சிலம்போ சிலம்பு/அழுகைச் சுவை

விக்கிமூலம் இலிருந்து

10. அழுகை (அவலச்) சுவை

தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் எட்டுவகை மெய்ப்பாடுகள் கூறியுள்ளார். அவற்றுள் அழுகையும் ஒன்று. அவலம் எனினும் அழுகை எனினும் ஒன்றே. அழுகை என்னும் மெய்ப்பாட்டுச் சுவை, இளிவு (இழிவு), இழவு, அசைவு, வறுமை என்னும் நான்கின் காரணமாகப் பிறக்கும் என்று கூறியுள்ளார்:

“இளிவே இழவே அசைவே வறுமை யென

விளிம்பில் கொள்கை அழுகை நான்கே” (5)

என்பது நூற்பா. இழவு அதாவது இழப்பு காரணமாக வரும் அழுகைச் சுவையை மட்டும் இங்கே எடுத்துக் கொள்ளலாம். சுவை என்பது இன்பத்தைக் குறிப்பது மட்டுமன்று; பல காரணங்களால் ஏற்படும் பலவகை உணர்ச்சிகளும் சுவை என்பதில் அடங்கும். சிலப்பதிகாரத்தில் அழுகைச் சுவைக்குக் குறைவே இல்லை.

நல வாழ்வு இழப்பு, இன்றியமையாப் பொருள் இழப்பு, உயிர் இழப்பு முதலிய பேரிழப்புகள் இழவில் அடங்கும். கண்ணகி முதலில் வாழ்விழந்தாள். இறுதியில் கணவனை இழந்தாள். பின்னர்க் கண்ணகியும் உயிர் நீத்தாள். இது தொடர்பாகப் பாண்டியன் நெடுஞ்செழியனும் கோப்பெருந்தேவியும் மாண்டனர். கோவலன் தந்தையும் கண்ணகியின் தந்தையும் இல்லற வாழ்வை இழந்து துறவு பூண்டனர். இருவரின் தாயர்களும் மக்கள் இழந்த துயர் பொறாது செத்தனர். கண்ணகிக்கு வழித்துணையாய் வந்த கவுந்தியடிகள் உண்ணா நோன்பு கொண்டும் அடைக்கலம் அளித்த மாதரி தீக்குளித்தும் மடிந்தனர். மாதவியும் மணிமேகலையும் சிற்றின்பம் இழந்து துறவு பூண்டனர். மதுரை எரி யுண்ணப்பட்டது பேரிழப்பாகும்.

இந்த இழப்புகளுக்குள் கண்ணகி பொய்க்குற்றம் சாட்டப்பட்டுக் கோவலன் இறந்த இழப்பு சிலம்பில் பேரிடம் பெற்றுள்ளது. ஆயர் பாடியில் தீய நிமித்தங்கள் தோன்றின. கோவலன் சாவு கண்ணகிக்கு உணர்த்தப்பட்டது. சாவினும், கள்வன் என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டது அவளை மிகவும் வருத்தியது.

துன்பமாலை என்னும் காதையில், கண்ணகியின் துயரம் ஓவியப் படுத்தப்பட்டுள்ளது. அவளது அழுகை (அவல) உரைகள் உள்ளத்தை உருக்கும்.

காதலனைக் காணேன் - ஊதுலையின் உள்ளம் உருகும். அன்பனைக் காண்கிலேன் - வஞ்சமோ - மயங்கும் என் நெஞ்சு. மன்னன் தவறிழைப்ப, யான் அவலம் கொண்டு அழிவதோ? காய் கதிர்ச் செல்வனே! என் கணவன் கள்வனோ? என்றெல்லாம் கூறிப் புலம்பி அரற்றினாள்.

கணவனது உயிரற்ற உடலை நோக்கிக் கதறுகிறாள். நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ? மணிமார்பம் தரை மூழ்கிக் கிடப்பதோ என்று கூறிக் கணவன் உடலைக் கட்டித் தழுவிக் கொண்டாள். இந்த ஊரில் பெண்டிரும் உண்டுகொல் - சான்றோரும் உண்டுகொல் - தெய்வமும் உண்டுகொல் என்று வினவி விம்முகிறாள்.

பாண்டியனிடம் வழக்குரைக்கச் சென்று, வாயில் காவலனை நோக்கி, “வாயிலோயே - அறிவறை போகிய பொறியறு, நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே!” என வாயில் காவலனோடு சேர்த்துப் பாண்டியனைச் சாடுகிறாள். பாண்டியன் முன்சென்று, 'தேரா மன்னா செப்புவ துடையேன்' என்று கூறிப் பாண்டியனைத் திடுக்கிடச் செய்கிறாள். நற்றிறம் படராக் கொற்கை வேந்தே என்று கூறிக் கொதிக்கிறாள். நீர்வார் கண்ணை யார் நீ என்று பாண்டியன் வினவ, தன் நாடு, ஊர், குடி, பெயர் முதலியவற்றின் பெருமையைப் பேசுகிறாள்.

புகாரில் இருந்த ஏழு பத்தினிகளின் வரலாறுகளைப் புகழ்ந்து கூறி, அப்பதியில் பிறந்த யானும் ஒரு பத்தினியே யாமாகில், விடேன், அரசோடு மதுரை யையும் ஒழிப்பேன் என்று வஞ்சினம் கூறுகிறாள். தன் இடக் கொங்கையைத் திருகி எடுத்து நகர்மீது எறிந்து எரியச் செய்யலானாள்.

இறுதியில் கீழ்த்திசை வாயில் கணவனோடு வந்தேன்; மேல்திசை வாயிலில் கணவனின்றிச் செல்கிறேன் என்று கூறிச் சேரநாட்டுப் பகுதியை அடைந்து வாழ்வை முடித்துக் கொண்டு துறக்கம் புகுகிறாள்:

"கீழ்த் திசை வாயில் கணவனொடு புகுந்தேன்
மேல் திசை வாயில் வறியேன் பெயர்கென
இரவும் பகலும் மயங்கினள் கையற்று"
(23:182.184)

என்னும் பகுதி மிகவும் உருக்கமானது.