சிலம்போ சிலம்பு/புராணக் கதைகள்

விக்கிமூலம் இலிருந்து

9. புராணக் கதைகள்

இக்காலத்து அறிவியலார் நம்ப முடியாத புராணக் கதைகள் பல பண்டைய இலக்கியங்கள் பலவற்றில் இடம் பெற்றுள்ளன. இந்த வரிசையில் சிலப்பதிகாரத்திற்கும் பங்கு உண்டு. சில் புராணக் கதைகளை இதிலிருந்து காணலாம்:

அவுணரும் முசுகுந்தனும் (கடலாடு காதை)

அவுணர்கள் முசுகுந்த மன்னனுக்குத் தொல்லை தந்தனர். ஒரு பூதம் தொல்லையினின்றும் அவனைக் காத்ததாம்:

“கடுவிசை அவுணர் கணங்கொண்டு ஈண்டிக்
கொடுவரி ஊக்கத்துக் கோநகர் காத்த
தொடுகழல் மன்னற்குத் தொளைந்தன ராகி
நெஞ்சிருள் கூர நிகர்த்து மேலிட்ட
வஞ்சம் பெயர்த்த மா பெரும் பூதம்
திருந்துவேல் அண்ணற்குத் தேவன் ஏவ

இருந்து பலியுண்ணும் இடனும்..” (7-13)

என்பது பாடல் பகுதி. சுருக்கமாகக் கூறப்பட்டுள்ள இப்பகுதியில் ஒரு பெரிய கதை மறைந்துள்ளது. அதாவது: அமிழ்தத்தைக் கலுழன் கவர்ந்து சென்று விட்டான். இந்திரன் புகார் நகரைத் தான் காப்பதாக ஒப்புக் கொண்ட முசுகுந்த மன்னனிடம் ஒப்படைத்து அவனுக்குத் துணையாக ஒரு பூதத்தை அமர்த்தி விட்டுப் போனான். அவுணர்கள் மன்னனோடு போரிட்டுத் தோற்றனர். பின்னர், அவுணர்கள் இருள் உண்டாகச் செய்யும் ஓர் கணை தொடுத்து எல்லா இடங்களையும் இருள் மயமாக்கினர். பூதம் தம் ஆற்றலால் இருளைப் போக்கி முசுகுந்தனுக்குத் துணை புரிந்தது. பின்னர் வந்த இந்திரன் அந்தப் பூதத்தை முசுகுந்தனுக்கு மெய்க்காவலாக இருக்கப் பணித்தான். அதன்படி அது புகாரில் இருப்பதாயிற்று.

இந்தக் கதையை, சிலப்பதிகாரத்தின் பழைய உரை ஆசிரியராகிய அடியார்க்கு நல்லார் எடுத்துக் கூறி இதற்குச் சான்றாக மேற்கோள் பாடல் ஒன்றும் தம் உரையில் தந்துள்ளார். அது வருக!

“முன்னாள் இந்திரன்...
காவல் அழித்துச் சேவல் கொண் டெழுந்த
வேட்கை அமுதம் மீட்க எழுவோன்
இந்நகர் காப்போர் யாரென நினைதலும்,
கேரியன் எழுந்து நீவரு காறும்
தார்கெழு மார்ப தாங்கல்என் கடனென,
உவந்தனன் கேட்டுப் புகழ்ந்த இப்பூதம்
நின்வழி யாகென நீறீஇப் பெயர்வுழிக்
கடுவிசை அவுணர் கணம் கொண்டு ஈண்டிப்
பொருது போர் தொலைந்தன ராகிப் பெரிதழிந்து
ஆழ்ந்த நெஞ்சின் சூழ்ந்தனர் நினைத்து
வஞ்ச மற்றிது வஞ்சத் தல்லது
வேறல் அரிதெனத் தேறினர் தேறி
வளைத்துத் தொடுத்த வல்வா யம்பின்
அயின் முகங் கான்ற ஆரிருள் வெயிலோன்
இருகனும் புதையப் பாய்தலின் ஒருகணும்
நெஞ்சங் காணா நிற்ப நின்ற

வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம்

என்பது முகவரி தெரியாத அந்தப் பாடலாகும். சேவல் = கலுழன். நேரியன் = மன்னன் முசுகுந்தன். இப்பாடலில் ஈற்றில் உள்ள “வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம்” என்னும் அடி, சிலப்பதிகாரத்திலும் (11 ஆம் அடி) அப்படியே இருப்பது எண்ணத் தக்கது.

மற்றொரு கதை வருக. இந்திரன் ஏவ உருப்பசி நடம் ஆடினாள். இந்திரன் மகனும் அப்போது ஒருவரை ஒருவர் நோக்கிக் காதல் குறிப்பு கொண்டதால், ஆடல் பாடல் எல்லாம் கெட்டு விட, உருப்பசியை அகத்திய முனிவர் கெடுமொழி (சாபம்) இட்டு மண்ணுலகில் பிறக்குமாறு செய்தாராம்.

“நாரதன் வீணை நயந்தெரி பாடலும்
தோரிய மடங்தை வாரம் பாடலும்
ஆயிரம் கண்ணோன் செவியகம் நிறைய
நாடகம் உருப்பசி நல்கா ளாகி
மங்கலம் இழப்ப வீணை மண்மிசைத்

தங்குக இவளெனச் சாபம் பெற்ற...”
(18-23)

என்பது பாடல் பகுதி. இதில் சுட்டப்பட்டுள்ள முழுக் கதையாவது:

இந்திரனது அவைக்கு அகத்திய முனிவர் வந்தார். பாடலுடன் ஆடும்படி இந்திரன் உருப்பசியைப் பணித்தான். ஆடும் போது உருப்பசியும் இந்திரன் மகன் சயந்தனும் காதல் உணர்வுடன் நோக்கிக் கொண்டனர். அதனால் ஆடலும் பாடலும் முறை தவறின. அதனால், நாரதன் பகை நரம்பு பட வீணை மீட்டினான். இவற்றைப் பொறுக்க முடியாத அகத்தியர் சினம் கொண்டு, நாரதன் வீணை மண்ணிலே மணையாய்க் கிடக்கவும், உருப்பசி மண்ணுலகில் பிறக்கவும், சயந்தன் பூவுலகில் மூங்கிலாய்த் தோன்றவும் வைவு (சாபம்) இட்டனர். பின்னர் அவர்கள் வேண்டிக் கொண்டதன் பேரில் வைவு நீக்கல் (சாப விமோசனம்) செய்தார் - என்பது கதை.

அடியார்க்கு நல்லார் இந்தக் கதையைக் குறிப்பிட்டு இதற்கு மேற்கோள் சான்றாக ஒரு பாடலையும் தந்துள்ளார். அப்பாடல் வருக:

“வயந்த மாமலை நயந்த முனிவரன்
எய்திய அவையின் இமையோர் வணங்க,
இருந்த இந்திரன் திருந்திழை உருப்பசி
ஆடல் நிகழ்க பாடலோடு ஈங்கென,
ஓவியச் சேனன் மேவினன் எழுந்து
கோலமும் கோப்பும் நூலொடு புணர்ந்த
இசையும் கடமும் இசையத் திருத்திக்
கரந்து வரல் எழினியொடு புகுந்தவன் பாடலில்
பொருமுக எழினியில் புறந்திகழ் தோற்றம்
யாவரும் விழையும் பாவனை யாகலின்
நயந்த காதல் சயந்தன் முகத்தின்
கோக்கெதிர் நோக்கிய பூக் கமழ் கோதை
நாடிய வேட்கையின் ஆடல் நெகிழப்
பாடல் முதலிய பல்வகைக் கருவிகள்
எல்லாம் நெகிழ்தலின் ஒல்லா முனிவரன்
ஒருதலை இன்றி இருவர் நெஞ்சினும்
காமக் குறிப்பு கண்டனன் வெகுண்டு
சுந்தர மணிமுடி இந்திரன் மகனை
மாணா விறலோய் வேணு ஆகென
இட்ட சாபம் பட்ட சயந்தன்
சாப விடையருள் தவத்தாய் நீயென
மேவினன் பணிந்து மேதக உரைப்ப
ஓடிய சாபத்து உருப்பசி தலைக் கட்டும்
காலைக் கழையும் நீயே யாகி
மலையமால் வரையின் வந்து கண்ணுற்றுத்
தலையரங் கேறிச் சார்தி என்றவன்
கலக நாரதன் கைக்கொள் வீணை

அகில் அம்பன மாகெனச் சபித்துத்

தந்திரி உவப்பத் தந்திரி நாரில்
பண்ணிய வீணை மண்ணிசைப் பாடி
ஈண்டு வருகெனப் பூண்ட சாபம்
இட்டஅக் குறுமுனி ஆங்கே

விட்டனன் என்ப வேந்தவை அகத்தென்

என்பது பாடல். நேரிசை ஆசிரியப் பாவாகிய இந்தப் பாடலும், சிலப்பதிகாரக் காதைகள்போல் ‘என்’ என்னும் ஈற்றில் முடிந்திருப்பது எண்ணத் தக்கது.

மற்றும், சிலம்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புராணக் கதைகள் சிலவற்றின் குறிப்புகள் வருமாறு:

தேவர் வேண்டியதால் சிவன் திரிபுரம் எரித்தது. கண்ணன் கம்சனையும் வாணாசுரனையும் வென்றது. முருகன் சூரனை வென்றது. கொற்றவை அவுணரை வென்றது. காமன் பேடிக் கூத்து ஆடியது. மாலதி மாற்றாள் மகவை இழத்தல் - பேய் பறித்தல் பாசண்டைச் சாத்தன் குழவியாய் வந்து தேவந்தியை மணத்தல். பாண்டியன் கடல் கவற வேல்விட்டது. இந்திரன் முடிமேல் வளை எறிந்தது. பாண்டியன் முகிலைத் தடுத்துத் தளையிட்டது. நளன் மனைவியைப் பிரிந்து காடு ஏகியது. இராமன் மனைவியைப் பிரிந்து காடு போந்தது. இந்திரன் மலைச் சிறகை அரிந்தது.

கண்ணன் குருந்து ஒடித்தது; கன்று குணிலாக் கனி உகுத்தது; நப்பின்னையை மணந்தது; கடல் கடைந்தது; மண் உண்டது; வெண்ணெய் உண்டது: அடியால் உலகு அளந்தது; பாண்டவர்க்காகத் தூது போனது.

முருகன் கிரவுஞ்ச மலை பிளந்தது; கடல் பிளந்து சூரனைக் கொன்றது - முதலிய புராணக் கதைகள் பல கூறப்பட்டுள்ளன.