உள்ளடக்கத்துக்குச் செல்

கம்பன் கவித் திரட்டு 4, 5, 6/002-009

விக்கிமூலம் இலிருந்து

கிட்கிந்தா காண்டம்

ராமன் லட்சுமணன் ஆகிய இருவரும் பம்பைக் கரை அடைந்தனர். இராமபிரான் பம்பையில் நீராடினான். அருகிலிருந்த பூஞ்சோலையில் அமர்ந்தான். மாலைக் கடன் முடித்தான். கதிரவனும் மறைந்தான். இரவும் வந்தது. இராமர் லட்சுமணர் ஆகிய இருவரும் இரவுப் பொழுதை அந்த இடத்திலேயே போக்கினர்; நீள் இரவு சென்றது. பொழுது புலர்ந்தது. கதிரவனும் வந்தான். ராமர் லட்சுமணர் ஆகிய இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்; சபரி சொன்ன வழியே சென்றனர்; ருசியமுக பர்வதத்தின் மீது ஏறினர்.

வில்லேந்திய வீரராய் இவ்விருவரும் வருதல் கண்டான் சுக்ரீவன்; மாற்றார் யாரோ வருகின்றார் என்று அஞ்சினான்; அவ்விருவரும் யார் என்று அறிந்து வருமாறு மாருதியை ஏவினான்; அருகிலிருந்த குகை ஒன்றன் உள்ளே சென்று ஒளிந்து கொண்டான்.

அஞ்சனையின் மகனாகிய அநுமன் ஒரு பிரம்மசாரி உருவம் தாங்கி இராமர் லட்சுமணர் வரும் வழியில் மறைவான ஓரிடத்திலே நின்று கொண்டிருந்தான்.

"இவர்களோ தவ வேடம் கொண்டுள்ளனர். கையில் உள்ள வில்லோ அந்த வேடத்துக்கு ஏற்ப இல்லை. மாறுபாடாக உள்ளது. இவர் யார்? சிவனோ? திருமாலோ? பிரமனோ?

சிவன், திருமால், பிரமன் என்றால் மூவராக அன்றோ வருவர்! இவர் இருவரே வருகின்றனர். ஆதலின் இவர் சிவன், திருமால், பிரமன் ஆகிய மும்மூர்த்தியரும் அல்லர்; மானிடரும் அல்லர். வானுலகில் வாழும் தேவரே மானிட வடிவில் வந்துள்ளனர். அரியதொரு பொருளை இழந்து அதைத் தேடுவார் போல் காட்சியளிக்கின்றனர்!"

***

என்பன பலவும் எண்ணி .
        இருவரை எய்த நோக்கி
அன்பினோடு உருகு கின்ற
        உள்ளத்தின் ஆர்வத்தோரை
முன்பிரிந்து அனையர் தம்மை
        முன்னினான் என்ன நின்றான்
தன் பெரும் குணத்தால் தன்னைத்
        தான் அலது ஒப்பிலாதான்.


இவ்விதம் பலவாறு எண்ணிக்கொண்டு அவ்விருவரையும் எதிர்பார்த்து நின்றான் அநுமன். தனது அன்புக்குரிய ஒருவரை நீண்ட நாள் முன் பிரிந்து, பின் தற்செயலாக அவரைக் கண்டவன் போல நின்றான். உருகும் உள்ளத்தனாகி நின்றான். பெருமை மிகு குணத்திலே தனக்கு ஒப்பார் இல்லாத குணக்குன்றாகிய அநுமன் நின்றான்.

***

தன் பெரும் குணத்தால் - தன்னுடைய பெருமை மிகு குனத்தினால்; தன்னை தான் அலது ஒப்பு இலாதான் . தனக்குத் தானே ஒப்புமையன்றி வேறு ஒப்புமை எதுவும் கடனுதற்கு இயலாத அந்த அநுமன்; என்பன பலவும் எண்ணி - மேற்கூறியபடி பலவாறாக எண்ணிக் கொண்டு; இருவரை எய்த நோக்கி - இராம லட்சுமணர் ஆகிய அந்த இருவரையும் அடையக் கருதி; அன்பினோடு உருகுகின்ற அன்பினால் உருகுகின்ற; உள்ளத்தன் - மனமுடையவனாகி; ஆர்வத்தோரை - அன்பு கொண்ட ஒருவரை; முன் பிரிந்து - முன்பு ஒரு சமயம் விட்டுப் பிரிந்து; அனையர் தம்மை - அவ்வன்பரை; முன்னினான் என நின்றான் . மீண்டும் எதிரிலே கண்டவன் போல் மகிழ்ந்து நின்றான்.

***

மஞ்சு எனத் திரண்ட கோல
        மேனிய! மகளிர்க்கு எல்லாம்
நஞ்சு எனத் தகைய ஆகி
        நளிர் இரும் பனிக்குத் தேம்பாக்
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண
        யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில்வந்தேன்;
        நாமமும் அநுமன் என்பேன்.

இராமர் லட்சுமணர் ஆகிய இருவரும் அருகில் வந்தனர். அவ்விருவர் முன்சென்று நின்றான் அநுமன். தன்னை அறிமுகம் செய்து கொள்கிறான்.

அஞ்சனையின் புதல்வன் சொல்கிறான். யாரைப் பார்த்து? இராமனைப் பார்த்து, என்ன சொல்கிறான்?

"நீலமேக மேனியனே! சிவந்த தாமரை போன்ற அழகிய கண்களை உடையவனே! காற்றின் வேந்தனாகிய வாயுதேவனுக்கு அஞ்சனை வயிற்றிலே பிறந்தவன் நான். அநுமன் என்பது என் பெயர்!

கேசரி என்னும் குரங்கரசனின் மனைவி அஞ்சனை. அவளுக்குக் காற்று தேவன் திருஅருளாலே பிறந்தவன் ஆஞ்சநேயன். இவன் பிறந்த உடனே தனக்குப் பசி என்று தன் தாயிடம் கூறினான். "பழங்களைப் புசி" என்று அவள் கூறினாள். 

"பழம் எப்படியிருக்கும்?" என்று கேட்டான் ஆஞ்சநேயன்.

"செக்கச் செவேல் என்று இருக்கும்" என்று கூறினாள் தாய்.

அப்போது சூரியன் தகதகவென்று சிவந்த மேனியனாய் புறப்பட்டு வந்து கொண்டிருந்தான்.

"பழம் இது!" என்று கருதிப் பாய்ந்தான் குழந்தையாகிய ஆஞ்சநேயன்.

கண்டான் இந்திரன்; கொண்டான் கோபம். தனது வச்சிராயுதத்தால் குழந்தையைத் தாக்கினான். குழந்தையின் கன்னம் சிதைந்தது. அந்தக் குழந்தைக்கு அநுமன் என்று பெயரிட்டான் இந்திரன். அனு என்றால் கன்னம் என்று பொருள். கன்னத்திலே சிறப்புடையவன் அநுமன்.

***

மஞ்சு எனத் திரண்ட கோல மேனிய - மேகம் போல நீல நிறங்கொண்டு அமைந்த அழகிய திருமேனி உடையவனே! மகளிர்க்கு எல்லாம் - உன்னைக் காணும் பெண்களுக்கு எல்லாம்; நஞ்சு என - விஷம் என்று சொல்லும்படி; தகைய ஆகி - தன்மை உடையவனாகி; நளிர் இரும் பனிக்கு. குளிர்ச்சி பொருந்திய பெரும் பனிக்கு; தேம்பா - வாடாத; கஞ்சம் ஒத்து - தாமரை மலர் போன்று; அலர்ந்த-மலர்ந்த; செய்ய கண்ண - சிவந்த கண்களை உடையவனே; யான் - நான்; காற்றின் வேந்தற்கு - காற்றரசன் வாயுதேவனுக்கு; அஞ்சனை வயிற்றில் வந்தேன் - அஞ்சனை வயிற்றில் பிறந்தேன்; நாமமும் அநுமன் என்பேன் பெயரும் அநுமன் என்பேன்.

***



"இம் மலை இருந்து வாழும்
      எரி கதிர் பரிதிச் செல்வன்
செம்மலுக்கு ஏவல் செய்வேன்
      தேவ நும் வரவு நோக்கி




விம்மலுற்று அனையன் ஏவ
        வினவிய வந்தேன்” என்றான்,
எம் மலைக் குலமும் தாழ
       இசை சுமந்து எழுந்த தோளான்.

“இம் மலையிலே இருந்து வரும் சூரியன் மகனாகிய சுக்கிரீவனுக்கு ஏவல் செய்பவன் நான். உங்களது வருகை கண்டு அவன் பயந்துவிட்டான். நீவிர் யார் என்று அறிந்து வருமாறு என்னை ஏவினான்; வந்தேன்” என்றான். யார்? எம்மலைச் சிகரமும் தாழ்ந்து விடும்படி புகழ் தாங்கி எழுந்த தோளினனாகிய அநுமன்.

***

[ருக்ஷரஜஸ் எனும் குரங்கரசன் பெண் வடிவங்கொண்டான். சூரியன் அருளாலே ஒரு குழந்தையைப் பெற்றான். அவனே சுக்கிரீவன்.]

இம்மலை இருந்து வாழும் - இந்த மலையிலே இருந்து வாழ்கின்ற; எரி கதிர் பரிதி - வெம்மையாகிய கிரணங்கள் பரப்பும்; சூரியனின் செல்வன் - மகனாகிய சுக்ரீவனுக்கு ஏவல் செய்வேன் - பணி செய்பவன் நான்; தேவ! நும் வரவு நோக்கி - தேவ! நீவிர்வருதல் கண்டு; விம்மலுற்று - நடுங்கி; அனையன் ஏவ - அவன் ஏவ; வினவிய வந்தேன் - தங்களிடம் கேட்டு அறியவந்தேன் என்றான். எம்மலைக் குலமும் தாழ - எந்த மலைக் கூட்டமும் தாழ்வுறும்படி; இசை சுமந்து - புகழ் பெற்று; எழுந்த தோளான் - வளர்ந்து எழுந்த தோள்கள் உடைய அநுமன்.

***

இவ்வாறு அநுமன் சொன்ன உடனே, “இவன் கல்வி கேள்விகளில் சிறந்தவன். அந்தக் கல்வி கேள்விக்கு ஏற்ப அடக்கமுடையவன்; அறிவுடையவன்” என்று உய்த்துணர்ந்த இராமன் இளைய பெருமாளிடம் சொல்கிறான்; ‘தம்பீ! லட்சுமணா! இவன் கலைவல்லான்! வேதம் வல்லான்; எல்லாக் கலைகளையும் அறிந்தவன் இவன்; வேதங்கள் எல்லாவற்றையும் ஓதி உணர்ந்தவன். இது இவனுடைய சொற்களினாலே தெரிகிறது. இந்தச் சொல்லின் செல்வன் யாராயிருக்கலாம்? இவன் பிரம தேவனோ? சிவபெருமானோ? இவன் நமக்களிக்கின்ற இந்தப் பிரம்மசாரி உருவம் நிச்சயமாக இவனுடைய சுய உருவம் அன்று. இவன் உலகின் அச்சாணி போன்றவன். போகப் போகத் தெரியும்.’’ என்று சொல்கிறான். இவ்விதம் சொல்லிய பின் அநுமனை நோக்கி வினவுகிறான்.

***




எவ்வழி இருந்தான் சொன்ன
        கவிக் குலத்து அரசன்? யாங்கள்
அவ் வழி அவனைக் காணும்
        அருத்தியின் அணுக வந்தேம்
இவ்வழி நின்னையுற்ற
        எமக்கு நின் இன் சொல் அன்ன
செவ்வழி உள்ளத் தானைக்
        காட்டுதி தெரிய என்றான்.

“நீ சொன்ன கவிக்குலத்து அரசன் எங்கே இருக்கிறான்? நாங்கள் அவனைப் பார்க்க விரும்புகிறோம். அவனை நீ எங்களுக்குக் காட்டுவாயாக” என்று கூறினான் இராமன்.

***

நீ சொன்ன - நீ கூறிய, கவிக்குலத்து அரசன் - குரங்குகளின் அரசன்; எவ்வழி இருந்தான் - எந்த இடத்திலே இருக்கிறான்? யாங்கள் - நாங்கள்; அ வழி அவனைக் காணும் - அவ்விடம் சென்று அவனைப் பார்க்கின்ற; அருத்தியின் - ஆசையோடு; அணுக வந்தேம் - நெருங்கி வந்திருக்கிறோம்; இ வழி . இந்த இடத்திலே: நின்னை உற்ற எமக்கு - உன்னை எதிர்ப்பட்ட எங்களுக்கு: நின் சொல் அன்ன . உனது இனிய மொழியே போன்ற; செம் வழி உள்ளத்தானை - நேர் வழி செல்லும் உளமுடைய அந்த சுக்கிரீவனை தெரிய - நாங்கள் தெரிந்து கொள்ளுமாறு; காட்டுதி என்றான் - எங்களுக்குக் காட்டுவாயாக என்று சொன்னான்.

***

இரவி தன் புதல்வன் தன்னை
        இந்திரன் புதல்வன் என்னும்
பரிவு இலன் சீறப் போந்து
        பருவரற்கு ஒருவன் ஆகி
அருவி அம் குன்றில் எம்மோடு
        இருந்தனன்; அவன் பால் செல்வம்
வருவது ஒர் அமைவின் வந்தீர்
        வரையினும் வளர்ந்த தோளிர்.

"குன்றினும் மேலாக வளர்ந்த தோள்களை உடையவரே ! சூரியன் புதல்வனாகிய சுக்கிரீவனை இந்திரன் புதல்வனாகிய வாலி சீறினான்; பகைத்தான்; அவனால் துன்புற்ற சுக்கிரீவன் இம் மலைக்கு ஓடி வந்தான்; எங்களோடு வாழ்ந்து வருகிறான். அவனுக்குச் செல்வம் வருவது போல நீவிர் வந்துள்ளீர்.”

[ருக்ஷரஜஸ் எனும் பெண் குரங்குக்கு இந்திரன் அருளாலே பிறந்தவன் வாலி. வாலில் தோன்றியவன் வாலி.]

***

வரையினும் - மலைகளைவிட: வளர்ந்த - வளர்ந்து விளங்கும்; தோளிர் - தோள் உடையோரே! இரவி தன் புதல்வன் தன்னை - சூரியனின் மகனாகிய சுக்கிரீவனை: இந்திரன் புதல்வன் - இந்திரன் மகனாகிய வாலி; என்னும் பரிவு இலன் - எனும் பெயர் கொண்ட அன்பிலான்; சீற – பகைத்துக் கோபிக்க; பருவரற்கு ஒருவன் ஆகி - துன்பத்திற்கு ஆளாகி; அருவி அம் குன்றில் - அருவிகள் நிறைந்த இந்த அழகிய குன்றில்; எம்மோடு - எங்களோடு; இருந்தனன் - இருந்து வருகிறான்; வருவது ஓர் அமைவின் - அவன் பால் செல்வம் வருவது போல் வந்தீர்.

***


‘யார் என விளம்புகேன் நான்
        எம் குலத் தலைவற்கு உம்மை?
வீரர் நீர் பணித்திர்’ என்றான்
        மெய்ம்மையின் வேலி போல்வான்
வார் கழல் இளைய வீரன்
        மரபுளி வாய்மை யாதும்
சோர்வு இலன் நிலைமை எல்லாம்
        தெரிவுறச் சொல்லல் உற்றான்.

“எங்கள் குலத் தலைவனாகிய சுக்கிரீவனிடம் சென்று என்ன சொல்வேன்? உங்களை யார் என்று சொல்வேன்? வீரர்களே உத்தரவு தாருங்கள்” என்றான். யார்? சத்தியத்தின் வேலி போன்றவனாகிய அநுமன்.

மதிப்புக்குரியவர்களிடத்திலே எவ்வளவு விநயமாகப் பேசுகிறான் அநுமன்! “நீங்கள் யார்? பதில் சொல்லுங்கள். எங்கள் தலைவன் கேட்கிறான்!” என்று கூறவில்லை அநுமன். ஆனால் அவனது கேள்வியிலே அப் பொருள் தொனிக்கிறது.

“உங்களை யாரென்று சொல்வேன்? உத்தரவு தாருங்கள்” என்று கேட்கிறான்.

அந்தக் கேள்வியிலேதான் எத்தகைய மரியாதை! உயர் பண்பு! 

சீரிய பண்புடைய ஒருவனாக அநுமனைச் சித்தரித்துக் காட்டுகிறான் கம்பன்.

அநுமன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்கிறான் இளையவன். அதாவது அயோத்தியில் என்ன நடந்தது என்பதையும் வனம் புகுந்த பின் என்ன நடந்தது என்பதையும் ஒளியாது சொல்கிறான்.

***

எம் குலத் தலைவற்கு – எங்கள் குலத் தலைவனாகிய சுக்கிரீவனுக்கு; உம்மை – உங்களை; யார் என – யார் என்று; விளம்புகேன் நான் – சொல்வேன் நான்; வீரர் நீர் பணித்திர் வீரர்களே நீங்கள் சொல்லுங்கள்; என்றான் – என்று கேட்டான். மெய்ம்மையின் வேலிபோல் வான் – சத்தியத்திற்கு வேலிபோன்ற அநுமன். வார் கழல் – வீரக் கழல் அணிந்த; இளைய வீரன் – இளைய பெருமாள்; வாய்மை யாவும் – உண்மையாக நடந்த யாவும்; சோர்விலன் – சற்றும் சோர்விலாதவனாய்; மரபுளி – முறைப்படி; தெரிவுற – விளக்கமாக; சொல்லலுற்றான்.

***

கேட்டான் அநுமன்; இராமனை வணங்கினான்; வணங்கிய அநுமனைத் தடுத்தான் இராமன்.

“கேள்வி நூல் மறை வல்லோய்! நீ செய்யத் தகாத செயல் இது? உனது பிரம்மசரிய ஆசிரமத்துக்கு ஏற்ற செயல் அன்று” என்றான்.

அது கேட்ட அநுமன், “அடியேனும் குரங்கினத்தவனே” என்று மறுமொழி கூறினான். விசுவரூபம் எடுத்து நின்றான். பேருருவுடன் விளங்கிய அநுமனைக் கண்டு வியந்தான் இராமன். 

“நமது துன்பம் நீங்கியது; இன்பம் வந்துவிட்டது. அதற்கு அறிகுறியாக இந்த நம்பியைக் கண்டோம்” என்று இளையவனிடம் கூறினான்.

சுக்கிரீவனை அழைத்து வருவதாகக் கூறி விடைபெற்றுச் சென்றான் அநுமன். சென்றவனும் சுக்கிரீவனை அடைந்தான். இராம லட்சுமணர் யார் என்பதைக் கூறினான். அவர்கள் பால் சுக்கிரீவனை அழைத்துச் சென்றான்.

அநுமனுடன் சென்றான் சுக்கிரீவன். இராமன் லட்சுமணர் ஆகியவர் இருவரையும் நோக்கினான்.

***

நோக்கினான்; நெடிது நின்றான்;
        ‘நொடிவு அருங் கமலத்து அண்ணல்
ஆக்கிய உலகம் எல்லாம்
        அன்று தொட்டு இன்று காறும்
பாக்கியம் புரிந்த எல்லாம்
        குவிந்து இரு படிவமாகி
மேக்கு உயர் தடந்தோள் பெற்று
        வீரராய் விளைந்த’ என்பான்.

நோக்கினான். யார்? சுக்கிரீவன். யாரை? இராமன், இளையவன் ஆகிய இருவரையும் நோக்கினான்; நோக்கியபடியே நின்றான்; நீண்ட நேரம் நின்றான்; மெய்ம் மறந்தான்; வியந்தான்; வியப்பினில் மூழ்கினான்.

படைத்தல் கடவுளாகிய பிரமதேவன், உலகு தொடங்கிய நாள் முதல் அன்று வரை படைத்த எல்லா உயிர்களும் செய்த புண்ணியம் யாவும் திரண்டு மனித உருக்கொண்டு, இராமன் என்றும் லட்சுமணன் என்றும் பெயர் பூண்டு வந்ததோ என்று வியந்தான்.

***



நோக்கினான் - பார்த்தான்; நெடிது நின்றான் - நீண்ட நேரம் வியப்புற்று நின்றான்; நொடிவு அருங்கமலத்து அண்ணல் சொல்லற்கு அரிய தாமரையில் வீற்றிருக்கும் பிரமதேவன்; ஆக்கிய உலகம் எல்லாம் - படைத்த உலகங்களில் உள்ள உயிர்கள் எல்லாம்; அன்று தொட்டு இன்று காறும் - அன்று முதல் இன்று வரை; புரிந்த பாக்கியம் எல்லாம் - செய்த புண்ணியம் யாவும்; குவிந்து . திரண்டு; இரு படிவமாகி - இரண்டு உருப்பெற்று; மேக்கு உயர் தடந்தோள் பெற்று - மிக்குயர்ந்த தோள் பெற்று; வீரராய் விளைந்த என்பான் - வீரராக உரு எடுத்தனரோ !

இவ்வாறு வியந்து நின்ற சுக்கிரீவனை அழைத்து அருகில் அமருமாறு பணித்தான் இராமன். சுக்கிரீவனும் அமர்ந்தான்.

“மதங்கர் ஆசிரமத்திலே இருந்த சபரி எனும் வேடுவத் தவசி உன்னைப் பற்றிக் கூறினாள். உன்னால் எனக்கு ஆக வேண்டிய காரியம் ஒன்று உளது. அதன் பொருட்டு உன்னைத் தேடி வந்தேன்” என்றான் இராமன்.

அதே சமயத்தில் சுக்கிரீவனும் வாலியினால் தனக்கு நேர்ந்த துன்பத்தைக் கூறுகிறான்.

***

“முரண் உடைத் தடக்கை ஓச்சி
        முன்னவன் பின் வந்தேனை
இருள் நிலைப் புறத்தின் காறும்
        உலகு எங்கும் தொடர இக்குன்று
அரண் உடைத்தாக உய்ந்தேன்
        ஆர் உயிர் துறக்கலாற்றேன்
சரண் உனைப் புகுந்தேன்; என்னைத்
        தாங்குதல் தருமம்” என்றான்.

பேசத் தொடங்கினான் :

“எனது முன்னவனாகிய வாலி தனது வலிய கைகளை ஓங்கிக்கொண்டு என்னைத் துரத்தினான்; பின்னவனாகிய என்னைக் கொல்வான் வேண்டி விரட்டினான். இவ்வுலகு முழுவதும் துரத்தித் துரத்தி விரட்டினான். உயிருக்கு அஞ்சினேன்; ஓடினேன்; எங்கும் ஓடினேன். இந்த மலை ஒன்றே பாதுகாப்பான இடம் என்று கண்டேன்; ஓடி வந்தேன்; அவன் விரட்டுதல் விட்டான். உயிர் பிழைத்தேன்; சரணம் நீயே. எனைக் காத்தல் நின் தருமம்!” என்றான்.

***

துந்துபி என்றவனுடன் போர் செய்தான் வாலி. அவனைக் கொன்றான். அவனது உடலைத் தூக்கி எறிந்தான் மதங்க முனிவர் தவம்செய்து கொண்டிருந்த மலையில் வந்து விழுந்தது அந்த உடல். அவர் இருந்த இடத்தை அசுத்தம் செய்தது. முனிவர் சீறினார்.

“இதைச் செய்தவன் இம் மலைக்கு வந்தால் அவன் தலை வெடித்துச் சாவான்” என்று சபித்தார்.

பயந்தான் வாலி. மதங்கர் மலைக்கு வருவது ஒழிந்தான். அதுவே சுக்கிரீவனுக்கு அரண் ஆயிற்று.


***

முன்னவன் - எனது மூத்தோனாகிய வாலி; பின் வந்தேனை - இளையவனாகிய என்னை; முரண் உடை - வலிமை பொருந்திய தடம் கை - பெரும் கைகளை; ஒச்சி - ஓங்கி; இருள் நிலை-நிலையாக இருள் தங்கியுள்ள: புறத்தின் காணும் - இவ் அண்டத்தின் அப்பால் வரை உலகு எங்கும் - இவ்வுலகு எங்கும்; தொடர - துரத்த; இக் குன்று - இந்த மலையானது; அரண் உடைத்தாக - பாதுகாப்பாக இருந்ததால், உய்ந்தேன் - உயிர் பிழைத்தேன். எனவே உனைச் சரண்புகுந்தேன், எனைத் தாங்குதல் உன் தருமம் என்றான்.


***

என்ற அக்குரங்கு வேந்தை
        இராமனும் இரங்கி நோக்கி
உன்றனக்குரிய இன்ப
        துன்பங்கள் உள்ள முன்னாள்
சென்றன போக மேல் வந்து
        உறுவன தீர்ப்பல் அன்ன
நின்றன எனக்கும் நிற்கும்
        நேர் என மொழியு நேரா.

என்று சுக்கிரீவன் சொன்ன உடனே அந்தக் குரங்கு அரசனைப் பார்த்து இரங்கி இராமன் சொல்கிறான்; “உனக்கும் எனக்கும் நேர்ந்த துன்பங்கள் போனவை போகட்டும். இனி வரும் துன்பங்களை அவை நேராமல் உன்னை நான் பாதுகாப்பேன். அத் துன்பங்கள் உனக்கும் எனக்கும் சமம்”.

***


என்ற - என்று சொன்ன; அக்குரங்கு வேந்தை - அந்தக் குரங்கரசனாகிய சுக்கிரீவனை இரங்கி நோக்கி - கருணை யோடு பார்த்து; உன் தனக்கு உரிய -உனக்கு உரிய; இன்ப துன்பங்கள் உள்ள -இன்ப துன்பங்களாய் உள்ளவற்றில்; முன் நாள் சென்றன போக - கடந்த காலத்தில் நிகழ்ந்தவை போக; மேல் வந்து உறுவன - இனிமேல் வரும் துன்பங்களை; தீர்ப்பல் - வராமல் தீர்ப்பேன்; அன்ன நின்றன -அவை; எனக்கும் உனக்கும் நேர் - எனக்கும் உனக்கும் சமம்; என - என்று; மொழியும் நேரா - உறுதி மொழி கூறி.

***


“மற்று இனி உரைப்பது என்னே?
        வானிடை மண்ணில் உன்னைச்
செற்றவர் என்னைச் செற்றார்
        தீயரே எனினும் உன்னோடு



உற்றவர் எனக்கும் உற்றார்
        உன் கிளை எனது; என் காதல்
சுற்றம் உன் சுற்றம்; நீ என்
        இன் உயிர்த் துணைவன்” என்றான்.

இராமன் கூறினான். யாரைப் பார்த்து? சுக்கிரீவனைப் பார்த்து. என்ன கூறினான்?

“இனிப் பல படப் பேசுவதில் பயன் என்ன இருக்கிறது? பற்பல வார்த்தைகள். கூறுவது எதற்கு? விண்ணிலும் சரி; மண்ணிலும் சரி. உனது பகைவர் எனது பகைவரே. தீயரே ஆயினும் உனது நண்பர் எனது நண்பரே. உனது உறவினர் எனது உறவினர். என் பால் அன்பு கொண்ட சுற்றம் உன் பால் அன்பு கொண்ட சுற்றமே. நீ என் இன்னுயிர்த் துணைவன்”. என்றான்.

***


இனி - இன்னும்; மற்று உரைப்பது - பல பல சொல்வது, என்னே -எதற்கு? வானிடை - விண்ணிலும்; மண்ணில் - மண்ணிலும்; உன்னைச் செற்றவர் - உன்னைப் பகைத்தவர்; என்னைச் செற்றார் - என்னைப் பகைத்தவர் ஆவார்: உன்னோடு உற்றவர் - உன்னோடு தோழமையுற்றவர்: தீயரே ஆயினும் தீய குணத்தினர் ஆனாலும்; எனக்கும் உற்றார் -எனக்கும் வேண்டியவரே. உன் கிளை - உனது உறவினர்; எனது - எனது கிளை; என் காதல் சுற்றம் - எனது அன்புக்குரிய சுற்றத்தார்; உனது அன்புக்குரிய சுற்றத்தினர் ஆவர். நீ என் உயிர்த்துணைவன் என்றான்.

***


இவ்வாறு பேசி இருவரும் நட்புக் கொண்ட உடனே இராமனை வணங்கினான். “அஞ்சனை சிங்கம். உங்கள் இருக்கைக்கு எழுந்தருள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான்.

இராமனும் சுக்கிரீவனும் நண்பர் ஆகி விட்டபடியால் இனி சுக்கிரீவன் இருக்கையும் இராமபிரானின் இருக்கையும் ஒன்றேயாதலால் அவ்வாறு கூறினான் அநுமன்.

சுக்கிரீவனது இருக்கையை “உங்களது இருக்கை” என்று இராமபிரானைப் பார்த்துக் கூறினான்.

“அப்படியே ஆகட்டும்” என்று இராமன் கூற, எல்லாரும் புறப்பட்டனர். சுக்கிரீவனது இருப்பிடம் சேர்ந்தனர். வானரங்கள் ஏராளமான பழங்களைக்கொண்டு வந்தன. இராமன் நீராடி விட்டு அந்தப் பழங்களை உண்டான். பசியாறினான்.

பிறகு அநுமன் வாலியைப் பற்றி இராமனிடம் கூறினான். சுக்கிரீவன் பால் வாலி சினங்கொண்ட காரணத்தை விளக்கினான். சுக்கிரீவனுடைய மனைவியாகிய உருமையை வாலி கவர்ந்து கொண்டதையும் கூறினான்.

கேட்டான் இராமன், “அந்த வாலியைக் கொல்வேன். அவன் இருக்குமிடத்தைக் காட்டுக” என்றான்.

அப்போது இராமபிரானின் வலிமையை அரிய விரும்பினான் சுக்ரீவன். அவனுடைய வேண்டுகோளை ஏற்று ஒரே அம்பினால் மராமரங்கள் ஏழினையும் துளைத்தான் .

***


நீடு நாகம் ஊடு மேகம் ஓட
        நீரும் ஓட நேர்
ஆடும் நாகம் ஓட மானயானை ஓட
        ஆளி போம்
மாடு நாகம் நீடு சாரல்
        வாளை ஓடும் வாவி யூடு
ஓடு நாகம் ஓட வேங்கை ஓடும்
        யூகம் ஓடுமே.



வாலி இருக்குமிடத்தைக் காட்டுமாறு கேட்டான் இராமன். உடனே வானரங்கள் சூழப் புறப்பட்டான் சுக்ரீவன். எல்லாரும் கிட்கிந்தை நோக்கி நடந்தனர்.

அவர்கள் சென்ற மதங்க மலைச் சாரலை வர்ணிக்கிறார் கவி. அம்மலைச் சாரல் வழியே அருவிகள் பாயும்; பாம்புகள் படம் எடுத்து ஆடும்; அஞ்சி ஓடும்; பெரிய யானைகள் ஓடும்; யாளிகள் ஓடும்; குளங்களிலே மீன்களுடன் தண்ணீர்ப் பாம்புகள் ஒடும்; வேங்கையோடு கருங்குரங்கு ஓடும்; மலைச் சிகரங்களிலே மேகம் ஓடும்.

நீடு நாகம் ஊடு - நீண்ட மலைகளின் வழியாக, மேகம் ஓட - மேகங்கள் ஓட; நீரும் ஓட நீரும் பெருகிப் பாய; ஆடும் நாகம் ஓட படமெடுத்து ஆடும் பாம்புகள் அஞ்சி ஓட, மானம் யானை ஓட - பெரிய யானைகள் ஓட ஆளி போம் -யாளிகள் சஞ்சரிக்கும்; மாடு நாக நீடு நீரல் - சுவர்க்கத்தை மறைக்கும் நீண்ட மலைச் சாரலில்; வாளை ஓடும் வாவியூடு - (உள்ள) குளங்களிலே; வாளை மீன்களுடன்; நாகம் ஓட - பாம்புகள் ஓட வேங்கையோடும் - புலிகளோடும் யூகம் ஓடுமே - கருங்குரங்கு ஓடுமே.

***


.மருவி ஆடும் வாவி தோறும்
        வாணயாறு பாயும், வந்து
இருவி ஆர் தடங்கள்மீனின்
        ஏறு பாயும்; ஆறுபோல்
அருவி பாயும் ஒன்றில் ஒன்றில்
        யானை பாயும்; ஏனலில்
குருவி பாயும்; ஓடி மந்தி
        கோடு பாயும், மாடெலாம்

நீராடும் சுனைகளிலே வான் ஆறு வந்து பாயும். கதிர் அறுக்கப்பட்ட தினைப் புலங்களிலே ஆண் மீன்கள் துள்ளிப் பாயும். அருவிகள் ஆறு போல் பாயும். அவை ஒன்றில் ஒன்றில் யானைகள் வந்து பாய்ந்து விளையாடும். தினைப் புலங்களில் குருவி பாயும். மரக்கொம்புகளிலே மந்தி தாவும்

***

மாடெலாம் - அம்மலைப் பக்கங்களில் எல்லாம்; மருவி ஆடும் வாவி தோறும் - நீராடும் சுனைகளாகிய தடாகங்கள் தோறும்; வான ஆறு வந்து பாயும் - வான் முட்டும் மலைச் சிகரங்களினின்று ஓடி வரும் ஆறு பாயும்; இருவி ஆர் தடங்கள் தோறும் - கதிர் அறுக்கப்பட்ட தாள்களோடு விளங்கும் தினைப் புலங்களில்; ஏறு பாயும் - ஆண் மீன்கள் துள்ளிப் பாயும்; அருவி- அருவிகள் ஆறு போல் பாயும்: ஒன்றில் ஒன்றில் - அவை ஒன்வொன்றிலும்: யானை பாயும் யானைகள் பாய்ந்து விளையாடும்; ஏனலில் - திணைப்புலங்களில்; குருவி பாயும் - குருவிகள் விளையாடும்; மத்தி - ஆண் குரங்குகள்; ஓடி - ஓடிச் சென்று: கோடு பாயும் - கொம்புகளில் தாவும்.

***


தேன் இழுக்கு சாரல் வாரி செல்ல
        மீது செல்லும் நாள்
மீன் இழுக்கும்; அன்றி வானவில்
        இழுக்கும்; வெண்மதிக்
கூன் இழுக்கும்; மற்று உலாவு
        கோள் இழுக்கும் என்பவால்
வான் இழுக்கும் ஏல வாச
        மன்றல் நாறு குன்றமே

அக் குன்றிலே ஏலக்காய் மணம் கமழும். அந்த நறுமணம் வானில் வாழ்தேவர்களையும் தன் பால் இழுக்கும். தேன் அருவி சாரல் வழி ஓடும். வான வீதியிலே ஓடும்.

விண்மீன் கூட்டங்களை அத்தேன் அருவி இழுக்கும்; வானவில்லை இழுக்கும்; பிறைச் சந்திரனை இழுக்கும்; கிரகங்களை இழுக்கும்.

***


வான் இழுக்கும் - வானில் உள்ள தேவர்களையும் தன் நறுமணத்தால் இழுக்கும்; ஏல வாச நாறு குன்றமே - ஏலக்காய் மணம் கமழப் பெற்ற அக் குன்றிலே; தேன் இழுக்கு சாரல் வாரிச் செல்ல - தேன் அருவி சாரல் வழி பாய; மீது செல்லும் - ஆகாயத்திலே செல்கின்ற; நாள் மீன் இழுக்கும் - நட்சத்திரங்களை இழுக்கும்; அன்றி - அஃதல்லாமல்; வானவில் இழுக்கும் -வானவில்லை இழுக்கும்; வெண்மதிக்கூன் இழுக்கும் - பிறைச் சந்திரனை இழுக்கும்; கோள் இழுக்கும் - கிரகங்களை இழுக்கும்; என்பவால் - என்று சொல்வார்கள்.

***


இத்தகைய மலைச்சாரல் வழியே இராமன் லட்சுமணர், சுக்கிரீவன், அநுமன் முதலாயினோர் நடந்து வந்தனர். கிட்கிந்தையை அடைந்தனர். அப்போது இராமன் சுக்கிரீவனை நோக்கி, “வாலியை சண்டைக்கு அழை நீயும் வாலியும் சண்டை செய்கிறபோது நான் தனியே ஒரு புறம் ஒதுங்கி நின்று வாலி மீது அம்பு எய்து கொல்வேன்” என்று கூறினான்.

சுக்கிரீவனும் சம்மதித்தான். உரத்த குரல் எழுப்பினான். வாலியை அழைத்தான். பூமி அதிர நடந்தான். தனது வலிய தோள்களைத் தட்டி ஆரவாரம் செய்தான்.

சூரிய குமாரனாகிய சுக்கிரீவனின் முழக்கம் என் செய்தது? உறங்கிக் கொண்டிருந்த வாலியை எழுப்பியது. பாற்கடல் போல் பள்ளிக் கொண்டிருந்த வாலி விழித்தான். பெரியதொரு மதயானையின் பிளிறல் கேட்ட சிங்கம் போல் எழுந்தான்.

தம்பியாகிய சுக்கிரீவன் தன்னுடன் போர் செய்ய வந்திருப்பது அறிந்தான்: சிரித்தான். அந்தச் சிரிப்பு எல்லாத்திக்குகளிலும் எதிரொலி செய்தது. சுக்கிரீவன்மீது சினம் கொண்ட வாலி தன் படுக்கைவிட்டு எழுந்தான். வேகமாக எழுந்தான். அந்த வேகத்தினாலே கிட்கிந்தை பூமியிலே அழுந்தியது. அவனது கண்கள் தீப்பொறி கக்கின. வாலி தன் கைகள் இரண்டையும் ஒன்றுடன் மற்றொன்று தட்டினான்.

***


வந்தனென் வந்தனென்
        என்ற வாசகம்
இந்திரி முதல் திசை
        எட்டும் கேட்டன
சந்திரன் முதலிய
        தாரகைக் குழாம்
சிந்தின மணிமுடிச்
        சிகரம் தீண்டவே.

“இதோ வந்தேன்; இதோ வந்தேன்” என்று எதிர் முழக்கம் கொடுத்தான் வாலி.

அப்படி அவன் முழங்கியது இந்திரனுக்குரிய கிழக்குத் திசை முதலாகிய எட்டுத் திக்கும் கேட்டது.

சந்திரனை முதலாகக்கொண்ட நட்சத்திரக் கூட்டங்கள் சிதறின. எதனால்? வாலியின் மணிமுடிச் சிகரம் தீண்டியதால்.

***


வந்தனென் வந்தனென் என்ற வாசகம் - இதோ வந்து விட்டேன்; இதோ வந்துவிட்டேன் என்று வாலி கூறிய வீரச்சொற்கள். இந்திரி முதல் - கிழக்கு முதலாகிய; திசை எட்டும் -எட்டுத் திசைகளிலும்; கேட்டன - கேட்டன;

மணிமுடிச் சிகரம் தீண்ட - அவன் ஆர்ப்பரித்து எழுந்த போது இரத்தின கிரீடம் அணிந்த சிரசாகிய மலைச் சிகரம் பட்டதால், சந்திரன் முதலிய தாரகைக் குழாம் - சந்திரனை முதலாக உடைய நட்சத்திரக் கூட்டங்கள்; சிந்தின -கீழே உதிர்ந்தன.


***

கடித்த வாய் எயிறு உகு
        கனல்கள் கார் வீசும்பு
இடித்தலால் உகும் உரும்
        இனத்தில் சிந்தின;
தடித்து வீழ்ந்தன எனத்
        தகர்ந்து சிந்தின
வடித்த தோள் வலயத்தின்
        வயங்கு காசு அரோ.

கோபத்தினாலே பற்களை நறநற என்று கடித்தான் வாலி. அப்போது பற்களினின்றும் சிந்திய தீப்பொறிகள் எப்படியிருந்தன? வானத்திலே இடி இடிக்கும்போது சிதறி ஓடும் சிறு மேகக் கூட்டங்கள் போல் இருந்தன. அவன் தோள் தட்டி முழங்கியபோது அவனுடைய தோள் வளைகளிலிருந்து சிந்திய ரத்தினங்கள் மின்னல் சிதறுவன போல் விளங்கின

***


கடித்த வாய் எயிறு உகு - (கோபத்தினாலே வாலி) கடித்த வாயில் உள்ள பற்களினின்றும் சிந்திய, கனல்கள் - இப்பொறிகள்; கார் விசும்பு இடித்தலால் வானத்திலே மேகங்கள் இடிமுழக்கம் செய்வதால், உகும் - சிதறும்; உரும் சினத்தில் சிந்தின - மேகக் கூட்டங்கள்போல் சிதறி விழுந்தன. (அவன் தோள் தட்டி முழங்கியபோது) வடித்த சிறந்த; தோள் வலயத்தின் வயங்கு காசு - தோள் வளையல்களில் விளங்கிய ரத்தினங்கள்; தடித்து வீழ்ந்தன என - மின்னல்கள் சிதறி வீழ்ந்தன என்று சொல்லும் படியாக; தகர்ந்து சிந்தின - சிதறி விழுந்தன.

***


ஞாலமும் நாற்றிசைப்
        புனலும் நாகரும்
மூலமும் முற்றிட
        முடிவில் தீக்கும் அக்
காலமும் ஒத்தனன்
        கடலில் தான் கடை
ஆலமும் ஒத்தனன்
        எவரும் அஞ்சவே

வாலி எப்படி இருந்தான்? பூமியும், கடலும், தேவரும், மூல தத்துவப் பொருள்களும் அழிந்துபோக யுக முடிவில் எரிக்கும் அந்தக் காலாக்கினிபோல் இருந்தான். பாற்கடலில் தோன்றிய ஆல கால விடம்போல் இருந்தான்.


***

ஞாலமும் - பூமியும்; நாற்றிசையும் - நான்கு திக்குகளிலும் உள்ள புனலும் - கடலும்; நாகரும் - தேவரும்: மூலமும் - மூல தத்துவப் பொருள்களும்; முற்றிட - அழிந்து போக; முடிவில் - யுக முடிவில்: தீக்கும்- எரிக்கும்: அக்காலமும் ஒத்தனன் -அந்தக் காலாக்கினி போலானான்; கடலில் - பாற்கடலில்; தான் கடை ஆலமும் ஒத்தனன் - அவன் கடைந்தபோது எழுந்த ஆல கால விடமும் போன்றான்.


***

அவ்வாறு சினந்து எழுந்த வாலியைத் தடுக்கிறாள் அவனது மனைவி தாரை. வாலியின் கண்களினின்று வெளிவந்த தீயும், வாயினின்று வெளிவந்த புகையும் அவளது கூந்தலைத் தீய்க்கின்றன; கூந்தல் கருகி, நாற்றம் வீசுகிறது. அப்பொழுது வாலி சொல்கிறான்: “மலையில் வாழும் மயில் போன்றவளே! தடை செய்யாதே! விலக்காதே! விடு! விடு! முன்பு நான் கடல் கடைந்ததுபோல அச் சுக்கிரீவனின் உடல் குடைத்து உயிர் குடித்து விரைவில் மீள்வேன்”.

தாரை சொல்கிறாள்:

“அரசே! முன்னை நான் நின் புயவலியை எதிர்த்து நிற்க இயலாது ஒடி ஒளிந்த அந்த சுக்கிரீவன் இப்பொழுது அதிக வலிமை பெற்றான் அல்லன். மீண்டும் உன்னோடு போர் செய்ய வந்திருப்பது எதைக் குறிக்கிறது? பெருந்துணை பெற்றிருப்பதையே குறிக்கிறது”.

தாரை மேலும் சொல்கிறாள்:

“இராமனுடைய நட்பைப் பெற்றுவிட்டான் சுக்கிரீவன். அந்த இராமன் உன் உயிரைப் போக்க முன் வந்துளான் என்று அறிகிறேன்”.

வாலி பதில் சொல்கிறான்:

“அடி பாவி! பெரும் தவறு செய்துவிட்டாய் உலக மக்களுக்கு அறவழி காட்டும் அண்ணல் இராமனுக்கு அபசாரம் செய்துவிட்டாய்!”


***

இருமையும் நோக்குறும்
        இயல்பினாற்கு இது
பெருமையோ? இங்கு இதில்
        பெறுவது என் கொலோ?
அருமையின் நின்று உயிர்
        அளிக்கும் ஆறு உடைத்
தருமமே தவிர்க்குமோ
        தன்னைத் தான் அரோ



எந்தக் கட்சியிலும் சாராது சம நோக்குடன் சீர்தூக்கிப் பார்ப்பவருக்கு இது பெருமை தரும் ஒன்றோ? இதிலே அவர் அடையும் நன்மை யாதோ? தருமம் தன்னைத்தானே அழித்துக் கொள்ளுமோ?

***


இருமையும் - இருவர் பக்கமும்; நோக்குறும் - ஆராய்ந்து பார்க்கும்; இயல்பினாற்கு-குணமுடைய அந்த இராமனுக்கு: இது பெருமையோ - நீ கூறிய செயல் பெருமை தரும் ஒன்றோ? இங்கு இதில் பெறவது - இங்கு வந்து சிநேகம் செய்வதில் அவன் பெறும் நன்மை: என் கொலோ - என்ன? அருமையின் நின்று - அரிய பொருளாக நின்று; உயிர் அளிக்கும் -உயிர்களைக் காக்கும்; ஆறுடை- கொள்கையுடைய; தருமமே - தருமம் தானே; தன்னைத்தான் தவிர்க்குமோ?-தன்னையே அழித்துக் கொள்ளுமோ? என்றான் வாலி தாரையிடம்.

***


ஏற்ற பேர் உலகெலாம்
        எய்தி ஈன்றவன்
மாற்றவள் ஏவ மற்று
        அவள் தன் மைந்தனுக்கு
ஆற்று அரும் உவகையால்
       அளித்த ஐயனைப்
போற்றலை இன்னை
       புகலல் பாலையோ?

உலகம் முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆண்ட தசரத சக்கரவர்த்தி அந்த அரசினைத் தனக்கு கொடுக்க, தான் பெற்ற அவ்வரசினைத் தன் மாற்றாந் தாயாகிய கைகேயி தன் கட்டளைப்படி அவளது மகன் பரதனுக்கு மகிழ்ந்து கொடுத்த இராமனைப் பாராட்டினாயல்லை. இத்தகைய பழிச் சொற்கள் கூறலாமோ?

***

ஏற்ற - தன் தந்தையினுடைய; பேர் உலகெலாம் - பெரிய உலக அரசு அனைத்தையும்; எய்தி -அவன் அளிக்க தான் பெற்ற (பின்); ஈன்றவள் -தன்னைப் பெற்ற தாயாகிய கோசலைக்கு: மாற்றவள் -மாற்றாளாகிய கைகேயி: ஏவ - கட்டளையிட, மற்று - மற்றும்; அவள் தன் மைந்தனுக்கு - அவளது மகனாகிய பரதனுக்கு ஆற்று அரும் உவகையால் -செயற்கரிய மன மகிழ்வோடு; அளித்த ஐயனை - கொடுத்த புண்ணியனை; போற்றலை - நீ பாராட்டினாய் அல்லை; இன்னை - இத்தகைய பழிச் சொற்கள்: புகலல் பாலையோ - கூறலாமோ?


***

நின்ற பேர் உலகெலாம்
        நெருங்கி நேரினும்
வென்றி வெம் சிலை அலால்
        பிறிதும் வேண்டுமோ?
தன் துணை ஒருவரும்
        தன்னில் வேறிலான்
புன் தொழில் குரங்கொடு
        புணரு நட்பெனோ?

இந்த உலகமே ஒன்று கூடி எதிர்த்தாலும் வேறு துணை ஏதும் வேண்டுவதில்லை. அவன் கையில் உள்ள விஜய கோதண்டம் ஒன்றே போதும். அத்தகைய தன்னேர் இல்லாதவன் இராமன் சமான ரஹூதன். கேவலம் ஒரு குரங்கோடு நட்புக் கொள்வதால் அவன் பெறும் நன்மை என்ன?

***


நின்ற - நீண்ட காலமாக நிலை பெற்ற: பேர் உலகு எலாம் - பெரிய உலகங்கள் யாவும்; நெருங்கி - ஒன்றாகி; நேரினும் - எதிர்த்தாலும்; வென்றி வெம்சிலை அலால் வெற்றி தரக் கூடிய அவனது வில் அல்லாது; பிறிதும் வேண்டுமோ - வேறு ஒரு துணை அவனுக்கு வேண்டுமோ? தன் துணை தன்னில் வேறு ஒருவரும் இலான் - தனக்குத் துணை தானே அல்லாது வேறு எவரும் இல்லாதவனாகிய இராமன்; புன் தொழில் -அற்பமான செயல் கொண்ட குரங்கொடு - ஒரு குரங்கினோடு; புணரும் நட்பு ஏனோ - கொள்ளும் நட்பு எதற்கு?

***

தம்பியர் அல்லது
        தனக்கு வேறுயிர்
இம்பரின் இல் என
        எண்ணி ஏய்ந்தவன்
எம்பியும் யானும்
        எதிர்த்த போரினில்
அம்பிடை தொடுக்குமோ?
        அருளின் ஆதியான்

இந்த உலகத்திலே தனது தம்பிகளைத் தவிர வேறு உயிர் தனக்கு இல்லை என்று எண்ணி அதற்கு ஏற்ப வாழ்பவன் இராமன். அப்படிப்பட்ட ஒருவன் நானும் என் தம்பியும் சண்டையிடுகிற போது நடுவிலே புகுந்து பாணம் விடுவானோ?

***

தம்பியர் அல்லது - தன் தம்பிகளே அன்றி, வேறு உயிர் - மற்றோர் உயிர்: இம்பரில் - இந்த உலகில்; தனக்கு இல் என - தனக்கு இல்லை என்று கருதி; ஏய்ந்தவன் - ஒன்றி வாழும் இயல்பு கொண்ட: அருளின் ஆழியான் - கருணைக் கடலான இராமன்; எம்பியும் யானும் - எனது தம்பி சுக்கிரீவனும் நானும்; எதிர்த்த போரில் - எதிர்த்து 

நடத்தும் சண்டையில்; இடை - நடுவே; அம்பு தொடுக்குமோ - அம்பு தொடுப்பானோ? (மாட்டான்)

***


“சிறிதும் கலங்காதே! இங்கேயே இரு. கண் இமைப் பொழுதிலே அந்த சுக்கிரீவனுடைய உயிர் குடித்து. அவனுக்குத் துணை நிற்பவரையும் அழித்து இங்கு நான் திரும்பி வருவேன்” என்று தாரைக்கு ஆறுதல் மொழி பலவும் கூறிப் போருக்குப் புறப்பட்டான் வாலி.

போர் முழக்கம் செய்த பின்னோனாகிய சுக்கிரீவனை நோக்கித் தானும் எதிர் முழக்கம் செய்தான்.

அப்போது இராமபிரான் தனது இளவலாகிய லட்சுமணனை நோக்கிக் கூறுகிறான் : “அப்பனே! நன்றாக ஊன்றி நோக்குவாயாக. தேவர்களாயினும் சரி; அசுரர்களாயினும் சரி; கடல், காற்று, மேகம் ஆகிய எவையாயினும் சரி. இந்த வாலி சுக்கிரீவர்களுக்கு ஒப்பாகுமோ!”

இளவலும் இயம்பலுற்றான்: “ஐயா! இந்த சுக்கிரீவன் தன் முன்னவனாகிய வாலியைக் கொல்லும் யமனை இங்கே அழைத்து வந்துளான். குரங்குகளின் நிந்தனைக்கு ஆளாகி இப்போரில் ஈடுபட்டோமே என்று என் மனம் குழம்பியுள்ளது. எதையும் சிந்திக்கும் திறன் இல்லாதவனாக இருக்கிறேன். தன் முன்னவனையே கொல்ல முற்பட்டுள்ள இந்தச் சுக்கிரீவன் நம் பால் நேர்மையாக நடந்து கொள்வான் என்பது என்ன உறுதி?”

“தம்பி! எந்தத் தாய் வயிற்றில் பிறந்தவரும் பரதனைப் போல் ஆவாரோ ஆதலின் குரங்குகள் பால் அத்தகைய நல் ஒழுக்கம் காணலாமோ?” என்று கூறி லட்சுமணனின் குழப்ப நிலையை நீக்கினான் இராமன்.

வாலியும் சுக்கிரீவனும் குன்றொடு குன்று மோதுவது போலவும், வெற்றியும், வலிமையும் வாய்ந்த ஆண்

சிங்கங்கள் ஒன்றை மற்றொன்று தாக்குவன போலவும் இடது சாரி வலது சாரியாகத் திரிந்து போர் செய்தனர். குயவன் கையால் சுற்றி விடப்பட்ட சக்கரம் எப்படிச் சுற்றுமோ அப்படி இவ்வுலகில் உள்ள பொருள்கள் யாவும் சுழன்றன. அவ்விருவரும் தோளொடு தோள் தேய்த்தனர்: தாளொடு தாள் தேய்த்தனர். அக்காட்சி எப்படி இருந்தது? சுந்தோப சுந்தர்கள் திலோத்தமையின் பொருட்டுப் போரிட்டது போலிருந்தது.

சுந்தன். உபசுந்தன் என இருவர்; அசுரர் இரண்யகசிபு வழி வந்தவர். நிசும்பன் என்ற அசுரனின் புதல்வர். பிரம தேவனைக் குறித்து அருந்தவம் செய்தனர்; அரிய வரங்கள் பல பெற்றனர். அவ்வலிமையால் தேவர்களை வருத்தினர். தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி பிரமதேவன் ஒர் அழகிய பெண்ணைப் படைத்தான்; அவளுக்குத் திலோத்தமை என்று பெயரிட்டான். உயர்ந்த அழகிய பொருள் ஒவ்வொன்றிலும் ஒரு எள் அளவு எடுத்து ஒன்று சேர்த்துப் படைத்ததால் அவள் திலோத்தமை எனும் பெயர் பெற்றாள்.

சுந்தன். உபசுந்தன் ஆகிய இருவரும் அவளை விரும்பினர்.

“உங்கள், இருவரில் எவன் பலசாலியோ அவனையே நான் மணப்பேன்” என்றாள் திலோத்தமை. தங்கள் பலத்தை நிரூபிக்கும் பொருட்டு இருவரும் போரிட்டனர். மடிந்தனர். இது புராண வரலாறு.

இந்த சுந்தோப சுந்தர் போல வாலியும் சுக்கிரீவனும் போரிட்டனர்.


***

நேமி தான் கொலோ? நீலகண்டன்
        நெடும் சூலம்
ஆம் இது ஆம் கொலோ? அன்று எனின்
        குன்று உருவு அயிலும்

நாம இந்திரன் வச்சிரப்
        படையும் என் நடுவண்
போம் எனும் துணை போதுமோ?
        யாது? எனப் புழுங்கும்.

வாலியும் சுக்கிரீவனும் ஒருவரை மற்றொருவர் தாக்கிப் போர் செய்தனர். மலையும் மலையும் மோதியது போல அவ்விருவரும் போர் செய்த காலை மறைந்திருந்த இராமன் வாலி மீது கணை ஒன்று ஏவினான். அந்த அம்பானது வாலியின் மார்பிலே பாய்ந்து துளைத்தது. அவ்விதம் அம்பு துளைக்கவே இது எவருடைய கணையோ? திருமாலின் சக்கராயுதமோ? நீலகண்டன் விடுத்த சூலமோ? இந்திரன் வச்சிராயுதமோ? அவற்றிற்கெல்லாம் என் மார்பு துளைக்கும் வலிமை இல்லையே! இது யாதோ தெரியவில்லையே!” என்று தவித்தான் வாலி.

நேமி தான் கொலோ - இப்போது என் மீது பாய்ந்துள்ள இந்தக் கணையானது திருமாலின் சக்கராயுதமோ? நீலகண்டன் - நீலகண்டனாகிய சிவபெருமானின்; நெடும் - நீண்ட சூலம் ஆம் இது ஆம் கொலோ - சூலாயுதம் இதுவோ? அன்று எனின் - இல்லையேல்; குன்று உருவு அயிலும் . மலையின் உருப்பிளந்த, ராம இந்திரன் வச்சிரப் படையும் - பிரசித்தி பெற்ற இந்திரனுடைய வச்சிராயுதமும்; என் நடுவண் - என் மார்பிலே ஊடுருவிச் செல்லும் துணை போதுமோ - வலியுடையதோ? யாது என? யாதோ தெரியவில்லையே என்று; புழுங்கும் - தவிப்பான்.

***

வெள்கிடும்; மகுடம் சாய்க்கும்
        வெடிபடச் சிரிக்கும்; மீட்டும்
உள்கிடும், “இதுவும் தான் ஒர்
        ஓங்கு அறமோ?” என்று உன்னும்
முள்கிடும்; குழியில் புக்க
        மூரி வெம் களி நல் யானை
தொள் கொடும் கிடந்தது என்னத்
        துயர் உழந்து அழிந்து சோர்வான்

யானைப் பிடிப்பவர்கள் பெரிய படுகுழி வெட்டி அதைப் பசிய இலைகளாலும், கரும்புக் கழிகளாலும் மூடி மறைத்து வைப்பார்கள். பாவம் ஒன்றுமறியாத யானை அதில் வீழ்ந்து விடும். அவ்வாறு வீழ்ந்த யானை சீறும்; துதிக்கையால் சாடும்; பெருமூச்சு விடும்.

அவ்வாறே துடித்தான் வாலி; வெட்கம் கொள்வான்: தலையிலே அணிந்த கிரீட்த்தைச் சாய்ப்பான்; பெருமுழக்கத்துடன் சிரிப்பான்; மீளவும் யோசிப்பான்; இவ்வாறு கணை ஏவுதலும் சிறந்த தருமமோ என்று எண்ணுவான்.

***


முள்கிடும் குழியில் புக்க - முழுகி அழுந்தத்தக்க பெருங்குழியிலே விழுந்து: மூரி வெம் களி நல் யானை - வலிமை மிக்க வெவ்விய மதங்கொண்ட சிறந்த ஆண் யானையானது; தோள் கொடும் கிடந்தது என்ன - வருந்திக் கிடந்தது போல; துயர் உழந்து - துன்பம் அனுபவித்துக் கொண்டு; அழிந்து - நிலை அழிந்து: சோர்வான் - தளர்வுறும் வாலி; வெள்கிடும் - வெட்கம் கொள்வான்; மகுடம் சாய்க்கும் - கிரீடம் அணிந்த தலையைச் சாய்ப்பான்; வெடிபடச் சிரிக்கும் - பெரு முழக்கத்துடன் சிரிப்பான்; மீட்டும் ஊகிடும் - மீளவும் யோசிப்பான்: இதுவும் தான் ஓங்கு அறமோ என்று உன்னும் - இவ்விதம் அம்பு எய்தலும் சிறந்ததோர் அறமோ? என்று எண்ணுவான்.

***

“வில்லினால் துரப்ப அரிது, இவ்
        வெஞ்சரம்” என வியக்கும்
“சொல்லினால் நெடு முனிவரோ
        தூண்டினார்” என்னும்
பல்லினால் கடிப் புறும் பல
        காலும் தன் உரத்தைக்
கல்லி ஆர்ப் பொடும் பறிக்கும் அப்
        பகழியைக் கண்டான்.

“இந்தக் கணை சாதாரணமானது அன்று. வில்லினின்று பாய்ந்த வெஞ்சரம் அன்று இது? முனிவர் எவரோ மந்திரம் சொல்லி விடுத்த கணையேயாகும்” என்று முடிவு செய்தான் வாலி. வாலி தாங்க முடியாமல் பற்களை "நறநற' என்று கடித்தான்.

***

ஆர்ப்பொடும் - ஆரவாரத்துடனே தன் உரத்தைக் கவ்வி - தன் மார்பைத் துளைத்து; பறிக்கும் - பெயர்த்துச் சென்ற; அப்பகழியைக் கண்டான் - அந்த அம்பைக் கண்ட வாலி; இவ்வெம் சரம் - இக் கொடிய அம்பு; வில்லினால் துரப்பு அரிது - ஒரு வில்லினால் செலுத்தற்கு அரியது என வியக்கும் - என்று ஆச்சரியம் கொள்வான்; நெடு முனிவர் - நீண்ட தவம் புரிந்த பெரிய முனிவர்; சொல்லினால்- மந்திரம் ஜெபித்து; தூண்டினார் - ஏவினார்; என்னும் - என்று எண்ணுவான் பலகாலும் பல்லினால் கடிப்புறும் - பல முறை தன் பற்களை "நற நற” என்று கடிப்பான்.

***


மும்மை சால் உலகுக்கு எல்லாம்
        மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
        தனிப்பெரும் பதத்தைத் தானே
இம்மையே எழுமை நோய்க்கும்
        மருந்தினை, இராம என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக்
        கண்களில் தெரியக் கண்டான்.

***

மூன்று உலகங்களுக்கும் மூல மந்திரமாக உள்ளதும், தன்னை ஜபிக்கின்ற அடியார்க்குத் தம்மையே முற்று அளிக்கின்றதும், ஒப்பற்ற சிறந்த சொல்லாக உள்ளதும் இப்பிறப்பிலேயே எழுமையும் ஒழிக்க வல்லதும்; ஆன ‘ராம’ என்ற சிறந்த திருநாமம் அந்த அம்பிலே விளங்கக் கண்டான் வாலி.

***

மும்மை சால் – மேல் உலகம்; பூ உலகம்; பாதாள உலகம் என்று சொல்லப்பட்ட மூன்று வகையான: உலகுக்கு எல்லாம் – உலகங்களுக்கு எல்லாம்; மூல மந்திரத்தை – முக்கிய மந்திரமாக உள்ளதும்; தமர்க்கு – தன்னை ஜபிக்கின்ற அடியார்க்கு; தம்மையே முற்றும் நல்கும் – தம்மையே முற்றும் கொடுக்கின்ற; தனிப்பெரும் பதத்தை – ஒப்பற்ற சிறந்த சொல்லாக உள்ளதும்; தானே – தனியாகவே; இம்மையே – இப் பிறப்பிலேயே; எழுமை நோய்க்கும் – எழுவகைப் பிறப்புகளாகிய நோய்களை; மருந்தினை – ஒழிக்க வல்ல மருந்தாக உள்ளதும் ஆன; இராம என்னும் செம்மை சேர் நாமம் தன்னை – ராம என்கிற சிறந்த திருநாமத்தை; கண்களில் தெரியக் கண்டான் – தனது கண்களினால் (அந்த அம்பிலே) விளங்கப் பார்த்தான்.

***


கண்ணுற்றான் வாலி, நீலக்
        கார்முகில் கமலம் பூத்து
மண் உற்று வரிவில் ஏந்தி
       வருவதே போலும் மாலை
புண் உற்றது அனைய சோரி
       பொறியோடும் பொடிப்ப நோக்கி
“எண்ணுற்றாய்? என் செய்தாய்” என்று
       ஏசுவான் இயம்பலுற்றான்.

அப்போது இராமன் அவன் எதிரே வந்தான். கார் மேகமானது தாமரை மலரப் பெற்று வானத்தினின்றும் மண் மேல் வந்து வில் ஏந்தி வருவதே போல வத்தான்.

“என்ன நினைத்தாய்? என்ன செய்தாய்?” என்று சீறினான் வாலி, கண்களில் ரத்தம் தெறிக்க, தீப்பொறி பறக்க மேலும் இராமனை ஏசுகிறான் வாலி.

***


நீலம் – நீல நிறம் கொண்ட கார்முகில் – கார் காலத்து மேகம்; கமலம் பூத்து – தாமரை மலரப் பெற்று; வரிவில் ஏந்தி – கட்டமைத்த வில்லினை ஏந்தி; மண் உற்று – பூமியில் இறங்கி; வருவதே போலும் – நடந்து வருவது போல; கண்ணுற்றான் – (வருகின்ற) இராமனைக் கண்ட; வாலி – வாலியானவன்; புண் உற்றாது அனைய – புண்ணிலிருந்து வெளிப்படுவது போல; சோரி – இரத்தம்; பொறியொடும் – பொடிப்ப – தீப்பொறியோடு; வெளிப்பட நோக்கி – இராமனைப் பார்த்து; எண்ணுற்றாய் – என்ன நினைத்தாய்? என் செய்தாய்? – என்ன செய்தாய்? என்று – என்று வினவி; ஏசுவான் – பழிப்பவனாய்; இயம்பலுற்றான் – சொல்லத் தொடங்கினான்.

***


வாய்மையும் மரபும் காத்து
        மன்னுயிர் துறந்த வள்ளல்
தூயவன் மைந்தனே! நீ
        பரதன் முன் தோன்றினாயே!
தீமை தான் பிறரைக் காத்துத்
        தான் செய்தால் தீங்கு அன்றாமோ?
தாய்மையும் அன்றி நட்பும்
        தருமமும் தழுவி நின்றாய்.

“வாய்மையும், மரபும் காத்து வான் புக்க தசரதன் மைந்தனே! நீ பரதன் முன் தோன்றினாயே! மற்றவருக்கு ஏற்படும் தீமையினின்று அவரைப் பாதுகாப்பதற்காக நீ தீமை செய்தால் அது நன்மை ஆகுமா?”

***

வாய்மையும் – சத்தியமும்; மரபும் – பிறந்த குலப் பெருமையும்; காத்து – பாதுகாத்து; மன் உயிர் துறந்த – (அதன் பொருட்டு) தனது உயிர் நீத்த; வள்ளல் – வள்ளலும்; தூயவன் – தூய்மையானவனும் ஆகிய தசரத சக்கரவர்த்தியின்; மைந்தனே – பிள்ளாய்; நீ பரதன் முன் தோன்றினாயே – நீ பரதனுக்கு முன் பிறந்தாயே; பிறரை தீமை காத்து – மற்றவருக்கு ஏற்படும் தீமையினின்றும் அவரைப் பாதுகாத்து; தான் செய்தால் – தானே அத்தீமை செய்தால், தீங்கு அன்று ஆமோ – அது நல்லது ஆகுமோ? தாய்மையும் – தாய்மைக் குணமும்; அன்றி – அல்லாமல்; தருமமும் – அறமும்; நட்பும் – சிநேகமும்; தழுவி நின்றாய் – சார்ந்து நிற்பவனே.

***


ல்லறம் துறந்த நம்பி
        எம் மனோர்க்கு ஆகத் தங்கள்
வில் அறம் துறந்த வீரன்
        தோன்றலால், வேத நூலில்
சொல் அறம் துறந்திலாத
        சூரியன் மரபும், தொல்லை
நல்லறம் துறந்தது என்னா
        நகை வர நாண் உட்கொண்டான்.

அரச வாழ்வும், அரண்மனை வாழ்வும் துறந்து, காடு வந்த இராமன், சகோதரர் சண்டையில் தலையிட்டு வில் அறம் துறந்தான். அதனால் வேத விதி வழுவாத சூரிய குல அரசர் மரபும் பழைமையான நல்லறம் துறந்தது என்று எண்ணினான் வாலி; நாணம் மேலிட்டது. மெல்ல நகைத்தான்.

***

இல்லறம் துறந்த நம்பி – இல்லறம் துறந்து, தவ வேடம் தாங்கிக் காடு வந்த புருஷோத்தமன்: எம்மனோர்க்காக – எம்மைப் போன்றவர்களுக்காக; தங்கள் வில் அறம் துறந்த வீரன் – தங்கள் பரம்பரைக்குரிய வில் போர் முறையைக் கைவிட்ட வீரனாகிய இராமன்; தோன்றலால் – பிறந்ததால்; வேத நூலில் சொல் – வேத நூற்களிலே சொல்லப்பட்ட; அறம் துறந்திலாத – அறநெறி வழுவாத; சூரியன் மரபும் – சூரிய குலமும்; தொல்லை நல் அறம் துறந்தது என்ன – தொன்று தொட்டு வருகின்ற நல்ல அறத்தை நழுவவிட்டது என்று; நகை வர–வெளியே சிரிப்பும்; உள் நாணும் – உள்ளே நாணமும்; கொண்டான் – கொண்டான்.

***


குலம் இது; கல்வி ஈது;
        கொற்றம் ஈது; உற்று நின்ற
நலம் இது; புவனம் மூன்றும்
        நாயகம் உன்னது அன்றோ?
வலம் இது; இவ்வுலகம் தாங்கும்
        வண்மை ஈது என்றால் திண்மை
அலமரச் செய்யலாமோ அறிந்திருந்து
        அயர்ந்துளார்போல்

சிறந்த குலத்தில் பிறந்தாய்! உயர் கல்வியுடையாய்! வெற்றியுடையாய்! நற்குண நற்செயல்யாவும் உடையாய்! மூவுலகிற்கும் தலைமை தாங்குவாய்! வலிமை உனது! பாதுகாக்கும் மேன்மை உனது. எல்லாம் அறிந்தும் அறியாதார் போல் இதனைச் செய்யலாமோ!

***

குலம் இது – உன்னுடைய குலம் சிறந்தது; கல்வி ஈது – சிறந்த கல்வி உன்னுடையது; கொற்றம் ஈது – வெற்றி உன்னுடையது; உற்று நின்ற நலம் இது – பொருந்திய நற்குண நற்செயல்கள் எல்லாம் உன்னுடையன; புவனம் மூன்றும் – மூன்று உலகங்களுக்கும்; நாயகம் – தலைமை; உன்னது அன்றோ – உன்னுடையது அன்றோ? வலம் இது – சிறந்த வலிமை உன்னுடையது; இ உலகம் தாங்கும் – இந்த உலகத்தைப் பாதுகாக்கும்; வன்மை ஈது – மேன்மை உன்னுடையது; என்றால் – என்றால்; அறிந்து இருந்தும் – எல்லாம் அறிந்து இருந்தும்; அயர்ந்துளார் போல் – அனைத்தும் மறந்தவர் போல; திண்மை அலமர – அந்த உறுதிகள் எல்லாம் நிலை குலையும்படி; செய்யலாமோ? – நீ இப்படிச் செய்யலாமோ?

***


கோ இயல் தருமம் உங்கள்
        குலத்து உதித்தோர்கட்கு எல்லாம்
ஓவியத்து எழுத ஒண்ணா
        உருவத்தாய்; உடைமை அன்றோ?
ஆவியை, சனகன் பெற்ற
        அன்னத்தை அமிழ்தின் வந்த
தேவியைப் பிரிந்த பின்னை
        திகைத்தனை போலும் செய்கை.

சித்திரத்தில் எழுத முடியாத வடிவழகுடையவனே! உங்கள் குலத்தில் பிறந்தவர்களுக்கு எல்லாம் அரசு நீதி வழுவாதிருத்தல் உடைமையன்றோ? அங்ஙனமிருக்க நீ அந்த நீதி வழுவியது எவ்வாறு? உனது உயிருக்கு உயிரான தேவியை, சனகன் பெற்ற அன்னத்தைப் பிரிந்ததால் செய்யும் செயல் இதுவென்று அறியாது தடுமாறினாய் போலும்.

***

ஓவியத்து – சித்திரத்தில்; எழுத – எழுதுவதற்கு; ஒண்ணா – இயலாத; உருவத்தாய் – வடிவழகு உடையவனே; கோ இயல் தருமம் – அரச நீதி; உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் – உங்கள் குலத்தில் பிறந்தவர்களுக்கு எல்லாம்; உடைமை அன்றோ – உரிய ஒன்று அல்லவோ? (அங்ஙனம் இருக்க நீ அரசு நீதி தவறியது எதனால்?) ஆவியை – உனது உயிருக்கு உயிரான; சனகன் பெற்ற அன்னத்தை – சனக மகாராசன் பெற்ற அன்னம் போன்றவளும்; அமிழ்தின் வந்த – அமுதம்போல் அருமையாகக் கிடைத்தவளும் (ஆகிய); தேவியை உனது மனைவியை; பிரிந்த பின்னை – பிரிந்த பிறகு; செய்கை திகைத்தனை போலும் – செய்யும் செயல் ஈதென்று அறியாது தடுமாறினாய் போலும்.

***


அரக்கர் ஓர் அழிவு செய்து
        கழிவரேல் அதற்கு வேறு ஓர்
குரக்கு இனத்து அரசைக் கொல்ல
        மனு நீதி கூறிற்று உண்டோ
இரக்கம் எங்கு உகுத்தாய்? என்பால்
        எப்பிழை கண்டாய்? அப்பா
பரக்கழி இது நீ பூண்டால்
        புகழை யார் பறிக்கற் பாலார்


அரக்கர் உனக்கு ஒரு தீங்கு செய்து சென்றால். அதற்காக மற்றொரு குரங்கினத்தின் அரசைக் கொல்லுமாறு மனு நீதி கூறிற்றா? இரக்கம் எங்கு போக்கினாய்? என்பால் என்ன குற்றம் கண்டாய்? அப்பா! இப்பெரும் பழியை நீ ஏற்றுக்கொண்டால் புகழை ஏற்பவர் எவர்?

***

அரக்கர் ஓர் அழிவு செய்து கழிவரேல் – அரக்கர் உனக்கு ஒரு தீங்கு செய்து சென்றால்; அதற்கு – அதற்காக; வேறு ஒரு – வேறாகிய ஒரு; குரக்கு இனத்து அரசை – குரங்கு இனத்தின் அரசனை; கொல்ல – கொல்லுமாறு; மனுநீதி – மனு தர்மசாத்திரம்; கூறிற்று அன்றோ – கூறியது உண்டா? இரக்கம் எங்கு உகுத்தாய் – உனக்குரிய கருணையை எங்கே போக்கிவிட்டாய்? என்பால் – என்னிடம்; எப்பிழை கண்டாய் – என்ன குற்றம் கண்டாய்? அப்பா – நீ; பரக்கழி இது பூண்டால் – இந்தப் பெரும்பழியை ஏற்றுக் கொண்டால்; புகழைப் பறிக்கார் பாலர் யார்?– புகழை ஏற்பவர் எவர்? (எவருமிலர் என்றபடி.)

***


வீரம் அன்று; விதி அன்று
        மெய்ம்மையின்
வாரம் அன்று; நின் மண்ணினுக்கு
        என் உடல்
பாரம் அன்று; பகை அன்று;
        பண்பு ஒழிந்து
ஈரம் அன்று இது
        என் செய்தவாறு நீ?

வீரம் அன்று; அறநூல் விதியும் அன்று; மெய்யின் பாற்பட்டதும் அன்று; உனக்கே உரிய மண் உலகிற்கு என் ஒருவனது உடல் ஒரு பெரும் சுமையன்று; நான் உன் பகையும் அன்று இரக்கமின்றி என்ன செய்தாய்?

***

(நீ செய்த இச் செயல்) வீரம் அன்று–வீரன் செயற்குரிய செயல் அன்று; விதி அன்று-தரும சாத்திர விதி அன்று; மெய்ம்மையின் வாரம் அன்று – உண்மையின்பால் பட்டதும் அன்று; நின் மண்ணினுக்கு – உனக்கு உரியதான இந்த நில உலகுக்கு; என் உடல் – என் ஒருவனது உடல்; பாரம் அன்று – பொறுக்க முடியாத சுமை அன்று; பகை அன்று - உனக்கு நான் பகைவனும் அல்லன்; (இங்ஙனமிருக்க) பண்பு ஒழிந்து - நீ உன் பெருங்குணத்தைவிட்டு; ஈரம் அன்று - இரக்கம் இல்லாத இது செய்த ஆறு - இச் செயல் செய்தது; என் - எக் காரணம் பற்றி?

***


நூல் இயற்கையும் நும்
        குலத்து உந்தையர்
போல் இயற்கையும்
        சீலமும் போற்றலை


வாலியைப் படுத்தாய் அலை
              மன் அற
வேலியைப் படுத்தாய்
       விறல் வீரனே.

வலிமை மிக்க வீரனே! தரும சாந்திரங்களிலே கூறப்பட்டுள்ள முறையையும், உங்கள் குலத்திலே தோன்றிய தாதை மூதாதை போன்றாரின் இயல்பையும், நல்ஒழுக்கத்தையும், நீ பாதுகாக்கவில்லை; வாலியாகிய என்னை நீ கொன்றாய் அல்லை; அரச நீதி எனும் வேலியையே அழித்தாய்.

***

விறல் வீரனே - வலிமை மிக்க வீர; நூல் இயற்கையும் - தரும சாஸ்திரங்களிலே கூறப்பட்டுள்ள முறையையும்; நும் குலத்து - உங்கள் குலத்திலே தோன்றிய; உந்தையர் போல் இயற்கையும் - தாதை மூதாதை போன்றோரின் இயல்பையும்; சீலமும் - நல்ஒழுக்கத்தையும்; போற்றலை - நீ பாதுகாத்தாய் இல்லை; வாலியைப்படுத்தாய் அல்லை - வாலியாகிய என்னை நீ அழித்தாய் இல்லை; மன் அற வேலியை படுத்தாய் - அரச நீதி எனும் வேலியையே அழித்துவிட்டாய்.

***

இவ்வாறு இராமனை ஏசினான் வாலி. இராமன் கோபங்கொள்ளவில்லை. மிக்க அமைதியாக தான் வாலியை 'கொன்றது சரியே' என்று நிரூபித்துக் காட்டினான். அதை வாலியும் ஏற்றுக்கொண்டான்.

இராமன் கூறிய காரணங்கள் யாவை? வாலி இந்திரனின் அம்சம். தேவருள் இந்திரன் தாமச குணம் நிறைந்தவன். தன் ஆணவத்தால் பலமுறை தன் பதவியை இழந்திருந்தான். ஆனாலும் இறுதியில் கடவுள் அவனைக் காப்பாற்றினார். ஏன்? தன் இரக்க குணம் காரணமாக, 

வாலியிடமும் இந்திரனின் தாமச குணம் நிரம்ப படிந்திருந்தன. இல்லாவிட்டால் எத்தனையோ வீராதி வீரர்கள் இருக்க, கொடியவனான இராவணனை உயிர்த் தோழனாக ஏற்றுக் கொள்வானா?

உண்மையில் நல்லவர்க்கே நண்பனாயிருந்தால், இராவணனின் படை வீரர்களான கரதூஷணாதிகளை தன் நாட்டின் அருகில் இருக்க இடந்தருவானோ?

இராவணன் சீதாபிராட்டியை அபகரித்துச் சென்ற விவரமும் அவன் அறிவான். அது அடாத செயல் என்பதும் உணர்வான். இராவணனுக்குப் புத்தி கூறினானா? இல்லை கண்டித்தானா? இல்லையே! இது குற்றமாகாதோ?

தசரதனை அவன் (வாலி) நன்கு அறிவான். சூரிய குலப்பெருமையும் அவன் அறிந்ததே. இராமபிரானின் தியாக உள்ளமும் அவனுக்குத் தெரிந்ததுதான். இருந்தும் கடமையைச் செய்ய தவறியது குற்றமல்லவா?

அது மட்டுமா? தம்பியை (சுக்ரீவனை) கொல்ல முயன்றான்.

தம்பியின் மனைவியை அபகரித்தான்.

இவை இரண்டும் கொடிய பாவங்கள். இந்த இரண்டிற்கும் நூல்கள் விதித்த தண்டனை யாது? கொலைத் தண்டனை.

எனவே வாலியை இராமன் கொன்றது நியாயமானது தானே.

வாலி மீண்டும் ஓர் சந்தேகம் கேட்டான். “தன்னை இராமன் ஏன் மறைந்திருந்து அடிக்கவேண்டும்” என்று.இதற்கு லட்சுமணன் விளக்கங்கூறி தெளிவுபடுத்தினான். வாலியைச் சூழ்ந்த மாயை அகன்றது. அவன் இராமனிடம் சரணடைந்து வரங்கள் சில கேட்டு பெற்றான்.

***




“தாய் என உயிர்க்கு நல்கி
        தருமமும் தகவும் சால்பும்
நீ என நின்ற நம்பி
        நெறியினின் நோக்கும் நேர்மை
நாய் என நின்ற எம் பால்
        நவை அற உணரலாமோ
தீயன பொறுத்தி” என்றான்
        சிறியன சிந்தியாதான்.

தாய் போல உயிர்களுக்கு நலம் செய்து, தருமமும், நடுநிலையும், நற்குண நிறைவும் நீயே என்று சொல்லும்படி அவ்வழி நின்று காட்டும் புருஷோத்தமனே! அறநெறி நோக்கில் காணும் தன்மையை “நாய் போன்ற எம்மிடம் குற்றம் காணலாமோ? தீய செயல்களைப் பொறுத்தருள்வாய்” என்றான் சிறிய எண்ணம் இல்லாத வாலி.

***


தாய் என - தாய் போல; உயிர்க்கு - உயிர்களுக்கு; நல்கி - நலம் செய்து; தருமமும், தகவும், சால்பும் - தருமமும் நடுநிலையும் நற்குண நிறைவும்; நீ என - நீயே என்று சொல்லும்படி; நிறை நம்பி - அவ்வழி நின்று காட்டும் புருஷோத்தமனே; நெறியனின் நோக்கும் நேர்மை - அறநெறி நோக்கில் காணும் தன்மையை; நாய் என நின்ற - நாய் போலிருக்கும்; எம் பால் - எங்கள் பால்; நவை அற உணரலாமோ - குற்றம் காணல் இயலுமோ; தீயன பொறுத்தி - தீய செயல்களைப் பொறுத்தருள்வாய்; என்றான் - என்றான்; சிறியன சிந்தியாதான் - சிறிய எண்ணங் கொள்ளாத வாலி.

***




“ஓவிய உருவ! நாயேன்
        உளது ஒன்று பெறுவது உன்பால்
பூ இயல் நறவம் மாந்தி
        புந்தி வேறு உற்ற போழ்தில்
தீவினை இயற்று மேனும்
        எம்பிமேல் சீறி, என் மேல்
ஏவிய பகழி என்னும்
        கூற்றினை ஏவல்’’ என்றான்.

சித்திரம் போலும் வடிவழகு கொண்டவனே! நான் உன் பால் வேண்டும் வரம் ஒன்றுளது. மலரிலேயுள்ள மதுவை அருந்தி மதிமயக்குற்றுத் தவறு இழைத்தாலும் சீறி என்மேல் ஏவிய கணை எனும் கூற்றினை என் தம்பிமேல் ஏவாது பொறுத்திடுவாய்.

***

ஓவிய உருவ - சித்திரம் போலும் வடிவழகு கொண்டவனே; நாயேன் உன் பால் பெறுவது - எளியேன் உன்னிடம் வேண்டிப் பெறுவது; ஒன்று உளது - ஒன்று உண்டு; பூ இயல் - மலர்களில் உண்டான, நறவம் - மதுவை; மாந்தி - அருந்தி; புந்தி - அறிவு; வேறு உற்ற போழ்தில் - மயங்கியபோது, தீவினை இயற்றமேனும் - கெடுதல் செய்தாலும்; சீறி - சினங்கொண்டு; என்மேல் ஏவிய - என் மீது விடுத்த; பகழி எனும் கூற்றினை - அம்பு என்கிற இயமனை எம்பி மேல் -என் தம்பியாகிய சுக்ரீவன் மீது; ஏவல் - ஏவாதிருப்பாயாக;என்றான் - என்று வேண்டினான்.

***


நெய்யடை நெடுவேற்றானை
        நீனிற நிருத ரென்னும்
துய்யடைக் கனலியன்ன
        தோளினன் தொழிலுந் தூயன்




பொய்யுடை யுள்ளத்தார்க்குப்
        புலப்படா புனித மற்றுன்
கையடை யரகு மென்று அவ்
        இராமற்கு காட்டுங்காலை

குற்றமிலா மனமுடைய தூய இராமனே! தீய அரக்கர்களுடைய பெருஞ்சேனை என் மகன் அங்கதனின் நெருப்புப் போன்ற தோள்கட்கு முன்னே பஞ்சு பொதியாகும். விரைவில் எரிந்து சாம்பலாகும். அந்த அரக்கர்களை அழிக்க அவன் பெரிதும் உதவுவான். எனவே நீ அவனை (அங்கதனை) அடைக்கலமாக ஏற்பாயாக என்றான் வாலி.

***

பொய் உடை உள்ளத்தார்க்கு - குற்றம் பொருந்திய மனமுடையார்க்கு; புலப்படா புனித - தோன்றாத தூயனே; அடை நெடு வேல் - நெய் பூசப்பெற்ற நீண்ட வேல்களையேந்திய; தானை - சேனைகளையுடைய ; நீல் நிற நிருதர் என்னும் துய் அடைக்கு - நீல நிறமுடைய அரக்கர்களெனப்படும் பஞ்சு மூட்டைக்கு; கனலி அன்ன தோளினன் - நெருப்பினையொத்த தோள்களையுடைய வனும்; தொழிலும் தூயன் - உள்ளத்திலும் செயலிலும் தூய்மையானவனுமாகிய இவனை (அங்கதனை); உன் கையடையாகும் - உனக்கு அடைக்கலமாகத் தந்தேன்; என்று அ இராமற்கு காட்டுங்காலை - என்று கூறி இராமனுக்கு அங்கதனை காட்டியபோது.

***

இராமனின் தாள்களை அங்கதன் வணங்கினான். இராமன் தனது அழகிய உடைவாளை அங்கதனுக்கு நீட்டினான். இதை பெற்றுகொள்வாயாக என்று இராமன் கூறினான். அங்கதனும் அதனை பெற்றது எப்படியிருந்தது? இராமன் அங்கதனை அடைக்கலமாக ஏற்றதை ஏழு உலகமும் துதித்து பாராட்டியது போலிருந்தது. ஏன்? சீக்கிரத்தில் அரக்கர் தொல்லை நீங்கும் என்ற பெருமிதத்தால்.

அதே சமயம் வாலியும் முத்தியடைந்தான்.


பொன் மா மெளலி புனைந்து
        பொய் இலான்
தன் மானக் கழல்
        தாழும் வேளையில்
நன் மார்பில் தழுவுற்று
        நாயகன்
சொன்னான்; முற்றிய சொல்லின்
        எல்லையான்.

இவ்வாறு வேண்டிய பின் வாலி உயிர் துறந்தான். வாலியின் ஈமக் கடன்கள் முடிந்த பின் லட்சுமணனை அழைத்து சுக்கிரீவனுக்கு முடி சூட்டுமாறு கட்டளையிட்டான் இராமன்.

சுக்கிரீவன் முடி சூடு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முடி சூடிக்கொண்ட சுக்கிரீவன் இராமன் அடி வணங்கினான். அப்போது இராமன் அரச நீதிகள் சிலவற்றை சுக்கிரீவனுக்கு அறிவுறுத்தினான்.

***

(சுக்கிரீவன்) பொன் மா மெளலி புனைந்து - பொன் மயமான சிறந்த கிரீடம் அணிந்து; பொய் இலான் தன் - பொய் புகலாத இராமனுடைய; மானக் கழல் - பெருமை பொருந்திய திருவடிகளில் வணங்கியபோது; நாயகன் - தலைவனும்; முற்றிய சொல்லின் - வேத வேதாந்தங்களின்; எல்லையான் - முடிவானவனும் ஆகிய இராமன்; நன் மார்பில் - தன் அழகிய மார்பில்; தழுவுற்று - அணைத்து; சொன்னான் - அரசு முறைகள் சிலவற்றைக் கூறினான்.

***


வாய்மை சால் அறிவின்
        வாய்த்த மந்திர மாந்தரோடும்
தீமை தீர் ஒழுக்கின் வந்த
        திறத்தொழில் மறவரோடும்
தூய்மை சால் புணர்ச்சி பேணித்,
        துகள் அறு தொழிலை ஆகிச்
சேய்மையோடு அணிமை இன்றித்
        தேவரின் தெரிய நெற்றி

மந்திரிகள் எப்படி இருக்கவேண்டும்; வாய்மையுடையவராயிருத்தல் வேண்டும். அது மட்டும் போதுமா? போதாது. நல்ல அறிவில் முதிர்ந்தவர்களாயிருக்க வேண்டும்.

போர்த் தொழில் வல்லவரும் எவர்க்கும் தீமை செய்யாத நல் ஒழுக்கம் உடையவருமான படைத்தலைவர்களுடனும் கூடி, மந்திரி, சேனாதிபதி ஆகிய இரு சிறகுகளுடனும் நல்லுறவு கொண்டு, காட்சிக்கு எளியனாய் நெருங்குதற்கு அரியனாய், நற்செயல் புரிவாய்.

***

வாய்மை சால் - சத்தியத்தோடு கூடிய; அறிவின் - அறிவினால்; வாய்த்த - சிறப்பு அமைந்த; மந்திர மாந்த ரோடும் - மந்திரிகளுடனும்; தீமை தீர் ஒழுக்கின் வந்த - குற்றமற்ற நல் ஒழுக்கத்தோடு கூடிய; தொழில் திற மறவரோடும் - போர்த்தொழில் வல்லவரான சேனைத் தலைவரோடும்; தூய்மை சால் புணர்ச்சி பேணி - நல் உறவு கொண்டு; துகள் அறு தொழிலை ஆகி - குற்றமற்ற செயல் புரிவானாகி; சேய்மையோடு அணிமை இன்றி - காட்சிக்கு எளியனாய் நெருங்குதற்கு அரியனாய்; தேவரின் தெரிய நிற்றி - தேவர்கள் போல் கருதி உன்னை வணங்கும்படி நிற்பாயாக.

***


புகை உடைத்து என்னின், உண்டு
        பொங்கு அனல் அங்கு என்று உன்னும்
மிகை உடைத்து உலகம்; நூலோர்
        வினையமும் வேண்டற்பாற்றே
பகையுடைச் சிந்தையார்க்குப்
        பயன் உறு பண்பின் தீரா
நகையுடை முகத்தையாகி
        இன் உரை நல்கு, நாவால்

மக்கள் மிகவும் நுண் அறிவு படைத்தவர்கள். புகை கண்டவிடத்தில் தீ உண்டு என்று ஊகித்து அறியும் இயல்புடையவர்கள். ஆகவே அத்தகைய ஐயப்பாடுகளுக்கு இடம் கொடாதே. வினயமாயிரு. உன் மீது பகை கொண்டு அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் உன்னிடம் வந்து பழகுவர் சிலர்.அவரை நீ இன்னாரென்று அறிந்துகொள். ஆனால் பகை பாராட்டாதே. அவரவர் பண்புக்கு ஏற்ப நடந்து கொள். எவரிடமும் ‘சிடு சிடு’ என்று சீறி விழாதே. எப்பொழுதும் சிரித்த முகத்தோடு இரு. இனிய சொல் வழங்கு.

***

உலகம் - உலகத்து மக்கள்; புகை உடைத்து எனின் - எங்கே புகை உளதோ; அங்கு பொங்கு அனல் உண்டு- அங்கே தீ உளது; என்று உன்னும் - என்று கூர்ந்து கவனிக்கும்; மிகை உடைத்து - மிகுந்த அறிவுடையவர்கள்; நூலோர்-அரசியல் நூல் வல்லார் கூறுகிற; வினையமும் வேண்டற் பாற்றே - வினயமும் வேண்டாற் பாலதே; பகை உடை சிந்தையார்க்கும் - சிந்தையிலே பகை வைத்து உன்னிடம் பழகுவோரிடமும்; பயன் உறு பண்பில் -அவரவர் தகுதிக் கேற்ற பண்புடன்; தீரா - தொடர்ந்து நடத்தலுடன்; நகை உடை முகத்தையாகி - சிரித்த முகத்துடன்; நாவால் இன் உரை வழங்கு - நாவினால் இனிய மொழிகளே கூறுவாயாக,


செய்வன செய்தல்; யாண்டும்
        தீயன சிந்தியாமல்
வை வன வந்தபோதும்
        வசை இல இனிய கூறல்
மெய் சொலல்; வழங்கல் யாவும்
        மேவின வெஃகல் இன்மை
உய்வன ஆக்கித் தம்மோடு
        உயர்வன உவந்து செய்வாய்.

எவர்க்கும் தீங்கு செய்யாதே.அதே சமயத்தில் செய்ய வேண்டுவனவற்றைச் செய்தல் தவறாதே. உன்னைப் பற்றிப் பிறர் கூறும் வசை மொழிகளை எவர் வந்து கூறிய போதிலும் பதில் வசை கூறாதே, வசை இல்லாத இனிய சொற்களே கூறுவாய். உண்மையே பேசு.வழங்குதற்குரிய பொருள்களை வழங்கு. பிறர் பொருள் கவர நினையாதே. இந்தப் பண்புகள் உன்னை உயர்த்தும். எனவே இவை செய்வாய்.

***

யாண்டும்-எவர் மாட்டும்; தீயன சிந்தியாமல் - தீங்கு செய்ய நினையாமல்; செய்வன செய்தல்-செய்யவேண்டியவற்றைச் செய்தலும்; வைவன வந்த போதும் - பிறர் கூறும் வசை மொழிகளை எவர் வந்து கூறிய போதிலும்; வசை இல - வசை இல்லாத ;இனிய கூறல்- இனிய சொற்களே கூறுதலும்; மெய் சொலல் - மெய்யே பேசுதலும்;யாவும் வழங்கல்- வழங்குதற்குரிய பொருள்களை எல்லாம் வழங்குதலும்; மேவின வெஃகல் இன்மை-பிறர் பால் பொருந்திய பொருள்களைப் பறிக்க நினையாமையும்; (ஆகிய இச்செயல்கள்) உய்வன ஆக்கி - உயிர்கள் நல்நிலை பெறச் செய்து;தம்மோடு உயர்வன - அவ்வுயிர்களோடு தாமும் உயர்வன ஆகும்; உவந்து செய்வாய் - ஆகவே இவற்றை நீ விரும்பிச் செய்வாயாக.


நாயகன் அல்லன்; நம்மை
        நனி பயந்து எடுத்து நல்கும்
தாய் என இனிது பேணத்
        தாங்குதி தாங்குவாரை
ஆயது தன்மையேனும்
        அறவரம்பு இகவா வண்ணம்
தீயன வந்தபோது
        சுடுதியால் தீமையோரை

இவன் நமது அரசன் அல்லன். நம்மைப் பெற்று எடுத்து அன்பு பாராட்டி வளர்க்கும் தாய் என்று உனது குடிமக்கள் உன்னை ஆதரிக்க வேண்டும். அந்த வகையில் அவர்களை நீ பாதுகாப்பாய். அவ்விதம் இருப்பினும் நாட்டிற்கும் மக்களுக்கும் தீமை செய்தோரை தண்டிக்கத் தயங்காதே. அறத்தின் வழிநின்று தண்டிப்பாய்.

***

நாயகன் அல்லன் - இவன் நமது அரசன் அல்லன்; நம்மைப் பயந்து - நம்மைப் பெற்று; எடுத்து நனி நல்கும் - எடுத்து வளர்த்து நன்றாகப் பாதுகாக்கும்; தாய் என - தாய் என்று;இனிது பேண-மக்கள் இனிமையாக உன்னை விரும்பும் வண்ணம்; தாங்குவாரைத் தாங்குதி - பாதுகாக்கத் தக்கவரைப் பாதுகாப்பாயாக; ஆயது தன்மையேனும் - அவ்வாறு செய்வதை உனது கொள்கையாகக் கொண்ட போதிலும்; தீயன வந்தபோது - அவர்களில் எவரேனும் நாட்டிலே தீங்கு செய்தால்;தீமையோரை - அத்தீங்கு செய்வோரை;அறம் வரம்பு இகவா வண்ணம் - அறத்தின் எல்லை கடவாதபடி; சுடுதி - தண்டிப்பாயாக!

***


மா இயல் வடதிசை
        நின்று மானவன்
ஓவியமே என ஒளிக்
        கவின் குலாம்
தேவியை நாடிய முந்தித்
        தென்திசைக்கு
ஏவிய தூது என
        இரவி ஏகினான்.

சித்திரம்போல ஒளிகொண்ட ஞாயிறு, சீதை தேவியை தேட அநுமன் முதலியோர் தென்திசை செல்லும் முன்பே, தான் செல்வதுபோல், தெற்கே கார்காலத்தில் ஏகினான்.

***

ஓவியமே என - சித்திரத்தில் எழுதிய பிரதிமையே போல; ஒளிகவின் குலாம் - ஒளியோடுகூடிய அழகு விளங்கப் பெற்ற; தேவியை - தன் மனைவியான சீதையை; நாடிய - தேடும் பொருட்டு;முந்தி - (அநுமன் முதலிய வானரர்களை அனுப்புதற்கு) முன்னமே; வானவன் - தேவாதி தேவனான இராமன்; தென்திசைக்கு ஏவிய தெற்கு திக்கிற்கு அனுப்பிய; தூது என - தூதன் போல; இரவி - சூரியன்; மா இயல் வட திசை நின்று - மங்கல திசையாகிய வடக்கில் இருந்து; ஏகினான் - (தெற்கு திசைக்கு) செல்லலானான்.

கார்காலம் வந்தது.இராமன் விரக தாபத்தால் வாடினான்.இயற்கைக் காட்சிகள் அவனை வாட்டின. லட்சுமணன் அவனைத் தேற்றினான்.

மழைக்காலம் கழிந்தும் சுக்கிரீவன் தன் சேனைகளோடு வாக்களித்தபடி வராதது கண்டு, கோபங்கொண்டு லட்சுமணனை கிட்கிந்தைக்கு அனுப்பினான்.

அங்கதனுக்கு லட்சுமணன் வருகையை வானரங்கள் தெரிவித்தன. சிற்றின்பத்தில் மூழ்கியிருந்தான் சுக்ரீவன். அங்கதன் அவனுக்கு எவ்வளவோ சொல்லியும் பயனில்லை. குரங்குகள் லட்சுமணனை முன்னேறாமல் தடை செய்தன. கோபாவேசமாக குரங்குகளை சிதறியடித்தான் லட்சுமணன். அவன் கோபத்தை அடக்க ஒரு யோசனை கூறுகிறான் அநுமன். அதன்படி தாரை பெண்கள் சூழ வருகிறாள்.

***


வில்லும் வாளு மணி
        தொறு மின்னிட
மெல் அரி குரல் மேகலை
        ஆர்த்து எழ
பல்வகைப் புருவக்கொடு
        பம்பி
வல்லி ஆயம் வலத்தினின்
        வந்ததே.

மகளிர் குழாம் சூழவந்து லட்சுமணனை வழி மறித்தாள் தாரை, அணிகலன்களால் அலங்கரித்துக்கொண்டு. சிலம்புகள் பறைபோல ஒலித்தன. அணிகலன்களின் ஒளி ‘பளபள’ என வேல், வாள் போல மின்ன, இளைய பெருமாளை தடுத்தாளாம் தாரை.

***

வல்லி ஆயம் - (தாரை சூழ வந்த) மகளிர் கூட்டமாகிய சேனை ;அணிதொறும் - அணிந்துள்ள ஆபரணங்கள் தோறும்; வில்லும் வாளும் மின்னிட விளங்கவும்; மெல் அரி குரல் - மெல்லிய சிறிய பருக்கைக் கற்களையுடைய காற்சிலம்புகளின் ஒலியும்; மேகலை - மேகலை என்னும் இடையணி ஒலியும்; ஆர்த்து எழ - பறையொலியாக எழ; பல்வகை புருவம் கொடி - பல வகையான புருவங்களாகிய கொடிகள்; பம்பி – நிறைந்திருக்கவும்; (இளைய பெருமாளை) வலத்தினில் வந்தது - வலிமையோடு வளைத்துக் கொண்டது.

***

ட்சுமணன் தாரையைப் பார்த்தான். அவளை அவன் தன் தாயாகிய சுமித்திரையாக கண்டான். தாரையின் ரூபத்தில் தன் தாயையே கண்டான் அவள் பேச்சு அவன் கோபத்தைச் சிறிது தணித்தது.

அநுமன் வந்தான். “நீ உள்ளே வந்து நீங்கள் அளித்த செல்வத்தினால் சிறப்பு பெற்ற சுக்ரீவனை கண்டு சீற்றம் தணிவாயாக!” என்று அநுமன் வேண்டினான். லட்சுமணனும் சென்றான்.

தான் மதி மயங்கியிருந்ததற்கு வருந்தினான் சுக்கிரீவன். பெருஞ்சேனையை கொண்டு வருமாறு அநுமனுக்குக் கட்டளையிட்டுச் சுக்கிரீவன் இராமனிடம் சென்றான்.

***

போயின தூதரிற் புகுதும்
        சேனையை
நீ உடன் கொணருதி
        நெறிவலோய் என
ஏயினன் அனுமனை யிருத்தி
        ஈண்டு என
நாயகன் இருந்து உழிக் கடிது
        நண்ணுவான்

“நீதியில் வல்லோனான அநுமனே! நாலாபக்கமும் உள்ள சேனைகள் திரண்டு இங்கு வரும்வரை நீ இங்கேயே இரு” என்று சுக்கிரீவன் அநுமனுக்குக் கட்டளையிட்டான். ‘நான் இராமபிரான் இருப்பிடம் உடன் செல்கிறேன்’ என்றான். “சேனைகள் வந்ததும் உடன் திரட்டிக் கொண்டு வா” என்று ஏகினான்.

***

(சுக்கிரீவன்) நெறிவலோய் - நீதியில் வல்லவனே; போயின தூதரின் புகுதும் சேனையை – (நம்மிடத்தினின்று) போயிருக்கிற தூதர்களாய் இனிவரும் வானர சேனையை; நீ உடன் கொணருதி - நீ உன்னுடன் அழைத்துவா; என - எனவும்; ஈண்டு இருத்தி - (அதுவரையில் நீ) இங்கேயே இருப்பாய்; என - எனவும்; அநுமனை ஏயினன் - அநுமனுக்குக் கட்டளையிட்டவனாய்; நாயகன் இருந்த வுழி கடிது நண்ணுவான் - (யாவருக்கும் தலைவனாகிய) இராம பிரான் இருந்த இடத்திற்கு விரைந்து செல்பவன் ஆனான்.

***

வானர சேனைகள் திரண்டு வந்தன. அவைகளைக் கண்டு இராம லட்சுமணர் வியப்படைந்தனர்.

இனி மேற்கொண்டு செய்ய வேண்டியவற்றைப் பற்றிக் கவனிக்கலாயினர்.

சேனைகளை திரட்டிவந்தவர்களில் முக்கியமானவர்கள் அநுமனும் சாம்பவனும்.

***

ஆயிரத்து அறு நூறு கோடியிற்
        கடையமைந்த
பாயிரப் பெரும்படை கொண்டு
        பரவையின் திரையில்
தாய் உருத்து உடனே வரத்
        தடநெடு வரையை
ஏய் உருப் புயம் சாம்பன்
        என்பவனும் வந்திறுத்தான்.



பெரிய நீண்ட தோளுடைய சாம்பவன் சேனையை வர்ணிக்கிறார் கம்பர். சாம்பவன்[1] கரடிகளுக்கு அரசன். அவன் திரட்டி வந்த படை ஆயிரத்து அறுநூறு கோடிக்கு எட்டியது. அவை சென்ற இடமெல்லாம் அப்படியே நிறைத்துக் கொண்டனவாம்.

***

தட நெடு வரையை ஏய் உரு புயம் சாம்பன் என்பவனும் - பெரிய நீண்ட மலையை ஒத்த உருவத்தோடு கூடிய தோள்களையுடைய சாம்பவனும்; பரவையின் திரையில் தாம் உருத்து உடனே வர - சமுத்திரத்தின் அலைகளைப் போல தாவி குதித்து தன்னுடனே தொடர்ந்து வர; ஆயிரத்து அறுநூறு என்னுங் கோடியின் – ஆயிரத்து அறுநூறு என்னும் கோடி கணக்கையுடைய; கடை அமைந்த பாயிரப் பெரும்படை - (சென்ற) இடங்களில் நிரம்பிய சிறப்பையுடைய பெரிய சேனையை; கொண்டு - உடன் கொண்டு; வந்து இறுத்தான் - வந்து தங்கினான்.

***

அவனும் அண்ணல் அனுமனை,
        ஐய நீ
புவன மூன்று நின்
        தாதையிற் புக்குழல்
தவவேகத்தை ஓர் கிலை
        தாழ்த்தனை
கவன மாக்குரங்கில் செயல்
        காண்டியோ

சீதையைத் தேடுவது எப்படி என்று ஆலோசனை நடக்கிறது. அப்போது சுக்கிரீவன் அநுமனைப் பார்த்தான். “மூவுலகும் திரியவல்ல பேர் ஆற்றல் படைத்தவன் நீ! அப்படி இருந்தும் சீதாபிராட்டியை தேடுவதில் உனக்குத் தயக்கமேன்? உன் தந்தையோ வாயு பகவான். வேகமாக எங்கும் புகும் வல்லமையுடையவன். அவர் மகனான நீ எவ்வகையில் குறைந்தவன்? நீ உன் சக்தியை உணர்ந்தாய் இல்லை.[2] உடனே வேலையைகவனி!” என்றான் சுக்கிரீவன்.

***

அவனும் – அச் சுக்கிரீவனும்; அண்ணல் அதுமனை - பெருமையிற் சிறந்த அதுமனை (நோக்கி); ஐய – நீ; புவனம் மூன்று - மூன்று உலகத்திலும்; நின் தாதை - உனது தந்தையாகிய வாயுவைப் போல; புக்குழல் - புகுந்து திரிகின்ற; தவன வேகத்தை – ( உனது) மிக்க வேகத்தை; ஓர்கிலை – உணராதவனாய்; தாழ்த்தனை – வீணாக தாமதித்து இருக்கிறாய்; கவனம் மாகுரங்கில் செயல் காண்டியோ – (நீ இவ்வாறு தாமதித்து) மற்றவர்கள் வேகமாகச் செல்லட்டுமென நினைக்கிறாயோ?

***

அநுமன் புறப்படுகிறான். அதற்கு முன் இராமபிரான் சீதா தேவியின் அங்க அடையாளங்களை விவரித்துக் கூறுகிறார். முக்கியமாக அந்தரங்கமான நிகழ்ச்சியைக் கூறுகிறார். காட்டிற்கு நான் தனியாகச் செல்கிறேன் என்றார் இராமன். பிராட்டி அதை எவ்வாறு மறுத்தார் என்பதை விளக்கமாக கூறினார். தன் அடையாளமாக கணையாழியும் கொடுத்து அனுப்புகிறார் இராமன் அநுமனிடம்.

***

சுக்கிரீவனது கட்டளைப்படி தென் திசை நோக்கிச் சென்ற அங்கதன் முதலிய வீரர்கள் பலவிடங்களிலுஞ் சீதையைத் தேடிக்கொண்டு சென்றனர். வழியிலேயே ஒரு மிகப் பெரிய பாலைவனம்; அதைக் கடக்கும்போது அவர்கள் வெப்பம் தாங்காது தவித்தனர்; சோர்வுற்றனர். அங்கேயிருந்த ஒரு பெரும் பள்ளத்தில் இறங்கினர். இருள் கவிந்தது. இது இராவணன் மந்திர சக்தியால் படைக்கப்பட்டது. வானரர் முயற்சியைத் தடுக்கும் நோக்கத்துடனே இராவணனால் ஏற்படுத்தப்பட்டது.

வெளியே வர இயலாது தவித்தனர் வானரர். சுயம்பிரபை என்றொரு தவப்பெண். அவள் வானரரை மீட்கும் வழியை அநுமனிடம் சொன்னாள். அதன்படி வானரர் அநுமனின் வாலைப் பிடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினர் .

ஒரு மாத காலம் ஓடிவிட்டது. அநுமன் ஆகியோர் எடுத்த பணியை செய்தே முடிப்பதென்று உறுதி பூண்டு செயல்படுகின்றனர்.

***

முறையுடை எம்பியார் முடிந்த
        வாவெனாப்
பறையிடு நெஞ்சினன் பதைக்கு
        மேனியன்

இறையுடைக் குலிச வேலெறிதலால்
        முனுஞ்
சிறை அறுமலையெனச் செல்லுஞ்
        செய்கையான்.

அப்போது சம்பாதி வருகிறான். சம்பாதி சடாயுவின் அண்ணன்; கழகு அரசன். அவனை வர்ணிக்கிறார் கம்ப நாடார் முன்னாளில் மலைகள் சிறகு கொண்டிருந்தவனாம். மக்களை அவை பெரிதும் துன்புறுத்தியதால் அவைகளின் இறக்கைகளை அரிந்தானாம் இந்திரன். அந்த சிறகு தீயப் பெற்றமலை போல் வேகமாகச் செல்லக்கூடியவனாம் சம்பாதி.

தன் தம்பி இறந்ததைக் கேட்டான். ஆறா துயருற்றான். துயரம் தங்காது அவன் நெஞ்சு பறை போல படபடத்தது. உடம்பு துடித்தது; புலம்பினான்; பதறினான்; அழுதான்; அரற்றினான்.

***

முறை உடை எம்பியார் முடிந்த - ஆ நீதி நெறியுடைய எனது தம்பி இறந்தது எப்படி? எனா - என்று: பறையிடு நெஞ்சினன் - பறையடிப்பது போல படபடக்கின்ற நெஞ்சை உடையவனும்; இறை உடை குலிசம் வேல் எறிதலால் முனம் சிறை அறும்மலை என செல்லும் செய்கையான் – தேவேந்திரன் தான் கொண்டுள்ள வச்சிராயுதத்தை வீசி எறிந்ததால் முற்காலத்தில் சிறகுகள் அறுபட்டு போன மலை போல செல்லுந் தொழிலுடையவன்.

***

பாகொன்று குதலையாளைப் பாதக
        அரக்கன் பற்றிப்
போகின்ற பொழுது கண்டேன் புக்கன்
        இலங்கை புக்கு


வேகின்ற உள்ளத்தாளை வெஞ்சிறை
        அகத்து வைத்தான்
ஏகு மின் காண்டிர் ஆங்கே இருந்தனள்
        இறைவி இன்னும்

சம்பாதியைத் தேற்றினான் அநுமன். பின்னர் சம்பாதி “சர்க்கரை பாகு போன்ற இனிய சொற்களையுடைய சீதையை, மகா பாதகனான அரக்கன் இராவணன் இலங்கைக்கு எடுத்துச் சென்று சிறை வைத்துள்ளான்” என்றான்.

***

“சீதை, வேதனையால் வேகும் உள்ளத்தை உடையாள். பிராட்டியை நீங்கள் இப்போதே சென்று காணுங்கள்” என்றான்.

பாகு ஒன்று குதலையாளை - இனிய பாகு போன்ற (மிக இனிய) மழலை சொற்களை உடையவளாகிய சீதை; பாதகன் அரக்கன் பற்றிப் போகின்றபொழுது - பெரும் பாவியான இராவணன் கவர்ந்து சென்றபோது; கண்டேன் - பார்த்தேன்; இலங்கை புக்கனன் - (அந்த இராவணன்) இலங்கையிற் சேர்ந்தான்; புக்கு - அவ்வாறு சேர்ந்து; வேகின்ற உள்ளத்தாளை வெம்சிறை அகத்து வைத்தான் தவிக்கின்ற மனமுடையவளாகிய அந்தச் சீதையை கொடிய சிறைக்காவலில் வைத்திட்டான்; இறைவி இன்னும் ஆங்கே இருந்தனள் - சீதா பிராட்டி இப்போதும் அங்கேயே இருக்கிறாள். ஏகுமின் காண்டிர் - (நீங்கள்) அங்குச் சென்று காணுங்கள் என்றான் சம்பாதி.

***

சம்பாதி இலங்காபுரிக்குச் செல்லும்போது உள்ள சங்கடங்களை விரிவாகக் கூறுகிறான். வழியிலே பெரிய கடலுண்டு. கடல் நூறு யோசனை உள்ளதாம். இராவணனோ மிகக் கொடியவன் அவனுடைய கொடுமை, இலங்கையை இன்னும் அணுக முடியாதபடி செய்கிறது.

இவ்வளவு சங்கடங்களை கடந்து இலங்கைக்குச் செல்லக் கூடியவர் யார்? மகேந்திர மலையில் வானரர்கள் யோசிக்கின்றனர். எதைப் பற்றி? யாரை இலங்கைக்கு அனுப்புவது என்று சாம்பவன் வானரர்களுடன் சேர்ந்து ஆலோசனை செய்கிறான்,

***


ஏகு மின் ஏகி எம் உயிர் நல்கி
        இசை கொள்ளீர்
ஓகை கொணர்ந்து உம் அன்னையும்
        இன்னல் குறையில்லாச்
சாகர முற்றுந் தாவிடு
        நீரிக் கடரவும்
வேகம் அமைந்தீர் என்று
        விரிஞ்சன் மகன் விட்டான்.

சாம்பவான் அநுமனை நோக்கிச் சொன்னான். “இப்பெரிய பணியைச் செய்யக்கூடியவன் நீ ஒருவன்தான். உன்னால்தான் இப்பெரும் கடலை ஒரே நொடியில் கடக்க இயலும், எனவே தயங்காதே. விரைந்து சென்று உன் தாய் போன்ற சீதையைக் கண்டு வா. அவருக்கு ஆறுதல் கூறு. அவர் துன்பக் கடலைத் தாண்டி கரையேறச் செய். அத்துடனன்றி எங்களுக்கும் உயிர் பிச்சைக் கொடு!” என்று வேண்டினான்.

***

நீர் - நீர்தான்; இ கடல் தாவும் வேகம் அமைத்தீர் - இந்த கடலை கடந்து சென்று (செய்தி தெரிந்து) மீளுதற்கு உரிய வலிமை பொருந்தியுள்ளீர்; (ஆதலால்) ஏகு மின்- இங்கிருந்து விரைந்து செல்லுக; ஏகி - அவ்வாறு சென்று; எம் உயிர் நல்கி இசை கொள்ளீர் - எங்களுக்கெல்லாம் உயிரைக் கொடுத்து பெரும் புகழைப் பெறுக; (நீர் இவ்வாறு செய்தால்) உம் அன்னையும்-உமது தாயாகிய சீதாபிராட்டியும்;ஓகை கொணர்ந்து -மிக்க உவகைக்கொண்டு; இன்னல் குறை இல்லா சாகரம் முற்றும்; தாவிடும்- துன்பமாகிற குறைதலில்லாத (மிகப் பெரிய) கடல் முழுவதையும் கடந்து கரையேறுவாள்; என்று - என; விரிஞ்சன் மகன் - பிரம்மாவின் மகனான சாம்பவான்; விட்டான் - கூறி முடித்தான்.

***

சாம்பவன் கூறியதைக் கேட்டான் அநுமன். உற்சாகங் கொண்டான். சீதாபிராட்டியை தேடுவதற்கு இலங்கைச் செல்ல புறப்பட்டான். விறுவிறுவென மகேந்திர மலையை ஏறினான்.

***


மின்னெடுங் கொண்டல் றாளின்
        வீக்கிய கழலின் ஆர்ப்ப
தன் நெடுந் தோற்றம் வானோர்
        கட் புலத்து எல்லை தாவ
வல் நெடுஞ் சிகர கோடி மகேந்திர
        மண்டந் தாங்கும்
பொன் நெடுந்தூணின் பாத சிலையெனப்
        பொலிந்து நின்றான்.

மகேந்திர மலை மீது ஏறினான் அநுமன். வானின்று மண் வரை நீண்ட நெடிய விச்வரூபம் எடுத்தான். அப்பெரும் வடிவின் முன்,மிகப் பெரிய சிகரங்ளைக் கொண்டிருந்தாலும், மகேந்திர மலை மிகச் சிறியதாக தோன்றியதாம். தூணின் கீழ் வைக்கும் கல் எவ்வளவு சிறிதாகத் தோன்றுமோ அவ்வளவு சிறியதாக தோற்றம் அளித்ததாம், மகேந்திர மலை.

***

மின் நெடுங் கொண்டல் - மின்னலையுடைய பெரிய மேகங்கள்; தாளின் வீக்கிய கழலின் ஆர்ப்ப - (தனது காலிற் கட்டப்பட்ட) வீரக்கழல் போல ஒலி செய்யவும், தன் நெடுந்தோற்றம் வானோர் கட் புலத்து எல்லை தாவ - தனது பெருவடிவானது தேவர்களின் கண்களாகிய இந்திரியங்களின் இடத்தில் புலப்படவும்; வல் நெடுஞ்சிகரம் கோடி மகேந்திரம் - வலிய பெரிய சிகரங்களின் தொகுதி உடைய மகேந்திர மலையானது; அண்டம் தாங்கும் பொன் நெடுந்தூணின் பாதம் சிலை என - உலக உருண்டையைத் தாங்குகின்ற; பொன் மயமாகிய நீண்ட கம்பத்தின் அடியில் இட்ட கல்லைப் போல (சிறிதாக) விளங்கவும்; பொலிந்து நின்றான் - நிமிர்ந்து நின்றான். (அநுமன் விச்வரூபத்தின் முன் மலை மிக மிக சிறுத்தது. வீரமே உருக்கொண்டாற் போல நின்றான் அநுமன்.)

ஏகினான் இலங்கை நோக்கி.

கிட்கிந்தா காண்டம் முற்றிற்று.
  1. * பிரம்மன் முன்னொரு காலத்தில் கொட்டாவி விட்ட போது அவர் வாயினின்று கரடியாக தோன்றியவன். சாம்பவன் என்பது வரலாறு.
  2. அநுமன் அதிக வரங்கள் பெற்றிருந்தான். முன்பு ஆசிரமங்களில் புகுந்து யாக பாத்திரங்களை நாசம் செய்தான். முனிவர்கள் “இவனுக்குத் தன் பலம் தனக்குத் தெரியாமற் போகக்கடவது” என்று சபித்ததால் அநுமனுக்கு யாரேனும் ஊக்கம் கொடுத்தால்தான் தானியங்குவான்.