உள்ளடக்கத்துக்குச் செல்

சிலம்போ சிலம்பு/நிமித்தம்

விக்கிமூலம் இலிருந்து

8. நிமித்தம்

நிமித்தம் என்பது சகுனம். பின்னால் நிகழ உள்ள நன்மையையோ அல்லது தீமையையோ முன் கூட்டிக் குறிப்பால் அறிவிக்கும் குறி (அறிகுறி) நிமித்தம் எனப்படும். இந்த அறிகுறிகளை அறிந்து விளக்குபவனுக்கு நிமித்திகன் (சகுனி) என்ற பெயர் வழங்கப்படுகிறது. அரசவையில் நிமித்திகன் ஒருவன் இருப்பதுண்டு. நிமித்தம் என்னும் பொருளில் ‘சொகினம்’ என்னும் சொல் புறப்பொருள் வெண்பா மாலையில் உள்ளது.

“ஆடமைத் தோளி விரிச்சியும் சொகினமும்

வேறு படஅஞ்சி விதிப்புற் றன்று” (264 - கொளு)

என்பது பாடல். 310 ஆம் கொளுவின் பழைய உரையிலும் இது ஆளப்பட்டுள்ளது.

“உயர்ந்த மூங்கிலன்ன தோளினாள், சொகின விகற் பத்தாலே வடித்த வேலினையுடைய தலைவன் வாரா தொழிய அதற்கு அழிந்தது” — என்பது உரைப்பகுதி.

தொல்காப்பியம், பதிற்றுப் பத்து, புறப்பெருள் வெண்பாமாலை முதலிய நூல்களில் ‘உன்னம்’ என்னும் பெயரும் இதற்கு வழங்கப்பட்டுள்ளது. பாடல்கள்:

“உடல்வேந் தடுக்கிய உன்ன நிலையும்”

(தொல்-பொருள்- புறம்-5:8)



“தார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல்
புன்கால் உன்னம் சாய...”

(பதிற்றுப்பத்து - 40:16, 17)

உன்னமரம் தழைத்தால் நல்ல சகுனமாம்; சாய்ந்தால் தீய சகுனமாம். சாய்ந்தாலும் மன்னன் அஞ்சவில்லையாம்.

“பொன்னின் அன்ன பூவின் சிறியிலைப்
புன்கால் உன்னத்துப் பகைவன் எங்கோ”

(பதிற்றுப்பத்து-61:5, 6)

பொன் போன்ற பூவையும் சிறிய இலையையும் உடைய உன்னமரம் தீய சகுனம் காட்டினும், பகைபோல் அதற்கு எதிராகப் போர்மேல் மன்னன் செல்வானாம்.

“துன்னரும் சிறப்பின் தொடுகழல் மன்னனை
உன்னம் சேர்த்தி உறுபுகழ் மலிந்தன்று’ (கொளு)

“துன்னருங் தானைத் தொடுகழலான் துப்பெதிர்ந்து
முன்னர் வணங்கார் முரண்முருங்க - மன்னரும்
ஈடெலாம் தாங்கி இகலவிந்தார் நீயும்நின்
கோடெலாம் உன்னம் குழை”

(பு. பொ. வெ. மாலை - உன்ன நிலை-243)

உன்ன மரமே பகைவர் அழிந்தனர்; நம் மன்னன் வென்று விட்டான்; எனவே, நீ இன்னும் நன்றாகத் தழைக்கலாம் — என்று கூறுவதாக உள்ளது இப்பாடல். உன்ன மரம் சகுனத்திற்கு உரிய பொருளாயிருப்பதால் சகுனம் என்னும் பொருளில் உன்னம் வழங்கப்படுவதுண்டு.

காரி (கரிக் குருவி) கத்திலும் தீய நிமித்தமாம். பகைவரின் இடத்தில் காரி கத்தியதாம். அதனால் தம் மன்னனுக்கு வெற்றி கிடைக்கும் என்னும் பொருளில் புறப்பொருள் வெண்பா மாலையில் ஒரு பாடல் உள்ளது.

“வெட்சி மலைய விரவார் மணிநிரைக்

கட்சியுள் காரி கலுழ்ம்” (3:3, 4)

என்பது பாடல் பகுதி. சீவகசிந்தாமணி முதலிய நூல்களிலும் இக்கருத்து உள்ளது. பழைய பறவைகள் போகப்புதிய பறவைகள் வரினும் தீய நிமித்தமாகும் என்னும் ஒரு செய்தி புறநானூற்றில் புகலப்பட்டுள்ளது.

தற்செயலாகக் காதில் விழும் சொற்களில் மங்கலம் உள்ளமை - இல்லாமையைக் கொண்டும் நன்மை தீமைகள் கணிக்கப்படுவதுண்டாம். இதற்கு விரிச்சி, வாய்ப்புள் என்னும் பெயர்கள் உள்ளன. பாக்கத்தில் (சிற்றூர்ப்பக்கம்) சென்று வாய்ச் சொல் கேட்பதற்குப் ‘பாக்கத்து விரிச்சி’ என்னும் பெயர் தொல் - பொருள் - புறத்திணையியலில் (58) கூறப்பட்டுள்ளது. விரிச்சி, வாய்ப்புள் என்னும் பெயர்கள் புறப்பொருள் வெண்பா மாலையில் கூறப்பட்டுள்ளன.

மற்றும் பூனை, நரி போன்றவை சில குறுக்கே போகக்கூடாதாம். “நரி வலம்போனால் என்ன-இடம் போனால் என்ன - மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் போதும்’ என்னும் முதுமொழியும் ஈண்டு எண்ணத்தக்கது. மற்றும் ஒற்றைப் பார்ப்பான், கைம்பெண் போன்ற சிலர் எதிரே வரினும் தீய நிமித்தமாகும் என நம்புபவர்கள் உளர் - இது சரியன்று.

இவற்றைப் பற்றியெல்லாம் நன்கு அறிந்த இளங்கோ அடிகள் தம் நூலிலும் நிமித்தங்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தியுள்ளார். அவை வருமாறு:

இந்திர விழவு ஊர் எடுத்த காதை

புகாரில் இந்திர விழா நடைபெற்ற நாளில் கண்ணகியின் கண் இடப்புறம் - அதாவது இடக்கண் துடித்ததாம்; மாதவியின் கண் வலப்புறம் - அதாவது வலக்கண் துடித்ததாம். பெண்கட்கு இடப்புறத்து உறுப்புகள் துடித்தால் நன்மையும் வலப்பக்கத்து உறுப்புகள் துடித்தால் தீமையும் உண்டாகும் என்பது ஒருவகை நிமித்தம். இதற்கு நேர்மாறாக, ஆண்கட்கு வலப்பக்கம் துடித்தால் நன்மையும் இடப்பக்கம் துடித்தால் தீமையும் உண்டாகுமாம்.

கண்ணகிக்கு இடப்புறம் துடித்ததால் வரவிருக்கும் நன்மையாவது, இன்னும் அண்மையில் கோவலன் மாதவியை விட்டுப் பிரிந்து கண்ணகியிடம் வரப்போகிறான் என்பதாம். மாதவிக்கு வலம் துடித்ததால் அறியப்படுவது, அண்மையில் கோவலன் மாதவியை விட்டுப் பிரியப் போகிறான் என்பது. பாடல்:

“கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்
உண்ணிறை கரந்தகத்து ஒளித்துநீர் உகுத்தன
எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன
விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்தென்”

(237-40)

என்பது பாடல் பகுதி. கண்ணகி கண் இடத்தினும் மாதவி கண் வலத்தினும் துடித்தன என நிரல் நிறையாகப் பொருள் கொள்ளல் வேண்டும். எண்ணுமுறை = நிரல்நிறை. Respectively - என்பதற்குத் தமிழ் எண்ணுமுறை.

நாடு காண் காதை

சனி என்னும் கரிய கோள் (கிரகம்) புகைந்து பகை வீடுகளில் சென்று மாறுபட்டிருப்பினும், தோன்றக் கூடாத தூமகேது என்னும் ஒருவகை விண்மீன் தோன்றினும், கிழக்கே தோன்ற வேண்டிய வெள்ளி தெற்கே தோன்றினும் நாட்டிற்குக் கேடாம். இப்பேர்ப்பட்ட நிலையிலும் காவிரியில் தவறாது தண்ணீர் வரும். (இந்தக் காலத்தில்).

“கலியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்

விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்” (102, 103)
இவ்வாறு நிகழ்வதும் தீய நிமித்தமாம்.

வேட்டுவ வரி

பகைவரின் ஆனிரையைக் கவர்ந்துவர மறவன் ஒருவன் வெட்சி மலர்சூடிப் புறப்பட்டான். கொற்றவையின் நோக்கும் அவனுக்குக் கிடைத்தது. இதனால், பகைவர் ஊரில் காரி (கரிக் குருவி) குரல் எழுப்பிப் பகைவர்க்கு நேர விருக்கும் கேட்டினை அறிவித்ததாம். பாடல்:

“உட்குடைச் சீறுர் ஒருமகன் ஆனிரை
      கொள்ள உற்ற காலை
வெட்சி மலர் புனைய வெள்வாள்
     உழத்தியும் வேண்டும் போலும்
வெட்சி மலர் புனைய வெள்வாள்
     உழத்தியும் வேண்டின் வேற்றூர்க்
கட்சியுள் காரி கடிய குரலிசைத்துக்

     காட்டும் போலும்” (12)

காரி (கரிக்குருவி) போன்ற கூவக் கூடாத பறவைகள் கூவுவதும் தீய நிமித்தமாம்.

கொலைக் களக் காதை

வெளியே செல்லுங்கால் மாடு முட்டவரினும் அது தீய நிமித்தமாம். கோவலன், கண்ணகியிடமிருந்து ஒரு சிலம்பைப் பெற்றுக் கொண்டு, கடைத்தெருவில் போய் விற்பதற்காக மாதிரி வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியில் செல்லலானான். அப்போது ஒரு காளைமாடு அவனை முட்ட முயன்றது. எப்படியோ தப்பித்துக் கொண்டான். இவ்வாறு மாடு மறித்து முட்ட வந்தது தீய சகுனம் என்பதை அவன் அறியவில்லை. அதை அறியும் குலத்தினன் அல்லன் அவன். எனவே, வீட்டிற்குத் திரும்பி வராமல் தொடர்ந்து கடைத்தெருவிற்குச் சென்று, கொலைக் குற்றம் சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டான். பாடல்:

“பல்லான் கோவலர் இல்லம் நீங்கி
‘வல்லா நடையின் மறுகில் செல்வோன்’
இமில்ஏறு எதிர்ந்தது இழுக்கென அறியான்

தன்குலம் அறியும் தகுதியன் றாதலின்” (98-01)

என்பது பாடல் பகுதி. கவலையோடு தளர்ந்த நடையுடன் தெருவில் சென்றான் என்பது, வல்லா நடையின் மறுகில் செல்வோன் என்னும் தொடரின் உருக்கமான கருத்தாகும்.

உலகியலில் சிலர், ஒரு வேலையின் நிமித்தம் வெளியில் புறப்பட்டுச் செல்லுங்கால், எதிரில் தீய குறிகள் தென்படின் வீட்டிற்குத் திரும்பி வந்துவிடுவதுண்டு. ஆனால் கோவலனது தலையெழுத்து வேறுவிதமாயிருந்தது. என் செய்வது!

திருடர்கள் திருடச் செல்லும்போது நிமித்தம் பார்ப்பார்களாம். பெறுதற்கரிய பெரும் பொருள் எளிதில் கைக்குக் கிடைக்கும்போல் தோன்றினும், புறப்படும்போது நிமித்தம் தீயதாயிருப்பின் திருடச் செல்ல மாட்டார்கள் என்னும் செய்தி கொலைக் களக் காதையில் கூறப்பட்டுள்ளது.

“நிமித்தம் வாய்த்திடின் அல்லது யாவதும்

புகற்கிலர் அரும்பொருள் வந்துகைப் புகினும்”(178-179)

என்பது பாடல் பகுதி. திருடர்களும் சகுனம் பார்ப்பார்களா என வியக்கத் தோன்றலாம். மற்றவரினும் திருடர்களே கட்டாயம் சகுனம் பார்க்க வேண்டும். ஏனெனில், திருடர்கட்கு அந்தக் காலத்தில் சாவு ஒறுப்பு (மரண தண்டனை) கொடுக்கப்பட்டதால், தாங்கள் அகப்பட்டுக் கொள்ளாமல் வெற்றியுடன் திரும்பி வரவேண்டும் என்பதற்காக அவர்கள் கட்டாயம் சகுனம் பார்ப்பார்களாம்.

ஆய்ச்சியர் குரவை

ஆயர்பாடியில் பல தீய நிமித்தங்கள் நடைபெற்றதாக இடைக்குல மடந்தை மாதரி தன் மகள் ஐயையோடு கலந்து உரையாடுகிறாள். அந்தத் தீய நிமித்தங்களாவன:

குடத்தில் உள்ள பால் புரை குத்தியும் தயிராகத் தோயவில்லை. எருதின் கண்களிலிருந்து நீர் சொரிந்தது. காய்ச்சினால் வெண்ணெய் உருக வில்லை. ஆட்டுக் குட்டிகள் துள்ளி ஓடியாடி விளையாடவில்லை. ஆனிரைகள் நடுங்கி அழுவதுபோல் அரற்றின. அவற்றின் கழுத்து மணிகள் அறுந்து கீழே விழுந்தன. பாடல்: உரைப்பாட்டு மடை

1. குடப்பால் உறையா; குவியிமில் ஏற்றின்
மடக்கண் நீர்சோரும்; வருவதொன் றுண்டு.

2. உறிநறு வெண்ணெய் உருகா உருகும்

மறிதெறித் தாடா வருவதொன் றுண்டு.