உள்ளடக்கத்துக்குச் செல்

சிலம்போ சிலம்பு/பழக்க வழக்க மரபுகள்

விக்கிமூலம் இலிருந்து


14. பழக்க வழக்க மரபுகள்

சிலப்பதிகாரக் காலத்தில் மக்களிடையே நிலவி வந்த பழக்க வழக்கங்கள் அதாவது மரபுகள் சிலவற்றை அந்நூலில் கூறியுள்ளாங்குக் காணலாம்.

தலைக்கோல் நகர்வலம் வந்து வழிபாடு ஆற்றிய பின்னரே கணிகையரின் முதல் நடன அரங்கேற்றம் தொடங்கப்பெறும். (அரங்கேற்று காதை):

"வந்தனை செய்து வழிபடு தலைக்கோல்

(3:120)


..................................................................
ஊர்வலம் செய்து புகுந்துமுன் வைத்து"

(3:128)

ஒரு மாளிகையில் புகும்போதோ - திருமண வீட்டில் முதலில் செல்லும்போதோ பெண்கள் வலக்காலை முதலில் எடுத்து வைப்பர். மாதவி அரங்கத்தில் வலக்காலை முதலில் வைத்து ஏறினாள்.

"வலக்கால் முன்வைத்து ஏறி அரங்கத்து"

(3:131)


கனா - நிமித்தங்களில் நம்பிக்கை உண்டு. கனாத்திறம் உரைத்த காதை என ஒரு காதையே உள்ளது.

"கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்
எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன"

(5:27)

இதனால் நிமித்த நம்பிக்கை உண்டென அறியலாம். மாதவி புணர்ச்சியில் இருந்ததால் அவள் கண்கள் செங்கண்களாகக் கூறப்பட்டன. படை மறவர்கள் தம் வேந்தன் வெற்றி பெறுவதற்காகத் தம் உயிரைப் பலி கொடுப்பது உண்டு:

"வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கென
நற்பலி பீடிகை நலங்கொள வைத்தாங்கு

உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து" (5:85-87)

குழந்தை பிறந்த ஐந்தாம் நாள் பிறப்புத் திட்டு கழித்துப் பின் பெயர் சூட்டு விழா நடத்துவர். மாதவிக்கு மணிமேகலை பிறந்தபின், இவ்வாறு நடைபெற்றது. பாடல்:

"மாந்தளிர் மேனி மாதவி மடங்தை
பால்வாய்க் குழவி பயங்தனள் எடுத்து
வாலாம் ஐந்நாள் நீங்கிய பின்னர்
மாமுது கணிகையர் மாதவி மகட்கு

நாம நல்லுரை நாட்டுதும் என்று..." (15:22-26)

என்பது பாடல் பகுதி.

யானைக்கு முன்னே, யானை வருகிறது என்று மக்களை விழிப்பாயிருக்கச் செய்யப் பறை அறைந்து அறிவிப்பது உண்டு:

"அரசுஉவா தடக்கையின் பரசினர் கொண்டு
முரசு எழுந்து இயம்ப" (3:124, 125)

"பாகுகழித்து யாங்கனும் பறைபட வரூஉம்

வேக யானை வெம்மையின் கைக்கொள" (15:46, 47)

ஒரு சிலர்க்கு 'எட்டி' என்னும் பட்டம் அளிப்பது உண்டு: சாயலன் என்பவன் எட்டிப் பட்டம் பெற்றவன்.

சிலர் உள்ளத்தில் பெருந்துயருற்றுச் சோர்ந்திருக்கும் போது, யாராவது அவர்களைப் பார்த்து 'ஏன் என்னவோ போல் இருக்கிறீர்கள்?' என்று கேட்கின், "ஒன்றுமில்லை, இலேசா தலையை வலிக்கிறது" என்று பொய் சொல்லி வைப்பர். பாண்டியன் நெடுஞ்செழியன், நாடக மகளிரின் ஆடல் பாடல்களில் ஈடுபட்டு அவர்களால் உள்ளங் கவரப் பட்டுள்ளான் எனக் கோப்பெருந்தேவி அவன்மேல் ஊடல் கொண்டாள். ஆனால், அந்த ஊடலை வெளிக்காட்டாமல், தனக்குத் தலையை நோவதால் என்னவோபோல் இருக்கிறேன் என்று சொன்னாளாம். மக்களிடையே இது போன்ற பழக்கம் உண்டு தானே! அலுவலகத்திற்கு விடுமுறை எடுக்கும் காரணப் பட்டியலில் தலை நோவும் ஒன்றல்லவா? இதை அரசியும் பின்பற்றியுள்ளாள். பாடல்:

"கூடல் மகளிர் ஆடல் தோற்றமும்
பாடல் பகுதியும் பண்ணின் பயங்களும்
காவலன் உள்ளம் கவர்ந்தன என்றுதன்
ஊடல் உள்ளம் உள்கரந்து ஒளித்துத்
தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டுக்

குலமுதல் தேவி கூடாது ஏக"

(6.131-136)

தெய்வத்திற்குப்பலியிடல் அன்றே இருந்தது. பத்தினிப் பெண்டிரை வணங்குதல் முதலாகப் பல்வேறு தெய்வ வணக்கம் அன்றே இருந்தது. சமணமும் புத்தமும் பெருவாரியாகப் பின்பற்றப் பட்டன.

ஊழ்வினை நம்பிக்கையும் பழம் பிறவி நம்பிக்கையும் நிரம்ப இருந்தன என்பது வேறு தலைப்பில் விரிவாக விளக்கப் பட்டுள்ளன. பூதம். பேய் பிசாசு நம்பிக்கையும் உண்டு. தியன செய்பவரைப் பூதம் அறைந்து உண்ணும் நம்பிக்கையும் இருந்தது. "பூதம் புடைத்து உணும் பூத சதுக்கமும்" (5:134) என்பது பாடல் பகுதி.

பரத்தமைத் தொழில் அன்றே இருந்தது. விழாக் காலங்களில் ஆடவரும் மகளிரும் இன்பத்துடன் திரிந்து பொழுது போக்குவராம்.

பல சமயங்கள் இருந்தும், பலர் சமய வேறுபாடு இன்றி நடந்துகொண்டனர். கோவலன் கண்ணகியுடன் புகாரை விட்டுப் பிரிந்த வேளையில், திருமால், புத்தர், அருகர் ஆகியோரின் கோயில்களை வணங்கிச்சென்றானாம்.

"அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த

மணிவண்ணன் கோட்டம் வலஞ்செயாக் கழிந்து"

(10:9, 10)


"பணைஐந்து ஓங்கிய பாசிலைப் போதி (10:11)
இந்திர விகாரம் எழுடன் போகி" (10:14)
"ஐவகை கின்ற அருகத் தானத்து (10:18)

இலகொளிச் சிலாதலம் தொழு துவலங்கொண்டு" (10:25)

என்பன பாடல் பகுதிகள். முன்னது வைணவம். நடுவன்து புத்தம். மூன்றாவது சமணம். கோவலனுக்குச் சமிய வேறுபாடு இல்லை என்பது தெரிகிறது.

மற்றும் ஒன்று: சேரன் செங்குட்டுவன் வடபுலம் நோக்கிப் போருக்குப் புறப்பட்டபோது, வஞ்சியில் உள்ள சிவன் கோவிலை வணங்கி, அங்கே தந்த பூமாலையைத் தலையில் சூடிக் கொண்டானாம். பின்னர் திருமால் கோயிலுக்கு வந்தபோது, அங்கே தந்த பூமாலையைச் (சேடம்) தோளில் சூடிக்கொண்டானாம். இச்செய்தியைக் கால்கோள் காதையில் காணலாம்.

கோவலன் - கண்ணகி ஆகியோர்க்குத் திருமணம் நடைபெற்ற முறை ஒருவிதமானது. கண்ணகிக்குப் பன்னிரண்டாண்டு :(ஈராறு ஆண்டு அகவையாள்) அகவை யிலும், கோவலனுக்குப் பதினாறாவது (ஈரெட்டு ஆண்டு அகவையாள்) அகவையிலும் திருமணம் நடைபெற்றதாம். தொல்காப்பிய உரையாசிரியர்களும் இந்தக் கருத்தைக் கூறியுள்ளனர்:

தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியலில் உள்ள பிறப்பே குடிமை ஆண்மை யாண்டோடு’ (25) என்று தொடங்கும் நூற்பாவின் உரையில், பேராசிரியர், "யாண்டு என்பது ஒத்தவாறு என்னையெனின், பன்னீர் யாண்டும் பதினாறு யாண்டுமே பெண்மையும் ஆண்மையும் பிறக்கும் (முதிரும்) பருவம் என்பது" என எழுதியுள்ளார்.

இளம்பூரணர், (களவியல் - 2) "ஆண்டு என்பது ஒத்த பருவத்தராதல். அது குழவிப் பருவம் கழித்து பதினாறு பிராயத்தானும் பன்னிரண்டு பிராயத்தாளும் ஆதல்" என்று உரை எழுதியுள்ளார்.

இந்தக் காலத்தில் திருமண அகவை பெண்ணுக்குப் பதினெட்டின் கீழும் ஆணுக்கு இருபத்தொன்றின் கீழும் இருத்தலாகாது எனச் சட்டம் வகுத்துள்ளனர். அந்தக் காலத்தில் குழந்தைத் திருமணம் நடைபெற்றது. அண்ணல் காந்தியடிகள் தமது குழந்தைத் திருமணத்தைப் பற்றிக் கூறுகையில், எனக்கு விளையாடுவதற்கு ஒரு சிறுமியைச் சேர்த்து வைத்தனர் என எண்ணினேன் - என்று கூறியதாக எதிலோ படித்த நினைவு உள்ளது. குழந்தைத் திருமணம் பார்ப்பனரிடையே கட்டாயமாக அன்று இருந்தது. அது மற்ற இனத்தாரையும் நாளடைவில் தொற்றிக் கொண்டது இப்போதோ, முப்பத்தைந்து அகவை நிறைந்த இளங் கிழவிகள் சிலர்க்கு மாப்பிள்ளை கிடைப்பது அரிதாயுள்ளது. அந்தோ, கொடியது மக்கள் குழு!

சிலப்பதிகார மணமக்களின் பெற்றோர்கள் மா பெருஞ் செல்வராதலின், யானையின்மேல் பெண்களை ஏற்றி நகரைச் சுற்றி வந்து திருமணச் செய்தியை அறிவிக்கும்படி ஏற்பாடு செய்தார்களாம்.

"யானை எருத்தத்து அணியிழையார் மேல்இரீஇ
மாநகர்க்கு ஈந்தார் மணம்"
(1:43, 44)

என்பது பாடல் பகுதி. அந்தக் காலத்து மேட்டுக் குடி மக்களிடையே இந்த மரபு இருந்தது. இப்போது நடக்குமா?

திங்கள் உரோகிணி விண்மீனுடன் சேர்ந்திருக்கும் நாள் நல்லநாளாம். அந்த நாளில் திருமணம் நடைபெற்றதாம். அசுவனி முதலிய இருபத்தேழு விண்மீன்களுள் உரோகிணியும் ஒன்று. இவை தக்கன் பெண்மக்களாம். இந்தப் பெண்களைத் திங்கள் மணந்து கொண்டானாம். இப்பெண் களுள் உரோகிணி என்னும் மனைவிமேல்தான் திங்களுக்குக் காதல் மிகுதியாம். இதனால் தக்கன் திங்கள்மேல் சினம் கொண்டானாம். இது புராணக்கதை. இதை வானநூல் புலமையுடன் நோக்கின் நிலைமை புரியும்.

கோவலனும் கண்ணகியும், மா முது பார்ப்பான் மறை வழி காட்டிடத் தீ வலம் செய்து திருமணம் செய்து கொண்டனராம். சாந்து, புகை, கண்ணம், விளக்கு, பாலிகை முளை முதலியன பெண்கள் எடுத்தனராம். மற்றும் மடந்தையர் வாழ்த்தி அருந்ததி அனைய கண்ணகியை அமளி ஏற்றினராம்.

"தீதுஅறுக எனஏத்திச் சின்மலர் கொடுதுவி
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல்லமளி ஏற்றினார்"
(1:62.64)

என்பது பாடல் பகுதி. அமளி ஏற்றினார் என்பதற்கு அமளியில் ஏற்றினார் என்று மட்டுமே உரையாசிரியர்கள் எழுதியுள்ளனர். நான் (சு.ச.) அச்சத்தோடு ஒரு கருத்து சொல்கிறேன்: திருமண நாள் அன்றிரவே அமளியில் - படுக்கையில் ஏற்றி முதலிரவு நடத்தச் செய்தனர் என்று சொன்னால் என்ன? அங்ஙனம் இல்லையெனில், இருக்கையில் அமரச் செய்தனர் என்றல்லவா கூறியிருக்க வேண்டும். அமளி என்பது படுக்கை யாயாயிற்றே. முதலிரவில் பெண்

கூச்சப்பட்டுக் கொண்டு தயங்குவாள் ஆதலின், ஏற்றினர் என்றார்.

திருமண நாளன்றே முதலிரவு நடத்தும் பழக்கம் சில குடும்பங்களில் உண்டு - சில குடும்பங்களில் இல்லை. மணமானதும், மணமக்களைப் பலநாள் காக்க வைத்துப் 'பத்தியம்' பிடிக்கச் செய்யாமல் முதல்நாளே ஒன்று சேர்ப்பது நல்லது என்பர் சிலர். சிலநாள் பழக வைத்து கூச்சம் தெளிந்தபின் இணைப்பது நல்லது என்பர் சிலர். சில மணமக்கள், பெரியோர்கள் நல்ல நாள் பார்த்து ஏற்பாடு செய்வதற்கு முன்பே, அவர்கள் அறியாதபடி நேரடி நடவடிக்கையில் இறங்கிவிடுவதும் உண்டு. சில குடும்பங்களில் முதலிரவுக்கு நல்ல நாள் பார்த்து விருந்து ஓம்பி ஒரு விழாவே நடத்துவது உண்டு.

கோவலன் கண்ணகி திருமணமும் நடைபெற்றது தொடர்பாக ஒரு சிக்கல் உண்டு. ஐயன்ர வைத்து நெருப்பு முட்டிச் சடங்குகள் செய்து திருமணம் நடத்தியதாகச் சிலம்பு சொல்கிறது. இது ஆரிய முறை - தமிழ் முறை இன்னதன்று - ஆரிய முறையை ஒழிக்க வேண்டும் என்கின்றனர் சிலர். சிலப்பதிகாரத்திலேயே சொல்லப் பட்டிருப்பதால் அந்த (ஆரிய) முறையில் செய்யலாம் என்கின்றனர் சிலர்.

ஒவ்வொரு குடும்பத்தில் ஒவ்வொரு பழக்கம் இருக்கலாம். சிலப்பதிகாரத்தில் சொல்லியிருப்பதனால், தமிழர்கள் அனைவரும் அந்தக் காலத்தில் ஆரிய முறையைப் பின்பற்றினர் என்று கூறமுடியாது. 1960-ஆம் ஆண்டு, பெரியார் மாவட்டத்திலுள்ள எலுகான்வலசு என்னும் ஊரில் ப. சாமியப்பன் என்பவருக்கு யான் (சு.ச.) தலைமை தாங்கித் திருமணம் செய்து வைத்தேன். பழைய பழக்கம் எப்படி என்று அங்கு வினவியபோது, எங்கள் பக்கத்தில் மரபு வழி - மரபு வழியாகப் (பரம்பரையாகப்) பார்ப்பனரை வைத்துதி திருமணம் நடத்துவதில்லை - தமிழ்ப் பெரியவர் ஒருவரைக் கொண்டே நடத்துவது வழக்கம் என்றனர். 1969-ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள குருந்தம்பட்டு என்னும் ஊரில் குமர. ஞானபூரணம் என்பவருக்கு யான் தலைமை தாங்கித் திருமணம் நடத்தி வைத்தேன். அங்கே விசாரித்தபோதும், வழி வழியாகத் தமிழ்ப் பெரியாரைக் கொண்டே திருமணம் நடத்துவது வழக்கம் என்றனர்.

எனவே, சிலப்பதிகாரம் சொல்வது ஒரு சாராரின் வழக்கமாயிருக்கலாம். அனைவரையும் அது கட்டுப்படுத்தாது.

அடுத்து - மேலும் சில: கடைகளில், இன்ன பொருள் இங்கே விற்கும் என்பதை அறிய அறிவிப்புக் கொடிகள் கட்டிவைப்பது உண்டு,

"பொலந்தெரி மாக்கள் கலங்களுர் ஒழித்தாங்கு
இலங்கு கொடிஎடுக்கும் கலங்கிளர் வீதி"
(14:203, 204)

வணிகம் செய்யும் யவனர் முதலிய அயல்நாட்டினர் தமிழகத்தில் நிரம்ப இருந்தனர்.

ஒன்றை வலம் வருபவர்கள் மூன்று முறை வலம் வருவது அக்காலத்தும் உண்டு, செங்குட்டுவன் கண்ணகிக் கோட்டத்தை மும்முறை வலம் வந்தானாம்.

"வலமுறை மும்முறை வந்தனன் வணங்கி
உலக மன்னவன் கின்றோன் முன்னர்"
(30:155, 156)

ஆடவர் கோவேறு கழுதைமேல் ஊர்ந்து செல்லும் பழக்கம் இருந்ததாகத் தெரிகிறது. கோவலன் இதன்மேல் ஊர்ந்து கடற்கரைக்குச் சென்றதாகக் கடலாடு காதையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

"வான வண்கையன் அந்திரி ஏற" (6:119)

அத்திரி = கோவேறு கழுதை, இதைக் குதிரை வகைகளுள் ஒன்று என்றும் கூறுவர். சில ஊர்க் குதிரைகள் கழுதைகள் போலவே இருக்கும். அத்தகையதோ இது!

கோவலன் தான் கண்ட கனவை மாடலனிடம் கூறி, இரவின் பிற்பகுதியில் கண்ட கனவு பலிக்கும் என்று கூறுகிறார்களே - அவ்வாறு தனக்கு ஏதேனும் திங்கு வருமோ என அஞ்சுகிறான்.

"கனவு போல நள்ளிருள் யாமத்துக்

கனவு கண்டேன் கடிதுஈங்கு உறும்என"

(15:105, 106)

நள்ளிருள் யாமம் என்பதற்குக் கடையாமம் எனச் சிலர் பொருள் எழுதியுள்ளனர். கடிது உறும் என்றால், விரைவில் பலித்து விடும் என்பதாம். நள்ளிருள் யாமம் என்பதற்கு நேர்ப் பொருள் கடையாமம் என்பதாகாது. கடிது உறும் என்பதைக் கொண்டு கடையாமம் எனப் பொருள் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கு அகச்சான்று கனா நூலில் உள்ளது. முதல் சாமத்தில் கண்ட கனவு ஓராண்டில் பலிக்குமாம். இரண்டாம் சாமத்தில் கண்டது எட்டுத் திங்களில் (எட்டு மாதத்தில்) பலிக்குமாம். மூன்றாம் சாமத்தில் கண்டது மூன்று திங்களில் பலிக்குமாம். கடை யாமமாகிய நான்காம் சாமத்தில் கண்ட கனவோ பத்தே நாளில் பலித்து விடுமாம்.

"படைத்த முற்சாமம் ஓராண்டில்
பலிக்கும், பகர் இரண்டே
கிடைத்த பிற்சாமம் மிகுதிங்கள்
எட்டில் கிடைக்கும் என்றும்,
இடைப்பட்ட சாமமோர் மூன்றினில்
திங்களோர் மூன்றென் பவால்,
கடைப்பு,சாமமும் நாள்
பத்துளே பலம் கைபெறுமே" (3)



என்பது கனா நூல் பாடல். கடையாமமாகிய நான்காம் யாமம் என்பது வைகறை மூன்று மணியிலிருந்து ஆறு மணி வரையிலுமாம். கடிது உறும் என்று இருப்பதைக் கொண்டு, அது கடையாமமாயிருக்கலாம் என்று எண்ணி நள்ளிருள் யாமம் என்பதற்குக் கடையாமம் எனப் பொருள் வரைந்து உள்ளனர் என்று தோன்றுகிறது.

மகிழ்ச்சியான சூழ்நிலையில் மன்னர்கள் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வதும் வரி நீக்கம் செய்வதும் உண்டு. வெற்றி வாகை சூடிய செங்குட்டுவன் இவ்வாறு செய்தானாம்.

"சிறையோர் கோட்டம் சீமின் யாங்கணும்
கறைகெழு கல்லூர்க் கறைவீடு செய்ம்மென
அழும்பில் வேளோடு ஆயக் கணக்கரை
முழங்கு நீர்வேலி மூதூர் ஏவி"
(28:203.206)

அழும்பில் வேளையும் ஆயக்கணக்கரையும் ஏவி இவ் வாறு செய்வித்தானாம். இது நடுகல் காதையில் அறிவிக்கப் பட்டுள்ளது. பாண்டியனும் இவ்வாறு செய்ததாகக் கட்டுரை காதையில் சொல்லப்பட்டுள்ளது.

"சிறைப்படு கோட்டம் சீமின் யாவதும்
கறைப்படு மாக்கள் கறைவீடு செய்ம்மின்"
(23:126,127)

மற்றும் ஒருவகை மரபு :- கணவர்க்கு உணவு இடும் போது அவன் கால்களைத் தூய்மை செய்தலும், இலை போடுமுன் தரையில் தண்ணிர் தெளித்தலும் உண்டு. கோவலனுக்கு உணவு இடும் போது கண்ணகி இவ்வாறு செய்தாளாம். வணிக மரபினர் உண்ணுமுன் சில சடங்குகள் செய்வராம்.

"கடிமலர் அங்கையின் காதலன் அடிநீர்

சுடுமண் மண்டையின் தொழுதனள் மாற்றி"
(16:38, 39)

தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவி (16:41)
அரசர் பின்னோர்க்கு அருமறை மருங்கின்
உரிய மருங்கின் ஒருமுறை கழித்து..." (16:44, 45)

பெண்கள் மேல் தெய்வம் ஏறி (சாமியாடி) ஏதேதோ கூறுவது உண்டு. வேட்டுவர் குடியில் இறை பூசனை செய்யும் சாலினி என்பவள் மீது தெய்வம் ஏறிய செய்தி வேட்டுவ வரியில் கூறப்பட்டுள்ளது.

"பழங்கடன் உற்ற முழங்குவாய்ச் சாலினி
தெய்வ முற்று மெய்ம்மலர் நிறுத்து. (12:7, 8)
நடுவூர் மன்றத்து அடிபெயர்த்து ஆடி" (12:11)

மற்றும் தேவந்தி மீது பாசண்டச் சாத்தன் என்னும் தெய்வம் ஏறிப் பேசியதாக வரந்தரு காதையில் சொல்லப் பட்டுள்ளது.

"தெய்வம் உற்றெழுந்த தேவந்திகைதான்
கொய்தளிர்க் குறிஞ்சிக் கோமான் தன்முன் (30:45, 46)
பாசண்டன் யான் பார்ப்பனி தன்மேல்
வந்தேன் என்றலும்" (30:69, 70)

இது பாசண்டச் சாத்தன் தேவந்தி மீது ஏறிச் செங்குட்டுவனிடம் சில சொல்லிய பகுதி. மற்றும், தேவந்தி மேல் கண்ணகி ஏறி இளங்கோ அடிகட்குச் சில கூறியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

"தேவந் திகைமேல் திகழ்ந்து தோன்றி"

(30.172)

கண்ணகி தேவந்தியின் வாயால் பல கூறியதாக இந்தப் பகுதியில் ஒரு செய்தி உள்ளது.

இவ்வாறு தெய்வம் ஏறிச் சாமியாடிக் குறி சொல்லும் செயல் இக்காலத்திலும் தொடர்கின்றது. சாமியாடுபவளிடம் பலர் குறி கேட்பார்கள்; சாமியாடுபவள் தன் மனம்போன போக்கில் ஏதேதோ கூறுவாள். அன்பர்கள் கேட்கும் குறிக்குப் பதில் சொல்ல முடியாவிட்டால், "அடேய், என்னைச் சோதிக்கிறாயா - ஆமாம் அடேய் என்னைச் சோதிக்கிறாயா? - நான் மலை ஏறப் போறேன்டா - நான் மலை ஏறப் போறேன்டா என்று கூறி மலையேறி விடுவதும் உண்டு. சூழ்நிலைக்கு ஏற்ப உணர்ச்சி வயப்பட்டுச் சிலர் சாமியாடுவது ஒருவகை (இசுதீரியா என்னும்) நோய் என்று அறிவியலார் கூறுவதாகத் தெரிகிறது. இது குறித்து மேலும் ஆராய்ந்த பின்னரே ஒரு முடிவுக்கு வரமுடியும்.

மற்றொரு மரபையும் இவண் சொல்லாமல் விடுவதற்கு இல்லை. பெரியோர்களிடமோ - மன்னரிடமோ ஒருவர் ஏதேனும் சொல்லத் தொடங்கின் முதலில் வாழ்த்து கூறுவது வழக்கம். சொல்லி முடித்தபின் இறுதியிலும் வாழ்த்து கூறுவதும் உண்டு. சிலப்பதிகாரத்தில் இந்த மரபு சில இடங்களில் பின்பற்றப்பட்டுள்ளது.

வழக்கு உரைக்கக் கண்ணகி வந்திருப்பதைப் பாண்டிய மன்னனிடம் அறிவிக்க வந்த வாயில் காப்பாளன் முதலில் "வாழிஎம் கொற்கை வேந்தே வாழி" (20:30) என்று வாழ்த்து சொல்லியே பேச்சைத் தொடர்ந்தான்.

தேவந்தி செங்குட்டுவனிடம் மணிமேகலையைப் பற்றிச் சொல்லத் தொடங்குமுன்,

"கோமகன் கொற்றம் குறைவின் றோங்கி
நாடு பெருவளம் சுரக்க"
(30:6, 7)

என வாழ்த்தினாள்.

மலைவாழ் மக்கள் செங்குட்டுவனிடம் கண்ணகியைப் பற்றிக் கூறத் தொடங்கியபோது,

"ஏழ்பிறப்பு அடியேம் வாழ்க நின்கொற்றம்" (25:56)

என்று வாழ்த்திச் செய்தியைக் கூறி, முடிக்கும் போதும்

"பன்னுா றாயிரத் தாண்டு வாழியர்" (25:63)

என்று வாழ்த்தி முடித்தனர். பன்னூறாயிரத்து ஆண்டு = பல இலட்சம் ஆண்டு. இலட்சம் என்னும் வடமொழி எண்ணுப் பெயருக்கு நேரான தமிழ்ப் பெயர் 'நூறாயிரம்' என்பது.

மாடலன் செங்குட்டுவனிடம் முன் நடந்ததைக் கூறத் தொடங்குமுன்

"மன்னவர் கோவே வாழ்க என்று ஏத்தி" (30.118)


என்று வாழ்த்தி, முடிக்கும் போதும்

"ஊழிதோ றுாழி உலகம் காத்து
நீடு வாழியரோ நெடுந்தகை"
(30:145, 146)

என்று வாழ்த்தி முடித்தானாம்.

மணிமேகலை ஆசிரியர் சாத்தனார் செங்குட்டுவனிடம் மதுரையில் நடந்ததைக் கூறி முடிக்கும் போது

"ஒழிவின்று உரைத்து ஈண்டு ஊழிஊழி
வழிவழி சிறக்ககின் வலம்படு கொற்றம்"
(25:91, 92)


என்று வாழ்த்தி முடித்தாராம். வில்லவன் கோதை செங்குட்டுவனிடம் செய்தி கூறத் தொடங்குமுன் சேரனை வாழ்த்தித் தொடங்கினானாம்:

"பல் யாண்டு வாழ்ககின் கொற்றம் ஈங்கென
வில்லவன் கோதை வேந்தற் குரைக்கும்"
(25:150, 151)


என்பது பாடல் பகுதி. அரசனிடம் பேசும்போது மட்டுமன்று; அரசனது கட்டளையைப் பறையறைந்து சொல்லும் போதும் அரசனை வாழ்த்துவது மரபு.

"வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை
ஊழிதோ றுாழி உலகம் காக்க"
(25:181, 182)


என்று பறையறைந்தோர் வாழ்த்திப் பின்னரே செய்தியை அறிவித்தனராம். இவ்வாறு அரசர்களை வாழ்த்துவது ஒரு மரபு.

இந்த இடத்தில், யான் (சு. ச.) சிறுவனாய்ப் பள்ளியில் படித்தபோது வகுப்பு தொடங்குவதற்கு முன் பாடிய

"வாழ்க வாழ்கவே ஐந்தாம் ஜார்ஜ் மன்னர்
வாழ்க வாழ்கவே"

என்னும் பாடல் நினைவுக்கு வருகிறது. எல்லாம் காலத்தின் கோலம்!

மற்றும் ஓர் அரிய மரபு சிலம்பிலிருந்து தெரியவருகிறது. ஆடல் பாடலில் வல்ல கணிகையர் குலத்து மங்கை ஒருத்தி, முறைப்படி அரசன் முன்னே தனது கலையை அரங்கேற்றம் செய்த பின்பே, அவள் யாரையாவது வரித்துக் கொள்ளவோ - கலையுலக வாழ்வில் ஈடுபடவோ உரிமை உடையவள் ஆவாள் - என்பது போன்ற ஒரு வகை மரபு இருந்ததாகத் தெரிகிறது. மாதவி அரங்கேற்றம் செய்த பின்பு, அரசன் கொடுத்த மரகத மாலையை விலைக்கு வாங்குபவர் தன்னை அடையலாம் என்று கூறி மாலையைத் தன்தோழி ஒருத்தியின் வாயிலாகக் கடைத்தெருவுக்கு அனுப்பினாள். அங்கே திரிந்து கொண்டிருந்த கோவலன் மாலையை விலைக்கு வாங்கி மாதவியை அடைந்தான் என்பது முன்னரே அறிந்த செய்தி. மானம் கப்பல் ஏறிற்று என்று சொல்வர், அந்த அளவுக்குப் போகாமல், மாதவி. கோவலன் ஆகியோர் மானம் கடைத்தெரு ஏறியுள்ளது இது ஒரு பண்பாடு அற்ற - நாகரிகம் அற்ற முறையாகும்.

மணிமேகலைக் காப்பியத்திலும் இந்த ஆடல் மரபு கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. புகாரில் நடைபெற்ற இந்திர விழாவிற்கு மாதவியும் மணிமேகலையும் ஏன் வரவில்லை என ஊரில் மக்களிடையே அலர் எழுந்தது.

"மணிமே கலையொடு மாதவி வாராத்
தணியாத் துன்பம் தலைத்தலை மேல்வர"
(2:4, 5)

என்பது மணிமேகலைப் பாடல் பகுதி. மாதவியின் தாய் சித்திராபதி, வயந்த மாலையை நோக்கி, நீ மாதவிபால் சென்று ஊரில் ஒரே அலராயிருக்கிறது என்று கூறி அழைத்து வா என்றாளாம்;

"வயந்த மாலையை வருகெனக் கூஉய்ப்
பயங்கெழு மாநகர் அலர்எடுத்து உரையென"
(2:8, 9)

என்பது பாடல் பகுதி. இரட்டைக் காப்பியங்களாகிய சிலப்பதிகாரத்தாலும் மணிமேகலையாலும் இப்படியொரு மரபு இருந்தது புலனாகிறது. இந்தக் காலத்திலும், இதை விடக் குறைந்த அளவில் இம்மரபு எங்கெங்கோ பின்பற்றப் படுவதாகச் சொல்லப்படுகிறது. அந்தக் காலத்தில் அரசெதிரே அரங்கேற்ற வேண்டுமெனில், இந்தக் காலத்தே பெருந்தலைவர் யாராவது ஒருவர் முன் நடைபெறுகிறதாம். போகப்போக இதுவும் குறைந்து - பின் அறவே நீங்கிவிடும். காலம் மாறும் தன்மையது.

முடங்கல்

இந்தக் காலத்தில் முடங்கல் (கடிதம்) அஞ்சல்துறை வாயிலாகத் தொலைவையும் நேரத்தையும் வென்று விடுகிறது. பிறகு தொலைபேசி - பின்பு தொலைக் காட்சி - இப்படியாகக் கருத்துப் பரிமாற்றம், ஒரே நேரத்தில் - இடையீடு இன்றி உடனுக்குடன் நடைபெறுகிறது. அறிவியலின் திருவிளையாடல் இது. தமிழ் இலக்கியங்களுள் சிலப்பதிகாரத்தில் தான் முடங்கல் எழுதும் முறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. மாதவி, வயந்த மாலை வாயிலாகவும் கோசிகன் வாயிலாகவும் இருமுறை கோவலனுக்கு முடங்கல் அனுப்பினாள். இந்த மரபு அந்தக் காலத்திலேயே தொடங்கப்பட்டது.

பத்தினி வழிபாடு

தமிழ் நூல்களுள் சிலப்பதிகாரத்தில் தான் பத்தினி வழிபாடு முதல் முதல் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது எனக் கூறலாம்போல் தோன்றுகிறது. நடுகல் வழிபாட்டை இங்கே கொள்ளலாகாது, செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோட்டம் எடுத்துப் பத்தினி வழிபாட்டைத் தொடங்கிவைத்தான். மற்றும், சிறைவீடு பெற்ற கனக விசயர் முதலிய ஆரிய மன்னர்களும், சிறைவீடு பெற்ற வேறு மன்னர்களும், குடகக் கொங்கரும், மாளுவ வேந்தரும், இலங்கைக் கயவாகு மன்னனும், கண்ணகித் தெய்வத்தை விளித்து, எங்கள் நாடுகளிலும் எழுந்தருளி அருள்புரிய வேண்டும் என வேண்டினராம்.

"உலக மன்னவன் நின்றோன் முன்னர்
அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும்
பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும்
குடகக் கொங்கரும் மாளுவ வேந்தனும்
கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்
எம்நாட் டாங்கண் இமய வரம்பனின்
நன்னாள் செய்த நாளணி வேள்வியில்
வந்து ஈகஎன்றே வணங்கினர் வேண்டத்
தந்தேன் வரமென்று எழுந்தது ஒருகுரல்"
(30:156-164)

என்பது பாடல் பகுதி. இதனால், வடபுல மன்னர்களும் பத்தினிக்குக் கோயில் எடுத்தனர் என்பது தெளிவு. இவ்வாறு நாவலந் தீவு (இந்தியா) முழுவதும் பரவியிருந்த கண்ணகி வழிபாடு, பாரதக்கதை தென்புலத்தில் பரப்பப்பட்ட பின்னர் மறையலாயிற்று. இப்போது தமிழ் நாட்டில் உள்ள துரோபதையம்மன் கோயில்கள் முன்னர்க் கண்ணகி கோயில்களாக இருந்தவை என்றும் அதாவது கண்ணகியின் இடத்தைத் துரோபதை பிடித்துக் கொண்டாள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் அம்மன் கோயில் கொண்டுள்ள பெண் தெய்வங்கள் அனைவரும் மக்கள் பெண்டிரே. மாரி (மழை) பெய்ய வைப்பதால் மாரியம்மன் என்ற பெயருள்ள அம்மன்களின் வரலாறுகளைக் கிளறிப் பார்க்கின் உண்மை விளங்கும். திருவள்ளுவரின் மனைவிதான் மாரியம்மன் ஆனாள் என்பது ஒரு கதை. பிருகு முனிவரின் மனைவி நாகவல்லி என்பவளே மாரியம்மன் ஆனாள் - சமதக்கினி முனிவரின் மனைவி இரேணுகாதேவியே மாரியம்மன் ஆனாள் - என்பன கதைகள். இரேணுகாவின் மகன் பரசுராமன், தாய் செய்த ஒரு பெருங்குற்றம் பற்றி, அவளைத் தலை வேறாகவும் உடல் வேறாகவும் வெட்டி விட்டானாம். எனவேதான், சில இடங்களில் கழுத்தை மட்டும் வைத்து வழிபடுகின்றனர். கழுத்து மாரியம்மன் தோன்றிய வரலாறுகளுள் இஃதும் ஒன்று. ஐவர்க்கும் தேவி அழியாத பத்தினியாகிய துரோபதையின் வரலாற்றைச் சொல்ல வேண்டியதில்லை.

இதுகாறும் கூறியவற்றால், பத்தினி தெய்வமாகிய கண்ணகி கோயில் எடுத்து வழிபடப்பட்டாள் என்னும் உண்மையை ஐயமின்றி ஒத்துக் கொள்ளலாம். சிலப்பதிகாரக் காலத்தில் இந்த மரபு தொடங்கப்பட்டது.

இப்போது, மதுரை மாவட்ட எல்லையின் அண்மையில் உள்ள மங்களதேவி கோயில் என்னும் கோயில் கேரள அரசின் எல்லைக்குள் உள்ளது. அந்தப் பகுதியைத் தமிழ் நாட்டுக்கு அளிக்குமாறு தமிழ்நாடு அரசு கேரள அரசைக் கேட்டுக் கொண்டிருப்பதைச் செய்தித்தாள் படிப்பவர்கள் அறிவர். மங்களதேவி கோயில் எனப்படுவதுதான் கண்ணகி கோயில் எனப்படுகிறது. மங்கல மடந்தை கோட்டம் (30:88) என்று சிலம்பில் கூறப்பட்டுள்ளது.

தாலி கட்டுதல்

மணமகன் மணமகளின் கழுத்தில் தாலி கட்டியது சிலப்பதிகாரக் காலத்தில் உண்டா - இல்லையா - என்பது ஒரு கேள்விக் குறி.

சிலம்பு - முதல் காதையாகிய மங்கல வாழ்த்துப் பாடல் என்னும் பகுதியில் உள்ள "அகலுள் மங்கல அணி எழுந்தது" (46) என்னும் தொடருக்கு, ‘ஊரிலே மங்கல நாண் வலம் செய்தது” என்று பெரியோரால் உரை எழுதப்பட்டுள்ளது. மங்கல நாண் என்பது தாலி. எனவே, தாலி கட்டும் வழக்கம் அன்று இருந்தது எனலாம்.

சிலப்பதிகாரக் காலத்தில் இருந்த மற்றொரு கடுமையான மரபைச் சொல்லாமல் விடுவதற்கு இல்லை. அதுதான் திருடனுக்கு இறப்பு ஒறுப்பு (மரண தண்டனை) கொடுப்பது. இந்தக் காலத்தில் கொலை செய்தவனுக்கே இறப்பு ஒறுப்பு தரப்படுகிறது. கொலை செய்த சிலர் வாணாள் ஒறுப்பு (ஆயுள் தண்டனை) பெறுவதோடு தப்பித்துக் கொள்கின்றனர். ஆனால் அந்தக் காலத்தில் கொலை செய்தவனுக்கு மட்டுமன்று கள்வனுக்கும் இந்த ஒறுப்பு தரப்பட்டது. கண்ணகி பாண்டியன் நெடுஞ்செழியனிடம் வந்து தன் கணவனைக் கொன்றது தகாது என்று வழக்கு உரைத்த போது, கள்வனைக் கொன்றது கடுங்கோல் அன்று - செங்கோலே என்றான் பாண்டியன்,

"கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று
வெள்வேல் கொற்றம் காண்என"
(20:54, 65)

என்பது பாடல் பகுதி. 'கள்வன் மனைவியும் காவலன் மனைவியும் கைம்பெண்டாட்டிகள்' என்பது ஒரு பழமொழி. காவலன் = அரசன். கைம்பெண்டாட்டி = கைம்பெண் . விதவை. அந்தக் காலத்தில் அரசர்கள் அடிக்கடிப் போரிட்டுக் கொண்டு இறந்து போவதால் அவர்களின் மனைவியர் கைம்பெண் ஆகின்றனர். அதேபோல், கள்வனுக்கு இறப்பு ஒறுப்பு தருவதால் அவன் மனைவியும் கைம்பெண் ஆகிறாள். இந்தப் பழமொழியின் விளக்கம் இது.

அரபு நாடுகள் சிலவற்றில், திருடினால் உறுப்பைக் குறைத்தல் போன்ற ஒறுப்புகள் தரப்படுவதாகச் சொல்லப்படுகிறது. சில அரபு நாடுகளிலும் சோவியத் நாட்டிலும், பிறர் வைத்தபொருள் வைத்த இடத்திலேயே இருக்குமாம்-யாரும் தொடமாட்டார்களாம். போய் வந்தவர்கள் புகல்கின்றனர். உறுப்பைக் குறைத்தல் நம் நாட்டிலும் அன்று இருந்திருக்கிறது. நாலடியாரில் இது கூறப்பட்டுள்ளது. பிறர் மனைவியை விரும்புபவன் அகப்பட்டுக் கொண்டால் அவன் கால்களை வெட்டி விடுவார்களாம். மேலும் பழியும் துன்பமும் விளையும்:

"காணின் குடிப்பழியாம், கையுறின் கால்குறையும்,
ஆணின்மை செய்யுங்கால் அச்சமாம் - நீள்கிரயத்
துன்பம் பயக்குமால், துச்சாரி! நீகண்ட
இன்பம் எனக்கெனைத்தால் கூறு" (14)

ஆண்மையின்றித் தீய புணர்ச்சி செய்யின் அச்சமும் நெடுங்கால நரகத்துன்பமும் உண்டாகும். எனவே, ஏ காமுகனே! நீ பெற்ற இன்பம் என்னதான் என்று எனக்குக் கூறு - என்பது கருத்து. 'கையுறின் கால் குறையும்' என்பது எண்ணத்தக்கது.

கையூட்டு (இலஞ்சம்) பெற்ற அரசு அலுவலர் இருவர்க்கு இரழ்சியாவில் (சோவியத்) இறப்பு ஒறுப்பு கொடுக்கப்பட்டதாகச் சில ஆண்டுகட்கு முன் செய்தித்தாளில் படித்த நினைவிருக்கிறது. திருவள்ளுவரும் இதை ஒத்துக்கொண்டுள்ளார். கொடியவரைக் கொலை செய்வது, பயிரைக் கெடுக்கும் களைகளைக் களைவது போன்றதாம்!

"கொலையின் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்" (550)

என்பது திருக்குறள். இறப்பு ஒறுப்பு தருவதை நிறுத்தி விடவேண்டும் என்றும் சிலர் கூறும் காலம் இது. எல்லாவற்றிற்கும் உரிய காலத்தில் தக்க பதில் கிடைக்கும்:

பகல் முடிந்து இரவை நோக்கிப் பொழுது போகும் வேளையில், பெண்கள், நெல்லோடு முல்லை மலரைக் கலந்து வீடெல்லாம் தூவி, விளக்கு ஏற்றி இறை வணக்கம் செய்வர். பின்னர் இரவுக்கு ஏற்ற உடை (Night Dress) உடுப்பர். பாடல்:

"அகல் நகரெல்லாம் அரும்பவிழ் முல்லை
நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்த
மாலை மணிவிளக்கம் காட்டி இரவிற்கோர்
கோலம் கொடி யிடையார் தாம்கொள்ள"
(9:1-4)

என்பது பாடல் பகுதி. நகர் = வீடு, நிகர் = ஒளி. நக்கீரர் நெடுநல்வாடையிலும் இந்த மரபைக் கூறியுள்ளார்:

"நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது
மல்லல் ஆவண மாலை அயர"
(43, 44)

என்பது பாடல் பகுதி. இந்தக் காலத்திலும் ஏழைகள் தவிர்த்த மற்ற பெண்டிருள் சிலர் இரவு ஆடை உடுத்து இன்றனர். பெண்டிர் சிலர் பகலிலும், கத்தோலிக்கக் கிறித்துவத் துறவியரின் உடைபோன்ற "நெடு அங்கி" உடுத்திப் பெண்மையின் பொலிவைக் குறைத்துக் கொள்கின்றனர்.

கணவனால் கைவிடப் பட்டவர்கள், அறுகம்புல், சிறுபூளைப் பூ, நெல் ஆகியவற்றைக் கலந்து தூவி இறை வழிபாடு செய்யின், கணவனை மீண்டும் பெறலாம் என்று தேவந்தி கண்ணகிக்காகச் செய்து கணவனைப் பெறுக என்று வrழ்த்தினாளாம்.

"கண்ணகி கல்லாளுக்கு உற்றகுறை உண்டென்று
எண்ணிய நெஞ்சத்து இளையளாய் கண்ணி
அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்ச்சென்று
பெறுக கணவ னோடு என்றாள்"
(9:41-44)

இது பாடல் பகுதி. இந்த மரபு இப்போது எல்லா இடங்களிலும் பின்பற்றப் படுவதாகத் தெரியவில்லை.

கோவலனும் கண்ணகியும் இறந்த செய்தி யறிந்ததும் கவுந்தி உண்ணா நோன்பு பூண்டும், மாதரி தீக்குளித்தும் இறந்தனராம். உறவினரோ - நெருங்கிப் பழகியவரோ இறப்பின், சிலர் இவ்வாறு இறப்பது இந்தக் காலம் போல அந்தக் காலத்திலேயே உண்டு எனத் தெரிகிறது.

இவ்வாறு அன்று பல்வகைப் பழக்க வழக்க மரபுகள் இருந்தன.