலைவனுக்கும் இத்தகைய போர் ஒன்று கிட்டியத்ன்றோ? அப்போரில் தலைவியின் நாணம் முதலியவற்றை வெற்றி கண்ட பிறகு அவன் இளைப்பாறத் தொடங்கினான். தலைவியும் தன் போராட்டம் முடிந்து வெற்றி பெற்றவுடன் இளைப்பாறுகிறாள். போரில் மிக்க அனுபவம் உடைய தலைவன் கூறுவது போல அமைந்துள்ளது பாடல். இந்நிலையில் தலைவனுக்கு வியப்பு உண்டாகிறது. தன்னுடைய ஆண்மை முதலியவற்றை நினைந்து பார்க்கிறான். பகைவர்கள் தன் பெயரைக் கேட்டவுடன் நடுங்குவதை அவன் கண்டும் கேட்டும் இருக்கிறான். அத்தகைய வீரம் பொருந்திய, தானா இந்நிலைக்கு வர நேரிட்டது என்று வியப்படைகிறான். இவ்வாறு தன் தோல்விக்குக் காரணமாய் இருந்தவள்தான் யார்? போர் புரிதலில் வல்லவனாகிய தன்னைத் தோற்கச் செய்தவள் ஒரு பெண்தானே! அதிலும் கலை நலம் நிரம்பப்பெற்ற ஒரு பெண்ணினாலா தான் தோல்வியடைய வேண்டும் என்று வியக்கிறான். மென்மையுடைய அப்பெண் தானும் வேறு படைக்கலங்களின் உதவியின்றித் தன் குவளை மலர் போன்ற கண்களால் அல்லவா வெற்றி கொண்டு விட்டாள்? போர் என்றால் ஒருவரை ஒருவர் கோபித்துக் கொண்டல்லவா போரிடுவர்? ஆனால், அப்பெண் சிரித்துக் கொண்டல்லவா வெற்றி பெற்றாள்? குவளை மலர் போன்ற அவளுடைய கண்ணால் மகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டே வெற்றியடைந்து விட்டாள்.

இனி இத்தனை எண்ணங்களும் தலைவன் மனத்தில் ஊடாடுகின்றன என்பதைக் கவிதை தெரிவிக்கிறது. ‘மலையமான் திருமுடிக்காரி பெரிய யானையின் மேல் ஏறிக்கொண்டு, புலையனின் துடிப்பறை ஒலிக்கப் பகைவருடைய நாட்டில் புகுந்து, அவர்களுடைய அரிய கோட்டையை அழித்து வெற்றிகொண்டு இளைப்பாறியது போல, நெஞ்சே, சிவந்த வேர்களையுடைய கிளைதோறும் தொங்குகிற பலாப் பழத்தின் சுளைகளையுடைய வீட்டு முற்றத்தில் மனைவியானவள் அருவியின் இனிய ஓசையில் உறங்க, சிற்றூரின் சேரியில் வாழும் கைத்தொழில் வல்ல வினைஞன் கையால் அறுத்துச் செய்த சங்கு வளைகள் தன் கையில் அழகுபொருந்த விளங்கும் தலைவியினுடைய குவளை மலர் போன்ற மையுண்ட கண்களில் தோன்றும் மகிழ்ச்சி பொருந்திய நோக்கமானது நம்மை இத் தலைவி பால் செலுத்துகிறது. (அம்மன்னன் வெற்றியின் பின்னர் அயாவுயிர்த்தது போல) நாமும் இவள் உடன்படும் வரை பொறுத்திருப்போம்.’ என்னும் கருத்தமைந்த அக்கவி இது;

‘மலையன்மா ஊர்ந்து போகிப் புலையன்
பெருந்துடி கறங்கம் பிறபுலம் புக்குஅவர்
அருங்குறும்பு எருக்கி அயாவுயிர்த் தாங்கு
உய்த்தன்று மன்னே நெஞ்சே! செவ்வேர்ச்


சினைதொறும் தூங்கும் பயம்கெழு பலவின்
சுளையுடை முன்றில் மனையோள் கங்குல்
ஒலிவெள் அருவி ஒலியில் துஞ்சும்
ஊரலம் சேளிச் சிறுர் வல்லோன்
வாள்அரம் பொருத கோண்ஏர் எல்வளை
அகன்தொடி செறித்த முன்கை ஒண்ணுதல்
திதலை அல்குல் குறுமகள்
குவளை உண்கண மகிழ்மட நோக்கே’.

(நற்றினை–77)

(மா–யானை; கறங்க–ஒலிக்க; அருங்குறும்பு–காவல் பொருந்திய கோட்டை; எருக்கி–அழித்து; அயாவுயிர்த் தாங்கு–ஓய்வு எடுத்தது போல; உய்த்தன்று–செலுத்தியது; வாள் அரம் பொருத–கூரிய அரத்தால் அராவிய; கோண் ஏர்–வளைந்த அழகிய, ஒண்ணுதல்–ஒளி பொருந்திய நெற்றி; திதலை–தேமல்; குறுமகள்–இளம்பெண்; மடநோக்கு–இளமையுடைய பார்வை.)

‘அரசன் அரிய அரனை அழித்து இளைத்துப் போனது போல யானும் இத்தலைவியின் மனத்தின் திண்மையை நெகிழ்த்தி இளைத்துவிட்டேன். அரசன் அமைதியை நிலைநாட்டும் தொழிலை அமைச்சர் முதலானவர்க்கு விட்டுவிட்டு, தான் இளைப்பாறியது போல யானும் இத்தலைவியை என்னிடம் சேர்ப்பிக்கும் வேலையைத் தோழனிடம் விட்டுவிட்டு இளைப்பாறுவேன் ஆகலின், நெஞ்சே, நீ இனிக் கவலைப்பட வேண்டா' என்ற குறிப்புப் பொருளும் இந்த உவமையால் பெறப்பட்டது.

இதனையடுத்துத் தலைவி அணிந்திருக்கும் வளையலின் வரலாறு பாட்டின் 5ஆம் அடிமுதல் 10ஆம் அடி வரை பேசப்படுகிறது. இவ்வரலாற்றில் பிறிதோர் அழகும் தோன்றுமாறு கவிதை புனையப்பட்டுள்ளது. வளையல் அறுப்பவன் ஊர் வளம் பேசப்படுகிறது. முதற்கண் பலா மரத்தின் கிளைதோறும் நல்ல பலாப் பழம் தொங்குகிறது. அப் பலா மரமும் வீட்டின் முன்றிலில் தழைத்து நிற்கிறது. அம்மரத்தின் அருகே வெண்மையான அருவி ஒலி செய்து கொண்டு வீழ்கிறது. அவ்வொலியே பின்னணி இசையாய் இருக்க, அக்கலைஞன் மனைவி உறங்குகிறாள். அவள் உறங்கிக் கொண்டு இருக்கையில், அவ்வினைஞன் பக்கத்தில் அமர்ந்து வளையல்களைச் செய்கிறான். வளையல் அறுப்பவனுடைய காதல் வாழ்வின் படப் பிடிப்பாகும் இவ்வடிகள். அமைதி நிறைந்த வாழ்வு வாழ்பவனாகலின், அவன் கடமையைக்கூடக் கலை போலச் செய்கிறான். வளை அறுப்பது அவன் தொழிலேயாயினும், இன்று அதனை மகிழ்வுடன் செய்கிறான். ஆகலின், அது கலைபோலப் பரிணமிக்கிறது. உணவு நிறைந்த ஊரில் காதல் வாழ்வு வாழ்பவன் வளை செய்பவன்; அவன் அறுக்கும் வளைகள் கலையாகச் செய்யப் பெற்றவை. இத்தகைய வளையல்கள் தலைவியின் கையை அலங்கரிக்கின்ற காரணத்தால் தலைவியின் பிற்கால வாழ்க்கை வளம் நிறைந்ததாய், காதல் வாழ்வுடைய தாய், செம்மை பொருந்தி இருக்கும் என்பதும் குறிப்பால் பெற வைத்தார் கவிஞர் திலகராகிய கபிலர்.

தலைவி தன் கண்களின் உதவியால் தலைவனை வென்று விட்டாள். தலைவனும் ஆண்மையின் உதவியால் தலைவியின் நாணம், நிறை முதலியவற்றை வெற்றி கொண்டுவிட்டான். சில வினாடிகளில் இப்போராட்டம் நடந்து முடிந்துவிட்டாலும் இந்நிகழ்ச்சிகள் ஆழ்ந்த பொருளாழம் உடையன. கபிலர் மலையமானின் போர் முறையையும், வெற்றியையும் பின்னர் அமைதியை நிலை நிறுத்தினதையும் நேரே கண்டிருக்கிறார். பின்னர், எங்கோ ஒரு முறை இக்காதலர் போராட்டத்தையும் அவர் கண்டிருத்தல் வேண்டும். தலைவன் வெற்றிகண்ட பிறகு தோழியின் உதவியை நாடுகிறான். அந்தத் தோழி மனம் இரங்கித் தலைவியை அவனிடம் சேர்த்துவைத்தால் ஒழிய அவன் அவளை அடைய முடியாது. தான் போரிட்டு வெற்றி கொண்ட தலைமகளைத் தன்பால் சேர்ப்பித்து இல்லறம் நடத்துமாறு செய்யத் தோழியின் உதவியை நாடுகிறான். அரசன்–தலைவன்; பகைப்புலம்–தலைவி; பகைவர்கள் கோட்டை–தலைவியின் நாணம் முதலியன; அரசன் படைகள்–தலைவனின் ஆண்மை முதலியன; அரசன் அமைதியை நாட்ட அமைச்சரை ஏவி இளைப் பாறுதல்–தலைவனது வெற்றியின் பின்னர்த் தோழியை வேண்டித் தலைவியை தன்பால் சேர்க்கச் சொல்லுதல். இம்முறையில் உவமை அமைந்துள்ளமை அறிந்து மகிழ்தற்குரியது.

*****

மடலேறுவது பற்றிய பாடல்

அறிவாலும் திருவாலும் நிறைந்தவன் அத்தலைவன்; நல்ல கல்வியும் ‘மன உறுதியும், கொண்டது முடிக்கும் ஆற்றலும்' உடையவன். இத்தகைய அவன் எதிர்பாராவித மாக ஒரு பெண்ணைக் கண்டான். அதற்கு முன் அவன் ஆயிரக்கணக்கான பெண்களைக் கண்டதுண்டு. ஆனால், மனித சமுதாயத்தின் சரிப் பகுதியினரான அவர்களுள் அவன் மனத்தை ஒருவரும் கவரவில்லை. ஆனால், இன்று அப்பெண்ணைக் கண்டவுடன் தன் மனத்தைப் பறி கொடுத்து விட்டான். ஒரு பெண்ணால் இம்மாதிரி தன் மனத்தைக் கவர முடியும் என்பதை அவன் அதற்குமுன் நினைத்ததுகூட இல்லை அவளும் இம்மாதிரியே அத் தலைவனிடம் தன் மனத்தைப் பறிகொடுத்துவிட்டாள். அச்சம், மடம், நாணம் முதலியவற்றை உடையவள்தான் அத்தலைவி, சிறந்த குடியிற் பிறந்தவளும் ஆவாள். ஆடவரைக் கண்டால் உடனே மனம் மாறுபடும் இனத்தைச் சேர்ந்தவளல்லள் அவள். அவ்வாறு இருந்தும், அவர்கள் ஒருவரை ஒருவர் காண நேர்ந்தது எனில், அது விதியின் விளையாட்டு என்றே இருவரும் கருதினர். ‘பால் வரை தெய்வம் கடைக்கூட்டக் கண்டனர்’ என்று பழந்தமிழர் இக்காட்சியை விரித்துரைத்தனர். எதிர்பாரா விதமாக ஒரு நாள் ஒரு சோலையில் இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பட்டனர். ‘அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்.’ இருவரும் பார்த்துக் கொண்ட பார்வை மூலமாகவே ஒருவர் மற்றொருவருடைய உள்ளத்தில் புகுந்து நிலையாய்த் தங்கிவிட்டனர். ‘இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார்.’ இக்காட்சியின் பின்னர் இருவரும் உள்ளமும் உடலும் கலந்தவர்களாய்ச் சிறிது நேரம் இருந்துவிட்டுப் பிரிந்தனர். அவ்வாறு பிரியும் பொழுது அவள் மிகவும் வருந்தினாள்; இனி எப்பொழுது எவ்வாறு அவனைக் காண முடியும் என்று அஞ்சினாள். அவன் பலபடியாக அவளுக்கு அமைதி கூறினான்; தன் ஊர் மிக அணித்தாகவே உளதென்றும், தினந்தோறும் அவளை வந்து சந்திப்பதாகவும் கூறினான்.

தனது ஊர் மிகவும் அண்மையில்தான் இருக்கிறது என்பதை மிகவும் அழகுபடக் கூறுகிறான் அத்தலைவன்.

‘பெண்ணே, அஞ்ச வேண்டா! எம் ஊரிடத்துள்ள மலை போன்ற பெரிய மாளிகைகள் சுண்ணாம்பு பூசப் பெற்று மிக்க ஒளியுடன் விளங்குகின்றன. அந்தச் சுண்ணத்தின் வெண்மையான ஒளிபடுவதால், உன் ஊரில் உள்ள கரியநிறமுடைய குன்றுகள் அனைத்தும் வெண்மை நிறம் பெற்று. விளங்கும்’, என்ற கருத்தால்,


இருங்குன்ற வாணர் இளங்கொடி யே! இடர்
        எய்தல்! எம்ஊர்ப்
பருங்குன்ற மாளிகை நுண்கள பத்துஒளி
        பாயநும் ஊர்க்
கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுகம் ஏய்க்கும்
        கனங்குழையே!

(சிற்றம்பலக்கோவை–15)


என்று தன் கலையறிவையும் காட்டி அவள் வருத்தத்தையும் போக்கினான். இருவரும் ஓரளவு ஆறுதல் பெற்றுப் பிரிந்து விட்டனர்.

அத்தலைவன் ஒரு பெரிய நாட்டின் மன்னன். பற்பல அலுவல்களை உடையவன். எனவே, அவனுடைய வேலை காரணமாகச் சில நாட்கள் அத் தலைவியைச் சந்திக்க முடியவில்லை. ஒருநாள் மிகவும் அவளுடைய நினைவைப் பெற்றவனாக முன்னர் அவளைச் சந்தித்த இடத்திற்குச் சென்றான். ஆனால், அவளை அங்குக் காண முடியவில்லை. அவனுடைய வருத்தம் மிகவும் அதிகமாகிவிட்டது.என்செய்வதென்று தெரியாமல் வருந்தினான். அவளுடைய ஊர் முதலியன அவனுக்குத் தெரியுமேனும், ஊரினுட்சென்று அவளைப் பற்றி விசாரிப்பது இயலாத காரியம். எனவே, தன் துயரத்தைப் பிறரிடம் கூறி வருத்தத்தை ஆற்றிக் கொள்ளக்கூட முடியாத நிலைமையில் பலமுறை வருவதும் போவதுமாய் இருந்தான்.

இந்நிலையில் தலைவியின் பாடு மிகவும் திண்டாட்டமாகி விட்டது. அவனாவது ஆண்மகன் என்ற முறையில் பல இடங்கட்குச் செல்வதாலும் பலருடன் பழகுவதனாலும் தன் துயரை மறக்கக் கூடிய நிலையில் இருந்தான். ஆனால், அவளோ, பெண்! அவளுடைய வருத்தத்தை வெளியிற்கூடக் கூற முடியவில்லை! என் செய்வாள் பாவம்! அவளுக்கு உயிர்த் தோழி ஒருத்தி உண்டு. அவளிடமாவது கூறித் தன் மன வருத்தத்தை ஆற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தாள். ஆனால், பலமுறை நினைந்தும் துணிவு பிறக்கவில்லை. ஒருவரிடமும் கூறாமல் தன் துயரத்தைத் தானே பொறுத்துக் கொண்டு வருந்தினாள்.உடல் இளைக்கத்தொடங்கிற்று; உணவு சரியாகச் செல்லவில்லை; பாலும் கசக்கும் நிலைமை அடைந்துவிட்டாள். படுக்கை நோவத் தொடங்கிவிட்டது. இரவில் அவள் நல்ல உறக்கம் பெற்றுப் பல நாட்களாகிவிட்டன. உடல் இளைப்பைக் கண்ட அவளுடைய தாய், மகளைத் தெய்வம் தீண்டி விட்டதாகவே முடிவு செய்துவிட்டாள். தெய்வக் குற்றத்தைப் போக்கும் முறையில் வேலனை வைத்து வெறியாட முடிவு செய்துவிட்டாள்.

தலைவியின் பாடு மிகவும் இடைஞ்சலாகிவிட்டது. வேலன் வெறியாடிய பிறகும் அவளுக்கு உடல் தேறவில்லை என்றால், தாய் முதலானவர்கள் அவள்மேல் ஐயங்கொள்ளத் தலைபட்டுவிடுவார்கள். எனவே தீவிரமாக இதுபற்றி ஆய்ந்து இறுதியாகத் தோழியிடம் கூற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள். இந்நிலையில் தோழியே ஐயப்பட்ட நிலையிலிருந்து உறுதிப்பாட்டுக்கு வந்து விட்டாள். தான் உறுதியாக நம்புகிற ஒன்றை எவ்வாறு தலைவியிடம் எடுத்துக் கூறுவது என்பதுதான் அவளுடைய தொல்லை. வேறு வழி இல்லாமல் குறிப்பாக ஒரு நாள் பேச்சைத் தொடங்கினாள்.இத்தகைய ஒரு வாய்ப்பை எதிர்பார்த்திருந்த தலைவிக்கு இது மிகவும் பொருத்தமாகஅமைந்துவிட்டது. எனவே, தோழியிடம் தன் தலைவனைப் பற்றிக் கூறிவிட்டாள். மேலும், அவனை விரைவில் அடையாவிடில், தன்பாடு மிகவும் திண்டாட்டமாகிவிடும் என்பதையும் அறிவித்தாள். தோழி அவளை அஞ்சவேண்டா என்றும், விரைவில் அத்தலைவனையே மணந்து கொள்ளுமாறு செய்வதாகவும் உறுதிமொழி கூறினாள்.

இவ்வாறு தோழிக்கும் தலைவிக்கும் உரையாடல் நடைபெற்ற இரண்டொரு நாட்கள் கழிந்தபின் ஒரு நாள் தோழி தலைவனைக் கண்டாள். இவள்தான் தன் தலைவியின் உற்ற தோழி என்பதை அறிந்த தலைவன், தோழியிடம் பேச்சைத் தொடங்கினான். ஆனால், தோழி சிறிதும் விட்டுக் கொடாமற் பேசினாள்;தலைவி படும் வருத்தத்தைச் சிறிதும் வெளிக்காட்டாமலும், பிடிகொடாமலும் பேசினாள். தலைவன் பாடு போதும் போதும் என்றாகி விட்டது. இறுதியாக அவன் தன் வருத்தம் முழுவதையும் வெளியிட்டான். அதிலும் பயன் இல்லாமற் போய்விடவே,தலைவன் தான் மடல் ஏறப் போவதாகவே கூறினான்.

மடல் ஏறுதல் என்பது அக்காலத்து வழக்கம். ஒரு தலைவன் தன்னால் விரும்பப்பட்ட தலைவியை மணந்து கொள்ள முயல்வான். ஆனால், சுற்றத்தார், தோழி முதலிய யாராலாவது தடை ஏற்படுமாயின், தன் தலைவியினிடம் கொண்டுள்ள அன்பின் ஆழத்தை வெளியிட மடல் ஏறுவதும் உண்டு. இலக்கியத்தில் காணப்பெறும் இம்மடல் ஏறும் வழக்கம் வாழ்க்கையில் எவ்வளவு தூரம் கடைப்பிடிக்கப்பட்டது என்பதை அறிதற்கில்லை.இலக்கிய இலக்கணங்களிற் கண்டபடி மடல் ஏறுதல் என்பது வியப்பைத் தரக்கூடியதாம்.பனை மரத்தின் கருக்கினால் செய்யப் பெற்ற குதிரை ஒன்றின் மேல் தலைவன் ஏறிக் கொள்வான். தலைவியினுடைய உருவம் தீட்டப் பெற்ற ஓர் ஓவியம் அவனது கையில் இருக்கும். தலைவியினுடைய ஊரில் சென்று அவளுடைய பெற்றோரும் சுற்றத்தாரும் இருக்கும் இடத்தின் எதிரேசெல்வான். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அவ்வூரில் உள்ள சிறு பிள்ளைகளை விட்டு அக்குதிரையை இழுக்கச் செய்வான். பனங்கருக்கினால் செய்யப் பெற்ற குதிரையாதலின், அது தலைவனுடைய தொடையைக் கிழிக்கும். அவனுடைய தொடையிலிருந்து உதிரம் பெருகும். இக்கொடுமையைக் காணச் சகியாத சுற்றத்தார், அத்தலைவியினுடைய பெற்றோரைக் கேட்டு அப்பெண்ணை இத்தலைவனுக்கே மணம் முடிக்க ஏற்பாடு செய்வர். தலைவன் தலைவியினுடைய படத்தை எழுதிக்கொண்டுதான் அக்குதிரையில் ஏற வேண்டும் என்ற இந்தக் கட்டுப்பாடு இலக்கியத்தில் மிகஅழகான சில பாடல்கள் தோன்றவும் காரணமாயிற்று.

திருச்சிற்றம்பலக் கோவையார் என்பது மாணிக்கவாசகர்என்று கூறப்பெறும் திருவாதவூர் அடிகளால் அருளிச் செய்யப் பெற்றது. திருவாசகத்தை அருளிய அப்பெருமானே இவ்வழகிய நூலையும் இயற்றியுள்ளார். கோவை என்பது ஒரு தலைவன் தலைவியைக் கண்டு காதலித்து அவளுடன் களவு மணத்தில் ஈடுபட்டுப் பின்னர் அவளையே மணந்து வாழ்வதைப் பற்றிப் பாடுவது, இந்த நிகழ்ச்சியை நானூறு பிரிவுகளாக வகுத்துக் கொண்டு பாடுவதே கோவை எனப்படும். தலைவன் தலைவியைக் காண்பது, “இவள் தெய்வ மகளோ!” என்று ஐயங்கொள்வது போன்ற ஒவ்வொரு நிலைக்கும் ஒன்று முதல் பல பாடல்கள் பாடப்பெறும். பெரும்பாலும் இறைவனையோ, ஒருபெரிய அரசனையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டே பாடப்பெறும் இந்நூல். மணிவாசகப் பெருமான் பாடிய கோவையாரின் பாட்டுடைத் தலைவன் சிதம்பரத்தின்கண் ஆனந்தத் தாண்டவம் புரியும் பொன்னம்பலவனே. அந்தச் சிறந்த நூலில் மடல் ஏறுதல் பற்றி வரும் பகுதி மிக அழகானது. தலைவன், ‘நான் மடல் ஏறப்போகிறேன்,’ என்று கூறுகிறான். தோழி, ‘அது முடியாது,’ என்கிறாள். தலைவன், ‘ஏன் முடியாது?’ என்று கேட்கிறான். அதற்குத் தோழி அழகாக விடை கூறுகிறாள். ’தலைவீர், மடல் ஏற வேண்டுமானால், தலைவியினுடைய படத்தை எழுத வேண்டும் அன்றோ? எம் தலைவியின் படத்தைத்தான் எழுத முடியாதே! அவள் குரலுக்குப் பதிலாக ஒரு யாழை எழுதும்; அவள் பல் வரிசைக்குப் பதிலாக முத்துக்களை எழுதும்; கூந்தலுக்குப் பதிலாக மேகக் கூட்டத்தைப் பூவுடன் எழுதும்; அவள் உதடுகட்குப் பதிலாக ஒரு கொவ்வைக் கனியை எழுதும்; இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டிருக்கும் ஒரு பூங்கொம்பு இருக்குமாயின், அதனைக் கொண்டு வாரும் மடல் ஏறுவதற்கு,’ என்று கூறுகிறாள் தோழி.


யாழும் எழுதி எழில்முத்து
        எழுதி இருளின் மென்பூச்
சூழும் எழுதிஓர் தொண்டையும்
        தீட்டிஎன் தொல்பிறவி
ஏழும் எழுதா வகைசிதைத்
        தோன்புலி யூர்இளமாம்
போழும் எழுதிற்றுஓர் கொம்பர்உண்
        டேல்கொண்டு போதுகவே!
                                                 (திருக்கோவையார்–79)

திருமங்கை ஆழ்வார் 'சிறிய திருமடல்’ என்றும் 'பெரிய திருமடல்’ என்றும் இம்மடலேறுதலை இரண்டு பாடல்களாக அருளிச் செய்துள்ளார். அவ்வழகிய பாடலிலும் ஆழ்வார்,

"பேர்ஆ யிரமும் பிதற்றிப் பெருந்தெருவே
ஊரார் இகழினும் ஊராது ஒழியேன்நான்
வாரார்பூம் பெண்ணை மடல்.’’

(சிறிய திருமடல், 78-80)

என்று அருளுவது காண்க.

நாம் கூறி வந்த தலைவனும் தோழியைக் கண்டு, தான் மடல் ஏறித்தான் தலைவியை அடைய வேண்டுமா என்று கேட்கிறான். 'மடல் ஏறி அதனால் பெறுகின்ற பழியுடனா தலைவியை அடைய வேண்டும்? இதைவிடச் சாவு வருமேயாயின், அது எவ்வளவு சிறப்புடையதாக இருக்கும்!” என்று வருந்திக் கூறுகிறான் அத்தலைவன்.

"பனை மடலாலே செய்யப்பெற்றகுதிரையில் ஏறி, எருக்கம்பூ" பூளைப்பூ முதலியவற்றைச் சூடி, இடம் அகன்ற பல ஊர்களிலும் நாட்டிலும் திரிந்து, அழகிய தலைவியின் நலங்களை எல்லாம் எடுத்துக் கூறிச் செல்லும் மடலேறும் தொழிலைச் செய்யாமல், என் மனத்தைக் கட்டுப்படுத்தி, அதுவே நோயாக இருந்து இறந்து போவேனாயின், அது எவ்வளவு நன்மையாக இருக்கும்! அகன்ற பெரிய ஆகாயத்திடத்தே இராகு விழுங்கிய பசிய கதிர்களை உடைய நிலவைப் போலக் கூந்தலுடன் விளங்கும் நெற்றியையுடைய தலைவி யான் நினைக்குந்தோறும் என் எதிரே வந்து வினாவி என்னை மெலியச் செய்கிறாள். அதனால் எனக்குக் காமநோய் மிகுதியாகி இருக்கிறது!" என்ற கருத்துடன் பாடல் அமைகிறது.

மடல்மா ஊர்ந்து மாலை சூடிக்
கண்அகன் வைப்பின் நாடும் ஊரும்
ஒண்ணுதல் அரிவை நலம்பா ராட்டிப்
பண்ணல் மேவலம் ஆகி அரிதுற்று
அதுபிணி ஆக விளியலங் கொல்லோ?
அகல்இரு விசும்பின் அரவுக்குறை படுத்த
பசுங்கதிர் மதியத்து அகல்நிலாப் போல
அளகம் சேர்ந்த சிறுநுதல்
கழறும் மெலிக்கும் நோய்ஆ கின்றே!

(நற்றிணை–377)

(மடல்மா–பனங்கருக்கால்; செய்த குதிரை, கண் அகன் வைப்பு–இடம் அகன்ற பூமி; ஒண்ணுதல்–ஒளி பொருந்திய நெற்றி, அரிவை–தலைவி, பண்ணல் மேவலம் –அலங்கரித்துக் கொள்ளலை விரும்பேம்; விளியலங் கொல்லோ–சாகமாட்டோமா அளகம்–கூந்தல்; கழறும் – இடித்துக்கூறும்.)

இவ்வழகிய பாடலின் இறுதி நான்கு அடிகளிலும் தலைவியின் அழகைக் கூறுகிறான் தலைவன். ஆனால், அவ்வாறு கூறுமுகமாகவே அவளிடத்தில் தான் கொண்டுள்ள தணியாக் காதலையும் வெளியிட்டு விடுகிறான். 'மடலேறித்தான் நான் இறக்க வேண்டுமா? அது இல்லாமல் இந்தப் பாழ் உயிர் போகவும் மறுக்கிறதே என்று கூறுகையில் தலைவி இல்லாவிட்டால் தான் இறந்து போவது உறுதி என்னுங் கருத்தையும் பெற வைத்தான். மேலும், அவ்வாறு தான் உயிர்விட நேர்ந்தால் அந்தப் பழி தலைவியைத்தான் சேரும் என்பதையும் கூறிவிட்டான்.

        காதல், காதல், காதல்,
        காதல் போயிற்,
        சாதல், சாதல், சாதல்

என்று கூறிய கவியரசர் பாரதியாரின் மூதாதை போலும் இத்தலைவன்!

பாலைத் திணை

பாலைத் திணை நிகழ்வதாகக் கூறப்படும் இடம் பாலை நிலம், காலம் நல்ல கோடைக்காலம், பொழுது நண்பகல்.

தலைவன் தலைவியைவிட்டுப் பிரிவதும் அதுபற்றிய பிற செய்திகளும் பேசப்படும் இத்திணைப் பாடல்களில்.

தலைவியை விட்டுப் பிரிந்து சென்ற தலைவனுடைய மனநிலையை விளக்கும் பாடல் இது;

பொய்கையில் ஓடுமீன் வழி

ஒரு நாள் தலைவன் குளிப்பதற்காகக் குளத்திற்குச் சென்றான். நல்ல தாமரைத் தடாகத்தில் தண்ணீர் குளிர்ந்தும் தெளிந்தும் இருந்தது,அதன் அருகில் ஈடுபட்டதலைவன், குளத்துள் இறங்கிக் குளியாமல் கரையில் அமர்ந்துவிட்டான். அவன் மனத்துள் ஒரு பெரிய போராட்டம் நிகழ்கிறது. நெடுநாளாகவே குடும்பத்தில் ஒரு குறை இருந்து வருகிறது. அக்குறையை எவரும் எடுத்துக் காட்டவில்லை. இன்னும் பார்க்கப்போனால் அது இல்லாததுபோலவே நடந்து கொள்கின்றனர். அக்குறை பொருட்குறைதான்.வேண்டுமான அளவு பொருள் வசதி இல்லை. தலைவனுக்குப் பெரிய பெரிய குறிக்கோள்கள் உள்ளன. இவற்றை எல்லாம் நிறைவேற்ற வேண்டுமாயின், நிறையப் பொருள் வேண்டும். ஆனால், வீட்டிலே இன்றியமையாதவற்றை வாங்கக்கூடப் பொருள் முட்டுப்படுகிறது. தலைவனுக்கு உள்ளூரப் பெரிய கவலைதான். ‘என்ன செய்தால் இக்கவலை தீரும்!’ என்று ஆராய்ந்தான். முடிவாக, ‘வெளியூர் சென்று பொருளீட்ட வேண்டும்,’ என்ற முடிவுக்கு வந்துவிட்டான்.

அவன் ஏதோ செயற்கரிய காரியத்தைச் செய்யத் துணிந்துவிட்டவன் போல மகிழ்ச்சி அடைந்தான். ஆனால், இம்மகிழ்ச்சி மிகச் சிறிது நேரமே தங்கியிருந்தது. ஏன் எனில், ‘பொருள் தேடுதல்’ என்றாலே வெளிநாடு செல்ல வேண்டும் என்பதுதானே பொருள்? வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் அது எத்துணைப் பெரிய காரியம் அந்த நாட்களில்? வெளிநாட்டில் வாழும் அந்த நாட்களில் என்ன தனிமை! நினைத்த பொழுதே நெஞ்சு நடுங்கும் தனிமை! ஏன்? அங்கு மக்களே இல்லையா? இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும், தான் பல காலம் பழகிய தன் சுற்றத்தாரையும் உயிரினும் இனிய காதலியையும் விட்டுப் பிரிந்து வாழ வேண்டிய அந்தத் தனிமை! தலைவியை விட்டுப் பிரிவதை நினைத்தாலே போதும், பொருள் சேகரிப்பதில் உள்ள மகிழ்ச்சி எல்லாம் காற்றாய்ப் பறந்து விடும். ஆனால், இப்பொழுது தலைவன் வீட்டிலேதான் இருக்கிறான். தலைவியின் இன்பத்தில் ஈடுபட்டிருக்கையில் ஒரோவழிப் பொருள் இல்லாத கவலை வந்து குறுக்கிடுகிறது.

இவ்வாறு பலவிதமான எண்ணங்கட்கு இடையில் அவதிப்பட்ட தலைவன், அன்று குளக்கரையில் அமர்ந்து தன் எண்ணங்களை ஓடவிட்டிருக்கிறான். ‘தலைவி, பொருள் தேடப் பிரிவு’ என்ற இரண்டின் இடையே நடைபெற்ற போராட்டத்தில் ஒருவிதமாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டான் நேற்றைப் பொழுதில். எவ்வாறாயினும் கடமையை நிறைவேற்றப் போவதுதான் ஆண் மகனாகிய தனக்கே முறை என்பதை உணர்ந்தான். தலைவியின் மாட்டுக் காதலில் திளைக்கும் அவனுடைய நெஞ்சங்கூட அவன் செய்யத் துணிந்ததே முறையானது என்று கூறிற்று. இனித் தடை என்ன? எவ்வாறாயினும் பொருள் தேடப் போய்விடலாம் என்ற முடிவுடனேதான் நேற்றைப் பொழுது முழுவதும், ஏன்–இன்று குளக்கரைக்கு வரும் அளவும் தலைவன் உறுதி பூண்டிருந்தான்.ஆனால், இப்பொழுது குளத்தினுள் பார்த்துக் கொண்டிருக்கையில் ...! ஆ! ஈதென்ன புதுமை! அவன் இதுவரை காணாத ஒன்றைக் கண்டுவிட்டானா? ஆம்! அவனுடைய உறுதி எல்லாம் குலைந்து விட்டது போன்ற ஒரு முகக்குறிப்பு இதோ வெளிப்படுகிறது. தலைவன் இதோ வாய்விட்டுப் பேசுகிறான்:

............................ பொருளே
வாடாப் பூவின் பொய்கை நாப்பன்
ஓடுமீன் வழியில் கெடுவ . . . . .

(நற்றிணை–16)

(பொருளானது, வாடாத தாமரை போன்ற மலர்களை உடைய குளத்தின் நடுவே மீன்கள் ஓடும் பொழுது உண்டாகின்ற வழியைப் போல அழியத்தக்கது)

அதாவது, மீன்கள் ஓடும்பொழுது வழி உண்டாவது போலத் தோன்றி, அம்மீன்கள் அப்பாற்சென்ற மறு விநாடியே வழி என்ற ஒன்று இல்லாது போய்விடுகிறதன்றோ? அது போலப் பொருள் என்பதும் பாடுபட்டுத் தேடும் பொழுது நிறையச் சேர்வது போலத் தோன்றிப் பிறகு தான் இருந்த இடமும் இல்லையாக மறைந்துவிடும் ஒன்றாகும். இதனை வாய்விட்டுத் தலைவன் கூறிக்கொண்டிருக்கும் பொழுதே யாரோ ஒரு புலவர் இந்தப் பொருளின் நிலையாமை பற்றிக் கூறியது அவன் நின்ைவுக்கு வருகிறது. அவர் என்றோ ஒருநாள் பாடினார்;

‘விழுநர்க்கு இறைச்சியாய் விரல்கவர்பு இசைக்குங்கோல்
ஏழும்தம் இசைகெட இடைநின்ற நரம்புஅறுஉம்
யாழினும் நிலைஇல்லாப் பொருள். . . .’
(பாலைக்கலி-8)

(விரும்பிக் கேட்பார்க்கு இன்பந் தருவதாய், விரலாலே வாசிக்கப்படுகிற நரம்பு ஏழும், தாம் இருந்தும் பயன் படாதபடி வாசிக்கும் வில்லில் அகப்பட்டு இடை நின்ற நரம்பு அறும்படியான யாழைக் காட்டிலும் நிலையில்லாத பொருள்)

மேலும் அந்தப் புலவர் பொருளின் நிலையாமை பற்றித் தொடர்ந்து பாடியதைத் தலைவன் இப்பொழுது நினைவிற்குக் கொண்டு வந்தான்;

‘மரீஇத்தான் கொண்டாரைக் கொண்டக்கால் போலாது
பிரியுங்கால் பிறர்எள்ளப் பீடுஇன்றிப் புறம்மாறும்
திருவினும் நிலையில்லாப் பொருள் . . . .'
                                                           (பாலைக்கலி–7)

(திருமகள், தான் விரும்பி மனத்தால் ஏற்றுக் கொண்டவர் களை, தான் வந்து சேரும் பொழுது இருந்த நிலைபோல் இல்லாமல் பிரிந்து செல்லும் பொழுது பிறர் கண்டு கேவலமாய்ப் பேசும் அளவுக்குத் தாழ்த்திவிட்டுச் செல்லும் தன்மை போல நிலையில்லாத பொருள்)

அதாவது, புதுப் பணக்காரன் ஆனவன் மீட்டும் ஏழையானால், அவனது பழைய நிலைதானே என்று கருதாமல், உலக்த்தார் அவனை மிகுதியும் எள்ளி நகை யாடுகிறார்களாம். முன்னர் ஏழையாய் இருந்தபொழுது இருந்த நிலைகூட இப்பொழுது (இடையில் பணக்காரனாகி மறுபடியும் ஏழையான இப்பொழுது) இல்லாமல் செய்கிற திருமகள் என்றபடி

அந்தப் புலவர் பாடிய இந்த மூன்று அடிகளும் தலைவன் நினைவிற்கு வந்தன. உடனே தான் கொண்டிருந்த முடிவு ஆட்டங் கண்டுவிட்டதைத் தலைவன் உணர்ந்தான்; எவ்வாறு ஆயினும் பொருள் தேடப் போக வேண்டும் என்ற முடிவு இப்பொழுது தன் பால் இல்லை என்பதை உணரத் தலைப்பட்டான். தான் இதுவரை கொண்டிருந்த முடிவு நெகிழ்ந்தவுடன் தலைவனுக்கு மீட்டும் ‘எது பெரிது?’ என்ற வினாத் தோன்றத் தொடங்கி விட்டது. தலைவியுடன் கூடி இருப்பதைப் பெரிதென மதித்தால், பொருள் தான் இருக்கும் இடந்தேடி வரப்போவதில்லை. ஆனால், கடமையை நிறைவேற்றப் பொருள் தேவை என்று உணர்ந்து அதனைத் தேடப் புறப்பட்டால், தலைவியுடன் சேர்ந்து வாழ இயலப் போவதில்லை. இதனிடையில் அவனுடைய நெஞ்சம் மாறி மாறி அவனுக்கு அறவுரை கூறத் தொடங்கி விட்டது. தலைவி எதிரே இருக்கின்ற வரை அவளுடைய அழகில் தானும் ஈடுபட்டு தன்னையும் ஈடுபடுத்திய நெஞ்சம், இவ்வளவு அழகுடையவளை. வருந்த விட்டுப் போகலாமா? இது முறையா? என்று எடுத்துக் கூறிற்று. ஆனால், அவளைப் பிரிந்து அப்பாற் சென்றவுடன் உலகத்தார்க்கு அவன் ஆற்ற வேண்டிய கடமைகளை நினைவூட்டி, இனியும் சும்மா இருக்கலாமா? உடனே பொருள் தேடப் புறப்படு, என்று இடித்துக் கூறத் தொடங்கி விட்டது. எனவே, தன் நெஞ்சைப் பார்த்து அந்தக் குளக்கரையில் இருந்தபடியே தலைவன் கூறத் தொடங்கி விட்டான்.

‘நெஞ்சே!, தலைவி இன்பம் பெரிதென மதித்து இவண் இருந்து விட்டால், பொருள் நம்மை வந்து அடையாது. பொருள் தேடும் கடமை இன்றியமையாதது என்று நினைந்து சென்று விட்டால், தலைவியினிடத்துப் பெறும் இன்பம் கைகூடாது. ஆனால், இரண்டினும் இன்பம் அடையக்கூடும் நீ. இங்கிருந்தால் தலைவியிடத்தே இன்பம் பெறுவாய். இவளை விட்டுப் பொருள் தேடச் சென்றாலோ, அவ்விடத்தும் இன்பம் பெறுவாய். ஆனால், என்னைப் பொறுத்தவரை இவளை விட்டு நீங்கிவிட்டால் இன்பம் பெறுவது இயலாத காரியம். அப்படித்தான் இவளை விட்டுத் தேடப் போகிற பொருள் இவளைப்போல நிலைத்த இன்பத்தைத் தரக் கூடியதா என்ன? அதுவும் இல்லை. வாடாத பூக்கள் நிறைந்த குளத்தினிடத்து மீன்கள் ஓடும்பொழுது தோன்றும் வழியைப் போலத் தோன்றி, உடன் மறைந்துபோம் இயல்புடைய இப்பொருளுக்காக, நிலைபெற்ற இவள் இன்பத்தைத் துறக்க என்னால் இயலாது. நீ வேண்டுமானால் அப்பொருளைத் தேடிச் செல்க. யான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். பெரிய கடலால் சூழப் பெற்ற இவ்வுலகை மரக்காலாகக் கொண்டு ஏழு முறை அளக்கக்கூடிய அளவு பெரும் பொருளைப் பெறுவதாயினும், நான் தலைவியை விட்டு வரமாட்டேன். கனமான குழையைக் காதுகளில் அணிந்த அவள் குளிர்ச்சி பொருந்திய செவ்வரி பரந்த தன் கண்களால் அடிக்கடி என்னைப் பார்க்கிறாள். அப் பார்வையால் தாக்குண்ட நான் இனி வரமாட்டேன்! இனி அந்தப் பொருள் எக்கேடாயினும் கெட்டுப் போகட்டும்! அப்பொருளை விரும்பிச் செல்வார்மாட்டு அது தங்கி வாழட்டும்!’

இந்த முறையில் பொருள்படத் தலைவன் தன் நெஞ்சை நோக்கிக் கூறுகிறான்:


புணரின் புணராது பொருளே; பொருள்வயின்
பிரியின் புணராது புணர்வே; ஆயிடைச்
சேர்பினும் செல்லாய் ஆயினும் நல்லதற்கு
உரியை வாழிஎன் நெஞ்சே! பொருளே

வாடாப் பூவின் பொய்கை நாப்பண்
ஓடுமின் வழியில் கெடுவ; யானே
விழுநீர் வியல்அகம் தூணி ஆக
எழுமாண் அளக்கும்விழுநிதி பெறினும்
கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக்கண்
அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனன்,
எனைய ஆகுக! வாழிய பொருளே!

(நற்றிணை –16)

(புணரின்–தலைவியிடம் தங்கினால்; புணராது–சேராது; ஆயிடைச் சேர்பினும்–பொருள் தேடும் அவ்விடம் சேர்ந்தாலும்; நல்லதற்கு உரியை–உனக்கு இன்பம் கிட்டும்; விழுநீர்–கடல்; வியல் அகம்–அகன்ற உலகம்; தூணி–மரக்கால் என்னும் இரண்டு படி கொண்ட ஓர் அளவு; சேயரி–சிவந்த வரிகள்; அமர்ந்தினிது நோக்கம்–இனிய பார்வை; செகுத்தனன்–இவள் பார்வையால் என் ஆற்றல் அழிந்தேன்.)

இவள் இன்பத்தில் வெறுப்படையாமல் முதுமைப் பருவம் வரையில் இங்குத் தங்கிவிட்டால் பிறகு பொருள் தேடல் முடியாது என்ற கருத்தைத் தலைவன், ‘புணரின் புணராது பொருளே,’ என்றும், பிரிந்து சென்றுவிட்டால் இவள் இறந்துவிடுவாளாகலின், இனி வந்தபொழுது இவள் இன்பம் கிடைக்காது என்ற கருத்தைப் ‘பொருள் வயின் பிரியின் புணராது புணர்வே,’ என்றும் கூறி, அந்நெஞ்சுக்குக் குறிப்பாக ‘நீயும் இங்குத் தங்க வேண்டுவதே முறை’ என்று கூறுமுகமாக, ‘நல்லதற்கு உரியை’ என்று கூறின அழகு மீட்டும் ஒருமுறையன்றிப் பன்முறை படித்து மகிழத் தக்கதன்றோ!

இதே கருத்துப்படக், கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற புலவர், பட்டினப்பாலை என்றதொரு பெரிய பாடலைப் பாடியுள்ளார். கரிகால் பெருவளத்தானுடைய காவிரிப்பூம்பட்டினத்தின் பெருமையைப் பலபடியாக எடுத்துக்கூறி, அப்புலவர் பெருமான், ‘இத்தகைய ஒப்பற்ற பட்டினத்தையே எனக்குப் பரிசிலாக அக்கரிகாலன் தந்தாற்கூட யான் என் காதலியை விட்டு வரமாட்டேன்!’ என்று கூறுகிறார். 301 அடிகளையுடைய அப்பாடலில். அதில் மேற்சொன்ன கருத்து இதுதான்:

‘முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்
வார்இருங் கூந்தல் வயங்கிழை ஒழிய...
வாரேன், வாழிய, நெஞ்சே!’

(பட்டினப்பாலை–218–220)

தமிழன் கொண்ட காதற்சிறப்பை அறிய இவை சிறந்த எடுத்துக் காட்டுக்கள் அல்லவா?

***

கடமையை நிறைவேற்றச் செல்லும் தலைவனுடைய மனப் போராட்டத்தை விளக்கும் பாடல் இது:

தேய்புரி பழங்கயிறு

இந்தப் பரந்த உலகத்தில் என்று மனிதன் தோன்றினானோ, அன்றே அவனைத் தொடர்ந்து துன்பமும் தோன்றியது போலும்! மனிதன் ஆதியில் தனிமையாய்க் காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்திருப்பான். குடி இருக்கக் குச்சு வேண்டும் என்று கவலைப்படாமலும், அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்பதுபற்றி அவன் கவலை கொள்ளாமலும் வாழ்ந்த காலம் அது; பசியடுெத்த பொழுது ஆயுதங்களுடன் வெளியே சென்று, காட்டில் நிறைந்திருந்த விலங்குகளில் வேண்டுவனவற்றை வேட்டையாடி உண்டுவிட்டு, அடுத்த வேளை உணவுக்கு அதில் சிறிது மீத்து வைத்துக்கொள்ளவுங்கூடக் கவலைப்படாமல் இருந்த காலம்!

அத்தகைய நிலையில் அவனுக்குக் கடமை என்று கூறத் தக்கது ஒன்றும் இருத்தற்கில்லை. மனிதன் தன்னொத்த பிற மனிதருடன் கூடி வாழத் தொடங்கிய பின்னரே அவனுக்கென்று சில கடமைகள் தோன்றுகின்றன. இதுவரைத் தன் உரிமையை அன்றிப் பிறரைப் பற்றிக் கவலை கொள்ளாது இருந்த அவனுக்கு இப்பொழுது புதிய அனுபவம் தோன்றுகிறது. சமுதாயமாகக் கூடி வாழத் தொடங்கியவுடன் தன் உரிமை, பிறர் உரிமை என்ற இரண்டும் மோதத் தொடங்குகின்றன. தன் உரிமையில் சிலவற்றை விட்டுக் கொடுத்தால்ஒழிய நன்முறையில் பிறருடன் சேர்ந்து வாழ முடியாது என்பதை மனிதன் உணரத் தொடங்குகிறான்.

சமுதாய வாழ்வில் தோன்றும் இந்தச் சிக்கல் ஒருபுறம் இருக்கக் குடும்பம் என்று அவன் ஏற்படுத்திக் கொண்டு வாழும் வாழ்விலும் புதிய பல சிக்கல்கள் தோன்றுகின்றன. தலைவியினிடம் பெரும் காதல் கொண்டுதான் தலைவன் குடும்பம் தொடங்குகிறான்; அவளிடம் நிலைத்த இன்பம் காண ஒரே வழி குடும்பம் வைத்தலே என்று கருதித்தான் அதில் ஈடுபடுகிறான். ஆனால், குடும்பம் தொடங்கியவுடன் புதிய பொறுப்புக்கள் அவனை வந்து அடைகின்றன. குடும்பம் என்பது தானும் அவளும் கேவலம் இன்ப வேட்டை ஆட ஏற்பட்டது அன்று என்ற உண்மை அவனுக்குப் புலனாகிறது. அக்குடும்பம் காரணமாகத் தன்னை வந்தடைந்த பலரையும் காக்கும் பொறுப்பும் அவனை வந்தடைகிறது. தமது வறுமை காரணமாகவும், இயலாமை காரணமாகவும், பலதிறப்பட்டவர் அவனை வந்தடைகின்றனர்.

அத்தனை பேரையும் உணவு கொடுத்துக் காக்க வேண்டிய பொறுப்பு அவனுடையதாகிறது. இன்மை காரணமாக வந்தவருக்கு அவர் வேண்டும் பொருளைத் தருதலும், இயலாமை காரணமாக வந்தவருக்கு அவர் குறை முடித்துத் தருதலும் அவன் செய்ய வேண்டுமாயின், அவனது காலம் முதலாவது வீணாகும்; இரண்டாவது அவனுடைய பொருள் வீணாகும்; மூன்றாவதாகவும் மிக முக்கியமானதாகவும் அவன் மனைவியைப் பிரியவும் நேரிடும். எந்த ஒருத்தியைப் பிரியாமல் இருக்க ஒரே வழி குடும்பம் என்று நினைத்தானோ, அந்தக்குடும்பமே இன்று அவன் அவளை விட்டு நீங்கக் காரணமாய் விட்டது.

இந்தச் சூழ்நிலையில் ஒரு தலைவன் அகப்பட்டுக் கொள்கிறான். குடும்பம் வைத்தமையின் அப்பொறுப்புகளைச் சரிவர நடத்தப் பொருள் தேடச் செல்ல வேண்டியுளது. ஆனால், தலைவியின்மாட்டுக் கொண்ட அன்பு அவன் கடமையை உதறிவிடத் தூண்டுகிறது. கடமைக்கும் அன்புக்கும் இடையே ஒரு பெரும் போராட்டம் தொடங்கி விடுகிறது. ‘கடமையே பெரிதாதலின், ‘ஆண் மகனாகிய நீ அதற்கு இடையூறாக நிற்றல் கூடாது,’ என ‘அறிவு’ அவனை இடித்துக் கூறுகிறது. ஆனால் அன்பால் நிறைந்த நெஞ்சம், ‘கடமையாவது கத்தரிக்காயாவது! இரு!’ என்று கூறுகிறது.

அறிவும் அன்பும் பெரும் போராட்டம் நிகழ்த்துகின்றன. ஆனால், இப் போராட்டம் நடைபெறுகையில் தலைவன் ஊரில் தலைவியுடன் வாழவில்லை. பொருள் தேடுதல் நிமித்தமாக வெளிநாடு சென்றுள்ளான். ஆனால், போன காரியம் இன்னும் முற்றிலும் முடியவில்லை.

நெஞ்சு பேசுகிறது; ‘தலைவியை விட்டுப் பிரிந்து எத்தனை நாட்களாகின்றன! உண்மையான அன்பென்பது இதுதானா! அவளை நினைத்தாலும் அவள் உருவம் மனக்கண்முன் வந்து நிற்கிறதே!’

அறிவு:-என்ன நெஞ்சே! இடங்கொடுத்தவுடன் ஒரே அடியாக உன் கதையைத் தொடங்கிவிட்டாயே! கடமை என்ற சொல்லை நீ எங்காவது கேள்விப்பட்டதுண்டா? ஆறு அறிவு படைத்த மனிதனுக்கும் விலங்குக்கும் உள்ள வேறுபாடு யாது என்பதாவது உனக்குத் தெரியுமா?

நெஞ்சு:–அறிவே என்ன? கடமை, மனிதன், மிருகம் என்று ஏதேதோ கதைக்கின்றாயே! தலைவியைப் பற்றி நீ நினைத்துப் பார்த்ததுண்டா? கடமையைப் பற்றிப் பெரிய சொற்பொழிவு செய்ய வந்துவிட்டாயே! தலைவிக்குச் செய்ய வேண்டிய கடமை பற்றி உனக்கு ஏதாவது நினைவுக்கு வருகிறதா?

அறிவு:–நன்றாக நினைவுக்கு வருகிறது! தலைவி மட்டும் எனக்குச் சொந்தம் இல்லையா? அவளுக்கு ஓரளவு துன்பம் தந்துவிட்டது உண்மைதான். ஆனால், அவள் வருத்தப்படாமல் இருக்க வேண்டும் என்று அதற்காகக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் மற்றக் கடமைகள் என்ன ஆகும்?

நெஞ்சு:–என்ன அப்படி மற்றக் கடமைகளை மறந்து விட்டது? வீட்டுக்கு முக்கியம் தலைவிதானே! அறிவே! அவள் இல்லாத பொழுது இல்லறம் என்பது இல்லையே! இப்பொழுது நீ பேசும் கடமைகள் எங்கிருந்து வந்தன? ஆகவே, உன் இல்லறம் நடைபெறுவதற்கு மூலகாரணமான தலைவியை மறந்துவிட்டுக் கடமைகள் என்று கூறிக் கொண்டு திரிவதில் பயன் இல்லை என்பது உனக்குத் தெரியுமா?

அறிவு:–ஆனால், தலைவியை இன்பமாக வைத்துக் கொள்வதற்கு மட்டும் நாம் இல்லறம் தொடங்கவில்லை. வீடு வைத்தவுடன் எத்தனையோ புதிய பொறுப்புக்கள் தோன்றுகின்றன. நீ கூறும் அந்தத் தலைவி மகிழ்ச்சியாக எப்பொழுது இருக்க முடியும்? வீட்டில் விருந்தினர்கள் வந்திருக்கும்பொழுது அடுப்பில் பூனை படுத்துக்கொண்டிருந்தால் தலைவி மகிழ்ச்சியாக இருப்பாளா? இல்லை என்று உதவி வேண்டி நிற்பவர்கள் கடைத்தலையில் நின்று கொண்டு இருக்கையில் தலைவி மட்டும் அதுபற்றிக் கவலைப்படாமல் உண்டு உடுத்து மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? நினைத்துப் பார்.

நெஞ்சு:–ஆம்! அவள் இம்மாதிரிச் சந்தருப்பங்களில் மகிழ்ச்சியாக இருக்க முடியாதுதான். அதற்காக அவள் தலைவனை விட்டுப் பிரிந்து தனியே வாடும்படி விட்டு விட்டால் மட்டும் மகிழ்ச்சி ஏற்பட்டு விடுமா!

அறிவு:–பைத்தியக்கார நெஞ்சே! எப்பொழுதுமே துயரத்தில் ஆழ்ந்து இருக்கும்படியாகவா விட்டுவிடுகிறோம்? பொருள் தேட இங்கு வந்த நம் தலைவன் மட்டும் தலைவியை விட்டு இங்கேயே இருந்துவிடப் போகிறானா, என்ன! வந்த கடமை முடிந்து, வேண்டிய பொருள் கிடைத்தவுடன் ஊருக்குத்தானே புறப்படப் போகிறான்?

நெஞ்சு:–அறிவே, நீயும் உன் தலைவனும் கடமையை முடித்துக் கொண்டு புறப்படும்வரை அருமைத் தலைவி உயிருடன் இருப்பாள் என்பது என்ன உறுதி? ஆ! அவளுடைய கரிய கூந்தல் முதுகில் தாழ்ந்து தொங்கிக் கொண்டிருப்பதை நினைப்பதும் ஓர் இன்பமாகிறது. அவளுடைய அகன்ற அந்த விழிகள், ஆளை விழுங்கி விடுவது போன்று பார்க்கும் அந்தப் பார்வை, இவை இரண்டுடன் அவள் என்னைப் பிணைத்து விட்டாளே! என் செய்வது?

அறிவு:–நெஞ்சே, ஏது! இவ்வளவு தூரத்திற்கு வந்தும் வந்த காரியத்தை மறந்துவிட்டுத் தலைவியைப் பற்றிய உன் எண்ணங்களைக் கேட்டுக் கொண்டிருந்தால் எனக்குக்கூட அறிவு மழுங்கிவிடும் போல இருக்கிறதே! சிறிது நினைத்துப் பார்; நாம் இவ்வளவு தூரம் வந்து வந்த காரியத்தை முடிக்காமல் ஊர் திரும்பினால் நம் தலைவனுடைய பெயருக்கே ஓர் இழுக்கு உண்டாகாதா? அவனை அறியாமை உடையவன் என்று ஊரார் இகழ மாட்டார்களா? பொறுத்தது பொறுத்தாய், நெஞ்சே, இன்னும் சற்றுப் பொறு! எடுத்த காரியத்தை முடித்துக் கொண்டு போகலாம்.

நெஞ்சு:–இனிப் பொறுக்க முடியாது! உடனே புறப்பட வேண்டும்!

இவ்வாறு தலைவனுடைய நெஞ்சுக்கும் அறிவுக்கும் ஒரு போராட்டம் நிகழ்ந்ததாம். அறிவு, நெஞ்சு என்ற இவை இரண்டின் இடைப்பட்ட தலைவன்பாடு மிகத் திண்டாட்டமாகி விட்டதாம். அவன் பட்டபாட்டிற்குக் காட்டும் உவமை மிகமிக அழகானது. இரண்டு வலிமை பொருந்திய ஆண் யானைகள், எதிர் எதிரே நின்று கொண்டு, புரிகள் தேய்ந்து போன பழைய கயிற்றைப் பற்றி இழுக்கின்றனவாம். அந்தக் கயிற்றின் நிலை எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறதாம் அவனுடைய நிலையும். இவ்வளவு அழகிய பாடலைப் பாடியவர் பெயர் கூடத் தெரியவில்லை! எனவே பிற்காலத்தார் அவர் பாட்டில் உள்ள இந்த அழகான உவமையைக்கருதி அவருக்கே ‘தேய்புரிப் பழங்கயிற்றினார்’ என்று பெயர்கூட வைத்து விட்டார்கள்.

புறம்தாழ்பு இருண்ட கூந்தல் போதின்
நிறம்பெறும் ஈர்இதழ் பொலிந்த உண்கண்
உள்ளம் பிணிக்கொண் டோள்வயின் நெஞ்சம்
செல்லல் தீர்க்கம் செல்வாம் என்னும்.
செய்வினை முடியாது எவ்வம் செய்தல்
எய்யாமையொடு இளிவுதலைத் தருமென
உறுதி தூக்கத் துங்கி அறிவே
சிறிதுநனி விரையல் என்னும். ஆயிடை
ஒளிறு ஏந்து மருப்பில் களிறுமாறு பற்றிய

தேய்புரிப் பழங்கயிறு போல
வீவது கொல்என் வருந்திய உடம்பே!

(நற்றிணை–284)

(புறந்தாழ்பு–முதுகில் தாழ்ந்து, (நீளமாக) போதின் நிறம் பெறும்–நெய்தற்பூவின் நிறமுடைய; உண்கண்–ஆளை விழுங்குவது போன்ற கண், செல்லல்–வருத்தம்; எவ்வம் செய்தல்–இகழ்ந்து விட்டுப் போதல்; எய்யாமை–அறியாமை; இளிவு–இகழ்ச்சி உறுதி தூக்கத் தூங்கி–உறுதிப்பாடு செலுத்தலினாலே செல்லாது, நனி–மிகுதி; ஒளிறேந்து மருப்பு–ஒளி படைத்த கொம்பு, வீவது கொல்–அழியவேண்டுமா?)

உண்மையான காதலும் கடமை உணர்ச்சியும் ஒருவனுடைய மனத்தில் போராட்டம் நிகழ்த்துவதைச் சித்தரிக்கிறது இப்பாடல். இவை இரண்டில் எது சரியானது என்ற முடிவுக்குத் தலைவன் வர முடியவில்லையாம். ஆகவே, எது சரியென்று கேட்டுக்கேட்டுக் கவலைப்பட்டு அவன் உடம்புகூட இளைத்துவிடுகிறதாம். இன்றும் நம்மில் பலருக்குக் கவலை உண்டு. கவலை இல்லாதவர்களே இவ்வுலகில் இல்லை. ஆனால், இம்மாதிரியான கவலை உண்டா? அன்புக்கும் கடமைக்கும் போராட்டம் நம் மனத்தில் நிகழ்வதுண்டா? உண்மைக் காதல், உண்மைக் கடமை என்ற இரண்டுமே, அருகிய சரக்காகிவிட்ட இற்றை நாளில் இத்தகைய பாடல்கள் ஒரு பெரிய உறுதியையும் உணர்ச்சியையும் நமக்குத் தருகின்றன. இரண்டு யானைகளும் சமபலத்துடன் இழுக்கின்றன என்றமையாற் காதலும் கடமையும் சமபலத்துடன் தலைவனிடம் உள்ளன என்பதையும் கவிஞர் பெற வைத்துவிட்டார்.

*****

தலைவி பிரிந்து சென்றதை நினைத்து வருந்தும் தாயின் மனநிலை பேசும் பாடல் இது:

‘நினைத்தாலும் நெஞ்சு வேகிறது!’

நல்ல கடுவேனில்; உச்சிப்பொழுது இந்த வெயிலின் கொடுமையை நினைத்தாலும் உள்ளம் சுடுகிறது! சாதாரணமாக வெயிலின் நடப்பவர்கட்கே அதன் கொடுமையை அறியமுடியும் என்பர். ஆனால், சில சமயங்களில் வெயிலில் நடப்பவர்கள் எவ்விதக் கவலையும் இல்லாமல் சாவதானமாக நடந்து செல்லுதலைக் காண்கிறோம். ஏன்? அவர்களுடைய கால்கள் இரும்பால் ஆனவையா? அப்பாதங்களில் சூடு தாக்காமல் விட்டு விடுமா? சூரியன் அவ்வாறு ஒருவரைச் சுட்டுப் பிறரைச் சுடாமல் விடுபவன் அல்லனே! எலும்பில்லாத புழுவையும் தனது அதிகாரம் நடைபெறும் இடத்திற்கு வந்து விட்டால் அவன் விடுவதில்லை. துடித்துத் துடித்து இறக்குமாறு செய்கிறான் புழுவை.

அத்தகைய கடு வெயிலில் இரண்டு பேர்கள் செல்லுகிறார்கள். இன்னும் சற்று நெருங்கிச் சென்று பார்க்கலாமா அவர்களை? ஓடித் தப்பித்துக் கொள்ள வேண்டிய வெயிலில் அவர்கள் இருவரும் ஏன் மெள்ள நடக்கிறார்கள் என்பது இப்பொழுது தெரிகிறதா? ஆம்! இதோ பின்னே செல்கிற இப்பெண் வேகமாக நடக்க முடியாதவள். முன்னே செல்லும் இந்த ஆடவன் இவள் பொருட்டே மெல்லச் செல்கிறான். அவனுடைய மிடுக்கையும் உடற்கட்டையும் தோள் வலியையும் பார்த்தால், அவன் மிக வேகமாக நடக்கக்கூடியவன் என்பது தெரிகிறது. ஆனால், ஏன் அடிக்கடி பின் தங்கிவிடுகிறான்? இதோ பின்னே வரும் அப்பெண் கொடியை நோக்கி ஏதோ கூறுகிறான். அவனுடைய முகத்தில் எவ்வளவு அன்பு ததும்புகிறது! வீர்னுடைய உடற்கட்டு அமைந்த அவனுடைய முகத்தில் இவ்வளவு அன்பும் குழைவும் எங்கிருந்து பிறந்தன? ஐயமே இல்லை! இந்தப் பெண்ணிடம் திரும்பிப் பேசுந்தோறும் அவனுடை முகத்தில் அன்பும் அருளும் காட்சி அளிக்கின்றன. இப்படி ஒரு பெண்ணிடம் பேசும் பொழுதெல்லாம் ஒருவனுடைய முகத்தில் அன்பு தோன்றுமாயின், அவன் அவளுடைய காதலன்தான் என்று முடிவு செய்யலாம்.

இந்தப் பெண்ணைப் பார்த்தால், இவளிடம் இளமை தாண்டவமாடுகிறது. இவளுடைய உடல் அமைப்பில், பெரிய குடும்பத்தில் வசதியுடன் வளர்ந்த பொலிவு காணப்படுகிறது. இப்படிப்பட்டவள் இவ்வாறு கடுமையான வெயிலில் நடந்து பழகியிருத்தல் இயலாது. எனவே, இவள் கால்கள் சூடு தாங்காமல் தள்ளாடுகின்றன. இவள் படும் பாட்டைக் கண்ட இவளுடைய காதலன் நின்று நின்று இவளுக்கு ஏதோ அமைதி கூறுகிறான். விளையாட்டாகப் பேசி, இவளை மகிழ்விக்கிறான். இவளுடைய கவலையை மறக்க வைக்க அவன் அரும்பாடு படுகிறான் என்பது நன்றாகத் தெரிகிறது.

இவளும் அவனிடம் பெருங்காதல் கொண்டுள்ளாள் என்பதில் ஐயமில்லை. அன்றேல், இக் கடுவெயிலின் கொடுமையை மறந்து, அவனுடைய சொற்களில் ஈடுபட்டு இவ்வாறு தன்னை மறந்து இவள் சிரிக்க இயலுமா? இத்துணைத் துன்பத்தையும் இவள் மறக்க வேண்டுமாயின் அவனுடைய சொற்களில் இவளுக்குள்ள ஈடுபாடு அளவற்றதாய் இருக்க வேண்டும். ஏன் இவ்வாறு இக்காதலர்கள் இந்த நேரத்தில் செல்ல வேண்டும்? அது ஒரு கதை.

இத் தலைவனுக்கும் தலைவிக்கும் நெடுநாட்களாகவே பழக்கம் உண்டு. முதன்முதலில் இவர்கள் இருவரும் எங்கு எவ்வாறு சந்தித்தார்கள் என்பது நமக்குத் தெரியாது. இவன், இவள், இவளுடைய உயிர்தோழி ஆகிய மூவருக்கு மட்டுமே அது தெரியும். ஆனால், இத் தலைவியினுடைய சுற்றத்தார் இவர்களிடையே திருமணம் நடைபெறவிட மாட்டார்கள் என்பதைத் தோழி அறிந்து கொண்டாள். வேறு வழியாது? மற்றொருவனுக்கு இப்பெண்ணை மணம் முடிக்க ஏற்பாடுகளும் செய்துவிட்டனர் இவர்களுடைய சுற்றத்தார். நிலைமை மிகவும் மோசமாகி விடும் போலத் தோன்றலாயிற்று. தோழி பார்த்தாள்; தலைவி வேறு ஓர் ஆடவனை மணத்தல் என்பது இயலாத காரியம். அத்தகைய நிலைமை ஏற்பட்டால் இவள் இறந்துபடுவாளே தவிர அப்புதியவனை மணக்க இசையமாட்டாள். என்றாலும் தலைவியின் சுற்றத்தார்களும் தலைவியின் நிலையைப் புரிந்து கொள்ளவே மறுக்கிறார்கள்.

இந்நிலையில் தோழிக்கு இரண்டே வழிகள் தெரிகின்றன. ஒன்று தலைவியின் விதிப்படி ஆகட்டும் என்று விட்டுவிடுவது. இரண்டாவது, பலரும் தன்மேல் ஐயங்கொண்டு பகைமை பாராட்டுவார்கள் என்று அறிந்து இருந்தும் அதுபற்றிக் கவலையடையாமல், தலைவிக்கு அவள் விரும்பியவனை அடையுமாறு உதவுவது. எந்தத் தோழியும் தலைவியை முதல் வழியில் விடமாட்டாள். அவள் இறந்துபட நேர்ந்தால், இதைவிடக் கொடுமை வேறு யாது? எனவே இரண்டாவது வழிதான் சிறந்தது என்ற முடிவுக்கு வந்துவிட்டாள் தோழி. தன்னுடைய சுற்றத்தார் நிறைந்துள்ள இந்த ஊரில் தலைவி விரும்பியவனை மணந்துகொள்ளுதல் என்பது இயலாத காரியம். எனவே, தலைவனுடன் தலைவி ஓடிவிட வேண்டும். இவ்வாறு தலைவனுடன் தலைவி ஓடுவதை ‘உடன் போக்கு’ என்று இலக்கியம் கூறும். மேனாட்டார் இதனை இதே பொருளில் ‘Elopement’ என்று வழங்குவதும் அறிதற்குரியது.

தோழியின் உதவியால் தலைவி தலைவனுடன் ஒரு நாள் விடியற்காலையில் தன் ஊரையும், தாய் தந்தையரையும், சுற்றத்தாரையும் விட்டுவிட்டு ஓடிவிட்டாள். முதல் நாள் மாலைப்பொழுது வரை அந்த வீட்டில் வாழ்பவர்கட்கு இதுபற்றி ஒரு குறிப்பும் தெரியவில்லை. இப்பெண்ணின் தாய்க்கு இவள் ஒரே பெண். வேறு ஆண் மக்கள் இருக்கலாம். எனினும் சீராட்டித் தன் மகள் என்று கூறி ஆடம்பரமாகத் திருமணம் செய்து வைக்க வேறு பெண்ணும் இல்லை! என் செய்வாள் அத்தாய்.

மறுநாள் பொழுது விடிந்ததும் மகளைத் தேடினாள். யாண்டும் காணவில்லை. தோழியை விசாரித்தாள், தனக்கு யாதொன்றும் தெரியாது என்று தோழி கூறிவிட்டாள். தோழிதான் தலைவியின் உடன்போக்குக்கு உதவி செய்தாள். எனினும், அவளே இப்பொழுது ஒன்றும் தெரியாதவள் போலத் தலைவியைக் காணவில்லையே என்று அழத் தொடங்கிவிட்டாள்! போதாக்குறைக்கு ஊரில் உள்ள பெண்டிர் அனைவரும் வந்து கூடிவிட்டனர்.

ஒவ்வொருவரும் தத்தம் கவலையை ஓரளவு தெரிவித்துக் கொண்டனர். சிலர் அத்தாயைத் தேற்ற முற்பட்டு விட்டனர்; இது ஓர் இளம் பெண்ணின் வாழ்க்கையில் இயல்புதான் என்பதை எடுத்துக்காட்டினர்; அறவழியும் இதுதான் என்றும் எடுத்துக் கூறினர். எவ்வளவு சிறப்புடன் பெற்று வளர்த்தாலும், பெண்ணைப் பெற்றுவிட்டால் ஒருவனிடம் ஒப்படைக்கத்தானே வேண்டும்? இவ்வாறு அவர்கள் பலபடியாக எடுத்துக்கூறியும் தாய்க்குக் கவலை நீங்கவில்லை. சிலர் காரண காரியத்துடன் உவமைகள் கூறியும் அவள் கவலையைப் போக்க முயன்றனர். ஒருத்தி கூறினாள் பின் வருமாறு:

“அம்மா, நல்ல மணம் வீசுகிற சந்தனம் மரமாக மலையிலேதான் பிறக்கிறது என்றாலும், தான் பிறந்த மலையில் இருக்கும் வரை மலைக்கு அது பயன்படுவதில்லை. அங்கிருந்து பிரிந்து சென்று யாருடைய வீட்டிலோ சேர்ந்து விட்டால், அங்கு மணம் வீசுகிறது. ஆராய்ந்து பாருங்கன். உம்முடைய மகளும் அத்தகையவள் தானே?” என்றாள்.

‘பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதாம்என்செய்யும்?
நினையுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே;’

(பாலைக்கலி–8)

மற்றொருத்தி வேறு ஓர் உதாரணம் தந்தாள்; “நீவிர் அணிந்திருக்கிற முத்துக்கள் கடலிலேதானே பிறந்தன? ஆனால், அவை கடலுக்கு ஒரு சிறிதும் பயன்படாமல் உம்மை அலங்கரிக்க வந்துவிட்டன. ஆய்ந்து பார்த்தால், உம் மகளும் அவ்வாறுதானே?” என்றாள்.

‘சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்செய்யும்?
தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!’

(பாலைக்கலி–9)

என்று கூறி, அத்தாயின் துயரத்தைத் தணிக்க முற்பட்டனள். இவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு அவளுடைய துயரைத் தணிக்க அமைதி கூறினார்களோ, அவ்வளவுக்கவ்வளவு அவளுடைய துயரம் எல்லை கடந்து விட்டது.

தாய் தனக்கு அமைதி கூறினவர் அனைவரையும் ஒரு முறை பார்த்தாள். இன்னும் அவளுடைய வருத்தம் அதிகமாயிற்று. மேலும், அவர்கள்மேல் அது கோபமாகவும் மாறியது. ஏன் தெரியுமா? அவளுக்கு அமைதி கூறவந்த அவர்கள் அவளைப் போலவா இருக்கிறார்கள்? அவருள் ஒவ்வொருவருக்கும் இரண்டு மூன்று பெண்கள் உண்டு. ஒருத்தி இவ்வாறு தலைவனுடன் ஓடிவிட்டாலும் மற்றப் பெண்கட்கு அவர்கள் மணம் செய்து வைத்து மகிழலாம். ஆனால் தன் நிலையை அவர்களுள் யாரும் ஆராய்ந்து பார்த்ததாகவே அவளுக்குத் தெரியவில்லை. அவளுக்கு இருந்தவள் ஒரே மகள் அல்லவோ? அந்த ஒருத்தியும் இன்று இல்லாமல் சென்றுவிட்டாளே;

அத்தாயும் அறியாதவள் அல்லள். ஒருவாறு தன் துயரத்தை மறந்துவிட்டு இருக்கவே முயல்கிறாள். ஆனாலும், என்ன கொடுமை! வீட்டைச் சுற்றி நொச்சிச் செடி வளர்ந்துள்ளது; நீலமணி போலப் பூக்களைப் பூத்துக் குலுங்கி நிற்கிறது. அதைப் பார்க்குத் தோறும் மகள் நினைவு வருகிறது, அச்செடியின் அடியில் அருமை மகள் விளையாடி வளர்ந்ததை அவள் எவ்வாறு மறக்க இயலும்! அவள் அமர்ந்து விளையாடிய திண்ணையை நினைக்க நினைக்கத் தாய்க்குப் பெற்ற மனம் வெடித்துவிடும் போல ஆகிவிடுகிறது.

இது ஒரு மனத்தத்துவம். அண்மையில் அன்புடையவர்களை இழந்து விட்டவர்கட்கே இது தெரியும். இறந்தவர்களுடைய பொருளைக் காணும் போதெல்லாம் துயரம் புதியவேகத்துடன் வெளிவரும். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இதனை அழகாக மகனை இழந்த தாய் என்ற பாடலில் பாடுகிறார். இறந்த மகனைப் புத்தர் பிரான் எதிரே போட்டு அத்தாய் அழுவது இம்மன நிலையை நன்கு விளக்குகின்றது. அக்குழந்தை விளையாடிய பொருள்களைக் காணும் பொழுதெல்லாம் தன்துயரம் புதிய உருவெடுத்தலை இதோ அத்தாய் கூறுகிறாள்;

‘சித்திரத் தேரும் சிறுபறையும் கூடிஎனைப்
பித்தியிலும் பித்தி பெரும்பித்தி ஆக்குதையா!’

(கவிமணி)

இதே போன்ற கருத்தைத்தான் நற்றிணைப் பாட்டில் வரும் அத்தாயும் கூறுகிறாள்.

“அறிவுள்ள அயல் வீட்டவர்களே! உங்களைப் போல நான் பல புதல்வியரைப் பெறவில்லை. ஒரே பெண்ணைப் பெற்றேன். அவளும், போரில் மிக்க வலிமை காட்டும் கூரிய வேலாயுதத்தையுமுடைய காளை ஒருவனோடு கடும் பாலைவனத்தின் வழியே சென்றுவிட்டாள். அவளே சென்றுவிட்டமையின் யான் அவள்மேல் கொண்டிருந்த ஆசையை மறக்கிறேன். எனினும், அவளுடன் பழகியதை மறக்க முடியவில்லை. ஆனால், நீங்கள் கவலையை மறக்குமாறு சொல்கிறீர்கள். அந்த ஒரே மகளை எவ்வாறு மறப்பது? கண்ணுள் வாழும் பாவை வெளியே வந்து நடை பயில்வது போன்ற என் மகள், நீலமணி போன்ற பூக்கள் பூக்கும் நொச்சிச் செடியின் அருகில் விளையாடியதையும் அவள் விளையாடிய திண்ணையையும் எவ்வாறு என்னால் மறக்க முடியும்? நினைத்தாலும் நெஞ்சு வேகிறது!”

ஒருமகள் உடையேன் மன்னே அவளும்
செருமிகு மொய்ம்பின் கூர்வேல் காளையொடு
பெருமலை அருஞ்சுரம் நெருநல் சென்றனள்;
இனியே,

தாங்குநின் அவலம் என்றிர்; அதுமற்று
யாங்ஙனன் ஒல்லுமோ அறிவுடை யீரே!
உள்ளின் உள்ளம் வேமே; உண்கண்
மணிவாழ் பாவை நடைகற்று அன்னஎன்
அணிஇயல் குறுமகள் ஆடிய
மணியேர் நொச்சியும் கண்டே

(நற்றிணை–184)

(செரு–போர்; மொய்ம்பு–வலிமை; நெருநல்–நேற்று, ஒல்லுமோ–முடியுமோ உண்கண் மணி வாழ்பாவை–கண்ணினுள் வாழும் பாவை; தெற்றி–திண்ணை)

“மகள் சென்ற பாலையை நினைத்து வீட்டில் நிழல் தரும்நொச்சியையும் திண்ணையையும் பார்த்தால் வருத்தத்தால் நெஞ்சு வெடிக்கிறதே!” என்றாள் அப்பெற்ற தாய்.

‘குடி வறன் உற்ற கொழுநன்’ தலைவியின் தனிக் குடித்தனத்தில், அவள் உறுதியைப் பற்றிப் பேசும் பாடலைப் பார்ப்போம்;

ஒரு பெரிய மாளிகை விண்ணைத் தொட்டு நிற்கிறது. அது மிகப் பெருஞ் செல்வருடைய வீடென்பது கண்ட மாத்திரத்தில் யாரும் அறிந்துகொள்ளுதல் கூடும். வீட்டின் வெளி முற்றத்தில் பெரியதொரு தென்னங்கீற்றுப் பந்தல் போடப்பட்டிருக்கிறது. வீட்டின் சொந்தக்காரர் பொருட் செல்வம் பெற்றுள்ள அளவுக்கு மக்கட்செல்வம் பெறவில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது. அல்லாவிடில், இதோ வீட்டு வாயிலை விட்டு வெளியே வரும் இந்த ஒரு பெண் குழந்தையைப் பாருங்கள். எவ்வளவு சிறந்த ஆடைகள், கண்டீர்களா? இவ்வளவு சிறிய குழந்தைக்கு இப்படி வைரத்தால் இழைத்து நகைகள் போட்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா? என்ன நினைக்கிறீர்கள்? இந்தக் குழந்தையைப் பார்த்து முன் ஒரு காலத்தில் ஒரு கவிஞன் ‘நல்கூர்ந்தார் செல்வமகள்’ என்று கூறிப்போனான். அதன் பொருள் விளங்குகிறதா? ‘நல்கூர்ந்தார்’ என்பதற்கு வறுமையுடையவர் என்பது பொருள். வறுமையுடையவர்கட்கு எவ்வாறு செல்வ மகள் இருக்க முடியும் என்று கேட்கிறீர்களா? ஆம் நியாயமான கேள்விதான். ஆனால், ‘வறுமை’ எதில் ஏற்பட்டது என்று அறியவில்லையே! செல்வம் நிறைய உடையவர்கள். ஆனால், மக்கட்செல்வத்தில் வறுமையுடையவர்கள் என்பதே பொருள். ‘ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு’ என்று கூறுவார்களே! அது போல ஒரே ஒரு குழந்தையை அருமையாகப் பெற்று உள்ளார்கள். இங்கே நாம் காணும் அம்மை இக்குழந்தையைப் பெற்ற தாயல்லள். ஆனால், தாயின் இடத்தில் இருந்து வளர்க்கும் செவிலித் தாய் ஆவாள். ஆம் ‘நற்றாய்’ என்று கூறப்படும், பெற்ற தாய்க்கு அடுத்தபடி இருப்பவள், ‘செவிலித் தாய்’ என்று கூறப்படும் இந்த வளர்க்கும் தாய்தானே? ஆதலாலேதான் இவ்வளவு உரிமையுடன் குழந்தையை அச்சுறுத்தும் நோக்கத்துடன் கையில் கோலை எடுத்துக்கொண்டு ஓடி வருகிறாள். இந்த மூதாட்டியை அடுத்து நிற்கும் அந்தப் பெண்ணின் கையில் இருக்கும் பொற்கிண்ணத்தைப் பார்த்தீர்களா? அதில் வெண்மையான பாலும் சோறும் இருக்கின்றன. பாற் சோற்றுக்கு உள்ள இனிப்பும் போதாது என்பதற்கு இச் சோற்றுடன் என்ன கலந்துள்ளார்கள் என்பது தெரியுமா? நாம் இக்காலத்தில் சத்தற்ற வெள்ளைச் சர்க்கரையை அல்லவா பயன்படுத்துகிறோம்? ஆனால், அந்நாளைத் தமிழர் பாலுக்கு இனிப்பூட்டத் தேனை உடன் கலந்தனர். எனவே, இக்குழந்தையின் பால் சோற்றுடன் தேனைக் கலந்திருக்கிறார்கள். தேன் கலந்த பால் சோற்றைத் தங்கக் கிண்ணத்தில் ஏந்திக்கொண்டு பின்னர் இருக்கும் பணிப்பெண் ஏன் இங்கே வந்து நிற்கிறாள்? முதலில் ஓடி வந்த இந்தப் பெண் குழந்தைக்குச் சோறு ஊட்டவே இத்தனை பேர்களும் வந்துள்ளார்கள். இந்தக் குழந்தை, உணவை பாலும் தேனும் கலந்த அந்த இனிய சோற்றை உண்ண மறுக்கிறது. அம்மட்டோ வெளியில் உள்ள பந்தலைச் சுற்றிச் சுற்றியும் ஓடுகிறது. வயது முதிர்ந்த நரை தோன்றிய பணிப்பெண்கள் இக் குழந்தையைப் பிடிக்க வேண்டி, தம் வயதை மறந்து குழந்தையின் பின்னர் ஓடுவது அதனை விட வியப்பாய் இருக்கிறது! ஆனால், குழந்தை அவர்களின் கையில் சிக்காமல் இங்கும் அங்கும் ஓடுகிறது. இடை இடையே அப்பணிப்பெண்கள் தம் ஓட்டத்தை நிறுத்திக்கொண்டு குழந்தையை வேண்டுகிறார்கள்.

இது ஒரு காட்சி. வாழ்க்கைச் சித்திரத்தின் ஒரு பகுதி இது. இதோ! இனி மற்றொரு பகுதி தொடங்குகிறது. இங்கு நாம் காணும் பெண் நல்ல இளம்பருவம் உடைய நங்கை, இவளுடைய இயற்கை வனப்பைத் தவிர வேறு அழகு செய்யும் ஆடை அணிகளுள் ஒன்றும் இல்லை. உடையிலும், வீட்டுச் சூழ்நிலையிலும் எவ்வளவுதான் வறுமை தெரிந்தாலும், இவளுடைய முகத்தில் காணப்படுகிறது. ஒப்பற்ற பொலிவு. வறுமை என்பது உடலைப் பிடிக்கும் பொழுது அதுதான் தோல்வியடைகிறது. அவ் வறுமையால் பீடிக்கப் பெற்றவன் பணிய மறுத்து விடுகிறான். எனவே, அவனுடைய உடை, உணவு, உறையுள் என்று கூறப்பெறும் இம்மூன்றும் கெட்டுவிடுகின்றன. ஆனால், அவனுடைய முகத்தைப் பார்த்து யாரும் வறுமையுடையவன் என்று கூறிவிட முடியாது. இது கருதியே தான், ‘செல்வம் என்பது சிந்தையின் நிறைவு. அல்கா நல்குரவு அவாஎனப் படுமே,’ என்று கூறினார் குமரகுருபர அடிகளார்.

இப்பொழுது நாம் காணும் இப்பெண்மணியின் புறத்தோற்றமும் சூழ்நிலையும் இவளுடைய வாழ்க்கை செல்வப் பாதையில் செல்லவில்லை என்பதையும், வறுமையில் நடைபெறுகிறது என்பதையும் நன்கு அறிவுறுத்துகின்றன. என்றாலும் என்ன? இவளுடைய முகத் தோற்றத்திலேதான் எவ்வளவு பொலிவு காணப்படுகிறது!

இதோ இவளுடைய வீட்டினுள் சென்று காண்போம். எவ்வளவு சிறிய வீடு! ஆனால், எவ்வளவு தூய்மையாய் வைக்கப்பெற்றிருக்கிறது! அவ்வளவு பெரிய மாளிகையில் வாழ்ந்த இப்பெண், எவ்வாறு இவ்வாறு சிறிய வீட்டில் வாழக் கற்றுக் கொண்டாள்; தொட்டதற்கெல்லாம் பணிப்பெண்களை ஏவி வேலையை முடித்துக்கொள்ளும் பழக்கமுடைய இப்பெண், இப்பொழுது ஒரு பணிப்பெண்கூட இல்லாமல் எவ்வாறு வாழ்க்கை நடத்துகிறாள். தனக்குச் சோறு ஊட்ட வேண்டும் என்று பிறரை எதிர்பார்த்து வளர்ந்த இப்பெண், இப்பொழுது எவ்வாறு தன் குடும்பத்தைக் கவனித்துக் கொள்கிறாள்? இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க இவள் இப்பொழுதுதானே உணவு சமைக்கவும் தலைப்பட்டு விட்டாள். தங்கக் கிண்ணத்தில் தேனொடு கலந்த பாற்சோற்றைப் பிறர் வருந்தி வருந்தி ஊட்ட முயன்றது அக்காலம். ஊட்ட ஊட்ட உண்ண மறுத்ததும் அந்தக் காலம். இன்று எத்தகைய மாறுதல்? தங்கக்கிண்ணம் என்று கூறுவதற்குக்கூட, ஒன்றும் இல்லை. வீட்டில் பழகும் சாமான்கள் அனைத்தும் நிலத்தாயின் அருளால் கிடைத்தவை தாம்! அனைத்தும் மண் பாண்டங்கள். அவற்றில் பாலும் இல்லை, தேனும் இல்லை; பழஞ் சோறுதான் இருக்கிறது. என்றாலும், அச்சோற்றை விருப்பமுடன் உண்கிறாள்! தான் மட்டும் உண்ணவில்லை! தன் கணவனுக்கும் விருப்புடன் அதனைப் படைக்கிறாள்.

இதோ! இந்த ஆண் மகன்தான் இவளுடைய காதற் கணவன் போலும்! இவனுடைய முறுக்கேறிய உடல் இவனுடைய வன்மையையும் பலத்தையும் காட்டுகிறது. ஆனால், அணிந்திருக்கும் உடை முதலியன, இவனுடைய குடும்பம் செல்வத்தில் வாழவில்லை என்பதை அறிவுறுத்துகின்றன. இருந்தாலும், வறுமையில் செம்மை உடையவனாகவே காணப்படுகிறான். இவனுக்குச் செய்யவேண்டிய கடமைகளைத் தவறாமல் செய்கிறாள் இப்பெண். வெறுங் கடமை உணர்ச்சியால் உந்தப்பட்டு, இயந்திரம்போல மட்டும் இவள் செய்யவில்லை; முழு அன்புடன் கடமையைச் செய்கிறாள். இவளுடைய ஒவ்வொரு செயலிலும் மனத்தின் ஆழத்தில் படிந்திருக்கும் காதல் உணர்ச்சி குமிழியிட்டு வெளி வருகிறது.

இவ்வளவு அருமைப்பாட்டுடன் நடைபெறும் குடும்பத்தைக் காண இவள் தந்தையார் ஒரு முறை வந்திருந்தார்; மகளின் வாழ்க்கை முறையைக் கவனித்தார். பெற்று வளர்த்த அவருடைய மனம் அனுதாபத்தால் கரைந்து விட்டது. மகளுடைய இந்த வறுமையைப் போக்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டார். மிகவும் பக்குவமாக இவளை அணுகி, தாம் உதவி செய்வதாகக் கூறினார். அதுவும் உதவி என்ற பெயரால் அன்று. இவளுடைய பழைய வாழ்வை நினைத்துப் பார்த்த அவர், அதை இவளுக்கு நினைவூட்டினால் ஒரு வேளை அச்செல்வ வாழ்வை மீட்டும் விரும்புவாளோ என்று ஐயுற்றார்; எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்; தம் இடத்தில் பொருளுதவி பெறுதல் தவறன்று என்று பல வகையாகவும் எடுத்துக்காட்டினார். ஆனால், இவள் அவருடைய சொல்லை மறுத்துவிட்டாள்; எந்த விதமான உதவியும் பெற மறுத்துவிட்டாள். எத்துணைத் துன்பமுற்றாலும் தன் தந்தையாரிடமிருந்து உதவி பெற இவள் விரும்பவில்லை; தன் கணவனுடைய பெருமைக்கு அவ்வாறு உதவி பெறுதல் இழுக்கு என்னும் முடிவுக்கு வந்தாள். கணவனும் உதவி பெறுதலை விரும்ப மாட்டான் என்பது இவளுக்கு நன்கு தெரியும்!

மாமனாருடைய செல்வத்தில் பங்குபெற்று வாழ்தல் மிகவும் மானக்கேடானது என்பது அவனுடைய கொள்கை. அன்றைய நாளில் தமிழன் இவ்வாறுதான் கருதினான். எத்துணை வறுமையில் ஆழ்ந்துவிட்டாலும், தானாகச் சம்பாதியாமல் பிறர் பொருளை வைத்து வாழ்வது மானக்கேடானது என்பது தமிழனுடைய உறுதியான கொள்கை. இவற்றையெல்லாம் மனத்துட்கொண்டு இப்பெண் தன் தந்தையார் தருவதாகக் கூறிய செல்வத்தை ஏற்க மறுத்துவிட்டாள்.

இப்பெண்ணின் இல்வாழ்க்கையை ஒருநாள் வளர்த்து வந்த செவிலித்தாய் சென்று கண்டாள். மகளின் இக் கால வாழ்க்கை அவளுடைய கண்ணில் நீரை வரவழைத்து விட்டது. இவளுடைய பழைய வாழ்க்கையையும் பால் சோறு உண்ண மறுத்த குறும்புத்தனத்தையும் மீட்டும் நினைந்து பார்த்தாள். கண்ணீர் ஆறாய்ப் பெருகியது. ஆனால், மகள் வறுமையில் செம்மையாக வாழ்க்கை நடத்துவதைப் பார்த்ததும், பெருமித உணர்ச்சி மேலிட்டு விடுகிறது. மீண்டும் தன் வீட்டிற்கு வந்தாள் செவிலித்தாய், இவற்றை யெல்லாம் நினைத்து ஒரு கவிதையாகப் பாடினாள். ஆனால் கவிதையைப்பாடியது போதனார் என்ற ஆண் மகனார். இதோ கவிதையைப் பாருங்கள்:

‘பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப்
புடைப்பில் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
உண்என்று ஒக்குபு புடைப்பத் தெண்ணிர்
முத்துஅரிப் பொன்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று
அரிநரைக் கூந்தல் செம்முது செவிலியர்
பரீஇமெலிந்து ஒழியப் பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டுஉணர்ந் தனள்கொல்!
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றுஎனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
ஒழுகுநீர் நுணங்குஅறல் போலப்
பொழுதுமறுத்து உண்ணும் சிறுமது கையளே.’

(நற்றிணை–110)

(பிரசம்–தேன்; புடைப்பில் சுற்றும்–குஞ்சம் கட்டிய; முத்து அரிப்பொன் சிலம்பு–முத்தை உள் ஈடாக உடைய பொன் சிலம்பு; அரிநரை–மெல்லிய நரைத்த; பரீஇ மெலிந்து ஒழியப்–பின் தொடர்ந்து ஓடிப் பற்ற முடியாமல் விட்டுவிட குடிவறன் உற்றென–கணவன் வீடு வறுமையுற்றதாக; கொடுத்த தந்தை–பெற்று வளர்த்த தந்தை; கொழுஞ்சோறு–செல்வ உணவு; ஒழுகு நீர்–ஓடும் தண்ணீர்; நுணங்கு அறல்–இடை இடையே கிடக்கும் மணல் திட்டுப்போல ஒரு முறை உணவு உண்டும் ஒரு முறை பட்டினி கிடந்தும் வாழும் வாழ்வு; பொழுது மறுத்து உண்ணும்–ஒரு பொழுது உணவு உண்டு மறு பொழுது உணவின்றி இருக்கும்; சிறு மதுகையளே–சிறிய வண்மையை உடையவள்)

பழந்தமிழ்ப் பெண்மணிகள் வாழ்வில் ஓர் ஒப்பற்ற ஏடாகும் இப்பாடல். கவிதையைப் பன்முறை படித்துச் சுவைப்பதுடன் வாழ்விலும் நம் சோதரிகள் இம்மாதிரி வாழ முற்பட்டால் நாடு எத்துணைச் சிறப்படையும்.

முல்லைத் திணை

முல்லைத் திணை காடும் காடு சார்ந்த இடமும் நிலைக்களனாக உடையது.

தலைவன் கார் காலம் வந்தவுடன் மீண்டுவிடுவதாகக் கூறிவிட்டுப் போனான். அக்காலம் வந்தும் அவன் வரவில்லை. அவன் சொற்களில் நம்பிக்கையுடன் தலைவி பிரிவுத் துயரைப் பொறுத்துக்கொண்டு வாழ்கிறாள். தலைவன் வருகிறான் காட்டு வழியே. இவையே இத்திணையில் இடம் பெறுபவை.

கற்பின் குறுமகள்

முல்லைத் திணையின் சிறப்பு யாதெனில், தலைவி தான் படும் துயரத்தைப் பிறர் அறியாமல் மறைத்து வாழ்தலேயாம். எத்தணைத்தூரம் தலைவன் பிரிவுக்கு வருந்துவதாயினும், வீட்டில் உள்ள கடமைகளைத் துறத்தல் இயலாத காரியம். எனவே, கடமைக்கும் மனத்தில் தோன்றும் பிரிவுத் துயரத்திற்கும் ஏற்படும் போராட்டத்தில் தலைவியின் வெற்றியைக் காட்டுவதே முல்லைத் திணை. கடலத்தனைத் துயரம் ஏற்பட்டாலும் தமிழ்ப் பெண்கள் தம் துயரத்தைப் பெரிதாகப் பறை சாற்றிக் கொண்டு கடமையை மறந்து காற்றில் விடுவதில்லை. இந்த அரிய பண்பாட்டை எடுத்துக் கூறுவதாலேதான் முல்லைத் திணை பற்றிய பழந்தமிழ்ப் பாடல்கள் சிறப்புடன் விளங்கக் காண்கிறோம்.

தலைவியும் இளமையுடையவள்; தலைவனும் அப்படியே. ஆனால், கடமையைப் பெரிதென மதித்து அவன் பிரிந்து போய் விட்டான். தலைவியும் தன் துயரத்தை ஓரளவு மறந்து கடமைகளில் ஈடுபட முனைகிறாள். ஆனால், இவ்வுலகியற்கை எத்துணை விந்தையானது! கடமை மேற்செல்கிறவர்களைத் தடுக்க எத்தனை சூழ்ச்சிகள் நடைபெறுகின்றன வாழ்வில்! எந்தக் கடமையை நிறைவேற்ற யார் முற்பட்டாலும், தடைகட்குப் பஞ்சமே இராது. தலைவி மட்டும் இவ்விதிக்கு விலக்கானவளா? இளமையை மறந்து, தலைவனையும் கடமையில் கருத்தூன்றி நிற்கச் செய்யும் அவள் உறுதியைக் கலைக்க யார் யார், முற்படுகிறார்கள் தெரியுமா? முதலில் கார் காலக் கருமேகங்கள் திரண்டெழுந்து வருகின்றன. அம்மேகங்களைக் கண்ட மயில்கள் தம் தோகையை விரித்து ஆடத் தொடங்குகின்றன. ஆடும் மயிலின் அற்புதக் காட்சி தலைவிக்கு மனக் கிளர்ச்சியை உண்டாக்குகிறது, மயிலின் ஆட்டம் மனத்திற்கு அமைதி தரவில்லையே என வருந்திய தலைவி, வேறுபுறம் திரும்பினால், பகலில் மேயச் சென்ற மாடுகளும், உணவு தேடச் சென்ற புள்ளினங்களும் தம் துணையுடன் குலாவிக்கொண்டு இருப்பிடத்தை நாடி மீள்கின்றன. இவற்றைப் பார்த்தால் துன்பம் மிகும் என்று தலைவி வீட்டினுள் வந்தாலும் துன்பம் தொடர்கின்றது.

அஃறிணைப் பொருள்களாகிய விலங்குகள் மட்டுமா தலைவிக்கு வருத்தம் உண்டாக்க முற்பட்டன? உயர் திணையாகிய மனிதன் என்ன வாழ்கிறான்! அவனும் பிறருக்குத் துன்பம் தருகிறோமே என்ற எண்ணம் இல்லாமலேதான் தொழில் செய்கிறான். மாடுகளை ஒட்டிச் செல்லும் அவ்விடையன் சும்மா போகக் கூடாதா? போகவில்லை; வேய்ங்குழலை வைத்து ஓயாமல் ஊதிக்கொண்டே செல்லுகிறான். அந்தப் பாவிக்கு வாய் தான் வலியாதா? ஏன் இப்படி ஊதி ஊதித் தலைவியின் உயிரை வாங்குகிறானோ, தெரியவில்லை! அவன் கண்டானா தலைவிக்கு இது வருத்தத்தை உண்டாக்கும் என்று? அவன் மகிழ்ச்சியாகத்தான் ஊதிக்கொண்டே செல்லுகிறான். அந்த இடையனுடன் உறவு கொண்டதா இந்தக் குயிலும்? ஏன் இதுவும் இப்பொழுது கூவத் தொடங்கிவிட்டது? செவ்வானத்தையும் தென்றலையும் கண்டவுடன் குயிலுக்குக் ‘குஷி’ பிறந்துவிட்டது. ஆனால், குயிலுக்குப் பிறந்த குவியில் அதுபாட ஆரம்பிக்கத் தலைவிக்கு இது தலைவேதனையாக அன்றோ ஆய்விட்டது! தலைவனை மறக்க முயன்ற தலைவிக்கு எத்தனை பகைகள் திரண்டெழுந்து விட்டன! மாலைக் காலம், சிவந்த அந்த வானம், குயில், துணையுடன் வரும் மாடுகளும் பறவைகளும், இடையன், தென்றல், மயில், பிறைச்சந்திரன்-இவை அனைத்தும் கார் காலத்தில் உள்ளவை. இவற்றை அடிப்படையிற் கொண்டு, இலக்கண ஆசிரியன் ‘காரும் மாலையும் முல்லை’ (தொல், அகத்திணை, 6) என்று கூறிப் போனான்.

இந்த நிலைக்களத்தை வைத்துக்கொண்டு ஒரு தலைவி படும் பாட்டை இதோ பிற்காலப் புலவன் ஒருவன் சித்திரிக்கிறான்.


தண்ணமுது உடன்பிறந்தாய் வெண்ணிலாவே!
      தண்ணளியை ஏன்மறந்தாய் வெண்ணிலாவே!
பெண்ணுடன் பிறந்ததுஉண்டே வெண்ணிலாவே! என்றன்
      பெண்மைகண்டும் காயலாமோ வெண்ணிலாவே!

திக்கெலாம் தென்றல் புலிவந்து பாயுதேமன்மதா-குயில்
சின்னம் பிடித்தபின் அன்னம் பிடியாதே!

(குற்றாலக் குறவஞ்சி, 24,25)

இத்துணைத் துயரத்துடன் இருப்பினும், தலைவி தன் கடமையிலிருந்து தவறினதில்லை. அவளைத் தலைவன் நன்கு அறிவான். எனவே, பிரிந்து சென்று மீளும்பொழுது ஓயாமல் தலைவியைப் பற்றியே நினைந்துகொண்டு வருகின்றான்; மீண்டு வரும் பொழுது குதிரைகள் பூட்டிய தேரில் வருகின்றான். தேரோட்டுபவனும் தலைவனுடைய மன நிலையை நன்கு அறிந்து, மிகவும் வேகமாகத்தான் தேரைச் செலுத்துகிறான். என்றாலும் என்ன! தலைவனுடைய மனம் செல்லுகின்ற வேகத்துடன் ஒப்பிட்டால், வேகமாகச் செல்கின்ற குதிரைகள்கூட ஓடாமல் மெள்ளச் செல்வது போலக் காட்சியளிக்கின்றன. அவனுக்கு. எனவே, பாகனை நோக்கிப் பேசுகிறான் தலைவன்; “நம்முடன் வருகின்ற வீரர் விரைந்து வருதலாலே மிகவும் வருந்தியுள்ளனர். அவர்கள் இடையிற் கட்டிய கச்சையை அவிழ்த்து விட்டுக் கொண்டு மெள்ள இடை இடையே தங்கி வருவார்களாக. இதுவரை பயன்படுத்தாமல் வைத்திருந்த தாற்று முள்ளாலே குதிரையைக் குத்தியாயினும் விரைவில் செலுத்துக!” என்கிறான் சென்ற வினை முடித்து மீளும் தலைவன்.

‘விரைப்பரி வருந்திய வீங்குசெலல் இளையர்
அரைச்செறி கச்சை யாப்பழித்து அசைஇ
வேண்டமர் நடையர் மென்மெல வருக
தீண்டா வைமுள் திண்டி நாம்செலற்கு
ஏமதி வலவ! தேரே’

(நற்றிணை–21)

(விரைப்பரி–விரைந்து செல்லல்; வீங்கு செலல்–மிக்க செலவினையுடைய; இளையர்–வீரர்; அரைச்செறி கச்சை–இடுப்பிற் கட்டிய கச்சு; யாப்பு–கட்டு, வைமுள்–கூர்மையான தாற்றுக் கோல்; ஏமதி–செலுத்துக)

தலைவியை நினைத்துக்கொண்டு தேரை விரைவாகச் செலுத்தக் கட்டளை இடுகின்ற காலத்திலும் தலைவன் தன் உயர்ந்த பண்பாட்டிலிருந்து நீங்கவில்லை. திடீரென்று தலைவனுடைய தேர் வேகமாகப் போகத் தொடங்கினால் உடன் வருகின்ற வீரர்கள் ஓடும்படி நேரிடுமன்றோ? அவர்கள் அவ்வாறு ஓடிப் பின் தொடர வேண்டிய இன்றியமையாமை போர்க்காலத்தில் உண்டு. ஆனால், வேலை முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் அவர்களை ஓடவைப்பது முறையன்று. எனவே, தலைவன் அவர்கள் வேண்டுமளவு தங்கி இளைப்பாறிவிட்டுப் பின்னர் வரட்டும் என்கிறான்.

பழந்தமிழனுடைய பண்பாட்டைப் பார்க்க இது ஒரு தக்க வாய்ப்பாகும். சாதாரண நேரங்களில் மிக்க பண்பாட்டுடன் நடந்துகொள்பவர்கள்கூட, மனத்தில் ஒரு கவலை புகுந்துகொண்டால், பண்பாட்டை இழந்துவிடுவர். வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடின்றி நடந்து கொள்வர். இங்குத் தலைவனுடைய நினைவெல்லாம் தலைவியிடம் சென்றுவிட்டது. அவன் தேரை விரைவாகச் செலுத்தவேண்டும் என்று கட்டளை இடுகிறான். ஆனால், அந்நிலையிலும் அத்தலைவன் உடன்வருபவர்களை மறந்து விடவில்லை. அவர்கள் வேண்டுமானால் சிறிது நேரம் தங்கி இளைப்பாறிவிட்டு வரலாம் என்று கட்டளை இடுவானே யாகில், அவனுடைய பரந்த பண்பாட்டை அறிய வேறு சான்றும் வேண்டுமா?

தங்கள் காரியம் நடைபெற வேண்டுமானால் பிறருக்கு எத்துணைத் துயரம் அதனால் ஏற்படும் என்பதைப் பற்றிக் கவலைப்படாத பெரிய மனிதர்களை நாம் அன்றாடம் கண்டுகொண்டிருக்கிறோம். ‘இதற்கெல்லாம் நாம் கவலைப்பட முடியுமா சார்!, என்று இப்பெரிய மனிதர்கள் வாய் கூசாமல் பேசுவதையும் கேட்கலாம். ஆனால், தான் விரைவாகச் செல்லவேண்டிய வேளையில் தலைவன் கட்டளையைக் காணுங்கள்! ‘தீண்டா வைமுள் தீண்டி.... ஏமதி’ என்று கட்டளை இடுகிறான். தாற்றுக் கம்புக்கு அடைமொழி ‘தீண்டா’ என்பதாகும். குதிரை ஓட்டுபவர்கள் ‘சவுக்கு’ வைத்திருப்பது முறைதான். ஆனால், அதனை ஓயாமல் பயன்படுத்தும் சில மக்களையும் காண்கிறோம். ‘அக்கம்பு கையில் இருப்பதே குதிரையை அடிக்கத் தானே?’ என்று பேசுவார்கள் இவர்கள். ஆனால், பயன்படுத்தாமல் குதிரைக்கு அச்சத்தை உண்டாக்க மட்டுமே வைத்துள்ளான் அக்கம்பை அப்பழந்தமிழன். அதைப் பயன்படுத்து என்று கூறும்பொழுது கூடத் ‘தீண்டி’ (மெள்ளத் தொட்டு) என்ற சொல்லாலே தான் கூறுகிறான்.

தன்னோடு பல்காலும் பழகுகின்ற குதிரையினிடத்து அவன் கருணை காட்டுகிறான் என்பது மிகுதியும் பாராட்டற்குரிய ஒன்று அன்று. அஃறிணையாகிய குதிரையினிடத்தும் அவன் கருணையுடையவன் என்பதற்காகவே அவனைப் பாராட்டுகிறோம். ஆளால், அதிகம் பழகியதாலும், அதனால் தான் பயன் பெறுவதாலும் ஒருவேளை அவன் அதனிடத்து அன்பு பாராட்டுகிறானோ என்று நினைக்கத் தேவை இல்லை. அவன் இயல்பாகவே இப்பண்பாடுடையவன் என்பதையும் நாம் அறியப் பாடல்கள் உள்ளன.

ஒருதலைவன், வினை முற்றி மீண்டு வருகிறான். வருகின்ற காலமோ, கார்காலம். வரும் வழியோ, அடர்ந்த காட்டு வழி. கார் காலம் ஆகலின், காடு முழுவதும் பூத்துக் குலுங்குகின்றது. அப்பூக்களினிடத்து வண்டுகள் மொய்க்கின்றன. எவ்வாறு அவை வருகின்றன? இரட்டையாக, துணையோடு புணர்ந்தவையாய் வருகின்றன. அவ்வாறு வண்டுகள் நிறைந்துள்ள வழியில் தலைவன் தேரில் வருகிறான். தேரில் மணிகள் நிறையக் கட்டியுள்ளன. தேர் வேகமாக வரும்போது மணிகள் ஒலிக்குமல்லவா? காட்டில் திடீரென்று இவ்வாறு மணி ஒலி கேட்குமானால், துணையுடன் மகிழ்ந்து தேன் உண்ணும் வண்டுகள் அச்சத்தால் ஓட நேரிடுமே! துணையுடன் மகிழ்ந்திருக்கும் அவை பிரிந்து செல்லத் தான் காரணமாய் இருக்க விரும்பவில்லை அத்தமிழ் மகன். அதற்காக யாது செய்கின்றான்? தன் தேரில் உள்ள மணிகளின் நாவைப் பிடித்துக் கட்டிவிட்டான். தன்னோடு தொடர்புள்ள மக்களிடத்துக்கூட அன்புக்காட்டாத இக்காலத் தமிழன் எங்கே, ஏதோ வண்டுகள் மகிழ்ச்சியுடன் இருப்பதற்குத் தான் இடையூறாக இருத்தல் கூடாதென்று மணியின் நாவைக் கட்டும் அக்காலத் தமிழன் எங்கே! அவன் பண்பாட்டின் உச்சியை எட்டிப் பிடித்தவன் என்பதைக் கூறவும் வேண்டுமா?

பூத்த பொங்கர் துணையொடு வதிந்த
தாதுஉண் பவவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்

(அகநாநூறு–4)

[பொங்கர்–சோலை; தாது உண் பறவை–மகரந்தம் உண்ணும் வண்டு; பேதுறல்–மயக்கமடைதல்.]

“வாழ்வின் குறிக்கோளை நன்குணர்ந்த இத்தலைவனுக்கு ஏற்ற தலைவியே வீட்டில் உறைகின்றாள். அவளும் ஏதோ வாழ்கின்றோம் என்று கருதி வாழாமல், ஓர் உயரிய குறிக்கோளுடனேதான் வாழ்கின்றாள். தலைவன் பிரிந்திருக்கின்ற காலத்து அவள் கடமைகளைச் செவ்வனே செய்து முடிப்பினும் மனம் முழுவதையும் அவன்பாற் செலுத்தி வாழ்கின்றாள். இல்லறம் நடத்தத் தொடங்கிய அன்றிலிருந்தே விருந்தோம்பலைத் தன் தலையாய கடமையாகக் கொண்டாள் தலைவி.

இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு

(குறள்–81)

என்றல்லவோ பொதுமறை கட்டளை இடுகின்றது? எனவே, தலைவி விருந்தோம்பலில் எத்துனை இன்பம் அடைகிறாள் என்பதைத் தலைவன் அவளைப் பிரிந்து வாழும் பொழுது நினைந்து பார்க்கிறான்.

அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின்
மெல்லியல் குறுமகள்

(நற்றிணை, 142)

[அல்லில் ஆயினும் - இராப்பொழுதில் ஆனாலும்; விருந்தைக் கண்டால் உவக்கின்றாளாம் தலைவி. அளவு மீறிய விருந்தினர் வரினும் சலியாது உபசரிக்கின்றாள்.]

“‘விருந்து ஒழிவறியாப் பெருந்தண் பந்தர்வருந்தி வருநர் ஒம்பி..........’ நேரங் கெட்ட நேரத்தில் எங்கேயாவது உணவு விடுதி இல்லாத ஊரில் வேறு வழியில்லாமல் யார் வீட்டிற்காவது நீங்கள் விருந்தினராகச் சென்றதுண்டா? சென்றிருந்தால், இப்பழைய பாடலில் வரும் தலைவியை நினைக்க நேரிடும்.

இத்தகைய ஓர் உயர்ந்த குறிக்கோளுடன் தலைவி வாழ்கிறாளாகலின். அத்தலைவனும் மனக் கவலையின்றி வாழ முடிந்தது; கடமைகளைக் கவனிக்கவும் முடிந்தது. தலைவனிடத்து அவள் என்ன சிறப்பைக் கண்டாள். இத்துணை மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு? இதோ கூறுகிறாள் ஒரு தலைவி.

அம்ம வாழி தோழி! காதலர்
நிலம்புடை பெயர்வது ஆயினும் கூறிய
சொல்புடை பெயர்தலோ இலரே.”

(நற்றிணை 289)

இத்தகைய தலைவனுடன் வாழ்வதாலேதான் அவள் முல்லை சான்ற கற்பின் குறுமகளாக வாழ முடிந்தது.

*****

இமய நம்பிக்கை

தலைவன் பிரிந்துள்ள காலத்துத் தலைவியின் மன நிலையைச் சித்திரிக்கிறது. இப்பாடல்:

பலரும் ஒன்று கூடி வாழவேண்டிய கடப்பாடுடையது இக்காலச் சமுதாயம். சாதாரணமாக இருவர் ஒன்று கூடி வாழத் தொடங்கினாலே கருத்து வேறுபாடுகள் தோன்றி விடும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் ஒழிய, அவ்வாழ்வு சிறப்பதில்லை. எப்பொழுது ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வார்? அன்புள்ள பொழுதுதான் என்று கூறத் தேவை இல்லை. ஒருவர்மேல் கொண்ட அன்பு காரணமாகத்தானே அவர் செய்தது நாம் விரும்பாததாக இருப்பினும், விட்டுக்கொடுக்கிறோம்? இவ் அன்பு எவ்வாறு தோன்றுகிறது? இவ்வினாவிற்கு விடை அளிக்க ஒருவனாலேதான் முடியும். அவனே அனைத்தையும் ஒரு காரணங் கருதிப் படைக்கும் இறைவன். அவனை அல்லாத பிறர் அன்பு செய்யலாம்; அன்பைப் பெறலாம். ஆனால், ஏன் அன்புண்டாகிறது என்ற வினாவிற்கு விடை கூறல் இயலாது.

அன்புடையார்மாட்டு இயல்பாகவே நம்பிக்கையும் உண்டாகிறது. இந்நம்பிக்கை இல்லையாயின், அடிப்படை அன்பு விரைவில் ஆட்டங்கண்டு விடும். பல சந்தருப்பங்களில் அன்புடையார்மாட்டுச் சிலர் கொண்டிருக்கும் நம்பிக்கை நமக்கு வியப்பை உண்டாக்கும். ஏதோ ஒரு செயல் நடைபெற்றது. நாம் அனைவரும் அது நடைபெற்றதை நேரே கண்டிருக்கிறோம். ஆனால், அதனைக் கண்ட நாம் செயலில் ஈடுபட்டவர்களிடத்து அன்பு கொள்ளவில்லை. எனவே, செயலைச் செயலாகவே காண்கிறோம். தவிர, அதற்கு வேறு பொருள் கற்பிப்பதுமில்லை; கற்பிக்க நமக்குத் தோன்றுவதுமில்லை. ஆனால், அந் நிகழ்ச்சியைப் பற்றி அவர்களிடத்து அன்புடையார் மாட்டுக் கூறிப் பாருங்கள். அவர்கள் நம்ப மறுத்து விடுவார்கள். நிகழ்ச்சியின் மெய்ம்மையை நீங்கள் உறுதிப்படுத்திக் காட்டினாலும், அவர்கள் அதற்கு வேறு ஒரு பொருள் கூறுவார்கள். இது உலகியற்கை. அன்புடையார் மாட்டும் அவர்கள் செய்யும் செயலினிடத்தும் நம்பிக்கை இருப்பது உலகியற்கை; மனித இயல்புங்கூடவாம்.

ஒரு நல்ல தலைவனும் தலைவியும் கூடி இன்பமாக இல்லறம் நடத்துகின்றனர். ஆனால், எத்துணை இன்பமாக இல்லறம் நடத்தினாலும் வெறும் பானை உலையில் ஏற முடியாது! எனவே, பல்வேறு பொறுப்புக்களை மேற்கொண்ட தலைவனுக்குப் பொருள் தேட வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. என் செய்வான் பாவம்! அன்பே வடிவான அருமைத் தலைவியை விட்டுப் போகவும் மனம் வரவில்லை. அழைத்துக்கொண்டு செல்லலாம் என்றால், காட்டு வழியை நினைக்கையிலேயே அச்சமாக இருக்கிறது. ஆனால், கடமை வாயிற் படியில் நின்று அவனை அழைக்கிறது. பல நாள் தலைவன் ஆய்ந்து பார்த்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டான். காதலுக்கும் கடமைக்கும் இடையே நடந்த அப்போரட்டத்தில் கடமை வெற்றி பெற்று விட்டது.

தலைவன் பொருள்தேடப் புறப்பட்டான். தலைவியும் அவன் போராட்டத்தை அறிந்து கொண்டாளாதலின் மேலும் தடை கூறி அவனுடைய வருத்தத்தை மிகுதிப்படுத்தாமல், வழி அனுப்ப முனைந்து விட்டாள். ஆனால், அவளுடைய மனத்தின் அடித்தளத்தில் தோன்றிய ஒரு பரபரப்பினால். அவனை எவ்வாறாயினும் கேட்டுவிட வேண்டும்என்று பலநாளாகச் சிந்தித்தாள். பல சந்தருப்பங்களில் கேட்கவும் முயன்றாள். ஆனால், அக்கேள்வி வாயிலிருந்து வெளி வந்தால்தானே! என்ன செய்வது! ‘அவன் எப்பொழுது மீள்வான்?’ இதுதான் அவள் கேட்க விரும்பிய வினா. ஆனால், விட்டுப் பிரிவது பற்றிப் பெரும் போராட்டத்தை அவள் நடத்திக்கொண்டிருக்கும்பொழுது, ‘எப்பொழுது வருவீர்கள்?’ என்று கேட்பது எவ்வளவு தவறானது? எனவே, ‘இன்று கேட்கலாம்; நாளை கேட்கலாம்’ என்று கருதிக் கொண்டிருந்தாள்.

இதோ நாளுங்குறித்து இன்று புறப்படுகிறான் தலைவன். இச்சந்தருப்பத்தில் எவ்வாறு கேட்பது? நல்ல வேளை! அவனே வாய் திறந்து அவள் கேளாமல் கேட்ட வினாவிற்கு விடை கூறிவிட்டான். எப்பொழுது மீளப் போகிறானோ என்பது பற்றித்தானே அவள் கேட்க விரும்பினாள்? இதோ அவனே அவளைப் பார்த்துக் கூறுகிறான்; ‘தலைவி, நீ அஞ்ச வேண்டா. வருகிற கார் காலம் தொடங்கியவுடன் யான் மீண்டு விடுவேன்!’ கார் காலம் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய காலம் என்பதை அவன் அறியானா? எனவே, உறுதியாக அவன் கூறினான். ஒரு வேளை அவள் மனம் அதிக வருத்தம் அடையாமல் இருக்கட்டும் என்ற கருத்தினாலேதான் கூறினானா? யார் கண்டார்கள்? அப்படியுங்கட்ட இருக்கலாம்! போனவிடத்தில் அவன் விரும்பிய பொழுது திரும்பி வர அங்கு என்ன, பொருள் கொட்டியா கிடக்கிறது? அள்ளிக்கொண்டு வேண்டும் பொழுது திரும்பிவிட முடியுமா? இவற்றை எல்லாம் அவன் ஆய்ந்து பாராமலா கூறி இருப்பான்! தோழிக்குக்கூட அவன் சொற்களில் நம்பிக்கை பிறக்கவில்லை.

ஆனால், இத்தலைவியே ஒரு விதமான பெண்! தலைவனிடத்து எத்துணைக் காதல் கொண்டிருக்கிறாளோ, அத்துணை நம்பிக்கையும் வைத்திருக்கிறாள். எனவே, அவன் மீண்டு வருகிறேன் என்று கூறிய கார்ப்பருவத்தை அப்படியே ஆழமாக மனத்தில் பதித்துக் கொண்டாள். அவன் சொற்களில் யாதோர் ஐயமும் தோன்றவில்லை இவளுக்கு. இது இயலுமோ என்ற வினாவும் இவள் உள்ளத்தில் தோன்றவில்லை! அப்படியானால், இவள் என்ன, அறிவில்லாதவளா? யாரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய இந்த எளிய வினாக்கள்கூட இவள் மனத்தில் தோன்றாமைக்குக் காரணம் யாது? தோழிக்குப் புரியும் வினாக்கள், அவளினும் மேம்பட்ட தலைவிக்கு விளங்காவா? நன்றாய் விளங்கியிருக்கும். ஆனால் இவளுடைய விளக்கத்தை மற்றொன்று முன்னின்று மறைத்து விட்டது. அதுவே இவள் அவன்மேற் கொண்ட பெருநம்பிக்கை. அவன் கூறினான்; இவள் அதனை ஏற்றுக் கொண்டாள். இதனை யார் மறுக்கமுடியும்? பிறர் கூறிய சொற்களானால், இவளும் அவற்றை ஆய்ந்து பார்த்துப் பொய்ம்மை மெய்ம்மை ஆராய்ச்சியில் ஈடுபடுவாள். ஆனால், இப்பொழுது பேசியவன் யார்? இவளுடைய தலைவன் அல்லனோ! அவனா இவளை ஏமாற்றுவான்? அவனும் இவளும் வேறு அல்லரே! அப்படி இருக்க, அவன் சொற்களில் இவள் ஐயங்கொள்ளக் காரணம் இல்லை யன்றோ? அவனுடைய சொற்களில் பொய் தோன்றுமா! இதென்ன வேடிக்கை! சந்திரனில் நெருப்புப் பிறக்குமா? என்றாவது திங்களில் தீத் தோன்றினால், அன்றுதான் அவனுடைய சொற்களில் பொய் தோன்றும்.

“குன்றகல் நன்னாடன் வாய்மையில் பொய்தோன்றின்
திங்களுள் தீத்தோன்றி அற்று.”

(குறிஞ்சிக்கலி–5)

இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறாள் தலைவி தலைவனுடைய சொற்களில். எனவே, இவள் நம்பிக்கை, இவள் அதிகம் வருந்தாமல் இருக்க துணை செய்கின்றதன்றோ?

நாட்கள் ஓடிமறைகின்றன. வீட்டில் உள்ள சுவர்களில் (அழகான ‘காலண்டர்கள்’ இல்லாத காலம்) தலைவன் சென்ற பிறகு வந்து போன நாட்களைக் கோடிட்டு வைத்தாள் தலைவி; சில நாட்களில் நின்று அக்கோடுகளைப் பார்த்துப் பெருமூச்செறிவாள். சென்னைப் பட்டினம் போன்ற நகரங்களில்–அல்ல நகரங்களில்–பஸ்ஸை எதிர்பார்த்து நிற்பவர்கள் ‘கியூ’ வரிசை நீள்வது போலத் தலைவி கிழித்த கோடுகள் நீண்டன. ஆனாலும், தலைவன் வந்த பாடில்லை. தலைவிக்கு வருத்தம் மிகுந்ததே தவிர, நம்பிக்கை தளரவில்லை. இக்காலம் போலக் காலண்டர்கள் இருப்பதனால், இன்ன நாளில் வருவேன் என்று அவனுங் கூற முடியும்; இவளும் அந்த நாளை எதிர்பார்க்க முடியும். ஆனால், அந்நாட்களில் அவ்வாறில்லை. எனவே, அவனும் கார் காலத்தில் வருகிறேன் என்று கூறினான். கார் காலம் (மழைக் காலம்) என்று தொடங்கும்? மழை பெய்யத் தொடங்கினால் கார் காலம் என்று கூறிவிடமுடியுமா? அன்றி, ஐப்பசி தொடங்கி விட்டது. எனவே, இது கார் காலம் என்றுதான் கூறிவிட முடியுமா? இரண்டுஞ் சேர வேண்டும். அப்பொழுது கூட உறுதியாக இது கார் காலம் என்று கூற முடியாதன்றோ?

தலைவன் பிரிந்து சென்று பல நாட்களாகிவிட்டன. மழை தொடங்கிவிட்டது. “மழைக் காலத்தில் பூக்கும் கொன்றை, பிடவம் முதலியன பூக்கத் தொடங்கிவிட்டன. தலைவி மனவருத்தம் அடையத் தொடங்கிவிட்டாள். அவள் வருத்தத்தைக் கண்ட தோழியின் பாடு தருமசங்கடமாகி விட்டது; என்ன செய்தால் தலைவியின் துயரம் ஆறும்? தலைவனைக் கொண்டு வந்து நிறுத்தினால், தலைவி வருத்தம் தீர்வாள். ஆனால், அது நடக்கக் கூடிய செயல் அன்றே! தோழி நன்கு ஆய்ந்து ஒரு முடிவுக்கு வந்தாள். தலைவன் வரவில்லையே என்ற வருத்தத்தைக் காட்டிலும் தலைவிக்குக் கார் காலம் வந்துவிட்டதே என்ற வருத்தம் மிகுதி. ஆனாலும், இவ்வளவு துயரத்தின் இடையிலும் தலைவன் சொல் தவற மாட்டான் என்ற நம்பிக்கை மட்டும் இவளிடம் இருக்கிறது. இந்த நம்பிக்கையை நன்கறிந்த தோழி இதன் மூலமே தலைவிக்கு ஆறுதல் அளிக்க முடிவு செய்தாள். எவ்வாறு ஆறுதல் அளிப்பது?

‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.’

(குறள்–948)

என்றார் பொதுமறையாசிரியர். தலைவியின் நோய் யாது? தலைவன் ‘இன்னும்’ வரவில்லையே என்ற வருத்தந்தான், ‘இன்னும்’ என்பதுதானே நோயின் முதல்? அதாவது, அவன் கூறிச் சென்ற கார்காலம் வந்தும் அவன் வரவில்லையே என்ற வருத்தம். இது கார்காலம் அன்று என்று நிரூபித்து விட்டால், தலைவியின் துயரத்தின் அடிப்படை நீங்கிவிடும். நல்ல கார் காலத்தை எவ்வாறு, ‘இது கார்காலம் அன்று’ என்று கூற முடியும்? சாதாரணமானவர்களை இது கார் அன்று என்று கூறி ஏமாற்ற முடியாது.

ஆனால், தலைவியை ஏமாற்றிவிடலாம் எனத் தோழி நினைக்கிறாள். இது எவ்வாறு முடியும் என்று நினைக்கத் தோன்றுகிறதா? நன்றாக முடியும். மனித மனத்தின் கூறுபாட்டை நன்கு அறிந்தவர்கட்கு. ஒருவர் மிகுதியும் நோய் வாய்ப்பட்டிருப்பதைக் காணச் செல்கிறோம். நற்பேறின்மையின் நாம் சென்ற நேரத்தில் அவர் இறந்துபடுதலும் கூடும். நோயாளி இறந்துவிட்டதை நாம் அறிவோம். ஆனால், நோயாளியின் தாயோ, அன்றி மனைவியோ, இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தன்னால் அன்பு செய்யப்பட்ட ஒருவர் இறந்துவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது இந்தப் பகுத்தறிவுடைய மனித மனம்! உயிர் பிரிந்துவிட்ட நேரத்திற்கூடப் பெரிய மருத்துவர் ஒருவரை அழைத்து வந்து காட்ட முற்படுவர் எத்துணைப்பேர்! ஏன்? அவர்களுடைய அன்பின் அடிப்படையில் பிறந்த நம்பிக்கை அத்தகையது! ஆதலாலேதான், இறப்பாகிய நிகழ்ச்சியை–கண்ணெதிரே காணும் நிகழ்ச்சியை–நம்ப மறுத்து. ‘எவ்வாறாயினும் இந்த மருந்து உட்செல்லுமா!’ என்று உயிர் பிரிந்து விட்டவர் வாயில் மருந்தை ஊற்றுகின்றார்கள்!

மனித மனம் இத்தகைய விசித்திரம் நிறைந்த ஒன்று. இதனை அடிப்படையிற் கொண்டே தோழி தலைவியின் வருத்தத்தைத் தணிக்க, அன்றேல், ஓரளவு குறைக்க முற்படுகிறாள். தலைவி கண் எதிரே மழை பெய்கிறது; மயில் ஆடுகிறது; கொன்றை பூக்கின்றது. ஆனால், எப்பொழுது மழை பெய்தாலும் இவை நிகழ்கின்றனவா? இல்லையே! கோடை மழை பெய்யும்பொழுது மயிலின் ஆட்டமும், கொன்றை பூத்தலும் நிகழ்கின்றனவா? இல்லையே! ஆனாலும் என்ன? சாதாரண மன நிலையுடையவர் மழை பெய்தல் முதலியவை தனி நிகழ்ச்சிகளாயினும் ஒன்றுடன் ஒன்றைத் தக்க முறையில் தொடர்புபடுத்திக் காண்பர். ஆனால், மனம் மாறுபட்டு அல்லது கலங்கியிருப்பவர்க்கு இத்தொடர்பு எங்கே விளங்கப்போகிறது! தலைவி மனம் கலங்கியிருக்கிறாள்.

அவளுடைய கலக்கத்திற்குக் காரணம் யாது? தலைவன் கார்காலம் தொடங்கியவுடன் வந்துவிடுகிறேன் என்று கூறிப் போனான். இதோ கார்காலம் தொடங்கி விட்டது போலக் காணப்படுகிறது. ஆனால் தலைவன் வந்தபாடில்லை. தலைவன் வாராமையின், இது கார்காலம் அன்று என்று கூறிவிடலாமா? அல்லது இது கார்காலந்தான் எனினும், அவன் வரவில்லை என்று கூறிவிடலாமா? இதுவே தலைவியின் கலக்கம். இவ்விரண்டினுள் ஏதாவதொன்றுதான் உண்மையாக இருத்தல் கூடும். எது உண்மை என்று அறிய முடியாமல் இவள் வருந்தும் பொழுது தோழி இவளுடய உதவிக்கு வருகிறாள். எவ்வாறு? ‘தலைவன் வரவில்லை என்று கவலையுறாதே! இது கார்காலம் அன்று’ என்று கூறுகிறாள் தோழி. கண்ணெதிரே காண்பதை இல்லை என்று எவ்வாறு கூறுவது என்று நினைக்கிறீர்களா? இதோ தோழி கூறுகிறாள்:

‘மழை பெய்கிறதே. இந்த மேகம் என்று நினைக்கிறாயா? தலைவி, கலங்காதே! அறிவில்லாதது இந்த மேகம்! மறதியினால் நீரை உண்டாலும், உண்டதன் பயன் இல்லாமற் போய்விடுமோ? நெருப்பில் மறந்து கையை வைத்துவிட்டால் சுடாமல் விடுமா? நீரை உண்ட உடனே மேகம் சூல் கொண்டுவிட்டது. சூலின் முடிவு யாது? மழையாகப் பெய்துதானே ஆகவேண்டும்? வேறு வழி இன்மையால் மழையைப் பெய்துவிட்டது. இந்த மேகம் செய்த முட்டாள் செயலினால் எத்தனைப் பொருள்கள் அந்த முட்டாள் பட்டத்தை ஏற்றுக் கொள்கின்றன? மழை பெய்தவுடன் (தவறுதலாகத்தான்) அஃறிணைப் பொருள்களாகிய பிடவு (முல்லை) காந்தள், கொன்றை முதலியன பூத்து விட்டன. அவை அறிவுடைய பொருள்களாயின், இது கார்காலமன்று என்று அறிந்திருக்கும். பாவம்! அஃறிணைப் பொருள்களாதலின், கார்காலம் என நம்பிப் பூத்துவிட்டன. அவைகளின்மேல் தவறு இல்லை. எல்லாம் இந்த முட்டாள் மேகம் மறதியால் செய்த வேலையாகும். நீயும் (பகுத்தறிவுடைய நீயும்) இது கார்காலம் என நம்பிக் கொண்டு, ‘செல்லத் தொலையாததும் நீரில்லாமல் வரண்டு போனதும் ஆன நீண்ட வழியினிடத்து வேட்டியை விரித்தது’ போன்ற வெயில் வீசுகின்ற கொடுமையால் காண்பார் நெஞ்சு நடுங்கும் கொடிய காட்டின்கண் சென்ற காதலர் ‘வருகிறேன்’ என்று கூறிச் சென்ற பருவம் இதுதானே என்று கேட்கிறாய். இது அன்று அப்பருவம்.”

இந்த முறையில் தோழி பேசுவதாக அமைந்துள்ளது பழந்தமிழ்ப் பாடல்களுள் ஒன்று. ஆய்ந்து நோக்கும் பொழுது மனித மனத்தின் கூறுபாட்டை 2,000 ஆண்டுகட்கு முன்னர் இருந்த தமிழர் எவ்வாறு துணுக்கமாக அறிந்திருந்தன்ர் என்பதை அறிய முடிகிறதன்றோ? இதோ பாடல்!

நீர்அற வறந்த நிரம்பா நீள் இடைத்
துகில்விரித்து அன்ன வெயில்அவிர் உருப்பின்
அஞ்சுவரப் பணிக்கும் வெஞ்சுரம இறந்தோர்

தாம்வரத் தெளித்த பருவம் காண்வர
இதுவோ? என்றிசின் மடந்த மதியின்று
மறந்துகடல் முகந்த கமஞ்சூல் மாமழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்
காரென்று அயர்த்த உள்ளமொடு தேர்வுஇல
பிடவுங் கொன்றையும் கோடலும்
மடவ ஆகலின், மலர்ந்தன பலவே.

(நற்றிணை–9)

(நிரம்பா–செல்லத் தொலையாத; உருப்பின்–வெப்பத்தையுடைய, பனிக்கும்–நடுக்கத்தைச் செய்யும்; வரத் தெளித்த–வருவதாக உறுதி கூறிய மதியின்று–அறிவின்றி; இறுத்த–பெய்த; வண்பெயல்–வளப்பம் பொருந்திய மேகம்; அயர்த்த–சந்தேகித்த; கோடல்–காந்தள் பூ; மடவ–அறிவற்றவை.)

பெய்கின்ற மழையையும், பூக்கின்ற கொன்றை, காந்தள், முல்லை முதலியவற்றையும் மறுத்து, தலைவன் சொல் தவறமாட்டான் என்று தலைவி கொண்டிருக்கும் இமயமலையை ஒத்த நம்பிக்கை வாழ்வதாக! பெண்டிர் இத்துணை நம்பிக்கை கொண்டிருந்தமையின், அற்றை நாள் சமுதாயம் வாழ்ந்தது. இன்றும் நாம் தமிழரெனத் தலை தூக்கித் திரிய இது வாய்ப்பும் வழியும் வகுத்தது.

நெய்தல் திணை

நெய்தல் திணை கடலிலும் கடல் சார்ந்த இடத்திலும் நடைபெறுவது. மாலைக் காலம் இதற்குரிய காலம் என்பர்.

தலைவன் பிரிவை ஆற்றாளாகிய தலைவி வாய் விட்டுப் புலம்புவதை அறிவிக்கும் நெய்தல் பாடல்கள். இக்கருத்து இல்லாமல் கடலும், கடலைச்சார்ந்த பொருள்களும் பேசப்படுவதனாலும் நெய்தல் என்ற பெயர் வருதலும் உண்டு.

தலைவியின் உயர்ந்த பண்பாட்டை விளக்குவது இப்பாடல்;

புன்னை மரத் தங்கை

இவ்வுலகம் தோன்றிய நாளிலிருந்தே இதில் காணப்பெறும் பொருள்கள் காண்பார்க்குப் புதுமையை நல்கின. புல் பூண்டில் தொடங்கி, மனிதனில் முடிவு பெறும் பல்வேறு உயிர்த் தொகுதிகள் இவ்வுலகில் உள்ளன. சிலவற்றை உயிருடைய பொருள்கள் என்று கண்டு கொள்ளக்கூட மேல்நாடுகட்குப் பத்தொன்பது நூற்றாண்டுகள் ஆயின. ‘செடி கொடிகட்கும் உயிர் உண்டு. அவைகளுக்கு உணர்ச்சி கூட உண்டு,’ என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டக்கூட இந்நாட்டு அறிவியல்துறை வல்லுனரான ஸர். ஜே.ஸி.போஸ் அவர்களாலேதான் இயன்றது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போஸ் அவர்கள் இவ்வுண்மையைப் புற உலகிற்கு இயந்திர சாதனத்தின் மூலம் மெய்ப்பித்துக் காட்டினார் என்பது போற்றத்தக்கது. ஆனால், இந்நாட்டிற்கூட அப்பொழுதுதான் இவ்வுண்மை காணப்பட்டது போலும் என்று நினைந்துவிட வேண்டா. வேத காலத்திற்கூட வடநாட்டாரும், தென்திசையில் வாழும் தமிழரும் இவ்வுண்மையை அறிந்திருந்தனர். தாவரங்கட்கும் உயிர் உண்டு என்ற உண்மையை அறிந்ததோடு நிறுத்தி விட்டனர் இற்றை நாள் அறிவியல் நூலார். ஆனால், பழங்காலத்தில் நம் நாட்டில் வாழ்ந்த பெரியோர் இவ்வுண்மையை அறிந்ததோடு நில்லாமல், இன்னும் ஒரு படி மேலே சென்று, இத்தாவர உயிர்கட்கும் நமக்கும் உள்ள தொடர்பைக்கூட அறிந்தனர்; தாவர உயிர்களுடன் உறவு கொண்டாடவும் தொடங்கினர்.

மிகப் பழைய நூலாகிய ‘தொல்காப்பியம்’ தமிழ் மொழியினுடைய இலக்கணத்தை அறிவிக்கும் நூல். அது மொழி இலக்கணத்தை மட்டும் அறிவிப்பதுடன் நின்று விடாமல், அம்மொழி பேசும் தமிழர்களுடைய வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தது. இப்பெருமை—உலகப் பல்வேறு மொழி இலக்கணங்களுள்ளும் தமிழ் மொழி இலக்கணமாகிய தொல்காப்பியத்தில் தாவரங் கட்கும் உயிர் உண்டு என்ற உண்மை பேசப்படுவது—வியப்பே அல்லவா! ‘ஒன்றறிவதுவே உற்றறிவதுவே’ என்பது சூத்திரம். இது நன்கு விளங்குதற்பொருட்டு ஓரறிவு உடைய பொருள்கள்யாவை எனக் கூறத் தொடங்கி,

“புல்லும் மரனும் ஓர்அறி வினவே;
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.”

(தொல், பொரு–மரபியல் 27–28)

என்றும் பேசுகிறது தொல்காப்பியப் பொருளதிகாரம், மரபியல் சூத்திரங்களில். இதன் பொருள் ‘புல்லும் மரமும் ஓர் அறிவுடைய பிறவும் அக்கிளையும் பிறப்பும் உள்ளன.’ என்பதாம். புல்லுடனும் மரத்துடனும் கிளையாக உள்ள பிற உயிர்கள் புதர், கொடி என்பன. அதைவிடச் சிறப்பான உண்மை இரண்டாம் அடியிற் பேசப்படுகிறது. மக்களானும், விலங்கானும் பெறப்பட்ட குழந்தைகளும் தொடக்கத்தில் ஓர் அறிவினவாகவே உள்ளன என்கிறார் தொல்காப்பியனார். இவற்றால் தாவரங்களை உயிர்ப் பொருள்களாகவும் மக்களுடன் தொடர்புடையனவாகவும் கொள்கிறார் என்பதும் நன்கு விளங்கும். இக்கருத்தை மேலும் வலியுறுத்தவே போலும் இத்தாவரங்களின் இளங்கன்றுகட்குத் தொல்காப்பியனார் பெயரிடு முறை அமைந்துள்ளது!

‘பிள்ளை, குழவி, கன்றே, போத்துஎனக்
கொள்ளவும் அமையும் ஓர்அறிவு உயிர்க்கே.’

(தொல்; பொரு. மரபியல்–24)

இன்றுங்கூட இந்நாட்டில் ‘தென்னம்பிள்ளை’ என்று கூறும் மரபு உண்டு. தாம் பெற்றெடுக்கும் பிள்ளைகளையும் ‘பிள்ளை’ என்ற சொல்லால் குறிப்பிட்டுத் தென்னை மரத்தின் கன்றையும் அதே பிள்ளை என்ற சொல்லால் குறிப்பிடுவதனால், இரண்டையும் ஒன்றாகவே கருதினர் இத்தமிழர் என்பதற்குச் சான்றும் வேறு வேண்டுமா!

இனி இக்கருத்துச் சங்கப் பாடல் ஒன்றில் மிகவும் விளக்கமாகப் பேசப்படுவதைக் காணலாம். ஒரு செல்வருடைய மகள் தன் தோழிகளுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தாள். பெண்களுடைய விளையாட்டுக்கள் ஆண்களுடைய விளையாட்டுக்கள் போல இராமல், அமைதியும் சாந்தமும் உடையனவாகவே இருக்கும். அப் பெண் மகளிர் விளையாடும் ஆடல்களில் ஒரு வகை கும்பலாகக் குவிந்த மண்ணில் ஒருத்தி ஏதாவது ஒரு பொருளை ஒளித்து வைப்பதும், ஏனையோர் அது உள்ள இடத்தைத் தேடாமல் உடனே கண்டு பிடிப்பதுமாகும். இன்றுங்கூடச் சில இடங்களில் குழந்தைகள் இவ்விளையாட்டை ஆடுவதுண்டு. ‘கிக்சுக்கிச்சுத் தம்பலம்’ என்ற பெயருடன் இது ஆடப்பெறும். இத்தகைய விளையாட்டில் ஈடுபட்டிருந்த அச்செல்வரின் மகள், புன்னை விதையை உள்ளே ஒளிக்கும் காயாக வைத்து விளையாடினாள். இரவு நேரம் வந்தவுடன் உள்ளே ஒளித்த விதையை எடுக்காமல் அவள் வீட்டுக்குச் சென்று விட்டாள். அன்றிரவு மழை பெய்ய விதை முளைத்து விட்டது. தான் மறந்து விட்டுச் சென்ற புன்னை விதை செடியாக முளைத்தது கண்ட அந்தச் சிறுமி அதனிடம் தனித்த அன்பு பாராட்டினாள். பாலும் நெய்யும் விட்டு அதை வளர்க்க ஆரம்பித்தாள். செடி நன்கு வளர்வதைக் கண்ட அவளுடைய தாய் மகளுக்கு ஒரு நல்லுரை பகர்ந்தாள். “மகளே, நீ அன்புடன் வளர்க்கும் இந்தப் புன்னைச் செடியை ஒரு செடி என்று மட்டுமே நினைந்து வளர்க்க வேண்டா; உன் உடன் பிறந்த தங்கையாகவே கருதிக் கொள். உன்னைக்காட்டிலும் நல்ல பண்புகள் இதனிடம் நிறைந்துள்ளன. என்றோ நாம் ஒரு நாள் நீர் ஊற்றுகிறோம். அன்றேல், பல சந்தர்ப்பங்களில் நீர் ஊற்றக்கூட மறந்து விடுகிறோம். அவ்வாறு மறந்து விட்டாலும், மரம் நம்மாட்டுப் பகைமை பாராட்டுவதில்லை; பிற்காலத்தில் பழமும் நிழலும் தருகிறது; அது மட்டும் அன்றி, தன்னையே வெட்டி வீழ்த்தக் கோடாரியுடன் வருபவனுக்கும் அவன் வெயிலில் வாடாமல் நிழல் தந்து உபசரிக்கிறது. இவை அனைத்தைக் காட்டிலும் மற்றொரு சிறப்பும் மரத்தின்பால் உண்டு. மக்கள் தங்களிடம் உயிரும் பொருளும் உள்ளவரைதான் உதவி செய்வார்கள். எத்துணைப் பெரிய உபகாரியும் இறந்த பிறகு யாருக்கும் பயன்படுவது இல்லை அல்லவா? ஆனால், இந்த மரத்தைப் பார்; மரம் வாழும் பொழுது பழமும் நிழலும் தந்து பயன்படுவதுடன், இறந்து விட்ட பிறகும் எரித்தற்குரிய விறகாய் இருந்து பயன்படுகிறது. எனவே, இம் மரம் நீ வளர்த்த மரம்; உன்னினும் சிறந்த உன் தங்கையாகும்.” என்று கூறினாள். தாய் இவ்வாறு கூறியது அச்சிறுமியின் மனத்தில் ஆழப் பதிந்து விட்டது.

சிறுமி வளர்ந்து பெரியவள் ஆகிவிட்டாள் என்றாலும், அவள் மனத்தில் தோன்றிய எண்ணம் மட்டும் மாறவேயில்லை. புன்னை மரத்தைப் பார்க்குந் தோறும் அதைத் தன் தங்கையென்றே கருதிவிட்டாள். சிறுமி தலைவியான நிலையில் இவளுக்கு ஒரு தலைவன் கிடைத்துவிட்டான். தலைவனோடு களவில் ஈடுபட்டாள். அவள் கடற்கரையில் இருக்கும்போது இந்த நட்பு உண்டாகியிருக்கலாம். கடற்கரையில் மீன் உலர்த்தும் தொழிலில் தலைவி ஈடுபட்டிருக்கலாம். பரந்த கடற்கரையில் காலைப் பொழுதில் பரதவர்கள் கூடி மீன் பிடிக்கக் கட்டு மரங்களுடன் கடலினிற் சென்றுவிட்டால் மாலையிலேதான் மீள்வார்கள். ஆதலின் பகற்பொழுது முழுவதும் தலைவன் தலைவியைச் சந்திக்க நல்ல வாய்ப்பாய் இருந்தது. தாழம் புதர் நிறைந்துள்ள சோலைகள் மிக்கு இருத்தலின், பிறர் கண்ணில் படாமல் சந்திப்பதற்கு வாய்ப்புகள் இருந்தன போலும்! பல நாட்களாகவே இந்நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் தலைவி கடற்கரையில் பார்க்க வேண்டிய அலுவல் முடிந்து விட்டது. அவளைப் பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார்கள். முன்போலத் தலைவனை அடிக்கடி சந்திக்க முடியவில்லை எனினும், தலைவன் விடுவதாக இல்லை. அவன் மெல்லத் தோழியின் உதவியை நாடினான். தோழி, அவனுடைய வருத்தத்தையும் தலைவியின் துன்பத்தையும் கண்டு ஒருவாறு மனம் இரங்கினாள்; பகல் நேரத்தில் அவன் வந்து போக ஏற்பாடு செய்தாள்; அவன் வந்து தங்களைச் சந்திப்பதற்குரிய ஓர் இடத்தைக் குறிப்பிட்டாள். இதனைப் ‘பகற்குறி’ என்று இலக்கணநூல் பேசும். அந்த நேரத்தில் தோழி தலைவியும் தானும் வெளியிற்செல்வது போல வீட்டாருக்குப் போக்குக் காட்டிவிட்டுப் புறப்படுவாள்; தான் முன்னரே தலைவனிடம் குறிப்பிட்டுள்ள இடத்திற்குத் தலைவியை அழைத்துக் கொண்டு செல்வாள்.

இம்முறையில் ஒரு நாள் தலைவன் வந்தான். ஒரு புன்னை மரம் நன்கு தழைத்து வளர்ந்திருந்தது. பூரிப்பும் இளமையும் செழித்துக் கொழிக்கும் தன் காதலியைச் சந்திக்க இம்மரநிழல் மிகவும் பொருத்தமுடையது என நினைத்துவிட்டான் அவன். பாவம்! அவனுக்கு இம்மரத்தின் வரலாறு எவ்வாறு தெரிய முடியும்? ஆனால், தோழியும் தலைவியும் இம்மரத்தின் அருகே வரக்கூட நாணினர். ஏன்? வரவே மறுத்துவிட்டனர். தலைவனுக்கு ஒரே வியப்பு உண்டாயிற்று.

அதற்குள் தோழி அவனை நோக்கி, “ஐயனே, இப்பரந்த கடற்கரையில் இன்னும் எத்தனையோ மரங்கள் இருக்கின்றனவே! அவற்றுள் ஒரு மரத்தடிக்குச் சென்று விடுங்கள்,” என்று கூறினாள். தலைவனின் வியப்பு இன்னும் அதிகமாகி விட்டது. இவ்வாறு தலைவி மறுப்பதற்குரிய காரணத்தைத் தோழியிடம் கேட்டான். இதோ தோழி பேசுகிறாள்.

“புதிதாக வந்த பாணர்கள் பாடும் மெல்லிய இசைப்பாட்டைப் போல வெண்மையான வலம்புரிச் சங்குகள் ஒலிக்கும் விளங்கிய கடல் நீரை உடைய நெய்தல் நிலத் தலைவரே, யாம் ஒருநாள் விளையாடும் எம்தோழிகளுடன் வெள்ளிய கடற்றுறை மணலில் சென்று விளையாடி இருந்தோம். அப்பொழுது ஒரு புன்னை விதையை மணலுள் புதைத்து விளையாடிவிட்டு வரும் பொழுது அவ்விதையை மறந்துவிட்டோம். மீட்டும் அவ்விடம் சென்று காண்கையில் அப்புன்னை விதை வேர் ஊன்றி முளைத்து நின்றது. அது கண்டு நெய் கலந்த பாலுடன் கூடிய நீரை விட்டு அதனை வளர்த்தோம். எம் அன்னை அதனைக் கண்டு மகிழ்ந்து, ‘நீங்கள் வளர்த்து வரும் இப் புன்னையானது நும்மினும் சிறந்தது அன்றோ! இது நும்முடன் பிறந்த தங்கையாகும்,’ என்று அதன் சிறப்பைக் கூறினாள். எனவே, எம் தங்கையாகிய அதன் எதிரே நாம் சந்திப்பது மிகவும் நாணம் தருவதாய் உளது! அதன் எதிர் நகைத்து விளையாட மிகவும் வெட்கப்படுகிறோம். நீர் எம் தலைவிக்கு அருள் புரிவதாயின் இன்னும் எத்தனையோ மரங்கள் இங்குள்ளன கண்டீர்!”


விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
நெய்பொய் தீம்பால் பெய்துஇனிது வளர்ப்ப,
‘நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்’ என்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே;
அம்ம நாணுதும் நும்மொடு நகையே

விருந்திற் பாணர் விளர்இசை கடுப்ப
வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த்
துறைகெழு கொண்க! நீ நல்கின்
நிறைபடு நீழல் பிறவுமார் உளவே.

(நற்றிணை–172)

(ஆயம்–தோழியர் கூட்டம்; காழ்முளை–முற்றிய விதை முளை; துவ்வை–உம்முடைய போசரி; விருந்திற்பாணர்–புதிய பாணர்; விளர் இசை–மெல்லிய இசை; வான் கோடு–வெண்மையான சங்கு நரலும்–ஒலிக்கும்; துறை கெழு கொண்க–கடற்றுறையின் தலைவனே.)

புன்னை மரத்தையும் உடன் பிறந்த தங்கையாகக் கருதி, அதன் எதிரிலும் தலைவனுடன் விளையாட மறுத்த தலைவியின் பண்பாடும், புன்னையைத் தங்கை என்று கூறிய தாயின் பண்பாடும் அறிந்து மகிழ்தற்குரியன! இவ்வாறு பிறர் பார்க்கத் தலைவனைச் சந்திப்பது வெட்கமாகிறது என்ற குறிப்பால் அவனை விரைவில் வந்து மணந்து கொள்ளக் கூறுகிறாள் தோழி.

*****

சமய சஞ்சீவியாகிய தோழியின் அறிவுத்திறனை விளக்கும் பாடல் இது.

எம் ஊரில் தங்கலாமா?

நெய்தல் நிலக் கருப்பொருள் என்று கூறத்தக்கவை பனை, புன்னை முதலிய மரங்களும்; நாரை, சுறா முதலிய பறவை விலங்குகளும், மீன் முதலிய உணவுகளும் ஆகும். இந்நிலத்தில் வாழும் மக்கள் “பரதவர்” என்று குறிக்கப்படுவர். தலைவன் ‘துறைவன்’ என்றும் ‘சேர்ப்பன்’ என்றும் வழங்கப்படுவான். உரிப் பொருள் என்று கூறத்தக்கது தலைவி தலைவனைப் பிரிந்து ஆற்றாமையால் அரற்றும் நிலைமைதான். பெரும்பாலும் தலைவனும் தலைவியும் குடும்பம் நடாத்துகிற காலத்தில், பொருள் தேடவோ போர் செய்யவோ தலைவன் பிரிந்து சென்றுவிடுவான். ஒரு காலத்தைக் குறிப்பிட்டு அந்த நாளில் வந்து விடுவதாகக் கூறிப்போனாலும், தவிர்க்க முடியாத பல காரணங்களால் அந்த நாளில் வர இயலாமல் போவதும் உண்டு, அவ்வாறாயின், தலைவி சில காலம் பொறுமையுடன் இருப்பாள். பின்னும் தலைவன் வரவில்லையாயின், அவள் துயரம் தாங்க மாட்டாமல் வாய்விட்டு அரற்றுதலும் உண்டு. இவ்வாறு அவள் துயரைக் கூறும் பாடல்கள் ‘நெய்தல் திணைப் பாடல்கள்’ என்பர். இவ்வாறு உள்ள பாடல்கள் ‘உரிப் பொருளால் நெய்தல்’ என்ற தொகுப்பைச் சேரும். இன்னும் சில சந்தருப்பங்களில் கற்புக் காலம் அல்லாத களவுக் காலத்திலும் இத்தகைய பாடல்கள் தோன்றுவதுண்டு. களவில் தலைவி எவ்வளவு துயரம் அடைந்தாலும் அத்துயரைப் பிறர் அறிய வெளிக்காட்டல் இயலாது. எனவே, அவள் துயரைப் பெரிதுபடுத்திக் காட்டாமல் பாடல் அதனைக் குறிப்பால் மட்டும் சுட்டுவதுண்டு.

தலைவி துயரைப் பெரிதாக்கிக் காட்டாத பாடல்களை எவ்வாறு நெய்தல் திணை என்று பிரிப்பது?

நெய்தலுக்குரிய கடல், மீன் பிடித்தல், நாரை, சுறா முதலியன பேசப்பட்டாலும், அப்பாடலை நெய்தல் என்றே குறிப்பர். இவ்வாறு முதற்பொருளாலும், கருப்பொருளாலும் நெய்தல் என்ற பெயரைப் பெற்ற பாடல் ஒன்றைக் காண்போம்;

கடலை நம்பி வாழும் வாழ்க்கை இடர் மிகுந்த வாழ்க்கையாகும். காலையில் கடல்மேல் உணவு தேடிச் செல்பவர், மாலையில் தவறாமல் திரும்பி வந்துவிடுவர் என்ற உறுதி இல்லை. ஒரு மணி நேரத்தில் கடலில் எத்தகைய வேறுபாடுகள் தோன்றும் என்று கூறவியலாது. எனவே, நெய்தல் நிலத்தில் வாழும் மக்கள் இயற்கையிலேயே உடல் உரமும் மனத்திண்மையும் படைத்தவர்களாய் இருப்பார்கள். துன்பம் நேர்கையில் அதற்கு அஞ்சிக் கையற்று விடாமல் அதனை ஆற்றி இருப்பதே மனத்திண்மை என்று கூறப்பெறும். துயரத்தை ஆற்றி இருப்பதால் துயரத்தை அனுபவிக்கவில்லை என்று கூறுதல் தவறாகும்.

நல்ல கடல் துறைக்குத் தலைவன் அவன். கடல் படு செல்வம் அனைத்தும் அவனிடம் நிரம்ப உள்ளன. ஆனால், அவன் மனம் அவற்றால் அமைதியைப் பெற முடியவில்லை. மனத்தில் அமைதியை உண்டாக்கும் காதலியை எதிர்ப்பட்டான் ஒருநாள்; அதுவும் ஒரு கடற்கரையில். கடற்கரை என்று கூறினவுடன் சென்னைக் கடற்கரையையும் ஆங்கு வரும் கூட்டத்தையும் நினைந்து கொண்டு அவதியுற வேண்டா. தலைவன், தலைவியைச் சந்தித்த இடம் அமைதியானதும், மக்கள் நடமாட்டம் அற்றதுமான ஒரு கடற்கரை. கடல் காதலை மிகுதிப்படுத்தும் இயல்புடையது என்பது பழந்தமிழர் கொள்கை ‘நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி, நேரம் கழிவதிலும் நினைப்பின்றியே சாலப் பலப்பல நற்பகற் கனவில் தன்னை மறந்த லயம் தன்னில் இருந்தேன்’ என்று பாரதியார் பாடியதும் இக்கருத்தை வலியுறுத்தும். கடற்கரையில் தனியே காணப்பட்ட அக்காரிகை, அத்தலைவன் மனத்தைக் கவர்ந்து விட்டாள். பல நாளும் கடற்கரைக்கு வரும் பழக்கம் உடையவன் அவன்; அவளும் அவ்வாறே. ஆனால், ஒருநாள் அவனும் அவளும் ஒருவரை ஒருவர் கூர்ந்து நோக்கினர்; காதல் பிறந்தது; அன்றிலிருந்து அவனும் அவளும் பலவிடங்களில் தனியே சந்தித்தனர்.

அவர்கள் ஒழுக்கம் மெள்ளத் தோழிக்கு எட்டியது. தோழியும் தலைவியைப் போல ஒத்த வயதினள். ஆகலின், தலைவியின் இவ்வாழ்க்கை மாறுபாட்டில் அதிக வியப்படையவில்ல. ‘நடக்கவேண்டிய ஒன்றுதானே இது,’ என்று கருதி இருந்துவிட்டாள் போலும்! நாட்கள் பல சென்றன. தலைவன் தலைவியருடைய நட்பு நாளுக்குநாள் பிறைமதி போல வளர்ந்துகொண்டே வந்தது. அந்த அளவில் அது மகிழ்ச்சிக்குரிய செயல்தான். ஆனால் இது எவ்வாறு சென்று முடியப்போகிறதோ என்ற ஐயம் தோழிக்குத் தோன்றிவிட்டது. தலைவன் மிக உயர்ந்தவன். பண்பாடு உடையவன். எனவே அவன் தலைவியைக் கைவிட்டு விட மாட்டான் என்றாலும், எத்துணை நாட்களுக்குத்தான் இவ்வாறு மறைமுகமாகவே அவன் வந்து திரும்புவது! மறைந்து ஒழுகும் களவு ஒழுக்கத்தில் அதிக இன்பத்தைப் பெறுகிறான் தலைவன் என்ற நினைவு தோழிக்கு. தலைவி மட்டும் அதில் மகிழ்ச்சி அடையவில்லை? அடையத்தான் செய்கிறாள் ஆனாலும், அவள் பெண் தானே! பெண்களுக்கே உரிய எத்தனையோ கவலைகள் அவளைப் பிடித்து ஆட்டுகின்றன. என்ன செய்வாள் பாவம் வீட்டில் தாய், அண்ணன்மார், தந்தை என்ற அனைவரும் என்ன நினைப்பார்களோ என்ற அச்சம், ஒரு புறம்; ஊரில் உள்ள பெண்டிர்தாம் எப்படிப்பட்டவர்! தாம் உண்டு, தம் வேலை உண்டு என்று இருக்கப்படாதா? அதுதான் போகட்டும். இப்பெண்டிர் அனைவரும் பிறக்கும்பொழுதே பாட்டிமார்களாய்ப் பிறந்து விட்டார்களா! ஒவ்வொருத்தியும் இளமையுடையவளாய் இருந்திருக்க மாட்டாளா! அந்தக் காலத்தில் தான் வாழ்ந்த வாழ்வை ஒவ்வொருத்தியும் நினைத்துப் பார்க்கமாட்டாளா? வேறு வேலையே இல்லாதவர்கள் போல இப்பெண்கள் ஏன் இப்படித் தலைவியைப் பற்றிப் பேசி அவள் பாவத்தைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்?

அம்மம்ம! ஒருநாளில் எப்பொழுதோ வருகிறான் தலைவன். அவனுடன் அவள் கழிக்கும் சில நாழிகை நேரத்திற்காக அவள் அனுபவிக்கும் தண்டனைதான் எவ்வளவு! அவன் பிரிவால் உண்டாகும் துயரம் ஒரு புறம். அதனைக் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் சுட்டிக் காட்டி ஏசும் ஊர்ப் பெண்கள் ஒருபுறம், இவை இரண்டின் இடைப்பட்டு அவள் படும்பாடு ஒருபுறம்! இவை எல்லாம் தலைவனுக்கு எங்கே தெரியப் போகின்றன! தலைவியின் நினைவு வந்தவுடன் அவன் புறப்பட்டு விடுகிறான். பகல் என்றும், இரவு என்றும், மழை என்றும், வெயில் என்றும் அவன் பார்ப்பது இல்லை. அவன் வரும் வழியிலேதான் எத்துணை அச்சந்தரும் தொல்லைகள்! தன்னிச்சையாகத் திரியும் சிங்கம்; அதன் சத்தத்தால் கலங்கும் யானை போன்றவை. வரும் வழியிலேதான் எத்தனை ஆறுகள்! அவற்றில் முதலைகள் எத்தனை! நினைக்கும் பொழுதே நெஞ்சு நடுங்குகிறது! இவை அனைத்தையும் கடந்து அவன் வருகிறான் என்று நினைத்தாலே, அவன் வந்த பிறகு பெறும் இன்பம் வேண்டா என்று கூறத் தோன்றுகிறது. அவனோ, இவற்றுள் ஒன்றுக்கும் கவலைப்படுபவனாகவே தெரியவில்லை. வழியில் வரும் ஏதம், தலைவி படும் துயரம் இவை இரண்டில் ஏதேனும் ஒன்றுக்காவது அவன் அஞ்ச வேண்டுமே! அதுதான் இல்லை. நாட்கள் கழிகின்றன. திருமணம் செய்துகொண்டு வாழ வேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு எழுந்ததாகத் தெரியவில்லை.

நாட்கள் செல்லச் செல்லத் தலைவியின் வருத்தம் எல்லைக் கடக்கிறது. தோழி ஒருத்திக்குத்தான் தலைவியின் துயரம் எவ்வளவு என்பது தெரியும். தலைவனைக் கண்டு பலபடியாகக் குறிப்பாகத் தோழி பேசிப் பார்த்தாள். அவனுடைய காதில் அச்சொற்கள் ஏறுவனவாகத் தெரியவில்லை. நயமாகப் பலமுறையும் தம் குறையைச்சொல்லி வருந்துமுகமாகப் பல கூறிப் பார்த்தாள். அவனிடம் நேரே கூறிய முறைகளைவிடப் பலமுறை அவன் காதில் விழும்படியாகவும் கூறினாள். இவ்வாறு அவள் கூறுவதைச் ‘சிறைப்புறமாகக் கூறியது’ என்று புலவர் கூறுவர். இவ்வாறு மறைமுகமாகப் பலமுறை கூறியும் தலைவன் திருமண ஏற்பாடு ஒன்றும் செய்யாமல் இருந்து விட்டமையின், அத்தோழி ஒருநாள் மாலைப் பொழுதில் தலைவனைக் கண்டு நேரே அவனிடம் பேசத் தொடங்கி விட்டாள்.

பகல் நேரத்தில் தலைவியைச் சந்திக்க வந்தான் தலைவன். அவன் புறப்படுவதற்குள் மாலை முற்றி இருள் கவிய ஆரம்பித்து விட்டது.

“மிகவும் உயர்ந்த ஆகாயத்தில் திரிகின்ற செழுமையான கதிர்களை உடைய சூரியன் பெரிய மலைப் பக்கத்தில் மறைந்து விட்டான். ஆதலால், கடற்கரையில் யாரும் போக்குவரத்து இல்லை. இறால் மீன்களைத் தின்று விட்டு எழுந்த கரிய கால்களையும் வெண்மை நிறத்தையும் உடைய நாரைகள், உப்புக் குவட்டின் மேலே பறந்து சென்று, கரிய கிளைகளையுடைய புன்னை மரத்தின் கிளைகளில் தம் துணையுடன் தங்கிவிட்டன. தண்டுடன் கூடிய நெய்தல் மலர், மறையும்படியாக நீர் பெருகுகிற கழியில் துணையுடன் கூடிய சுறா மீன்கள் வழங்குகின்றன. இரவிலும் ஒலிக்கின்ற கடலில் பல விளக்குகளை எடுத்துக் கொண்டு எம் சுற்றத்தார் மீன் பிடிக்கச் சென்றுவிட்டார்கள். ஆதலால், அலைகளின் பிசிர் வீசும் கடல் மத்தளம் போல ஒலிக்கிற எம்முடைய ஊரில் இன்றிரவு தங்கி விட்டுப் போனால் யாது குறை ஐயா?”


சேய்விசும்பு இவர்ந்த செழுங்கதிர் மண்டிலம்
மால்வரை மறையத் துறைபுலம் பின்றே;
இறவுஅருந்தி எழுந்த கருங்தால் வெண்குருகு
வெண்குவட்டு அருஞ்சிறைத் தாஅய்க் கரைய
கருங்கோட்டுப் புன்னை இறைகொண் டனவே;
கணைக்கால் மாமலர் கரப்ப மல்குகழித்
துணைச்சுறா வழங்கலும் வழங்கும்; ஆயிடை
எல்இமிழ் பனிக்கடல் மல்குசுடர்க் கொளீஈ
எமரும் வேட்டம் புக்கனர்; அதனால்

தங்கின் எவனோ தெய்ய பொங்குபிசிர்
முழவுஇசைப் புணரி எழுதரும்
உடைகடல் படப்பைஎம் உறையின் ஊர்க்கே?
(நற்றிணை–67)


[மால் வரை–பெரிய மலை; துறை புலம்பின்றே – கடற்கரையில் ஆள் நடமாட்டம் இல்லை; இறவு–இறால்; வெண்குவட்டு–உப்புக் குவட்டில்; அருஞ் சிறைத்தாஅய்–அரிய சிறகை வீசிப்பறந்து; இறை–தங்குதல்; கணைக்கால்–கொழுத்த தண்டு; எல் இமிழ்–இரவு சூழ்ந்த; முழவு–மத்தளம்; உடை கடல்–அலைகள் மேல் எழுந்த வீழ்ந்து உடைகிற கடல்]

திருமணம் ஆவதற்கு முன் தலைவியின் வீட்டில் தங்கிச் செல்லாம் என்று கூறுவது இயலாத காரியம் என்பதைத் தலைவன் அறிய மாட்டானா? தோழிக்கும் அது தெரியாதா? இருவருக்குமே நன்கு தெரியும். ஆனால், ஏன் தோழி இவ்வாறு கூறினாள்? இவ்வாறு கூறுவதன் உட்பொருளை நன்கு அறிந்தாவது தலைவன் மணம் செய்துகொண்டு வீட்டில் தங்கமாட்டானா என்ற எண்ணம்தான்?

கடல் துறையில் யாரும் இல்லை என்றதனால் அவன் மீண்டு போகும்பொழுது கள்வரால் இடைஞ்சல் ஏற்படக்கூடும் என்பதைக் குறிப்பிட்டாள். நாரைகள்கூட மாலைக் காலத்திலே தம் பேடைகளோடு கூட்டில் உறையச் செல்கின்றன என்ற குறிப்பால், ‘ஆண் மகனாகிய நீ இன்னும் மணம் செய்துகொண்டு குடும்பம் வைக்காமல் தனிவாழ்க்கையில் களவே சிறப்பென்று கருதி வாழலாமா?’ என்றும் இடித்துக் கூறினாள். கேவலம் கொல்லுதலையே தொழிலாகக் கொண்ட சுறாகூடத் தன் துணையுடன் வாழ்கிறதென்று எடுத்துக்காட்டுதலில் எவ்வளவு எள்ளல் குறிப்பைப் பெய்துவிடுகிறாள் அத்தோழி. ‘எம் சுற்றத்தார்கள் கடலில் மீன் வேட்டைமேல் சென்றுள்ளார்கள்.’ என்பதால் வீட்டில் ஒருவரும் இல்லையென்பதைக் குறிப்பிட்டு விட்டு, ‘நீர் இந்த நேரத்தில் செல்வது கூடத் தகாது’, என்பதையும் ‘எம் சுற்றத்தார் கடற்கரையில் இருப்பர்’ என்னும் குறிப்பால் சுட்டுகிறாள்.

மருதத் திணை

அகத்துறை இலக்கியத்தில் குறைந்த அளவு பாடல்களைப் பெற்றிருப்பது மருதத் திணையேயாம். வயலும் வயல் சார்ந்த இடமும் இதற்கு நிலைக்களம். விடியற்கால நேரம் இதற்குரிய பொழுதாகும்.

தவைன் தலைவியைப் பிரிந்து சென்று, தவறான செயல்களில் ஈடுபட்டுவிட்டு, விடியற்காலம் மீள்கிறான். அந்நிலையில் தலைவி அவனுடன் பிணங்கிக் கொள்கிறாள். அவர்கள் ஊடலை (பிணக்கை) அடிப்படையாகக் கொண்டு தோன்றுவன இப்பாடல்கள்.

‘பெயரன் பிறந்தான்’

தவறு செய்த தலைவன் வருந்துகிறதைச் சித்திரிக்கிறது இப்பாடல்.

மருதம் என்ற இத்திணையுள் தலைவன் தலைவியரிடையே தோன்றும் சிறு பிணக்குகள் கூறப்பெறும். பிணக்குகள் எப்பொழுது தோன்றும்? ஒருவருக்கு விருப்பம் இல்லாத ஒரு செயலை மற்றவர் செய்ய நேர்ந்தால்தானே வருத்தம் நேரிடமுடியும்? தலைவன் எது செய்யினும் தலைவிக்கு அது விருப்பத்தைத் தருதலின், குடும்பக் காரியங்களில் பிணக்கு ஏற்பட வழியில்லை. மேலும், தலைவனோ, தலைவியோ, தமக்கென்று தனிப்பட்ட ஒரு செயலையும் செய்வதில்லை யாதலானும், எது செய்யினும் அது குடும்ப நலன் கருதியே செய்யப்படுதலானும் பிணக்குத் தோன்ற வழியில்லை. எனவே, மருதமாகிய ஊடல் தோன்ற ஒரே ஒரு காரணந்தான் எஞ்சியது. தலைவன் தலைவியை ஏமாற்றிய வழியே ஊடல் தோன்றலாயிற்று. தலைவி தனக்கு என்ன கொடுமையைத் தலைவன் இழைத்தாலும் பொறுத்துக் கொள்வாள். ஆனால், அவன் வேறு ஒருத்தியை விரும்பினான் என்று கண்டால் பொறுக்கமாட்டாள். ‘வட்டில் சோற்றைப் பங்கிட்டாலும் வாழ்க்கையைப் பங்கிட மாட்டாள்’ என்பது இன்றும் தென்னாட்டில் வழங்கும் பழமொழி.

‘இத்துணைச் சிறந்த காதல்மணம் புரிந்துகொண்ட தலைவனா வேறு ஒரு பெண்ணை விரும்பினான்?’ என்று கேட்கத் தோன்றுகிறதா? ஆம்! அவனேதான் இவ்வாறு செய்தான். அவன் இவ்வாறு செய்வதற்காகவே பெண் குலத்தின் ஒரு பகுதியைப் பிரித்துப் ‘பரத்தையர்’ என்று அவர்கட்குப் பட்டமும் சூட்டி, ஊரின் ஒதுக்கில் இடம் கொடுத்து வைத்திருந்தான். அவருள் ‘காதற் பரத்தையர், இற்பரத்தையர், சேரிப் பரத்தையர்,’ எனப் பல பிரிவினர் உண்டு.

ஒரு சில ஆடவர் இச்சேரிகட்கும் சென்று வந்தனர் போலும்! ஒரு நாட்டில் வாழும் மனிதர் அனைவரும் சிறந்த பண்புடையராகவே இருத்தல் வேண்டும் என்று எதிர்பார்த்தலும் இயலாத காரியம். பல்வேறு பண்பாடுடைய மக்களும் கலந்ததுதான் சமுதாயம் என்று கூறப்படும். இத்தகைய மனப் பண்புடையவரும் பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்தனர். இவர்கள் வாழ்வு பற்றியும் ஒரோ வழிக்கவிஞன் பாடல்கள் பாடினான். அவற்றை மருதத்திணைப் பாடல்களாகப் பிற்காலத்தார் தொகுத்தனர். தலைவன் இவ்வாறு பரத்தையின் வீட்டுக்குச் சென்று வந்த பொழுது தலைவி அது பொறுக்கமாட்டாமல் அவனை வீட்டினுள் அனுமதிக்க மறுத்துவிடுவாள். தலைவன் பாடு திண்டாட்டமாய்ப் போய்விடும். இது மாதிரி சந்தருப்பங்களில் தலைவன் பிறருடைய உதவியை நாடி, அது சாக்காக வீட்டினுள் நுழைவதும் உண்டு. அவன் உதவி வேண்டுபவர்கள் தோழி, விருந்தினர், குழந்தை என்ற மூன்று இனத்தவராவர். தோழியை வேண்டிக்கொள்ள, அவள் தலைவியிடம் தூது நடந்து தலைவனை மன்னித்துவிடுமாறு கூறுதலும் உண்டு. தலைவனிடம் பேச்சு வார்த்தைகள் இல்லாமலே தலைவி குடும்பம் நடத்திக்கொண்டு வரும் வேளையில் தலைவனுடைய நற்காலத்தின் அறிகுறியாக விருந்தினர்கள் வந்து சேர்தலும் உண்டு. விருந்தினரின் எதிரே தலைவி தன் கோபத்தைக் காட்டுதல் பண்பாட்டுக்கு விரோதமன்றோ? எனவே, விருந்தினரைக் கண்டவுடன் அவள் கோபம் தணிந்துவிடுவாள். இன்னும் சில சந்தருப்பங்களில் குழந்தையைக் கையில் ஏந்திக்கொண்டு அது சாக்காகத் தலைவன் உள்ளே வந்து விடுதலும் உண்டு. இவை அனைத்திற்கும் உதாரணமாக பல பாடல்கள் காணலாம்.

மனித வாழ்க்கையின் விரும்பத்தகாத ஒரு பகுதியை விளக்குவதுதான் மருதத்திணைப் பாடல். அந்தச் சமுதாயத்தில் வாழ்ந்த மக்களுள் ஒரு சிலரே இந்தத் தவறான வாழ்க்கையைக் கைக்கொண்டிருக்கக்கூடும் என்று நினைப்பது பொருத்தந்தானே!

அதற்கேற்பவே அகத்துறைப் பாடல்களில் மருதத்திணைப் பாடல்கள் நூற்றுக்குப் பத்து வீதமே உள்ளன. நூறு ஆண் மக்கள் வாழ்கின்ற ஒர் இடத்தில் பதின்மர் ஓரளவு பொருந்தா ஒழுக்கம் உடையவராய் வாழ்வதானால் பெருந்தீங்கு எதுவும் விளைந்துவிடப் போவதில்லை.

சமுதாயத்தைப் பொறுத்தமட்டில் இவ்வகை வாழ்க்கை விரும்பத்தகாததாயினும், கவிதையுலகில் மருதம் பற்றிய பாடல்கள் மிக்க சுவையுடையனவாய் இருக் கின்றன. பரத்தையர் வீடு சென்று வந்த தலைவனைப் பற்றிக் கூறும் பாடல்கள் ஒருபுருமிருக்க, அப்பரத்தையரைப் பற்றியும் அவர்களுடைய மனோதத்துவம் பற்றியும் கூறுகிற பாடல்களும் சில உண்டு.

தங்களுடைய வாழ்க்கை இழிந்தது என்றோ, தவறானது என்றோ, அப்பரத்தையர்கள் கருதியதாகத் தெரியவில்லை. தம்மாட்டு வந்து செல்லுகின்ற தலைவன்மார் தம்முடைய வீட்டில் தலைவியரிடம் அஞ்சி நடுங்குகின்றதைக்கண்டு அவரை எள்ளி நகையாடுகின்ற அளவுக்கு அவர்கள் மனத்திடம் படைத்தவர்களாய் இருந்திருக்கின்றார்கள். தலைவியர்மாட்டு அச்சமிருப்பினும் மீட்டும் மீட்டும் தம்பால் தலைவர்கள் வருகின்ற காரணத்தாலும், தமக்கு வேண்டிய உபசரணைகளைச் செய்து போற்றுகின்ற காரணத்தாலும், தாங்களும் சமுதாயத்தின் ஒரு சிறந்த உறுப்பெனவே அப்பரத்தையர் கருதிக்கொண்டனர். இந்நிலையில் உலகப் பெரியாருள் ஒருவரான ‘டால்ஸ்டாய்’ எழுதிய ‘குரூட்டர் சொனட்டா’ என்ற கதை நினைவு கூர்தற்கு உரியது. உணவுவிடுதி ஒன்றைக் காண டால்ஸ்டாய் உள்ளே செல்லுகிறார். அங்கே சில பெண்கள் கேளிக்கையில் பொழுது போக்குவதைப் பார்த்து, “நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?” என்று கேட்கின்றார். அவர்கள் சிரித்துக்கொண்டே, “நாங்கள் சும்மாதான் இருக்கிறோம்,” என்று விடை பகருகிறார்கள். அதை நம்ப முடியாத டால்ஸ்டாய் விடுதித் தலைவரைப் பார்க்கின்றார். உடனே அத்தலைவர் மிக்க சினத்துடன் அப்பெண்களைப் பார்த்துப் “பேதைகளே, நீங்களெல்லாம் பரத்தையர்கள் என்பதை அவருக்குத் தெரிவியுங்கள்.” என்று கூறுகிறார். ஆனால், அப்பெண்கள் அதைப்பற்றிக் கவலைப்படாமல் இருப்பதைப் பார்த்த டால்ஸ்டாய், விடுதித் தலைவரைப் பார்த்து, “ஐயா, நாமெல்லாம் (ஆண்களெல்லாம்) நல்லவர்களாய் இருந்து விட்டால் இப்படிப்பட்டவர்கள் சமுதாயத்தில் இருக்க வேண்டுவதில்லை அல்லவா?” என்று கூறினாராம்.

பரத்தையரின் மனோநிலையை விளக்க இந்த ஒரு உதாரணத்துடன் நற்றிணைப் பாடல் ஒன்றையும் பார்ப்போம்:

தலைவன் பரத்தை வீட்டில் வந்து பல நாட்களாய்த் தங்கிவிட்டான். இவன் வீட்டைவிட்டு வருகிற காலத்தே தலைவி சூல் முதிர்ந்திருந்தாள். எனவே, பரத்தையின் இல்லம்புக்க தலைமகன், வீடு செல்லவேண்டும் என்னும் நினைவின்றி அங்கேயே தங்கிவிட்டான். இந்நிலையில் ஒரு நாள் அவனுக்கு மகன் பிறந்த செய்தியைச் சிலர் வந்து கூறினர். எவ்வளவுதான் தலைவியை மறந்தவன் போல அங்குத் தங்கிவிட்டாலும், மகன் பிறந்து விட்டான் என்று கேள்விப்பட்டவுடன் வீடு திரும்ப வேண்டும் என்ற எண்ணம் வராமலா இருந்துவிடும்? எனவே, தன் வீட்டுக்குச் செல்ல முடிவு செய்துவிட்டான். ஆனால், அம் முடிவைக் கொண்டுசெலுத்துவதில், இரண்டு பெரிய அல்லல்கள் உள்ளன. முதலாவது, இத்தனை நாட்கள் தங்கிய பரத்தை வீட்டைவிட்டு எவ்வாறு திடீரென்று புறப்படுவது என்பதாகும். இரண்டாவது, இத்தனை நாட்கள் எட்டிப் பாராத தன் வீட்டுக்குள் இப்பொழுது எப்படித் திடீரென்று நுழைவது என்பதாகும். இவ்விரண்டு தொல்லைகளையும் ஒரே வகையில் தீர்க்க முனைகிறான் தலைவன். இரவு நடுயாமத்திற்குமேல் புறப்பட்டால் இரண்டு வீட்டில் உள்ளவர்கள் நன்கு உறங்கிக் கொண்டிருப்பார்கள். எனவே, அந்த நேரத்தில் புறப்பட்டுத் தன் வீட்டுக்குள் புகுந்துவிடலாம் என அவன் முடிவு செய்து விட்டான். ஆனால், பரத்தையை இவ்வளவு எளிதாக ஏமாற்ற முடியுமா? எனவே, அவள் அவன் செய்தவை அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருந்தாள். தலைவனுடைய சுற்றத்தார் அனைவருக்கும் பெருத்த மகிழ்ச்சி உண்டாயிற்று, எப்படியோ தலைவன் அப்பரத்தையை ஏமாற்றிவிட்டு இன்று தப்பித்துக்கொண்டு வந்து விட்டானே என்று மகிழ்ந்திருக்கின்றனர்.

ஆனால், பரத்தைக்கு மட்டும் உண்மை தெரியும். அவன், தான் விட்டதாலேதான் போக இயன்றதே தவிரத் தன்னை ஏமாற்றிவிட்டுச் செல்லவில்லை என்பதையும் அவனுடைய சுற்றத்தார்கள் காதில் விழும்படி கூறிச் சிரிக்கிறாள்.

“பெரிய காவலையுடைய தலைவனுடைய பெரிய மாளிகையில் நீண்ட நாவையுடைய ஒளி பொருந்திய மணியானது அடித்தது. ஒலி உண்டாக்குகின்ற தென்னங்கீற்றால் மிடைந்து அலங்கரிக்கப்பெற்ற முற்றத்தில் வெண்மையான மணல் பரப்பப் பட்டிருக்கிறது. முன்பு தலைவன் பரத்தை வீட்டுக்குச் செல்கையில் அவனைச் சுற்றிப் பாணர் கூட்டம் காவல் காத்துச் சென்றதைப் போல் இப்பொழுது தலைவி வீட்டில் ஆராய்ந்த ஆபரணத்தை அணிந்த மகளிர் நற்சொல் கேட்டுச் சூழ்ந்து முற்றத்தில் நிற்கின்றனர். நறுமணம் கமழும் விரிப்பு விரித்துள்ள நல்ல படுக்கையில் செவிலித் தாயுடன் சமீபத்தில் பிறந்த புதல்வன் உறங்கிக்கொண்டிருக்கிறான். பிணி அண்டாமல் இருக்க வெண்சிறு கடுகை அரைத்து எண்ணெயுடன் கலந்து, அதனால் தலைமுழுகிய ஈரத்துடன் அழகு விளங்கும் மேனியையுடைய தலைவி தன் இரண்டு இமைகளும் ஒன்றுடன் ஒன்று பொருந்த உறங்குகிறாள். அத்தகைய நடு இரவு நேரத்தில் அகன்ற நீர்த்துறையையுடைய தலைவனும் கள்ளனைப்போல அவனுடைய வீட்டினுள் நுழைந்தான். தலைவனின் தந்தையின் பெயரை வைத்துக்கொள்ளக்கூடிய மகன் பிறந்த காரணத்தால்.”

நெடுநா ஒண்மணி கடிமனை இரட்டக்
குரைஇலைப் போகிய விரவுமணற் பந்தர்ப்

பெரும்பாண் காவல் பூண்டுஎன ஒருசார்த்
திருந்துஇழை மகளிர் விரிச்சி நிற்ப
வெறிஉற விரிந்த அறுவை மெல்லணைப்
புனிறுநாறு செலிலியொடு புதல்வன் துஞ்ச
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈர்அணிப்
பசுநெய் கூர்ந்த மென்மை யாக்கைச்
சீர்கெழு மடந்தை ஈரிமை பொருந்த
நள்என் கங்குல் கள்வன் போல
அகன்துறை ஊரனும் வந்தனன்
சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே.
(நற்றிணை–40)


(நெடு நா ஒண்மணி–நீண்ட நாவையுடைய மணி கட்டி இருத்தலின் செல்வ மிகுதி கூறினார்; இரட்ட– ஒலிக்க; பெரும்பாண்–தலைவனைப் பரத்தை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் தொழிலுடையவன்; விரிச்சி–நல்ல சொல் (சகுனம்)கேட்டல்; வெறி–வாசனை; அறுவை–அறுக்கப்பட்டது, துணி; புனிறுநாறும்–ஈன்ற அணிமை தோன்றும்; ஐயவி–வெண் சிறு கடுகு (இதனைக் கலந்தால் பேய் முதலியன அண்டா எனப் பழந்தமிழர் நம்பினர்); நெய்யாட்டு–எண்ணெய் முழுக்கு; யாக்கை–உடம்பு; சிறந்தோன்பெயரன்–தலைவனுடைய தந்தை (சிறந்தோன்)க்குப் பெயரன்.

***

‘வாரிரோ விருந்தினரே!’

தலைவன் தவற்றைத் தலைவி காணும் முறையைக் கூறும் பாடல் இது.

விடியற்காலை நேரம்–கதிரவன் உதயம் செய்ய இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது. என்றாலும், ஓரளவு வெளிச்சம் தோன்றிவிட்டது. இந்த நேரத்தில் ஒருவன் முக்காடு இட்டுத் தலையை மறைத்துக் கொண்டு, ஊரின் வெளிப்புறத்தே இருந்து வருகிறான்; ஏதேனும் ஒலி அண்மையில் கேட்டாலும் மிகுந்த அச்சத்துடன் திரும்பிப் பார்க்கிறான். அவ்வளவு கோழையா இவன், அரவத்தைக் கேட்டு அஞ்சுவதற்கு? இல்லை. தன்னை இந்த நிலையில் யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதே இவனுடைய நோக்கம் போலும்! ஏன் இவ்வாறு பிறரைக் கண்டு அஞ்சுகிறான்? ஒருவேளை பிறர் பொருளைத் திருடிவிட்டு வருகிறானா? அவ்வாறு தெரியவில்லை, இவன் முகத்தைப் பார்த்தால் உயர்ந்த இடத்தைச் சேர்ந்தவன் என்று கூறத் தோன்றுகிறதே தவிரத் திருடன் என்று கூற நா எழவில்லை? அவ்வாறாயின் இவன் ஏன் இவ்வாறு அஞ்ச வேண்டும், ஆம்! ஏதோ செய்யத் தகாத செயல் ஒன்றைச் செய்துவிட்டு வருகிறான் போலும்! ‘செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை’, என்ற குறளை மறந்துவிட்டு ஏதோ தவறு செய்திருக்க வேண்டும்.

இவனுடைய இளமை இவன் என்ன தவற்றைச் செய்திருக்கக் கூடும் என்று நாம் ஊகிக்க இடம் தருகிறது. மனிதர்கள் தவறு என்று அறிந்திருந்தும் செய்யும் தவறுகள் பல. அவற்றுள்ளும் பெரிய தவறு ஒழுக்கக் கேடுதான். தன்னால் காதலித்து மணம் செய்து கொள்ளப்பெற்ற மனைவி வீட்டில் இருக்கிறாள். அவளையும் தானே தேடிப் பிடித்துக் காதலித்தான். கொடுப்பாரும் அடுப்பாரும் இல்லாமல் அவளுடன் நீண்ட நாட்கள் களவு வாழ்க்கையில் ஈடுபட்டான். அத்தோழி இவனை எத்துணை முறை கண்டு கேட்டாள்! நேரடியாகவும் குறிப்பாகவும் தலைவி படும்பாட்டை எடுத்துக் கூறினாள்; மணம் செய்து கொண்டு வாழ வேண்டுவதன் இன்றியமையாமையை எடுத்துக் கூறினாள்; இவ்வாறு களவு நடைபெறுவது நீண்ட நாட்கள் நடைபெற முடியாது என்பதை எடுத்துக் காட்டினாள்; என்றாவது ஒருநாள் தலைவியினுடைய தந்தை அல்லது அண்ணன்மார்களிடம் அகப்பட்டு கொள்ள நேரிடும் என்று அச்சுறுத்தினாள்; களவுக் காலத்தில் சில மணி நேரமே பெறக்கூடிய இன்பத்தை இடையீடுபடாமல் அனுபவித்துக் கொண்டிருக்கலாமே என இவனுடைய ஆசையைத் தூண்டிவிட்டுப் பார்த்தாள். இவ்வளவு தூரம் அவள் கூறியும் இவள் அதற்காக எல்லாம் அசைந்து கொடுத்தால்தானே! ஒன்றுமே நிகழாததுபோல இவன் தினம் பகலிலும், இரவிலுமாக வந்து போகிறான். இவனுக்கு மட்டும் தோழி கூறும் காரணங்கள் தெரியாதவைகளா? தெரிந்திருந்தும் பின்னர் ஏன் களவை நீட்டித்துக் கொண்டிருக்கிறான்? இத்தனை தொல்லைகளையும் மீறி இவன் களவை நீட்டிக்கிறான் என்றால், அதில் ஏதோ சிறப்பு இருக்கவேண்டும்.

பிறர் அறியாமல் செய்கிற ஒவ்வொரு செயலிலும் மனிதன் இன்பத்தை அடைகிறான் போலும்! ஆகையால், களவு வாழ்க்கையில் அதிக இன்பம் பெறுவதாக எண்ணி, தலைவன் களவை நீட்டித்தான் போலும்! இதே தலைவன் தான் இப்பொழுது குடும்பம் நடத்துகிறான், அதே தலைவியுடன். ஆனால், திடீரென்று ஒரு நாள் இவனுக்குப் பழைய ஞாபகம் எங்கிருந்தோ வந்துவிட்டது போலும்! பிறர் அறிந்தால் எள்ளி நகையாடுவர் என்று அறிந்திருந்தும், இவன் பரத்தை வீட்டிற்குப் போய்வர முடிவு செய்துவிட்டான் இவன்மேல் அதிகத் தவறு கூறவும் காரணம் இல்லை. இவன் ஒரு கலைஞன். இவனுடைய கலை மனம் பிறருடைய அங்க நெளிவுகளிற்கூட ஓர் அழகைக் காண்கிறது. பாடலைக்கொண்டு இவன் எவ்வளவு கலையுள்ளம் படைத்தவன் என்பதை அறிதல் கூடும். எனவே, எங்கோ ஒருநாள் ஒரு பரத்தையின் ஆடல் பாடல்களைக் கண்டும் கேட்டும் மகிழ்ந்தான். முதலில் அவளுடைய கலையிலேதான் இவன் ஈடுபட்டான்; கலையுள்ளம் எத்துணைச் சிறந்ததாக இருப்பினும், அதனால் சில தீமைகளும் விளைதல் கண்கூடு.

கலை உள்ளம் என்றாலே அது எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியது என்பதை அறிந்து கொள்ளலாம். உணர்ச்சி எவ்வளவுக்கு எவ்வளவு மிகுகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு கலையில் ஈடுபட முடியும். எனவே, கலையும் உணர்ச்சியும் கைகோத்துச் செல்லும் இயல்புடையன என்பதையும் அறியலாம். உணர்ச்சி மிகுந்து விட்டபொழுது மனிதன் அறிவையும் நடுவு நிலையையும் இழக்க நேரிடுகிறது. அறிவை இழக்கும் பொழுது செய்யத் தகுவன இவை, தகாதன இவை என்று பாகுபாடு மறைந்துவிடுகிறது. உதாரணமாக, கோபம் என்ற உணர்ச்சியை எடுத்துக்கொள்வோம். எத்துணைச் சிறந்த பெரியவர்களும் கோபம் உற்ற பொழுது தவற்றைச் செய்து விடுகின்றார்கள். கோபம் தணிந்த பிறகு தாமே தம் செயலைக் கண்டு வெட்கித் தலை குனிகின்றனர். என்றாலும், மறுமுறை கோபம் வாராமல் இருப்பதில்லை. எனவே, கோபம் முதலிய உணர்ச்சிகள் மிகும்பொழுது அறிவும், நடுவு நிலையும், ஆராய்ச்சியும், நன்மை தீமை முதலிய பாகுபாடும் விடைபெற்றுக்கொள்ளும் என்பது தெளிவு. இக் காரணத்தாலேதான் சிறந்த கலைஞர்கள் வாழ்க்கையில் பெரும்பாலும் தவறி விடுகிறார்கள்.

இறைவனிடம் செலுத்தப்படும் பத்தி உணர்ச்சி ஒன்று நீங்கலாக, ஏனைய உணர்ச்சிகள் அனைத்தும் இத்தீமையை ஓரளவு செய்யாமல் இருப்பதில்லை. பரத்தையின் ஆடல் பாடலைக் கண்டுகேட்டு மயங்கிய தலைவன், அவ்வாடல் பாடல்களிலேதான் முதலில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால் உணர்ச்சியின் அடிப்படையில் தோன்றிய இந்த ஈடுபாடு மெள்ள அவன்அறிவை மயக்கிவிட்டது. நாட்கள் செல்லச் செல்ல, அக் கலையில் இருந்த ஈடுபாடு அக் கலைப் பொருளில் செல்லத் தொடங்கிவிட்டது. பரத்தையின் ஆடலில் கொண்ட ஈடுபாடு மெள்ள அவளிடமே செல்லத் தொடங்கிவிட்டது. துணிந்து ஒருநாள் அவள் வீட்டிற்குச் சென்று விட்டான். இவ்வாறு இவன் பரத்தை இல்லம் சென்று மீண்டும் தன்னுடைய வீட்டில் புகுந்தான். தன் வீட்டில் தன் வரவைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்பதைப் பறை சாற்றுபவன் போல மிக்க இறுமாப்புடன் வீட்டினுள் நுழைந்து விட்டான். அங்கே தலைவிக்கு இவனுடைய செயல் தெரிந்துவிட்டது. அவள் ஒன்றுமே பேசவில்லை. இம் மாதிரி சந்தருப்பங்களில் இரண்டு வகையில் நடந்து கொள்ளும் இரண்டு வகையான தலைவியர்கள் உண்டு. ஒரு வகையார் உடனே தலைவனிடம் பெரு வாய்ச் சண்டை இடத் தொடங்கிவிடுவர். தலைவன் பாடு முதலில் வருந்தத் தக்கதாக இருப்பினும், உடனே தலைவியின் கோபம் ஆறிவிடும். அதிலும் வாய் திறந்து கூச்சலிட்டுச் சண்டை பிடிப்பவர் உடனே தம் கோபம் ஆறிவிடுவர். ஆனால், இரண்டாம் வகையைச் சேர்ந்தவரே அஞ்சத் தக்கவர். இவர்கள் வாய் திறந்து சண்டை செய்வதில்லை. ஏன்? தங்கட்குப் பிடிக்காத நிகழ்ச்சி ஒன்று நிகழ்ந்துவிட்டால் வாய் திறவாமல் இருந்துவிடுவர்; சிலரைப் போலக் கூச்சல் இடுவதில்லை. தம் கடமைகளுள் ஒன்றும் தவறுவதும் இல்லை. ஆனால், தமக்குத் தீங்கிழைத்த கணவரிடத்து முகந்தந்து பேச மாட்டார்கள். இவர்களுடைய இச்செயல் அக்கணவன்மார்களை வாள் கொண்டு பிளப்பதுபோல இருக்கும். இம்மாதிரி இனத்தைச் சேர்ந்த தலைவி ஒருத்தியுடன் வாழும் தலைவன்தான் பரத்தை வீடு சென்று மீண்டான். தலைவி வாய் திறந்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. இவனுடைய வீட்டிலேயே இவன் புதியவன் போல இருக்க வேண்டியதாய்விட்டது. தன்னுடைய நிலைமையைக் குறித்து இவன் வருந்துகிறான். எவ்வாறு இருந்தால் இந்த இக்கட்டான நிலைமையிலிருந்து நீங்க முடியும் என்பது இவனுக்கு நன்கு தெரியும். ஆம், விருந்தினர் இப்பொழுது வந்துவிட்டால் தலைவியின் கோபம் போய்விடும். எனவே, வீட்டுத் திண்ணையில் அமர்ந்து இத் தலைவன் உள்ளே நடமாடும் தலைவியைப் பார்த்துப் பெருமூச்சு விடுகிறான். ‘யாரேனும் விருந்தினர் வந்து நம்மை இப்பொழுது காப்பாற்ற மாட்டார்களா!’ என்ற கவலையில் ஆழ்ந்து இருக்கிறான்.

“எருமைக் கன்றுகள் தூண்தோறும் கட்டி இருப்பதால் அழகு மிகுந்த வீட்டின்கண், வளைந்த குண்டலங்களை அணிந்த தலைவி, சிறிய மோதிரம் செறித்த மெல்லிய விரல் சிவக்கும்படி வாழை இலையின் அடிக்காம்பு பெரிதாய் இருக்கிறது என்பதால் அதனைக் கிழித்து விட்டுப் பரிகலம் அமைத்து விட்டுச் சமையல் அறையில் புகை படிந்த கண்களுடனும் நெற்றியில் வியர்வையுடனும் இருக்கும் இப்பொழுது நம்மிடம் பெருங்கோபம் கொண்டுள்ளாள்! இப்பொழுது யாராவது விருந்தினர்கள் வருவார்களாக விருந்தினர் வந்துவிட்டால் இவள் கண் கோபத்தால் சிவப்பதில்லை; புன்சிரிப்புடன் கூடிய முகத்தினை உடையவளாய் இருப்பாள். ஆதலால், பிறகு நாம் இவளுடன் மகிழ்ந்து இருக்கலாம்.”என நினைக்கிறான்.

தடமருப்பு எருமை மடநடைக் குழவி
தூண்தொறும் யாத்த காண்தகு நல்லில்
கொடுங்குழை பெய்த செழுஞ்செய் பேதை
சிறுதாழ்செறித்த மெல்விரல் சேப்ப
வாழை ஈர்ந்துஅடி வல்லிதின் வகைஇப்
புகைஉண்டு அமர்த்த கண்ணள் தகைபெறப்
பிறைநுதல் பொறித்த சிறுநுண் பல்வியர்
அந்துகில் தலையில் துடையினள் நப்புலந்து
அட்டி லோளே அம்மா அரிவை;
எமக்கே வருகதில் விருந்தே; சிவப்பாள் அன்று;
சிறியமுள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம்காண் கம்மே.

(நற்றிணை–120) (தடமருப்பு-வளைந்த கொம்பு; மடநடைக்குழவி-தளர்ந்த நடையுடைய கன்று; காண்தகு-அழகிய; கொடுங்குழை-வளைந்த மகர குண்டலம்; செழுஞ்செய் பேதை-செழுமையான சிவந்த நிறமுடைய இவள்; தகைபெற-அழகுசெய்ய; பிறைநுதல்-துடையினள்-தனது பிறைச் சந்திரன் போன்ற நெற்றியில் தோன்றிய சின்ன வியர்வைத் துளிகளைப் புடைவையின் தலைப்பால் துடைத்துக் கொண்டு; நப்புலந்து-நம்மேல் கோபித்துக் கொண்டு; அட்டிலோளே-சமையல் கட்டில் உள்ளாள்; சிவப்பாள் அன்று-கோபத்தால் கண் சிவக்க மாட்டாள்; சிறிய முள்-கம்மே-சிறிய முள்ளைப் போலும் இவள் பற்களால் சிரிப்பதைப் பார்க்கலாம்.)

தலைவி கோபித்துக்கொண்டு சமையல் கட்டில் இருக்கின்ற இந்த நேரத்திற்கூட அவளுடைய குழையணிந்துள்ள முகத்தையும், வாழை இலையை அரிவதால் சிவந்து போன கையையும், சமையல் செய்வதால் உண்டாகும் வியர்வையைத் துடைத்துக் கொள்ளும் அழகையும் காண்கிற இத்தலைவன் ஒரு சிறந்த கலைஞனாகத்தான் இருத்தல் வேண்டும். எனவேதான் இவன் வாழ்க்கையில் இத்தவற்றைச் செய்துவிட்டான் போலும்!

*****

‘நான் இறந்தால் தொல்லை திரும்’

இருவரும் விட்டுக் கொடாத பொழுது அவர்களைச் சேர்த்து வைக்கத் தோழி கையாண்ட தந்திரம் இது.

இரண்டு பேர் மனம் மாறுபட்டுப் பூசலிடும் பொழுது இடை நின்று நீங்கள் சமாதானம் செய்ய முற்பட்டதுண்டா? சண்டை வலிவாக நடைபெறும் பொழுது சமாதானத்திற்குப் போகிறவர் மிகவும் வன்மையுடையவராய் இருத்தல் வேண்டும். பல சமயங்களில் சண்டை இடும் இருவருமே சேர்ந்து இடை நிற்பவரை அடித்து விடுதலும் உண்டு. எனவே, போரிடுபவர்களிடையே அமைதியை நிலை நாட்டப் போவது அவ்வளவு இனிய செயல் அன்று. ஆனால், எல்லா இடங்களிலும் இந்நிலை ஏற்படும் என்று கூறுவதற்கில்லை. பல சமயங்களில் பூசல் இடுகிறவர்களைப் பொறுத்தே இடை நிற்பவர் நிலையை முடிவு செய்ய முடியும். பூசலிடுபவர் பண்பும் நாகரிகமும் உடையவர்களாக இருப்பின், இடை நிற்பார் நிலை அவ்வளவு தீமையுடையதாகி விடாது. எவ்வளவு மாறுபாடும் சினமும் இருந்தாலும் எல்லை கடந்து போகாமல் காக்கின்றவர்களும் உண்டு அல்லவா? கணவன் மனைவியர் போராட்டம் பெரும்பாலும் இந்த வகையையே சேரும். பண்புடைய தலைவனும் தலைவியும் கூடி வாழ்க்கை நடத்தும் பொழுதும் சில சந்தருப்பங்களில் கருத்து வேறுபாடு தோன்றிவிடுகிறது. அப்பொழுதும் பூசல் ஏற்படும். ஆனால், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மை காரணமாக உடனே அம் மாறுபாடு நீங்கிவிடுவர். இத்தகைய போராட்டங்களில் பெரும்பான்மை மனைவியும் சிறுபான்மை கணவனும் விட்டுக்கொடுத்தல் இயற்கை. பெரும்பாலும் போராட்டத்தின் காரணத்தை ஒட்டித்தான் இம்முடிவும் ஏற்படும்.

சில சந்தருப்பங்களில், போராட்டத்தின் காரணத்தை ஒட்டி இப்பூசல் நீண்ட நாட்கள் நடைபெறுவதும் உண்டு. கணவன் ஒழுக்கக்கேடு செய்கிறான் என்பதை எந்த மனைவியும் எளிதில் மன்னிக்க மாட்டாள். இன்றும் தென்தமிழ் நாட்டில் ‘வட்டில் சோற்றைப் பங்கிட்டாலும் வாழ்க்கையைப் பங்கிடமாட்டாள்,’ என்று வழங்கும் பழமொழி இக்கருத்தை வலியுறுத்தி நிற்கின்றது. கணவன் செய்த தவறு எதுவாயினும், அதனை முழு மனத்துடன் மன்னிக்காத மனைவியே இல்லை என்று கூடக் கூறிவிடலாம். ஓயாமல் மனைவியை அடிக்கும் கணவன்மார்-ஒரு நாளில் இருபத்து நான்கு மணி நேரமும் ‘பீப்பாயில்’ மிதக்கும் ‘பெருங்குடி’ மக்களான கணவன்மார்-திருமங்கலியத்தையும் திருடிச்சென்று அஸ்வமேத யாகத்திற்குப் (குதிரைப் பந்தயம்) பலியிடும் கணவன்மார் என்னும் இத்தகைய கணவன்மார் அனைவரையும் மன்னித்து விடுகின்ற மனைவிமார் உண்டு. இன்னும் சில குடும்பங்களில் மேலே கூறிய அனைத்துப் பண்பாடுகளையும் ஒருங்கே பெற்ற கணவன்மாரும் உண்டு. இவ்வளவு தீய பண்புகள் நிறைந்திருந்தும், அக் குடும்பங்களில் நாம் சற்றும் எதிர்பாராத ஒற்றுமை நிலவுவதுண்டு; அம் மனைவிமார் தம் கணவர்களை நல்லவர்கள் என்றும், சேர்க்கை காரணமாகவே கெட்டு விடுகிறார்கள் என்றும் கூறுவதைக் கேட்டு வியவாமல் இருக்க முடியாது. இவ்வளவு குற்றங்களையும் பெருந்தன்மையோடு மன்னித்துவிடும் ஒரு மனைவிகூட மன்னிக்க முடியாததும் விரும்பாததுமான ஒரு குற்றம் உண்டு. அந்தக் குற்றத்தை ஒரு கணவன் செய்து விட்டால், வேறு துறைகளில் அவன் எவ்வளவு சிறந்தவனாயினும், அவன் மனைவி அதனைத் தாள மாட்டாள். இதன் அடிப்படை மனத்தத்துவம் யாதாக இருக்கலாம் என்று அறிதற்கில்லை. தன்னை ஒத்த வேறு ஒரு பெண்ணைத் தன்னுடைய கணவன் நாடினான் என்று நினைக்கும் பொழுது அம் மனைவியினுடைய ‘அகங்காரம்’ தாக்கப்படுகிறது. தன்னிடத்து இல்லாத எந்த அழகைத் தன் கணவன் அப்பிற பெண்ணிடத்துக் கண்டான் என்ற எண்ணம் முதலில் தோன்றும்போலும்! தன்பால் இல்லாத ஒன்றை அவள் பெற்றிருந்த காரணத்தாலேயே தலைவன் அவளை விரும்பினான் என்ற நினைவு தோன்றியவுடன் பொறாமைதான் முதலில் தோன்றுகிறது. தன்பால் அந்த ஒன்று இல்லையே என்ற நினைவு தோன்றுந்தோறும் அவளுடைய அகங்காரம் ஆயிரம் புண்ணைப்பெறுகிறது. எனவே, கணவன் தனக்கிழைத்த தீங்கை மிகப் பெரிதாக நினைக்கிறது மனைவியின் மனம். ஏனைய குற்றங்களை அவன் புரிகையில் தலைவிக்கு நேரடியாக அதிக நஷ்டம் ஒன்றும் ஏற்படுவதில்லை. ஒரோ வழிப் பொருள் நட்டம் முதலிய தோன்றினாலும், தன் மாட்டு அவன் வைத்திருக்கும் அன்புடன் தலைவி இந்த நட்டத்தை ஒப்பிட்டுப் பார்க்கிறாள். எனவே, இந்த நட்டம் பெரிதாகப் படுவதே இல்லை. பிறர் அவனுடைய செயலையும் அவன் அழிக்கும் பொருளையும் கண்டு அஞ்சுகின்றனர்; அவளிடங்கூட முறையிடுகின்றனர். ஆனால், அவர்கள் அவனுடைய செயலில் ஒரு பகுதியைத்தான் காண்கின்றனர். அவர்கள் காணாததும் காண முடியாததுமான மற்றொரு பகுதியை அவள் ஒருத்தி மட்டுமே காண முடியும். அந்த மற்றொரு பகுதி தான் அவன் அவளிடம் காட்டும் அன்பு, அவன் காட்டுகின்ற கண்ணால் காணமுடியாத அன்பின் எதிரே அவனுடைய ஏனைய தவறுகள் அனைத்தும் மறைந்து விடுகின்றன. ஆதலால், தான் அவளிடம் கொண்ட அன்பு குறையாமல் அவன் எத்தனைப் பிழைகள் செய்தாலும், அவள் அவற்றைப் பெரிதாக மதிப்பதே இல்லை. இன்றில்லையேனும் நாளை அவன் திருந்திவிடுவான் என்ற உறுதியான நம்பிக்கையில் அவள் மகிழ்ச்சியுடன் வாணாளைக் கழிக்கின்றாள்– நாகரிகம் மிகுந்துவிட்ட குடும்பங்களில் இந்தப் பண்பாட்டைக் காணமுடியாது. காரணம், நாகரிகம் (தற்கால ரகம்) மிகும் பொழுதே போலித்தன்மையும் உள்ளொன்று வெளியொன்றுமாக நடந்துகொள்ளும் இயல்பும் உடன் தோன்றிவிடுகின்றன. எனவே, ஒருவர் மாட்டு ஒருவர் காட்டும் அன்பு, வருத்தம், வெறுப்பு முதலிய அனைத்துமே ஓர் எல்லைக்கு உட்பட்டுப் பிறர் அறியாவாறு காட்டப்படுகின்றன. ஆதலாலே தான் போலி நாகரிகம் மிகுந்த குடும்பங்களில் மேலே கூறிய தலைவி இயல்பை நன்கு காண்டல் இயலாது. ஆனால், போலி நாகரிகம் முற்றாமல் உள்ளத்தே தோன்றும் உணர்ச்சியை மறைக்காமல் வாழ்ந்து வரும் கிராமத்துக் குடும்பங்களில் இன்றும் இந்தப் பண்பாட்டைக் காணலாம்.

மேலே கூறிய முறையில் உள்ளத்து உணர்ச்சியை ஓரளவு வெளிப்படையாகவே காட்டப் பழகிய தலைவி ஒருத்தி; அவள் இல்லறம் நடத்தத் தொடங்கியது கருத்தொத்த கணவனுடனேதான். அந்தக் கணவனும் அவளும் தமிழர் முறைப்படி முதலில் களவு வாழ்க்கையில் ஈடுபட்டுப் பின்னர்க் கற்புநெறி கடைப் பிடித்தவர்தாம். அந்த நாளில் அவன் அவள்மாட்டுக் கொண்டிருந்த காதலுக்கு எல்லையே இல்லை என்றும் கூறலாம். தன் காதலைப் பலபடியாக எடுத்து அவளிடம் அவன் கூறியது உண்டு. அந்த நாட்களில் அவளைத் தவிர அவன் வேறு பெண்களை கண் எடுத்துக்கூடக் கண்டதில்லை. அவனைப் பொறுத்தமட்டில் உலகில் வேறு பெண்களே இல்லை என்றுகூடக் கூறிவிடும் நிலையில் இருந்தான். ஒரு நாள் அவன் இந்தத் தலைவியை உடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டான். இதனை ‘உடன் போக்கு’ (Elopement) என்று கூறும் இலக்கியங்கள். அவ்வாறு இத் தலைவன் இத்தலைவியைக் கூட்டி வரப் பேருதவி புரிந்தவள் இத்தலைவியினுடைய தோழிதான். எங்கோ சென்ற இவர்கள் இறுதியில் திருமணம் முடித்துக் கொண்டனர். திருமணம் முடிந்து குடும்பம் வைத்த பிறகு தலைவி தன்னுடைய உயிர்த் தோழியை வரவழைத்துத் துணையாக வைத்துக் கொண்டாள். இவர்களுடைய இல்லறம் நன்றாகத்தான் நடைபெற்று வந்தது.

நாட்கள் சென்றன; தலைவன் முன் போல இல்லை என்பதைத் தலைவி மெள்ள உணரலானாள். அவளைவிட்டுச் சிறிது நேரம் பிரிந்திருக்கவும் விரும்பாத தலைவன் இப்பொழுது ஏதாவது ஒரு சிறு காரணத்திற்காகவும் பிரிந்து இருக்க முற்பட்டான்; நாளாவட்டத்தில் இரவு நேரங்களிற்கூட வீட்டில் தங்காமல் வெளியே இருக்க முற்பட்டான். தலைவிக்கு இது மிகப் பெரிய ஏமாற்றமாகவும் வருத்தமாகவும் இருந்தது. யாரிடம் அவள் தன் வருத்தத்தைத் தெரிவிக்க முடியும்? தலைவன் எங்கோ பரத்தையர் வீட்டிற்குச் சென்று வருகிறான் என்று ஊரார் மெல்லப் பேசிக்கொண்டது தலைவியின் காதில் விழுந்தது. திடீரென்று மிகுதியும் கலவரமடைந்த அவள், தோழியிடம் குறிப்பாக இதைத் தெரிவித்தாள். தன்னைப் போல அவளும் இதைப் பெரிய துன்பமாகக் கருதி வருந்துவாள் என்று தலைவி எதிர்பார்த்தாள். ஆனால், என்ன ஏமாற்றம்! தோழி இது பற்றிக் கவலைப்படுவதாகவே தெரியவில்லை. ‘என்ன! இவள் என்னுடைய தோழிதானா!’ என்று அவள் மேல் பெரிய சீற்றங்கொண்டாள் தலைவி.

தோழிக்குத் தலைவியிடம் அன்பு இல்லையா? தலைவன் தவறு இழைக்கிறான் என்பது அவளுக்கு மட்டும் தெரியவில்லையா? நன்றாகத் தெரிகிறது! என்ன செய்ய வேண்டும் என்று அவள் ஆராய்ந்து பார்த்தாள்; தலைவனை நெருங்கிச் சண்டை போடலாமா என்றுகூடக் கருதினாள். ஆனால், அதனால் பயன் உண்டாகுமா? தலைவிதான் ஓயாமல் தலைவனுடன் பிணங்கிக்கொண்டு சண்டையிடுகிறாளே. தலைவனைச் சண்டையிட்டு நல்வழிக்குத் திருப்புவதாயின், எப்பொழுதோ தலைவியே திருப்பி இருக்கலாம். சண்டை இட்டு அவனை மாற்ற முடியாது என்பதற்குத் தலைவியே சான்றாகிவிட்டது. எனவே, தோழி மேலும் சிந்தித்தாள். எஞ்சியுள்ளது ஒரே வழிதான். அன்பு வழியால் அவனைத் திருத்தினால் என்ன ? அன்புக்குக் கட்டுப்படாதவர் எவரேனும் உண்டா? ஏன் உலகை வெல்லக்கூடிய அன்பு இத்தலைவனிடம் மட்டும் பயன் இல்லாமல் போக வேண்டும்? தலைவியிடம் நிறைந்த அன்புடையவன்தான் அவன்! ஆண்களுக்குரிய சில தவறுகளும் அவனிடம் இருக்கின்றன. தான் செய்யும் காரியத்தால் தலைவிக்கு ஒன்றும் தீங்கு நேராது என்று அவன் நினைத்துக்கொண்டு இருக்கிறான். அதனாலேதான் அவன் தவறான வழியில் சென்றுகொண்டே இருக்கிறான். இந்த நிலையில் அவனை இடித்துப் பேசிப் பயன் இல்லை. அன்பு வழியில் அவன் தவற்றை எடுத்துக்காட்ட வேண்டும். தலைவிக்கு-அவனால் பெரிதும் விரும்பப்படும் தலைவிக்கு-அவன் எவ்வளவு பெரிய தீமையைச் செய்து கொண்டிருக்கிறான் என்பதை எடுத்துக்காட்ட வேண்டும். அப்பொழுது அவன் தானாகத் திருந்திவிடுவான் என்பது தோழியின் எண்ணம். இவ் எண்ணத்தை மெள்ளத் தலைவிக்கு எடுத்துக் கூறினாள் தோழி. அவள் ஒரேயடியாகத் தோழியின்மேல் சினந்து கொண்டாள். தோழிக்குக்கூடத் தன்மேல் அன்பு இல்லை என்றும், அதனாலேதான் தனக்காகப் பரிந்து கொண்டு தலைவனிடம் சண்டை இடவில்லை என்றும் ஆத்திரத்துடன் கூறினாள். தோழியின்மேல் வந்த சினத்தை எல்லாம் தலைவி தலைவன்மேல் காட்டினாள். என்றோ ஒரு நாள் வீடு தேடி வருகிற, அவனை இம் மாதிரிச் சினங் கொண்டு வெருட்டுதலினால் மேலும் தீமை ஏற்படுமே தவிர நன்மை விளையாது என்பதைத் தோழி மட்டுமே உணர்கிறாள் என்ன செய்வது? தலைவனுக்காகப் பரிந்து பேசினால் தலைவியின் சினத்திற்கு ஆளாக வேண்டும். தலைவியுடன் சேர்ந்து தலைவனைச் சினந்து கொண்டாலோ, தலைவன் ஒரேயடியாய்ச் சென்றுவிடும் பெரியதொரு தொல்லை வந்துவிடும் என அஞ்சுகிறாள் தோழி பாவம்! அவளுடைய நிலைமை மிகக் கேவலமாகிவிட்டது.

ஒரு நாள் தலைவன் எதிர்பாராவிதமாக வந்தான். தோழி சென்று அவனுக்கு இன்முகங் காட்டி உள்ளே வருமாறு உபசரித்தாள்; பிறகு தலைவியிடம் சென்று தலைவன் வந்துள்ள செய்தியை அறிவித்தாள். தலைவி தன்னை அலங்கரித்துக்கொண்டு தலைவனைச் சென்று வரவேற்க வேண்டும் என்று தோழி வற்புறுத்தினாள். தலைவி பெருஞ் சினங்கொண்டு தலைவனையும் தோழியையும் வெறுத்துப் பேசினாள். இந்த நிலையில் மனம் நொந்து போன தோழி பேசுகிறாள். இருவர் சண்டையிடும் பொழுது சமாதானம் செய்து வைக்கப்போன தோழியின் அனுபவம் இதோ பேசப்படுகிறது.

வயல் அருகில் பலா மரம் பெரியதாய் நிற்கிறது. அப்பலாமரத்தில் உள்ள இலைகளைக் கூடுபோலச் செய்து சிவந்த சுளுக்கி எறும்புகள் (முயிறு) முட்டை இட்டுள்ளன. அவ்விலைக் கூடுகளுள் சிவந்த எறும்புகளும் முட்டைகளும் நெருங்கி வாழ்கின்றன. வயலில் மீன் உணவை நாடி வந்த நாரை பலா மரத்தில் உள்ள இக்கூட்டினுள் நீண்ட அலகை வைத்து உறிஞ்சுகிறது. நாரை உறிஞ்சியவுடன் உள்ளே உள்ள சிவந்த எறும்புகளும் அவற்றின் வெண்மையான முட்டைகளும் வயலில் உதிர்ந்துவிடுகின்றன. அவை உதிர்ந்து கிடப்பது செந்நெல்லும் வெள்ளை அரிசியும் கலந்துகொட்டிக் கிடப்பதுபோல இருக்கிறது. அத்தகைய மருத நிலங்களையுடைய தலைவன் பரத்தை மகளிர் பலரை முயங்கும் விருப்பத்தால் நம்முடைய வீட்டினுள்ளே வாராமல் இருக்கிறான். ஒருவேளை அவன் வரினும் அந்த நேரத்தில் மாமை நிறந்தையுடைய தலைவி அவனுடைய பெருந்தன்மையை விரும்பி அவன்மேல் கொண்டுள்ள கோபத்தை விடவும் இல்லை. அன்னி என்பவனும் பெரிய மன்னனாகிய திதியன் என்பவனும் ஒரு புன்னை மரம் காரணமாகச் சண்டை இட்டனர். இறுதியில் புன்னை மரத்தை வெட்டி வீழ்த்திய பிறகே இருவரும் அமைதியடைந்தனர். அதுபோல் இத்தலைவனும் தலைவியுமாகிய இருவரும் இடையில் நிற்கின்ற நான் இறந்தால்தான் தம்முடைய சண்டையை நிறுத்துவார்கள் போல இருக்கிறது!” என்ற கருத்தில் தோழி கூறுவதாக அமைந்துள்ளது பாடல்.

பழனப் பாகல் முயிறூமூசு குடம்பை
கழனி நாரை உரைத்தலின் செந்நெல்
விரவுவெள் ளரிசியில் தாஅம்ஊரன்

பலர்ப்பெறல் நசைஇநம் இல்வா ரலனே!
மாயோன், நலத்தை நம்பி விடல்ஒல் லாளே!
அன்னியும் பெரியன் அவனும் விழுமிய
இருபெரு வேந்தர் பொருகளத்து ஒழித்த
புன்னை விழுமம் போல
என்னோடு கழியும் இவ் விருவரது இகலே.
                                                                   (நற்றிணை-180)

(பழனம்—வயல், பாகல்—பலா மரம், முயிறு—சிவப்பு நிறமுடைய சுளுக்கி எறும்பு, மூசு—நெருங்கு; குடம்பை—கூடு; உரைத்தலின்—உறிஞ்சுதலால்; தாஅம்—பரந்து கிடக்கும்; நசைஇ—விரும்பி; நலம்—பெருந்தன்மை; அன்னி—ஒரு சிற்றரசன்; பெரியன்—திதியன் என்பான்)</poem>

‘புன்னைமரம் வெட்டுண்ட பிறகே திதியனும் அன்னியும் பகைமை ஒழிந்ததுபோல, யான் ஒழிந்த பிறகே இவர்கள் பூசல் திரும் போலும்!’ என்று நொந்துகொள்கிறாள் தோழி.

"https://ta.wikisource.org/w/index.php?title=அகமும்_புறமும்/003-008&oldid=1347362" இலிருந்து மீள்விக்கப்பட்டது