சிலம்போ சிலம்பு/உவமை உருவகங்கள்

விக்கிமூலம் இலிருந்து

16. உவமை - உருவகங்கள்

சிலப்பதிகாரத்தில் எத்தனையோ உவமைகளும் உருவகங்களும் வந்துள்ளன. தாமரை போன்றமுகம் என்னும் பொருளில் தாமரை முகம் என்று சொல்லின் அது உவமை. முகமாகிய - அதாவது முகம் என்னும் தாமரை என்னும் பொருளில் முகத்தாமரை என்று சொல்லின் அது உருவகம். சில காண்பாம்:

உவமைகள்

மனையறம் படுத்த காதை அமளிமிசை கோவலனும் கண்ணகியும் ஞாயிறும் திங்களும் ஒன்றாயிருந்தது போன்ற காட்சியினராய் அமர்ந்திருந்தனராம்:

"முதிர்கடல் ஞாலம் முழுவதும் விளக்கும்
கதிர் ஒருங்கிருந்த காட்சி போல"
(2:30, 31)

'கதிர் ஒருங்கிருந்த' என்பதைக் கொண்டு இரண்டு கதிர்கள் என்பது பெறப்படும். இப்போது பெண்கள் பெரிய உரிமை எடுத்துக் கொள்ளினும், தொடக்கத்தில் கோவலன் செய்த திருவிளையாடல்களையும் கண்ணகி அடக்கமாயிருந்ததை யும் நோக்குங்கால், கோ வ ல னை ஞாயிறாகவும் கண்ணகியைத் திங்களாகவும் கூறலாம். கதிர்கள் இரண்டும் ஒன்றாயிருத்தல் இல்லை யாதலின், இது இல்பொருள் உவமை எனப்படும். வடமொழியில் அபூத உவமை என்பர்.

இந்தக் காதையின் இறுதி வெண்பாவில் இரண்டு உவமைகள் உரைக்கப்பட்டுள்ளன. இருவரும் காமனும் அவன் மனைவி இரதியும் போல் தோற்றத்தில் காணப் பட்டனராம். ஆண் பாம்பும் பெண் பாம்பும் ஒன்றோடு ஒன்று முறுக்கிக் கொண்டு இன்பம் துய்ப்பதுபோல், இருவரும் தம் உடல்களைப் பின்னிப் பிணைத்துக் கொண்டு பிரிக்க முடியாதபடி இன்பத்தில் மிதந்தனராம்.

"தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தால் என ஒருவார்
காமர் மனைவி யெனக் கைகலந்து..."

என்பது பாடல் பகுதி. பாம்புகளின் உவமை மிக்க பொருள் பெறுமானம் உடையது.

அந்திமாலைச் சிறப்புச் செய்காதை, தங்கள் பேரரசன் போய் விட்டபோது, குடிகளை வருத்தி வரிவாங்கும் கொடிய குறுநிலமன்னரைப் போல், ஞாயிறு மறைந்ததும் அந்தி மாலை வந்ததாம்:

"அரைசுகொடுத்து அலம்வரும் அல்லல் காலைக்
கறைகெழு குடிகள் கைதலை வைப்ப
அறைபோகு குடிகளோடு ஒருதிறம் பற்றி
வலம்படு தானை மன்னர் இல்வழிப்
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின் (4:8-12)
மல்லல் முதுரர் மாலைவக் திறுத்தென" (4:20)

ஞாயிறு பேரரசன் போன்றது. அந்திமாலை குறு நில மன்னர் போன்றது. ஞாயிறு போனதும் மாலை வந்தது.

கதையின் இறுதி வெண்பா வேந்தனின் குடை தன் குடி மக்கட்குக் குளிர்ச்சியும் பகைவர்க்கு வெப்பமும் தருவது போல, இரவில் திங்கள் தோன்றி மாதவிக்கு இன்பமும் கண்ணகிக்குத் துன்பமும் தந்தது.

"கூடினார்பால் கிழலாய்க் கூடார்பால் வெய்யதாய்க்
காவலன் வெண்குடைபோல் காட்டிற்றே - கூடிய
மாதவிக்கும் கண்ணகிக்கும் வானூர் மதிவிரிந்து
போதவிழ்க்கும் கங்குல் பொழுது"

மன்னன் குடிமக்களை நன்முறையில் காப்பதை, மன்னனின் குடை நிழலிலே மக்கள் மகிழ்ச்சியா யிருக்கிறார்கள் என்று கூறுதல் மரபு. ஒரு குடைக் கீழ் நாடு முழுதும் இருப்பதாகப் பொருள் கொள்ளலாகாது. உலக வழக்கில், 'ஏதோ உங்கள்நிழலில் தான் இருக்கிறோம் - நீங்கள்தான் காப்பாற்றவேண்டும்' - என்று மக்கள் கூறுவது உண்டு.

""தெண்கடல் வளாகம் பொதுமையின்றி
வெண்குடை கிழற்றிய ஒருமை யோர்க்கும்" (189:1,2)

என்னும் புறநானூற்றுப் பாடல் பகுதியில் உள்ள 'நிழற்றிய' என்னும் சொல் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.

தன் குடிமக்கட்குக் குடை குளிர்ச்சி தருகிறது எனில், தன் பகைவர்க்கு எதிர்மாறாக வெப்பம் தருவதாகக் கூறுதல் தானே முறை.

இந்தக் குடைபோல், திங்கள், கோவலனோடு கூடியிருக்கும் மாதவிக்கு இன்பமும், கோவலனைப் பிரிந்திருக்கும் கண்ணகிக்குத் துன்பமும் கொடுக்கிறதாம்.

காதலரைப் பிரிந்தவர்களைத் திங்கள் வருத்தும் செய்தி எண்ணிறந்த இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது.

கனாத்திறம் உரைத்த காதை: மாலதி என்பவள் தன் மாற்றாள் குழந்தைக்குப் பால் புகட்டியபோது பால் விக்கிக் குழந்தை இறந்துவிட்டது. மாலதி அஞ்சி, குழந்தையைப் பிழைக்கச் செய்யுமாறு தெய்வங்களை வேண்டிக் கொண்டிருந்தபோது இடாகினி என்றும் பேய் அக் குழந்தையை விழுங்கிவிட்டது. உடனே மாலதி இடியோசை கேட்ட மயில் போல் ஏங்கி அழுதாளாம்:

"இடியுண்ட மஞ்ஞைபோல் ஏங்கி அழுதாள்" (23)

இந்த உவமை சிக்கலாய்த் தோன்றுகின்றது. மழைவரப் போகிறது எனில் மயில் தோகை விரித்தாடும் என்பதாக ஒரு கருத்து சொல்லப் படுவதுண்டு. ஆனால், இடியுண்ட மயில்போல் ஏங்கி அழுதாள் என்பதை நோக்குங்கால் இடி இடித்தால் மயில் அஞ்சித் துன்புறும் என்பது போன்ற கருத்தே கிடைக்கிறது. இது சரியா?

இங்கே ஞானசம்பந்தரின் திருவையாற்றுப் பதிகத்தில் உள்ள தேவாரப் பாடல் ஒன்று நினைவைத் தூண்டுகிறது. மயில்கள் நடனம் ஆடுகின்றனவாம் - முகில் இடி இடிக்கிறதாம் - நடனத்தைக் கண்டதும் இடியொலியைக் கேட்டதும் மழை வருமோ என அஞ்சி மந்திகள் (குரங்குகள்) மரத்தின் உச்சியில் ஏறி மழைவரும் நிலைமையைத் தெரிந்துகொள்ள முகிலைப் பார்த்தனவாம்.

"வலம்வந்த மடவார்கள் நடமாட
முழவுஅதிர மழைஎன்று அஞ்சிச்
சிலமந்தி அலமந்து மரமேறி
முகில் பார்க்கும் திருவையாறே"
(3:1)

என்பது பாடல் பகுதி. நடனம் ஆடும் மயில்கள் கோயிலைச் சுற்றிவரும் மடவாரே. அவர்கள் நடப்பது ம்யில்கள் நடப்பது போல் தெரிகின்றதாம். இடியொலி என்பது கோயிலில் அடிக்கும் முழவின் ஒலியே, மடவாரின் நடையை மயில் நடையாகவும் முழவொலியை இடியொலியாகவும் மந்திகள் மாறி எண்ணிவிட்டனவாம். ஞானசம்பந்தரின் இந்த்ப் பாடலில் உள்ள இலக்கிய நயம் மிகவும் சுவைக்கத் தக்க்து.

மயில் தொடர்பாக இந்தப் பாடலிலிருந்து கிடைப்பது இடியொலியுடன் மழைவரும் அறிகுறி தோன்றின் மயில்கள் மகிழ்ச்சியுடன் நடனமாடும் என்னும் செய்தியாகும். இளங்கோவின் பாடலுக்கும் ஞானசம்பந்தரின் பாடலுக்கும் இடையே முரண்பர்டு தெரிகிறதே. இந்தச் சிக்கலுக்குத் தீர்வு என்ன? ஒருவேளை, மிகவும் கடுமையாகத் தொடர்ந்து இடி இடிப்பின் மயில் அஞ்சுமோ விலங்கு - பறவை நூல் வல்லுநரிடம் கேட்டால் தெரியலாம்.

உலக இடை கழி

நாடு காண் காதை: புகாரின் வெளிக் கோபுர வாயிலைக் கடந்து கோவலனும் கண்ணகியும் சென்றார்களாம். அவ்வழியாக உலகத்து வாணிக மக்களும், சுற்றுலா வரும் மக்களும் போய் வருவதால், அந்த இடம் 'உலக இடைகழி' என இளங்கோவால் இயம்பப்பட்டுள்ளது: பம்பாய் 'இந்தியாவின் வாயில்' (Gate of India) என்று சொல்லப்படுகிறது. புகாரின் கோபுர வாயிலோ உலக இடைகழி (Gate of World) எனச் சிறப்பிக்கப் பெற்றுள்ளது. வெளியில் செல்லும் தெரு கோபுர வாயிலிலிருந்து தொடங்கு கிறது. இது, மலையிலிருந்து தொடங்கும் பெரிய ஆறு போன்று இருக்கின்றதாம்! கோபுரவாயில் மலை - தெரு ஆறு பாடல்:

"மலைதலைக் கொண்ட பேர்யாறு போலும்
உலக இடைகழி ஒருங்குடன் நீங்கி" (10:26, 27)

என்பது பாடல் பகுதி. பெரும்பாலும் ஆறுகள் மலைகளி லிருந்து தோன்றுவன. 'மலை தலைக் கொண்ட' என்றால், 'மலையைத் தொடக்க இடமாகக் கொண்ட' என்பது பொருளாம். "மலைத் தலைய கடல் காவிரி" (6) என்னும் பட்டினப்பாலைப் பகுதி ஈண்டு ஒப்புநோக்கத் தக்கது. மற்றும், நீண்ட தெரு ஆறு கிடந்தாற்போல் இருப்பதாகக் கழக இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.

"ஆறு கிடந்தன்ன அகல் நெடுங்தெரு

(நெடுநல்வாடை - 30)

யாறு கிடந்தன்ன அகல் நெடுந்தெரு"

(மதுரைக்காஞ்சி - 359)
என்பன பாடல் பகுதிகள். 'உலக இடைகழி' என்பது புகாருக்குப் புதுப்பெருமை அளிக்கின்றதன்றோ?

பல வகையான பறவைகளின் ஒலி, வெற்றிவேந்தரின் போர்முனை ஒலிபோல் கேட்டதாம்:

"உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்
வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்
பல்வேறு குழுஉக் குரல்பரந்த ஓசையும்"
(117-119)

வெற்றி பெற்றவர்கள் எழுப்பும் ஆரவார ஒலி எத்தகையது என்பதை, இந்தக் காலத்துத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களும் அவரைச் சார்ந்தவர்களும் எழுப்பும் ஒலியைக் கொண்டு புரிந்து கொள்ளலாம்.

யாக்கை நிலையாமை

சாரணர்கள் கவுந்திக்கு அருளுரை கூறுகின்றனர்: தீ யூழ் தீமை தருவதை யாராலும் தடுக்கமுடியாது. விதை விதைத்தால் அது பயிராகிப் பயனைக் கட்டாயம் தருதல் போல், நல்லூழ் இருப்பின் நல்ல பயன் கிடைத்தே தீரும். காற்று வீசும் வெளி இடத்தில் விளக்கு அணைந்து விடுதல் போல, உரிய காலத்தில் உயிர் உடம்பினின்றும் பிரிந்து விடும். பாடல்:

"ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை
இட்ட வித்தின் எதிர்ந்து வந்துஎய்தி
ஒட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணா
கடுங்கால் நெடுவெளி இருஞ்சுடர் என்ன
ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள்"
(10:171-174)

இது பாடல் பகுதி. விரும்பினும் விரும்பாவிடினும் நடப்பது நடந்தே தீரும். ஈண்டு நாலடியாரில் உள்ள,

"உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா
பெறற்பா லணையவும் அன்னவாம்"
(பழவினை-4)

என்னும் பாடல் ஒப்புநோக்கத் தக்கது.

வேங்கடவன் கோலம்

வேங்கட மலையின் உச்சியில், ஒரு பக்கம் தெரியும் ஞாயிற்றுக்கும் மற்றொரு பக்கம் தெரியும் திங்களுக்கும் இடைப்பட்ட பகுதியில், நீலநிற முகில், மின்னலாகிய புதுப் பொன்னாடை உடுத்து, இந்திரவில்லாகிய அணிகலனைப் பூண்டு நின்றாற் போல், திருமால் ஒருகையில் ஆழியும் (சக்கரமும்) மற்றொரு கையில் வெண் சங்கும் ஏந்தி, மார்பிலே ஆரம் அணிந்து, பூவாடை போர்த்துப் பொலிவுடன் நின்றகோலத்தில் உள்ளாராம் - என்று மாங்காட்டு மறையவன் கோவலனிடம் கூறினான்.

"வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக் கோடிஉடுத்து விளங்குவில் பூண்டு
கன்னிற மேகம் கின்றது போலப்
பகையணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாம்ரைக் கையின் ஏந்தி
கலங்கிளர் ஆரம் மார்பில் பூண்டு
பொலம்பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்"
(11:41-51)

இது பாடல் பகுதி. பரிபாடலிலும் இது கூறப்பட்டுள்ளது.

"பருவம் வாய்த்தலின் இருவிசும்பு அணிந்த
இருவேறு மண்டிலத்து இலக்கம் போல
நேமியும் வளையும் ஏந்திய கையால்"
(13:7.9)

இருவேறு மண்டிலம் = ஞாயிறும் திங்களுமாகும். இரட்டைக் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையிலும் ஞாயிறு - திங்கள் தோற்றம் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. புகார் என்னும் பெண், மாலையில் ஒரு பக்கம் வெண்தோடும் மற்றொரு பக்கம் பொன்தோடும் அணிந்திருந்தாற் போன்று, கீழ்பால் திங்களும் மேல் பால் ஞாயிறும் விளங்கின எனக்கூறப்பட்டுள்ளது.

"புலவரை யிறந்த புகாரெனும் பூங்கொடி (5:109)
குணதிசை மருங்கில் நாள்முதிர் மதியமும்
குடதிசை மருங்கில் சென்றுவீழ் கதிரும்

வெள்ளி வெண் தோட்டோடு பொன்தோடாக"
(5:119-121)

இது பாடல் பகுதி. மாலையில் ஒரே நேரத்தில் கிழக்கே திங்களும் மேற்கே ஞாயிறும் காணப்படுவது ஆங்கிலப் பாடல் ஒன்றிலும் அறிவிக்கப் பட்டுள்ளது. லார்டு டென்னிசன் (Lord Tennyson) இயற்றிய "The Lotos Eaters" என்னும் பாடல் அது. யூலிசெஸ் (Ulysses) என்னும் கிரேக்க மன்னனின் போர் மறவர்கள், ஆசியாமைனரில் உள்ள எதிரியின் 'ட்ராய்' (Troy) என்னும் பகுதியை வென்று, தமது இதாகா (Ithaca) என்னும் பகுதிக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த வழியில் ஒரு தீவில் தங்கினார்களாம். அவர்கள் அத்தீவில் மாலையில் ஞாயிறுக்கும் திங்களுக்கும் இடையே அமர்ந்திருந்தார்களாம். பாடல்:

"They sat them down upon the yellow sand

Between the sun and moon upon the shore"
(5:1,2)
என்பது பாடல் பகுதி. இளங்கோவின் சிலம்புக்கு நயம் கூட்டுவதற்காக, இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில் வேறு மூன்று நூற்பாடல்கள் ஈண்டு எடுத்துக் காட்டப்பட்டன.

நிலம் திரிதல்

வேனில் (வெயில்) காலத்தோடு ஞாயிற்றின் கொடிய வெப்பமும் சேர்ந்து கொண்டதால், முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் தம் நிலை மாறிப் பாலைவனமாக மாறினவாம். இதற்குப் பொருத்தமான உவமை தரப் பட்டுள்ளது. அமைச்சர் முதலான துணைவர்களோடு அரசனும் முறைமாறி நடக்க, நல்ல அரசியல் இன்மையால் வருந்தும் நாட்டைப்போல நிலம் திரிந்ததாம்.

"கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி
வேத்தியல் இழந்த வியனிலம் போல
வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தானலம் திருகத் தன்மையில் குன்றி
முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல் பழிந்து கடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவங் கொள்ளும்"
(11:60:66)

கோத்தொழிலாளர் = அமைச்சர் முதலான அரச வினைஞர்கள். வேனலம் கிழவன் = வேனில் காலம் கிழவன் என உருவகிக்கப்பட்டுள்ளது. கோத் தொழிலாளர் போன்றது வேனில். வெங்கதிர் வேந்தனாகிய ஞாயிறு அரசனுக்கு ஒப்புமை.

புறஞ்சேரி இறுத்த காதை

கோசிகன் வெயிலால் வாடிய மாதவிக் கொடியைப் பார்த்து, கோவலன். பிரிந்ததால் கொடுந்துன்பம் அடைந்த மடந்தையாகிய மாதவி போல நீயும் வருந்தினையோ - என்றான்.

"கோவலன் பிரியக் கொடுந்துயர் எய்திய
மாமலர் கெடுங்கண் மாதவி போன்றுஇவ்
அருந்திறல் வேனிற் கலர்களைக் துடனே
வருந்தினை போலும் நீ மாதவி"
(13:48-51)

கொடி மாதவிக்கு மடந்தை மாதவி ஒப்புமையாக்கப்பட்டுள்ளாள். பொ ரு த் த மா ன உவமை. சொல் விளையாட்டு இது.

கோசிகன் கோவலனை நோக்கி, நின் பிரிவால் உன் தந்தையும் தாயும் சுற்றமும் மணி இழந்த நாகப்பாம்பு போலவும் உயிர் பிரிந்த உடம்புபோலவும் நிலைமாறிக் கிடக்கின்றனர் என்றான்.

"இருகிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும்
அருமணி இழந்த காகம் போன்றதும்
இன்னுயிர் இழந்த யாக்கை என்னத்
துன்னிய சுற்றம் துயர்க்கடல் வீழ்ந்ததும்"
(13:57.60)

கோவலனுக்கு மாணிக்கமும் உயிரும் உவமையாக்கப் பட்டுள்ளன. மற்றும், பெரும்பெயர் மூதூர் இராமன் பிரிந்த அயோத்திபோல் பேதுற்றதாம். இங்கே கோவலனுக்கு இராமன் ஒப்புமை (அருந்திறல்: இராமன்).

"அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்
பெரும்பெயர் மூதூர்பெரும்பே துற்றதும்"
(13:65,66)

காட்சிக்காதை: சேரன் செங்குட்டுவன் பேராற்றங் கரையிலே மணல் குன்றிலே வந்து தங்கியிருந்தபோது, மலைவாழ் மக்கள் ப ல வ கை யா ன காணிக்கைப் பொருள்களைச் சுமந்து கொண்டு வந்து செங்குட்டுவனுக்குத் கொடுக்க இருந்தனர். இதற்குச் சேரனின் சிறப்பை அறிவிக்கும் உவமை இன்று கூறப்பட்டுள்ளது. சேரனிடம் தோற்ற பகை மன்னர்கள் அவனுக்குப் பணிந்து திறைப் (கப்பப்) பொருளைச் சுமந்து கொண்டு வந்து சேரனைக் காணும் வாய்ப்புக்காக நின்றபடிக் காத்திருந்தார்களாம். அதுபோல், மலைவாழ் மக்கள் காத்திருந்தார்களாம்.

"இறைமகன் செவ்வி யாங்கனும் பெறாது
திறைசுமந்து நிற்கும் தெவ்வர் போல"
(25:35, 36)

என்பது உவமைப் பகுதி. இறைமகன் = சேரமன்னன். செவ்வி = நேரில் காணும் நேரம். யாங்கணும் பெறாது = எவ்விடத்தும் பெறாமல். அதாவது, கப்பம் கட்டத் தலைநகர் வஞ்சி சென்றும் காணமுடியவில்லை. மலைவளங் காண மன்னன் சேரன் சென்றுள்ளான் என்று அறிந்து அங்கே சென்றும், விரைவில் - எளிதில் காணமுடிய வில்லையாம். இது சேரன் பெருமைக்குச் சான்று. இந்தக் காலத்திலும், பெரிய மனிதர்கள் என்று தங்களை எண்ணிக் கொண்டிருக்கும் மேதைகள் சிலரைக் காண நெடுநேரம் வரிசையில் காத்திருப்பது உண்டல்லவா?

கால்கோள் காதை:- சேரன் செங்குட்டுவன் பகைவ ரோடு போர் புரிய வஞ்சியினின்றும் புறப்பட்டு எழுந்தது, அரக்கரோடு போர்புரிய இந்திரன் புறப்பட்டதுபோல் இருந்ததாம்.

"தானவர் தம்மேல் தம்பதி நீங்கும்
வானவன் போல வஞ்சி கிங்கி"
(26.78, 79)

தானவர் = அரக்கர், தம்பதி = இந்திரன் நகரம். வானவன் = இந்திரன்.

இரை வேட்டு எழுந்த அரிமா (சிங்கம்) யானைக் கூட்டத்தின்மேல் பாய்ந்தாற்போல் சேரன் பகைவர்கள்மேல் சிறிப்பாய்ந்தானாம் .

"இரைதேர் வேட்டத்து எழுந்த அரிமாக்
கரிமாப் பெருமிரை கண்டுஉளம் சிறந்து
பாய்ந்த பண்பின்"
(26.188.190)

என்பது உவமைப்பகுதி.

முகமதியம்

செங்குட்டுவன் கால்களில் அணிந்துள்ள கழல்கள், அவன் வென்று அடிமையாக்கிய மன்னர்களின் முடியைத் தேய்க்கின்றனவாம். பகைவர்க்கு அவ்வாறு இருக்கும் சேரன் தன் குடிமக்கட்கு அருள் புரியும்போது அவனது மலர்ந்த குளிர்ந்த முகத்தைப்போல் மூதூரில் திங்கள் தோன்றியதாம்

"முடிபுறம் உறிஞ்சும் கழல்கால் குட்டுவன்
குடிபுறங் தருங்கால் திருமுகம் போல
உலகுதொழத் தோன்றிய மலர்கதிர் மதியம்
பலர்புகழ் மூதூர்க்குத் காட்டி நீங்க"
(28:37.40)

பெண்களின் முகத்திற்குத் திங்களை உவமையாகச் சொல்வது பெருவாரியான வழக்கு. இங்கே திங்களுக்குச் சேரன் முகம் ஒப்பாக்கப் பட்டிருப்பது ஒரு புதிய ஆட்சி. இது குளிர்ச்சி கருதிக் கூறப்பட்டுள்ளது. (பிறைமதி உலகு தொழத் தோன்றுகிறது.)

பகைவரிடம் கடுமையாகப் போரிடும் பெரிய யானை, சிறார்களிடம் மென்மையாக நடந்து கொண்டு, நீர்த்துறையில் தன் கொம்புகளைக் கழுவும் அவர்களுடன் விளையாடுவது போல, அதியமான் பகைவர்களிடம் கடுமையாய் நடந்து கொள்ளினும் ஒளவையார் போன்ற புலவர் பெருமக்களிடம் இனிமையாய் நடந்து கொள்வான் என்னும் கருத்தில் ஒளவையார் பாடிய புறநானூற்றுப் பாடல் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. பாடல்;

"ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை பெரும எனக்கே மற்றதன்
துன்னருங்கடாஅம் போல்
இன்னாய் பெருமகின் ஒன்னா தோர்க்கே"
(94)

இதுபாடல். எவ்வளவு நயமான கருத்து!

வாழ்த்துக் காதை - உரைப்பாட்டு மடை:- வடபுலம் சென்று இமயமலையிலிருந்து சிலை செய்தற்கு வேண்டிய கல்லைக் கொணரவேண்டும் என்றிருந்த சேரன் செங்குட்டு வனிடம், வடமன்னர்கள் தென்புல மன்னர்களை இகழ்ந்தனர் என்ற செய்தி கூறினதும் அவன் கொதித்து எழுந்ததற்கு உவமையாக, இயல்பாகவே உருண்டு கொண்டிருக்கும் மணிவட்டை (சக்கரத்தை) ஒரு குறுந்தடி கொண்டு தள்ளி மேலும் விரைந்து ஓடச் செய்யும் செயல் உவமையாக்கப்பட்டுள்ளது. "உருள்கின்ற மணிவட்டைக் குணில்கொண்டு துரந்தது போல்" என்பது உவமைப் பகுதி - (29; உரைப்பாட்டு மடை)

நூலின் இறுதியில் 'நூற் கட்டுரை' என்னும் தலைப்பில் ஒரு நயமான - திறமையான உவமை கூறப்பட்டுள்ளது. ஒரு முகம்பார்க்கும் கண்ணாடியிலே நீண்ட பெரிய மலையைக் காட்டிக் காணச் செய்யும் அற்புதம் போல, ஒரு பெரிய வரலாறு சிலப்பதிகாரம் என்னும் நூலில் அடக்கிச் சொல்லப்பட்டுள்ளது - பாடல்:

"ஆடி கிழலின் டிேருங் குன்றம்
காட்டுவார் போல் கருத்து வெளிப்படுத்து
மணி மேகலைமேல் உரைப்பொருள் முற்றிய
சிலப்பதி காரம் முற்றும்" (15.18)

இது பாடல் பகுதி.

உருவகம்

மீார்சு

அத்தி வானத்திலே திங்களாகிய அரசன் தோன்றி மாலையாகிய பகையை ஒட்டிப் பால்கதிர் பரப்பி விண்மீன்களாகிய குடிகளை ஆளுவதாக உருவகம் செய்யப் பட்டுள்ளது.

"அந்தி வானத்து வெண்பிறை தோன்றிப்
புன்கண் மாலைக் குறும்பு எறிந்து ஒட்டிப்
பான்மையின் திரியாது பால்கதிர் பரப்பி
மீனர சாண்ட வெள்ளி விளக்கத்து" (4:23-26)

இது பாடல் பகுதி. மாலையைப் பகைக் குறும்பு என்றதால் வெண்பிறையை வெற்றி வேந்தனாகக் கொள்ளல் வேண்டும். மன்னர்கள் மண்ணிலேயிருந்து மக்களை ஆளுவது போல், பிறைத் திங்கள் விண்ணிலேயிருந்து விண்மீன்களை ஆள்கின்றது. மாலையைக் குறும்பாக உருவகித்துள்ளார். மாலைக் குறும்பு = ஓரிட உருவகம்.

பொய்கைப் பெண்

பொய்கையாகிய பெண் அன்னமாகிய நடையையும், ஆம்பலின் மணமாகிய நறுமணப் பொருளையும், தாமரை ஆகிய வாயையும் அறல் மணலாகிய கூந்தலையும் வண்டுகளாகிய பாணர்களின் பண்ணையும் குவளையாகிய கண்ணையும் உடைத்தாயிருக்கிறாள். பொய்கையைச் சுற்றிப் பறவைகளின் ஒலியாகிய முரசம் முழங்குகிறது.

"அன்ன மென்னடை நன்னீர்ப் பொய்கை
ஆம்பல் காறும் தேம்பொதி நறுவிரைத்
தாமரைச் செவ்வாய்த் தண்அறல் கூந்தல்
பாண்வாய் வண்டு நேர்திறம் பாடக்
காண்வரு குவளைக் கண்மலர் விழிப்ப

புள்வாய் முரசமொடு...... "
(4:72–77))

என்பது பாடல் பகுதி.

உழவு

மாடல் மறையோன் தன் நாக்காகிய ஏராலே உழுது செங்குட்டுவனின் செவியாகிய வயலிலே உயர்ந்த அறவுரையாகிய விதையை விதைத்தானாம்.

"மறையோன் மறைகா உழுது வான்பொருள்

இறையோன் செவி செறுவாக வித்தலின்"
(28:187,188.)

மண்ணக மடந்தை

கடலாகிய ஆடையும் மலையாகிய முலையும் பெரிய ஆறாகிய மார்பு மாலையும் முகிலாகிய கூந்தலும் கொண்ட நிலம் (மண்ணகம்) என்னும் பெண்ணின் இருளாகிய போர்வையை நீக்கிக் கதிர் பரப்பி ஞாயிறு தோன்றிற்றாம்.

"அலைநீர் ஆடை மலைமுலை ஆகத்து
ஆரப் பேரியாற்று மாரிக் கூந்தல்
கண்ணகன் பரப்பின் மண்ணக மடங்தை
புதையிருள் படாஅம் போக நீக்கி
உதய மால்வரை உச்சித் தோன்றி
உலகுவிளங்கு அவிரொளி மலர்கதிர் பரப்பி" (5:1-6)

அலை நீர் = கடல். ஆகம் = மார்பு. ஆரம் = மார்பு மாலை. மாரி = முகில் (மேகம்). படாஅம் படாம் = போர்வை.

பொய்யாக் குலக்கொடி

பல்வேறு மரங்களிலிருந்து அடித்துக்கொண்டு வரும் மலர்களாகிய மாலையும் மேகலையும், கரையாகிய அல்குலும், மணல் குன்றுகளாகிய முலைகளும், முருக்க இதழாகிய சிவந்த வாயும், முல்லையாகிய பற்களும், கயலாகிய கண்களும், அறலாகிய கூந்தலும் கொண்டுள்ளாள் வையை என்னும் பொய்யாக் குலக் கொடி பாடல்:

"குடசமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும்
பிடவமும் மயிலையும் பிணங்களில் மணந்த
கொடுங்கரை மேகலைக் கோவை யாங்கணும்
மிடைந்துசூழ் போகிய அகன்றேந்து அல்குல்
வாலுகம் குவைஇய மலர்ப்பூந் துருத்திப்
பால்புடைக் கொண்டு பன்மலர் ஓங்கி
எதிரெதிர் விளங்கிய கதிரிள வனமுலை
வரைகின் றுதிர்த்த கவிர்இதழ்ச் செவ்வாய்

அருவி முல்லை அணிநகை யாட்டி
விலங்குகிமிர்ந்து ஒழுகிய கருங்கவல் நெடுங்கண்
விரைமலர் நீங்கர் அவிர்அறல் கூந்தல்
உலகு புரந்துட்டும் உயர்பேர் ஒழுக்கத்துப்
புலவர் காவில் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக்கொடி" (13:157-170)

இது பாடல் பகுதி. குடசம் முதலிய மர இனங்கள். வாலுகம் = மணல் குன்று. கவிர் இதழ் = முருக்க மலரின் இதழ். பூங்கொடி வையை - வையை ஆறு என்னும் பெண். இது புலவர்களால் புகழ்ந்து போற்றப்பட்டது. நீர் பொய்க்காமல் ஒழுகுவதாம். ஈண்டு கம்பர் கோதாவரியைத் 'தண்ணென் ஒழுக்கமும் தழுவிய' தாகக் கூறியிருப்பது ஒப்புநோக்கத்தக்கது. பாண்டியர் குலத்துக்கு உரியதாம்.

நோயும் மருந்தும்

போர் மறவர்கள் போர்க்களப் பாசறையிலே தங்கி இருந்த போது, அவர்களின் மனைவிமார்களின் கவர்ச்சியான கடைக்கண் பார்வையை மனக்கண் முன் நோக்கி நோக்கி வருந்தினார்களாம். அந்தக் கடைக்கண் எங்கே இருக்கிறது? கூந்தலாகிய முகிலுக்குள் இருக்கும் முகமாகிய திங்களிடம் உள்ள புருவமாகிய வில்லின் கீழ்க் கண்கள் உள்ளன. அந்தக் கண்கள் மன்மதனின் மலராகிய அம்புகளை வென்று செவ்வரி படர்ந்துள்ளனவாம். இப்போது போர் மறவர்கள் போர்க்களப் பாசறையினின்றும் வெற்றியுடன் வீட்டிற்கு வந்து விட்டார்கள். மறவர்களின் மனைவிமார்கள் தங்கள் கடைக்கண் பார்வையை அவர்களிடம் தூதாக அனுப்புகிறார்களாம். அதாவது, கடைக் கண்ணால் காதல் உணர்வு தோன்ற நோக்குகிறார்களாம். பிரிந்து பாசறையிலேயே இருந்த போது நினைக்கச் செய்து நோய் (மனநோய்) உண்டாக்கிய கண்கள், இப்போது அந்த நோய்க்கு மருந்தாகிக் கணவரை இன்புறுத்துகின்றனவாம். பாடல்:

"மைம்மலர் உண்கண் மடந்தையர் அடங்காக்
கொம்மை வரிமுலை வெம்மை வேதுறீஇ
அகிலுண விரிந்த அம்மென் கூந்தல்
முகில்நுழை மதியத்து முரிகருஞ் சிலைக்கீழ்
மகரக் கொடியோன் மலர்க்கணை துரந்து
சிதர்அரி படர்ந்த செழுங்கடைத் தூதும்

மருந்தும் ஆயது" (28:15-21)

இது பாடல் பகுதி. முகில் கூந்தல், மதியம் முகம், சிலை (வில்) புருவம், கடைக் கண் தூது.

பிரிந்திருந்தபோது நோய் உண்டாக்கிய கண்கள் சேர்ந்திருக்கும் இப்போது அந்நோய்க்கு மருந்தாயுள்ளது என்னும் கருத்தோடு ஒத்த திருக்குறள் ஒன்று நினைவைத் தூண்டுகிறது:

"இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு

நோய்கோக்கு ஒன்று அந்நோய் மருந்து" (1091)

என்பது பாடல். இவளுடைய மையுண்ட கண்களில் இரட்டைப் பார்வை உண்டு; அவற்றுள் ஒரு பார்வை காம நோய் தரும் பார்வை; மற்றொன்று அந்நோய் நீக்கும் மருந்து.

மாலை நான்கு மணியானால் சிலருக்குத் தலைவலி வந்து விடும். தேநீர் அருந்தியதும் அது நீங்கி விடும். அந்தத் தலைவலிக்கு மருந்து எது? தேநீர். அந்தத் தலைவலிக்குக் காரணம் எது? அதுவும் அந்தத் தேநீர்தான். கிடைக்காத போது நோய் - கிடைத்த போது மருந்து. மதுவும் அப்படியே - மங்கையும் அப்படியே போலும்! இந்தக் கருத்து, 6 நாற்பது என்னும் நூலில் உள்ள.

"மருந்தின் தீராது மணியின் ஆகாது
அருந்தவ முயற்சியின் அகறலும் அரிதே

தான்மெய் நோய்க்குத் தான்மருந் தாகிய

தேனிமிர் நறவின் தேறல் போல
தேர வந்த நிறையழி துயரம்நின்
அருளின் அல்லது பிறிதின் தீராது"

என்னும் பாடல் பகுதியோடு ஒத்து நோக்கற்பாலது. நறவின் தேறல் = மது. நீ என்றது தலைமகளை. தலைமகன் தலைமகளை நோக்கிச் சொல்வதாக அமைந்துள்ளது இப்பாடல்: தலைமகளது நோக்கம் பிள்ளையையும் கிள்ளி விட்டுத் தொட்டிலையும் ஆட்டி விடுகின்ற கதையாயுள்ளது. அவளது பார்வையிலே உள்ள கவர்ச்சி அவனது காம நோயைத் தூண்டுகிறது; அவளது பார்வையிலே உள்ள காதல் குறிப்பு அவனுக்கு அமிழ்த மருந்தாகி ஆறுதல் அளிக்கின்றது - அவ்வளவுதான்.

குண நாற்பது நூல் பாடலின் கருத்து, மேற்காட்டிய குறள் கொடுத்த கொடையா யிருக்குமோ! கண் பார்வை நோயாகவும் மருந்தாகவும் இருப்பதாக இளங்கோ கூறி இருப்பதும், அவரது சொந்தக் கற்பனையாக இருக்குமோ?அல்லது குறள் கொடுத்த கொடையாக இருக்குமோ! சிலம்பு - கானல் வரியிலும் இதனை ஒத்த ஒரு கற்பனை உள்ளது. அதாவது:

பெண்ணின் கண்கள் செய்த நோயை அவள் முலைகளே தீர்க்க முடியும் என்பதாக ஒரு கருத்து கூறப்பட்டுள்ளது:

"நிறைமதி வாண்முகத்து நேர்கயற்கண் செய்த
உறைமலி உய்யாகோய் ஊர்சுணங்கு மென்முலையே
தீர்க்கும் போலும்" (7:8:3, 4)

என்பது பாடல் பகுதி. முலை தீர்க்கும் என்பது தழுவுதலைக் குறிக்கும்.

இவ்வாறு, இளங்கோ, உவமைகளையும் உருவகங்களையும் தம் நூலில் கையாண்டு நூலை மெருகூட்டி நயப்படுத்தி உள்ளார்.

படிக்காத மக்களும் தமது பேச்சினிடையே கையாளும் மக்கள் கலையாகிய உவமை உருவகங்கள், இலக்கியங்கட்கு இன்றியமையாத அணிகலன்களாகும். சில இலக்கியங்கள், அவற்றில் உள்ள உவமை உருவகங்களால் பெருமதிப்பு பெறுவதும் உண்டு. உவமைகளை மிகுதியாகக் கையாண்டு இருப்பதால் ‘உவமைக் கவிஞர்’ என்ற பட்டம் பெறுபவரும் உளர்.

இத்தனை உவமைகளைப் புகுத்த வேண்டும் எனத் திட்டமிட்டு வலிந்து புகுத்துபவர்கள் உயர்வுபெற இயலாது. கருத்தோட்டத்தின் ஊடே உவமைகள் இயற்கையாக இழையோடிச் சுவையளிக்க வேண்டும். இளங்கோ இயற்கையாகத் தேவையான இடங்களில் தேவையான அளவு கையாண்டு காப்பியத்தை அணி செய்துள்ளார்.