உள்ளடக்கத்துக்குச் செல்

நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/ஆலமரம்

விக்கிமூலம் இலிருந்து

39. ஆலமரம்

“தம்பீ பொன்னம்பலம், அதோ மேல் வரிசையில் அந்தக் கோடியில் பெரிய புராண ஏடு எப்படி இரண்டுங் கெட்டானாய் துருத்திக் கொண்டிருக்கிறது பார்! தப்பித் தவறிக் கீழே விழுந்தால் என்ன ஆவது? மடல்கள் முறிந்து ஏடு குட்டிச் சுவராய்ப் போய் விடும். அருமை தெரியாத பையனாயிருக்கிறாயே...? பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்து இந்தக் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிற ஐசுவரியமெல்லாம் இந்த ஏடுகள்தாம்...” கிழவரின் வார்த்தைகளைக் காதில் வாங்கிக் கொள்ளாதது போல் போய் விட்டான் பொன்னம்பலம்.

கிழவர் அம்பலவான தேசிகர் நோய்ப் படுக்கையில் கிடந்தவாறே அலுத்துக் கொண்டார். அவர் நோய்வாய்ப்பட்டுப் படுத்திருந்த அந்த விசாலமான அறையில் நாற்புறமும் மரச் சட்டங்கள் அடித்து ஏட்டுச் சுவடிகள் வரிசை வரிசையாய் மேலும் கீழுமாய்ச் சிறிதும், பெரிதுமாய் அடுக்கப்பட்டிருந்தன. ஓலைகள் அதிகமாகப் பழுப்படைந்து கறுத்துத் தெரியும் மிகப் பழைய சுவடிகள் ஒரு புறம் அருமையும், பெருமையுமாகக் கொண்டாடி விழிகளின் மங்கிய பார்வையால் அந்த ஏடுகளை ஏக்கத்தோடு பார்த்தார் அவர்.

“இப்போது எனக்கு மட்டும் எழுந்து நடமாடத் தெம்பிருந்தால், நானே அத்தனை ஏடுகளையும் துாசி தட்டிப் பிரித்து உதறி அடுக்கி வைத்து விடுவேன். வயதானவன் வார்த்தைக்கு யார் மதிப்பு வைக்கிறார்கள்? கால் நாழிகையாய் இந்தப் பெரிய புராண ஏட்டை நேரே எடுத்து வைக்கச் சொல்லிக் கூப்பாடு போடுகிறேன். ஏனென்று கேட்பதற்கு ஆள் இல்லை. யாரைச் சொல்லி என்ன? இனிமேல் எல்லாம் அப்படி அப்படித்தான்! வயசும், மூப்பும் வந்து விட்டால் மனிதனுடைய வார்த்தைக்கு மதிப்பு ஏது?” என்று படுக்கையில் புரண்டவாறே முணுமுணுத்துக் கொண்டார். அவருடைய முணுமுணுப்பை அரை குறையாகக் காதில் வாங்கிக் கொண்டே கிண்ணத்தில் கஞ்சியோடு உள்ளே நுழைந்தான் பொன்னம்பலம்.

“தள்ளாத வயதில் ஏன் இப்படி ஏடு ஏடு என்று உயிரை விடுகிறீர்கள்? தலையிலேயா கட்டிக் கொண்டு போகப் போகிறீர்கள்? எல்லாம் இருந்த இடத்திலேயே பத்திரமாக இருக்கும். பேசாமல் படுத்துக் கொண்டிருங்கள்” என முகத்தைச் சுளித்து அவரைக் கடிந்து கொண்டான், மகன். படுக்கையில் ஒருக்கொளித்தாற் போல எழுந்து அவன் ஆற்றிக் கொடுத்த கஞ்சியைக் குடித்து விட்டு, “உனக்குத் தெரியுமா அப்பா இதன் அருமை: பாடுபட்டுச் சேர்த்துப் பாதுகாத்தவன் நான். ஒரு ஏடு அசைந்தாலும் எனக்கு மனம் பதறுகிறது” என்றார்.

“உங்கள் ஏட்டையாரும் அள்ளி விழுங்கி விட மாட்டார்கள். உடம்பை அலட்டிக் கொள்ளாமல் படுத்துக் கொள்ளுங்கள்” என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு காலியான கஞ்சிக் கிண்ணத்தோடு வெளியேறினான், மகன்.

“நீ பேசுகிறதை எல்லாம் கேட்டுக் கொண்டு கிடக்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டேன் பார். பொறுத்துக் கொள்கிறேனப்பா எனக்கு ஏலாமை, போதாக் குறைக்கு நோக்காடு வேறு. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? என் தலைமறைந்த அப்புறம் இந்த ஏடெல்லாம் என்ன கதியாகப் போகின்றனவோ?’ என்று ஆற்றாமையோடு மெல்லக் கூறிக் கொண்டார் தேசிகர்.

இரண்டாண்டு காலமாக அவருடைய பழக்கமெல்லாம் அந்த அறையளவில் சுருங்கி ஒடுங்கிவிட்டது. எழுந்து நடமாட முடியாது. காலில் வாதம், நீரிழிவுத் தொல்லையும் அதிகம். கோதுமைக் கஞ்சி, கோதுமைச் சோறு, கேழ்வரகுக் கூழ், இவற்றைத் தவிர வேறெதையும் சாப்பிடக் கூடாதென்பது டாக்டருடைய உத்தரவு. எழுபத்தெட்டு வயதுக்குத் தள்ளாமை கொஞ்சமா? கண் பார்வை மங்கல் சாதாரணமாகவே கனத்த கண்ணாடி போட்டுக் கொண்டிருந்தவருக்குப் படுத்த படுக்கையான பின் கண்ணாடி இருந்தாலும் ஆள் அடையாளம் தெரியச் சிரமமாயிருந்தது. ஆனாலும் ஏடுகள் இருக்கிற இடங்களும் வரிசையும் பெயரும் அத்துபடி கண்ணை மூடிக்கொண்டு இன்ன இடத்தில் இன்ன ஏடு இருக்கிறது என்று கை நீட்டி எடுத்துவிட முடியும். அறையின் மேலக் கோடியில் எடுத்துக் காட்டிய காரைச் சுவரோடு தெரிகிறதே, அது நெற்களஞ்சியம். வீட்டின் வருடாந்திரத் தேவைக்கு அறுவடைக் காலத்தில் நெல் நிரப்பவேண்டியது. நெற்களஞ்சியமும், ஏடுகள் நிறைந்த தமிழ்க் களஞ்சியமும் அருகருகே இருந்தன. நெற்களஞ்சியம் வற்றிய வருடங்களும் உண்டு.ஆனால், அந்தக் குடும்பத்தில் தமிழ்க் களஞ்சியம் வற்றியதில்லை. அவருடைய தலைமுறையில் அவர் காலமுள்ளவரை வற்றாது அது!

தலைமுறை தலைமுறையாகத் தமிழையும் புலமையையும் வளர்த்து வாழ்ந்த மரபு அவருடையது. தேசிகரின் தந்தை வீரபத்திர தேசிகர் சதாவதானி. தாத்தா தொல்காப்பியமும், சங்க நூல்களும் எழுத்தெண்ணிப் படித்தவர். ஒரு பெரிய சமஸ்தானத்தில் பேரும் புகழும் பெற்று அவைப் புலவராயிருந்தார் அவர். வீட்டிலுள்ள ஏடுகளெல்லாம் முப்பாட்டனார் காலத்திலிருந்து கைப்பழக்கத்திலிருந்து வருபவை. அந்தக் குடும்பத்தின் செல்வமும், நிலங்கரைகளும் எத்தனையோ வகைகளில் குறைந்தும், நலிந்தும் ஏழ்மையடைந்ததுண்டு. ஏடுகள் மட்டும் அன்று முதல் இன்று வரை அழியாச் சொத்து. ஏடுகளைப் பேணிப் போற்றிக் காப்பாற்றுவதற்குத் தான் எத்தனை பக்குவங்கள்? எழுத்து மங்கிவிடாமலிருக்கப் பூவரசம் பட்டையும், கரியும், மஞ்சளும் சேர்த்து அரைத்துப் பூச வேண்டும். ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு பூச்சி கரையான் அரித்து மொத்தமாகக் கட்டை போலாகி விடாமலிருக்க அடிக்கடி பிரித்து உதறி மண்ணெண்ணையில் அலசிக் கட்டிவைக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் சரஸ்வதி பூஜையின்போது அந்த வீட்டில் ஏடுகளுக்கு இத்தனை மரியாதையும் உண்டு. ஏதோ பெரிய திருவிழாக் கொண்டாட்டம்போல் அந்த வீட்டில் சரஸ்வதி பூஜை நடத்துவது வழக்கம். சங்க நூல்களிலிருந்து பிற்காலப் பிரபந்தங்கள் வரை எல்லா ஏட்டுச் சுவடிகளும் அங்கு இருந்தன. அச்சுப் புத்தகங்கள் வருமுன் தமிழை முறையாகப் படித்த எத்தனையோ பழம் புலவர்கள் அந்தச் சுவடிகளை வைத்துக் கொண்டுதான் படித்தார்கள்; மனனம் செய்தார்கள். அவற்றை மூலமாகக் கொண்டுதான் அச்சாகி வெளி வந்தன. புத்தகங்கள். அம்பலவான தேசிகர் காலத்தில் தான் முடிந்த ஏடுகளை அவரே ஒப்பு நோக்கிப் பதிப்பித்தார்.

தமக்குப் பிறகு ஒரே புதல்வன் பொன்னம்பலத்தைத் தான்நம்பியிருந்தார் தேசிகர். ஆனால் பொன்னம்பலத்தின் படிப்பு ஆரம்பத்திலிருந்தே வேறு வழியில் போய்விட்டது. ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் மெட்ரிகுலேஷன் பாஸ் செய்து விட்டுத் தாலுக்காக் கச்சேரியில் குமாஸ்தாவாகப் போய் உட்கார்ந்து விட்டான். முழுதும் தமிழையே நம்பி வாழ்ந்த குடும்பத்தில் ஒரு புதியதலைமுறைக்கு அடிகோலிவிட்டான், பொன்னம்பலம். அது என்ன காரணமோ தெரியவில்லை. அவனுக்குத் தமிழில் ஒரு பிடித்தம் விழாமலே கழிந்துவிட்டது. சிறுவயதில் தகப்பனார் வற்புறுத்திக் கற்பித்த நிகண்டு, தூண்டிகை - போன்ற சிறிதளவு தமிழறிவையும் கூட ஒட்டுதலில்லாத காரணத்தால் மறந்துவிட்டான் அவன். பொன்னம்பலத்திற்கு ஒரே மகன். பத்துப் பன்னிரண்டு வயது இருக்கும். அவனையும் தாத்தாவின் வழியில் நெருங்க விடாமல் பட்டணத்தில் அவனுடைய மாமனோடு தங்கிப் படிக்க ஏற்பாடு செய்து விட்டான். பேரனுக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்து ஆளாக்கலாம் என்ற நம்பிக்கையும் தேசிகருக்கு இல்லை.

நடமாட்டம் ஒய்ந்து படுக்கையில் படுத்தவாறு அந்தப் பரம்பரை வளர்ந்து புகழ் பெற்றதையும் - இனி வாழப் போகிற விதத்தையும் நினைத்தபோது தேசிகருக்கு ஏதோ ஒரு உணர்வு நெஞ்சை அடைத்தது. இணையற்றதொரு ஞான ஒளி அந்தக் குடும்பத்திலிருந்து தம் காலத்தோடு அழிந்துவிடுமோ என்ற ஏக்கம் அவருக்கு மனச் சுமையாகவே இருந்தது. தமிழ்க் குடும்பம் என்ற வழக்குப் போய் உத்தியோகம் பார்த்துக் கை கட்டி வயிறு வளர்க்கும் சாதாரண மத்தியதரக் குடும்பங்களில் ஒன்று போல அது ஆகிக் கொண்டு வருகிறதே என்பதை நினைத்தபோது இழக்கக் கூடாத ஏதோ ஒரு பெருமையை வேகமாக இழப்பது போலிருந்தது அவருக்கு.

“நம்புவதற்கும் பெருமையாக நினைப்பதற்கும் என்ன இருக்கிறது இனிமேல்? எல்லாப்பெருமையும் ஒவ்வொன்றாக இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன.நான் படுத்த படுக்கையானதிலிருந்து சரஸ்வதி பூஜை கூடச் சரியாக நடக்கவில்லை. இந்த ஏடுகளில் கைபட்டு வருடம் இரண்டுக்கு மேல் இருக்கும்! பேணுவோர் இல்லாவிட்டால் எல்லாம் அவ்வளவுதான்.காலம்தான் மாறிக்கொண்டேவருகிறதே. இதையெல்லாம் யார் கவனிக்கிறார்கள் இப்போது? எல்லாம் அச்சில் வந்துவிட்டது.மூல நூலை மனனம் செய்யாமல் நுனிப்புல் மேய்ந்து விட்டு அச்சு நாகரிகம் அளித்த படிப்புச் சோம்பலை வளர்க்க வேண்டியதுதான் இனிமேல்.படிப்பு நூல்களெல்லாம் கிடைப்பதற்கு அருமையாக ஏடுகளாய் இருந்தபோது படிப்பில் பக்தி சிரத்தை இருந்தது. எனக்குத் தெரிந்து இதே அறையில் தாத்தாவுக்கு முன்பு மேல்வேட்டியை அரையில் கட்டிக் கொண்டு எத்தனை ஜமீன்தார்கள் தமிழ்ப் படிக்க வந்து போயிருக்கிறார்கள். அப்பா எத்தனை பெரிய அவைகளில் சதாவதானம் செய்து வெற்றிக்கொடி நாட்டினார்! கால்மேல் கால் போட்டுக் கொண்டு வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தாரானால், தெருவில் நடந்து போகிறவன் காலில் செருப்போடு நடந்துபோக மாட்டான். அப்படி ஒரு பெருமை! அப்படி ஒரு செல்வாக்கு அறிவின் கெளரவத்தால் ஊரையே பெருமைப்படுத்தி வந்த குடும்பம் இப்படி ஆகிவிட்டதே! எழுபத்தைந்து ரூபாய் காசுக்காகத் தாலுக்காக் கச்சேரிக்கு நடையாய் நடக்கிறான் இவன்.

என்ன பெருமையோ? என்ன கெளரவமோ? அப்பா வாசற்படிக்குக் கீழே தெருவிலிறங்கி நடந்தறிய மாட்டார். எங்கே போக வேண்டுமானாலும் ஜமீன்தார் அனுப்பிய பல்லக்கும், ஆட்களும், வாசலில் காத்துக் கொண்டிருப்பார்கள். ஒரு வார்த்தை சொல்வி அனுப்பினால் படேபடே ஜமீன்தார்கள் அவரைப் பார்த்துவிட்டுப்போக இங்கே தேடிக் கொண்டு வருவார்கள்.இந்தக் காலத்தில் அங்கே தான் என்ன வாழ்கிறதாம்? ஜமீன் விருப்பு எல்லாம் ஒடுங்கி, இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. எல்லாம் சர்க்கார் பிடுங்கிக் கொண்டு விட்டார்கள். என் காலத்திலேயே ஜமீன் ஆதரவு குன்றிப் புத்தகம் அச்சுப் போட்டு விற்றுப் பிழைக்க வேண்டிய நிலை எனக்கு வந்து விட்டதே இந்த நோக்காடுகளெல்லாம் வந்து ஆளைப் படுக்கையில் கிடத்தியிருக்காவிட்டால் இன்னும் கொஞ்சநாளைக்கு ஏட்டைப் புரட்டி ஏதாவது முடிந்த மட்டில் செய்து கொண்டிருக்கலாம். பேரப்பிள்ளையாண்டானுக்கு எங்கே தமிழைச்சொல்லிக் கொடுத்துப் பழைய பஞ்சாங்கமாக்கிவிடப் போகிறேனோ என்று பட்டணத்து மாமன் வீட்டில் இங்கிலீஷ் படிப்புக்கு அனுப்பிவிட்டான். ஏனென்று கேட்க யார் இருக்கிறார் இங்கே?'அந்த ஏட்டை நேரே எடுத்துவை' என்று மூன்று நாளாக முட்டிக் கொள்கிறேன். கவனிப்பாரில்லையே? கையாலாகாமையும், மூப்பும் வந்துவிட்டால் வாயைத் திறக்கக்கூடாது. திறந்தால் மரியாதை போய்விடும். இருக்கிறவரை கிடைக்கிறதைச் சாப்பிட்டுவிட்டு மானமாக இருந்துவிட்டுப் போய்விட வேண்டும்.

தேசிகர் மார்பு மேலெழும்பித் தணிய பெருமூச்சு விட்டார். கம்பளிப்பூச்சி பட்ட இடத்தில் அரிக்கிற மாதிரி மனத்தில் வேதனை அரித்தது. ஆலமரம்போல் வரி வழியாக விழுதுான்றி வளர்ந்த இந்த மரபு அழிய வேண்டியது தானா? எத்தனை இலக்கண - நுணுக்கங்கள்? எல்லாவற்றையும் எண்ணோடு சாகவிட வேண்டியதுதானா? இந்த ஞான வித்துக்களை விதைத்துவிட்டுப் போக நிலமில்லையா? என்று ஏங்கினார். கப்பும் கவடுமாகக் கிளைவிட்டு ஊன்றிப் படர்ந்த பெரிய ஆலமரமொன்று ஆணிவேரற்று முறிந்து விழுவது போல் மானசீகமாக ஒரு தோற்றம் தேசிகருக்கு உண்டாயிற்று. அதைக் கற்பனை செய்து பார்க்கும்போதே மனதுக்குக் கஷ்டமாக இருந்தது அவருக்கு. எங்கும் கிடைக்காத அரிய மருந்துச் செடியைப் பிடுங்கி எறிந்து அழிப்பதுபோல் வேதனை தந்தது. அவருடைய தந்தை வீரபத்திர தேசிகர் மரணப் படுக்கையிலிருந்து கொண்டே அவரிடம் கடைசியாகக் கூறிவிட்டுப் போன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன."அடே: அம்பலவானா இந்தக் குடும்பத்துக்கு நான் நிலமும், நீச்சும், ரொக்கப்பணமும் சேர்த்துவைத்து விட்டுப் போகவில்லை. இந்த ஏடுகளைச் சேர்த்து வைத்துவிட்டுப் போகிறேன். உன் தாத்தா எனக்குச் சேர்த்து வைத்தது இதுதான். இதையே உனக்கு நான் வைத்துப் போகிறேன். இந்தக் குடும்பத்தின் ஞானம் மணக்கும் பெரியவர்களின் கைகளெல்லாம் தொட்டுப் பழகிய ஏடுகள் அப்பா இவை இந்த வீட்டின் அழியாத மங்கலப் பொருள்கள் இவை. இவற்றைக் காப்பாற்று. இவற்றால் உன்னைக் காப்பாற்றிக் கொள்..” என்று அம்பலவான தேசிகரின் தந்தை சிவபதமடையுமுன் அவரிடம் கூறிவிட்டுப் போனார். தாம் சிவபதமடையுமுன் 'இதே வார்த்தைகளை யாரிடம் கூறமுடியும்?' என்று எண்ணியபோது தேசிகருக்குக் கண்களில் நீர் கசிந்தது.தாலுக்காக் கச்சேரியில் அடிமை வேலை பார்க்கும் மகனிடம் கூறினால் அதைப் பொருட்படுத்திக் கேட்கவே மாட்டானே!

காலால் அறைக் கதவை உதைத்துச் சாத்திவிட்டுத் தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு ஒசைப்படாமல் மெல்ல குமுறியழுதார் தேசிகர். உடல் ஒய்ந்து, படுக்கையில் கிடந்து அழுவதுதான் ஆறுதலாக இருந்தது அப்போது. மனிதனுடைய ஆற்றாமைக்கு அழுகைதான் எல்லை. வேதனைகளை மன விளிம்பில் ஒன்று கட்டிக் கொண்டு மெளனமாக யாருக்கும் தெரியாமல் அழுது கரைவதில் ஒரு ஆத்மிகமான சுகம் இருந்தது.ஒவ்வொரு மனிதனும் எல்லையற்ற நாள் வெள்ளமானதன் வாழ்நாளில் ஒருநாள் ஒரு விநாடியாவது இப்படி அழ வேண்டிய அவசியம் உண்டு.

கதவு 'கிறீச்'சிட்டது.அறை வாசலில் நின்றுகொண்டு உட்புறமாகக் கதவை யாரோ மெல்லத் தள்ளினார்கள்.தேசிகர் கண்ணைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து படுத்தார்.

“யாரது?”

“நான்தான் தாத்தா, சரவணன். உள்ளே வரலாமா?”

‘'நீ எப்போதடா பட்டணத்திலிருந்து வந்தாய்? நீ வரப்போவதாக உங்கப்பா என்னிடம் சொல்லவேயில்லையே? வா. இப்படி உள்ளே வந்து உட்கார்ந்து கொள்.” என்று வியப்புத் தொனிக்கக் கூறிவிட்டுப் பேரப்பிள்ளையைப் பார்க்கும் ஆவலோடு கண்ணாடியைத் தேடி எடுத்து அணிந்து கொண்டார்.

"கோடை விடுமுறைக்காக இரண்டு மாதம் லீவு தாத்தா. பட்டணத்திலேயே இருந்து அலுத்துப் போயிற்று. மாமாவை ரயிலேற்றிவிடச் சொல்லிப் புறப்பட்டு வந்தேன். நான் வரப் போவதாக அப்பாவுக்கே முன் தகவல் தெரியாது.” ஒரு சீப்பு மலைவாழைப் பழத்தையும் இரண்டு சாத்துக்குடியையும் தாத்தாவுக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு அருகில் உட்கார்ந்தான் பேரக் குழந்தை. பையன் பார்க்க அழகாக இருந்தான். புறங்கிப் பூப்போல் சிவப்பு, களையான முகம், அந்தக் குடும்பத்து முத்திரையான கூர் மூக்கு சுருள் சுருளான கிராப்புத் தலை, இடுப்பில் நிஜாரும், உடம்பில் அரைக்கைச் சட்டையும் இலங்க அந்தக் கோலத்தில் பையன் பார்க்க, நன்றாக இருந்தான். நகர்ப் புறத்தில் வளர்ந்த மினுமினுப்பும் தெளிவும் முகத்தில் தெரிந்தன.

"இப்போது எந்த வகுப்புப் படிக்கிறாயடா குழந்தை”

“ஃபோர்த் பாரம் படிக்கிறேன் தாத்தா.”

"நன்றாகப் படிக்கிறாயோ?”

சிறுவன் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. வெட்கத்தோடு தலையைக் குனிந்து கொண்டான்.

"நீ படிக்கிறாயே இப்போது இந்தப் படிப்பிலே தமிழெல்லாங் கூட உண்டா குழந்தை?"

“நிறைய உண்டு தாத்தா கம்பராமயணத்திலே குகப்படலம். இளையான்குடிமாற நாயனார் புராணம் - குறள், நாலடியார் எல்லாம் சொல்லிக் கொடுக்கிறார். தாத்தா.

"அப்படியா? எங்கே? குகப் படலத்திலே ஒரு பாட்டுச் சொல்லு; பார்க்கலாம்.”

"அல்லையாண்டமைந்த மேனி அழகனும் அவளும்." பையன் பாடி முடித்தான். அவனுடைய வாக்கு கணிரென்று சுத்தமாக ஒலிப் பிழையின்றி இருந்தது.

“ஏண்டா குழந்தை? இப்படியே இராகத்தோடு சொல்லிக் கொடுக்கிறார்களா, உனக்கு?"

“இல்லை தாத்தா பள்ளிக் கூடத்தில் பாட்டு மட்டும் சும்மா பதம் பிரித்துச் சொல்லிக் கொடுப்பாங்க பட்டணத்திலே மாமா குடியிருக்கிற தெருவிலே கவிஞர் நினைவு மன்றம்’னு ஒரு சங்கம் இருக்கு. அதிலே அடிக்கடி பெரிய பெரிய புலவர்களெல்லாம் வந்து பிரசங்கம் செய்வாங்க. அங்கே ஒருத்தர் தொடர்ந்து கம்பராமாயணம் பிரசங்கம் செய்தார். அவர் பாட்டெல்லாம் இப்படித்தான் ராகத்தோடுபாடுவார்.

“நீ அதற்கெல்லாம் போய்க் கேட்பாயாடா குழந்தை?.”

"கேட்பேனாவது? பள்ளிக்கூடம் விட்டால் என்னை அந்தச் சங்கத்திலே தான் பார்க்கலாம் தாத்தா. பட்டணத்திலே தமிழ்ப் பிரசங்கம் எங்கே நடந்தாலும் போய் கேட்டிட்டு வந்திடுவேன்.”

“பள்ளிக் கூடத்திலே இங்கிலீஷ் படிக்கிற பிள்ளைக்கு இதெல்லாம் கேட்டு என்னடா பிரயோசனம்?”

“என்னன்னு சொல்லத் தெரியலை தாத்தா.இதெல்லாம் கேட்கணும், படிக்கனும், சிந்திக்கணும்னு எனக்கு ஒரே ஆசையாயிருக்கு. வெயிலிலே அலையறப்போ தாகமாயிருக்கிறாப் போல இதுலே ஒரே தாகமாயிருக்குத் தாத்தா போன மாசம் மாமா 'சினிமாவுக்குப் போ'ன்னு கொடுத்த காசையெல்லாம் சேர்த்துக் கொண்டுபோய் மூர்மார்க்கெட்டுலே பழைய புத்தகக் கடையிலே ஒரு நன்னூல் புத்தகம் வாங்கியிருக்கேன்.இன்னும் மாமா அப்பப்போகொடுக்கிற காசெல்லாம் சேர்த்திட்டு வரேன்.அடுத்தாப்போல ஒரு திருக்குறள் பரிமேலழகருரைப் புத்தகம் வாங்கிடனும்னு ஆசை."

தேசிகருக்கு மெய் சிலிர்த்தது. நெஞ்சில் யாரோ கூடை கூடையாக ரோஜாப் பூவைக் கொட்டின மாதிரி இருந்தது. கண்களும், முகமும், மலர்ந்தன. உள்ளேயும் ஏதோ மலர்ந்து சிலிர்த்தது.

"குழந்தை! இப்படிப் பக்கத்திலே வாடாப்பா. உன் முகத்தைப் பார்க்கிறேன். என்று நாத் தழுதழுக்க உணர்ச்சிவசப்பட்ட குரலில் கூவி அழைத்தார் தேசிகர். பையன் அருகில் வந்தான். அவன் முகத்தைப் பார்த்தார். அங்கே ஆர்வமும், துடிப்பும் ஒளிர்ந்தன."ராசா! நீ தங்கம்டா..” என்று அப்படியே அவனைத் தழுவிக் கொண்டார். வெளியே அறை வாசலில் பொன்னம்பலத்தின் குரல் கேட்டது.

“என்னடா வந்ததும் வராததுமாகத் தாத்தாவிடம் போய் அரட்டை? லீவில் கழுதை மேய்க்கலாமென்று இந்தப் பட்டிக்காட்டுக் குட்டிச் சுவரைத் தேடி வந்தாயிற்று!" உருப்படியாக ஏதாவது டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூடில் சேர்த்து லீவை அங்கேயே கழிக்க ஏற்பாடு செய் என்று இன்றைக்குக் காலையில் தான் மாமாவுக்குக் கடிதம் எழுதினேன். நீ என்னடா என்றால் சொல்லாமல், கொள்ளாமல் இங்கே வந்து குதித்திருக்கிறாய்! போ, போய் ஏதாவது இங்கிலீஷ் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு படி வீண் அரட்டையடிக்காதே.” என்று இரைந்தான் பொன்னம்பலம்.

“தாத்தா! அப்பாகூப்பாடு போடறார்.போய்விட்டு அவர் வெளியே போனப்புறம் மறுபடியும் வரேன். நீங்க இந்தப் பழத்தை எடுத்துக்குங்க..” என்று மெல்லச் சொல்லிவிட்டு வெளியே நழுவினான் பேரப்பிள்ளையாண்டான்.

அன்றைக்கு மத்தியானம் தேசிகருக்கு நிம்மதியாகத் துக்கம் வந்தது. தூக்கம் கலைந்து அவர் கண் விழித்தபோது அறைக்குள் ஏதோ ஒசை கேட்டது. கண்ணாடியைப் போட்டுக் கொண்டு நிமிர்ந்து உற்றுப் பார்த்தார்.

பேரப் பிள்ளையாண்டான் சரவணன், ஏடுகளைத் துரசிதட்டிப் பிரித்து உதறி அடுக்கிக் கொண்டிருந்தான்.

“ஏண்டா குழந்தை, இந்தக் காரியமெல்லாம் உன்னை யாருடா செய்யச் சொன்னது?”

“யாரு தாத்தா சொல்லனும்? அப்பா வெளியிலே போனப்புறம் இங்கே வந்தேன். நீங்கநல்லா அசந்து தூங்கிக்கிட்டிருந்தீங்க.இதெல்லாம் பக்கத்திலே வந்து பார்த்தேன். ஒரே தூசியும், கீசியுமாத்தாறுமாறாகக் கிடந்தது. எடுத்துச் சரிசெய்து அடுக்கலாம்னு ஆரம்பிச்சேன்.”

அந்தப் பதிலைக் கேட்டு அயர்ந்து போனார் தேசிகர். பேச நாவெழாத பேரானந்தத் திருப்தியில் சிக்குண்டு அப்படியே பேரனை வைத்த கண் வாங்காமல் பார்த்தார் அவர்.இத்தனை காலமாக மனத்தில் சுமந்து கொண்டிருந்த ஆற்றாமையும், ஏக்கமும் மறைந்து, புதிதாக ஏதோ ஒரு எழுச்சி மனத்தில் ஏற்படுவது போலிருந்தது.

அப்போது பேரன் அழைத்தான்.

“தாத்தாவ்.” அழைப்பில் எதையோ வேண்டும் குழைவு தயங்கியது.

"என்னடா குழந்தை?"

“எனக்கு நீங்க ஒரு உதவி செய்யனும்.”

“என்ன உதவி?”

"அப்பாவுக்குப் பயந்து மாட்டேங்கப்படாது...?”

"இல்லைடா செய்யறேன். என்னன்னு சொல்லு?”

"தினம் அப்பா வெளியிலே போனதும் நான் உங்க 'ரூமு’க்கு வந்திட்றேன். நீங்க எனக்கு நிறையத் தமிழ்ப்பாட்டெல்லாம் சொல்லித் தரணும். அப்பாவுக்குத் தெரியப்படாது ."

“தெரிஞ்சா என்னவாம்?”

“தெரியப்படாதுன்னாத் தெரியப்படாது. அவ்வளவு தான். தெரிஞ்சாக் கோவிச்சுக்குவாரு அந்தப் பண்டாரப் பாட்டெல்லாம் வேண்டாம்டாம்பாரு.”

“எப்பவாவது சொன்னானா அப்படி?”

“எப்பவாவதென்ன? நேத்திக்கிக் கூடச் சொன்னாரு, "சும்மாச் சும்மாத் தாத்தா ரூம்லே என்னடா வேலை? அந்தப் பண்டாரப் பாட்டெல்லாம் படிக்கவா உன்னை இங்கிலீஷ் பள்ளிக் கூடத்துல சேர்த்திருக்கு? போய் ரென் அன் மார்ட்டின்’ 'கிராமரை' எடுத்துப்படிடா கழுதை, அப்படின்னு நேத்துக் கூப்பாடு போட்டாரு”

தேசிகர் மெல்லச் சிரித்துக் கொண்டார். "ஏண்டா குழந்தை; அப்பா சொல்றபடி அதைத்தான் படியேன்! இந்தப்பாட்டெல்லாம் உனக்குத் தெரிஞ்சு என்ன ஆகணும்?"

"படிக்கணும்னு ஆசையாயிருக்கிறது தாத்தா..." அவனுக்கு அதற்குமேல் அந்த ஆசையை - அந்தத் துடிப்பை அந்தத் தாகத்தை எப்படி வெளியிடுவதென்று தெரியவில்லை. குடும்பத்தின் பரம்பரையான தமிழ்ச் செல்வம் அழிந்துவிடக் கூடாதென்று முன்னோர்களில் யாரோ ஒருவர் மறுபிறவி எடுத்து வந்து பேரப்பிள்ளையாண்டான் சரவணனாக முன்னால் நின்று கொண்டு கொஞ்சுவதுபோல தேசிகருக்கு ஒரு பிரமை ஏற்பட்டது. சிறுவன் சொல்லிலும், பார்வையிலும், முகத்திலும் ஏக்கம் திகழக் கிழவரைப் பார்த்தான். 'பருகுவனன்ன ஆர்வத்தனாகி' என்று நன்னூல் சொல்லியிருந்ததே, அந்த ஆர்வத்தை அந்த முகத்தில் கண்டார் தேசிகர். தலைமுறை தலைமுறையாக, பிறவி பிறவியாகக் காத்துக் கிடந்து கெஞ்சுவது போல் ஒரு தாகம் அந்தப் பன்னிரண்டு வயதுப் பிள்ளையின் கண்களில் நிலவிற்று.

“தாத்தா. சொல்லித் தர மாட்டீங்களா?”

“கட்டாயம் சொல்லித் தருகிறேனடா குழந்தை! உனக்குச் சொல்லித் தராமல் வேறு யாருக்கடா சொல்லித் தரப் போகிறேன்? எழுபத்திரண்டு வருடங்களாக இப்படி ஒரு தாகத்தைத் தான் இந்தப் பரம்பரையில் தேடிக் கொண்டிருந்தேனடா குழந்தை! இப்படி என் அருகில் வா. தேசிகருக்கு மெய் மயிர் சிலிர்த்து விழிகளில் ஆனந்தக் கண்ணிர் அரும்பியது.

பையன் அருகில் வந்தான். தாமரைப் பூப்போல் சிவந்த அந்தச் சிறுவனின் கைகளை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டார் அவர்.

“குழந்தை! முதலில் நிகண்டு மனப்பாடம் செய்யவேண்டும். கீழ்வரிசையில் எட்டாவது ஏடு சூடாமணி நிகண்டு - அதை எடு, இன்று புதன்கிழமை, பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது. இப்போதே ஆரம்பித்து விடலாம்.” பையன் நிகண்டை எடுப்பதற்காக எழுந்தான்.

“ஆலமரம் அழியாது! அழியவில்லை. புதிது புதிதாக விழுதுகளை ஊன்றிப் பரம்பரையாக வளரும். இங்கேயும் இந்தப் பரம்பரை அழியாது. ஒரு புதிய விழுது ஊன்றிவிட்டது.” என்று வாய்க்குள் முணுமுணுத்தார் கிழவர்.

(நாடக விழா மலர், பம்பாய்த் தமிழ்ச் சங்கம், 1959)