நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/காந்தி நூற்றாண்டு விழா
107. காந்தி நூற்றாண்டு விழா
மாமா குமாரசாமி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் நாச்சியப்பன் முரண்டு பிடித்தார். எப்படியும் பம்பாய்க்குப் போக வேண்டும் என்ற வெறியோடு இருந்தார் நாச்சியப்பன். அபூர்வமாக மாமாவின் வார்த்தைக்கு அவர் கட்டுப்படுவது உண்டு.அது தெரிந்துதான் அந்தக் குடும்பத்தினர் பல சந்தர்ப்பங்களில் மாமா குமாரசாமியை அழைத்து அவருக்கு உபதேசம் செய்யச் சொல்லியிருக்கிறார்கள்.
இன்றோ மாமா குமாரசாமி தமக்காகவே நாச்சியப்பனிடம் மன்றாடிக் கொண்டிருந்தார். “நான் சொல்றதைக் கேட்டுக்க, அப்புறம் நீ இஷ்டப்படி செய்யி. ஏற்கனவே டாக்டர் கடுமையாகச் சொல்லியிருக்காரு. நீ ஹார்ட் பேஷண்டு வேறே. அல்ஸரும் இருக்கு இந்த வாரத்திலே இருந்தாவது இந்தப் பாழாய்ப் போன பழக்கத்தை விட்டுத் தொலை. உங்கப்பா நினைவா நீ நடத்தற பள்ளிக்கூடத்துக்கு ‘மகாத்மா காந்தி ஸ்கூல்’னு பேர் வச்சு அதுக்கு என்னைக் கரஸ்பாண்டெண்டாகவும் நியமிச்சிருக்கே. ஆனா அந்தக் காந்தீங்கற கங்கை இந்தத் தேசத்திலே ஓடத் தொடங்கி நூறு வருஷம் நிறையற சமயத்திலே கூட இந்தப் பாழாய்ப்போன கெட்ட பழக்கங்களை நீ விடலேன்னா அர்த்தமே இல்லே.”
“என்ன செய்யறது மாமா? இந்த வருஷம் அக்டோபர் முதல் தேதியிலிருந்து நானே குடிக்கிறதை விட்டிடறதா டாக்டரிட்ட ப்ராமிஸ் பண்ணினேன். நான் விட்டாலும் அது என்னை விடாது போலிருக்கிறதே! என்னாலே முடியலியே! என்ன பண்ணட்டும்?”
“முடியாமல் என்ன? பம்பாய்க்கு வாங்கியிருக்கிற பிளேன் டிக்கெட்டை கான்ஸல் பண்ணிட்டு, மனத்தைக் கட்டுப்படுத்திக்கிட்டு என் கூட வா. இன்னிக்கு அக்டோபர் மாசம் ரெண்டாம் தேதி, பள்ளிக்கூடக் குழந்தைகளுக்கு எல்லாம் காந்தி பேட்ஜும் மிட்டாயும் கொடுக்க ஏற்பாடு செஞ்சிருக்கேன். அதை நீ வந்து உன் கையாலேயே ஒவ்வொரு குழந்தைக்கும் கொடு, தெண்டத்துக்குக் குதிரையிலேயும், குடியிலேயும், கூத்துலேயும் பணத்தை ஏன் வீணாக்கணும்? அத்தினி குழந்தைங்களைச் சேர்த்து, ஒண்ணாப் பார்க்கறப்பவே உன் மனசுக்கு நிம்மதியா இருக்கும். வா சொல்றேன்” என்றார் குமாரசாமி.
“அதில்லே மாமா! நாளைக்குப் பாம்பே ரேஸ்லே சந்திக்கிறதா நாலஞ்சு நண்பர்களுக்கு லெட்டர் எழுதிட்டேனே!”
“லெட்டர் என்ன பிரமாத லெட்டர்?நீ போகாம இருந்திட்டா வரலேன்னு தானாத் தெரிஞ்சுக்கிறாங்க…” எழுபது வயதுத் தள்ளாமையையும் பொருட்படுத்தாமல் மாமா தேடிவந்து சொல்லியும் நாச்சியப்பனுக்கு உறைக்கவில்லை. ‘இந்தப்பசி’ வந்தால் அவருக்கு எல்லாமே பறந்துவிடும்.
அது ஒரு வேடிக்கையான குடும்பம். மாமா குமாரசாமி காந்தி கட்சி. தேசப் போராட்டக் காலத்தில் சிறை சென்று மீண்டவர். கையால் நூற்றுச் சிட்டம் போட்டுத்தான் வேட்டி துணிமணி வாங்குவார். மருமகன் நாச்சியப்பன் அந்தக் காலத்தில் ஜஸ்டிஸ் கட்சி. இந்தக் காலத்தில் எந்தக் கட்சியுமில்லாமல் எல்லாத் தொழிலதிபர்களையும் போல் அவ்வப்போது பதவியில் இருக்கிறவர்களை விரோதித்துக் கொள்ளாமல் வாழப் பழகிவிட்டவர். வயது ஐம்பத்தொன்பது. அடுத்த வருடம் அறுபதாண்டு நிறைவும் கொண்டாடியாக வேண்டும். ஆனால் அதைக் கொண்டாடுவதற்குப் பிள்ளைகள் இல்லை. பெண்களும் இல்லை. குடும்ப வாழ்வின் கலகலப்பு வீட்டில் இல்லாததால் வெளியே பழகுவதற்குக் கெட்ட பழக்கங்களை ஒவ்வொன்றாக ஏற்படுத்திக் கொண்டு விட்டார் நாச்சியப்பன். பெங்களுர் ரேசின் போது பெங்களுர், ஹைதராபாத் ரேசின் போது ஹைதராபாத், பம்பாய் ரேசின் போது பம்பாய் என்று சுற்றுவது அவர் வழக்கமாகி விட்டது; அதை ஒட்டி வேறு பல கெட்ட பழக்கங்களும் ஏற்பட்டிருந்தன. அதில் பயங்கரமானது குடிப்பழக்கம்.
“இன்னும் தொடர்ந்து ஒரு வருஷ காலம் இப்படிக் குடிச்சீங்களோ குடலே இருக்காது. குடலை முழுக்க அரிச்சிப்பிடும்” என்று சில வாரங்களுக்கு முன் மாமா குமாரசாமியும் அருகில் இருந்தபோதே எச்சரித்திருந்தார், குடும்ப டாக்டர்.அப்போது மாமா குமாரசாமியின் வேண்டுகோளுக்கு இணங்கி, “அடுத்த மாதம் காந்தி நூற்றாண்டு மாதம், அக்டோபர் ஒண்ணாந்தேதியிலிருந்தே நான் குடிக்கப் பிடாதுங்கறீங்க. எனக்கு மதுவிலக்கு, அஹிம்சை இதிலெல்லாம் நம்பிகை இருந்த தில்லை. ஆனா நீங்க இதையெல்லாம் நம்பறீங்க; கடைப்பிடிக்கிறீங்க. உங்களுக்காக வேண்டியாவது அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து இதையெல்லாம் விட்டுடறதா ப்ராமிஸ் பண்றேன், மாமா!” என்று அப்போது தாம் செய்த உறுதியையும் இப்போது நாச்சியப்பன் மறந்து விட்டார். நாச்சியப்பனின் மனைவி வந்து தன் அண்ணா வயதுள்ள குமாரசாமியிடம் அழுதாள். குமாரசாமிக் கிழவர் தள்ளாமையையும் பொருட்படுத்தாமல் வந்து நாச்சியப்பனைக் கண்டித்துப் பார்த்தார். பச்சைப் பிள்ளையாகவோ குழந்தையாகவோ இருந்தால் இன்னும் அதிகமாகக் கண்டிக்கலாம். ஐம்பத்தொன்பது வயதுக் கிழவனுக்கு இதைவிட இன்னும் கடுமையாக என்ன சொல்ல முடியும்?
“அவன் கேட்கமாட்டான் போலிருக்கிறது அம்மா! அவன் வளர்ந்தவிதம் அப்படி நீ வருத்தப்பட்டதுக்கு நான் தேடி வந்து சொல்லியாச்சு அவன் கேட்கலை. குடிச்சுக் குடிச்சுத்தான் சாகணும்னு அவன் தலையிலே எழுதியிருந்தா நாம என்ன செய்ய முடியும்” என்று மாமா குமாரசாமிக் கிழவர் “”நாச்சியப்பனின் மனைவியிடத்தில் அலுத்துக் கொண்டு புறப்படத் தயாரானார். நிர்வாகி என்ற முறையில் அவர் அன்று காலையில் தமது நிர்வாகத்தில் இருந்து மகாத்மா காந்தி பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டியிருந்தது. குழந்தைகள் பள்ளி மைதானத்தில் தேசத் தந்தை காந்திக்கு அஞ்சலி செய்யக் கூடுகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனாமல் காந்தி பேட்ஜும் மிட்டாயும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக அவர் போய்ச் சேர்ந்தாக வேண்டும்.
இப்போது காலை ஒன்பது மணி. அவர் பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்டார். நாச்சியப்பனுக்குக் காலை பத்து மணிக்கு விமானம். வீட்டிலிருந்து ஒன்பது நாற்பதுக்குப் புறப்பட்டாலும் போதும். தியாகராய நகரிலிருந்து விமான நிலையத்துக்குப்போவதற்கு இருபது நிமிஷங்கள் தாராளமாகப்போதும்.அவருடைய சவர்லே - இம்பாலா பன்னிரண்டு நிமிஷங்களில் விமான நிலையத்துக்குப் போய்ச் சேர்த்து விடும். பல தடவை போய்ப் பழகிவிட்டதனால் இப்போதெல்லாம் அங்கே போய்க் காத்திருப்பதற்கு அவர் தயாராயில்லை. ஒவ்வொரு தொழிலிலும் நிறைய லாபம். முதலீடு செய்திருந்த எல்லாம் நாலு மடங்காக லாபம் தரும் நிலை. குழந்தை குட்டி இல்லாத குடும்பம். எவ்வளவு செலவழித்தாலும் தீராத வசதி. கொஞ்சம் தேசபக்தியோ தெய்வபக்தியோ உள்ளவராக வளர்ந்திருந்தால் நாச்சியப்பன் இப்படிக் கெட்டுப் போயிருக்க முடியாது. ஆனால் இரண்டுமே இல்லை. அவர் இதுவரை செய்திருந்த ஒரே நல்ல காரியம் தந்தையின் நினைவாகக் கட்டிய ஒரு பள்ளிக்கூடம் தான். அதற்குக் காந்தி மகான் பெயரைச் சூட்டியதற்குக்கூட மாமா குமாரசாமிக் கிழவரின் வற்புறுத்தல்தான் காரணம். ‘பழனியப்பர் ஞாபகார்த்த மகாத்மா காந்தி பள்ளிக்கூடம்’ என்று இரண்டு பெயரையும் சேர்த்தே பள்ளிக்குச் சூட்டச் செய்திருந்தார் மாமா, அந்தப் பள்ளிக்கூடம் சம்பந்தமான கணக்கு வழக்கு வரவு செலவு எல்லாம் கூடக் கிழவருக்குத் தான் தெரியும்.நாச்சியப்பன் கணக்கு வழக்குகளில் கவனம் செலுத்துவதே இல்லை. ‘செக்’கில் கையெழுத்துப்போடுவது, வருடமுடிவில், ‘பாலன்ஸ் ஷீட்’ பார்ப்பது தவிரத் தொழில் நிறுவனங்களை, அன்றாட நிர்வாகங்களை அவருடைய தந்தையின் காலத்திலேயே வேலைக்குச் சேர்ந்திருந்த விசுவாசமான ஊழியர்கள் தாம் கவனித்தார்கள். அதனால் பழுதுபடாத பழகிய யந்திரங்களைப் போல் எல்லாம் அவருடைய கவனிப்பின்றியும் நன்றாகவே இயங்கி வந்தன.
இளமையிலிருந்தே கிளப் வாழ்க்கை, ரேஸ், மதுப்பழக்கம் இவற்றினால் ஒரளவு பாழாகியிருந்த நாச்சியப்பன் குடும்ப வாழ்வின் செல்வமாகிய மக்கட் செல்வமும் இல்லாமற் போகவே விரக்தியில் இன்னும் மோசமாக மாறினார்.தந்தை காலமானபின் அவரைத் தட்டிக்கேட்க ஆளில்லாது போயிற்று. மாமா குமாரசாமி அகிம்சாவாதி. சாது. எதையும் எடுத்துச் சொல்லி அறிவுரை கூறுவாரே ஒழிய மனம் புண்படும்படி கூறி நிர்ப்பந்திக்க அவருக்குத் தெரியாது. நாச்சியப்பனின் குடும்பத்தோடு சேர்ந்து குடியிருக்காமல் கிழவர் தனியாக வேறு வீட்டில் குடியிருந்ததற்குக் காரணமே அவருடைய பழக்க வழக்கங்களும் தம்முடைய பழக்க வழக்கங்களும் ஒத்துக்கொள்ள மாட்டா என்பதனால்தான். சரியாக ஒன்பதடித்து முப்பத்தொன்பதாவது நிமிஷத்தில் டிரைவர் கப்பல் போல் நீண்ட காரைப் போர்ட்டிகோவில் கொண்டு வந்து நிறுத்தினான். நாச்சியப்பனின் காரியதரிசி ஐயாயிர ரூபாய் ரொக்கம் அடங்கிய சூட்கேஸ் ஒன்றைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தான். வீட்டம்மாள் வெளியே அவரை வழியனுப்ப வரவே இல்லை; அன்று கிழவர் வீடு தேடிவந்து அவருக்குச் சொன்ன அறிவுரையை அவர் கேட்கவில்லை என்று அவளுக்குக் கோபம். டாக்டரிடம் சத்தியம் பண்ணிக் கொடுத்தபடி காந்தி நூற்றாண்டு வருடத்திலிருந்து அவர் குடிப்பழக்கத்தை விடப் போவதில்லை என்று அறிந்த பின்போ அவள் கோபம் இன்னும் இரண்டு மடங்காகியிருந்தது.
சரியாக ஒன்பது நாற்பதுக்குக் கார் போர்ட்டி கோவிலிருந்து புறப்பட்டது. உள்ளே ரேடியோவில் காந்தி நூற்றாண்டை ஒட்டி உள்ளத்தைப் பிழியும் குரலில் யாரோ ‘ரகுபதி ராசகவ’ பிரர்த்தனை பாடுவது கார் புறப்படுகையில் அவருக்குக் கேட்டது. அந்தக் குரலில் ஒரு விநாடி நாச்சியப்பன் வசப்பட்டார். அடுத்த விநாடியில் திரும்பத் தெருவில் இறங்கிவிட்டது; வீதிச் சுவர்களில் எல்லாம் மகாத்மா காந்தியின் பெரிய பெரிய படங்கள். பெரிய பெரிய பானர்கள்.
‘பொதுமக்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படாத எந்தச் சுகத்தையும் நான் ஏற்கமாட்டேன்.’
‘சத்தியாகிரகத்தில் தோல்வி என்ற பேச்சே கிடையாது.’
‘உழைக்காமல் இருப்பவனுக்கு உண்பதற்கு மட்டும் என்ன உரிமை இருக்கிறது?’
இவ்வாறெல்லாம் அந்தச் சிலைகளில் வாசகங்கள் எழுதியிருந்தன. அங்கங்கே பிளாட்பாரங்களிலும் தெருமுனைகளிலும் சிறுசிறு பந்தல் போட்டு அதில் காந்தி படம் வைத்து மாலையிட்டு ஊதுவத்தி கொளுத்தி வைத்து அலங்கரித்திருத்தார்கள். சட்டையில் எனாமல் காந்தி சின்னங்களை அணிந்து தெருக்களிலும் மேடைகளிலும் கூட்டம் கூட்டமாகப் பள்ளிக்கூடச் சிறுவர் சிறுமியர் போய்க்கொண்டிருந்தனர்.
கார் மவுண்ட்ரோடு திரும்பி மீனம்பாக்கத்துக்காகத் தெற்கு நோக்கி விரைந்தது. ஓர் சத்தியப் பெருந் திருவிழாவில் நகரமே குதூகலமாக இருக்கும்போது தாம் எங்கோ மயானத்தைத் தேடித் தனியே போய்க் கொண்டிருப்பது போல் ஒரு விநாடி அவருக்கு பிரமை உண்டாயிற்று.
குழந்தைகள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள், கிழவர்கள், நடுத்தர் வயதினர் எல்லாரும் கொண்டாடும்படி இந்தக் கிழவன் ஏதோ பெரிய விஷயங்களை இந்த நாட்டுக்குக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறான்.
எதிரே வந்த சிறுவர் சிறுமியர் ஊரர்வலத்தினால் கார் போவது தடைப்பட்டது. எங்கும் எல்லா இடத்திலும் காந்தி என்னும் மகா கங்கையில் மூழ்கித் திளைத்துக்கொண்டிருந்தது ஊர்: தாம் மட்டும் ரூபாய் நோட்டுக்களின் துணையோடு எங்கோ எதையோ பொய்யான சுகம் தரும் பொருளைத் தேடி அநியாய வேகத்தில் ஓடிக் கொண்டிருப்பதுபோல உணர்ந்தார் அவர். ஊர்வலம் சாலையைக் கடக்கிறவரை சில நிமிஷங்கள் கார் நிற்க வேண்டியதாயிற்று. அந்தக் காலை வேளையிலே அத்தனை சிறுவர் சிறுமியரின் முகங்களைக் காண்பதற்கு உற்சாகமாக இருந்தது; தம் வீட்டில் இப்படி எந்தக் குழந்தையும் இல்லை என்ற நினைவு வந்தபோது நெடுமூச்சு வந்தது அவருக்கு. நெஞ்சை இதற்கு முன்பு எப்போதுமே பிசைந்திராத சில உணர்வுகள் பிசைவதாக இந்த விநாடியில் இன்று உணர்ந்தார் நாச்சியப்பன். விமான நிலையத்திற்குப் போய்ச்சேர நேரமாகிவிட்டதே என்ற அவசரத்தில் முழு ஊர்வலமும் கடந்து நாலைந்து பையன்கள் மட்டும் பின்தங்கி வந்து கொண்டிருந்த நிலையில் ஒரு ஹார்ன் கொடுத்துவிட்டுக் காரைச் செலுத்தினான் டிரைவர். திடீரென்று கப்பலைப் போல பெரிய கார் எதிரே பாய்ந்து வரவும், அந்த நாலைந்து பையன்களும் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாகச் சிதறி ஓடினர். அப்படி ஒடியபோது ஒரு பையன் பதற்றத்தில் தன் கையில் இருந்த காந்தி பொம்மை ஒன்றைக் கீழே போட்டுவிட்டுப் பொம்மை உடைந்த நஷ்டத்தில் ஒடவும் தோன்றாமல் நடுத்தெருவில் நின்று அப்படியே அழத் தொடங்கிவிட்டான். அழுது கொண்டே நடுரோட்டில் நின்ற சிறுவனை விலக்க டிரைவர் எவ்வளவோ ஹாரன் அடித்தும் பையனின் அழுகைதான் அதிகமாயிற்று.
“கொஞ்சம் நிறுத்து” என்று சொல்லி நாச்சியப்பனே கீழே இறங்கி அந்தப் பையனருகே சென்று, "இந்தா தம்பி அழாதே இந்த ரூபாயை வச்சுக்க புதுக் காந்தி பொம்மை வாங்கிக்க இப்ப வழி விடு. நீ ரொம்ப நல்ல பையனாச்சே!” என்று ஒரு புத்தம் புதிய ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டினார்.
“ஊவா வேணாம், பொம்மை தான் வேணும் உம் ஊம்” என்று பையன் விடாமல் அழவே அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பையனுக்கு அப்பாவோ, அம்மாவோ, பெரியவர்கள் யாரும் அக்கம்பக்கத்தில் நிற்பதாகத் தெரியவில்லை. பின்னால் ஏராளமான கார்களும் பஸ்களும் லாரிகளும் சேர்ந்து ஒரே ஹாரன் முழக்கங்களாக ஒலித்துக் கொண்டிருந்தன. பையனோ அசையாமல் நடுரோட்டில் நின்று காந்தி பொம்மை தான் வேண்டுமென்று அடம் பிடித்தான். பின்னால் இருந்த எல்லா வண்டிகளிலிருந்தும் நாச்சியப்பனை நோக்கிப் பல பார்வைகள் முறைத்தன; கடுகடுத்தன. என்ன செய்வதென்றே தெரியவில்லை அவருக்கு முதலில் வண்டிப் போக்குவரத்தை ஒழுங்கு செய்து கொள்ள எண்ணி,“பொம்மை வாங்கித் தருகிறேன்! என்னோட காரிலே வா” என்று நயமாகச் சொல்லிப் பையனைக் காரில் ஏற்றிக் கொண்டு மற்றக் கார்க்கு வழிவிட்டுத்தம் காரை ஒதுக்கிநிறுத்தச் சொன்னார். ஒதுக்கி நிறுத்தியபின்பும், “அஞ்சுருபா போறாதுன்னா பத்து ரூபா தரேண்டா கண்ணு. ஒண்ணுக்கு ரெண்டு காந்தி பொம்மையாவாங்கிக்கோ” என்று மன்றாடிப் பார்த்தார். பையன் பொம்மை தான் வேண்டுமென்று பிடிவாதமாக அழுது அடம் பிடித்தான்.
விமானத்துக்கு நேரம் ஆகிவிட்டது. பையனை அப்படியே அழுதால் அழட்டும் என்று தெருவோரமாக இறக்கி விட்டு விமான நிலையத்துக்கு விரைந்துவிடலாம். அப்படிச் செய்ய எந்தத் தடையும் இல்லை. ஆனால் செய்ய மனம் வரவில்லை. அந்தப் பையனின் பால் வடியும் முகம் அவரை ஆட்கொண்டது. குழந்தையில்லாத மலட்டுத் தந்தையான அவருக்கு ஒர் அழகான குழந்தையை ஏமாற்றுவதற்கும் துணிவில்லை. எத்தனையோ கெட்ட பழக்கங்கள் உள்ள பணக்காரராக இருந்தும் குடும்பத்தின் பரம்பரைப் பெருந் தன்மை அவரிடம் இருந்தது. யாரையும் அவர் ஏமாற்றியதில்லை. வார்த்தைகளைக் காப்பாற்றாமல் மோசம் செய்ததில்லை. ஆனால் பழக்கதோஷம் காரணமாக மதுவிலக்குப் பற்றி டாக்டருக்குக் கொடுத்த வாக்கை மட்டும் அவரால் காப்பாற்ற முடியவில்லை.
“சரி! வண்டியைத் திருப்பிப் பாண்டிபஜாரிலே ஏதாவது ஒரு பொம்மைக் கடைக்கு விடு.நவராத்திரி வர்ரதே. தெருவிலேயே பொம்மைக்கடை நிறைய இருக்கும்” என்று டிரைவருக்கு உத்தரவிட்டார் நாச்சியப்பன்.
“பாண்டிபஜார் போய் வர்ரதுக்குள்ளே பிளேன் போயிடுங்க”
"பரவாயில்லே! என்ன செய்யிறது? பையன் கேட்கமாட்டேங்கிறானே!”
கார் திரும்பிப் பாண்டிபஜாருக்குப் போயிற்று. பிளாட்பாரத்தின் மேலேயே பெஞ்சுகள் போட்டுப் பொம்மைகளை அடுக்கியிருந்த ஒரு கடையருகே காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கினார் அவர். பொம்மைக் கடையைப் பார்த்தும் பையனும் அழுகையை நிறுத்தி விட்டு அவரோடு இறங்கினான்.
காந்தி ஊன்றுகோலுடன் நிற்பது போன்ற பொன்னிற வர்ணமடித்த பொம்மைகள் இரண்டே இரண்டுதான் கடையில் இருந்தன.ஒரு பொம்மை பன்னிரண்டு ரூபாய் என்று கடைக்காரன் விலை சொன்னான். இரண்டு பொம்மைகளுக்குமே பணம் கொடுத்து வாங்கிக் கொண்டார் அவர். ஒரு பொம்மையைப் பையன் கையில் கொடுத்தபோது அவன் அதை மிகவும் பத்திரமாக வைத்துக் கொள்கிறவனைப்போல் அந்தப் பொம்மையை நெஞ்சோடு அணைத்து வைத்துக் கொண்டிருந்தான். அவரும் பையனும் பொம்மைகளுடன் காரில் ஏறியதும், “எங்கே போக” என்று கேட்டான் டிரைவர்.
“திரும்ப வீட்டுக்கே விடு”
கார் வீட்டை நோக்கித் திரும்பியது. கார்போர்ட்டிகோவில் நின்றதும் பையனை உள்ளே அழைத்துச் சென்றார் நாச்சியப்பன். உள்ளே இருந்த அவர் மனைவி வெளியே கார் ஓசை கேட்டு வந்தாள். நாச்சியப்பன் அவளை நோக்கி முகம் மலர்ந்தபடியே, "இந்தா இந்த வருஷத்திலிருந்து நம்ம வீட்டுக் கொலுவிலே இந்தப் பொம்மையையும் ராமர், கிருஷ்ணன், புத்தர், விவேகானந்தர் பொம்மையோட அதே வரிசையிலே சேர்த்து வை. இன்னிக்கி வரை இந்தப் பொம்மையை வைக்கும் யோக்கியதை இந்த வீட்டுக்கு இல்லாமல் இருந்தது; இனிமே அது வந்துடும்” என்று கூறித் தம்மிடம் இருந்த மற்றொரு பொம்மையை அவளிடம் கொடுத்தார். பிரிஜ்ஜை திறந்து பையனுக்கு ஒர் ஆப்பிள் எடுத்துக்கொடுத்தபோது ஞாபகமாக அதில் புத்தம் புதிதாய் அடுக்கியிருந்த மதுப்பாட்டில்களை எல்லாம் ஜன்னல் வழியே வெளியில் எடுத்தெறிந்தார் நாச்சியப்பன். அந்த ஆச்சரியத்தைக் கண்குளிரப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவர் மனைவி உடனே பள்ளிக்கூடத்துக்குப் போன் செய்து குமாரசாமிக் கிழவருக்கும் அந்த அதிசயத்தைத் தெரிவித்தாள் அவள்.“அப்போ உங்கவீட்டிலேயும் காந்தி நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியாச்சுன்னு சொல்லு” என்று அவளுக்கு உற்சாகமா, மறுமொழி கூறினார் அவர்.
பையனை அவனுடைய வீட்டில் கொண்டு போய் விடுவதற்கு முன் தம்முடைய வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்த அவன் பெயர் என்னவென்று அறிந்துகொள்வதற்கு ஆவலுடன், “உன் பேரென்ன ராஜா” என்று நாச்சியப்பன் கேட்டபோது கணிரென்ற குரலில், "என் பேரு காந்தி” என்று பையன் பதில் சொன்னான். நாச்சியப்பனுக்கு ஒருகணம் மெய்சிலிர்த்தது.“எங்கே இன்னொரு தரம் சொல்லு” என்று மறுபடியும் அந்தப் பெயரை அவனிடமே கேட்டார் அவர் கங்கையில் எத்தனை முறை மூழ்கினாலும் புண்ணியந்தானே? (கலைமகள், தீபாவளி மலர், 1969)