உள்ளடக்கத்துக்குச் செல்

நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/வேனில் மலர்கள்

விக்கிமூலம் இலிருந்து

55. வேனில் மலர்கள்
(மலர்க் காட்சி)

திருமணத்துக்குப் பின்பு உதவியாசிரியர் சந்திரசேகரனை அப்போதுதான் கவி கமலக்கண்ணன் முதல் தடவையாகச் சந்திக்கிறார்.

“உன் திருமணத்துக்கு வர முடியவில்லை, அப்பா; என்னை மன்னித்து விடு. வாழ்த்து அனுப்பியிருந்தேனே; வந்ததோ?” என்று விசாரித்தார் கமலக் கண்ணன்.

“அதனால் பரவாயில்லை, ஸார், உங்கள் அற்புதமான வாழ்த்துப் பாடல் கிடைத்தது. இப்போது நான் வந்த காரியம்....” என்று பேச்சை இழுத்து நிறுத்தினார் உதவியாசிரியர்.

கவி கமலக்கண்ணன் புன்னகை பூத்தார்.

“புரிகிறது சந்துரு. ஆண்டு மலருக்கு ஏதோ கவிதை வேண்டுமென்று எழுதியிருந்தாயே; அதைக் கேட்பதற்குத்தானே வந்திருக்கிறாய். நீ என்னப்பா இன்னும் பழைய மாதிரியே ஆண்டு மலர், சிறப்பு மலர் என்று ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறாய்? புதிதாக இப்போதுதான் கல்யாணமாகியிருக்கிறது. வீட்டில் தனியாக விட்டு விட்டு இப்படி அலைகிறாயே அப்பனே! எங்கேயாவது ஒரு மாதம் ‘ஹனிமூன்’ போய் வரக் கூடாதோ?”

“எங்கே ஸார் நமக்கு அதெல்லாம் ஒழிகிறது? மலரை நன்றாகக் கொண்டுவந்தாலே பெரிய நிம்மதிதான். இந்தத் தடவை மலருக்கு எப்படியும் உங்கள் கவிதை கிடைத்தாக வேண்டும்.”

கவிஞர் பெருமூச்சு விட்டார். சிறிதுநேரம் அமைதியாக மோட்டு வளையை வெறித்துப் பார்த்தபடி இருந்தார். உதவியாசிரியருக்கு ஒரு பதிலும் கிடைக்கவில்லை.

கவி கமலக்கண்ணனுக்கு வயசு ஐம்பத்திரண்டுக்கு மேலிருக்கும். அவர் நைட்டிகப் பிரம்மச்சாரி. நீல அங்கியும் தாடி வளர்த்த முகமுமாகத் தாகூர் மறுபிறவி எடுத்து வந்தது போல் காட்சி அளித்தார். நாற்பது வயசுக்குள் உலக நாடுகளெல்லாம் சுற்றிப் புகழ் பரப்பி வந்திருந்தார்.

கமலக்கண்ணன் கவிஞர் மட்டுமல்ல; தத்துவ ஞானி; நல்ல அழகர், கம்பீரமான தோற்றம் உடையவர்.

“சந்துரு, இந்தக் கோடையில் உதகமண்டலம் போய் விட்டு வந்த பின் இரண்டு மூன்று மாதமாக நான் எழுதுகோலையே தொடவில்லை. உதகமண்டலத்தில் இருக்கும் போது கடைசியாக நான் எழுதிய கவிதையை உனக்குத் தரலாம். ஆனால், அது அறைகுறையாக இருக்கிறது. மீண்டும் அதை நிறைவாக்க என்னால் இயலாதே!

“எப்படியாவது அதை நிறைவு செய்து முடித்துக் கொடுங்களேன்” என்று சந்துருவின் வேண்டுகோளுக்குக் கவியிடமிருந்து பதில் இல்லை.

கவி கமலக்கண்ணன் விழிகளிலும் முகத்திலும் ஏக்கம் தேங்கி நிற்க மோட்டு வளையை மீண்டும் பார்த்தார். அங்கில்லாததும், எங்கிருப்பதென்று தெரியாததும், ஆனால் எங்கோ நிச்சயமாக இருப்பதுமான ஏதோ ஒன்றைத் தேடித் துழாவுகிற பார்வையாக இருந்தது அது. அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தொடர்ந்து அடுத்தடுத்து நெட்டுயிர்த்தார் கவிஞர். உதவியாசிரியர் மறுபடியும் தூண்டிக் கேட்கலானார்: “ஒரு வாரம், பத்து நாள் ஆனாலும் பரவாயில்லை. நீங்கள் அந்தக் கவிதையை முடித்துக் கொடுப்பதாக இருந்தால் நான் காத்திருந்து வாங்கிக் கொள்கிறேன்.”

“அந்தக் கவிதையை முடிக்க இப்போது என்னால் முடியுமா என்று எனக்கே சந்தேகமாக இருக்கிறது சந்துரு. அந்தக் கவிதைக்கு முதல் அளித்த சக்தியை - தூண்டுதல் தந்த சூழ்நிலையை - நான் மறுபடியும் அடைந்தால் ஒருவேளை என்னால் அதை முடிக்க இயலும். சில அழகான கண்கள், சில எழில் வாய்ந்த முகங்கள், சில அற்புதமான புன்னகைகள், சில உள்ளம் உருக்கும் காட்சிகள் இவற்றைப் பார்த்துத் தூண்டுதல் பிறக்கும்போதுதான் என் மனத்தில் கவிதைக்குரிய சொற்கள் விளைகின்றன. அல்லாத நேரங்களில் என் மனநிலம் தரிசாக வறண்டுவிடுகிறது.”

நாடெல்லாம் தெய்வமெனக் கொண்டாடும் கவி, சிறு குழந்தைபோல் வெள்ளைத்தனமாகத் தம் சொந்த ஆற்றாமையை வெளியிடுவதைக் கேட்டு மனம் உருகினார் உதவியாசிரியர். கவிஞரின் அழகிய கண்களில் எதையோ - கண், வாய், சிரிப்பு, மூக்கு முகம் என்று ஒவ்வொன்றாக நினைத்து ஒன்று சேர்த்து யாரையோ - நினைவுபடுத்திக் கொள்ளத் தவிக்கும் துடிப்புத் தெரிந்தது. ஏக்கம் சுழன்றது."என்னால் முடியாது சந்துரு நினைப்புக்குள் அநுமானம் பண்ணிக் கொணர முடியாத அழகு அது. பார்க்கும் போதுதான் என் மனம் துள்ளியது. நினைக்கும்போது வரமாட்டேனென்கிறது.”

கவிஞரின் கண்களில் நீர் மல்கிற்று. நாத் தழுதழுத்தது.

"சந்துரு!”

“உங்கள் மனம் ஏதோ கஷ்டப்படுகிறது.”

"அப்படி ஒன்றும் இல்லை, சந்துரு. ஆனால், உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன். கூசாமல் பதில் செல்வாயா?”

"என்ன? கேளுங்களேன்."

“இந்த ஐம்பத்திரண்டு வயசுக் காலத்தில் எப்போதாவது ஒரு பெண்ணைப் பார்த்ததும் மனம் பித்தாகிக் கல்யாணம் பண்ணிக்கொண்டுவிட வேண்டுமென்ற துடிப்பு எனக்கு உண்டாகியிருக்குமா? உண்டாயிற்று என்றால் நம்புவார்களா?” "நீங்கள் கல்யாணம் பண்ணிக் கொள்ளக்கூடாது என்று யாரும் சட்டம் போடவில்லையே! நீங்களாகத் தானே ஏதோ கொள்கை வகுத்துக்கொண்டு துறவி மாதிரி வாழ்ந்து வருகிறீர்கள்?"

“தவறு, சந்துரு. அன்று உதகமண்டலத்தில் அந்தப் பெண்ணைப் பார்க்கிறவரைதான் என் மனமும் எண்ணங்களும் துறவிபோல் இருந்தன. இப்போது அப்படி இல்லையப்பா. நான் என் மனத்தில் அவளை நினைவுகளாகவும், கனவுகளாகவும் சுமந்து ஏங்கிக்கொண்டிருக்கிறேன். வெட்கத்தைவிட்டு இதை உன்னிடம் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. இதோ இந்த டைரியில் மே மாதம் பதினைந்தாம் தேதியிலிருந்து இருபதாம் தேதிவரையில் உள்ளவற்றைப் படித்துப்பார். சொல்கிறேன்” என்று மேசை இழுப்பறையைத் திறந்து ஒரு டைரியைச் சந்திரசேகரனிடம் நீட்டினார் கவி கமலக்கண்ணன். சந்திரசேகரன் இரண்டு கைகளையும் நீட்டி மரியாதையாக அதை வாங்கி விரித்துப் படிக்கத் தொடங்கினார். அவருக்கு வியப்புத் தாங்கவில்லை.

கவி, அங்கில்லாததும், எங்கிருப்பதென்று தெரியாததும், ஆனால் எங்கோ நிச்சயமாக இருப்பதுமான ஏதோ ஒன்றை அங்கம் அங்கமாக நினைத்துக் கூட்டி இணைத்துக் காண முயலும் பார்வையால் மீண்டும் மோட்டு வளையை வெறித்துப் பார்க்கலானார்.

உதகமண்டலம் மே-மாதம் 15ஆம் தேதி - இரவு எழுதியது.

இன்று என் மனம் எல்லையற்ற உற்சாகத்தை அடைந்திருக்கிறது. மாலையில் இவ்வூர் 'பொடானிகல் கார்டனில்' நடைபெற்ற மலர்க் காட்சிக்குப் போயிருந்தேன். "ஃபிளவர் ஷோ'வைப் பற்றி நண்பர்கள் வானளாவப் புகழ்ந்து பெருமை பேசிய அருமை இன்று இங்கு அதைப் பார்த்த பின்பல்லவா தெரிகிறது? அடடா! உலகத்தில் இத்தனை விதமான நிறமும், இத்தனை வகை உருவமுள்ள பூக்களும் இருக்கின்றன என்று இன்று மொத்தமாகத் தெரிந்து விட்டது! வர்ணக் களஞ்சியம் என்பதா? இயற்கையின் பல வேறு நிறப் புன்னகைகள் என்பதா? என்ன அழகு! என்ன அழகு! இன்றையப் பூக்காட்சியில் என் மனத்தைத் துள்ளச் செய்து பெருமித மூட்டும் வெறொரு நிகழ்ச்சியும் நடந்ததே!

வகை வகையான பூக்காட்சி முழுவதும் சுற்றிப் பார்த்த வியப்பில் மனம் லயித்து அந்தப் பூங்காவின் புல்வெளியில் உட்கார்ந்தேன். சுற்றிலும் நீலமலைகளின் முடிகளில் மேகம் நகரும் அழகு தெரிந்தது. ‘பூக்கள், பசும்புல்வெளிகள், ஊசி இலைகளைச் சிலிர்த்து நிற்கும் தூண் தூணாக யூகலிப்டஸ் மரங்கள், உருளைக்கிழங்கு வயல்கள், இயற்கையின் செளந்தரிய வெள்ளமாய் எழுதாக் கவிதைகளாய்ப் பரந்து கிடக்கும் இவைகளுக்கு முன் என் கவிதைகள் எம்மாத்திரம்?’ என்பது போல் ஒரு தாழ்வு மனப்பான்மை எனக்கு உண்டாயிற்று. நிறங்களின் கொள்ளையாய், எழில்களின் வகைகளாய் அந்த மலர்க்காட்சிகளையும், மலைகளையும், மரங்களையும் காணும் போது என்னுடைய கவிதைகள் இவற்றை எல்லாம்விட அப்படி ஒன்றும் பெரியன அல்ல என்பதுபோல் சிறுமைப் பட்டு ஏங்கினேன். மனத்தில் ஒரு வறட்சி. நாம் பெரிதாக எதையுமே செய்துவிடவில்லை' என்கிற மாதிரி மூளித்தன்மை குடைகிறது.

'இயற்கை, பொருள்களைப் படைத்து அவற்றுக்கு விதவிதமான அழகுகளைத் தந்தது. அந்தப் பொருள்களைக் கொண்டுதான் மொழிக்குச் சொற்கள் கிடைத்தன. அந்தப் பொருள்களின் அழகுகளைக் கொண்டுதான் சொற்களின் அர்த்தங்களுக்கு அழகு ஏற்பட்டது. சொற்களும் அர்த்தங்களும் அவற்றுக்கு அழகுகளும் ஏற்பட்டிருக்காவிட்டால் நீ பாடியிருக்க முடியுமா? நீ சொற்களின் தரகன். சொற்கள் இயற்கையின் நாமங்கள். உன்னால் முடிந்தது அவற்றை இணைத்ததுதான்’ என்று உள்ளத்தில் ஏதோ குத்திக் காட்டுகிறது. தாங்கிக் கொள்ள முடியாத ஏக்கத்தினால் தவிக்கிறேன். தாழ்வு மனப்பான்மையினால் சுருங்கி சிறுத்து ஒடுங்குகிறேன்.

ஒவ்வொன்றாக நினைத்துப் பார்க்கும்போது அந்தத் தாழ்வு மனப்பான்மை அதிகமாகிறது. மேலும் நினைக்கிறேன். இந்த மலைகளின் சூழலில் இப்போது இங்கே யாரும் என்னுடைய கவிதைகளின் புகழில் ஏங்குவதாகத் தெரியவில்லையே? அவ்வளவு ஏன்? நினைப்பதாகவோ பேசுவதாகவேகூடத் தெரியவில்லையே? கமலக்கண்ணன் உலகம் போற்றும் கவிதைகளைப் பாடி என்ன பயன்? அப்படி ஒரு கவி இந்தத் தமிழ்நாட்டில் இருப்பதையே மறந்து விட்டுப் பூக்காட்சியின் விந்தைகளைப் பார்த்து இந்த மலைநகரம் முழுவதும் புகழ்கிறது; மயங்குகிறது; போற்றுகிறது! இவ்வளவு பெரிய பூங்காவில், இவ்வளவு பெரிய மலர்க் காட்சியில் இத்தனை மனிதர்களுக்கு நடுவே இவ்வளவு நேரம் சுற்றினேனே "கவி கமலக்கண்ணன் தமது வேனில் மலர்கள் என்ற பாடல் தொகுதியில் பாடியிருப்பதெல்லாம் இந்தப் பூக்காட்சியைப் பார்த்ததும் நினைவு வருகிறதே! என்று எவனாவது ஒருவன்கூட இன்னொருவனிடம் வாய் தவறியும் பேசினதாகக் காதில் விழவில்லை! கடந்த ஒரு வாரமாக இந்த நீலகிரியின் எழில்வாய்ந்த பகுதிகளில் சுற்றித் திரிகிறேன்! தொட்டபெட்டா சிகரத்தில் நின்றபோது, குதிரைப் பந்தய மைதானத்தில் கும்பலினிடையே நின்று கொண்டிருந்தபோது, கடைவீதிகளில், பூங்காக்களில் எங்காவது எவனாவது ஒருவன்கூடக் கவி கமலக்கண்ணனைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லையே! கவிகளின் நினைவே வேண்டியிராத இடமா இது? மலைகளைப்பற்றி, மேகங்களைப் பற்றி, பூக்களையும், மரங்களையும் பற்றிக் கவி கமலக்கண்ணன் விதவிதமாகப் பாடியும், புகழ் பெற்றும் என்ன பயன்? மலைகளின் நடுவே, மேகங்களின் கீழே, பூக்காட்சிக்குள்ளே, கமலக்கண்ணன் பாடிய செளந்தரியத்தைப் பார்த்துக்கொண்டே கமலக்கண்ணனைப்பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசிக்கொள்ளாமல் போகிறார்களே! இயற்கையின் அழகுகளுக்கும், வார்த்தைகளின் பொருளுக்கும் நடுவேயுள்ள சொற்களின் தரகன்தானா நான்? எனக்கென்று வேறு தனிப்பெருமையே இல்லையா? ஒரு வாரமாக இருந்த ஏக்கம் மேலும் இறுகுகிறது. இவ்வாறு எண்ணிப் புண்பட்டுப் போன மனத்துடன் பூக்காட்சி நடக்கிற பூங்காவின் புல்வெளியில் அயர்ந்து சாய்கிறேன்.அந்த சோர்வான சமயத்தில் பின்புறம் புல்வெளியில் மூலையில் கும்பலாக அமர்ந்திருந்த பெண்களில் யாரோ ஒருத்தியிடமிருந்து என் பெயர் வளை ஒலிக்கிடையே அமுத ஒலியாய்க் கேட்கிறது. பிள்ளைப் பருவத்துச் சிறு பிள்ளைபோல் மிழற்றுகிறாள் ஒரு பெண்.

“போடி, நீ என்னவோ கவிதை எழுதுவதாகப் பிரமாதமாகப் பீற்றிக் கொள்கிறயே! மலைகளையும், மேகங்களையும், பூக்களையும் பற்றிக் கமலக்கண்ணன் தம் வேனில் மலர்கள் என்ற கவிதைத் தொகுதியில் பாடியிருப்பதைப் போல் இனி யாருமே பாட முடியாது.”

ஆர்வத்தோடு இவ்வாறு கூறிய இனிய குரலுக்கு உரியவளை நான் திரும்பிப் பார்க்கிறேன். முகம் தாமரையாய்க் கண் கருவிளையாய் வாய் செங்குமுதமாய் நாசி எட்பூவாய்ப் பூக்காட்சியில் மற்றாரு பூக்காட்சியென அந்த இளம்பெண் மண்டியிட்டு உட்கார்ந்திருக்கிறாள். இவ்வளவு அழகுகளுக்கு இருப்பிடமாய் ஒரு பெண் இருக்க முடியும் என்ற உண்மையையே இன்றுதான் முதன்முதலாகப் புரிந்துகொண்டவன் போல் அவளைப் பார்க்கிறேன். பச்சைப் புல்தரையில் மஞ்சள் வாயில் புடவை அணிந்து சற்றே நளினமுறச்சாய்ந்து மண்டியிட்ட கோலத்தில் மண்ணில் விளையாட வந்த கந்தர்வப் பெண்போல் வீற்றிருக்கிறாள். நல்ல உயரம், நல்ல சிவப்பு, அவள் சிரிக்கும்போது முகம் முழுவதும் மூக்கிலுள்ள வைர பேஸரி, காதிலுள்ள வைரத்தோடுகள், எல்லாமே சேர்ந்து அழகாய்ச் சிரிப்பதுபோல் ஒரு பிரமை உண்டாகிறது. இதழ்களின் சிரிப்பை வாங்கிப் பிரதிபலித்துக் காட்டுவதுபோல் அந்த மூக்குத்தி மினுக்கும் அழகே அழகு.

'கவி கமலக்கண்ணனுக்கு இத்தனை அழகாக ஒரு ரசிகையா?' என் மனம் பொங்குகிறது; பூரிக்கிறது. இப்படி ஒரு பெண்ணை மணம் செய்துகொண்டால் என்ன? என் மனத்தில் கவிச் சொற்கள் கனிந்து துடிக்கின்றன. நான் ஐம்பத்திரண்டு வயசிலிருந்து இருபத்திரண்டு வயசு இளைஞனாகி விடுகிறேன்.

கண்பூவாய்க் கைபூவாய்க்
கமலச்செவ் வாய்பூ வாய்ச்
செம்பவழ இதழ்நடுவிற்
சிரிக்கின்ற நகைபூவாய்ப்
பெண்பூத்துப் பொலிகின்றாள்
பிறழ்மின்போல் நெளிகின்றாள்!

என்று அங்கேயே அறைகுறையாகத் தப்போ, சரியோ தோன்றிய வரிகளைக் குறித்துக் கொள்கிறேன். தத்துவ ஞானியும், அப்பழுக்குச் சொல்ல முடியாத துறவியுமான கவி கமலக்கண்ணனுடைய மனம் ஒரு பெண்ணின் அழகில் நெகிழ்கிறது. அந்த அழகை வருணித்துப் பித்தன்போல் கவியும் பாடுகிறது. வேடிக்கைதான்!

உதகமண்டலம், மே மாதம், 16ஆம் தேதி இரவு :

இது என்ன ஆச்சர்யம்! நேற்று 'பொடானிகல் கார்டனில்' பார்த்த பெண் எங்கே இருக்கிறாளோ, யாரோ என்று நான் தவித்த தவிப்பைத் தீர்ப்பவள்போல் எதிர்த்த அறையிலிருந்து வெளிவருகிறாளே! நான் தங்கியிருக்கும் இதே விடுதியில் எதிர் அறையில்தானா அந்தப் பெண்கள் கூட்டமும் தங்கியிருக்கிறது? ஏதோ கல்லூரி மாணவிகள் சேர்ந்து உல்லாசப் பயணம் வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது.

எதிர் அறையில் அவளுடைய குரல் ஒலிக்கும் போதெல்லாம் கவி கமலக்கண்ணனுடைய பெருமையைப் பேசுவதாகவே ஒலிக்கிறது. கமலக்கண்ணனுக்கு எத்தனை அழகான ரசிகை|

என் மனம் மலையத்தனை உற்சாக உயரத்தில் ஏறி நிற்கிறது. நேற்றும் இன்றும் உதகமண்டலம் மிக அழகாக மாறிவிட்டது. இங்கே இந்த இயற்கையழகுக்கு நடுவில் கவி கமலக்கண்ணனாகிய என்னைப் பற்றியும் நினைப்பவர்கள் இருக்கிறார்கள். நான் சொற்களின் தரகன் அல்ல; கவிகளின் நாயகன்; இதோ இந்த இரவின் அமைதியில் எதிர்த்த அறையில் அந்தப் பெண் தன் தோழிகளுக்கு என் 'வேனில் மலர்களை' இசை வெள்ளமாய்ப் பாடிக் காட்டிக் கொண்டிருக்கிறாள். நான் எத்தனை பாக்கியசாலி! மாதுளை மொட்டுப் போன்ற அவன் உதடுகளில் எழும் இசையின் சொற்கள் என்னுடையவை அல்லவா? அந்தச்சொற்களை அப்படிக் கவிதையாய் இணைத்தவன் நான் அல்லவா? இப்படி ஒரு பெண்ணை மணந்து கொண்டு அவள் பாடிக் காட்ட வேண்டுமென்ற ஒரே நோக்கத்துக்காகவே லட்சோபலட்சம் கவிதைகளை நான் எழுதலாமே! உம்! இந்த வயசுக்குமேல் அது சாத்தியமாகுமா?

உதகமண்டலம். மே மாதம், 17-ஆம் தேதி இரவு:-

நான் மகா யோகக்காரனாகி விட்டேன். இன்று அந்தப் பெண் தயங்கித் தயங்கி என் அறைக்குள் நுழைந்து கமலப் பூக்கரங்களைக் கூப்பி வணங்கினாள். பேசினாள்: “முதலில் நேற்று உங்களைப் பார்த்தபோதே நீங்கள்தாம் கவி கமலக்கண்ணனாக இருக்க வேண்டுமென்று சந்தேகமுற்றேன். இன்று விடுதி மானேஜரிடம் விசாரித்தபோது என் சந்தேகம் தீர்ந்தது. எனக்கு உங்கள் கவிதை மிகவும் பிடிக்கும்.”

"உட்கார் அம்மா. நீ நேற்றிரவு என் வேனில் மலைகளை நன்றாகப் பாடினாய். நானும் கேட்டேன்.”

நீண்டநேரம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போனாள் அந்தப் பெண். என் மனத்தில் உல்லாசத்தை நிரப்பிவிட்டுப் போனாள் என்பதுதான் பொருத்தமான வாக்கியம். நாளைக்காவது அன்று மலர்க் காட்சியில் கிறுக்கின அவளைப் பற்றிய கவிதையை நிறைவேற்றி முடித்துவிட வேண்டும். தத்துவம், தெய்வீகம், இயற்கை இவற்றை நீக்கிப் பெண்ணழகைப் பற்றிக் கமலக்கண்ணன் பாடும் முதற் கவிதை இதுவாகத்தான் இருக்கும்.

உதகமண்டலம். மே மாதம், 18ஆம் தேதி இரவு:-

இன்று பேசிக் கொண்டிருந்தபோது அந்தப் பெண் ஒரு கேள்வி கேட்டாள்: “உங்கள் கவிதைகளை எழுதும் அனுபவங்கள் உங்களுக்கு எப்படிக் கிடைக்கின்றன?” நான் வழக்கமாக எல்லோருக்கும் கூறுகிற பதிலைச் சொன்னேன்.அவள் குறும்புச் சிரிப்பும், குறும்புப் பார்வையுமாக என்னை நோக்கி, ‘என்னைப் பற்றி ஒரு பாட்டு எழுதிக்கொடுங்களேன்,பார்க்கலாம்" என்றுவெள்ளைத்தனமாகக் கேட்டுவிட்டாள்.

"உன்னைப்பற்றிநேற்றே பாடியிருக்கிறேன்” என்று பதிலுக்கு நான் சொன்னதும் அவளுக்கு வியப்பாகிவிட்டது. அவளைப் பற்றி நான் பாடிய சில வரிகளைச் சொல்வி அந்த வியப்பைப் பின்னும் அதிகமாக்கினேன். அப்போது அவள் முகம் இணையிலா நாண அழகு சுரந்து நகைத்தது. என் மனம் பூரித்தது.

உதக்மண்டலம் மே மாதம், 19-ஆம் தேதி இரவு:-

இன்று காலை அந்தப் பெண்கள் குழு ஊருக்குப் புறப்பட்டுவிட்டது.

புறப்படுமுன் அவள் என் அறைக்கு வந்தாள். அவளுடைய கைகளில் என் வேனில் மலர்கள் என்ற கவிதைப் புத்தகம் இருந்தது.

"நாங்கள் இன்று ஊர் புறப்படுகிறோம். உங்கள் நினைவுக்கு அறிகுறியாக இந்தப் புத்தகத்தின் முதற்பக்கத்தில் நீங்கள் என்னைப் பற்றிப்பாடிய அந்தப் பாட்டை மட்டும் எழுதிக் கையெழுத்திட்டுத் தருவீர்களா?”

அவள் விருப்பப்படியே 'கண்பூவாய்' என்ற அந்தப் பாட்டை அப்படியே அரைகுறையாக எழுதிக் கையெழுத்திட்டுத் தந்தேன். வணங்கி நன்றி சொல்லிவிட்டுப் போனாள். இதுவரை எங்குமே கண்டிராத அந்த எழில் முகத்தைக் கூடியவரை மனத்தில் பதித்துக்கொள்ள முயன்றேன். மனம் எதற்கோ ஏங்குகிறது.

உதகமண்டலம். மே மாதம், 20ஆம் தேதி இரவு:-

போயும் போயும் இது என்ன ஊர்? இங்கே குதிரைப் பந்தயத்தைப் பற்றிக் கவலைப்படுகிற மனிதர்கள் இருக்கிறார்கள். தொட்டபெட்டா சிகரத்தையும், 'பொடானிகல் கார்டனின்' பூ வகைகளையும் பார்த்து வாய் அங்காந்து ரசிக்கிறவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால், கமலக்கண்ணன் என்கிற கவியைப்பற்றி நினைக்கிறவர்கள் கூட இந்த ஊரில் இருப்பதாகத் தெரியவில்லை. மனமே வறண்டுவிட்டது. நாளைக் காலையில் இங்கிருந்து ஊருக்குப் புறப்பட்டுவிட வேண்டியதுதான்.

உதவியாசிரியர் சந்திரசேகரன் டைரியின் பக்கங்களை முடிவிட்டு நிமிர்ந்தார். கவிஞரை நோக்கிக் கூறினார்: “ஸார், உங்களிடம் பாட்டு எழுதிக் கையெழுத்து வாங்கிக்கொண்டு போன இந்தப் பெண்ணை எனக்கு நன்றாகத் தெரியும். அவள் இப்போது இந்த ஊரில்தான் இருக்கிறாள். அவளைப் பார்த்து நீங்கள் இந்த அறைகுறைப் பாடலை நிறைவு செய்ய முடியுமானால் இன்று மாலையே அவளிடம் உங்களை அழைத்துப் போகிறேன்.”

இதைக் கேட்டுக் கவிஞரின் முகம் மலர்கிறது. கண்களில் ஒளி பாய்கிறது.

"நிஜமாகவா சந்துரு?” “சத்தியமாக, நீங்கள் சாயங்காலம் பாருங்களேன்.”

"அந்தக் கந்தர்வசுந்தரி எனக்குக் கவிதை தந்தவள். அவளை நான் மறுபடி காண முடிந்தால் ஒரு கவிதை என்ன? உன் ஆண்டு மலருக்கு ஒரு காவியமே எழுதித் தருகிறேன் அப்பா.

"மாலையில் தயாராக இருங்கள். வந்து அழைத்துப் போகிறேன்” என்று கூறி சந்திரசேகரன் போய்விட்டார்.

கவிஞர் மகிழ்ச்சி பொங்கும் மனநிலையோடு காத்திருந்தார். ஆறு மணிக்குச் சந்திரசேகரன் வந்து அழைத்துப் போனார். அந்த வீட்டுக் கூடத்தில் கவிஞரை உட்கார்த்தி விட்டு உள்ளே போய் அவளை அழைத்து வந்தார் உதவியாசிரியர். அதே மஞ்சள் வாயில் புடவை, வைர பேஸரியும் தோடுகளும் சேர்ந்து சிரிப்பதுபோல் இதழ்களில் சுரந்த நகை, மெட்டியும் கொலுசும் தாளமிட அன்னநடை நடந்து கவிஞருக்கு முன் வந்து கைகூப்பி வணங்கினாள் அந்தப் பெண். வணங்குமுன் கையில் இருந்த 'வேனில் மலர்கள்' புத்தகத்தை கவிஞருக்கு முன்பிருந்த மேஜையில் வைத்தாள்.

வியப்போடு கவிஞர் அதன் முதல் பக்கத்தைப் பிரித்தார். அவருடைய கையெழுத்து அன்று எழுதிக் கொடுத்தபடியே முத்து முத்தாக இருந்தது. அவள் இனிய குரலில் அவரை நலம் விசாரித்தாள்.

“பேசிக்கொண்டிருங்கள். காபி கலந்துகொண்டு வருகிறேன்” என்று கூறி அவரையும், உதவியாசிரியரையும் விட்டுவிட்டு உள்ளே மறைந்தாள். கையில் 'வேனில் மலர்களை'ப் புரட்டிக்கொண்டே சந்துருவிடம் கேள்விகள் கேட்கலானார் கவிஞர். அவர் குரலில் உல்லாச வெள்ளம்.

“சந்துரு, இந்தப் பெண் கல்லூரியில் படிக்கிறாளா?”

"படித்து முடித்துவிட்டாள்.”

"இவள் மாதிரி அழகியை நீ எங்காவது பார்த்திருக்கிறாயா சந்துரு”

“இல்லை.”

"இந்தப் பெண் உனக்கு உறவோ?”

"உறவுதான்.”

“நெருங்கிய உறவோ?”

“மிகவும் நெருங்கிய உறவு”.

சிறிது நேரம் இருவரிடையேயும் மெளனம் நிலவுகிறது. கவிஞர் கண்களில் ஒரே தாகம். அழகின் வெள்ளத்தையே கண்டு விட்டது போல் முகம் மலர்ந்திருக்கிறது அவருக்கு.

சந்துரு அவரிடம் மீண்டும் கேட்கிறார். “பாட்டை நாளைக்கே முடித்துக் கொடுத்துவிடுவீர்களா ஸார்?"

“ஆகா! கட்டாயமாக, அதிருக்கட்டும். இந்தப் பெண் உனக்கு நெருங்கிய உறவு என்றாயே! என்ன உறவு?”

சந்துரு அவருடைய இந்தக் கேள்விக்குப் பதில் கூறாமல் அவர் முகத்தையே பார்த்தார்.

“என்ன அப்படிப் பார்க்கிறாய் சந்துரு? உறவைச் சொல்வது சாத்திய மில்லையானால் வேண்டாம்”

"சொல்வது சாத்தியந்தான், ஸார்.”

“பின் ஏன் தயங்குகிறாய்?”

"இவள் என்னுடைய மனைவி!”

கவிஞரின் முகம் பேயறை வாங்கியதுபோல் வெளிறுகிறது. அவர் கையில் இருந்த 'வேனில் மலர்கள்’ நழுவிக் கீழே விழுகிறது. உடம்பே கூசிக் குறுகி அணுவாய்த் தேய்ந்து விட்டதுபோல் சிறுத்துக் குன்றி விடுகிறது. நிமிர்ந்து சந்துருவைப் பார்க்கிறார். ஒரு புகழும் இல்லாத அந்தச் சாதாரண உதவியாசிரியர் நிஷ்களங்கமாகச் சிரிக்கிறார்! -

(கலைமகள், தீபாவளி மலர், 1960)