உள்ளடக்கத்துக்குச் செல்

கம்பன் கவித் திரட்டு 4, 5, 6/007-009

விக்கிமூலம் இலிருந்து



கம்பன் கவித் திரட்டு

(ஆறாம் பாகம்)

யுத்த காண்டம்

தொகுப்பாசிரியர்கள் :

அமரர் சக்திதாசன் சுப்பிரமணியன்

ஜலஜா சக்திதாசன்

வெளியீடு :

நித்யானந்த ஜோதி நிலையம்

தபால் பெட்டி எண் : 2184

V. K. ஐயர் ரோடு, சென்னை—28.


முதல் பதிப்பு : 1991

மாருதி பிரஸ்,

173, பீட்டர்ஸ் ரோடு,

சென்னை-600014.

நூன்முகம்

பிராட்டியாரைக் கண்ட அநுமன்மூலம் மண்ணின் மகள் இருக்குமிடத்தை அறிகிறான் இராமன். உடன் செயல்பட்டு அன்னையை மீட்க, மேற்கொள்ளும் நிகழ்ச்சிகள் அடங்கியதே யுத்தகாண்டம்.

வழுவலில் வெள்ளத்தானை தென்திசை வளர்ந்தது முதல், இராவணனையும் அவனைச் சார்ந்தோரையும் அழித்து, இராமபிரான் திருமுடி புனைந்து நின்றது வரை உள்ள வரலாறு இக் காண்டத்தில் அடங்கும். இராம காதை என்ற பெருங் காப்பியத்தின் ஆறாவது காண்டம் யுத்த காண்டம்; கம்பனின் இராமாயணத்தில் பெரும் பகுதியாக அமைந்து உள்ள இக் காண்டம் 39 படலங்களையும் 4323 செய்யுட்களையும் தன்னகத்தே கொண்டு உள்ளது. இத் திரட்டில் 95 பாடல்களே இடம் பெறுகின்றன. இக் காண்ட நிகழ்ச்சிகள் பெரும்பாலும் கடற் கரையிலும் இலங்கைத் தீவிலும் திகழ்ந்தன என்றாலும், மீட்சிப்படலம், திருமுடி சூட்டுப் படலம், விடை கொடுத்த படலம், அயோத்தியில் நிகழ்ந்ததாகத் தெரிகிறது.

அறம் மறத்தை நிச்சயம் அழிக்கும் என்ற பேருண்மையைக் கூறுவதாக இராமாயணத்தைக் கொண்டாலும் அவ் வரலாறு முழுவதும் இராமனை, கருணையுடன் தன்னை அண்டினவர்க்கெல்லாம் அபயம் அளிக்கும் பரந்த மனங்கொண்ட செம்மலாகக் காண்கிறோம். பகைவருக்கும் அருளும் பண்பாளனாகக் காட்சித் தருகிறான். இராமாயணத்தை அதனால்தான் சரணாகதி சாத்திரம் என்கின்றனர் போலும்! பால காண்டத்தில் தேவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறான் கோசல இளவரசன்; அயோத்தியா காண்டத்தில் பரதனுக்குச் சரணாகதி தந்த துறவி இராமன் வருகிறான். ஆரண்ய காண்டத்திலோ, முனிவர் சரணாகதியும், கிட்கிந்தா காண்டத்தில் சுக்ரீவன் சரணாகதியும், சுந்தர காண்டத்தில் பிராட்டி சரணாகதியும், காக்காசுரன் சரணாகதியும் இடம் பெறுகின்றன. யுத்த காண்டத்தில் தன்னிடம் சரண் புகுந்த இலங்கேசனின் தம்பி விபீடணனுக்கு அபயம் தருகிறான்.

விபீடணனுக்கு முடி சூட்டுகிறான்; இலங்கைப் பற்றிய முழு விவரங்களும் அறிந்து, இராவணனின் மாயை, வலிமை ஆகியவற்றிற்கு ஏற்றவாறு போர் உத்திகளைக் கையாள்கிறான். இலங்கையில் அநுமன் புரிந்த அரிய வீரச் செயல்கள் படிப்போர் நெஞ்சை நிறைக்கின்றன.

இராமபிரான், திருமாலின் அவதாரமாக இருப்பினும், மானிடனாய் பிறந்ததால் அவனுக்கு ஏற்பட்ட போராட்டங்கள் ஏராளம், ஏராளம். இலங்கைக்கு வழிவிட காலந் தாழ்த்திய வருணன் முதல், ஒவ்வொரு செயலையும் நிறைவேற்ற அவன் போராடியே தீரவேண்டியிருந்தது. என்றாலும் எவ்வளவு துன்பம் வந்தாலும், ஏமாற்றங்களைச் சந்தித்தாலும், சூழ்ச்சிகளைக் கண்டு மனம் துயருற்றாலும், “நேர்மை” என்ற கோட்டைத் தாண்டாத இராமன் கொள்கை வீரனாக எங்குமே விளங்குகிறான்.

இந்த கொள்கை வீரன் போற்றிய வேறொரு கொள்கை வீரனும் உண்டு. அவன் இவனுக்குப் பகையானவன். மறம் என்று தெரிந்தும் அண்ணனுக்காக போரிட்ட அரக்கன். அவனே கும்பகன்னன். தெரிந்தும் பிழை செய்யலாமோ? கூடாது என்பது ஒரு யதார்த்தமான பதில். ஆனால், கும்பகன்னன் ’தன் செஞ்சோற்றுக் கடனை' தீர்ப்பதிலே கண்ணாயிருந்தவன். நன்றிக் கடன் தீர்ப்பது பற்றி வள்ளுவம் உயர்வாக கூறும். இதைக் கடைபிடித்த கும்பகன்னன் கொடியவன் ஆவானா? அண்ணனிடம், போருக்குச் செல்லும் முன் விடைபெறும் தன்மைக் கண்டு கல்லும் உருகாதோ? 

கும்பகன்னனைப் பற்றிக் கூறும்போது நம்முன் நிற்பான் மற்றொரு கொள்கை வீரன். அவன் இடம் பெறுவது இராமாயணத்தில் அல்ல; துரியோதனன் என்ற மானிடன் மண்ணாசையால் அழிந்த வரலாறான, மகாபாரதத்தில். நன்றிக் கடனைச் செலுத்த வேண்டி, தன்னை அழித்துக்கொண்ட கொடை வள்ளல் கர்ணனே அவன்.

சேது பாலம் உருபெற்று வருங்காலை பகைவனின் ஒற்றர்களுக்கும் கருணை காட்டுகிறான் இராகவன் இராகவனையும் இராவணனையும் எதிரெதிரே நிறுத்துகிறான் கம்பநாடன் இலங்கையின் வடக்கு வாயிற் கோபுரத்தின் மேல் அரக்கர்கோன்; வடதிசை வாயில் ஏன்? வடக்கு நோக்குதல் இந்து மதக் கொள்கைப்படி வீடு பெற்றுத் தரக்கூடிய திக்கு எதிரே நிற்பதோ இராமன்; அறத்தின் உருவம். அறம் வீடு அளிக்கும் என சூசகமாக தெரிவிக்கிறானோ கவிச் சக்கரவர்த்தி!

துர் நிமித்தங்கள், நல் சகுனங்கள் காண்கிறோம் ஒவ்வொரு படலத்திலும், ‘இன்று போய் நாளை வா’ என்று ஆயுதமேதும் இன்றி தனியனாய் நிற்கும் இலங்கேசனுக்கு இராமன் காட்டிய கருணைக்கு ஒப்புவமையுண்டோ?

இலட்சுமணனை மகவு கொண்டு போய் மாம்புகு மந்தி. அநுமனின் திறமையைக் கண்டு வியக்கிறோம். மாயங்கள் பல செய்யும் அரக்கர் திறன் தானென்ன! அதன் விளைவு நிலைப்பதில்லையே! ஆனால் மறத்தினாலும் நன்மை விளைவதுண்டு! இல்லையெனில் நாகபாசம் என்ற மிகச் சிறந்த பகுதி யுத்த காண்டத்தில் இடம்பெறுமா? இல்லை, மருத்து மலையைத்தான் அநுமன் தூக்கி வந்திருப்பானோ? அக் கால போர்க் காட்சிகளையும் உத்திகளையும் நம் மனக்கண்முன் நாடகமாக அல்லவா ஆக்கிக் காட்டுகிறான் கம்பன். இந்திரசித்து சிறந்த வில்லாளனாக இருந்தும், முறைகேடுகள் மேற்கொண்டாலும், கடைசியில் நேர்மையே வெல்கிறது. 

மைந்தனை இழந்த இராவணனின் சோகத்தில் நாமும் கரைகிறோம். ஆனால் அதே சமயம், அவன் தன் தவறுக்கு வருந்தாது, பரிகாரம் தேட மறுக்கிறானே என்று கவிஞனுடன் நாமும் ஏங்குகிறோம்.

இராம இராவண போரில் கம்பன் கூறும் உவமைகள் எவ்வளவு பொறுத்தமானவையாக அமைகின்றன. இருவரும் பெரிய வீரர்கள். இருவரில் யார் வெல்வர் என அனைவரும் ஆவலுடன் பார்க்கிற அளவுக்கு கவி மெள்ள மெள்ள எல்லோர் மனத்திலும் ஓர் ஆவல் உணர்ச்சியை தூண்டி விடுகிறான். கடைசியாக இராவணன் மாயங்கள் பயனற்று போனதை அறிந்து இராமன் மீது அம்பு விடுகிறான். ஆனால், இராமனின் அயன் படையோ இராவணனை மாய்க்கிறது,

இராவண வதத்திற்குப் பின் அண்ணனின் வரவு நோக்கிக் காத்திருக்கும் பரதனை நந்தி கிராமத்தில் பார்க்கிறோம். தீக்குளிக்கத் தயாராகும் அவனை ஐயன் “வந்தனன்!” என்ற அநுமனின் செய்தி, தடுக்கிறது.

அண்ணன் வருகிறான். முடிசூட்டு விழா நடக்கிறது. பின்னர் அனைவருக்கும் விடை கொடுத்தனுப்புகிறான் இராமன்.

துன்பம் நிலையானது அல்ல; அதற்கும் முடிவு உண்டு. அதனைத் தொடர்ந்து நிச்சயம் தீர்வு ஏற்பட்டு மன அமைதி ஏற்படும் என்ற பெரியதொரு தத்துவத்தைக் கூறுகிறது இக் காண்டம்.

எனவே, வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெற விரும்புவோர் இக்காண்டத்தைப் படித்தால், வெற்றிக்கு நிச்சயம் வழிகோலும்.

இல்லங்களில் உள்ள குழப்பங்கள் தீரும்; சச்சரவுகள் மறையும்.

பிரிந்தவர் கூடுவர்; மாறுபட்டவர் ஒன்றிய கருத்துடையவராக மாறுவர் என்று கற்றறிந்தோர் கூறுவர்.

இந்நூலுக்குத் தேவையான நூல்களை–டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் அவர்களின் யுத்த காண்டம் முதல் மூன்று பாகங்களையும் கொடுத்துதவிய கலாக்ஷேத்திரத்தின் நிர்வாகி, உயர் திரு. சங்கரமேனன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி உரித்தாகுக.

நான்காம் பாகம் தந்துதவிய மறைமலையடிகள் நூல் நிலையத்திற்கும் எங்கள் ஆழ்ந்த நன்றி.

நவரசங்களை நாடகமாக்கி காட்டும் கம்ப நாடனின் பெருங்காவியத்தின் ஒரு சிறு துளியைத் தருகிறோம். தமிழ் அன்பர்கள் மேன்மேலும் இராம காதையைப் படித்து பயன் பெற வேண்டுகிறோம்.

வாழ்க தமிழ்! வாழ்க கவிச்சக்கரவர்த்தி!!


சக்திதாசன் சுப்பிரமணியன்


ஜலஜா சக்திதாசன் 

யுத்த காண்டம் படலங்கள்

1. கடல் காண் படலம்

2. இராவணன் மந்திரப் படலம்

3. இரணியன் வதைப் படலம்

4. விபீடணன் அடைக்கலப் படலம்

5. இலங்கை வேள்விப் படலம்

6. வருணனை வழிவேண்டு படலம்

7. சேது பந்தனப் படலம்

8. ஒற்றுக் கேள்விப் படலம்

9. இலங்கை காண் படலம்

10. இராவணன் வானரத் தானை காண் படலம்

11. மகுட பங்கப் படலம்

12. அணி வகுப்புப் படலம்

13. அங்கதன் துாது படலம்

14. முதற் போர்புரி படலம்

15. கும்பகன்னன் வதைப் படலம்

16. மாயா சனகப் படலம்

17. அதிகாயன் வதைப் படலம்

18. நாகபாசப் படலம்

19. படைத் தலைவர் வதைப் படலம்

20. மகரக் கண்ணன் வதைப் படலம்

21. பிரமாத்திரப் படலம்

22. சீதை களம் காண் படலம்

23. மருத்து மலைப் படலம்

24. களியாட்டுப் படலம்

25. மாயா சீதைப் படலம்

26. நிரும்பிலை யாகப் படலம்

27. இந்திரசித்து வதைப் படலம்

28. இராவணன் சோகப் படலம்

29. படைக் காட்சிப் படலம்

30. மூல பல வதைப் படலம்

31. வேல் ஏற்று படலம்

32. வானவர் களம் காண் படலம்

33. இராவணன் களம் காண் படலம்

84. இராவணன் தேர் ஏறு படலம்

35. இராமன் தேர் ஏறு படலம்

36. இராவணன் வதைப் படலம்

37. மீட்சிப் படலம்

38. திருமுடி சூட்டு படலம்

39. விடை கொடுத்த படலம்