சிலம்போ சிலம்பு/கனா

விக்கிமூலம் இலிருந்து

7. கனா

சிலப்பதிகாரத்தில் ‘கனாத்திறம் உரைத்த காதை’ என்னும் பெயரில் ஒரு காதை உள்ளது. கானாக்களைப் பற்றிப் பல விதமான கருத்துகள் பலரால் அறிவிக்கப்பட்டுள்ளன. கனா நூல் எனப் பெயரிட்டு, அந்தாதித் தொடையாய் முப்பது கட்டளைக் கலித்துறைச் செய்யுட்கள் அமைத்துப்பொன்னவன் என்பவர் ஒரு நூல் எழுதியுள்ளார். கனா பற்றிக் கூறப்படும் சில கருத்துகள் வருமாறு:

மக்கள் உறங்கும்போது உடல் படுக்கையில் கிடக்க, உயிர் பிரிந்து சென்று பல செயல்களில் ஈடுபட்டு மீண்டும் வந்து உடம்பில் கூடுகிறது.

மக்களின் எண்ணங்கள் அல்லது விருப்பங்களே உறங்கும்போது கனவாக மலர்கின்றன.

ஐம்புலன்களாலும் இதற்குமுன் பட்டறிந்த நிகழ்ச்சிகளே - நுகர்வுகளே கனவில் பல மாறுதல்களுடன் தோன்றுகின்றன.

நல்ல கனாவாயின் பின் நல்லது நடக்கும்; கெட்டதாயின் பின் கெட்டதே நிகழும்.

வைகறையில் கண்ட கனா அவ்வாறே பலிக்கும்

சீவகசிந்தாமணி 219
கனவுக்கும் பின் நனவில் (பகலில்) நடக்கும் நிகழ்ச்சிகட்கும் தொடர்பே இல்லை.

பின்னால் பகலில் நடக்கப்போவதை முன்னமேயே உறக்கத்தில் அறிவிக்கும் ஒருவகைக் குறிப்பே கனவு என்பது.

கனவுகள் மக்களின் விருப்பு - வெறுப்புகளைக் குறிக்கின்றன என்பது பிளேட்டோ போன்றோரின் கருத்து.

உறங்கும்போது சில உள் உறுப்புகள் வேலை செய்து துண்டுவதால் கனவுகள் ஏற்படுகின்றன — என்பது அரிஸ்ட்டாட்டில் (Aristatle) போன்றோரின் கருத்தாகும்.

இவ்வாறு பல்வேறு கருத்துகள் பலரால் சொல்லப்படினும், ஒவ்வொருவரும் தாம் கண்ட கனாக்களின் துணை கொண்டு-அதாவது தமது சொந்தப் பட்டறிவைக் கொண்டு எந்தக் கருத்து சரியானது என்று உய்த்துணரலாம்.

இந்த அடிப்படையுடன் சிலப்பதிகாரத்திற்கு வருவோம். முப்பெருங் கனவு நிகழ்ச்சிகள் முன்று காதைகளில் கூறப்பட்டுள்ளன. அவற்றை முறையே ஒவ்வொன்றாய்க் காண்பாம்:

1. கனாத் திறம் உரைத்த காதை

புகாரில் இருந்தபோது கனா கண்ட கண்ணகி அதனைத் தேவந்தி என்னும் தன் பார்ப்பனத் தோழியிடம் பின் வருமாறு கூறுகிறாள்:

யான் கண்ட கனவால் என் நெஞ்சம் ஏதோ ஐயுறுகின்றது. என் கணவர் என் கை பற்றி எங்கோ அழைத்துச் சென்றார். இறுதியில் ஒரு பெரிய நகரத்தை அடைந்தோம். அங்கே யாரோ எங்கள் மேல் பொய்க் குற்றம் சுமத்திப் பொய்யுரை யொன்றை இடுதேளிட்டுக் கூறினர். அதனால் என் கணவர் கோவலனுக்குத் தீங்கு நேரிட்டது என்று பலர் சொல்லக் கேட்டேன். அது பொறாமல், அவ்வூர் அரசன் முன் சென்று வழக்குரைத்தேன். அதனால், அவ்வரசர்க்கும் அவ்வூருக்கும் தீங்கு நேர்ந்தது. அந்தத் தீங்கு மிகவும் கொடியதாதலின் மேலும் அதைப் பற்றி நின்னிடம் கூற மனம் வரவில்லை. பின்னர் யானும் என் கணவரும் உயர்ந்த நிலை அடைந்தோம். அதைக் கூறின் நகைப்பிற்கு இடமாகும் - என உரைத்தாள். இது கண்ணகி கண்ட கனா ஆகும். இனிப் பாடல் பகுதி வருமாறு:

“கடுக்கும் என்நெஞ்சம் கனவினால் என்கை
பிடித்தனன் போயோர் பெரும்பதியுள் பட்டோம்
பட்ட பதியில் படாததொரு வார்த்தை
இட்டனர் ஊரார் இடுதேளிட்டு என்றன்மேல்
கோவலற் குற்றதோர் தீங்கென் றதுகேட்டுக்
காவலன் முன்னேயான் கட்டுரைத்தேன் காவலனோடு
ஊர்க்குற்ற தீங்குமொன் றுண்டால் உரையாடேன்
தீக்குற்றம் போலும் செறிதொடீஇ தீக்குற்றம்
உற்றேனோ டுற்ற உறுவனோடு யானுற்ற

நற்றிறம் கேட்கின் நகையாகும்..” (45-54)

என்பது பாடல் பகுதி.

இடுதேள் இடுதல் என்றால், ஒருவர் மேல் தேளை இடுவது போன்ற கொடுமையைச் சுமத்தலாகும். சிலர், மெழுகினாலாவது வேறு ஏதாவதொன்றினாலாவது செய்யப்பட்ட பொய்த்தேளை ஒருவர்மேல் போட்டு அஞ்சச்செய்வதும் உண்டு. இங்கே இடுதேள் என்பது, தேள் போல் தீமை தரும் கொடும் பழி என்பதைக் குறிக்கும்.

உலகியலில், ஒருவர் கெட்ட கனா காணின் அதை வெளியிட நாணுவதோ - அஞ்சுவதோ உண்டு. பிறர்க்குக் கேடு நேர்ந்ததாகக் கண்ட கனவைக் கூறுவதற்குப் பெரும்பாலும் மக்கள் ஒருப்படார்.

இங்கே கனாவினால் உய்த்துணரப்படுவன: இடுதேள் இடுதல்போல் கோவலன் மீது திருட்டுக் குற்றம் சுமத்துவதாகும். தீக் கனா என்பது, பாண்டியனும் அவன் தேவியும் ஊரும் அழிய இருப்பதாகும். இதைச் சொல்லக் கண்ணகிக்கு உள்ளம் ஒருப்படவில்லை.

“நற்றிறம் கேட்கின் நகையாகும்” என்பதில் உள்ள கருத்து, இறுதியில் கோவலனும் கண்ணகியும் தேவர்களால் வரவேற்கப்பெற்று மேலுலகம் செல்லுதலாகும். இது கிடைத்தற்கு அரிய பேறு ஆதலின், தங்கட்கு இது கிடைத்ததாகக் கூறின், ஓகோ, இவர்கட்கு இவ்வளவு பேரவாவா என்று சிலர் எள்ளி நகையாடக் கூடும் - என்று கண்ணகி எண்ணினாள் - என்பது கருத்து.

கோவலன் கொல்லப்பட்ட பின்பு, மா துயர் எய்திய கண்ணகி, முன்பு தான் கண்ட இந்தக் கனவை நினைத்துப் பார்த்தாளாம் அதாவது, அந்தக் கனவின்படி: நடந்துள்ளதாக எண்ணினாளாம். பாடல்: -

“தீவேந்தன் தனைக்கண்டு இத்திறம் கேட்பல்
                                                            யான் என்றாள்
என்றாள் எழுந்தாள் இடர் உற்ற தீக் கனா
நின்றாள் நினைந்தாள் நெடுங் கயற்கண் நீர் சோர

நின்றாள் நினைந்தாள்” (ஊர்சூழ் வரி. 71-74)

என்பது பாடல் பகுதி.

இந்தக் கனாவைக் கண்ணகி உண்மையில் கண்டிருப்பாளா? கண்ணகி இக்கனர் கண்டதாகக் காப்பியச் சுவைக்காக - ஒரு முன்னோட்டமாக ஆசிரியர் இளங்கோ அடிகள் எழுதியுள்ள கற்பனையா இது? இரண்டாவது உண்மையாயிருக்கலாம். சொல்லி வைத்தாற்போல் இவ்வளவையும் தவறாமல் முன்கூட்டிக் கனவில் காண இயலுமா என்ன?

அடுத்து இரண்டாவது கனா நிகழ்ச்சியைக் காண்பாம்:

2. அடைக்கலக் காதை

கோவலன் மதுரை நகரைச் சுற்றிப் பார்த்து விட்டுப் புறஞ்சேரியில் தங்கியிருந்தபோது, ஆங்கு வந்து பழகிய மாடலன் என்னும் மறையவனிடம் கோவலன் தான் கண்ட கனவைக் கூறுகிறான்.

யான், ஒரு குறுமகனால், வேந்தன் நகரில், கண்ணகி நடுங்கு துயர் எய்த, கூறை (உடை) கொள்ளப்பட்டுப் பன்றிமேல் ஊர்ந்ததாகவும், மற்றும் யான் கண்ணகியோடு துறவியர் பெற்றி எய்தியதாகவும், காமன் செயலற்று ஏங்க மணிமேகலையை மாதவி அறவோன்முன் அளித்ததாகவும் நனவுபோலக் கனவு கண்டேன் - என்று கோவலன் விவரித்தான்.

இந்தக் கனவும், மதுரையில் கோவலனுக்கு நடக்க இருக்கும் கொடுமையையும், அதன்பின் அவனும் கண்ணகியும் மேலுலகம் செல்ல இருப்பதையும், மகள் மணிமேகலை துறவு கொள்ளப் போவதையும் முன்கூட்டி அறிவிப்பதாகும். பாடல்:

“கோவலன் கூறுமோர் குறுமகன் தன்னால்
காவல் வேந்தன் கடிநகர் தன்னில்
காறைங் கூந்தல் நடுங்குதுயர் எய்தக்
கூறைகோட் பட்டுக் கோட்டுமா ஊரவும்
அணித்தகு புரிகுழல் ஆயிழை தன்னொடும்
பிணிப்பு அறுத்தோர்தம் பெற்றி எய்தவும்
மாமலர் வாளி வறுநிலத்து எறிந்து
காமக் கடவுள் கையற்று ஏங்க
அணிதிகழ் போதி அறவோன் தன்முன்
மணிமே கலையை மாதவி அளிப்பவும்
கனவு போல நள்ளிருள் யாமத்துக்

கனவு கண்டேன் கடிது ஈங்குறும்..” (95-106)

குறு மகன் = பொற் கொல்லன். கடி நகர் = மதுரை. நாறு ஐங் கூந்தல் = கூந்தலை உடைய கண்ணகி. கோட்டு மா = பன்றி. ஆயிழையோடு பிணிப்பு அறுத்தோர் தம் பெற்றி எய்துதல் = பற்றற்ற துறவியர் அடையும் மேலுலகத்தைக் கண்ணகியோடு அடைதல். காமக் கடவுள் கையற்று ஏங்கல் = மணிமேகலையை வைத்துக் காம வேட்டையாட முடியாததால் மன்மதன் செயல் அறுதல். போதி அறவோன் = புத்தன்.

உலகியலில் முன்பு நடந்ததாகக் கூறப்படும் ஒரு செய்தி இங்கே நினைவு செய்யப்பட்டுள்ளது. அதாவது: மாபெருங்குற்றம் செய்தவனை, மொட்டை அடித்து முகத்தில் கரும்புள்ளியும் செம்புள்ளியும் குத்திப் போதுமான உடையின்றிக் கழுதைமேல் ஏற்றி ஊர் சுற்றிவரச் செய்வது பண்டைய பழக்கமாம். அது இங்கே குறிப்பிடப்பட் டுள்ளது. கழுதைக்குப் பதிலாக ஈண்டு பன்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி, கோவலன் கொடுமைக்கு உள்ளாகப் போகிறான் என்பதைக் குறிக்கும். இதனால் கண்ணகி துயர் எய்தப் போகிறாள். மாதவி தன் மகள் மணிமேகலையைத் துறவு கொள்ளச் செய்யப் போகிறாள்.

இவ்வாறு கனவைச் சொல்லிவந்த கோவலன் இறுதியில் ‘கடிது ஈங்கு உறும்’ என்று கூறியுள்ளான். அதாவது, இது மதுரையிலே விரைவில் நடைபெறுமாம். கனவு காணின் அதன்படி நடைபெறும் என்ற நம்பிக்கையினை அடிப்படையாகக் கொண்டது இது. கோவலன் ஓரளவாவது இதனோடு தொடர்புடைய கனவு ஏதாவது கண்டிருக்கலாம். அல்லது, இஃதும், காப்பிய முன்னோட்டச் சுவைக்காக அடிகளால் செய்யப் பெற்ற கற்பனையாகவும் இருக்கலாம்.

70 சுந்தர சண்முகனார் 3. வழக்குரை காதை

பாண்டியன் மனைவியாகிய கோப்பெருந்தேவி, கோவலன் கொலையுண்ட முதல்நாள் இரவு தான் கண்ட தீய கனவை முதலில் தோழியிடம் கூறுகிறாள்: தோழி! மன்னனின் செங்கோலும் வெண்குடையும் நிலத்தில் வீழ்ந்தன. ஆராய்ச்சி மணி அடிக்கப்பட்டது. எட்டு திசைகளும் அதிர்ந்தன. கதிரவனை இருள் விழுங்கிற்று. இரவிலே வான வில் தோன்றியது. பகலில் விண்மீன்கள் விழுந்தன. இவ்வாறு கனாக் கண்டேன். இக்கனவை அரசர்க்கு அறிவிப்பேன் - என்றாள். பாடல்;

ஆங்கு.......................... குடையொடு கோல்வீழ, நின்று நடுங்கும்
கடைமணி இன்குரல் காண்பென் காண்எல்லா
திசையிரு நான்கும் அதிர்ந்திடும் அன்றிக்
கதிரை இருள்விழுங்கக் காண்பென்காண் எல்லா! விடுங்கொடி வில்இர, வெம்பகல் வீழும் கடுங்கதிர் மீன்இவை காண்பென்காண் எல்லா!” (1-7)

இது பாடல் பகுதி. எல்லா=தோழீ. கடை மணி= குறை சொல்லி முறையிட வருவோர் அடிக்க வாயிலில் கட்டித் தொங்கும் ஆராய்ச்சி மணி. இர = இரவு. வில் கொடி விடும்=இந்திர வில் எனப்படும் வானவில் வண்ணக் கொடி போல் தோன்றல். 'காண்பென் காண் எல்லா' எனத் திரும்பத் திரும்ப மும்முறை சொல்லியிருப்பது ஒருவகை இலக்கிய காப்பியச் சுவையாகும்.

தோழியிடம் இவ்வாறு தெரிவித்த தன் கனவைத் தேவி பாண்டியனிடமும் கூறினாள்:

“செங் கோலும் வெண் குடையும்
செறி நிலத்து மறிந்து வீழ்தரும்,
நங் கோன்றன் கொற்ற வாயில்
மணி நடுங்க நடுங்கும் உள்ளம்,

இரவு வில்லிடும், பகல்மீன் விழும்,
   இரு நான்கு திசையும் அதிர்ந்திடும்
வருவ தோர் துன்பம் உண்டு

   மன்னவர்க் கியாம் உரைத்து மென”
(9.12)

என்பது பாடல் பகுதி. ஒரே செய்தி பாடலில் இருமுறை கூறப்பட்டுள்ளது. ஒன்று தோழி அறிவதற்காக - மற்றொன்று, மன்னன் முதல் மற்றவரும் அறிவதற்காகும்.

செங்கோலும் வெண்குடையும் படுக்கையாய் விழவில்லையாம் - தலைகீழாய் மறிந்து வீழ்ந்தனவாம். வாயிலில் ஆராய்ச்சி மணி கட்டப்பட்டிருக்கிறதே தவிர, மன்னனின் ஆட்சியில் ஒரு குறையும் இல்லாததால் இது வரையும் யாராலும் அடிக்கப்படா திருந்த மணியின் ஒலி, கனவில் அடிக்கப்பட்டுக் கேட்கப்பட்டதாம். உள்ளம் நடுங்கும்படி மணி நடுங்கிற்றாம். மணி அசைந்து ஒலி எழுப்பியது என்னாமல், நடுங்கியதாகக் கூறப்பட்டிருப்பது பொருள் பொதிந்ததாகும்.

‘இரவு வில் இடும்’ என்பதை இக்காலத்தார்க்கு விளக்குவது எளிது. பகலில்தான் வானவில் தோன்றுவது வழக்கம். அன்று கனவில் இரவில் வானவில் தெரிந்ததாம். முற்பகலில் கீழ்த்திசையில் ஞாயிறு காய்ந்து கொண்டிருக்கும் போது அதற்கு நேர் எதிரில் மேற்கே மழை பெய்யின், ஞாயிற்றின் ஒளி மழையை ஊடுருவி அப்பால் செல்ல ஒளிச் சிதறல் ஏற்பட்டு அதற்கும் மேற்கே பல வண்ண வடிவிலே வில் போன்று வளைந்த ஓர் அமைப்பு தெரியும். பிற்பகலில் மேற்குத் திசையில் ஞாயிறு தெரியும்போது அதற்கு நேர் எதிரில் கிழக்கே மழை பெய்யின், ஞாயிற்றின் ஒளி மழையை ஊடுருவி அப்பால் செல்ல ஒளிச் சிதறல் ஏற்பட்டு அதற்கும் கிழக்கே பல வண்ண வடிவிலே வில் போன்று வளைந்த ஓர் அமைப்பு தெரியும். இதையே வானவில் என்கின்றனர்.

எனவே, மேற்சொன்னபடி பகலிலேதான் வானவில் தோன்றும் - என்பது புலனாகிறது. இரவில் மழை பெய்யினும் ஞாயிற்று ஒளி இன்மையால் வானவில் தோன்ற வாய்ப்பு இல்லை. எனவேதான், இரவில் வானவில் தோன்றியதாகக் கண்ட கனவு ஏதோ துன்பம் தரும் அறிகுறியாகும் என்று கருதப்பட்டிருக்கிறது.

மன்னன் இறப்பதற்கு முன் காணும் கெட்ட கனவு, பின்னர் மன்னன் இறப்பதற்கு அறிகுறியாக இருந்தமை வேறு இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளது. இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில் அவற்றுள் சில காண்பாம். முதலில் கம்ப இராமாயணம் வருக;

திரிசடை தான் கண்ட கெட்ட கனாக்களைச் சீதையிடம் கூறுகிறாள். அன்னாய் கேள்! இராவணனின் தலையில் எண்ணெய் பிசுபிசுக்க, கழுதை-பேய் பூட்டிய தேரின்மேல் சிவப்பு உடை உடுத்து எமன் இருக்கும் தென்புலம் அடைந்தான். இராவணனின் மக்களும் சுற்றமும் மற்றவர்களும் தென்புலம் சென்றனர்- திரும்பவில்லை. இராவணன் வளர்த்த வேள்வித் தீ அணைந்து விட்டது. அவ்விடத்தில் கறையான் கூட்டம் மிக்கிருந்தது. தூண்டா மணி விளக்கு தூண்டாமலேயே திடீரெனப் பேரொளி வீசிற்று. இராவணனது அரண்மனை இடியால் பிளவுபட்டது.

இன்னும் கேள்! ஆண்யானைகளே யன்றிப் பெண் யானைகளும் மதம் பிடித்தன. கொட்டப்படாமலேயே முரசு தானாக முழங்கிற்று. முகில் கூட்டம் இல்லாமலேயே வானம் வெடிபட இடித்தது. விண்மீன்கள் உதிர்ந்தன. பகல் இல்லாத இரவில் ஞாயிறு ஒளி வீசுவது போல் தோன்றியது. ஆடவர் சூடிய கற்பக மாலைகள் புலால் நாற்றம் வீசின. தோரணங்கள் அறுந்தன. யானைகளின் மருப்புகள் ஓடிந்தன. (பூரண) நிறை குடத்து நீர் கள்ளைப் போல் பொங்கிற்று. திங்களைப் பிளந்து கொண்டு விண் மீன்கள் எழுந்தன. வானம் குருதி மழை பொழிந்தது. தண்டம், ஆழி (சக்கரம்), வாள், வில் என்னும் படைக் கலங்கள் ஒன்றோடொன்று போர் புரிந்து கொண்டன.

மங்கையரின் தாலிகள், கையில் வாங்குபவர் இல்லாமலேயே தாமாக அறுந்து மார்பகத்தில் விழுந்தன. மயன் மகளாகிய (இராவணனின் மனைவி) மண்டோதரியின் கூந்தல் சரிந்தது. இரண்டு சீயங்கள் (சிங்கங்கள்) மலையிலிருந்து புலிக் கூட்டத்தை உடன் அழைத்துக்கொண்டு வந்து யானைகள் வாழும் காட்டிற்குள் புகுந்து யானைகளை வளைத்து நெருக்கிக் கொன்றன. வனத்தில் இருந்த மயில் ஒன்று வனம் விட்டு அப்பால் சென்றது. (இரண்டு சீயங்கள் = இராம இலக்குமணர்கள், மலைப் புலிகள் = வானரப் படைகள். யானைகள் = அரக்கர்கள், யானைக்காடு = இலங்கை, மயில் = சீதை)

மேலும் கேள்! ஆயிரம் விளக்குகளின் ஒளியையுடைய ஒரு திரு விளக்கினைத் திருமகள் (இலக்குமி) ஏந்திக் கொண்டு இராவணன் வீட்டிலிருந்து வீடணன் வீட்டிற்குச் சென்றாள். (இராவணன் அழிய, வீடணன் ஆட்சிக்கு வருவான் என்பது குறிப்பு).

இது கம்ப இராமாயணக் கதை. சுந்தர காண்டம் - காட்சிப் படலத்தில் (40 - 53) இதைக் காணலாம். சிவக சிந்தாமணி நூலிலும் இத்தகைய குறிப்பு உள்ளது.

சீவகனைக் கருக்கொண்டிருந்த தாய் தான் கண்ட தீய கனவினைத் தன் கணவன் சச்சந்த மன்னனிடம் கூற, சச்சந்தன் தான் சாகக் கூடும் என்பதை முன்கூட்டி அறிந்து, மயில் பொறியில் அமர்ந்து பறந்து அரண்மனையை விட்டுத் தப்பித்துச் செல்ல முன்கூட்டியே மனைவியைப் பழக்கினானாம். கனவின்படியே, சச்சந்த மன்னன், அமைச்சன் கட்டியங்காரனால் கொல்லப்பட்டான்.

சேக்சுபியர் (Shakespeare) எழுதியுள்ள ஜூலியஸ் சீசர். (Julius Caesar) என்னும் நாடகத்திலும் இன்னதோர் செய்தி இடம் பெற்றுள்ளது. மன்னன் சீசர், ஒரு நாள் இரவு, சூழ்நிலை தக்கதா யின்மையின், தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். அவன் மனைவி ‘கால்பர்னியா’ (Calpurnia) என்னும் அரசி அப்போது ஒரு தீய கனவு கண்டு அலண்டு போய்க் கத்தினாள். அரசியின் கனவை அறிந்த சீசர் இந்தக் கனவைப் பற்றிய நிலைமையை துறவியர் வாயிலாக அறியலான போது, அவன் வெளியில் போகாமல் இருப்பது நல்லது என்ற அறிவுரை கிடைத்தது. அரசி, மன்னன் அரண்மனையை விட்டு மறுநாள் வெளியே போகவே கூடாது என மிகவும் கண்டிப்பாய் வற்புறுத்தி மண்டியிட்டு வேண்டிக் கொண்டாள். மன்னர்க்கு உடல் நலம் இன்மையின் அவர் பேரவைக்கு வர முடியவில்லை என்று அறிவிக்குமாறு ஆண்டனி (Antony) என்பவனிடம் சொல்லி அனுப்பினாள். இவ்வளவு செய்தும், மிகவும் துணிச்சலுடைய சீசர் பேரவைக்குச் சென்றான் - கொல்லவும் பட்டான். இது ஒரு முன்னோட்டக் கனவாகும்.

அமெரிக்கக் குடியரசின் தலைவராயிருந்த ‘ஆபிரகாம் லிங்கன்’ (Abraham Lincoln) தாம் கொலை செய்யப்படப் போவதை முன் கூட்டி ஒரு கனவின் வாயிலாக அறிந்திருந்தாராம்; அதைத் தம் நாள் குறிப்புச் சுவடியில் (டைரியில்) குறித்தும் வைத்திருந்தாராம். இஃதும் ஒரு முன்னோட்டம்.

சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைக் கோவூர் கிழார் பாடியதாக உள்ள புறநானூற்றுப் பாடல் ஒன்றில் இத்தகைய கனவுக் கருத்து ஒன்று சுவையாகச் சொல்லப்பட்டுள்ளது. சோழனின் பகைவர்கள், கெட்ட கனவு கண்டு, பின்னால் தமக்கு வரவிருக்கும் துன்பங்களை எண்ணி, இறந்துவிடுவோமோ என்ற அச்சத்தால், தம் குழந்தைகட்கு முன்கூட்டியே முத்தம் கொடுத்துக் கொஞ்சி ஆவல் தீர்கிறார்களாம். தாம் கண்ட தீக்கனவைத் தம் மனைவியர் அஞ்சுவர் எனக் கருதி அவர்கட்குத் தெரிவிக்கா மல் மறைக்கிறார்களாம். அத்தகைய கனவு நிகழ்ச்சிகள் பின்வருமாறு:-

எட்டுத் திசைகளிலும் எரி கொள்ளிகள் வீழ்ந்தன. வற்றல் மரங்கள் பற்றி எரிகின்றன. ஞாயிறு பலவிடங்களிலும் தோன்றுகிறது. தீய பறவைகள் தீக்குரல் எழுப்புகின்றன. பற்கள் யாரும் கொட்டாமலேயே தரையில் கொட்டுகின்றன. தலை மயிரில் எண்ணெய் வார்க்கப்படுகிறது. பன்றி மேல் ஊர்கின்றனர். ஆடை களையப்படுகின்றனர். படைக் கலங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிலுடன் கவிழ்ந்து கீழே விழுகின்றன - இவை கனவில் கண்டவை. இச்செய்தி, “காலனும் காலம் பார்க்கும்” என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடலில் (41) இடம் பெற்றுள்ளது.

இதுகாறும் கூறப்பட்டுள்ள செய்திகளால், தீய கனாக்கள் காணின் தீமை நிகழும் என்ற நம்பிக்கை ஒன்று மக்களிடையே இருந்தது. (இருக்கின்றது) என்பது புலனாகும். சாவை முன் கூட்டி அறிவிக்கும் தீய கனவு நிகழ்ச்சிகள் எத்தகையன என்பதும் புலனாகும்.

சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள மூன்று கனவுகளும் பின்னால் இறப்பு நேரும் என்னும் குறிப்பு உணர்த்துவனவாய் உள்ளன. இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில் இங்கே எடுத்துக் காட்டப்பட்டுள்ள செய்திகளும் சிலப்பதிகாரச் செய்திகளோடு ஒத்துள்ளமையை அறியலாம். (பாடல்களை அவ்வந்நூலில் கண்டு கொள்ளலாம். ஈண்டுதரின் பக்கங்கள் பெருகிவிடும்).

"https://ta.wikisource.org/w/index.php?title=சிலம்போ_சிலம்பு/கனா&oldid=1375585" இலிருந்து மீள்விக்கப்பட்டது