நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/மங்கியதோர் நிலவினிலே
76. மங்கியதோர் நிலவினிலே
ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை சரியாகச் சொல்லி வைத்தாற் போல் ‘டாண்’ என்று ஒன்பதடித்து முப்பது நிமிஷத்திற்கெல்லாம் ‘பரமசிவம்’ என்னைத் தேடிக் கொண்டு வந்து சேர்ந்தார். காட்டிலாக்கா அதிகாரியும், எனது நண்பருமான பூவுலகத்துப் பரமசிவனைத்தான் இங்கே குறிப்பிடுகிறேன்.
“ஸார் என்னைக் குமிழி - தேக்கடி ஏரியாவுக்கு மாற்றி விட்டார்கள். இன்னும் இரண்டு நாட்களில் புறப்பட வேண்டும்” வந்ததும் வராததுமாகப் பரமசிவம் இப்படி ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டார்.
“அட பாவமே! நீரும் மாற்றிப்போகிறீரா? பேச்சுத் துணைக்கு ஒரே ஒரு நண்பராக இருந்தீர். இனி என் பாடுதான் திண்டாட்டம்”
“மதுரை ஜில்லாவுக்குள்தானே இருக்கிறேன். ஐம்பது அறுபது மைல் ஒரு பெரிய தொலைவா? அடிக்கடி இங்கே வராமலா போய் விடுவேன்?”
“சரி போய் வாருங்கள்!”
“உங்களுக்கும் இப்போதுதான் கோடை விடுமுறையாயிற்றே.இங்கே வெயில் உச்சி மண்டையைப் பிளக்கிறது. நான் போய் ஒரு வாரத்தில் கடிதம் எழுதுகிறேன். தேக்கடியில் வந்து என்னோடு பத்துப் பதினைந்து நாட்கள் தங்கியிருங்களேன். பெரியாறு ஏரியும் அணைக்கட்டும் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள்” என்றார்.
“நீங்கள் போய் வேலையை ஒப்புக் கொண்ட பின் வசதியை அனுசரித்துக் கடிதம் எழுதுங்கள்” என்றேன் நான்.
நண்பர் பரமசிவம் விடை பெற்றுக்கொண்டு போய்ச் சேர்ந்தார்.
2
பரமசிவம் போனதும் அவர் குடியிருந்த வீடு காலியாக வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. தெரு வழியாகப் போகும்போதும் வரும்போதும் அந்த வீட்டைப் பார்த்து ஏங்குவேன். அந்த ஏக்கத்தோடு ஏக்கமாக ‘இந்த உலகத்தில் மனம் விட்டுப் பழகுகிற நட்பு இருக்கிறதே; அதைவிடப் பெரிய விஷயம் ஒன்றுமே இல்லை. நட்புக்கு ஈடு நட்புதான்’ என்றும் எண்ணிக்கொள்வேன். ‘நிழலருமை வெயிலிலே’ என்று சொல்வார்களே, அதுபோலப் பரமசிவத்தின் நட்பின் அருமை அவர் இல்லாத போதுதான் என் மனத்தில் பெரியதோர் தாபமாக உருவெடுத்து உறைத்தது.
3
சொல்லிவிட்டுப் போயிருந்ததுபோல் ஒரு வாரத்தில் பரமசிவம் கடிதம் எழுதியிருந்தார்.
“இந்த இடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இயற்கை வளம் மிகுந்த மலைத் தொடரின்மேல் நாலாயிரத்துக்கு மேற்பட்ட அடி உயரத்தில் சிறிய ஊர். குளிர்ச்சியும் பசுமையும் நிறைந்த இடம். கோடைக்கானலில் ‘சீஸன்’ காலத்தில் தங்கியிருப்பது போலத் தோன்றுகின்றது.பல மைல் விஸ்தீரணத்துக்குப் பரந்த பெரியாறு ஏரி, மலைச் சிகரங்களுக்கு நடுவே கண்ணாடி பதித்ததுபோலத் தோன்றுகிறது. மின் விசைப் படகை (லாஞ்ச்) எடுத்துக் கொண்டு, இந்த ஏரியில் மைல் கணக்காகச் சுற்றுவது ஒரு ரஸமான பொழுதுபோக்கு. இரண்டு கரையிலும் கூட்டம் கூட்டமாகக் காட்டு மிருகங்கள் திரிவதைப் படகிலிருந்து ‘பைனாகுலர்’ மூலம் பார்க்கலாம். கரையோரமாகப் படகைச் செலுத்தினால் பைனாகுலர் இல்லாமலேயே பார்க்கலாம். சுகவாசத்துக்கு ஏற்ற இடம்தான்; சந்தேகமே இல்லை.
இருந்தாலும் என் மனத்தில் நிம்மதி இல்லை. திடீரென்று உங்கள் நட்பும் பழக்கமும் பல மைல் தொலைவுக்கு அப்பால் போய் விட்டதுபோல ஒர் ஏக்கம் என்னை வாட்டுகிறது. சதா உங்களைப் பற்றிய நினைவுதான். இப்படியே தொடர்ந்து இன்னும் சில நாட்களுக்கு உங்களைப் பார்க்காமலோ, பேசாமலோ இருந்தேனானால், எனக்குப்பைத்தியம் பிடித்தாலும் பிடித்துவிடும் போலிருக்கிறது.எனவே, தயவுசெய்து கண்டிப்பாக இரண்டு மூன்று நாளில் உங்களை இங்கே எதிர்பார்க்கிறேன்.”
இக் கடிதம் பரமசிவத்தோடு எனக்கு இருக்கும் நட்பின் ஆழத்துக்குச் சாட்சி கூறிற்று. ‘ஆகா! இது அல்லவா நட்பு? நான் பரமசிவத்தின் பிரிவால் என்ன ஏக்கத்தை அடைந்திருந்தேனோ, அதே ஏக்கத்தை என் பிரிவால் அவரும் அடைந்திருக்கிறார். இதுதானே உயிருக்குயிரான உண்மை நட்புக்கு அடையாளம்!’ என்று எண்ணினேன். உடனே, மறுநாளே பரமசிவத்தின் அழைப்பை ஏற்றுக்கொண்டு, நான் புறப்பட்டு வருகிறதேதி குறித்து அவருக்கு ஒரு பதில் கடிதம் எழுதித் தபாலில் சேர்த்துவிட்டேன். சீக்கிரமே புறப்படவும் செய்தேன்.
உத்தமபாளையம், கம்பம், கூடலூர் இவைகள் மதுரை ஜில்லாவின் மேல்கோடிப் பிரதேசங்கள். கூடலூருக்கு மேற்கே குமிழி என்ற இடம் வரையில்தான் சென்னை மாகாண எல்லை. அதற்கு அப்பால் திருவனந்தபுரம் ‘ஸ்டேட்’ எல்லை. இந்த மேல்கோடி ஊர்களுக்கு இருப்புப் பாதை மார்க்கம் கிடையாது. பஸ் பிரயாணம்தான். மதுரையிலிருந்து கம்பம் வரைக்கும் ஒரு பஸ். கம்பத்தில் குமிழி பார்டர் (எல்லை) வரை, மலைப் பிரயாணத்துக்கு வசதியாக அமைக்கப்பட்ட குறைவான பிரயாணிகளைக் கொண்ட வேறோர் பஸ். செங்குத்தாக 'S' 'Z' என்ற ஆங்கில எழுத்துக்கள்போல் வளைந்து வளைந்து செல்கிற மலை ரஸ்தா. பிரயாணம் இன்பகரமாகத்தான் இருந்தது.ஆனால் அபாயமும் பயமும் நிறைந்த ஒரு ரஸ்தா அது! பஸ் ‘மக்கர்’ செய்துவிட்டால் கூண்டோடு கைலாசம்தான்.
குமிழியில் ‘பரமசிவம்’ தயாராக என்னை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்.அவருக்கு ஒரே மகிழ்ச்சி.நான் வந்த சந்தோஷத்தில் அப்படியே சிறு குழந்தை மாதிரிக் கட்டித் தழுவிக்கொண்டு விட்டார். அங்கிருந்து தேக்கடிக்கு ஓர் ஒற்றை மாட்டு வண்டியில் போய்ச் சேர்ந்தோம். உண்மையிலேயே அந்த இடத்தின் மலை வளம் அபாரமானதுதான்.
தேக்கடி என்ற இடம்தான் பெரியாறு ஏரியின் நுனிப் பகுதி.அங்கிருந்து மலையை அடியில் குடைந்து தண்ணீரை அந்த குடைவின் வழியாக அடிவாரத்துக்குக் கொண்டு வருகிறார்கள். மலையின்மேல் குடைவில்தான், தண்ணீர் ஏரியிலிருந்து கிளம்பும் இடத்தில்தான், பிரதானக் கால்வாய் இருக்கின்றது. இதன் அருகே ஒரு மேட்டில் பரமசிவத்தின் வீடு இருந்தது. அருகே ‘பி.டபிள்யூ டி குவார்டர்ஸை’ச் சேர்ந்த பல சிறுசிறு வீடுகள் இருந்தன. அது மலேரியாப் பிரதேசமாகையினால் சர்க்கார் ஊழியர்களின் செளகரியத்திற்காக நிறுவப்பட்டிருந்த ஆஸ்பத்திரி ஒன்றும் அங்கே இருந்தது. இந்தக் கட்டிடங்களுக்கும் இதைச் சுற்றி இருந்த அடர்ந்த தேக்குமரக் காட்டிற்கும் சேர்ந்து மொத்தமாக ஏற்பட்டிருந்த பெயர்தான் ‘தேக்கடி’ என்பது.
பரமசிவத்திற்குப் பரம சந்தோஷம் எனக்கு உபசாரங்களெல்லாம் தடபுடல்தான். நான் திணறிப்போகும்படி ஜமாய்த்துவிட்டார்.
“ஸார்! நீங்கள் வந்ததும், ஏதோ இழந்துபோன குபேர சம்பத்தைத் திரும்பப் பெற்றுவிட்டதுபோலத் தோன்றுகிறது. சென்ற ஒரு வாரமாக வலது கை ஒடிந்து போனவன் மாதிரி தவித்துப் போனேன். எனக்கு என்னவோ மாதிரி இருந்தது.”
“உங்களுக்கு மட்டும்தானா அப்படி? நீங்கள் இங்கே மாற்றலாகி வந்தீர்களோ இல்லையோ; அங்கே மதுரையில் எனக்கு ஒரு காரியமும் ஒடவில்லை. அஞ்சாறு மாசம்தான் என்றாலும் கண்ணுக்குக் கண்ணாக, உயிருக்கு உயிராக, அவ்வளவு தூரம் இணக்கமாகப் பழகிவிட்டோமே.”
“இப்படியே விடுமுறை பூராவும் இங்கேயே இருந்து விடுங்களேன்.” பரமசிவத்தின் வேண்டுகோளுக்குப் பதில் சொல்லாமல் சிரித்தேன்.
“என்ன சிரிக்கிறீர்கள்?”
“இந்த அன்பு எவ்வளவு தூரம் மனிதர்களைப் பைத்தியங்களாக்கி விடுகிறதென்று நினைத்துக் கொண்டேன். சிரிப்பு வந்துவிட்டது.”
“எப்படியோ போகிறது! ஒரு மாசமாவது இருந்துவிட்டுப் போங்கள்.”
“இருக்க முடிந்தால் பார்க்கிறேன்.”
“அது சரி! இன்று பெளர்ணமி. நிலாவில் ஏரிப் பிரயாணம் மனோரம்யமாக இருக்கும். விசைப் படகுக்கு ஏற்பாடு செய்து விடுகிறேன். இரவுச் சாப்பாட்டுக்கு மேல் ஒன்பது மணிக்குப் புறப்படுவோம். கரையோரத்தில் யானை, மான், காட்டுமாடு, முயல்கள், கரடிகள் எல்லாம் மந்தை மந்தையாகத் திரிவதைப் படகில் இருந்தே பார்க்கலாம்.”
“தாராளமாக கரும்பு தின்னக் கூலியா? நான் தயார். புது இடத்தில் எனக்கும் உறக்கம் வராது.”
பரமசிவம் நிலவில் ஏரிப்பிரயாணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு வந்தார். ‘ஏறக்குறைய அறுபது மைல் விஸ்தீரணம் மூலை முடுக்குக்களாகப் பிரிந்து, பிரிந்து உப்பங்கழிகளைப்போல நீளமாகச் செல்கிறது’ என்று பெரியாறு ஏரியைப் பற்றி எங்கோ படித்து அறிந்து கொண்டிருந்தேன்.
இரவு நிலாவில் பிரயாணம் செய்யும்போது நான் கேள்விப்பட்டிருந்த உண்மையை நிதரிசனமாகக் கண்டேன். தண்ணீரில் நனைந்த வெள்ளைத் துணிபோல் நிலா மங்கலாக அதிக ஒளியில்லாமல் தேவையான ஒளியுடன் காய்ந்து கொண்டிருந்தது. பாலில் தோய்த்து எடுத்த நீலநிற வைரக்கற்களைப் போல, நிலா ஒளியில் மலைச் சிகரங்கள் அழகாகக் காட்சி தந்தன. விசைப் படகு நீரைக் கிழித்துக்கொண்டு சென்றது. படகில் பரமசிவம், நான், அதை ஒட்டுகின்ற ஆள், ஆக மூவரே இருந்தோம். பெட்ரோலில் இயங்கும் மோட்டார் டைனமோவின் ‘டபடபடபடப’ வென்ற சப்தமும், நீர் கிழிபட்டுச் சிதறும் ஒலியுமாக, அந்த நேரத்தின் அமைதியைக் குலைத்தது. ஏரி தேக்கப்படுவதற்கு முன்பே இருந்த மரங்கள், ஏரியின் இடையே பட்டுப்போய் மொட்டை மொட்டையாக நின்றன. தண்ணீர் தேங்குமுன் அவற்றை வெட்டாமல் விட்டதின் விளைவு இது.
ஏரி சில இடங்களில் அகன்றும் சில இடங்களில் குறுகியும் அமைந்திருந்தது. கரைகளில் கும்மென்று மரங்கள் இருண்டு அடர்ந்து வளர்ந்திருந்தன. அந்த மனோரம்யமான பிரயாணம் ஏதோ ‘பூலோகத்திலுள்ள சொர்க்கத்தின் வழி’ என்று தோன்றியது எனக்கு. இந்த அருமையான காட்சியை என் நண்பர் பரமசிவத்தால் அல்லவா நான் காண முடிந்தது? அவருக்கு எவ்வளவு நன்றி செலுத்தினாலும் தகுமே?
படகு போய்க் கொண்டே இருந்தது. இரண்டு மூன்று மைல்களைக் கடந்து வந்து விட்டோம்.
“அதோ பார்த்தீர்களா?” - பரமசிவம் தொலைவில் கரையோரத்தைச் சுட்டிக் காட்டினார்.
அந்த இடத்தில் நிலாவின் மங்கிய ஒளியில், ஐந்தாறு யானைகள் நீர் பருகிக் கொண்டிருந்தன. இன்னொரு இடத்தில் புல்வெளியில் மான்களும் காட்டெருமைகளும் மேய்ந்து கொண்டிருந்தன. ஓரிடத்தில் ஈசல் புற்றைச் சுற்றி, இரண்டு மூன்று கரடிகள் காலால் துளைத்துக் கொண்டிருந்தன. ஏரியின் நடுவில் வேகமாக விசைப் படகில் போய்க்கொண்டே இவ்வளவையும் பார்ப்பது வேடிக்கையாகத்தான் இருந்தது.
திடுதிப்பென்று ‘மோட்டார் டைனமோ’வின் டபடபவென்ற ஓசை நின்றது. படகு நிலை தடுமாறி வேகமாக அதிர்ந்து ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு நின்றது.
“என்னப்பா? என்ன? ஏன் ‘டைனமோ’ நின்றுவிட்டது?” பரமசிவம் பதறிப் போய்க் கேட்டார். டிரைவர் உதட்டைப் பிதுக்கினான். “மோட்டாரிலே ஏதோ சிறு கோளாறு போல் இருக்குது.அதனாலே ‘பெட்ரோல்’ எடுக்கமாட்டேன் என்கிறதுங்க”
“ஐயையோ! இந்த நட்ட நடு ஏரியிலே ஏழெட்டு மைல் வந்தப்புறம் இப்ப என்னப்பா செய்கிறது?”
“வேறென்ன செய்யலாம்? ஆபத்துக்கு ஆகட்டும் என்று படகுக்குள்ளே கைத் துடுப்புக்கள் கொண்டு வந்திருக்கோமே, அதை எடுத்துத் தள்ளவேண்டியதுதான்.”
“இனிமேல் மோட்டார் ‘ஒர்க்’ பண்ணாதா?”
“‘மைனர் ரிப்பேர்’தான்! அதை முடிச்சிட்டா ஓடும். இங்கேயே கரையோரத்தில், படகைத் தள்ளி மோட்டாரைக் கழற்றி ரிப்பேரை முடிச்சா நல்லதுதான். ஆனால் கரையோரத்திலே மிருகங்கள் பழகற நேரம் இப்போது அங்கே படகை ஒதுக்கறதே தப்பாச்சுங்களே?”
“பரவாயில்லை! சீக்கிரமா முடித்துக்கொண்டு புறப்பட்டு விடுவோம். கையாலே துடுப்புத் தள்ளி எந்த ஜன்மத்தில் கரைக்குப் போகிறது. அது முடியாது. வா! வா! இப்படியே ஒதுக்கி மோட்டாரைக் கழற்று.” - பரமசிவம் டிரைவரை நோக்கிக் கூறினார்.
“வேண்டாமுங்க! இந்த நேரத்திலே கரையோரத்திலே படகை ஒதுக்கறது ஆபத்து.”
“அட! சரிதான், சொன்னாக் கேளப்பா!”பரமசிவத்தின் பிடிவாதத்தினால் அந்தப் பயங்கரமான மிருகங்கள் பழகும் கரையோரத்தில், கைத் துடுப்புக்களால் படகை ஒதுக்கினான் அவன்.படகிலிருந்து மோட்டார் டைனமோ தனியே கழற்றப் பெற்றது.
படகு அலைந்து நீரில் நடுப் பகுதிக்குப் போய்விடக் கூடாதே என்பதற்காக, அதைத் துடுப்புக்களால் முட்டுக்கொடுத்து இழுத்து அணைவாகப் பிடித்துக் கொள்ளவேண்டியிருந்தது. எங்கள் மூவரில் அதிகக் கனமாக, வளமான உடல்பெற்றவர் பரமசிவம்தான். அவர் பிடித்துக் கொண்டால்தான் படகும் ஓடாமல் நிற்கும். நாங்கள் கொத்தவரங்காய் மாதிரி ஒல்லியானவர்கள். எனவே, பரமசிவம் படகை இழுத்துக் கரையோரமாகப் பிடித்துக் கொண்டார். நானும் டிரைவருமாக டைனமோவை மோட்டாரோடு கழற்றிக் கரைக்குக் கொண்டு போனோம்.
கரையருகே அடர்ந்து செறிந்த புதர். புலி, கரடி எது வேண்டுமானாலும் அந்தப் புதருக்குள் இருக்கலாம். எனக்கு ஒரே நடுக்கம். டிரைவருக்கு என்னைவிட நடுக்கம். ஒருவருக்கொருவர் நடுக்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், மகா தைரியசாலி களைப்போல நடித்துக்கொண்டு, “மோட்டார் டைனமோ”வைப் பிரித்தோம். மங்கிய நிலாவின் ஒளி கரையில் சரியாக விழவில்லை. டிரைவர் பையிலிருந்த தீப்பெட்டியை எடுத்து ஒவ்வொரு குச்சியாகக் கிழித்து ஒளி உண்டாக்கிக் கொண்டே, ‘ரிப்பேரை’ச் செய்யலானான். நான் அவனுக்கு ஒத்தாசையாக அருகில் இருந்தேன். இப்படியாக ‘மோட்டார் டைனமோ ரிப்பேர்’ நடந்துகொண்டிருந்தது.
அநேகமாக வேலை முடிந்துவிட்டது. கிளம்ப வேண்டியதுதான். நாசமாய்ப் போகிற விதி. அந்தச் சமயம் பார்த்து எங்களைச் சோதித்துவிட்டது.
திடீரென்று நாங்கள் சற்றும் எதிர்பாராத விதமாகப் புதரில் சலசலப்பு உண்டாயிற்று. அடுத்த விநாடி அந்தச் சாதாரணமான சலசலப்பு, காடே அதிரும்படியான ஒரு கர்ஜனையாக மாறிற்று. எங்களுக்கு இரத்தம் உறைந்துவிட்டது. எனக்கும் சரி, டிரைவருக்கும் சரி, ஒடுவதற்குக் கால் எழும்பவில்லை! புதருக்குள் சலசலப்பு அதிகமாயிற்று.
“வாருங்கள்! வாருங்கள், படகுக்கு ஓடிவிடுவோம். ஐயோ புலி நரவாடையைக் கண்டுகொண்டு விட்டது. இனி விடாது...” டிரைவர் தன்னைச் சமாளித்துக் கொண்டு, என் கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துக்கொண்டு கரைக்கு ஓடினான்.
ஆனால், கரையில் படகுமில்லை. படகை இழுத்துப் பிடித்துக்கொண்டு நின்ற பரமசிவமும் இல்லை. நடுத் தண்ணிரிலே படகில் துடுப்பைப் போட்டுத் தள்ளிக்கொண்டிருந்தார். எங்கள் இருவர் உயிர் போனாலும் பரவாயில்லை; தம் ஒருவருடைய உயிர் பிழைத்தால் போதும் என்று கிளம்பி விட்டார் அவர்.
“அட் கொலைகாரப் பாவீ உன் உயிர்தான் உனக்குப் பெரிசா?” - டிரைவர் இரைந்து அலறினான். பரமசிவம் திரும்பிப் பார்க்கவேயில்லை. துடுப்பை வேகமாக வலித்து, நடு ஏரிக்கு ஒடிக் கொண்டிருந்தார், புலியின் உறுமல் எங்களை மிக அருகில் நெருங்கிவிட்டது;
“சாமீ! நீச்சுத் தெரியுமா உங்களுக்கு? குதியுங்க, தண்ணீரிலே! இல்லைன்னா இன்னிக்கு நம்ம ரெண்டு பேரும் புலிக்குப்பலியாக வேண்டியதுதான்!”
“ஐயையோ எனக்கு நீச்சுத் தெரியாதே”
“பரவாயில்லை! இதோ.. என் இடது கையைப் பிடிச்சுக்குங்க” - என்னையும் இழுத்துக்கொண்டு குபிரென்று தண்ணீரில் பாய்ந்துவிட்டான் டிரைவர். நீரில் குதித்து, என்னையும் இழுத்துக்கொண்டு நீந்திய அவன், வேகமாக நீர் நடுவிலிருந்த ஒரு மரத்தைப் போய்த்தொத்திக் கொண்டான். நானும் தொத்திக்கொண்டேன். இருவரும் கரையைப் பார்த்தோம். அங்கே ஓர் அதிசயம் நிகழ்ந்து கொண்டிருந்தது. மோட்டாரிலிருந்த பெட்ரோல் குழாயில் டிரைவர் கிழித்துப் போட்ட நெருப்புக் குச்சி விழுந்து ஒரு பாக உயரத்துக்கு ஒரு தீ ஜ்வாலை எரிந்து கொண்டிருந்தது. அதைக் கண்டு தயங்கி, மிரண்டு ஒரு பூதாகாரமான வேங்கைப் புலி ஓடிக்கொண்டிருந்தது. உயிருக்குயிரான நண்பன் காப்பாற்ற மறுத்த எங்களை, அஜாக்கிரதையால் பெட்ரோலில் விழுந்த ஒரு சிறு நெருப்புக்குச்சி காப்பாற்றிவிட்டது. புலி போன சிறிது நேரத்திற்கெல்லாம் பரமசிவம் படகோடு வந்தார். டிரைவர் அவரை அடிக்கக் கையை ஓங்கிவிட்டான்; நான்தான் தடுத்தேன். பின்பு எப்படியோ நாங்கள் எல்லாரும் இரவு இரண்டு மணிக்குத் திரும்பிவந்து சேர்ந்தோம்.
4
மறுநாள் காலையிலேயே நான் சொல்லாமல் ஊர் கிளம்பிவிட்டேன். இந்த உலகத்தில் நட்பைவிட, மானத்தைவிட - ஏன்? எல்லாவற்றையும்விட பெரிய விஷயம் ஒன்று இருக்கிறது. அதுதான் சொந்த உயிர் இது எனக்குப்புரிந்து விட்டது! எப்போது தெரியுமா? அந்த மங்கிய நிலா இரவில்தான்! சந்தர்ப்பம் அளித்த பாடம் அது.
(1963-க்கு முன்)