உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. பாண்டியன் இலவந்திகைப் பள்ளித்

துஞ்சிய நன்மாறன்

I

மிழணங்கின் தலை மகனாராகிய அகத்தியனார் வாழும் பொதிய மலையின் சரிவிலுள்ள தவச்சாலை யொன்றில் பொன்னிறமாகிய மாலை வெயிலின் எழிலைக் கண்டு மன மகிழ்வு மிகப் பெற்ற முனிவர் ஒருவர் அமர்ந்திருந்தார். இயற்கைச் செல்வியின் இனிய தோற்றத்தைத் தம்உள்ளத்தாற் கொள்ளை கொள்வாராய் இருந்த அத்தவச் செல்வர், இனிய நீர்ப் பெருக்கும் இன்கனி வளமும் மண மிகு தென்றலுங் கொண்ட அம்மலை வாழ்வை விடுத்து மன்னர் மன்னனாய் இருக்கும் வாழ்வையும் விரும்பார் எனவே அவர் முகத் தோற்றம் விளக்கியது. ஆயினும், அவர் முகத் தோற்றம் அறிவால் முதியவர் என அவரைத் தெரிவித்ததாயினும் ஆண்டினால் முதியவரென விளக்கவில்லை. சமீபத்திற் சென்று பார்ப்போர்க்கு அவரை யௌவனப் பருவம் கடவாதவர் என்றே மதிக்கத் தோன்றும். இளமையும் இளமைக் கேற்ற எழிலும் அவரிடம் பொருந்தியிருந்தவாயினும், உலக நிலையில் அவ்விரண்டாலும் அடைதற்குரிய அறப் பயனை அவர் விலக்கி வந்து வன வாழ்க்கை பூண்டிருந்ததால், அவர் உடம்பின் நிறமும் பொன்னிறமாய் விளங்கியது. எழுமையும் ஏமாப்பு உதவுவதாகிய அறத்தைக் கொண்டு ஆமை போல ஐந்தும் அடக்கக் கருதி