உள்ளடக்கத்துக்குச் செல்

காஞ்சி வாழ்க்கை/அண்ணாமலை நகரில்

விக்கிமூலம் இலிருந்து

3. அண்ணாமலை நகரில்


இதுவரை அன்னை, பாட்டி இவர்தம் பாதுகாப்பில் வாழ்ந்த எனக்குப் புற உலகமே ‘என்னது?-எப்படிப் பட்டது?’ என்பது தெரியாது. எனவே நான் தனியாகப் படிக்கச் செல்லுகிறேன் என்றபோது எனக்கு அச்சமே உண்டாயிற்று. அன்னையாரும் அதனாலேயே அவலமுற்றுக் கண்ணீர் உகுத்தனர். ஆயிரக்கணக்கான மைல்கள் தாண்டி வாழும் மக்கள் இன்று இருப்பினும், இன்றும் பெற்ற பிள்ளைகளை விட்டுப் பிரிய மனமில்லாத பெற்றோரும் உள்ளனரன்றே! அதிலும் வேறுயாருமின்றுத் தனியாக அன்னையார் வீட்டில் இருக்க, அவர்தம் ஒரேமகன் எங்கோ படிக்கப்போகிறான் என்றால் உளம் வருந்தாது என் செய்யும்? எனது பெரியப்பாவும் பெரியம்மாவும் அம்மாவுக்கு ஆறுதல் கூற, ஒருவாறு மனம்தேறி என்னை அனுப்பி வைத்தார்கள். மாமியார் வீட்டு மக்கள் என்னைப் ‘புற’மெனவே கருதிய நிலை, எனக்குப் படிப்பில் ஊக்க, உண்டி, குடும்பவாழ்வு என்ற உணர்வையே அரும்பச் செய்யாது, படிப்பில் கவனம் செலுத்த வழிகாட்டியாக அமைந்தது. எனவே அவர்கட்கு நான் என்றென்றும் நன்றி உடையவனாவேன்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வித்துவான் முதல் நிலை வகுப்பில் (Preliminary) சேர்த்துக் கொள்ளப்பெற்றேன். எனினும் நான் முதலாண்டு முழுவதும் சிதம்பரம் மெளனசுவாமிகள் மடத்திலேயே தங்கியிருந்தேன். கல்லூரிக்குச் செல்லும் வழியில் இருந்த துரைசாமிப்பிள்ளை கிளப்பில் தான் நானும் பல மாணவரும் உணவுகொண்டோம். அந்த நாளில் மாதம் ஒன்றுக்கு உணவுக்கு-இருவேளைக்குப் பத்து ரூபாய்-மாணவர்களாகிய எங்களுக்கு எட்டு ரூபாய். காலை ஒன்பதுக்கெல்லாம் நல்ல உணவு பரிமாறப்பெறும். நாங்கள் சாப்பிட்டு 9-15 அல்லது 9-20க்குப் புறப்பட்டு உரிய வேளையில் கல்லூரிக்குச் சென்றுவிடுவோம். பகலுக்கு அங்கிருந்தே இடியப்பம் அல்லது இட்லி மூன்று (அரையணா —இக்கால மூன்று பைசா) பொட்டலமாக எடுத்துக் கொள்வோம். மாலையில் திரும்பும்போதும் ஏதேனும் ஒரு அணாவுக்குச் சாப்பிட்டால் வயிறு நிரம்பிவிடும். இவ்வாறு பத்து அல்லது பன்னிரண்டு ரூபாய் அளவில் ஒவ்வொரு திங்களும் இனிமையாகக் கழியும்.

பல்கலைக்கழகத்திலும் நல்ல விடுதியுண்டு. இலவச அறையில் தங்கிக்கொண்டால் இதே செலவில் நன்கு இருக்க வாய்ப்பு உண்டு. எனினும் நான் மடத்தில் உள்ள அடிகளாரின் மேற்பார்வையிலேயே இருக்க விரும்பியதாலும் நாள்தோறும் தில்லைப் பெருமானைக் கண்டு மகிழ விரும்பியதாலும் நடையையும் பொருட்படுத்தாது சிதம்பரத்திலேயே தங்கினேன். அப்போது மடத்து அடிகளாரின் இளவல் திரு. முருகேச முதலியார் என்பவர் வித்துவான் இறுதி வகுப்பில் பயின்றுகொண்டிருந்தார். அவருடன் சென்றுவர வசதியாக இருந்தது; மேலும் அவர் எனக்கு வேண்டிய பாடங்களைச் சொல்லிக் கொடுப்பார். நூல்களில் சிலவும் மடத்து அடிகளார் தம் நூல் நிலையத்தில் இருந்து தந்து உதவினார்கள். மடத்து அடிகளாகிய அருட்டிரு சபாபதி சுவாமிகளும், அவருக்கு அண்ணலாரும் மடத்து நிர்வாகத்தைத் கவனித்துக்கொண்டு வந்தவருமான திரு. கோவிந்த சாமி அவர்களும் என் நலத்தில் அக்கறைகாட்டி ஆதரித்தனர். எனது வளர்ச்சியில் அவர்களுக்கெல்லாம் பங்கு உண்டு. அவர்கள் எங்கிருப்பினும் என்னால் அவர்கள் வணங்குதற்குரியர்.

அந்த மௌனசுவாமிகள் மடம் நன்கு பயின்ற துறவிகள் வாழும் மடமாக விளங்கிற்று. அடிக்கடி பல துறவியர் வந்து தங்கிச் சென்றனர். அங்கேயே ‘வெள்ளை வேட்டிச் சாமி’ என்று ஒருவர் இருந்தார். அவர் தமிழ் இலக்கண இலக்கியத்தில் சிறந்த புலமை பெற்று விளங்கினார். நாள்தோறும் மாலைவேளைகளில் என்னை உட்காரவைத்து, நான் படித்த பாடங்களைப் பற்றிக் கேட்பார். குத்துவிளக்கே முன்னே எரியும். அதில் சிலவற்றை படிக்கச் சொல்லுவார். அவர் பல விளக்கங்கள் தருவார். அவற்றுள் அவர்தம் ஆழ்ந்த இலக்கண இலக்கியப் புலமை நன்கு விளங்கும். அவருக்கு வயது எண்பதுக்கு மேல் இருக்கும். எனினும் விடியற்காலை நான்கு மணி அளவில் எழுந்திருந்து நான்கு கல் தூரம் நடந்து, காலை ஆறு மணிக்குள் தம் காலைக்கடன்களையெல்லாம் முடித்துக்கொண்டு பூசையில் கருத்திருத்துவார். என்னிடம் அவர் காட்டிய பரிவும் பாசமும் மறக்கற்பாலன அல்ல. அவரிடம் நான் கற்றன பல. அவரைப் போன்றே வேறு கற்ற சில துறவியரும் மடத்துக்கு வரும் போதெல்லாம் எனக்கு ஊக்கம் அளிப்பர், ஆகவே நான் மடத்தில் ஒருவனாக-அங்குள்ளார் அன்புக்குப் பாத்திரனான ஏழை மாணவனாக வாழ்ந்து முதலாண்டுக் கல்வியைக் கற்று வந்தேன்.

அப்போது பல்கலைக்கழகத்தே தமிழ் பயிலுவோருக்கு உபகாரச் சம்பளம் தந்துவந்தனர்; முதலாண்டுக்கு 12 (அ) 13 ரூபாய் என நினைக்கிறேன். தமிழை வளர்க்க வேண்டும் என்ற உள்ளத்தாலும் தனித்தமிழ் பயிலுவோர் அக்காலத்தில் அருகிநின்றமையாலும் அண்ணாமலை அரசர் தம் பல்கலைக் கழகத்தில் இந்த ஏற்பாட்டினைச் செய்திருந்தனர். முதல்தேதி ஆனால் ஆசிரியர்கள் சம்பளம் வாங்குவது போன்று நாங்களும் இந்த உதவித்தொகையைப் பெறுவோம். மடத்தில் தங்கியகாலத்தில் இந்த உதவித்தொகை பன்னிரண்டில் மாதச்செலவுபோக மிகுதியாவதை என்ன செய்வதென்று எண்ணிய நாட்களும் உள.

என்னைச் சிதம்பரத்துக்கு அனுப்பிய அன்னையாருக்கு இருப்புக்கொள்ளவில்லை; மனம் மகனிடத்திலேயே சென்று கொண்டிருந்தது போலும். நான் வந்து ஒருதிங்கள் கழிந்திருக்கலாம். நான் கல்லூரிக்குச் சென்று ஒருநாள் மாலை மடத்துக்குத் திரும்பிய காலத்தில் வாயிலில் இருந்த அடிகள் என் அன்னை வந்திருப்பதாகவும் அடுத்த மறுகட்டில் பின் புறத்தில் தங்கி இருப்பதாகவும் சொன்னார்கள். நான் உடனே ஓடினேன். அவர்கள் என்னைக் கட்டிக்கொண்டு கதறினார்கள். அன்றுதான் நான் முதல்முதலாகப் பல்கலைக் கழகத்திலிருந்து உபகாரச் சம்பளம் பெற்று வந்தேன்–நான் சம்பாதித்ததாக எண்ணிய நிலையில் வந்தது அது. அதை அன்னையார் கையில் வைத்து வணங்கி எழுந்தேன். அன்னையார் கண்கள் குளமாயின. முதல் முதல் பிள்ளை சம்பாதித்ததைத் தன்கையில் பெற்றதை அத்தாய் உள்ளம் எண்ணிற்று போலும். மறுமுறை கட்டி அணைத்தார்கள். அந்தத் தொகையை அப்படியே ஆண்டவனுக்கு உரிமையாக்கி விட்டார்கள். பிறகு அவர்கள் சிதம்பரத்திலேயே சில நாட்கள் தங்கி இருந்து ஊர் திரும்பினார்கள்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நான் பயின்ற போது பல நல்லாசிரியர்கள்—சிறப்பாகத் தமிழ் பேராசிரியர்கள்–ஆக்கப்பணி புரிந்திருந்தனர். ஒவ்வொரு துறையிலும் வல்லவர் தலைமைதாங்கி நடத்தினர். நான் தமிழ் மாணவனாக இருந்தமையின் ஒருசிலரைத் தவிர்த்து மற்றவர்களோடு அதிகமாக நெருங்கிப் பழகவில்லை. ஆயினும் தமிழ்ப்பேராசிரியர் அனைவருடனும் நன்கு கலந்து பழகினேன். அவர்களும் எனக்கு வேண்டிய வகைகளில் எல்லாவகையான உதவிகளையும் செய்தார்கள். இரண்டாண்டுகள் அண்ணாமலையில் நான் பயின்றபோது நான் பெற்ற அனுபவங்கள் பல!

நான் பயிலத்தொடங்கிய முதலாண்டில் விபுலானந்த அடிகளார் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தார். அவருக்குப் பின் இருந்த ஒவ்வொரு பேராசிரியரும் சிறந்த கல்வி அறிவும் தெளிந்த சிந்தையும் செம்மை ஒழுக்கமும் பெற்றவர்களாகவே திகழ்ந்தனர். திரு. ரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள் திருக்குறளிலும் கம்பனிலும் எங்களை மூழ்க வைத்தனர். நான் எப்போதும் போன்று ஒதுங்கி இருந்தபோதிலும், அவர் கேட்ட இரண்டொரு கேள்விக்கு நான் அளித்தவிடைகள் அவருக்கு என்னை உரியவனாக்கின. சிறப்பாக ஒன்று மட்டும் நினைவில் உள்ளது. ‘இலன் என்னும் எவ்வம் உரையாமை’ என்ற குறளுக்கு உள்ள உரைகளை விளக்கி, அவற்றுள் சிறந்தது எது என்பதைக் காரணத்தோடு விளக்குமாறு கேட்டிருந்தார். அதற்கு நான் எழுதிய பதிலைக்கண்டு, அவர் என்னை அவர் அறைக்கு வரவழைத்து நன்கு விசாரித்து, அவ்விடை பற்றியும் விளக்கினார். பின் அவரோடு நெருங்கிப் பழகிய வாய்ப்புகள் பல. இரண்டாம் ஆண்டு நான் தமிழ்மன்றச் செயலாளனாக இருந்தபோது, ‘காக்கா பிடித்தல் கற்றறிந்தோர்க் காகாது’ என்ற பொருளைக்கொண்டு நடத்திய சொற்போர்ப் போட்டியில் அவரே அதை முன் மொழிபவராக இருந்தார். என் கல்வியின் வளர்ர்சியில் அக்கரை காட்டி விளக்கினார். அவரோடு பழகிய அன்பு இறுதிக் காலம் வரையில் நீங்காது நிலைத்து நின்றதோடு, அவருடன் நெருங்கி பழகிய ஒருவனாக மற்றவர் நினைத்து மதிக்கும் வகையிலும் உரியவனாக்கிற்று. அவர் சென்னை வந்த பிறகு, நான் காஞ்சிக்கு அழைத்தபோதெல்லாம் தட்டாமல் வருவார். எனது அன்னையார் மறைந்த நாளன்று அவர் என் கிராமத்துக்கு வந்து ‘தாயும் சேயும்’ என்ற தலைப்பில் பேசி ஆறுதல் கூறித் தேற்றினார். இவ்வாறு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அவரொடுகொண்ட தொடர்பு அவர் தம் இறுதிவரை நிலைத்திருந்தது.

அவர்களைத் தவிர்த்து, சர்க்கரைப் புலவர் என்ற முதுபெரும் புலவர் சிறந்த இலக்கிய விமரிசகராக இருந்தார். எல்லாத் தமிழ்ப் பாடல்களும் அவர் உள்ளத்திருந்து உதட்டில் உருண்டோடிவரும். புராண இதிகாச இலக்கியங்களைப் பல நுணுக்கங்களோடு அவர் நடத்துவார். அவரிடம் பயின்ற அந்தப் பான்மையே எனக்கு அத்தகைய இலக்கியங்களில் ஈடுபாடு உண்டாக்கிற்று. அவர் தம் முன்னோர்கள் இராமநாதபுர அரசரிடம் புலவர்களாய் இருந்தவர்களென்றும் இலக்கிய கடல்கள் என்றும் அறிந்தேன். வயதில் மூத்த அந்தப் புலவர்தம் செறிவு இன்னும் என் கண்முன் நிழலாடிக்கொண்டிருக்கிறது.

பொன் ஓதுவார் ஓர் இலக்கணக் கடல், அவர் தோற்றத்தால் எளியர். சாதாரண மல்லில் தைத்த ஒரு ‘சொக்கா’யைப் பொத்தானும் இல்லாது போட்டுக்கொண்டு, மேலே ஒரு புது அங்கவத்திரத்தை இட்டுக்கொண்டு, மெல்லிய கீழாடையுடன் உச்சிக் குடுமியுடன் சிதம்பரத்திலிருந்து வந்துகொண்டிருந்தார். தண்டியலங்காரமும் வேறு இலக்கணங்களும் அவர் எங்களுக்குச் சொல்லித்தந்தார். நூலை அவர் பிரித்துப் பார்த்ததே கிடையாது. ஆனால் நூலில் உள்ளதைக் காட்டியதோடு, அதில் இல்லாத பல விளக்கங்களும் வேறுபிற மேற்கோள்களும் வரிசையாக வந்துகொண்டே இருக்கும். அவர்தம் இலக்கண வகுப்பு யாருக்கும் எப்போதும் சலித்தது இல்லை. இலக்கியத்திலேயும் அவர் சிறந்தவர். அவரும் அவரது முன்னோரும் திருவாவடுதுறையில் பரம்பரை வித்துவான்களாக இருந்த ஒன்றே அவர்தம் ஆற்றலையும் தெளிவையும் தூய சிந்தையும் காட்டும். அவர் ஒழுக்க சீலர்— உயர்ந்த பண்பாளர்.

கந்தசாமியார் மற்றொரு இலக்கணக் கடல். சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் பிற உரையாசிரியர்களும் அவரிடம் சிறைப்பட்டனர். தூய துறவு வாழ்வை மேற்கொண்ட செந்தண்மையாளராகிய அவர்கள் எங்கட்கு இலக்கண இலக்கியங்களை நடத்தினர். புரியமுடியாத நுண்ணிய பகுதிகளையெல்லாம் மிக எளிய வகையில் புரிய வைக்கும் திறன் அவர்களுடையது. எனினும் அவர் தம் சாதாரண நடையும் பேசும். நடையும் சற்றே வேகம் வாய்ந்தவை. அவர் சற்றே ஒதுங்கியே வாழ்வார். ஆகவே மாணவர் ஏதேனும் அறியாது கேள்வி கேட்பின் உடனே வெகுள்வார். அவ்வாறு உண்டான ஒரு வெகுளியின் காரணமாகவே நான் இடையில் அண்ணாமலையில் பயில்வதை நிறுத்தி வந்துவிட்டேன். அவர் என்னிடம் அன்பு பொழிந்தார் என்றே சொல்வேண்டும். அவர்தம் துறவு உண்மைத் துறவாகும்.

இவர்களைத் தவிர சிவப்பிரகாசர், கல்யாணசுந்தரம் பிள்ளை, பலராமையா, பழநியப்பப்பிள்ளை போன்ற நல்ல அறிஞர்கள் அதுகாலை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தே அணிசெய்து விளங்கினர். அப்புலவர் கூட்டத்தை ஆசிரியர் அறையில் ஒருசேரக் காண்பதே கண்கொளாக் காட்சியாக விளங்கிற்று. அத்துணை அறிவாற்றல் மிக்க ஆசிரியர் அனைவரும் எங்கள் தொடக்க வகுப்பிற்கும் பாடம் எடுத்து எங்களுக்கு அறிவு கொளுத்திய தன்மையை எண்ணி எண்ணி வியந்ததுண்டு. விபுலானந்த அடிகளார் தொடங்கிக் கடைசி ஆசிரியர் வரையில் எங்கட்கு வந்து பாடம் நடத்தினர். அவர்கள் தந்த பிச்சைதான் இன்று ஓரளவு நான் ‘தமிழாசிரியன்’ என்று சொல்லிக்கொள்ளும் தகுதியை எனக்கு உண்டாக்கிற்று என்பதில் ஐயமில்லை ! அவர்கள் அனைவரும் என் உள்ளத்து உறையும் தெய்வங்களாவர்.

நான் பயின்ற முதலாண்டில் விபுலானந்த அடிகளார் தலைவர் என்றேன். ஆம்! எப்படியோ நான் அவரோடு நெருங்கிப் பழகினேன். அவர்கள் மேற்கொண்ட சில சமுதாயச் சீர்திருத்தப் பணிகளில் பங்கும் கொண்டேன். அதுகாலை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி இன்னும் என் நினைவில் உள்ளது. ஒருநாள் அடிகளாரும் மாணவர் சிலரும் அருகில் உள்ள ஒரு சேரிக்கு, அதைத் தூய்மைப்படுத்தி, குழந்தைகளுக்குத் தின்பண்டமும் தருவதற்காகச் சென்றோம். வடை, சுண்டல் இவைகளை இரு கூடைகளில் எடுத்துச் சென்றோம். அப்போது திருவேட்களம் திருக்கோயிலின் பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஒருசிறுவனும் எங்களுடன் சேரிக்கு வந்துவிட்டான். அவன் அப்பல்கலைக்கழகத்தே பணிசெய்யும் உயர்ந்தார் ஒருவர் மகன் என அறிந்தேன். கடைசிவரையில் இராது சற்று முன்னே திரும்பிவிட்டான் அவன். நாங்கள் எங்கள் பணியினை முடித்துத் திரும்பும் போது, அவனுடைய பெற்றோர்கள் அவனைத் தெருக்கம்பத் தில் கட்டிப்போட்டு, தலையில் சாணத்தால் ‘அபிஷேகம்’ செய்துகொண்டிருந்தனர். சேரியில் சென்றமையால் அவன் கெட்டுவிட்டான் என்றும், அவனைத் தூய்மைப்படுத்தவே அச்செயல் செய்யப்படுகிறது என்றும் சொன்னார்கள். நாங்கள் நைந்தோம் – அடிகளார் உள்ளம் வெந்தது. அவர் தம் சீர்திருத்தக் கருத்தை வெறுக்கும் வகையிலும் கண்டிக்கும் முறையிலும் அவரை, அவ்வூரில் சிவன் கோயிலில் உள்ள நல்ல குடி தண்ணீரை எடுக்கவிடாது தடுத்தனர். அவர் அதற்கெலாம் கலங்காது–உப்பு நீரையே உண்டு, பயன்படுத்தி, அண்ணாமலை நகரில் வாழ்ந்து வந்தார். அவர் தம் உயர்ந்த தோற்றமும் உயர்ந்த கல்வி அறிவும் தூய காவி உடையும் மெய்ம்மைத் துறவு நிலையும் யாழ்ப்பாண நலியியலுடன் பேசும் தெய்வத்தமிழும் எங்களை யும் உயர்த்தின. தற்போது அவர் பிறந்த ஊரில் அவருக்குச் சிலை எடுப்பதறிந்தேன். அங்கு வெளியிடப்பெறும் மலருக்கு நான் அண்ணாமலையில் அவரடியின் கீழ் இருந்து பெற்ற அனுபவத்தையே தீட்டி அனுப்பினேன்.

அந்த ஆண்டின் இறுதியில் அவர்கள் பல்கலைக் கழகத்திலிருந்து விலகுகிறார் என்ற செய்தி எங்களைத் துன்பத்தில் மூழ்க வைத்தது. தமிழுக்கென அவரை அண்ணாமலை அண்ணல் வருந்தி அழைத்து வந்து ஏற்றுப் போற்றினார் என அறிந்தேன். எனினும் அவர் தொடர்ந்து இராமல் செல்வது வியப்பாகவே இருந்தது. தமிழுக்கென அமைந்த அப்பல்கலைக்கழகத்தில் ஏனோ அன்று தொட்டு இன்று வரை தமிழ்த்துறைத் தலைமை ஏற்கும் பெரியார்களெல்லாம் ஏதோ ஒருவகைக் கசப்போடு வெளியேறுகிறார்கள் என்று எண்ணி பார்க்கிறேன். விடை கிட்டவில்லை.

அடுத்த ஆண்டு நாவலர் சோமசுந்தர பாரதியார் தமிழ்த்துறைத் தலைமை ஏற்றார். அவரும் உயரத்தில் அடிகளாருக்குச் சளைத்தவரல்லர். இவருடைய போக்கும் நிலையும் அவரினும் மாறுபட்டுத் தோன்றினும் தலைமைக்கு ஏற்றவர் என்றே அனைவரும் கூறினர். இவரும் அண்ணாமலை அரசரால் விரும்பி அழைத்து வரப்பெற்றவர் என அறிந்தேன். இவரைத் தவிர்த்து மற்றவர்களெல்லாம் நான் முன் காட்டிய ஆசிரியப் பெருந்தகைகளே. அவர்கள் வழிகாட்ட நாங்கள் உண்மையில் மாணவர்களாகவே இருந்து கற்றோம்.

என்னுடன் தமிழ் பயின்ற மாணவர்களுள் ஒருசிலர் இன்னும் நினைவில் உள்ளனர். வாழ்விலும் சிலர் கலந்துள்ளனர். சோமசுந்தரம் என்பார் பெருமழைப் புலவராக உள்ளார். மற்றொரு சோமசுந்தரம் தஞ்சை மாவட்டத்தில் உயர் நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகின்றார். வன்மீகநாதன் புதுக்கோட்டைக் கல்லூரியில் முதல்வராக உள்ளார். இவ்வாறே இன்னும் சிலர் உள்ளனர். தமிழ் ‘எம்.ஏ.’ வகுப்பும் அதுபோது அங்கே சிறந்திருந்தது. திருவாளர்கள் சரவண ஆறுமுக முதலியார், அ.சிதம்பர நாத செட்டியார், ஆலாலசுந்தரனார், சோதிமுத்து, மீனாட்சி சுந்தரம், முத்துசிவம் போன்றார் அதுபோது ‘எம்.ஏ.’ வகுப்பில் பயின்று வந்தனர். முதலாண்டில் அவர்களோடெல்லாம் அதிகமாகப் பழகும் வாய்ப்பினை பெறவில்லை என்றாலும் ஓரளவு அவர்களை அறிந்திருந்தேன். அடுத்த இரண்டாம் ஆண்டிலே அவர்களோடெல்லாம் நெருங்கிப் பழக வாய்ப்பும் வசதியும் ஏற்பட்டன.

முதலாண்டு மௌனசுவாமி மடத்தில் தங்கியிருந்த நான் அடுத்த ஆண்டு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இலவச விடுதியில் (old block) இடம்பெற்றேன். அவ்விடத்தில் தற்போது இசைக்கல்லூரியும் விருந்தினர் விடுதியும் ஓங்கி நிற்கின்றன. அங்கே எனக்கு அறிமுகமான நண்பர் பலர். உணவு மட்டும் பொதுவிடுதியிலே ஆதலால் பல அன்பர்கள் அறிமுகமாயினர். பல்கலைக்கழக கூட்டங்கள் பலவற்றிலும் பங்குகொண்டேன். பாரதியார் இல்லத்திற்கு அடிக்கடி செல்வது வழக்கம். அவரும் என்னை அவர் மகன் எனவே போற்றிப் புரந்தார். அவர் தம் இளம்பெண்கள் இருவருடனும் விளையாடிப் பொழுதுபோக்குவேன் நான். அதைக்கண்ட பாரதியார், நான் பல்கலைக்கழகத்தை விட்டு வரும்போது அப்பிள்ளைகளின் புகைப்படத்தை எனக்கு அன்பளிப்பாக ஈந்தார்.(அந்த இருவரில் ஒருவரே இப்போது மருத்துவத்துறையில் சிறந்தவராக, உயர்த்தவராக சென்னை மருத்துவக் கல்லூரி துணை முதல்வராகப் பணிபுரிந்துவரும் திருமதி லலிதா காமேஸ்வரன் என்பவராவர்).

இரண்டாம் ஆண்டில் பல்கலைக்கழத் தமிழ்ப்பேரவையின் அமைச்சனாகப் பணியாற்றினேன். திரு. அ. சிதம்பர நாதனார் தலைவர். எங்கள் கூட்டங்களில் பேராசிரியர்கள் பாரதியார், சேதுப்பிள்ளை, வரலாற்றுப்பேராசிரியர் சீனி வாசாச்சரியர் போற்றவர்களும் பிறதுறைப் பேராசிரியர்களும் பங்குகொண்டு எங்களை ஊக்குவிப்பர். பல அறிஞர்கள் எங்கள் பேரவை நிகழ்ச்சிகளில் பங்குகொண்டனர். முன் காட்டிய ‘காக்கா பிடித்தல் கற்றறிந்தார்க் காகாது’ என்பன போன்ற பல தலைப்புக்களில் பேராசிரியர்களே பேசுவர். அவ்வாண்டின் தமிழ்ப் பேரவைப்பணி சிறக்க நடைபெற்றது. அப்பேரவையின் ஆண்டு விழாவிற்குத் திரு. தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் வாழ்த்தியல் விரிவுரையாற்ற வந்தார். நானே சென்னை சென்றபோது நேரில் கண்டு அழைத்து ஏற்பாடு செய்தேன். முந்திய புலவர் வரிசையின் அடுத்த வாரிசாக அவர்வந்து அழகிய சொற்பொழிவாற்றினார். அதுதான் அவர் அண்ணாமலையில் ஆற்றிய முதற்பணி என எண்ணுகிறேன். பிறகு அங்கேயே பேராசிரியராகப் பணியாற்றி, அங்கிருந்தே மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகும் பேறு பெற்றார். அவரை அன்று முதல் இன்றுவரை நான் உற்றவராகவே போற்றுகின்றேன். அவர் துணைவேந்தரான பின் முதல் வெளிவந்த என் ‘பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரை நடை வளர்ச்சி’யை அவருக்கே ‘முதல் தமிழ்த் துணைவேந்தர்’ என்ற பெருமிதத்தில் உரிமையாக்கினேன். அவர் தொண்டு ‘சிறப்பதாக’ என வாழ்த்தி மேலே செல்கிறேன்.

இரண்டாம் ஆண்டில் பல வாழ்க்கை அனுபவங்களைப் பெற்றேன். விடுதி வாழ்க்கை எத்தகையதென அறிந்தேன். என்னினும் முதிர்ந்தோரான–அறிவில் சிறந்த ஆறுமுக முதலியார், ஏ. சி. செட்டியார் ஆகியோருடன் நெருங்கிப் பழகி அவர் தம் அறிவுரைகளைப் பெற்றேன். அந்த ஆண்டில் நடைபெற்ற நாள் மங்கலவிழாவில் தமிழகப் புலவர் பெரு மக்கள் அனைவரும் வந்திருந்தார். இராகவையங்காருடைய ‘பாரி காதை’ அப்போது அரங்கேறிற்று. அன்று வந்த அத்தனைப் பெரும்புலவரையும் பேரவையின் சார்பில் பாராட்டி, புகைப்படமும் எடுத்துக்கொண்டோம், அது இன்னும் என்முன் தொங்கவிடப் பெற்றிருக்கின்றது.

அந்த ஆண்டில் நான் பெற்ற மற்றொரு அனுபவம் என் தனி வாழ்வைப் பற்றியது. நான் மணம்புரிந்தும் துறவியைப் போல் வாழ்ந்தேன் என மேலேயே கூறினேன். இருதார மணத் தடுப்புச் சட்டம் இல்லாத காலம் அது. எனவே எனது அன்னையர் இருவரும் எனக்கு மறுமணம் செய்விக்க நினைத்தனர். நானும் அவ்வாறே நினைத்ததுண்டு. என்னை மணந்தாரை, அவர் விரும்பியவரையே மணக்க ஆவன செய்து, நானும் வேறொருவரை மணந்து கொண்டால் என்ன என்று எண்ணுவதுண்டு. அதற்கேற்ற சூழலோ என்னுமாறு ஒரு நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்தது. வேறு துறையில் பயின்றவர் ஒருவர் அடிக்கடி என்னுடன் பேசி, பரிவுகாட்டிச் சென்றதை நான் தவறாக உணர்ந்துவிட்டேன் போலும். முயன்றால் அவர்களை மணக்கலாம் எனத் திட்டமிட்டேன். ஆயினும் இம்மணத்தை என் அன்னையாரோ மற்றவர்களோ ஒருசிறிதும் விரும்பமாட்டார்கள் என்பதை அறிவேன். என்றாலும் ஏனோ அந்த வாலிப உள்ளத்தில் அந்த எண்ணம் முகிழ்ந்தது. ஓரளவு முயற்சியும் செய்தேன். அவர்களும் இணங்கும் நெறியில் வந்தார்கள் என நான் கருதினேன். ஆனால் மணம் புரிந்துகொள்ளவேண்டும் என்ற என் கருத்தை எழுத்தில் தீட்டிய நாளிலிருந்து அவர்கள் போக்கு திசைமாறிவிட்டதால் நான் என் எண்ணத்தை அறவே விட்டுவிட்டேன். (பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து என் அன்னையர் விருப்பப்படியே உறவினர் ஒருவரை மணந்துகொண்டேன்.) எனினும் அவர்தம் பிற்கால வாழ்க்கையை நோக்கும்போது, ஒருவேளை நான் அடுத்த இரண்டொரு ஆண்டில் முயன்றிருந்தால் எண்ணம் நிறைவுற்றிருக்கலாம் என நினைத்ததுண்டு. நான் இடையில் பல்கலைக்கழகப் படிப்பை விட்டுவிட்டமையின் அவர்களைக் காண வாய்ப்பு இல்லை. பல ஆண்டுகள் கழித்து அவர்தம் இருக்கையினையும் வாழ்க்கைமுறையும் அவர் தம் வாழ்வின் இழப்பையும் பிற நிலையையும் நோக்கும்போது என் உள்ளம் என்னை அறியாது அவர்கள் பால் வெறும் உயிர் இரக்கம் காட்டும் வகையில் அமைந்தது; அவ்வளவே!

பல்கலைக் கழகத்தில் பயிலும்கால் அடிக்கடி ஊருக்கு வருவேன். அவ்வாறு ஒருமுறை வந்தபோது சென்னை சென்றேன். அப்போது எனக்குத் தேவையான சில நூல்கள் வாங்குவதற்காக டாக்டர் சாமிநாதையர் வீட்டிற்குச் சென்றேன். நடையில் உட்கார இடம் இருந்தது. உள் வாசலில் பாத்திரங்கள் துலக்கி வைக்கப்பெற்றிருந்தன. ஐயர் அவர்கள்–எழுபத்தைந்து மேல் வயதிருக்கும்—அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து உள்ளே வைத்து வந்தார். என்னை நடையிலேயே உட்காரப் பணித்தார். எல்லாவற்றையும் முடித்துவிட்டு, என்னையும் அழைத்துக்கொண்டு மேலே சென்றனர். என்னை உட்காரவைத்து, ‘தம்பி! என்ன நினைக்கிறாய்?’ என்றார். நான் எது பற்றி என்று அறியாது திகைத்தேன். என் திகைப்பை உணர்ந்த. ஐயரவர்கள் ‘நான் பாத்திரங்களை எடுத்து வைத்ததைப்பற்றி என்ன நினைக்கிறாய்?’ என்று கேட்டு, என் பதிலுக்குக் காத்திராமல் அவர்களே பேசத் தொடங்கினர். நம் வீட்டு வேலை எதுவாயினும் நாம் செய்யப் பின் வாங்கக்கூடாது எனவும் நாம் பணி செய்வதில் இழிவு இல்லை என்று கூறினார். மேலும் பல வகையான அறிவுரைகளை அந்த இளம் வயதில் என் உளங்கொள்ளுமாறு எனக்குக் கூறினர். அதுவரை எதிரில் உட்கார்ந்து தம்மை மறந்து ஏட்டில் மூழ்கியிருந்த திரு, ‘கி.வா.ஜ.’ அவர்கள் என்னை யாரென்று கேட்டார். பிறகு என்னைப்பற்றிக் கூறிவிட்டு, வேண்டிய நூல்களைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டேன். பிறகு ஐயர் அவர்கள் வாழ்ந்த வரையில் சென்னைக்குச் சென்ற போதெல்லாம் அவர்களைக் கண்டு அவர்தம் வாழ்த்தைப் பெற்று வந்தேன். பின் அவர் மகனாரும் அவர் தம் பேரப் பிள்ளையாகிய இன்று வாழும் திரு. சுப்பிரமணிய ஐயர் அவர்களும் என்பால் அன்பு காட்டி வருகின்றனர். அவர்தம் அன்பால் ஐயர் அவர்கள் பெயரால் அமைந்த நூல் நிலையத்தில் ஆட்சிப்பொறுப்பின் உறுப்பினராகவும் பல ஆண்டுகள் பணியாற்றி வருகிறேன்.

பல்கலைக் கழகத்துக்குப் படிக்கச் சென்ற நான்–நான்காண்டுகள் படித்து முடிக்காது–இடையிலே இரண்டாண்டில் விட்டுவந்த செயல் விநோதமானது. ஒரு ஆய்வுப் பொருளின் காரணமாக கொள்கை விளக்க அடிப்படையில் எனக்கும் எனது மதிப்புக்குரிய ஆசிரியர் கந்தசாமியார் அவர்களும் மாறுபாடு ஏற்பட்டது. எங்கள் தர்க்கம் சற்றே மிஞ்சிய நிலையில் துறைத்தலைவர் பாரதியாருக்கு எட்டியது. அவர்களுக்கு நான் எவ்வளவு வேண்டியவனாயினும் கல்லூரியில் தனிச்சலுகை கிடையாது. எனவே என்னை அழைத்துச் சற்றே வன்மையாகக் கண்டித்தனர். பிப்ரவரி மாத இறுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தச் சூழ்நிலையில் நான் மேலும் தொடர்ந்து பயில விரும்பவில்லை. எனவே அப்போது துணைவேந்தராக இருந்த சர். எஸ். இ. அரங்கநாதன் அவர்களை நேரில்கண்டு என் கருத்தைக் கூறினேன். பலவகையில் பல்கலைக் கழக நிகழ்ச்சிகளில் தொடர்பு கொண்டவனாதலின் என்னை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர். என்னை மறுநாள் வரப் பணித்தார்கள். பிறகு பாரதியாருடன் கலந்து பேசினார்கள். எனக்கு மறுநாள் துணைவேந்தர் அவர்களே சொல்லி அனுப்பி ஆறுதல் கூறினர். மேலும் தேர்வு மிக அண்மையில் இருப்பதால் அப்போது பல்கலைக் கழகத்தை விட்டுச் செல்ல வேண்டாமென அறிவுரை கூறினர். நான் மறுபடியும் மற்ற மாணவருடன் தலைதாழ்த்தி உட்கார முடியாத நிலையினை விளக்கவும் அவர்கள் விலக்கு ஒன்று தந்தனர். அதுமுதல் நான் வகுப்பிற்குச் செல்ல வேண்டாமெனவும் இருந்து தேர்வு மட்டும் எழுதலாம் எனவும் பணிந்தனர். அந்த நல்ல முடிவை ஏற்று அப்படியே அங்கிருந்த தேர்வு எழுதி முடித்து வீடு திரும்பினேன்.

இடையில் இருந்த ஒரு திங்களில் பலமுறை பாரதியார் வீட்டுக்குச் செல்வேன். பலபொருள்களைப் பற்றிப் பேசும் என்னுடன் ஒருமுறையாவது நடந்த நிகழ்ச்சியினையும் வகுப்புக்கு வராததையும் பற்றிக் கேட்டதே இல்லை. அவர் தம் பெருந்தன்மையை எண்ணி மனமாரப் போற்றினேன். பிறகு, தேர்வை முடித்து வீடுதிரும்பும்போது மறுபடியும் நான் பயில வருவதைப்பற்றி அவர்கள் ஒன்றும் கேட்கவில்லை. அவர்தம் இளங்குழந்தைகளின் புகைப்படங்களைத் தந்து அனுப்பினர். எல்லா ஆசிரியர்களிடத்தும் விடை பெற்றுப் புறப்பட்டேன். கந்தசாமியார் அவர்களும் என் தலைமேல் கரம்வைத்து வாழ்த்தி வழியனுப்பினார்கள். அவர்களிடம் பெற்ற அந்த நல்ல பண்பு என் வாழ்வில் நன்கு எனக்குப் பயன்படுகிறது.

என் வகுப்புப் படிப்பு அத்துடன் முடிவடைந்துவிட்டது. தேர்வின் முடிவில் அந்த வகுப்பில் நானே முதல்வனாகத் தேர்ந்தேன் என அறிந்தேன். எனினும் மேலே படிக்கச் செல்லவில்லை. பாரதியாரையோ மற்ற புலவர்களையோ நான் காணவும் இல்லை. ஊரில் இருந்துகொண்டு மேல் எப்படிப் பயில்வது என்று எண்ணமிட்டுக்கொண்டிருந்தேன். அதுகாலை நான் அதிகமாகக் கடிதம் எழுதும் வழக்கமும் கொள்ளவில்லை. பாரதியார் நான் படிக்காது விட்டது பற்றி என்ன சொல்லுவாரோ என்ற பயம் மட்டும் என் மனதில் ஊசலாடிக் கிடந்தது. எனினும் நான் கடிதம் எழுதவில்லை.

ஏறக்குறைய இரண்டாண்டுகள் கழித்துத் திருவண்ணாமலையில் சைவசித்தாந்த சமாச ஆண்டுவிழா நடைபெற்றது. அதற்குத் தலைவர் விபுலானந்த அடிகளார். பாரதியார் சொற்பொழிவும் அதில் இருந்தது. நான் இளைஞர் மாநாட்டில் பங்குகொள்ளச் சென்றிருந்தேன். இருபெரும் பேராசிரியர்களையும் ஒருசேரப் பார்க்கப்போகிறோம் என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருப்பினும் பாரதியார் என்ன சொல்வரோ என்ற அதிர்ச்சி ஒருபுறம் என்னைத் தாக்கிற்று. மாநாடு தொடங்கச் சிறிதுநேரம் இருந்தது. இருவரும், இன்னும் சிலரும் உட்கார்ந்திருந்தனர். நான் அஞ்சி அஞ்சி அவர்கள் அருகில் சென்றேன். வணங்கினேன், பாரதியார் அவர்தம் கணீரென்ற குரலில் ‘வீரனே வா’ என்றார். நான் திகைத்தேன்-நையாண்டி செய்கிறாரா என எண்ணினேன். ‘இவனைத் தெரியுமா?’ என்று அடிகளாரை அவர் கேட்டார். ‘அவர் என் மாணவ ரன்றோ’ என்ற பதில் அடிகளாரிடமிருந்து வந்தது. ‘ஆமாம் ஆமாம் மறந்துபோனேன்’ என்று கூறி என்னை ‘வீரன்’ என்று அழைத்தமைக்குக் காரணம் காட்டினார். ‘இவன் அன்று செய்த செயல் சரிதான். எனினும் ஆசிரியரை விடக்கூடாது என்ற காரணத்தால் இவனைக் கடிந்துகொண்டேன். வகுப்பிற்கு வாராது தேர்வு எழுதி முதல்வனாக வெற்றிபெற்றான். (அவர் சொல்லித்தான் நான் முதலிடம் பெற்றதறிந்தேன்.) எனினும் எனக்குள் ஓர் அச்சம் இருந்தது. இவனை—இவனொடு பழகியதிலிருந்து–ஒரு வீரனாக நினைத்தேன். எங்கே திரும்பிவந்து மேல் வகுப்பில் சேர்ந்து கோழையாகிவிடுவானோ என அஞ்சினேன். ஆயினும் இவன் என்மதிப்பில் உயர்ந்தே விட்டான். என் எண்ணத்தை நிறைவேற்றி வீரனாகிவிட்டான். இனி அவன் படித்தாலும் படிக்காவிட்டாலும் கவலை இல்லை–கொள்கையின் வீரன் என்பதைக் காட்டிவிட்டான்’ என்று விளக்கினார். அடிகளார் புன்சிரிப்பு என்னை ஆட்கொண்டது. நானும் என் அச்சம் நீங்கி அருகில் சென்று பின்பக்கமாக இருவர் இடையிலும் நின்றேன். இருவரும் என் முதுகைத் தைவந்து ‘நீடு வாழ்க’ என வாழ்த்தினர். அந்த வாழ்த்தின் வலத்தாலேயே இன்றும் ஓரளவு அமைதி பெற்ற உள்ளத்தோடு அன்னைத் தமிழுக்குப் பணிசெய்து கொண்டு வாழ்கின்றேன். அத்தகைய பெரியவர்களின் தெளிவும் அறிவும் திண்மையும் செறிவும் சான்றாண்மையும் தளரா உறுதியும் எனக்கு உற்றுழி உதவி, நான் என் வாழ்நாளைக் கழிக்க உதவியாகின்றன.
இவ்வாறு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நான் வெறும் ஏட்டுப் படிப்பினைப் பயின்றேன் என்று சொல்வதைக் காட்டிலும் வாழ்வின் அடிப்படைக்குத் தேவையான எண்ணற்ற பாடங்களைப் படித்தேன் என்று கூறிக்கொள்வதே அமையும் என எண்ணி மேலே செல்கின்றேன். அத்தகைய ஆக்கநலம் தந்த அந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தையும் அதைத் தோற்றுவித்த அண்ணாமலை வள்ளலையும் வாழ்த்துகிறேன்.