சிலம்போ சிலம்பு/காப்பியத்தில் கலைகள்

விக்கிமூலம் இலிருந்து

11. காப்பியத்தில் கலைகள்

கலைகள் அறுபத்து நான்கு என்பர். இது ஒரு வகை வரையறை. ஆனால், காலந்தோறும் புதுப் புதுக்கலைகள் பூக்கலாம். ஒவ்வொரு கலைக்கென்றும் தனித்தனி நூல்கள் உண்டு. தனி நூல்களிலே கூறப்பட்டுள்ள தன்றி, வேறு நூல்களில் இடையிடையே கலைகள் இடம் பெற்றிருப்பதும் உண்டு. இவ்வகையில், இயல் இசை நாடகப் பொருள் தொடர்நிலைச் செய்யுள் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தில் சில கலைகள் பெரிய அளவில் இடம்பெற்றிருப்பதில் வியப்பில்லை. இந்நூலில், இயல் கலையினும் இசைக் கலைக்கும் கூத்துக் (நாடகக்) கலைக்கும் மிக்க இடம் உண்டு.

அரங்கேற்று காதையில், பல்வேறு ஆசிரியர்களின் இலக்கணம், அரங்கின் இயல்பு முதலியவை கூறப்பட்டு உள்ளன. இனி அவற்றைக் காண்பாம்:

1. மாதவியின் ஆடல் பயிற்சி

அகத்தியரின் சாபத்தால் இந்திரன் உலகத்திலிருந்து வந்த உருப்பசியோ என எண்ணும்படி மாதவி திகழ்ந்தாள்; கூத்து, பாட்டு, அழகு ஆகிய மூன்றிலும் குறையாதவள். ஐந்தாம் அகவையில் தண்டியம் பிடித்து ஏழாண்டு பயிற்சி பெற்றபின் பன்னிரண்டாம் வயதில் சோழ மன்னனின் அவையில் அரங்கேற்றம் செய்யப் பெற்றாள்.

2. ஆடலாசிரியன் இயல்பு

1. ஆடலாசிரியன், வகைக் கூத்து - புகழ்க் கூத்து, வேத்தியல் - பொதுவியல், தமிழ்க் கூத்து - ஆரியக் கூத்து என மாறுபட்ட இரண்டிரண்டாக வரும் அகக்கூத்து இலக்கணமும் புற நாடகமும் அறிந்திருத்தல்.

2. பாட்டு உறுப்பு பதினான்குடன் ஆடலைப் பொருத்தல்.

3. அல்லியம் முதலிய பதினொரு கூத்து வகை அறிதல்.

4. அக நாடகங்கட்கு உரிய இருப்பத்தெட்டு உருக்களை அறிதல்.

5. புறநாடக உறுப்பாகிய தேவபாணி முதலியன அறிதல்.

6. கூத்து விகற்பங்கட்கு உரிய வாச்சியக் கூறுகளை அறிந்திருத்தல்.

7. பாடல், தாளம், தூக்கு ஆகியவற்றிற்கு ஏற்ப, அகக் கூத்தும் புறக்கூத்தும் நிகழ்த்து மிடத்து, ஒற்றைக் கையும் இரட்டைக் கையும் காட்டும் நுட்பம் அறிதல்.

8. அகக்கூத்தில், ஒற்றைக் கைத்தொழில் இரட்டையில் புகாமலும், இரட்டைக் கைத்தொழில் ஒற்றையில் புகாமலும் விலக்கல்.

9. புறக்கூத்தில் ஆடல் நிகழும்போது அவிநயம் நிகழாமலும் அவிநயம் நிகழுங்கால் ஆடல் நிகழாமலும் விலக்கல்.

10. குரவைக் கூத்துக்கு உரிய கால்களும் வரிக் கூத்துக்கு உரிய கால்களும் விரவாமல் காத்தல். முதலியவை ஆடல் ஆசிரியனுக்கு இருக்கவேண்டிய இயல்புகளாம்.

3. இசையாசிரியன் இயல்பு

1. யாழிசையும் குழலிசையும் வண்ணக் கூறுபாடுகளும் தாளக் கூறுபாடுகளும் மிடற்றுப் பாடலும் தண்ணுமை நிலையும் பதினோராடல் கூத்துகளும் அறிந்திருத்தலோடு அவற்றில் வல்லமையும் பெற்றிருத்தல் வேண்டும்.  2. இயற்றிய உருக்களை இசைகொள்ளும்படியும் சுவை (இரசம்) கொள்ளும்படியும் புணர்த்துப் பாடவேண்டும்.

3. செந்துறை, வெண்டுறை ஆகிய இருவகைப் பாடலுக்கும் உரிய இயக்கம் நான்கும் அறிந்து, இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் ஆகியவற்றிற்கு ஏற்ப இசை கடைப்பிடித்து, இசை வேறுபாடுகளைக் குற்றமற அறிந்திருத்தல் வேண்டும்.

4. இயல் புலவன் (பாடல் எழுதிய ஆசிரியன்) நினைத்த கருத்து, ஆடல் ஆசிரியன் அறிவிக்கும் அவிநயம், இவற்றிற்கு ஏற்ற பாட்டு ஆகியவற்றை உணர்ந்து பாடல் வேண்டும் - முதலியன இசையாசிரியனுக்கு இருக்கவேண்டிய இயல்புகளாம்.

4. இயல் கவிஞன் இயல்பு

1. நான்கு எல்லைக்கு உட்பட்ட தமிழ்நாடு அறியும்படி முத்தமிழிலும் வல்லமை பெற்றிருத்தல் வேண்டும்.

2. வேத்தியல், பொதுவியல் என்னும் இருநாடக நூல் அறிவு பெற்றிருத்தல்.

3. பதினொரு பண் நீர்மை அறிந்து தாளம் பொருந்தப் பாடல் இயற்றுதல்.

4. வசையற்ற மொழிகளால் பாடல் இயற்றுதல் - முதலியன பாட்டு இயற்றுவோனுக்கு உரிய இயல்புகளாம்.

5. தண்ணுமைக்காரன் இயல்பு

1. எல்லா ஆடல்களும் பண்ணல் முதலிய பாடல் வகை களும் அறிதல்.

2. 16991 ஆதி இசைகளை அறிந்திருத்தல்.

3. வடவெழுத்து நீங்கி வந்த எழுத்துக்களாலே இசைத்துச் சேர்க்கப்பட்ட வாக்கியக் கூறுகளும் மூவகைத் தமிழும் அறிதல். 4. பண், தாளம், தூக்கு இவற்றின் விகற்பம் அறிதல். இவற்றின் குற்ற நற்றங்களும் அறிதல்.

5. இயற் சொல் முதலிய நான்கு சொல்லாட்சிகளை அறிதல்.

6. உரு நெகிழாதபடி நிறுத்தல்.

7. நிற்குமானம் நிறுத்திக் கழியுமானம் கழிக்க வல்லவனாதல்.

8. யாழ், குழல், மிடறு ஆகியவற்றின் இசைக்கு இயைய வாசித்தல்.

9. மற்ற கருவிகளின் குறையை நிரப்புதல்-மிகையை அடக்குதல்.

10. கைத் தொழில் அழகு பெறச் செய்து காட்டல் - முதலியன தண்ணுமை (மத்தளம் - மிருதங்கம்) வாசிப் பவனுக்கு இருக்க வேண்டிய இயல்புகளாகும்.

6. குழல் ஆசிரியன் இயல்பு

1. சித்திரப் புணர்ப்பும் வஞ்சனைப் புணர்ப்பும் அறிதல்.

2. பாடலாசிரியனைப் போல் ஒத்த அறிவுடைமை.

3. ஊதும் துளைகளில் சுட்டு விரல் முதலாக விட்டுப் பிடிப்பது ஆரோகணம் - சிறு விரல் முதலாக விட்டுப் பிடிப்பது அவரோகணம்- இவற்றை அறிந்து ஒழுகல்.

4. 103 பண்ணிர்மையும் 14.கோவையும் அறிதல்.

5. முழவு, தண்ணுமை, யாழ், மிடறு (வாய்ப்பாட்டு)இவற்றின் இசைக்கு ஏற்ப ஒத்திசைத்தல்.

6. முதல் நடை, வாரம், கூடை, திரள் என்னும் இயக்கம் நான்கனுள் முதல் நடை தாழ்ந்த நடையாதலாலும் திரள் முருக்கு நடை யாதலாலும் அவற்றை விட்டு, சொல் ஒழுங்கும் இசை ஒழுங்கும் உடைய வாரப் பாடலை அளவறிந்து நிறுத்த வல்லவனாதல்.

7. எழுத்துகள் சிதையாமல், எழுத்தை எழுத்தாக இலக்கணப்படிக் குற்றமின்றி இசைத்துக் காட்டல்-முதலியன குழலாசிரியன் இயல்புகளாம்.

7. யாழ் ஆசிரியன் இயல்பு

1. பதினான்கு கோவை பொலிந்து பாடல் இயல்புக்கு ஒத்திருத்தல்.

2. ஏழு பாலையினையும் இணை நரம்பாகத் தொடுத்து நிறுத்தல்.

3. பன்னிரு முறை திரித்துப் பன்னிரு பாலை பிறப் பித்தல்.

4 பெண்டிர்க்கு உரிய தானமாகிய பதினாறு கோவையிலே பொருந்தக் கூட்டல்.

5. எல்லாப் பாலைகளையும் ஒழுங்குறப் பிறப்பித்தல்.

6. வலிவு - மெலிவு - சமன் எனப்படும் தான நிலை அறிதல்.

7. நரம்படைவு கெடாமல் பண் நீர்மை குன்றாமல் புணர்க்க வல்லவனாதல்.

8. புணர்ப்பிற்கு அமைந்து எழுத்துகளால் இசை செய்தல் - முதலியன யாழ் ஆசிரியன் இயல்புகளாம்.

8. அரங்கின் இயல்பு

1 நிலம்:

1. நிலக் குற்றம் நீங்கிய இடத்தில் அரங்கு அமைத்தல்.

2. தெய்வத் தானம், பள்ளி, அந்தணர் இருக்கை, கூவம், குளம், கா ஆகியவற்றை அண்மையில் உடைத்தாதல். 3. குழி - பள்ளம் படுகுழியின்மை - திண்ணியதாதல்.

4. மண் இனிய மணமும் சுவையும் உடையதாதல்.

5. எலும்பு, உமி, பரல், உவர்ப்பு, ஈளை, பொடி - இவைகள் இல்லாதிருத்தல்.

6. ஊர் நடுவே - தேரோடும் தெருவிலே இருத்தல் - முதலியன, அரங்கம் அமைக்க வேண்டிய இடத்திற்கு இருக்க வேண்டிய இயல்புகளாம்.

II அரங்க மேடை:

அரங்க மேடை பின் வருமாறு இருத்தல் வேண்டும். நல்லிலக்கண ஆடவனது பெரு விரலால் 24 கொண்ட அளவுக் கோலால் அளந்த ஏழு கோல் அகலம் - எட்டுகோல் நீளம் - ஒரு கோல் உயரம் உடையதாய் அரங்க மேடை இருத்தல் வேண்டும். போக வர இரண்டு வாயில்கள் இருத்தல் வேண்டும். அளவுக் கோல், பொதிய மலை போன்ற தெய்வ மலையிலிருந்து வெட்டி வந்த மூங்கிலா யிருக்க வேண்டும். கணுவுக்குக் கணு ஒரு சாண் இடைவெளி உள்ளதாயும் இருக்கவேண்டும். அத்தகைய கோலால் அளந்தமைக்க வேண்டும்.

III அரங்க அமைப்பு:

1. மக்கள் வழிபட நால்வகைக் குலப் பூதங்களின் ஒவியங்கள் தீட்டி வைத்திருத்தல்.

2. தூணின் நிழல் விழாவாறு விளக்குகள் அமைத்தல்.

3. இடத் தூணிலையிலே உருவு திரையாக ஒருமுக எழினி அமைத்தல்.

4. இரு வலத் தூணிலை யிடத்து உருவு திரையாக பொரு முக எழினி அமைத்தல்.

5. மேலே கூட்டுத் திரையாகக் கரந்துவரல் எழினி அமைத்தல். 6. வேலைப்பாடு மிக்க ஓவியம் எழுதிய மேற்கட்டி அமைத்தல்.

7. திங்கள் - வியாழன் - செவ்வாய் ஆகிய நாட்களில் முறையே வெண்மை - பொன்மை - செம்மை நிற முத்து மாலைகள் சரியும் தூக்கும் தாமமுமாகத் தொங்கி அசைய விடுதல் - ஆகியவை அரங்கத்தில் செய்யப்பட்டிருக்க வேண்டிய அமைப்புகளாகும்.

9. தலைக்கோல் இயல்பு

1. பகையை வென்று கொண்டு வந்த குடைக் காம்பு தலைக்கோலாதல் வேண்டும்.

2. கோலின் கணுக்களில் ஒன்பான் மணிகளும், இடையிலே சாம்பூநதப் பொன் தகடும் பதித்து வைத்திருத்தல்.

3. மன்னனின் அரண்மனையில் தலைக்கோல் வைப்பதற்கென்று தனி இருப்பிடம் அமைத்தல்.

4. தலைக்கோலைச் சயந்தனாக எண்ணி மறைவழி வழிபடல்.

5. நல்ல நாளிலே, தெய்வ ஆற்று நீரைப் பொற் குடத்தில் கொணர்ந்து தலைக்கோலை நீராட்டல்.

6. மாலை அணிதல் முதலிய அணிகள் செய்தல்.

7. யானை வர, முரசு முழங்க, அரசனும் ஐம்பெருங் குழுவும் உடன் இயங்க, தேரும் யானையும் கொண்டு வந்து, தேரில் நிற்கும் பாடகன் கையில் தலைக்கோலைத் த்ந்து, தேரினை நகர்வலம் வரச் செய்தல்.

8. அரங்கம் அடைந்ததும் தலைக்கோலை எதிர் முகமாக வைக்க வேண்டும்.

9. பின்னரே நடம் ஆடல் தொடங்க வேண்டும். இவையெல்லாம் தலைக்கோல் தொடர்பான நிகழ்ச்சிகளாகும்.

10. ஆடும் இயல்பு

1. ஆடல் நிகழ்வதற்கு முன் அரசர், அமைச்சர் முதலியோர் அவரவர் இடத்தில் அமர வேண்டும்.

2. ஆடும் இடம் மூன்று கோல் - ஆட்டுவார்க்கு ஒரு கோல் - பாடுநர்க்கு ஒரு கோல் - அந்தரம் ஒரு கோல் - குயிலுவர் நிலையிடம் ஒரு கோல் - ஆக, ஒவ்வொன்றுக்கும் இந்த அளவு இடம் இருக்கவேண்டும்.

3. மாதவி வலக்காலை முதலில் வைத்து அரங்கம் ஏறினாள்; வலப்பக்கத் தூணிடத்தே பொருமுக எழினி , பக்கம் சேர்ந்தாள்.

4. தோரிய மடந்தையர் இடத்துரண் அயலே ஒருமுக எழினிப்பக்கம் சேர்ந்தனர்.

5. இவர்கள் தீமை நீங்கி நன்மை உண்டாகுக எனத் தெய்வத்தை வேண்டிப் பாடல் வேண்டும் . ஒரொற்று வாரம், ஈரொற்று வாரம் ஆகிய இரண்டும் பாடலாம்.

6. பாடல் இறுதியில் எல்லா இசைக்கருவிகளும் இசைக்கப்படல் வேண்டும்.

7. குழல்வழி யாழும், யாழ்வழி மிடறும் (வாய்ப் பாட்டும்) தண்ணுமையும், தண்ணுமைவழி குடமுழாவும் செயல்பட வேண்டும். இடக்கை என்னும் கருவி முழவோடு ஒன்ற வேண்டும்.

8. பருந்தும் நிழலும்போல் இசைக்கருவிகள் ஒன்றுக்கு ஒன்று ஒத்து இசைக்கவேண்டும். மற்றும் கருவிகளும் பாடலும் ஆடலும் ஒத்து இருக்கவேண்டும்.

9. இந்த அமைப்புகளுடன், மாதவி, பதினொரு பற்றாலே நாடக நூல் வழுவாது ஆடினாள்.

10. பாலைப் பண் அளவு கோடாதவாறு, உருவுக்கு ஏற்பச் சொற்படுத்தியும் இசைப்படுத்தியும் பாட்டும் கொட்டும் கூத்தும் ஒன்ற மாதவி ஆடல் செய்தாள்: 11. முதல் நடையிலும் வாரத்திலும் தேசிக் கூத்தெல்லாம் ஆடினாள்;

12. மேற்கொண்டு வைசாக நிலையும் ஆடி முடித்தாள்;

13. பொற்கொடி போன்ற தோற்றத்துடன் நூல் முறை வழுவாமல், அவிநயம் - பாவம் தோன்ற, விலக் குறுப்பு பதினாலின் வழுவாமல் ஆடினாள்;

14. இவ்வாறு வெற்றிபெற ஆடியபின் தலைக்கோல் பட்டம் பெற்றாள்; அரங்கேற்றம் செய்யப்பட்டவளானாள். ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் பெறுமானமுள்ள பச்சைமாலையை மன்னனிட மிருந்து பரிசாகப் பெற்றாள்.

மேற்கூறியவற்றால், ஆடும் இயல்பு அறியப் பெற்றது.

இதுகாறும் மேலே அரங்கேற்று காதையில் அறிவிக்கப் பட்டுள்ள ஆடல் பாடல் கலைகள் தொடர்பான நிகழ்ச்சிகளுள் சிலவற்றைச் சுருக்கமாகப் பார்த்தோம். இவற்றை விரிப்பின் மிகவும் பெருகும். இனி மற்ற காதை களில் இடம்பெற்றுள்ள செய்திகள் சிலவற்றையும் மிகவும் சுருங்கக் காண்டாம்:

கானல் வரி மாதவி யாழை ஆய்வு செய்தாள்; செவியால் ஓர்ந்து பார்த்தாள்; இசை மீட்டிப் பார்த்தாள்; பின்னர்க் கோவலனிடம் தந்தாள். கோவலன் யாழ் வாசித்த பின் மாதவி வாசித்தாள்.

வேனில் காதை: கோவலன் பிரிந்த பின், மாதவி நிலா முற்றத்தில் வாயால் மேற்செம்பாலைப் பண் பாடினாள். அது மயங்கிற்று. பின் சகோட யாழ் கொண்டு அகநிலை மருதம், புற நிலை மருதம், அருகியல் மருதம், பெருகியல் மருதம் ஆகிய பண்களைப் பாடினாள் - இசை மயங்கிற்று.

புறஞ்சேரி இறுத்த காதை: கோவலன் பாணர்களுடன் யாழ் வாசித்தான். கோவலன் செங்கோட்டு யாழ் வாசித்தல் மிகவும் சிறப்பானது. அதாவது - நாற் பெரும் பண்ணிற்கும் முதலாகிய நால் வகை யாழினுள்ளும் செங்கோட்டு யாழிலே அறுவகை உறுப்பினுள் தந்திரிகரம், திவு என்னும் இரண்டையும் உறுதி பெறக் கட்டி வாசித்தான்.

ஊர் காண் காதை 'எண்ணெண் கலையோர் இரு பெரு வீதி (323 ஆம் அடி) - அதாவது (8X8=64) அறுபத்து நான்கு கலைகளில் வல்லவர்களின் தெருக்கள் மதுரையில் இருந்ததாம். ஒன்பான் மணிகள் தொடர்பான கலை வல்லுநர் இருந்தனராம்.

கட்டுரை காதை: வான நூல் கலையறிவு அன்றிருந்தது. மதுரையை எரி யுண்ணுதற்கு முன்பே, ஆடித் திங்கள் - தேய் பிறைப் பருவத்தில் காத்திகை மீனும் அட்டமி திதியும் கூடிய ஒரு வெள்ளிக்கிழமையில் மதுரை எரியுண்ணப்படும் - அரசும் கேடுறும் - என்பது அறிவிக்கப்பட் டிருந்ததாம்.

"ஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து
அழல்சேர் குட்டத்து அட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண"
(23:133-135)

என்பது பாடல் பகுதி. இப்பகுதி வான நூல் கலை.

நீர்ப் படைக் காதை: கணிக் (சோதிடக்) கலை யறிவு:- சேரன் செங்குட்டுவன் ஒரு நாள் கங்கைக் கரையில் மாலை வேளையில் விண்ணில் பிறை தோன்றியதைக் கண்டான். உடனே கணியன்.(சோதிடன்), வஞ்சி நீங்கி முப்பத்திரண்டு திங்கள் ஆகிறது எனக் கூறினானாம். வான நூல் கலை யோடு கணி நூல் கலை ஒற்றுமை உடையது.

நடுகல் காதை: சேரன் செங்குட்டுவன், போரில் வெற்றி வாகை சூடி வந்த மறவர்கட்கு, அகவல் மகளிரால் யாழிசை விருந்து அளித்தானாம். அதாவது:- வளைந்த தண்டினையும் இசை பொருந்தும் நரம்பினையும் பத்தரையும் உடைய சீறியாழை எடுத்தணைத்து, குரல் குரலாக வரும் செம்பாலைப் பண்ணுடன், துத்தம் குரலாய படுமலைப் பாலையும் அவ்வழியே செவ்வழிப் பாலை முதலியனவும் அழகிய இனிய குறிஞ்சிப் பண்ணும் ஆகியவற்றை அகவல் (பாடும்) மகளிர் பாடியது விருந்தாக இனித்ததாம். இது செவி விருந்து.

சேரன் செங்குட்டுவன் தன் மனைவி வேண்மாளுடன் அரண்மனை நிலா முற்றத்தில் வீற்றிருந்த பொழுது, ஆடலில் வல்ல கூத்தச் சாக்கையன் என்பவன், கொட்டிச் சேதம் (கொடு கொட்டி) என்னும் கூத்தை ஆடி மகிழ்வித் தானாம். இந்தக் கூத்து சிவனால் ஆடப் பட்டதாம். சிவன் ஆடியதில் உள்ள சிறப்பாவது: சிவன் தன் இடப் பாகத்தே உமாதேவியை வைத்துக் கொண்டே ஆடினானாம். அங்ஙனம் ஆடியபோது, உமாதேவியின் காலணியும், தோளணியும் நடுங்க (அசைய) வில்லை - மேகலை ஒலி செய்யவில்லை. முலைகள் அசையவில்லை - காதணி குலுங்க வில்லை - கூந்தல் அவிழவில்லை - இத்தகைய திறமையுடன் சிவன் ஆடிய கூத்தை இங்கே சாக்கையன் ஆடினான்.

இதுகாறும் கூறப்பட்டுள்ள கலைகளைப் பற்றி ஆழ்ந்து எண்ணுங்கால் தலை சுற்றுகிறது. எந்தக் கலையிலும் திறமையில்லாத நிலையை நினைக்குங்கால் அச்சமும் நாணமும் போட்டி போடுகின்றன. இந்தக் கலை நுட்பங்களைப் புரிந்து கொள்வதே அரிதாயிருக்கையில் இவற்றில் திறமைக்கு இடமேது? இத்தகு கலை வல்லுநர்கள் சிலர் இன்றும் உள்ளனர். அவர்கள் போதிய அளவு சிறப்படையச் செய்ய வேண்டும். வயிற்றுப் பிழைப்பை மட்டும் கவனிப்பவர்கட்கும் பொருளிட்டும் பொறிகட்கும் (எந்திர மனிதர்கட்கும்) கலையாவது கத்தரிக்காயாவது? மேலும் புதிய கலைகளை ஆக்கி வளர்ப்பதோடு, பழைய் கலை களையும் அழிய விடாமல் போற்றிப் பேண வேண்டுவது மக்களின் கடமையாகும்.