உள்ளடக்கத்துக்குச் செல்

கம்பன் கவித் திரட்டு 4, 5, 6/001-009

விக்கிமூலம் இலிருந்து

பால காண்டம்

தசரதனின் மகன் இராமன் பிறப்பு, மற்றும் அவன் உடன் பிறப்புகளான லட்சுமணன்,பரதன், சத்துருக்கனன் பற்றியும், கூறுகிறது.

சித்த வனத்தில் விசுவாமித்திரன் செய்த யாகத்தைக் காத்த இராமனையும், அரக்கி தாடகையையும் சுபாகுவையும் வதைத்த ஜெயராமனையும் காண்கிறோம்.

மிதிலையில் சிவதனுசை முறித்து, கல்யாண ராமனாகக் காட்சித்தரும் இரகுவீரனைக் கண்டு ஆனந்திக்கிறோம்.

பரசுராமனின் ஆணவத்தை அடக்கிய கோசலராமனை போற்றுகிறோம்.

இராமனின் முடிசூட்டு விழாவுக்கு ஆவலோடு காத்திருக்கிறோம்.

அயோத்தியா காண்டம்


முடிசூட்டு விழாவை எதிர்பார்த்த மக்களுக்கு பேரிடியாக வருகிறது, கைகேயியின் ஆணை.

அரசைத் துறந்து மரவுரி அணிந்து பிராட்டி உடனும் இளவலுடனும் வனம் செல்ல தூண்டி விட்ட மந்தரையை வெறுக்கிறோம்

இராமனுக்காக எதையும் செய்யத் தயாராக உள்ள குகனின் அன்பின் ஆழத்தைக் கண்டு வியக்கிறோம்.

அண்ணலின் பாதுகைகளைத் தலைமேல் சுமந்து செல்லும் பரதனைப் போன்ற கொள்கை வீரனைக் காணவும் கூடுமோ? வெறிச்சோடிய அயோத்தியைக்கண்டு மனம் புழுங்காமல் இருக்க முடியுமா?

ஆரண்ய காண்டம்

இங்கே - தண்டகாரணியத்திலே அன்னைக்கு அணிகலன்கள் கொடுக்கும் அனசூயையும், அன்னைக்குத் தொல்லை தரும் விராதனையும் காண்கிறோம். சூர்ப்பணகை, கரன், மாரீசன் ஆகிய அரக்கர் முடிவை பார்க்கிறோம். சீதாபிராட்டியைத் தூக்கிச் சென்ற இராவணனுடன் வீரமாக பொருது உயிர் நீத்த கழுகரசன் சடாயுவை மறக்கமுடியுமா?

இராகவனும் இளவலும் அன்னையைத் தேடிச் செல்கையில் நிகழ்ந்தவைகளுக்கு சிகரம் என அமைகிறது சபரியின் பிறப்பு நீங்குபடலம்.


கிட்கிந்தா காண்டம்

நூன்முகம்

கிட்கிந்தா காண்டம் ஆரணிய காண்டத்தைத் தொடர்ந்துவரும் ஓர் காண்டம். ஆரணிய காண்டத்தின் இறுதியில் கவந்தனும் சபரியும் கூறியபடி இராம இலக்குவன் பம்பை நதியை அடைந்து ருசிய சிருங்க மலைச் சாரலை அடைகின்றனர். இவ்விருவரையும் அநுமன் வந்து காண்கிறான். சுக்கிரீவன் இராமபிரானுக்கு சீதையை தேட உதவுவதாக வாக்களிக்கிறான். வானரர் பிராட்டியை தேடி அலைகின்றனர். இந்நிகழ்ச்சிகளைக் கூறுவதே இக்காண்டம்.

இது கம்பராமாயணத்தின் நான்காவது பெரும்பகுதியாக அமைந்துள்ளது. இக் காண்டம் 1004 செய்யுட்கள் கொண்டது. எனினும் கதைக் கோர்வைக்காக 50 செய்யுட்களே தேர்ந்தெடுத்து இருக்கிறோம்.

இக்காண்டத்தின் நிகழ்ச்சிகள் யாவும் தண்டகாரணியம் அதனை அடுத்த தென்னிந்திய பகுதிகளிலும் நிகழ்ந்ததாகத் தெரிகிறது.

இராமாயணத்தில் சிதாபிராட்டியுடன் இல்லாத இராமபிரானை இக்காண்டத்தில் மட்டுமே காண்கிறோம்.

மேலே படிப்போமா?

தொகுப்பாசிரியர்

கிட்கிந்தா காண்டம்

படலங்கள்

1. பம்பை வாவிப் படலம்
2. அநுமப் படலம்
3. நட்புக் கோட் படலம்
4. மராமரப் படலம்
5. துந்துபிப் படலம்
6. கலன் காண் படலம்
7. வாலி வதைப் படலம்
8. அரசியற் படலம்
9. கார்காலப் படலம்
10. கிட்கிந்தைப் படலம்
11. தானை காண் படலம்
12. நாட விட்ட படலம்
13. பிலம் புக்கு நீங்கு படலம்
14. ஆறு செல் படலம்
15. சம்பாதி படலம்

16. மகேந்திர படலம்

கிட்கிந்தா காண்டம்

கடவுள் வாழ்த்து

மூன்று உரு எனக் குணம்
      மும்மை ஆம் முதல்,
தொன்று உரு எவையும், அம்
      முதலை சொல்லுதற்கு
ஏன்று உரு அமைந்தவும்,
      இடையில் நின்றவும்,
சான்று உரு உணர்வினுக்கு
      உணர்வும் ஆயினான்