நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/பிட்டுத் தோப்பு
64. பிட்டுத் தோப்பு
வையையாற்றுப் பாலத்தைக் கடந்து இரயில் மதுரைக்குள் நுழைகிற போது நீங்கள் வண்டி போகிற திசையை நோக்கி உட்கார்ந்திருந்தால் - வலது கைப்பக்கம் ஆற்றின் தெற்குக் கரையில் பாலத்துக்குச் சிறிது தொலைவு மேற்கே அடர்த்தியாகத் தென்னை மரங்கள் தெரியும். கரையிலிருந்து ஆற்றுப் பரப்பை நோக்கி ஒட்டைச் சிவிங்கி போல் நீட்டி வளைத்துக் கொண்டு வையையில் புதைந்து கிடக்கிற எந்த இரகசியத்தையோ மேலேயிருந்து தேடுவது போல் தோன்றும். இந்தத் தென்னை மரங்களில் மனத்தைப் பறி கொடுக்கவில்லையானால் எதற்குமே மனத்தைக் கொடுத்து ஈடுபடத் தெரியாதவர் என்றுதான் உங்களைப் பற்றிச் சொல்ல வேண்டியிருக்கும்.
கண்ணுக்கினிய இந்தத் தென்னை மரக் கூட்டத்துக்குத்தான் மாதத்திற்கொரு திருவிழாவுடைய எங்கள் மதுரை மாநகரத்தில் பிட்டுத் தோப்பு என்று பெயர். இது என்ன பெயர்? பிட்டாவது தோப்பாவது? - என்று நீங்கள் முகத்தைச் சுளித்துக் கொண்டு முணுமுணுப்பது என் காதில் விழுகிறது. போனால் போகிறதென்று பழைய சங்கதிகளைக் கொஞ்சம் படித்து வைத்திருந்தால் இதெல்லாம் தெரியும்! புதியதைப் படிப்பதற்கே நேரமில்லாதபோது பழையதைப் படிக்க உமக்கு நேரமேது? சொல்கிறேன், கேளும்.
ஆலவாய் நகராகிய மதுரையில் சோமசுந்தரப் பெருமான் அறுபத்து நாலு திருவிளையாடல்கள் செய்து மகிழ்ந்தாரே, அவற்றில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் என்பதும் ஒன்று. அந்தக் கதையை எப்போதாவது பள்ளிக்கூடத்துப் பாடப் புத்தகத்தில் படித்திருப்பீர்; அல்லது படிக்காமலும் விட்டிருப்பீர். அதைப் பற்றிய கவலையை ஏற்கெனவே உமக்குப் பள்ளிக்கூடத்தில் வாத்தியாராயிருந்த துர்ப்பாக்கியசாலி பட்டிருப்பாராதலால் நான் மேலே இந்தக் கதையைத் தொடர்கிறேன். ‘வந்தி’ என்னும் ஏழைக் கிழவிக்காகச் சிவபெருமானே பிட்டுக்கு மண் சுமக்கும் கூலியாய் வந்து வையை வெள்ளத்தை அடைக்கிற வேலையைச் சரியாய்ச் செய்யாமல் பாண்டியனிடம் பிரம்படி பட்ட இடம் ஐயா இது!
அந்தக் காலத்தைப் போல் இப்போதெல்லாம் வையையில் அவ்வளவு பெரிய வெள்ளம் வராத காரணத்தாலோ என்னவோ, நகரசபைக்காரர்கள் சாக்கடையைக் கலக்க விட்டுத் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சோமசுந்தரப் பெருமானுக்கு வாரிசாக இருந்து இந்த மட்டிலாவது திருவிளையாடல்களைப் புரிந்து கொண்டு வருகிறவர்களைப் பாராட்ட வேண்டாமா? பிரம்படி கொடுப்பதற்குப் பாண்டிய வமிசத்தில் யாரும் இப்போது இல்லாததால் வெறும் பாராட்டோடு விட்டு விடுவோம்.இங்கே நம்முடைய கதை நடக்கிற இந்தக் காலத்தில் திருவிளையாடற் புராணத்து மகிமைகள் ஒன்றும் பிட்டுத் தோப்பிலோ, அதன் கீழேயுள்ள வையை மணற்பரப்பிலோ இல்லை என்பது சர்வ நிச்சயம். தோப்பை ஒட்டினாற்போல அக்கம்பக்கத்தில் கிடுகு வைத்து மறைக்கப்பட்ட குஸ்திப் பள்ளிக்கூடங்கள் இரண்டு மூன்று உண்டு. அப்பால் மில் கூலிகளின் நெருக்கடி நிறைந்த வீதிகள். இந்தப் பக்கம் தோப்புக்குக் கீழே ஆற்றில் தேங்கி ஓடாத நீருடன் ஒடு கால்களும், பூர்வீகத்தில் தார் டிரம்மாக இருந்து இப்போது மணலில் உறையாக இறக்கப்பட்ட ஊற்றுப் பதிவுகளும், தோய்ப்பதற்காகப் போடப்பட்ட பட்டைக் கற்களுமாகத் தினசரி குளிக்க வருகிறவர்கள் கண்டு கண்டு அலுத்துப் போனதொரு காட்சி தெரிந்து கொண்டிருக்கிறது. நேர் எதிர்க்கரையில் வடக்கே மயானத்தைத் தவிர விசேஷமாக ஒன்றும் இல்லை. தத்தனேரி என்று சொன்னால் திருவிளையாடற் பட்டணத்து வாசிகளுக்குச் சாவைத் தவிர வேறு ஒன்றும் நினைவு வரப் போவதில்லை. இந்த இடத்தில் பிட்டுத் தோப்புக்கும் வடக்குக் கரைக்கும் நடுவே ஆற்றுக்குள் ஒடுகால்கள் அதிகமாக இருந்ததற்குத் தொழில் இரகசியம்தான் காரணம். வெள்ளம் என்கிற அதிசய நிகழ்ச்சி வையையில் ஏற்படாத காலங்களில் மயானத்துக்குப் போகிற 'கார்டு லைன்' ஆக இருந்ததனால் செத்தவரைச் சூழ்ந்து சென்ற சாவார்கள் திரும்பி வந்து முழுக்குப் போட்டுவிட்டுப் போக ஏற்றதாக இருந்தது இந்தப்பகுதி முழுகுகிறவர்களை நம்பி ஒடுகால்காரர்கள் முழுகாமல் தொழில் நடத்த ஏற்ற இடம் இது.
எனவேதான் சாகிறவர்களையும், அவர்களுக்குப்பின்னால் போய் விட்டுச் சாவுத் தீட்டோடு திரும்புகிறவர்களையும் நம்பி நம்முடைய கதாநாயகனாகிய பரமசிவம் பிட்டுத் தோப்புக்கு அருகே ஒர் ஒடுகால் வெட்டிக் கொண்டு ஊற்றிலே நீரும், வயிற்றிலே பசியும் ஊற உட்கார்ந்தான்.
பரமசிவத்தின் ஒடுகாலைப் பற்றிக் கொஞ்சம் வர்ணிக்கலாமா? வர்ணிப்பதற்கு அதில் அற்புதங்கள் ஒன்றும் இல்லையென்றாலும் 'ஒன்றுமில்லை'யென்பதையே வர்ணனைக்கு விஷயமாக்கிக் கொள்ள முடியும்தானே? 'வரம்பெலாம் முத்தம் மடையெலாம் சங்கம்' என்று கவிராயர்கள் உயர்வு நவிற்சி பண்ணுகிறமாதிரிப் பரமசிவத்தின் ஒடுகாலில் பெரிய அம்சங்கள் ஏதும் கிடையாது . ஒடுகால் தோண்டிக் குவித்த மணல் மேட்டில் வெயிலுக்கு நிழல் தர ஒரு குடிசை பரமசிவத்தின் கொலு மண்டபமும் அதுதான். குடிசையின் நான்கு புறமும் துருத்திக் கொண்டிருக்கும் மூங்கில் நுனியில் எப்போதும் யாருடைய ஈர வேஷ்டியாவது காய்ந்து கொண்டிருக்கும். பரமசிவத்தின் கொலு மண்டபத்துக்குள் கள்ளிப் பலகையினாலான ஒரு பெட்டியில் சவுக்காரம், சாம்பிள் சைஸ் வாசனைச் சோப்பு, சீயக்காய்த் தூள் பொட்டலம், எண்ணெய், பல்பொடி எல்லாம் விற்பனைக்காக உண்டு வருகிறவர்களின் பொது உபயோகத்துக்காகத் தேசீய மயமாக்கப்பட்ட சீப்பு ஒன்றும், தண்ணீர் பட்டுப் பட்டு இரசமழிந்த கண்ணாடியும் இலவச விநியோகத்துக்குரிய விபூதி, குங்குமமும் அந்தக் கொலு மண்டபத்தில் உண்டு. தேமல் விழுந்த தோல் மாதிரி இடையிடையே இரசமழிந்த அந்தக் கண்ணாடியில் பார்ப்பதால் முகத்துக்கு ஏற்படுகிற விகாரத்தைப் பழகினவர்கள் சமாளிக்க முடியும். இவ்வளவுக்கும் மேல் ஒரு மூலையில் குடிதண்ணீருக்காகப் பானை டம்ளரும் உண்டு. ஒடுகால் தண்ணீரைக்குடிக்க முடியாதா என்று நீங்கள் சந்தேகப்படலாம். டாக்டர்கள் சில மருந்துகளை உடலின் வெளிப்புற உபயோகத்துக்கு மட்டும் என்று குறிப்பிட்டுக் கொடுப்பார்களல்லவா? பரமசிவத்தின் ஒடுகால் தண்ணிரும் இந்த ரகத்தைச் சேர்ந்ததுதான்.
குளிப்பதற்கும் துணி துவைப்பதற்கும் சேர்த்து அரை அணா. துணி துவைக்க மட்டும் காலணா. மாதாந்திர வாடிக்கையானால் ஒரு ரூபாய். இது பரமசிவத்தின் கட்டண விகிதம். நாலைந்து வாளிகளும் தோய்க்கிற கற்களும் பரமசிவத்தின் ஒடுகாலில் உண்டு. தோய்க்குமிடத்துக்கு நிழல்தர ஒரு கொடுக்காப்புளி மரமும் உண்டு.
பரமசிவத்தின் நாட்படி வருமானம் முக்கால் ரூபாயிலிருந்து ஒண்ணேகால் ரூபாய் வரை கிடைக்கும். மாதாந்திர வாடிக்கைக்காரர்களிடமிருந்து மாத முடிவில் வரவு மொத்தமாகப் பத்துப் பதினைந்து ரூபாய்க்குக் குறையாது. மயானத்திலிருந்து திரும்புகிற கூட்டம் ஏதாவது 'சான்ஸ்' ஆக அவனுடைய ஒடுகால் பக்கம் வந்துவிட்டால் திடீர் யோகமாய் ஒண்ணரையிலிருந்து இரண்டு ரூபாய் வரை உபரி வருமானம் கிடைக்கும். இந்த உபரி வருமானத்தை எதிர்பார்த்துத் தினம் யாராவது செத்துப் போய்க் கொண்டிருக்க வேண்டுமென்று அவன் காத்திருப்பதும் நியாயமில்லை. அப்படியே யாராவது செத்துப் போனாலும் அந்தப் பகுதியில் உள்ள ஏராளமான ஒடுகால்காரர்களில் எவருக்கு வேண்டுமானாலும் அந்த வருமான யோகம் அடிக்கலாம். மயானத்திலிருந்து திரும்புகிற கூட்டத்தைக் கவர்வதற்கு அங்கிருக்கும் ஒடுகால்காரர்களிடையே எப்போதும் அடிபிடிதான். எல்லாச் சாவுக்கும் அவ்வளவு கூட்டம் வருமென்று சொல்லவும் முடியாது. பிறந்ததும் பலருக்குத் தெரியாமல், சாவதும் பலருக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லாமல் சாகிறவர்கள் எத்தனை பேர்? அப்படிப்பட்ட வகையினரால் ஒடுகால்காரர்களுக்கு அதிக லாபம் இல்லையே! அந்த விதமான மனிதர்களால் உலகத்துக்கே என்ன லாபம் என்று தெரியாதபோது பரமசிவம் என்ன இலாபத்தை எதிர்பார்க்க முடியும்?
பரமசிவத்தின் ஒடுகாலில் இரண்டு 'காம்ப்ளிமெண்டரி' டிக்கெட்டுகளுக்கும் நிரந்தரமாக இடம் உண்டு. ஆரம்பாளையம் ரோட்டில் இருக்கும் பிரபலமடையாத ஏதோ ஒரு பிள்ளையார் கோவிலில் மணியடிக்கிற முத்துப் பண்டாரத்துக்கும், பரமசிவத்துக்கு குடிசை போட்டுக்கொள்ள இடம் (ஒடுகால் குடிசை அல்ல, கரைமேல் அவன் குடும்பம் வசிக்கிற குடிசை) கொடுத்திருக்கிற பங்காரு நாயக்கருக்கும், எப்போது வந்தாலும் ஒடுகாலில் குளிக்க ப்ரீபாஸ் உண்டு. அந்திசந்தி வேளைகளில் அவன் கண்களை ஏமாற்றிவிட்டு 'டிக்கட்' வாங்காமல் குளித்துப் போகிற 'வித் அவுட்' ஆட்களும் உண்டு.
பரமசிவத்துக்குப் பெரிய குடும்பம். வயதான தாய், தந்தை, நோயாளி மனைவி, வரிசையாக மூன்றும் பெண்மக்கள்.இரண்டு பெண்களுக்குக் கட்டிக் கொடுக்கிற வயசு, நெசவுத்தொழிலில் பட்டுப்போய் ஒடுகாலில் இறங்கியவன் அவன். தெற்குக் கரையில் பிட்டுத் தோப்புக்கும் சிறிது தொலைவு மேற்கே தள்ளிப் பங்காரு நாயக்கர் குடிசை போட்டுக்கொள்ள விட்டிருந்த இடத்துக்கு மாச வாடகை எட்டு ரூபாய்.
பரமசிவத்துக்கு ஒடுகாலில் தண்ணிர் ஊறுவதற்குப் பதில் அவ்வளவும் பணமாக ஊறினாலும் நல்லதுதான். வையையில் வெள்ளம் வருவது அதிசயமானாலும் மகசூல் காலத்தில் அணைத் தண்ணீரோ அபூர்வமாக முல்லைக்கால் தண்ணீரோ திறந்து விட்டுவிடுவார்கள். முழங்கால் அளவு தண்ணீர்தான் பாயும். ஆனாலும் ஒடுகால் மூழ்கிவிடும். மலையாளத்துக்காரன் பாண்டிக்காரனுக்குக் கொடுத்திருக்கிற சீதனமான முல்லைப் பெரியாற்றுத் தண்ணீர் நின்ற பின் மணலில் புதைந்து போயிருக்கும் தோய்க்கிற கற்களைத் தேடி எடுப்பது பெரிய காரியம்.அப்படித் தேடி எடுக்கிறபோது ஒடுகால்காரர்களுக்குள் எல்லைப் பிரச்னைகளும் கல்லெடுப்புப் போர்களும் உண்டாவது இயல்பு.
இரவு நேரங்களில் ஒடுகாலுக்குக் காவலில்லாவிட்டாலும் காவலிருப்பது போல் ஒர் 'அத்து' உண்டாக்க வேண்டும். இல்லா விட்டால் ஜட்காக் குதிரைகளைக் கொண்டு வந்து குளிப்பாட்டி ஒடுகாலை நாற அடித்துவிடுவான்கள். இப்படிச் சொல்வதனால் ஜட்காக் குதிரை குளிப்பாட்டாமல் இருக்கிற பட்சத்தில் தண்ணீர் நாறாமல் இருக்குமா என்று உத்தரவாதம் கேட்கப்படாது. ஏதோ குறிப்பிட்டுக் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு நாற்றம் இருக்கத்தான் செய்யும். பஞ்சாலையில் உழைத்து உழைத்துப் பஞ்சடைந்து போய்க் கொண்டிருக்கிற அந்தப் பிரதேசத்து மக்களுக்கு நாற்றமும் பழகிப் போன உணர்வுதான். எப்போதாவது அருமையாக நுகர்கிற காரணத்தால் வாசனைதான் நாற்றத்தைப் போல் அவர்களுக்கு வித்தியாசமாகத் தோன்றி உறுத்தும்.
பரமசிவம் பத்துத் தறிகாரர்களை வைத்து வேலை வாங்கிக் கொண்டிருந்த பெருமை பழங்கனவாகப் போய்விட்டது. பஞ்சம் பிழைக்கக் குடிபெயர்ந்து ஊர் பெயர்ந்து நட்டாற்றில் வந்து நின்றாயிற்று. ஒடுகாலுக்காக மட்டுமல்லாமல் வாழ்க்கையிலேயே நட்டாற்றுக்கு வந்து நாதியில்லாமல் நின்றாயிற்று. மனிதர்கள் பதிந்து வாழ்வதற்கு ஏற்ற வசதிகள் இருந்ததனால்தான் பழங்காலத்தில் ஊர்களுக்குப் 'பதி' என்று பெயர் வைத்தார்களாம். இந்தக் காலத்தில்தான் நடுத்தரமான மனிதன் எந்த ஊரிலும் பதிந்து வாழ முடிவதில்லையே. சவக்குழியைத் தவிர நிலையாகப் பதிகிற இடம் வாழும்போது இல்லைதான். அதற்காக வாழும்போதே சவக்குழியைத் தோண்டிக்கொண்டு விட முடியுமா, என்ன? அப்படித் தோண்டிக் கொள்வதற்குத் தெரியாததாலோ அல்லது அதற்குப் பதிலாகவோ ஊர் விட்டு ஊர் வந்து ஒடுகாலைத் தோண்டிக்கொண்டு உட்கார்ந்து விட்டான் பரமசிவம் என்கிற முன்னாள் நெசவாளி. அவன் நம்பிய தொழில் அவனை நட்டாற்றில் கைவிட்டு விட்டாலும் நட்டாறு அவனைக் கைவிடாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. 'ஆற்றுப் பெருக்கு அற்று அடி சுடுகிற நாளிலும் ஊற்றுப் பெருக்கால் உலகு ஊட்டும்' வையை அல்லவா?
பாவு போட்டிருக்கிற நூலுக்குக் கஞ்சி தெளிக்கு முன் பலபல வென்று விடிகிற நேரத்துக்கு எதிர்த்தாற் போலிருந்த உடுப்பி சங்கர பவனில் முறுகல் தோசையும், காப்பியும் சாப்பிட்டுவிட்டுத் திரும்பிய நாட்களை இப்போது நினைத்தாலும் சுகமாகத்தான் இருக்கிறது. செவ்வாய்ப் பேட்டையையும் உடுப்பி சங்கர பவனையும், பத்துத் தறிகள் வைத்து ஆண்ட பவிஷையும் இனிமேல் நினைத்து என்ன பயன்? நினைவுக்குள்ளேயே துருப்பிடித்துப் போனவற்றை மேலும் துருப்பிடிக்கச் செய்வதைத் தவிர வேறு பயனில்லை.
அரக்கன் வாய் திறந்து அலறுவதுபோல் சங்கு ஊதும் மாபெரும் பஞ்சாலைகள் உண்டான பின்பு பரமசிவனைப் போல் சிறிய நெசவாளிகள் என்ன செய்ய முடியும்? அப்படிப்பட்ட பஞ்சாலைகள் ஏதாவதொன்றில் குடும்பத்தோடு சரணடையலாம் என்றுதான் மீனாட்சிபட்டணத்துக்கு வந்தான் பரமசிவம். நவீன எந்திரங்கள் வந்து சேர்ந்து மனித எந்திரங்களைவிடச் சுறுசுறுப்பாக வேலை செய்யத் தொடங்கியதனால் எங்கே பார்த்தாலும் ஆள் குறைப்பு ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்கள். பரமசிவம் நினைத்துக் கொண்டு வந்தது போல் மதுரையில் வேலை காய்த்துத் தொங்கவில்லை. குடும்பத்தோடு சில நாட்கள் தெருவில் நின்றான். அப்புறம்? அப்புறம் என்ன? தெரிந்ததுதானே? தெருவில் நிற்காமல் ஆற்றில் போய் நின்றான்.
பரமசிவம் வையையில் இறங்கிவிட்டான். இப்போது அவனை நம்பிப் பலபேர் வையையில் இறங்கிக் கொண்டிருக்கிறார்கள், குளிப்பதற்காகத்தான். உள்ளூர் ஒடுகால்காரர்களுக்கு அவன் மேல் வயிற்றெரிச்சல் கிளம்பியது. தொழில் பொறாமை என்பது உலகத்தில் இல்லாத இடம் ஏது, அது வையை ஆற்று மணல்மேலும் இருந்தது. ஒரே உலகம், யுனிவர்ஸல் ஹியுமானிடி என்று வெண்டல் வில்கியும், உலகத்துத் தத்துவக்காரர்களும் அடித்துக் கொள்வதைப் பற்றிப் பிட்டுத் தோப்பின் கரையில் இருப்பவர்கள் அதிகமாகக் கவலைப்படுவது கிடையாது. அங்கே ஒரே தத்துவம்தான் உண்டு.அதுதான் வயிற்றுப்பசி. அதன் அடிப்படையில் வாழ்க்கைப் போட்டி வடக்கு, தெற்கு, திருநெல்வேலிக்காரன், மதுரைக்காரன், சேலத்துக்காரன் என்கிற எல்லாவிதமான பிரதேச மனப்பான்மையும் இருந்து பரமசிவத்தைத் தொல்லைக்குள்ளாக்கியது.
பரமசிவம் தன்னைத் தவிர ஆறு பேர்கள் அடங்கின குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கவலையுடன் அக்கம் பக்கத்து ஒடுகால்காரர்களின் பொறாமைக்கும் சேர்த்துக் கவலைப்பட நேர்ந்தது.
அப்போது ஆற்றில் கால்தண்ணீர் விடும் காலத்தின் கடைசிப் பருவம். கடந்த இரண்டு மூன்று வாரங்களாக ஆற்றில் தண்ணீர் ஓடிய பின் மறுபடியும் ஒடுகால்களின் அவசியம் ஏற்பட்டிருந்தது.
எல்லாரையும் போலப் பரமசிவமும் தன்னுடைய வழக்கமான இடத்தைத் தேடிப் புதையுண்டு கிடந்த கற்களை எடுத்துப் போட்டு ஒடுகால் தோண்டினான். நீரோட்டத்தில் சாய்ந்து போயிருந்த கொடுக்காப்புளி மரத்துக்கு முட்டுக் கொடுத்து நேரே நிறுத்தினான். சர்வே எல்லைக்கல் போல் அவனுடைய ஒடுகாலுக்கு அந்த மரம் அடையாளம்.
பிட்டுத் தோப்பும், அதிலிருக்கிற மண்டபமும் ஆவணி மாதம் அந்தத் திருவிழா நடக்கிற நாளில்தான் பக்தர்களுடைய கூட்டத்துக்கு உரியது. மற்ற நாட்களில் போது போகாமல் மூணு சீட்டு விளையாடுகிறவர்களும் குஸ்திப் பள்ளிக்கூடவீரர்களும் தனி அரசோச்சுகிற இடம்தான்; சில மாலை நேரங்களில் பொதுக்கூட்டமும் நடக்கும்.
பரமசிவத்தின் ஒடுகாலுக்கு எதிர்த்தாற்போல் பாண்டியன் குஸ்திப் பள்ளிக்கூடம் என்று ஒரு கோதா இருந்தது. காலையிலும், மாலையிலும் அங்கே குஸ்திக்காகப் பத்துப் பன்னிரண்டு முரட்டு இளைஞர்கள் வருவார்கள். 'பாண்டியன்' என்பவன்தான் குஸ்தி சொல்லிக் கொடுக்கிற வஸ்தாது. பாண்டியனும், அவனைச் சேர்ந்த ஆட்களும் பெரிய வம்புக்காரர்கள் என்பது பரமசிவத்துக்குத் தெரியும். குஸ்திப் பள்ளிக்கூடத்து ஆட்களே கோதாவையொட்டி ஆற்றில் தங்கள் சொந்த உபயோகத்துக்கு ஒடுகால் ஒன்று தோண்டியிருந்தார்கள்.
கால் நீர் ஒடிய சில வாரங்களுக்குப் பின் எல்லா ஒடுகால்களும் தோண்டப்பட்டபோது குஸ்திப் பள்ளிக்கூடஒடுகால் மட்டும் தோண்டப்படவில்லை. அதைத் தவிர்த்துப் பார்த்தால் அந்த இடத்தில் அருகே இருந்தது பரமசிவத்தின் ஒடுகால்தான்.
அன்று காலை குஸ்தி முடிந்ததும் பாண்டியனும், இன்னும் பத்துப் பன்னிரண்டு குட்டிப் பயில்வான்களும், பரமசிவத்தின் ஒடுகாலில் வந்து அவனிடம் ஒரு வார்த்தைகூடக் கேட்காமலே குளிக்க ஆரம்பித்தார்கள். போகும்போது ஏதாவது சொல்லிவிட்டுப் போவார்கள், அல்லது காசு கொடுத்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்துப் பேசாமல் இருந்துவிட்டான் பரமசிவம். ஆனால், அவன் எதிர்பார்த்தபடி அவர்கள் காசு கொடுத்துவிட்டுப் போகவுமில்லை.நன்றி கூறிவிட்டுப் போகவுமில்லை.அட்டகாசமாக வந்து குளித்துவிட்டுப்பேசாமல் போய்விட்டார்கள்.
அன்றைக்குச் சாயங்காலமும் அப்படியே நடந்தது. எத்தனை நாளைக்கு இப்படி நடக்கப் போகிறது? தங்களுடைய ஒடுகாலைத் தோண்டிக்கொள்கிற வரைதானே இங்கே வந்து இப்படிச் சீரழிக்கப் போகிறார்கள்? தொலையட்டும் என்று இரண்டு நாளைக்குப் பொறுமையாக இருந்துவிட்டான் பரமசிவம். அவன் பொறுமையாக இருந்ததற்குக் காரணம் வீண் கலகத்தை உண்டாக்க வேண்டாம் என்பதுதான்.
‘அத்தனை பேரும் உள்ளுர்க்காரர்கள். ஆள் கட்டும், உடற்கட்டும் உள்ளவர்கள். அவர்களைப் பகைத்துக் கொள்வது நல்லதல்ல என்று பரமசிவம் விட்டுப் பிடித்துக் கொண்டு வந்தான். எவ்வளவு நாளைக்கு விட்டுப் பிடிக்க முடியும்? விட்டுப்பிடிக்க முடியாத காலவரையறைக்குத் தொடர்ந்தது இந்த வம்பு.
நாள் தவறாமல் காலையும், மாலையும், தடியன் தடியனாக இந்தக் குஸ்திப் பள்ளிக்கூடத்து ஆட்கள் வந்து குளிக்க ஆரம்பித்ததனால், பெண்டு பிள்ளைகளும் சற்றே நாகரிகமான ஆட்களும், பரமசிவத்தின் ஒடுகாலுக்கு வருவதை நிறுத்திக் கொண்டு விட்டார்கள். வாடிக்கைகள் குறைய ஆரம்பித்தன.
“என்ன ஐயா, முண்டன், முண்டனாக வந்து தண்ணீரைக் கலக்குகிறான்.பார்த்துக் கொண்டு பேசாமல் இருக்கிறீரே. சின்னஞ் சிறிசுகள் குளிக்கிற இடத்துலே இப்படிச் செய்யலாமா? நாளைப் பின்னே இந்த ஒடுகால் பக்கம் யாராச்சும் வருவார்களா?” என்று வயது மூத்த ஆச்சிக்கிழவி ஒருத்தி அன்று காலையில் பரமசிவத்திடம் அங்கலாய்த்துக் கொண்டு போனாள். ஆனால் பரமசிவம் யாரிடம் போய் அங்கலாய்த்துக் கொள்வான்?
பயில்வான்களுடைய குளிப்பு என்றால் காக்கை முழுக்குப்போல் அல்ல. குஸ்தி போட்டு விட்டு வியர்வை மினுமினுக்கும் உடம்போடு வந்தால் தண்ணீரில் அமுக்கிக் கிடக்கிற சுகத்தைக் குறைவாகவா அநுபவிக்க விரும்புவார்கள்?
வஸ்தாது (வாத்தியார்) பயில்வானாகிய பாண்டியனோ சரியான மதயானை. ஒடுகாலில் சரிபாதி இடத்தில் துளைந்து நீராட வேண்டும் அவனுக்கு. தன்னோடு போகாமல் சீடப் பிள்ளைகளையும் அவன் கூட்டிக்கொண்டு வந்தான்.
காலையிலும், மாலையிலும் இந்த குஸ்திப் பள்ளிக்கூட ஆட்கள் ஒடுகாலில் இறங்கிக் கொட்ட மடிக்கிற போது காசு கொடுத்துக் குளிக்க வருகிறவர்கள் பரமசிவத்தின் ஒடுகால் பக்கம் எட்டிப் பார்க்கத் தயங்கினர்.
குறிப்பாகச் சொல்லிப் பார்த்தான் பரமசிவம். பாண்டியன் கும்பல் புரிந்து கொண்டு விலகிப்போகிற வழியாயில்லை. பாண்டியனிடமே நேரில் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் திணறினான் பரமசிவம், தர்மசங்கடமான நிலை. இதில் தர்மம் பாண்டியனுக்கு, சங்கடம் பரமசிவத்துக்கு.
“நீங்கள்ளாம் ரொம்பப் பெரியவங்க நான் ஏழை. இதை வச்சுத்தான் பொழைப்பு நடக்கணும். வாடிக்கைக்காரங்க எல்லாம் ஒதுங்கறாங்க.எனக்குக் கட்டுப்படியாகலே” என்று பாண்டியனிடம் நேரில் கூறியும் பார்த்தான் பரமசிவம்.
“நீ என்னமோ சேலத்துலேருந்து வர்ரப்பவே இந்த எடத்துக்குப் பட்டா எழுதி வாங்கிட்டு வந்த மாதிரியில்லே பேச்சுப் பேசுறே? வைகைத் தண்ணிலே குளிக்கிறதுக்கு நீ என்னா தானாவதி” என்று துடுக்காக எதிர்த்துக் கேட்டான் பாண்டியன். நம்பிக்கையோடு மேலும் பேச்சைத் தொடர்ந்தான் பரமசிவம்.
"ஐயா! அதுக்குச் சொல்லல்லே, தண்ணி ஒண்ணும் நீங்க குளிச்சதாலே குறைஞ்சிடாது. ராவுலே எட்டு மணிக்கி மேலே நீங்க வந்து எத்தினிவாட்டிக் குளிச்சாலும் நான் ஏன்னு கேட்கப் போகிறதில்லே. ஆணும், பெண்ணும் சிறிசும் பெரிசுமா, நாலு தினுசுவாடிக்கைக்காரங்க குளிக்க வருகிறப்போநீங்கள்ளாம் இருந்தா வரதுக்கே கூசுறாங்க. சங்கோஜப்படறாங்க. நானும் இதைக்கொண்டு தான் பொழைக்கணும்”.
“அட சரிதான் போய்யா! மகா பிழைப்பாம், பிழைப்பு. நாங்க அப்பிடித்தான் வருவோம். நல்லா முங்கிக் குளிப்போம். யாரும் எங்களைத் தடுக்க முடியாது. முடியுமானால் நீ செய்யிறதைச் செஞ்சுக்கோ.”
குஸ்திக்குச் சவால் வருகிற மாதிரிப்பதில் வந்தது பாண்டியனிடமிருந்து நியாயம் பிறக்குமென்று நம்ப இடமே இல்லை.இதற்கப்புறம் பரமசிவம் மேலே பேசுவதை நிறுத்திக் கொண்டான். மறுநாள் அருகில் இருக்கிற வேறு ஒடுகால் காரர்கள் நான்கு ஐந்து பேரிடம் போய் இந்த விஷயத்தில் தனக்குத் துணையாயிருந்து ஒத்துழைத்து நியாயம் வாங்கித் தரவேண்டுமென்று கேட்டான்.உள்ளூர் ஒடுகால்காரர்களாகிய அவர்களுக்கெல்லாம் ஏற்கெனவே பரமசிவத்தின் மேல் பொறாமை, அவனைப் போல் ஓர் அயலான் அங்கே ஒடுகால் போட்டிருப்பதே அவர்களுக்குப் பிடிக்காதபோது ஒத்துழைக்க எப்படி முன்வருவார்கள்? இது உன் சொந்த விவகாரம். எங்களிடம் வராதே’ என்று மறுத்துவிட்டார்கள். பரமசிவத்துக்கு முகத்தில் அடித்தாற்போல் ஆயிற்று.
நாளுக்கு நாள் விவகாரம் முற்றியது. பாண்டியன் கும்பல் முன்னைக் காட்டிலும் அதிகமாகப் பரமசிவனுக்கு இடைஞ்சல் செய்ய ஆரம்பித்தது. ஒடுகாலில் உள்ள வாளிகளைச் சொல்லாமல் கொள்ளாமல் வேறு காரியங்களுக்குத் துக்கிக்கொண்டு போவது, வேட்டி துவைப்பதற்கென்று தனியாக இருக்கிற உறையில் வேட்டி துவைக்காமல், குளிப்பதற்குத் தேக்கியிருக்கும் நீரில் வேட்டி துவைப்பது என்று வம்புகள் வளர்ந்தன. பாண்டியனுக்கு யாராவது 'ஸ்குரு; ஏற்றி விட்டிருப்பார்களோ என்றுகூடப் பரமசிவத்துக்குச் சந்தேகமாக இருந்தது. எந்தத் தொழிலானாலும் அருகிலுள்ளவர்களின் அநுதாபம் இல்லாமல் போனால் ஒன்றும் நல்லபடி நிறைவேற்ற முடியாது. தன்மேல் அவர்களெல்லாம் பகைவைத்துக் கொள்ளும் விதத்தில் பரமசிவம் அவர்களுக்கு மனத்தாலும் கெடுதல் நினைத்ததில்லை. ஆனால், அவர்கள் அவனுக்குக் கெடுதல் நினைத்தனர்; செய்தனர்; செய்வித்தனர். அது இலை மறை காய் மறைவாக அவனுக்கே புரிந்தது.
ஆவணி மாதத்தில் ஒரு முன்னிரவு. பெளர்ணமிக்கு இன்னும் இரண்டு நாட்கள்தான் இருப்பதால் முழுமையை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலவு மேகச் சிதறல்களே இல்லாத வானத்தில் யாரும் எழுதாக் கவிதையாய் விளங்கியவாறு நகர்ந்து கொண்டிருந்தது. வையை யாற்று மணல் வெளியும் கரை மேட்டில் தென்னை மரக் கனவுகளும் கோல வெறிமூட்டும் கொள்ளை எழில் சுமந்து நின்றன. பிட்டுத் தோப்புக்குள் மண்டபத்தின் முன்னால் பந்தல் போட்டுக் கொண்டிருந்தார்கள். நாளைக்குப்பிட்டுக்கு மண் சுமந்த திருநாளாயிற்றே. இதே வேளையில் நாளைக்கு இந்த இடம் இப்படியா இருக்கும்? 'ஜே ஜே' என்று கூட்டம் நெருக்கியடித்துக் கொண்டிராதா? குடை ராட்டினமும், கடைகளுமாக மணல் வெளி கலகலவென்று கலியாண வீடுபோல் இருக்குமே! நாளைக்கு எப்படி இருந்தால் என்ன? பரமசிவத்தைப் பொறுத்தவரை இன்றைக்கு நிலைமை பட்டினி.வீட்டில் எல்லோரும் அரைப்பட்டினி என்றால் அவன் முழுப்பட்டினி, ஒடுகாலில் வருமானமில்லை. மாலை நாலரை மணி வரையில் கிடைத்திருந்த சம்பாத்தியம் ஆறேமுக்கால் அணா. அதை வீட்டுப் பாட்டுக்காகக் கொடுத்தனுப்பியிருந்தான். மூத்த மகள் வந்து சிறிது நேரத்துக்கு முன்தான் வாங்கிக் கொண்டு போயிருந்தாள். இன்று அவன் இவ்வளவு நேரத்துக்கும் மேல் இருட்டில் காத்துக் கொண்டிருந்தது ஒரு பயனை எதிர் பார்த்துத்தான்.எதிரே வடகரையில் மயானத்துக்கு இரண்டு மூன்று கூட்டம் அடுத்தடுத்துப் போயிருந்தது. சிறிது நேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக அந்தக் கூட்டங்கள் திரும்பிக் குளிக்கவரலாம் என்ற நைப்பாசையில் பசியோடு காத்துக் கிடந்தான் பரமசிவம். மூன்றில் ஏதாவது ஒரு கூட்டம் தன் ஒடுகால் பக்கம் சாய்ந்தாலும் சுலபமாக இரண்டு ரூபாய் சம்பாதித்து விடலாமே என்ற நம்பிக்கையே அவனை இழுத்து உட்கார்த்தியிருந்தது. அப்போது குஸ்திப் பள்ளிக்கூடத்திலிருந்து சிரிப்பும் அரட்டையுமாக ஒரு ஜமா அட்டகாசத்தோடு வருவதைப் பார்த்துப் பரமசிவம் அதிர்ச்சியடைந்தான். நிலாக் காலமாகையால் அதிக நேரம் குஸ்தி நடத்தி விட்டுக் குளிக்க வந்து கொண்டிருந்தது பாண்டியன் குழு.
அந்தக் குழுவினர் வழக்கம்போல் ஒடுகால் உரிமையாளனாயகி பரமசிவத்தை இலட்சியம் செய்யாமல் குளிக்க இறங்கினார்கள். ஒடுகால் கரையில் குடிசைக்குள்ளே மண்ணெண்ணெய்க் காடா விளக்கின் கரிப் புகையோடு கூடிய சுடர் காற்றில் நடுங்கிக் கொண்டிருந்ததுபோலவே பரமசிவத்தின் உணர்ச்சியும் இந்த அநியாயத்துக்காகச் சில விநாடிகள் கொதித்து நடுங்கி எப்போதும் போலவே உள்ளுக்குள் ஒடுங்கி ஒய்ந்து விட்டது.பாண்டியன் ஆட்களில் சிலர் தண்ணிரில் இறங்கிக் குளித்தும் இன்னும் சிலர் வாளிகளை எடுத்துக்கொண்டு தோய்க்கும் கற்களை ஆக்கிரமித்தும், முழு ஒடுகாலையும் தங்கள் ஆதிபத்தியத்தில் வைத்திருந்த சமயத்தில் இருபது முப்பது மனிதர்கள் அடங்கிய கூட்டம் ஒன்று மயானத்திலிருந்து திரும்பியது.
"ஐயா வாங்க. தண்ணி சுத்தமா வச்சிருக்கேன். காலையிலே இறச்சப் பெறவு ஊறினது” என்று அந்தக் கூட்டத்தை வரவேற்றான் பரமசிவம்.
அவர்களும் அவன் ஒடுகாலை நாடியே வந்தார்கள். ஆனால் அருகில் வந்ததும் மனம் மாறி, "இதென்னப்பா, ஆட்கள் நிறையக் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். வாளி ஒன்றுகூடக் காலியாக இல்லை” என்று சொல்லிவிட்டுப் பக்கத்து ஒடுகாலுக்குப் போய்விட்டார்கள். பெரிய கிராக்கி கைநழுவிப்போன ஏமாற்றத்தில் பரமசிவத்துக்கு அசாத்தியக் கோபம் மூண்டது.
“ஏனய்யா. நீங்களெல்லாம் மனிசங்கதானா? உங்களுக்குச் சூடு, சொரணை, எதினாச்சும் கொஞ்சமாவது இருக்கா? இப்பிடிஎம் பெழைப்பைக் கெடுக்கிறீங்களே, மானமுள்ளவங்களானா வாளியைக் கீழே போட்டிட்டு வெளியேறுங்க”
“யாரைப் பாத்துடாநாக்கு மேலே பல்லைப்போட்டு இப்படிக் கேக்குறே? உங்கள் பாட்டன் வீட்டு ஆறா இது?’ பாண்டியனும் அவன் ஆட்களும் பரமசிவத்தைப் பதிலுக்குக் கண்டபடி பேசிவிட்டார்கள். இரண்டு பக்கமும் வார்த்தை தடித்துவிட்டது.
வேடிக்கை பார்க்கக் கூட்டமும் கூடிவிட்டது. பக்கத்திலிருந்த மற்ற ஒடுகால்காரர்களுக்குக் குஷி பிறந்துவிட்டது. தங்களுக்குப் பிடிக்காதவன் வம்பில் மாட்டிக்கொண்டால் குஷி பிறக்காதாபின்னே? அவ்வளவு பேரும்பாண்டியன் பக்கம். பரமசிவம் தனி ஆள். எல்லாரும் சேர்ந்துகொண்டு பரமசிவத்தை அழ அழப்படுத்தினார்கள். பரமசிவமும் மனிதன்தானே? அவனுக்கு மனம் குமுறியது. கண் பஞ்சடைகிற பசி வேறு. வயிறும் மனமும் பற்றி எரிந்தன.
“பிள்ளை குட்டிக்காரனை இந்தப் பாடு படுத்துறீங்களே. இது அடுக்குமா?. நீங்க எல்லாரும் இப்பிடிப் போயிடனும்” என்று கண் சிவக்க உதடுதுடிக்கக் கீழே குனிந்து ஒரு கை மண்ணை வாரிப் பாண்டியன் முகத்துக்கெதிரே தூற்றினான் பரமசிவம்.
“கொழுப்பைப் பாருடா ராஸ்கலுக்கு எந்தக் காட்டுலே இருந்தோ பஞ்சம் பிழைக்க வந்த பயல் மண்ணை வாரித் துத்தறான். கட்டி வச்சு உதைங்கடா. சொல்றேன்” என்று சொல்லிக் கொண்டே பக்கத்திலிருந்த கொடுக்காபுளி விளார் ஒன்றை ஒடித்துக்கொண்டு பரமசிவத்தின் மேல் பாய்ந்தான் பாண்டியன். கோபம் கிளம்பி விட்டால் அவனுக்குக் கண் மண் தெரியாது.
சுளீர், சுளீர் என்று எலும்பும் தோலுமான அந்தப் பரமசிவத்தின் உடம்பை விளார் உரிக்கிறது. பரமசிவத்தின் வாயிலிருந்து, “பாவி கொல்றானே. கேட்பாரில்லையா. ஐயோ. அப்பா..” என்ற அலறல். பாண்டியனுக்கோ கொலைவெறி விளார் ஒடிகிற மட்டும் பிச்சு உதறிவிட்டான். பரமசிவத்தின் உடம்பில் குருதி கசியும் கோடுகள்.
"தெய்வமே! நீ இந்த இடத்திலே பிட்டுக்கு மண் சுமந்தது நிசமானா நீயே இவங்களைக் கேளு” என்று அலறிக் கொண்டே சுருண்டு விழுந்தான் பரமசிவம். பயங்கரப் பசி, உடம்பும் பூஞ்சை, மூர்ச்சை போட்டது.
ஒடிந்த விளாரை எறிந்தபின் எந்த இடத்தில் படுகிறதென்றும் பாராமல் வலது காலை ஓங்கித் தணியாத வெறியோடு பரமசிவத்தை ஒரு மிதி மிதித்து, “நாய்க்குப்புத்தி இனிமே வரும். வாங்கடா, போகலாம்” என்று தன் ஜமாவோடு போய்விட்டான் பாண்டியன்.
மறுநாள் காலை முத்துப் பண்டாரமும், பங்காரு நாயக்கரும் குளிக்க வந்தபோது பரமசிவத்தின் ஒடுகால் சுடுகாடு போலிருந்தது. அவனையும் காணவில்லை. பரமசிவத்தின் கிழத் தந்தையும், தாயும், மூன்று பெண்களும் அதே ஒடுகாலில் சேர்ந்து முழுகிக் கொண்டிருந்தார்கள்.
- 'மடி மேலே வளர்த்தபிள்ளை
- மண்ணாயிப் போயிட்டியே'
என்று பரமசிவத்தின் தாய் பிலாக்கணத்தை இழுத்துக் கொண்டு அழுகை பொங்க ஈர உடையோடு நின்றாள். முத்துப் பண்டாரமும் பங்காரு நாயக்கரும் விக்கித்து நின்றார்கள்.
"ஐயா, உம்ம ஊர்லே எம்பையனைக் கொலை பண்ணிப்பிட்டான் ஐயா.போய்ப் பொசுக்கிட்டு வந்து முழுகிட்டிருக்கோம். இங்கே தெய்வம் உண்டுமா? இப்படியே இந்தப் பூமி இடிஞ்சி ஊரையே முழுங்கிடப்படாதா?’ என்று ஆக்ரோஷத்தோடு முத்துப்பண்டாரத்தைப் பார்த்துக் கையைச் சொடுக்கி முறித்தாள் அந்தக் கிழத்தாய். அந்தச் சொடுக்கு முறிகிற ஒலியில் பூமியே முறிவது போலிருந்தது. அங்கே பக்கத்திலிருந்த வேறு ஆள் ஒருவன் சிறிது தூரம் விலக்கி நடத்திக்கொண்டுபோய் முதல் நாள் மாலை நடந்தவற்றை முத்துப் பண்டாரத்துக்கும், நாயக்கருக்கும் சொன்னான். பாண்டியன் மிதித்துவிட்டுப் போன மிதி எக்குத் தப்பாய்ப் பட்டுப் பரமசிவம் இறந்து போனதையும் இராத்திரி பன்னிரண்டு மணிக்கே குஸ்திப் பள்ளியிலே வைத்துப் பாண்டியனைப் போலீஸார் கைது செய்து கொண்டு போனதையும் முத்துப் பண்டாரமும், நாயக்கரும் அறிந்தார்கள்.
அங்கே அன்று மாலை பிட்டுத் திருவிழா, பிட்டுத் தோப்பு நிறைய ஜனவெள்ளம். மேலே வானத்தில் நீலப்பட்டுக் கம்பளத்திலே பாற்குடம் சரிந்தது போல நிலா. சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமக்கிறார், பாண்டியனிடம் பிரம்படி படுகிறார், எல்லாம் பாவனையிலேயே நடைபெறுகிறது. “பெருமானே! யுக யுகாந்திரங்களுக்கு முன்பு இங்கே அரிமர்த்தன பாண்டியன் உம்மேல் அடித்த பிரம்படி அகில உலகெங்கும் உள்ள ஜீவராசிகள்மேல் பட்டு உறைத்ததாமே! நேற்று இதே இடத்தில் எங்கள் ஏழைப் பரமசிவன் மேல் பட்ட முரட்டுப் பாண்டியனின் அடி ஏன் உமது இதயத்தில் கூட உறைக்காமல் போய்விட்டது?” என்று ஒரு மூலையில் நின்று தரிசனம் செய்து கொண்டிருந்த முத்துப்பண்டாரம் மனமுருக எண்ணிக் கண் கசிந்தார்.
(கல்கி, 27.8.1961)