கம்பன் கவித் திரட்டு 4, 5, 6/003-009

விக்கிமூலம் இலிருந்து

கிட்கிந்தா காண்டம்

படலங்கள் சுருக்கம்

1. பம்பை வாவிப் படலம்

கம்பன் இப் படலத்தில் பம்பைப் பொய்கையின் தோற்றம்; அதில் நிகழும் செயல்கள் ஆகியவற்றை முதலில் கூறிவிட்டு சீதையின் நினைவால் இராமன் புலம்புவதையும், சீதையைத் தேடி மேலும் செல்லுதல் பற்றியும் சித்தரிக்கிறார்.

2. அநுமன் படலம்

இவ்வாறு சீதையைத் தேடிச் செல்லும் இராம லட்சுமணனைக் கண்டு சுக்ரீவன் ஓடி ஒளிகிறான். அநுமன் தசரதனின் மக்களைப் பார்க்கிறான். இவர்களை அணுகி வரவேற்கிறான். தன்னைப் பற்றியும் கூறுகிறான் அநுமன். மறையவனாக வந்து அநுமன் இராமனின் திருவடிகளை வணங்குகிறான். ‘இராமன் அது முறையோ?’ எனக் கேட்க, அநுமன் விடை பகர்ந்து பெரிய வானர உருக்கொண்டு நிற்பதைக் கண்டு இருவரும் வியக்கின்றனர். இராமன், சுக்கிரீவனை அழைத்து வரும்படி கூறுகிறான்.

3. நட்புக்கோட் படலம்

அநுமன் சுக்ரீவனிடம் இராமனின் சிறப்புக்களை கூறி, அவனை இராகவனிடம் அழைத்து வருகிறான். இராமனும் அவனுடன் உரையாடுகிறான்: இருவரும் விருந்துண்கின்றனர். அப்போது இராமன், ‘நீயும் உன் மனைவியைப் பிரித்துள்ளாயோ?’ என அவனை வினவுகிறாள். அநுமன் மூலம் சுக்கிரீவனுக்கும் வாலிக்கும் பகை ஏற்பட்டக் காரணத்தையும் அறிகிறான் இரகு வீரன். இராமன் கோபமுற்று வாலியைக் கொல்வதாகச் சூளுரைக்கிறான். சுக்கிரீவன் இராமனின் ஆற்றலை அறிய ஆவல்கொள்கிறான்.

4. மராமரப் படலம்

சுக்கிரீவன், இராமனை மராமரங்களுள் ஒன்றை அம்பினால் எய்யவேண்டுகிறான். இராமனும் அவ்வாறே செய்யவும், சுக்கிரீவனும் வாணர வீரர்களும் மகிழ்கின்றனர்,

5. துந்துபிப் படலம்

துந்துபியின் உடலைக் காண்கிறான் இராமன். அதன் வரலாற்றை அறிகிறான். லட்சுமணன் துந்துபியின் உடலை உந்தி தள்ளுகிறான்.

6. கலன்காண் படலம்

இராமனிடம் சில செய்திகளைத் தெரிவிக்கிறான் சுக்கிரீவன். சீதையின் அணிகலன்களைக் கண்ட இராமன் மிகவும் வருந்துகிறான்.

“நின் குறை முடித்தன்றி வேறு யாதும் செய்கிலேன்' எனக் சுக்கிரீவனிடம் கூறிய இராமனிடம் பேசுகிறான் அனுமன். பின் அனைவரும் வாலியிருக்குமிடத்திற்குச் செல்கின்றனர்.

7. வாலி வதைப் படலம்

வாலியிருந்த மலையருகே சென்ற இராமனும் மற்றவரும் இனி செய்ய வேண்டியதாகக் குறித்து ஆலோசிக்கின்றனர். இராமனின் சொல்படி சுக்கிரீவன் வாலியைப் போருக்கு அழைக்கிறான். தாரை வாலியைத் தடுக்கிறாள். எனினும் போரை விரும்பி வாலி குன்று புறத்தே வருகிறான் வாலி சுக்ரீவனிடையே இருந்த உருவ ஒற்றுமை இராகவனை வியப்படையச் செய்கிறது. சுக்ரீவனை இராமன் கொடிப்பூ மாலை அணிந்து போர் செய்யும்படி கூறுகிறான். சுக்ரீவனை மேலே தூக்கி எறிய வாலி முற்படும்போது இராமனின் அம்பு அவனைத் தாக்கித் துரத்துகிறது. வாலியின் மார்பில் பாய்ந்து, அம்பு அவனை வீழ்த்தியது. அம்பைப் பறித்த வாலி, அது இராமனுடையதென்று அறிகிறான். இராமனை மறைந்து அம்பு எய்தது வீரனுக்கு அழகோ என்று இகழ்கிறான் வாலி. இராமன் தன் செய்கை சரியே என்று வாதாடினாலும் வாலி ஒப்புக்கொள்ளவில்லை. லட்சுமணன் தன் அண்ணன் அம்பு எய்தது சரியே என்று ஆதாரத்துடன் விளக்க, வாலி மனம் மாறி சுக்ரீவனையும் தன் மகன் அங்கதனையும் இராமனிடம் ஒப்படைக்கிறான். 

8. அரசியற் படலம்

சுக்ரீவனுக்கு முடிசூட்டுகிறான் இராமன். அவன் எவ்வாறு நல் அரசு செலுத்த வேண்டுமென்பதையும் இராமன் எடுத்துரைக்கிறான். நான்கு திங்களுக்குப் பின் கிட்கிந்தையிலிருந்து படையுடன் வருமாறு பணிக்கிறான் இராமன். இராமனின் வற்புறுத்தலுக்கிணங்கி அநுமன் கிட்கிந்தை செல்கிறான். இராமனும் இளையவனும் வேறோர் மலையை அடைகின்றனர்.

9. கார்காலப் படலம்

கார் காலம் வருகிறது. இயற்கை எழில் பொங்குகிறது இராமனின் விரகதாபத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறார் கம்பநாடன். அண்ணனை தேற்றுகிறான் தம்பி.

10. கிட்கிந்தைப் படலம்

சொல்லியபடி சுக்ரீவன் பட்டையுடன் வரவில்லை. கோபத்துடன் செல்கிறான் லட்சுமணன் கிட்கிந்தைக்கு. லட்சுமணனின் சீற்றத்தைத் தணிக்கிறாள் தாரை. மாருதியும் அங்கதனும் சுக்ரீவனிடம் லட்சுமணனின் வருகையைத் தெரிவித்து சுக்ரீவனின் தவற்றை உணரச் செய்கின்றனர். சுக்ரீவன் இராமனிடம் செல்கிறான். மன்னிப்பு கோருகிறான்.

11. தானை காண் படலம்

வானரப் படைகளைப் பற்றியும், தானைத் தலைவர்கள் பற்றியும் கூறும் படலம் இது.

12. நாட விட்ட படலம்

இனி நடக்க வேண்டுவனப் பற்றிச் சிந்தித்து முடிவு எடுக்கும் இராமனைப் பற்றி கூறுகிறது இப்படலம். சுக்ரீவன் அநுமன் அங்கதன் ஆகியோர் தென்திசை போகின்றனர் ஒரு மாத காலத்திற்குள் தேடித் திரும்புக என காலவரையறுக்கிறான் சுக்ரீவன். இராமன் அநுமனுக்குச் சீதையின் அங்க அடையாளங்களைக் கூறி, சில அந்தரங்க செய்திகளையும் சொல்கிறான். தன் மோதிரத்தையும் அநுமனிடம் கொடுத்தனுப்புகிறான்.

13. பிலம் புக்கு நீங்கு படலம்

வானரர் நான்கு திசையிலும் சீதையைத் தேடி செல்கின்றனர். வழியிலே அனுமன் முதலானோர் ஒரு வெம்மை மிக்க பாலையை அடைகின்றனர். வெம்மைத் தாங்காத வானரர் ஒரு இருண்ட பள்ளத்தில் புகுந்து விடுகின்றனர். அநுமன் அவர்களைத் தன் வாலைப் பற்றி, அங்கிருந்து நீங்கி வரச் செய்கின்றான். சுயம்பிரபை தன் வரலாற்றை அவர்களுக்குக் கூறுகிறாள். சுயம்பிரபை பொன்னுலகம் எய்துகிறான்.

14. ஆறு செல் படலம்

செல்லும் வழியில் அவர்கள் கடக்கும் பற்பல காடுகள், நாடுகள், வனங்கள், மலைகள், ஆறுகள் பற்றியும் கூறும் இப் படலத்தில் அங்கதனுக்கும் துமிரன் என்ற அரக்கனுக்கும் நடந்த போர் பற்றியும் கூறுகிறார் கம்பர். இப் படலத்திலேயே சாம்பவான் துமிரனின் கதையைக் கூறுகிறான்.

15. சம்பாதிப் படலம்

தென்கடலை அடைகின்றனர் வானரர். சம்பாதியை அங்குச் சந்திக்கின்றனர். தன் தம்பி சடாயு இறந்ததை அறிந்த சம்பாதி வருந்தி புலம்புகிறான். சீதையின் இருப்பிடத்தைச் சம்பாதி தெரிவிக்கிறான். இராவணனின் மாயங்கள் பற்றியும் விவரிக்கிறான்.

16. மகேந்திரப் படலம்

அடுத்து உருவெடுக்கிறது மிகப் பெரிய பிரச்னை. “கடலைக் கடப்போர் யார்?” என்பதே அது. சாம்பவான் அதுமனைப் பார்த்து ‘அவனே அதைச் செய்ய முடியும்!’ என்று புகழ்ந்துப் பாராட்ட அநுமன் இலங்கைச் செல்ல உடன்பட்டு கடல் தாவ பெருவடிவு கொள்கிறான்.