சிலம்போ சிலம்பு/இயற்கைக் காட்சிப் புனைவு
15. இயற்கைக் காட்சிப் புனைவு
இலக்கியங்களில் இயற்கைக் காட்சிகளைப் புனைவு (வருணனை) செய்வது இயற்கை. இயற்கைக் காட்சிகளைப் புனைவு செய்தல் மட்டுமுள்ள சிறுசிறு நூல்களும் உண்டு. இந்நிலையில், சிலப்பதிகாரப் பெருங் (காப்பியத்தில் இயற்கைப் புனைவு இடம் பெற்றிருப்பதற்குக் கேட்கவா வேண்டும்!
மங்கல வாழ்த்துப் பாடல்: திங்கள் உலகளிக்கிறது. ஞாயிறு மேரு வலம் வருகிறது. மாமழை நீர் சுரக்கிறது.
மலை, கடல், ஆறு, முகில், பறவைகள், விலங்குகள், மர இனம், சோலை, நாடு - நகரம் முதலியவை சிலம்பில் அங்கும் இங்குமாகப் புனையப்பட்டுள்ளன.
நாடு காண் காதை, கவுந்தியடிகள் வழிநிலைமை கூறல், வேனிலின் வெம்மை, பாலையின் கொடுமை, மராம் ஒமை, உழிஞ்சில் மூங்கில் முதலிய மரங்கள் கருகல், நீர் பெறாது மான்கள் கதறல் - முதலியவை அறிவிக்கப்பட்டுள்ளன.
வேனில் காதை: வேனில் வந்தது என்பதைப் பொதிய மலையிலிருந்து வந்த தென்றலாகிய தூதன் அறிவித்தானாம். காமனது படையைச் சேர்ந்த குயிலோன் கூவினானாம். பலவகைப் பூக்களும் பூத்துக் குலுங்கின.
கானல் வரிப் பாடல்களில் இயற்கைக் காட்சிகள் மிகுதி. குன்றக் குரவையில் மலைவளம் இடம் பெற்றுள்ளது.
இந்திர விழவூர் எடுத்த காதையில், புகாரில் இருந்த பட்டினப்பாக்கமும், மருவூர்ப்பாக்கமும் புனையப் படுவதில் மிக்க சிறப்பிடம் பெற்றுள்ளன.கடலாடு காதையில், கடற்கரைப் புனைவு உள்ளத்தைத் தொட்டு மகிழ்விப்பதாகும்.
ஊர் காண் காதையில், மதுரை மாநகர் சொல்லோவியமாகத் தீட்டப்பட்டுச் சிறந்துள்ளது.
புகார்ப் புனைவும், மதுரைப் புனைவும் இயற்கைக் காட்சிகள் அல்லவாயினும், அப்பெரு நகரங்களில் இன்னின்னவை இருக்கலாம் என இளங்கோ அடிகள் கற்பனைக் கண்ணால் கண்டே புனைவு செய்திருக்க வேண்டும்.
அந்தி மாலைப் புனைவு:
சிலம்பில் அந்தி மாலைச் சிறப்புச் செய் காதையில் அந்தி மாலை நன்கு புனையப்பட்டுள்ளது.
அந்தியில் ஞாயிறு மறைந்தது. நிலமகள் ஞாயிறாகிய கணவனைக் காணாது வருந்தினாள். அடுத்து, கடலை ஆடையாக உடைய அந்த நிலமகள் திங்களாகிய செல்வனையும் காணாமல், நான்கு திசைகளிலும் முகம் பசந்து நெஞ்சம் பணித்துச் சுழன்றாள். அந்தி மாலையில் ஞாயிற்றின் ஒளி மறைந்து திங்கள் ஒளி வீசத்தொடங்கும் வரையும் சிறிது இடை வெளி இருக்கும். அந்தநேரமே இவ்வாறு புனையப்பட்டுள்ளது. 'முகம் பசந்து நெஞ்சம் பனித்து' என்பது இருபொருள் அமையப்பாடப்பட்டுள்ளது.
"திசைமுகம் பசந்து செம்மலர்க் கண்கள்
முழுநீர் வார முழுமெயும் பணித்து"
(4:5, 6)
இந்த நேரம் வந்ததும் காதலரைப் பிரிந்தோர் துன்புற்றனர். காதலரைப் பிரியாதார் இன்புற்றனர்.
கோவலர் குழலில் முல்லைப் பண் இசைத்தனர். வண்டுகள் முல்லை மலரில் வாய் வைத்து ஊதின.
மலர் மணத்தைத் தென்றலானவன் எங்கும் துாற்றினான் - அதாவது - மண்முடன் தென்றல் வீசியது மகளிர் மணி விளக்கு ஏற்றினர்.
இளைய ராயினும் பாண்டியர் பகைவர்களை வென்றது போல், வெண் பிறை நிலா அந்திமாலை என்னும் குறும்பை வென்று விண்மீன்களை ஆண்டது. குறும்பு = குறும்பர்கள். அந்திமாலை குறும்பராக உருவகிக்கப் பட்டுள்ளது - அதாவது அந்திமாலை கழியத் தொடங்கியது என்பது கருத்து.
காதலரைப் புணர்ந்த மாதவி போன்றோர் களியாட்டயர்ந்தனர் - காதலர் பிரிந்த கண்ணகி போன்றோர் துயரம் பெருகினர். காமவேள் வெற்றிக் களிப்புடன் திரியலானான். அந்திமாலை நிகழ்ச்சிச் சுருக்கம் இது.
இளங்கோ இதற்கென்று ஒரு தனிக்காதை செலவிட்டடுள்ளார். முப்பது காதைகள் வேண்டுமே என்பதற்காக இவ்வாறு செய்திருப்பாரோ!