சிலம்போ சிலம்பு/சிலம்பில் போர்கள்
12. சிலம்பில் போர்கள்
சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள போர்கள் சில, பல தலைப்புகளில் அங்கும் இங்குமாகக் குறிப்பிடப் பட்டிருப்பினும், அவற்றையெல்லாம் தொகுத்து இந்தத் தலைப்பின் கீழ்க் காணலாம்.
முசுகுந்தச்சோழன் அரக்கரோடு போர்செய்தான். தொடித்தோள் செம்பியன் வானில் தூங்கு எயில் எறிந்தான்.
கரிகால் சோழன் வடக்கே படையெடுத்துச் சென்று வடவரை வென்று இமயத்தைச் செண்டால் அடித்துப் புலிக்கொடி நாட்டி வந்தான்.
பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானம் என்னும் இடத்தில் தன் இளம் பருவத்திலேயே பகைவர் எழுவரை வென்றான். ஆரிய ப் ப டை கடந்த நெடுஞ்செழியன் இமயமும் கங்கையும் வென்றான்.
ஒரு சேரன் கடலிலே பகைவரின் கடம்பு எறிந்து வென்றான்.
பொற்கைப் பாண்டியன் இந்திரன் முடிமீது வளை என்னும் படைக்கலத்தை எறிந்து தகர்த்தான்.
இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் வடக்கே இமயம் வரை படையெடுத்துச் சென்று வென்று 'இமயவரம்பன்' என்னும் சிறப்புப்பெயர் பெற்று ஒரு மொழி வைத்து நாவலந் தீவு (இந்தியா) முழுமையும் ஆண்டான். சேரன் செங்குட்டுவன் கொங்கர் செங்களத்திலே பகைவரை வென்று களவேள்வி செய்தான்; தாயைக் கங்கையில் நீராட்டச் சென்று எதிர்த்த படைகளை வென்றான்; தன் மைத்துனச் சோழனாகிய கிள்ளியைப் பங்காளிச் சோழர்கள் ஒன்பதின்மர் நேரி வாயில் என்னும் இடத்தில் எதிர்த்தபோது அவர்களை வென்று மைத்துனனுக்கு அரசு நிலைக்கச் செய்தான்; மோகூரில் பழையன் என்பவனின் காவல் மரமாகிய வேம்பை வெட்டி வெற்றி வாகை சூடினான்; வியலூரை வென்றான்; இடும்பில் என்னும் இடத்தில் கொடும்போர் புரிந்து பகைவரை வென்றான்.
மற்றும் செங்குட்டுவன், கனக விசயருடன் உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்திரன், சிவேதன் என்னும் வடபுல வேந்தர்கள் சேர்ந்து கொண்டு பொர எழுந்தபோது, அவர்கள் அனைவரையும் வென்று வீழ்த்தினான்; கனக விசயரின் முடிமேல் கண்ணகிக்குச் சிலை செய்யும் கருங்கல்லை ஏற்றிச் சுமக்கச் செய்து கொண்டு வந்தான்.
இவ்வாறு மன்னர்கள் புரிந்த போர்களேயன்றி, சிவன், திருமால், முருகன், கொற்றவை ஆகியோர் புரிந்த போர்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குறிப்பிடப் பட்டுள்ளன.
ஒவ்வொரு போரையும் விரிப்பின் பெருகிப் பெருநூலாக விரியும்.