உள்ளடக்கத்துக்குச் செல்

நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/சந்திப்பு

விக்கிமூலம் இலிருந்து

14. சந்திப்பு

1. காட்சி

“பாலு! அதோ அந்த ஏரியிலே படகு ஏறிப் போவோமா?”

“பயமா இருக்குமே, அப்பா!...”

“போடா பயந்தாங்கொள்ளி. நான் கூட வருகிற போது உனக்கென்னடா பயம்?”

“சரி அப்பா, போகலாம்!” - கொடைக்கானலின் குளிரில் மிரண்டு என் அருகில் ஒட்டிக் கொண்டு நின்ற பையன் சம்மதத்துக்கு அறிகுறியாய்த் தலையை ஆட்டினான். முழுக்கை கம்பளிச் சட்டையும், கனமான நிஜாரும், மப்ளருமாகச் சேர்ந்துகொண்டு, ஐந்து வயதுப் பையனைப் பெரியவனாகக் காட்டின.

“வா பாலு! போகலாம்!” பையனைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு ஏரியை நோக்கிக் கிளம்பினேன்.

"அப்போவ்.”

“என்னடா? என்ன வேணும்?”

“ஏரி ரொம்ப ஆழமா இருக்குமோ?”

மலர்ந்த விழிகள் இரண்டும் விரிய என்னை நிமிர்ந்து பார்த்துக் கொண்டே கேட்டான் பாலு. அந்தக் கண்களையும் அவன் முகத்தையும் பார்க்கிற போது ‘அவள்’ நினைவு வந்தது. பாவி! எப்படித்தான் இந்தக் குழந்தையை விட்டுச் சாக மனம் வந்ததோ? மூன்றரை வருஷ வாழ்க்கை. எனக்குப் பாரமாக இந்தப் பையனை விட்டு விட்டுப் போய்ச் சேர்ந்தாள். வேண்டுமென்றா போனாள்? மரணத்தை வெல்ல நாம் யார்? பையனை மட்டுமா? என் சரோஜா என்னையும் அனாதையாக்கி விட்டுப் போய் விட்டாள்.

பாலு தாயில்லாத குழந்தை. நான் மனைவியை இழந்த வாலிப வயதுத் தந்தை. அவனுக்குத் தாயுறவு இல்லை. எனக்கு மனைவி உறவு இல்லை. இருவரும் இரு வேறு விதத்தில் நிராதரவானவர்கள்.

“என்னப்பா? நீ பதில் சொல்ல மாட்டாயா? உனக்கு என் மேலே கோபமா?”

“என்னடா? ஏரி ஆழமான்னு கேட்டாயா?ஆழமானால் நமக்கென்னடா கண்ணு? படகிலேதானே போகப் போகிறோம்? ஒரு பயமும் இல்லை” நான் சிந்தனையிலிருந்து விடுபட்டு அவன் கேள்விக்குப் பதில் கூறினேன். அவன் பேசாமல் நடந்து வந்தான். தூரத்திலிருந்து பார்க்கும் போதே ஏரியில் கூட்டம் அதிகமாக இருந்தது. வாடகைப் படகு கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற சந்தேகத்தோடு காலை எட்டிப் போட்டுத் துரிதமாக நடந்தேன் நான்.

"அப்பாவ்...?"

"ஒ! என்னடா மறுபடியும்? தொன தொணவென்று..."

"இல்லேப்பா? இப்போது அம்மா உசிரோடு இருந்தால் நம்மோடு கொடைக்கானலுக்கு வந்திருப்பாள் இல்லையா அப்பா?”

"நீ பேசாமல் வரமாட்டாய்?"- அவன் கேள்வி புண்ணைக் கிளறிவிட்டது. வாயை அடக்குவதற்காக இப்படிச் சத்தம் போட்டேன். என் சத்தத்தைக் கேட்டுப் பையன் 'கப்சிப்' என்று அடங்கிவிட்டான்.

படகுகள் புறப்படும் இடத்தில் ஒரே ஒரு படகு யாரும் வாடகைக்குப் பேசாமல் மீதமிருந்தது.அதற்கான வாடகையைக் கொடுத்துவிட்டுப் பையனை ஏற்றிக்கொண்டு புறப்பட்டேன். சுற்றிலும் அடர்த்தியான மலைக்காட்சிகளுக்கு நடுவே நீல நிற வெல்வெட்டை அளவு கத்தரித்துத் தைத்தாற்போன்ற அந்த ஏரியில் படகில் செல்வது எவ்வளவு பெரிய இன்பம்! சிறிதும் பெரிதுமாக இன்னும் எத்தனையோ படகுகள் ஏரியில் சென்று கொண்டிருந்தன.

"அப்பா! அப்பா! அதோ, அங்கே பாரேன்!” பையன் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்தேன். இருபது இருபத்துமூன்று வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி படகைச் செலுத்திக் கொண்டிருந்தாள். படகில் அவளோடு பாலுவின் வயதையொத்த சிறு பெண் ஒருத்தியும் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

“அந்த மாமி படகை என்ன வேகமாகச் செலுத்தறா பாரு அப்பா!"-பையனுக்குக் குதுரகலம் கிளம்பிவிட்டது.

"அதுக்கென்னடா! நீ பயப்படாமல் இருந்தால் நானும் வேகமாக விடுவேன்."- என் பதிலை அவன் கவனிக்கவில்லை.அந்தப்படகையும் அதிலிருந்து சிறு பெண்ணையுமே பார்த்துக் கொண்டிருந்தான். என் கவனமும் அந்தப் படகின்மேல் சென்றது. அதைச் செலுத்திக் கொண்டிருந்தவளைக் கவனித்தேன் நான். ஆசையால் உந்தப்பட்டுப் பார்த்த பார்வை அல்ல அது ஏதோ தற்செயலாகச் சென்று லயித்த பார்வைதான்.

'இந்தப் புத்தகத்தில் நாம் படிப்பதற்கு என்ன இருக்கப் போகிறது?' என்ற அலட்சியத்தோடு பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருக்கும்போது நமக்குப் பிடித்தமான ஒன்று அதில் அகப்பட்டுவிட்டால் எப்படியிருக்கும்? அந்த நிலைதான் தற்செயலாகச் சென்ற என் பார்வைக்கும் ஏற்பட்டது.

என் கண்கள் சென்ற திசையிலேயே நிலைத்தன. அப்படி ஒன்றும் அவள் பிரமாதமாக அலங்கரித்துக் கொண்டிருக்கவில்லை. வாயில் புடவையும் கறுப்பு நிறச் சோளியும் அணிந்து கொண்டிருந்தாள். செல்வக் குடும்பத்துக்கே உரிய கம்பீரமான அழகு.அவள் முகத்தில் படிந்திருந்ததும் வெளிறிய சிவப்புநிறம்- யானைத்தந்தத்தைப் போல, நியாயமாகப் பார்த்தால் அவளுக்கு இருந்த அழகுக்கு இன்னும், எவ்வளவோ அலங்காரம் செய்து கொண்டிருக்கலாம். அதிகம் ஆடம்பரத்தை விரும்பாதவள் போலிருக்கிறது! என்ன எளிமை எவ்வளவு அழகு! “என்னப்பா! அங்கேயே பார்க்கிறே? படகைத் தள்ளு!” நினைவு திரும்பியது. நகராமல் தத்தளித்துக் கொண்டிருந்த படகை துடுப்புகளால் தள்ளினேன். பாலு இன்னும் அந்தப் படகில் உட்கார்ந்திருந்த சிறுமியையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"அப்பா அந்தப் பொண்ணு அந்த மாமிக்கு மகளா, அப்பா?”

"சீ போடா... அந்த மாமியின் தங்கையாக இருக்கும்” என்றேன். சிறுமி அவளுக்கு நேர்மாறாக அலங்காரத்தின் சிகரமாகக் காட்சி அளித்தாள் தோற்றத்தில். பட்டுப் பாவாடை, வைர நெக்லஸ், இரட்டைப் பின்னல், தலை தாங்காமல் மல்லிகைப்பூ முதலிய ஆடம்பர அலங்காரங்களால் நிறைந்திருந்தாள் அவள். எங்கள் படகுகள் வேறு வேறு திசையில் பிரிந்தன. படகு சிறிது தூரம் சென்றதும் கீழ்க்கண்ட சம்பாஷணை அரைகுறையாக என் காதில் விழுந்தது.

“. அந்த மாமாவுக்குப் பிள்ளையா அவன்?” என்று கேட்டாள் சிறுமி.

"சீ போடி உளறாதே!” சிறு குழந்தைகளுக்கு ஒரே மாதிரி சந்தேகங்களே எப்போதும் ஏற்படுகின்றன. நான் அதைக் கேட்டு எனக்குள் மெல்லச் சிரித்துக் கொண்டேன்.

ஏரியில் சுற்றிவிட்டுப் படகைக் கரைக்குக் கொண்டு வரும்போது மணி ஐந்தரை. அவளும் அந்தச் சிறுமியும் எங்களுக்கு முன்பே கரையேறிச் சென்றுவிட்டனர். பாலு தூக்கக் கிறக்க முற்றுத் தள்ளாடினான். பனியும் குளிரும் அதிகமாகிவிட்டிருந்தன. அவனை இழுத்துக்கொண்டு தங்கியிருந்த ஹோட்டலை அடையும்போது மணி ஆறேகாலுக்கு மேல் ஆகிவிட்டது. கொடைக்கானலில் அந்த நேரத்தில் குளிருக்கு அடக்கமாகத்துங்குவதைத் தவிர வேறு எந்த நல்ல காரியத்தைச் செய்வதற்கு முடியும்? அதையே நானும் பாலுவும் செய்தோம்.

2. அனுமானம்

காட்சிக்கு வரம்பு உண்டு. கட்டுப்பாடு உண்டு. அனுமானத்துக்கு இவை இரண்டுமே இல்லை. தூக்கமோ, மயக்கமோ இன்றி மனத்தில் தன் நினைவோடு ஏற்படக்கூடிய சொப்பனாவஸ்தைக்குத்தான் அனுமானம் என்ற பெயரோ?

பாலு சிறு குழந்தை. சாப்பிட்டதும் தூங்கிவிட்டான். தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன் நான்.

அவள், அவளுடைய அழகு, அவள் படகைச் செலுத்திய கம்பீரமான கவர்ச்சி, "சீ போடி, உளறாதே!” என்று தங்கையைக் கடிந்து கொண்ட இனிய குரல் எல்லாம் நினைவில் மிதந்தன.நான்தங்கியிருந்த அதே லேக் வியூ ஹோட்டலில்தான் அவளும் தங்கியிருந்தாள்.அன்று ஏரியிலிருந்து ஹோட்டலுக்குத் திரும்பியவுடனே இதை நான் தெரிந்து கொண்டுவிட்டேன்.

அந்தப்பெண்ணும் அந்தச் சிறுமியும் தவிர வேறு யாரும் உடன் வந்திருப்பதாகத் தெரியவில்லை. ஒரு இளவயகப் பெண் இப்படி ஒரு சிறுமியோடு தனியாகக் கொடைக்கானல் ‘சீஸனை’ அனுபவிக்க வந்திருக்கிறாளே, அவளுக்கு என்ன துணிச்சல்?’ - என் மனத்தில் இப்படி ஒரு கேள்வி.

‘அதனாலென்ன? இந்தக் காலத்தில் படித்த பெண்கள் தனியாகப் பிரயாணம் செய்வதுதான் சகஜமாகிவிட்டதே? காலேஜில் படிக்கிற பெண் போலும்; வீட்டில் யாரும் துணைக்கு வரக்கூடிய நிலையில் இருந்திருக்க மாட்டார்கள். தங்கையையும் அழைத்துக்கொண்டு தனியாகக் கிளம்பியிருப்பாள். இதில் என்ன தப்பு?’ இப்படி ஒரு அனுமானம்.

‘படித்து விட்டால்தான் என்ன? நெற்றிக்குப் பொட்டு வைத்துக் கொள்வது அநாகரிகமா? கைக்கு வளை போட்டுக் கொள்வது அநாகரிகமா? சே! சே! என்ன படிப்பு வேண்டியிருக்கிறது? நாலெழுத்துப் படித்துவிட்டால் மங்கலமான பழக்கவழக்கங்களையெல்லாம் தலைமுழுகி விடுகிறார்களே.’

ஆனாலும் துணிச்சல்காரப் பெண் படகை என்ன லாகவமாகத் தள்ளுகிறாள்? தண்ணிரைக் கண்டால் மிரண்டு நடுங்குகிற ஆளாகத் தெரியவில்லை.

துரக்கக்கலக்கத்தில் புரண்டு படுத்த பாலு தன் பிஞ்சுக் காலால் இடுப்பில் உதைத்தான்.போர்வையை இழுத்து அவனுக்கும் எனக்குமாகச் சேர்த்துப் போர்த்திக் கொண்டேன். எனக்கும் தூக்கம் இமைகளை அழுத்தியது. சிந்தனைகளால் எவ்வளவு நேரம்தான் துக்கத்தை எதிர்க்க முடியும்?

இரண்டையுமே நான் எதிர்க்கவில்லை. தூக்கத்தையும், அனுமதித்து விட்டேன். சிந்தனையையும் அனுமதித்துவிட்டேன். நினைவு தூக்கத்தில் இரண்டறக் கலந்து போய்விட்டது!

3. கனவு

நினைவோடு கூடிய எண்ணத்துக்குச் ‘சிந்தனை’ என்று பெயர். தூக்கத்தில் ஏற்படும் பிரக்ஞையற்ற எண்ணத்துக்கும் பெயர் உண்டா? உண்டானால் ‘கனவு’ என்பதுதான் அந்தப் பெயர்.

மாலைநேரம். கொடைக்கானல் மலை அழகின் சுவர்க்கமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.அங்கங்கே ஹோட்டல்களிலிருந்தும், பங்களாக்களிலிருந்தும், பல நிறப் பட்டுப் பூச்சிகளைப்போல ஆண்களும் பெண்களுமாக ஏரியில் படகு செலுத்தவும், மலைக்காற்றில் உலாவவும், சினிமா பார்க்கவும் சென்று கொண்டிருந்தனர். பாலுவை அழைத்துக்கொண்டு ஏரிக்கரைக்குப்போகிறேன்.அதே சமயத்தில் அந்த அழகியும் தன் தங்கையை அழைத்துக்கொண்டு வருகிறாள். அதே வெள்ளை கலையுடுத்த கோலம். பாலுவும் சிறுமியும் வெகுநாள் பழகியவர்களைப்போலக் கை கோர்த்துக்கொண்டு நடந்து வருகின்றனர்.

ஆனால் நாங்கள் அப்படிக் கை கோர்த்துக் கொண்டு சிரித்துப் பேசி நடக்க முடியுமா? அவள் யாரோ? நான் யாரோ? ஆசை இருக்கலாம்; அப்படிச் செய்ய வேண்டுமென்று. யாருக்கு? எனக்குத்தான். அவளுக்கும்தான். ஏன் இருவருக்குமே இருக்கலாம்! எல்லா ஆசைகளையுமே வெளிப்படையாக நிறைவேற்றிக் கொண்டுவிட முடியுமா? பச்சைக் கற்பூரத்தைப் பேழைக்குள் பொதிந்து வைத்திருந்தால் தானே வாசனை நிலைத்திருக்கிறது? சில ஆசைகளையும் அதுபோல் அடக்குவது அவசியமாகிறது.

நானும் அவளும் சாதாரணமாகச் சம்பாஷித்துக்கொண்டு நடந்தோம். இடையிடையே அவசியமான சமயங்களில் அவளுடைய முத்துப் பல் வரிசை பவழச் சிறையிலிருந்து மெல்லத் தோன்றி மறையும். அதாவது அவள் சிரிப்பாள்.

“உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது! சிரிக்கச் சிரிக்கப் பேசுகிறீர்கள். இந்த வருஷம் கொடைக்கானல் சீஸனுக்கு வந்ததில் உங்கள் பழக்கத்தை என்றென்றும் மறக்கமாட்டேன்.” அவள் புன்னகையோடு என்னைப் பார்த்துக் கொண்டே இவ்வாறு கூறுகிறாள்.

“எனக்கும் அப்படித்தான்” என்று சிரித்துக்கொண்டே பதில் சொல்கிறேன் நான்.

“நாமிருவரும் ஜோடியாக ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டால் என்ன?” எனக்குத் துாக்கிவாரிப் போடுகிறது. ஆனாலும் மகிழ்ச்சி. யாராவது கரும்பு தின்னக் கூலி கேட்பார்களா? மகிழ்வால் பொங்கும் என் மனத்தைச் சமாளித்துக் கொண்டே, “அதற்கென்ன? எடுத்துக்கொண்டால் போயிற்று! பாலுவையும் உன் தங்கையையும் கூட உட்கார்த்தி எடுத்துக்கொள்வோம்!” என்கிறேன்.

"ஊஹாம், கூடாது. நாம் இருவரும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.”

“சரி!... அப்படியே செய்யலாம்!” இருவரும் ஒரு ஸ்டுடியோவுக்குச் சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டு அதன் பிறகு ஏரிக்குச் சென்றோம்.

“இன்றைக்கு நாம் ஒரே படகில் செல்வோம். தனித்தனிப் படகுகள் வேண்டாம்.” அவள் கெஞ்சினாள்.

“இல்லை! பார்க்கிறவர்களுக்கு நன்றாக இருக்காது. யாராவது ஏதாவது தவறாக நினைத்துக் கொள்வார்கள்.”

“நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. உங்கள் வாழ்க்கைப் படகிலேயே அருகில் அமர்ந்து ஒட்டத் தீர்மானித்துவிட்டவளுக்கு இந்த வெறும் படகில் உட்காரத் தயக்கமா?”

“என்னது? இப்போது நீபேசுவது மெய்தானா? என்னால் என் காதுகளையே நம்ப முடியவில்லையே?”

“நம்புங்கள். சத்தியமாக நம்புங்கள்.நான் உங்களிடம் என்னை ஒப்படைக்கத்தான் போகிறேன்...”

"ஆனால் அது என் தவப் பயன்.."

“வாருங்கள், ஒரே படகில் போகலாம்..” “குழந்தைகள்?”

“அவர்கள் வேண்டாம் கரையிலேயே இருக்கட்டும்”

“ஏன், கூட வரட்டுமே! படகில் இடத்துக்குப் பஞ்சமா? தவிர, கரையில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது யார்...?”

“உஷ்! அதோ பாருங்கள்! அவர்களைப் போல நாமும் போக வேண்டும்.”

அவள் சுட்டிக்காட்டிய திசையில் பார்த்தேன். ஒரு சிறு படகில் கணவனும் மனைவியும்போலக் காணப்பட்ட ஒரு யுவனும், யுவதியும் நெருங்கி உட்கார்ந்து கொண்டிருந்தனர்.என் உடலில் பாதாதிகேசபரியந்தம் மயிர் சிலிர்த்தது.அவள் ஆவல் ததும்பும் கண்களால் இமைக்காமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.அந்தப் பார்வை என்னை வென்றுவிட்டது. “சரி உன் இஷ்டம்..”

குழந்தைகள் இருவரையும் படகு கிளம்பும் இடத்திலிருந்த ஆளிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.

“அப்பா! அப்பா என்னை மட்டும் விட்டுட்டுப் போறியே, உனக்குப் பாவம்!” பாலு மழலைக் குரலில் கூப்பாடு போடுகிறான். அந்தச் சிறுமியும் அவனோடு சேர்ந்து கொண்டு கூப்பாடு போடுகிறாள். நாங்கள் அந்தக் கூப்பாட்டைக் காதில் கேட்காதவர்களைப்போலப் படகைச் செலுத்துகிறோம்.

“எவ்வளவு மனோரம்மியமான நேரம் இது?” என்று கூறிக் கொண்டே என் தோள்பட்டையில் தலையைச் சாய்க்கிறாள் அவள். கூந்தல் என் கன்னத்தில் உரசுகிறது.

“அன்பே இவை மறக்க முடியாத நிமிஷங்கள்..” நான் அவள் தலையைக் கோதிக் கொண்டே இவ்வாறு சொல்கிறேன்.

“இந்த நிமிஷங்கள் இப்படியே ஊழி ஊழியாக நிலைத்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?”- அவள்.

தோள்பட்டையில் ஏதோ உறுத்துகிற மாதிரி உணர்ந்து கண் விழித்தேன். விழித்தால். அடாடா அதுவரை நிகழ்ந்ததெல்லாம் வெறும் கனவு தூக்கத்தில் குழந்தை பாலு தன் காலைத் தூக்கி என் தோள்பட்டைமேல் போட்டிருந்தான்.ஆகா! எத்தகைய இன்பமயமான கனவு?

4. உண்மை

மறுநாள் மாலை பாலுவை அழைத்துக்கொண்டு ஏரிக்கரைக்குப் போனேன். சொல்லி வைத்தாற்போல் அந்த வெள்ளைக் கலையுடுத்த மோகினியாளும் தங்கையை அழைத்துக்கொண்டு வந்திருந்தாள். முதல் நாளிரவு கனவில் தோன்றி படாதபாடு படுத்திய அந்த அழகி இப்போது நான் நின்றுகொண்டிருந்த பக்கம் சாதாரணமாகத் திரும்பிப் பார்த்தாள். அவளோடிருந்த சிறுமி பாலுவைத் திரும்பிப் பார்த்தாள். பாலுவும் அவளைப் பார்த்தான். இருவருடைய கைகளிலும் ‘சாக்லேட்’ சுற்றிய வர்ணக் காகிதங்கள் இருந்தன. காகிதங்களைக் கப்பல்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். பெரியவர்களுக்குத்தான் பழகுவதற்குக் கூச்சம், சங்கோஜம் இவையெல்லாம் தடையாகக் குறுக்கிட்டுத் தொலைக்கின்றன. சிறுவர்கள் இதையெல்லாம் பார்ப்பதில்லை. ஒருவருக்கொருவர் அருகில் நெருங்கிக் கப்பல்களை உருவாக்கும் வேலையை ஆரம்பித்தனர்.

இதற்குள் படகுகள் வந்துவிட்டன! நான் படகைப் பேசி வாடகை கொடுத்துவிட்டுப் பாலுவை அழைத்துக்கொண்டு புறப்பட்டேன். அவள் மற்றோர் படகில் தங்கையை அழைத்துக் கொண்டு புறப்பட்டாள்.இரண்டு படகுகளும் அதிகம் விலகாமல் நெருக்கமாகவே சென்றுகொண்டிருந்தன.

“உன் கப்பலைத் தண்ணீரிலே விடு. என் கப்பலையும் விடுகிறேன்!” அந்தச் சிறுமி பாலுவைக் கூப்பிட்டாள்.

“சரி! இந்தா விட்டுவிட்டேன், நீயும் விடு” பாலு தன் காகிதக் கப்பலை என் படகுக்கு அருகில் தண்ணீரின் மேல் மிதக்கவிட்டான்.

“இதோ நானும் விட்டுவிட்டேன்!” அந்தப் பெண்ணும் தன் படகோரமாகக் காகிதக் கப்பலை மிதக்கவிட்டாள்.

இரண்டு கப்பல்களும் நேர் எதிரெதிர்த் திசையில் நகர்ந்தன.

குழந்தைகளின் இந்த வேடிக்கையைப் பார்த்து அவள் என்னை நோக்கி முறுவல் பூத்தாள். நானும் பதிலுக்குப் புன் முறுவல் செய்தேன்.வேறு பேச்சில்லை. குழந்தைகள் காகிதக் கப்பல் விளையாட்டில் நெருக்கமாக ஈடுபட்டிருந்ததால் அவளோ, நானோ படகுகளை வேறு திசையில் விலக்கிச் செல்ல முடியவில்லை. நாங்கள் மட்டும் ஜடங்களா? அருகருகே எவ்வளவு நேரம்தான் பேசாமல் வெறுமனே சிரித்துக் கொண்டு மட்டும் இருக்க முடியும்? அவள்தான் முதலில் பேச்சைத் தொடங்கினாள். “சார் பையன் உங்கள் தம்பியா? ரொம்ப ‘பிரிஸ்கா’ இருக்கிறானே?”

“இல்லை! என் பையன் - தாயில்லாக் குழந்தை!” மென்று விழுங்கிக்கொண்டே பதில் சொல்லிவிட்டு, அவள் முகத்தை உற்றுப் பார்த்தேன்.

அப்பப்பா! அந்த முகத்தில் எவ்வளவு ஏமாற்றம்? கண்கள் ஏன் அப்படி விரிகின்றன? துடுப்பைத் தள்ளிக் கொண்டிருந்த கை இயக்கமற்று நின்றுவிட்டதே! பாலுவுக்கு நான் தகப்பன் என்று அறிந்தபோது அவளுக்கு ஏன் இவ்வளவு ஆச்சரியமும் ஏமாற்றமும் உண்டாகின்றன?

“இந்தச் சிறுமி உங்கள் தங்கையோ?” என்று நான் கேட்டேன். சட்டென்று அவள் முகபாவம் மாறியது. கன்னங்கள் சிவந்தன.தலை கீழ் நோக்கியது. அவள் கூறிய பதில்:

“இல்லை என் பெண். தகப்பனில்லாக் குழந்தை” என் தலைமேல் வானம் இடிந்து விழுந்ததுபோல் இருந்தது எனக்கு. அதிர்ச்சியில் துடுப்பைத் தண்ணீருக்குள்ளே நழுவ விட்டுவிட்டேன். இரு படகுகளும் ஸ்தம்பித்து நின்றன. நின்ற வேகத்தில் என் படகடியிலிருந்து ஒரு அலை கிளம்பியது. அலைகளின் கூம்பில் பாலுவும் சிறுமியும் மிதக்கவிட்ட காகிதக் கப்பல்கள் மேலெழும்பி மிதந்தன. அலையும் அலையும் சந்தித்தபோது இரு அலைகளுமே வலுவிழந்து பின்னோக்கித் திரும்பின. காகிதக் கப்பல்கள் இரண்டும் மூழ்கிவிட்டன.

“ஐயோ! அப்பா, கப்பல் போச்சு! முழுகிப் போச்சு!” என் பையன் கூச்சல் போட்டான்.

“ஐயோ! அம்மா, கப்பல் உள்ளே முழுகிடிச்சு!” அந்தச் சிறுமி அவள் தாயை நோக்கிக் கூப்பாடு போட்டாள்.

திடீரென்று அவள் படகை வேறு திசையில் திருப்பினாள். நானும் நீரில் மிதந்த துடுப்பை எடுத்து என் படகை எதிர்த் திசையில் வேகமாகத் திருப்பினேன்.

இந்தத் திடீர்ப் பிரிவின் காரணம் புரியாமல் பாலு என்னையும், சிறுமி அவள் தாயையும் மிரள மிரளப் பார்த்தனர்.

படகுகள் எதிரெதிர்க் கோணத்தில் வெகுதூரம் சென்றுவிட்டன. இடையே பெரிய நீர்ப்பரப்பு.

என் இதயத்தை அமுக்கிக் கொண்டிருந்த நீண்ட பெருமூச்சு வெளியேறிக் காற்றோடு கலந்துவிட்டது.

‘ஏ! பாழாய்போன உண்மையே! காட்சியையும், அனுமானத்தையும், கனவுகளையும்விட நீ ஏன் இவ்வளவு கசப்பாக இருக்கிறாய்?’

‘எங்கும் என்றும் எந்த யுகத்திலும் நீ இப்படித்தான் மனித சமூகத்தின் கசப்பு மருந்தாக இருந்து, பெருமூச்சுக்களையும், நிராசைகளையும் ஏக்கங்களையும், ஏமாற்றங்களையும் உற்பத்தி செய்து வருகிறாய்!’

‘செய்! செய்! உன்னால் முடிந்தவரையில் செய்து கொண்டிரு!’

(கல்கி, 16.6.1957)