உள்ளடக்கத்துக்குச் செல்

காஞ்சி வாழ்க்கை/இந்து மத பாடசாலை

விக்கிமூலம் இலிருந்து

4. இந்துமத பாடசாலை


பள்ளிப் பணி

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தைவிட்டு வீட்டிலேயே இருப்பது பற்றி என் அன்னை மிகவும் மகிழ்ந்தார்கள். பெரிய அன்னையும் அவர்களோடு சேர்ந்து கொண்டார்கள். ஆனால் பெரிய தந்தையார் மட்டும் எப்படியாவது தொட்டதை முடித்துவிடுதல் நல்லது என்றார்கள். எனினும் அப்போது நான் மேலே படிப்பதைப் பற்றி ஒன்றும் முடிவு செய்யவில்லை. என் மணவாழ்வு அப்போதும் அப்படியே யாதொரு மாறுபாடும் இன்றி ‘சந்நியாசி’ வாழ்வு போலவே அமைந்திருந்தது. அது என் அன்னையர் இருவர் உள்ளத்தையும் அதிகமாகக் குழப்பிற்று. எப்படியும் எனக்கு மறுமணம் செய்விக்க வேண்டும் என முயன்றனர். அதுபற்றி யெல்லாம் கவலைகொள்ளாது எனது மாமியார் வீட்டில் அவர்கள் போக்கில் இருந்தனன. வேண்டுமானால் அவளை, அவள் விரும்பினவன் மணக்க விரும்பினால், மறுமணம் செய்து கொடுக்கப்போவதாக மாமனார் பலரிடம் கூறிக் கொண்டிருந்தார். நான் உண்மையில் ஒருபுறம் வருந்தினாலும் ஒருபுறம் மகிழ்தேன். பாவம் அவரவர் விரும்பியவரை மணந்துகொண்டு வாழ வழியற்ற சமுதாயத்தில் இவ்வளவு முன்னனேற்றமுடைய ஒருவர் கிராமத்தில் இருக்கிறார் என்றால் போற்றவேண்டியது தானே.

இதற்கிடையில் ஒரு நாள் வாலாஜாபாத் சென்றேன். அங்கே நான் பயின்ற இந்துமத பாடசாலை நன்கு வளர்ச்சியுற்றிருந்தது. அதன் அமைப்பாளர் திரு. வா. தி.மாசிலாமணி முதலியார் அவர்கள் என்னைக் கண்டார்கள். நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் எனக் கேட்டறிந்து, ‘சும்மா’ இருப்பதால் அப்பள்ளியல் வந்து பணியாற்றுமாறு சொன்னார்கள். மாதம் பதினைந்து ரூபாய் சம்பளம் தருவதாகவும் வீட்டில் இருப்பதற்கு அது பொழுதுபோக்காக அமையட்டும் என்றும் காலை வந்து மாலையில் வீடு திரும்புவதால் அன்னை யாரும் தடுக்கமாட்டார்கள் என்றும் தேவையானால் தாமே வந்து அன்னையாரிடமும் சொல்லுவதாகவும் கூறினார்கள். அன்னையார் இசைந்தால் மறுநாளே வந்து பணியை ஏற்குமாறு கூறி, அங்கே உடனிருந்த தலைமை ஆசிரியரிடம் மறு நாள் வந்தால் வேலையில் சேர்த்துக்கொள்ளும்படியும் பணித்துவிட்டார்கள். அதற்கு முன்பே அங்கு திரு. சுவாமிக் கண்ணு என்பார் தமிழரசிரியராக இருந்தமையின் என்னைத் தமிழும் கணக்கும் சில வகுப்புகளுக்குச்சொல்லித் தருமாறும் தலைமை ஆசிரியர் பணித்தார். நான் அனைத்தும் என் அன்னையார் முடிவறிந்த பிறகே எனக் கூறிவந்துவிட்டேன்.

வீட்டில் என் அன்னையாரிடம் இதுபற்றிக் கூறினேன். அவர்கள் முதலில் சிறிது தயங்கினார்கள். பிறகு உத்தரவு தந்தார்கள். வீட்டிலேயே ஒரு வேலையுமின்றி முடங்கிக் கிடப்பதோடு, அமைதியற்ற அவதியுற்ற மணவாழ்வில் உண்டாகும் வேதனையும் பெருகுவதால், அவை நீங்கவும் பொழுது போக்காகவும் இருக்க இசைந்ததாகக் கூறினார். எனவே மறுநாளே நான் இந்துமத பாடசாலையில் ஆசிரியப் பணியினை மேற்கொண்டேன்.

அதுவரை ஆசிரியர்களின் கீழ் மாணவனாக இருந்த நான் அன்று மாணவருக்கு ஆசிரியனாகின்றேன் என்றால் அச்சமாகவே இருந்தது. எனினும் முன்னரே அங்குள்ள ஆசிரியர்கள் உறுதுணையும் தலைமை ஆசிரியருடைய அறிவுரையும் என்னைத் துணிவுடையன் ஆக்கின. அன்று தொடங்கிய ஆசிரியப் பணியே என்னை மெல்லமெல்ல வளர வைத்து, பல்கலைக் கழகப் பேராசிரியனாக்கியும் சிறக்கச் செய்தது. என் வாழ்நாளின் போக்கு அன்றே உறுதி செய்யப்பெற்றது போலும்.

எனக்கு ஏழாம் வகுப்பிற்குத் தமிழும் வேறு சில வகுப்புகளுக்குச் சமய பாடமும் ஒரு வகுப்பிற்குக் கணக்கும் தரப் பெற்றன. அப்போது எங்களூர்ச் சேரியிலிருந்தும் சில மாணவர் நான் எடுத்த வகுப்பில் படித்தார்கள். மற்றவர்களைப்போன்று நான் அவர்களையும் ஒத்து நோக்கி, தேவையானால் முதுகில் தட்டி, பாடங்கள் சொல்லித் தருவேன். இது எங்கள் ஊரிலிருந்து வந்து அதே பள்ளியில் படித்தும் பணியாற்றியும் இருந்த ஒருவருக்குப் பிடிக்கவில்லை. எனது அன்னையாரிடம் சொல்லி என்னைக் கண்டிக்குமாறு செய்தார்கள். அன்னையார் கண்டிப்புக்கு அடங்கினேன். ஆயினும் எனது ஒருமை உணர்வு என்றும் விழிப்புடனேயே இருந்தது. எனக்கு அந்த உணர்வை தந்ததே இதே இந்து மத பாடசாலைதானே. இதில் இளமையில் சாதிபேத மற்றும் பழகிய காரணந்தான், பின் சமுதாய ஏற்றத் தாழ்வைக் கண்டு நான் கலங்க வேண்டிய நிலையில் என்னைச் செலுத்தி ஓரளவு சீர்திருத்தக்காரனாக மாற்றிற்று. எனவே அதே பள்ளியில் வேறுபாட்டைக் கற்பித்துக்கொண்டு என்னால் எப்படி வாழ முடியும்? மேலும் அந்த ஆண்டிலேயே அதே பள்ளியில் ஆசியர்களாகச் சேர்ந்த திருவாளர்கள் நா. ப. தணிகை அரசு, இராசவேலு முதலியார் போன்றோர் என் கொள்கைக்கு ஆதரவாக இருந்தார்கள்.

இந்துமத பாடசாலையில் நான் ஆசிரியனாக இருந்தேன் என்பதைக் காட்டிலும், நால் பல பாடங்களைக் கற்றுக் கொண்டதால், மாணவனாக இருந்தேன் என்பதே பொருந்துவதாகும். புதிதாகப் பாடம் சொல்லத் தொடங்கிய காரணத்தால் முன்னரே அனுபவம் பெற்ற நல்லாசிரியர்களை அடுத்து, நான் வகுப்பினை நடத்த வேண்டிய வழித்துறைகளை அறிந்து கொண்டேன். மாணவர்களாகிய இளஞ்செல்வங்களை அடிக்காதும் மிரட்டாதும் இனிய சாந்த முறையிலே அழைத்துச் சென்றேன். பள்ளிக்கூடப் பாடங்கள் தவிர்த்து அவ்வப்போது வரும் பெரியார்கள் முன் நடிப்பதற்கும் பாடுவதற்கும் பேசுவதற்குமாகச் சிற்சில நிகழ்ச்சிகளைத் தயார் செய்தலும் வேண்டும். அவற்றிற்கெனச் சில கவிதைகள், சொற்போர்கள், கட்டுரைகள் எழுதித் தருவேன். அந்தப் பழக்கமே பின்னால் என்னை ஓரளவு எழுத்தாளனாக வளர்க்க உதவி செய்தது. அந்தக் காலத்தில் அந்த இளஞ்செல்வங்களோடு கலந்து, பழகி, விளையாடி, அவற்றுக்கிடையில் பாடம் சொல்லிக் கொடுத்த பண்பு நலன் சிறந்ததாகும். வீட்டிற்கு மாலையில் திரும்பிவிடுவேன். சில சமயங்களில் இரவிலும் பள்ளியிலேயே தங்கிவிடுவேன். எனினும் எனது அன்னையார் இரவு எந்நேரமாயினும், யாராவது துணையை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிடுமாறு வற்புறுத்துவார்கள். எனவே பெரும்பாலும் ஊர் திரும்பிவிடுவேன்.

இந்துமத பாடசாலையில் பணியாற்றும்போது எனக்கு அறிமுகமான அன்பர் பலராவர். உடன் இருந்த ஆசிரியர் அனைவரும் எனக்கு உற்ற தோழர்களாக இருந்து வேண்டுவன செய்வர். அந்தப் பள்ளியில் நான் ஒரே ஆண்டுதான் பணி ஆற்றினேன் என்றாலும் எனக்கும் அதற்கும் உண்டாகிய தொடர்பு ‘அப்பா வா, தி, மா.’ அவர்கள் வாழ்ந்த வரையில் வளர்ந்துகொண்டே இருந்தது. திரு. வா. தி. மாசிலாமணி முதலியாரின் தமையனார் திரு. வா. தி. பஞ்சாட்சர முதலியார் அவர்கள் பொறுப்பில் தான் அப்போது பள்ளி நடைபெற்று வந்தது. உயிர் ஒப்பந்த நிதி முகவராக அவர் புதிவு செய்துகொண்டு, தம்பியையும் அத்துறையில் ஈர்த்து அதன் வழியே பள்ளி நடத்தப் பெரும் பொருள் திரட்டினர். அவர்கட்கும் என்னிடம் நீங்காத பரிவும் பாசமும் உண்டாயிற்று. அவர்கள் அப்போது காஞ்சிபுரத்தில் குடியிருந்தார்கள். அவர் தம் மக்கள் இருவரும் உயர் நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தனர். அவருள் மூத்தவர் கலியாணசுந்தரம் பச்சையப்பரில் படித்திருந்தார். தமிழ்ப் பாடம் அவருக்கு விலக்கு. இளையவர் சம்பந்தம் ஆண்டர்சன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார். அவருக்கு நான் தமிழ் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். சனி ஞாயிற்றுக் கிழமைகளில் காஞ்சிபுரம் வந்து அவர்கள் வீட்டிலேயே இருந்து பாடம் சொல்லித்தர வேண்டும் என்பது ஏற்பாடு. அவர்தம் வீட்டரசியார் தெய்வ நலம் சான்றவர்கள். அவர் வீட்டு மூத்த மகனாகவே என்னை வளர்த்தார்கள் எனலாம். அன்று பழகிய பழக்கம் அவர்கள் சென்னையில் வந்து வாழ்ந்து இறக்கும் வரையில் பற்றியிருந்தது. அவர்தம் செல்வங்கள் இருவரும் இன்றும் சென்னையில் சிறக்க வாழ்கின்றார்கள். என்னை ‘அப்பா’ என்று அன்போடே அழைத்து மகிழ்வார்கள். ஏறக்குறைய முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் காஞ்சியில் தொடங்கிய அப்பழக்கம் குடும்பப் பழக்கமாய் இன்றுவரை இறுகி வளர்ந்துவருவது எனக்கு இன்ப உணர்வை ஊட்டுகின்றது.

திரு. பஞ்சாட்சர முதலியார் அவர்கள் வெளியே எங்கு சென்றாலும் விடுமுறை நாட்களில் என்னை அழைத்துக் கொண்டே செல்வர். அப்படியே வா. தி. மா. அவர்களும், அதுகாலை எனக்கு அறிமுகமானவர் பலர். யாருமற்று இறையருள் ஒன்றையே பற்றுக்கோடாகக் கொண்டு வாழும் எனக்கு இத்துணை நல்லவர்தம் உறுதுணை மிகவும் பயன் அளித்தது. அவ்வாறு அறிமுகமானவருள் ஒருவர் காஞ்சிபுரம் குமரன் அச்சக உரிமையார் தவசி. குப்புசாமிமுதலியார் அவர்களாவார்கள். அவர்கள் என்னை அவர் தம்பி எனவே போற்றிப் பலவகையில் உதவினார்கள். அவர்தம் ‘காலண்டர்கள்’ பல எனக்குக் கிடைக்கும். அவர்கள் வீட்டுச் சிறப்பு எதுவும் நான் இன்றி நடவாது. ஒருமுறை அவர்தம் புதிய கட்டடத்திற்கு அச்சகத்தை மாற்றும் விழாவில் எனக்கு முக்கியபணி கொடுத்திருந்தார்கள். அந்தநாள் முக்கிய நாளாகவே கருதுகிறேன். ஆம்! அன்றுதான் நான் தமிழ் முனிவர் திரு. வி. க. அவர்களை நேரில் கண்டு மகிழ்ந்தேன். அதற்குமுன் ஒருதடவை சென்னையில் கூட்டங்களில் கண்டிருக்கிறேனாயினும் அவரொடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு அப்போதுதான் ஏற்பட்டது. பிறகு ஓரிரு முறை அவர்கள் எங்கள் கிராமத்துக்கு வந்து என்னுடன் உறைந்துள்ளார்கள்.

குமரன் அச்சகம் புதுமனை புதுவிழாவில் நான் கட்டாயம் இருக்கவேண்டும் என்பது அன்புக்கட்டளை. ஆனால் அன்றுதான் என் பாட்டனார் ஆண்டுக் கடன். என் அன்னையாரும் மற்றவரும் அத்தகைய கடன்களை ஒழுங்காகச் செய்யவேண்டும் என்று நம்புபவர்கள். தற்போது நான் அச்சடங்குகளையெல்லாம் விட்டு வெறும் ‘படையல்’ மட்டும் மேற்கொள்ளுகின்றேனாயினும், அப்போது அவர்தம் சமய உள்ளத்துக்கு ஊறுசெய்யக்கூடாது என்று கருதிய காரணத்தால் அதுவும் அவர் தம் பெற்றோருக்குச் செய்யும் கடன்கள் தவறலாகாது என்ற உணர்வினால் அக்கடன்கள் கழிக்கும் சடங்கிற்கு மாறுபாடு சொல்வதில்லை. எனது பாட்டன், பாட்டி இருவருக்கும் ஆண்பிள்ளைகள் இல்லையாதலாலும் நான் ஒருவனே பேரப் பிள்ளையாதலாலும் நானே அக்கடமைகளைச் செய்யக் கட்டுப்பட்டவனானேன்.

எனவே அன்று குமரன் அச்சக விழாவிற்குப் போவதா–பாட்டனார் சடங்கைச் செய்வதா என்ற கேள்விகளுக்கு இடையில் திண்டாடினேன். எனது அன்னையார் அத்திண்டாட்டத்தைப் போக்கிவிட்டார்கள். காஞ்சிபுரம் செல்வதற்கு வாலாஜாபாத்தில் 6-45க்கு ரயில்; காஞ்சி நிகழ்ச்சி 9 மணிக்கு. எனவே அதில் சென்றால் போதும், அதற்கு ஊரில் 5-30க்குப் புறப்படல் போதுமானதாகும். ஆகவே அதற்குள் ஆண்டுக்கடன் ‘சடங்குகளை முடிக்க ஏற்பாடு செய்து விட்டனர். மூன்று ஐயர்கள் விடியற்காலை’ மூன்று மணிக்கே வந்துவிட்டனர். நான்கு மணிக்குச் சடங்குகள் முடிந்தன; ஐந்துக்குப் படையல் இட்டு, உண்டு 5-30க்குப் புறப்பட்டுவிட்டேன். பிறகு புதுமனைப்புகுவிழாவில் கலந்து கொண்டேன். இதை அறிந்த குப்புசாமி முதலியார். அவர்கள் என் அன்பைப் பாராட்டிப் போற்றினர். அன்று பகலெல்லாம் திரு. வி. க. விடனும் பிற அன்பர்களுடனும் பொழுதைக் கழித்தேன். திரு. வி. க. அவர்கள் படிப்பை விடாது தொடரவேண்டும் எனவும் மேன்மேலும் வளரும் வாய்ப்பு உண்டு எனவும் எனக்கு அறிவுரைகூறி வாழ்த்தினார்கள். பச்சையப்பர் கல்லூரியில் பணி ஏற்று வாழ்ந்தகாலை, அவர்களை அடிக்கடி காணும்போதெல்லாம், பல ஆண்டுகளுக்குமுன் அவர்கள் வாழ்த்திய அந்தப் பெருநிலை என் நினைவுக்கு வரும்.

இந்துமத பாடசாலையில் பணியாற்றிய காலத்தில் பலவிடங்களில் சொற்பொழிவு செய்யச் செல்வது வழக்கம். சைவசித்தாந்த சமாசத்தில் நிலைபெற்ற தொடர்பு உண்டாயிற்று. அந்த ஆண்டு சமாச ஆண்டு விழா திருவதிகையில் நடைபெற்றது. அப்பரை ஆட்கொண்ட அருட்பெருந் தலத்தில்–திலகவதியாரின் தெய்வத்தொண்டு நடந்த சிறந்த தலத்தில் நடைபெற்ற அந்த விழாவில் நானும் கலந்து கொண்டேன். எங்கள் பள்ளியிலிருந்து சில மாணவர்களையும் உடன் அழைத்துச் சென்றோம். சமாசச் செயலாளராகச் செம்மைப்பணி ஆற்றிய திரு. ம. பாலசுப்பிரமணிய முதலியார் அவர்கள் எழுதிய ‘அப்பர் நாடகத்’தை அங்கே மாணவர் வழியே நடித்துக் காட்டினோம். கண்டவர் மகிழ்ந்தனர். அம் மாநாட்டில் பலர் எனக்கு அறிமுகமாயினர். நாடகத்தின் சிறப்பினைக் கண்டு அப்பா வா. தி. மா. அவர்கள் அதற்கு முதலாக நின்ற என்னைப் பாராட்டினர்.

எனது மணவாழ்வு மங்கியது என்று கூறினேன். அது பற்றிய தொடர்பு நீண்டுகொண்டே வந்தது. என்னுடன் பணியாற்றிய பல ஆசிரியர்கள் அதுபற்றிக் கேட்டுக் கொண்டே இருந்தனர். நான் சொல்வதறியாது திகைத்தேன் – சிலவேளைகளில் தனிமையில் கண்ணீர்விட்டுக் கதறி அழுதேன். எனினும் அவர்கள் அதுபற்றியெல்லாம் அறிந்து, என்னை அறியாமலே ஒருசெயலை மேற்கொண்டனர். அவருள் ஒருசிலர் —நான்கைந்துபேர் என நினைக்கிறேன்–எனது மாமனார் வீட்டிற்குச்சென்று பேசினார்கள். நெடுநேரம் பலப்பலவற்றைப் பேசினார்கள் போலும். என்றாலும் முடிவு ஒன்றும் பயன்தரத்தக்கதாக இல்லை. பின் அவர்களுள் ஓரிருவர் என்னிடம் நடந்ததை யெல்லாம் சொல்லி வருந்தினர். வந்த அவர்களுள் யாருடன் வேண்டுமானாலும் எங்குவேண்டுமானாலும் தம் மகளை அனுப்பத் தயாராக இருப்பதாகவும் அல்லது அவர்கள் வீட்டு வேலைக்காரருடனும் அனுப்பத் தயாராக இருப்பதாகவும், என்னுடன் வாழ அனுப்பமுடியாது என்றும் என் மாமனார் கூற, மாமியார் ஆமோதிக்க அவர் வீட்டு ஒரே மூதாட்டியாக இருந்த பாட்டிக்கிழவியும் சரி என்று சொல்ல, சென்ற வருத்தத்தோடு திரும்பினார்கள் என அறிந்தேன். இதை நேரில் கேட்டறிந்த என் உடன் ஆசிரியர்கள் என் பொருட்டு மிகவும் வருந்தினர். நான் அப்படியாவது யாருடனாவது சென்று வாழவிரும்பின் அப்பெண் வாழட்டும் என்று எண்ணினேன். ஆனால் அதுவும் நடைபெறவில்லை. மாமியார் வீட்டு வசவு மட்டும் எனக்கு அதிகமாகக் கிடைத்தது. பார்ப்பவர்கள் ‘எல்லோருக்கும் நல்லபிள்ளையாக இருக்கும் நீ எப்படி மாமியார் வீட்டுக்கு மட்டும் பொல்லாதவனாகிவிட்டாய்?’ என்று இரக்கப்படுவார்கள். ஆயினும் இந்தக் கொடுமைக் கெல்லாம் காரணம், அவர்கள் என்னைக்காட்டிலும் எங்கள் ‘சொத்தி’ன் பேரிலேயே கண்வைத்தமையும் அதை அவர்கள் விருப்பம்போல் தராமல் அன்னையார் கட்டிக் காத்தமையும் அனைவரும் அறிவார்கள். நான் அனைவருடைய இரக்கப் பொருளாகக் காலம்கழித்து வந்தேன். அதற்கிடையில் இளஞ்சிறாருடன் பழகும் வாய்ப்பும் அன்பர் தம் ஆதரவான சொற்களும் என்னைத் தாங்கி வந்தன. பள்ளிப் பணியும் செம்மையாக நடைபெற்று வந்தது.

இதற்கிடையில் என் அன்னையும் பெரிய அன்னையும் எனக்கு மறுமணம் செய்துவைக்க முயன்றனர். நான் திண்டாடினேன். என் நண்பர் சிலரை அவர்கள் அழைத்து எனக்குப் புத்திகூறுமாறு சொன்னார்கள். ஒருசில நண்பர்கள் மாமியார் வீட்டுக் கொடுமைக்கு அவ்வாறு செய்து கொண்டாலும் தவறு இல்லை என்ற அளவுக்குப் பேசினர். எனினும் என் உள்ளம் அவ்வாறு செய்து கொள்ளத் தயங்கியது. ஆயினும் அவர்கள்–மாமியார் வீட்டார் உண்மையில் நான் மறுமணம் செய்துகொள்வதை விரும்புகிறார்களா என அறிய விரும்பியது. அதுபற்றி என் நண்பர்களிடம் கலந்து பேசினேன். சிலருடைய உதவியினால் ஒரு ஏற்பாட்டினை மேற்கொண்டேன்.

என்னுடன் அண்ணாமலையிற் பயின்ற ஆறுமுகப்பெருமாள் என்பார் தற்போது நெல்லையில் பணியாற்றுகின்றார், அவர் மூலமாக ஐம்பது ‘மண இதழ்’ அச்சிட்டு அனுப்ப ஏற்பாடு செய்தேன். பேருக்குக் குணமங்கலம் என்ற ஊரில் எனக்கும் ஒரு பெண்ணிற்கும் திருமணம் நடப்பதாக அவள் அண்ணன் அழைப்பதாகப் பத்திரிகை அச்சிட்டு அனுப்பச் சொன்னேன். எல்லாம் கற்பனையே. குணமங்கலம் என்ற ஊரும் கற்பனைப் பெயர் என்றே எண்ணினேன். ஆனால் அது தஞ்சையில் உள்ள ஒரு ஊரின் பெயராகிப் பெற்றவர்களுக்குப் பெருந்தொல்லை கொடுத்ததை பின்னர் அறியப் பெரிதும் வருந்தினேன்.

பள்ளிக்கூட நாள் ஒன்றில்–அன்று வா. தி. மா. அவர்களோ பெரியவரோ இல்லை—அந்த இதழ் வந்து சேர்ந்தது. ஆசிரியர் அனைவருக்கும் அதை அளித்தேன். ஒரு இதழை உறையிலிட்டு என் அன்னையாருக்கு அனுப்ப ஏற்பாடு செய்தேன். என்னுடன் எங்கள் ஊரிலிருந்து வந்து பணியாற்றிய அன்பர் ஒருவர்வழி அதைக் கொடுத்தனுப்பி, அன்று மாலையே புறப்படுவதாகச் சொல்லி (மணம் மூன்றாம் நாள்) அன்பர்கள் தந்த பண உதவியோடு மாலை 4-30-க்குப் புகைவண்டியில் செங்கற்பட்டை நோக்கிப் புறப்பட்டேன். அங்கே சென்று தெற்குநோக்கிச் செல்லும் வண்டியில் எது முந்தியது எனக்கண்டு அது பொழுது விடியும் போது எங்கே செல்லும் என்று அறிந்தேன். திருவனந்தபுரம் விரைவு வண்டிக்கு திண்டுக்கல்லுக்கு ஒரு ‘டிக்கெட்’ எடுத்தேன். இரவெல்லாம் அந்த ரெயிலில் சென்றேன். அந்தக்காலத்திலெல்லாம் இப்படி வழியும் கூட்டம் ரெயிலில் கிடையாது. எனவே நன்கு உறங்கித்தான் சென்றதாக நினைப்பு. திண்டுக்கல் சென்றதும் இறங்கினேன். எனக்கு அந்த ஊர் புதியது. ரெயிலடியிலேயே பல்லைத் துலக்கிக்கொண்டு பக்கத்தில் இருந்த விடுதியில் சிற்றுண்டி கொண்டேன். பிறகு ஒரு ஆனாதைப் பிள்ளையைப் போன்று, கையில் வைத்திருந்த சிறு பையுடன் மேற்குநோக்கி வெகுதூரம் நடந்தேன். ஏன் போகிறேன்? எங்கே போகிறேன்? என எனக்கே தெரியவில்லை சுமார் 10 மணிவரை நடந்திருப்பேன். பின் சாலையின் ஒரு ஓரத்தில் தங்கிவிட்டேன். ஒரு வேளை என் பெற்றோர் என்னைத் தேடிக்கொண்டு வந்தாலும் அவர்கள் கண்களில் படாதிருக்கவேண்டியே இந்த ஏற்பாட்டினைச் செய்தேன். பிறகு அன்றைப்பொழுதை எப்படிக் கழித்தேன் என்பது எனக்கு இன்று திட்டமாக நினைவில் இல்லை. எப்படியோ அன்றைப்பொழுதை அறியாத திண்டுக்கல்லில் கழித்து, இரவு 9 மணியளவில் திருச்சிக்குத் திரும்பும் ஒரு ரெயிலில் திருச்சி வந்து சேர்ந்தேன். அங்கேயும் ரெயிலடியிலேயே படுத்து உறங்கினேன். மறுநாட்காலை எழுந்து காவிரியில் சென்று மூழ்கி பையில் இருந்த மாற்றுடையைத் தரித்துக்கொண்டு, சிராப்பள்ளிக் குன்றுடை யானையும், திருவரங்கத்துப் பள்ளிகொண்டானையும் ஆனைக்கா அண்ணலையும் கண்டு வணங்கினேன். பிறகு நண்பகல் உணவுக்குப் பின் ஒரு சத்திரத்தில் இடம் கேட்டுத் தங்கினேன். அன்றும் மறுநாளும் எப்படியோ பொழுதினைக் கழித்தேன். திரும்பும்போது ஒருநாள் தில்லைக்கு வந்ததாக நினைவு. எப்படியோ நான்கைந்து நாட்கள் சுற்றித் திரிந்து விட்டு, பிறகு வாலாஜாபாத் வந்து சேர்ந்தேன். சேர்ந்த அன்று முறையாகப் பள்ளிக்குச் சென்றேன். ஆனால் அதற்கு முன்பே என் வீட்டிலும் ‘அவர்கள்’ வீட்டிலும் என்ன நடைபெற்றிருக்கும் என்று அறிய அவாவிற்று என் உள்ளம், நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் கேட்கக் கேட்க என் உள்ளம் நைந்தது.

எனது மண இதழைக் கொண்டுசென்று என் அன்னையிடம் நண்பர் தந்து விளக்கியதும் அன்னையார் 'ஓ’ வெனக் கதறி அழுதனர். வீடே 'பிண' வீடாக மாறிய நிலையில் இருந்தது. யாவரும் வந்து விசாரித்தனர். எனது. பெரிய அன்னையும் பெரிய தந்தையும் எவ்வளவோ கூறியும் மற்றவர்கள் தேற்றியும் என் அன்னையார் அமைதியுறவில்லை. பலர் 'சிவானந்தம்' (அப்படித்தான் என்னை ஊரில் உள்ளவர்கள் அழைப்பார்கள்) அவ்வளவு துணிச்சலாகச் செய்யமாட்டான். ஏதோ இருக்கும் என்று கூறத் தேற்றியும் அன்னையார் கேட்கவில்லை. உடனே 'குணமங்கலத்'துக்குப் புறப்பட்டுச் சென்று மணத்தைத் தடுக்கவேண்டும் என்று வாதடினர். என்னை மறுமணம் செய்துகொள்ள வற்புறுத்தினாலும், அவர்கள் தம் குலத்திலேயே-மரபிலேயே எனக்குப் பெண்தேடவே நினைத்தனர். நான் வேற்றுச் சாதியிலே வேறுபெண்ணை மணப்பது என்பது அவர்களோ மற்றுள்ள ஊரார்களோ விரும்பாதது. அவ்வளவு வைதீக எல்லே மீறாக மக்கள் வாழ்ந்தது என் ஊர். எனவே எல்லோரும் இதுபற்றிக் கலந்து ஆலோசித்தனர். நான் கற்பனையில் குறித்த அந்த ஊர் எங்குள்ளது எனத் தேட முயன்றனர். இருவர் வாலாஜாபாத் புறுப்பட்டுவந்து, ரெயிலடியில் வந்து, அந்நிலையத்துள்ளாரை அவ்வூரைப் பற்றிக் கேட்டனர், அவர்கள் எல்லாவற்றையும் துருவித் துருவி ஆராய்ந்து அதுபோன்ற ஊர் எதுவும் ரெயில் எல்லையில் நிலையமாகக் கிடையாது என்று கூறிவிட்டனர், வேறு சிலர் அஞ்சல் நிலையம் சென்று ஆராய்ந்தனர் போலும். அங்கே உள்ள எல்லா ஊர்களையும் ஆராய்ந்து, குணமங்கலம் என்ற சிற்றூர் தஞ்சை மாவட்டத்தில் எங்கோ ஒரு மூலையில் இருப்பதாகக் கண்டனர். உடனே ஊருக்கு வந்து அன்னையாருக்கு அத்தகவலைச் சொன்னதுதான் தாமதம், உடனே அந்த ஊருக்குப் புறப்படவேண்டுமென்று கிளம்பி விட்டனர். யார் தடுத்தும் கேளாமல் தானே நேரில் வந்தாலன்றி நான் மனம் மாறமாட்டேன் என்றும் மணம் முடிந்துவிடுமென்றும் அதை எப்படியும் தடுக்கவேண்டும் என்றும் புறப்பட்டு விட்டார்கள். அவர்களுக்குத் துணையாக எனது பெரிய தந்தையும் புறப்பட்டனர். எப்படியோ அஞ்சல், ரெயில் நிலைய அதிகாரிகளைக் கொண்டு அந்த ஊரையும் வழியையும் அறிந்து, மறுநாட்காலை அந்த ஊருக்குச் சென்று இருவரும் சேர்ந்தனர்.

குணமங்கலம் அழகான சோலை சூழ்ந்த சிற்றூராம் அதில் அனைவரும் வேளாளரே வாழ்கின்றார்களாம். இவர்கள் சென்று அங்குள்ளவர்களை அப்பத்திரிகையைக் காட்டி, அத்தகைய திருமணம் ஏதாவது நடைபெறுகின்றதா எனக் கேட்டார்கள். அங்கேயும் என் அன்னயார் அழுத வண்ணமே இருந்திருக்கிறார்கள். அவர்களை அழைத்துச் சென்று ஆறுதல் சொல்லி மோரும் பழமும் பிறவும்கொடுத்து உண்ணச்செய்து பிறகு எல்லாத் தகவல்களையும் கேட்டறிந்தார்களாம். அங்குள்ளவர்களும் எங்களைப் போன்றே வேளாளர்கள் தாம், எனினும் சிறுவேறுபாடு இருக்கும் போலும், அவர்களும் வைதிக நெறிபற்றியவர்கள்போலும். ஆனால் பின் இருவரும் ஒரே இனத்தவர்தாம் என உணர்ந்தோம். அத்தகைய திருமணம் செய்ய அந்த ஊரில் யாருமே நினைக்கமாட்டார்கள் என்றும் ஊரில் அவ்வளவு கட்டுப்பாடு உண்டு என்றும் பத்திரிகையில் உள்ளமை போன்று பெண்ணோ அவள் அண்ணனோ கிடையாது என்றும் கூறியதோடு, ஒருவேளை அடுத்து அத்தகைய மணம் ஏதேனும் நடந்தாலும் தாங்கள் நடக்க ஒட்டாத கொள்கை யுடையவர்களென்றும் கூறி, அன்னையாரைக் கவலை கொள்ளாது செல்லுமாறு வழியனுப்பிவைத்தார்களாம். அவர்கள் அன்பில் திளைத்த அன்னேயாரும் வேற்றுடம்பு திரும்புவது போன்று, என்னைக் காணுமையால் வந்தவழி திரும்பினார்கள்.

இவற்றையெல்லாம் என் அன்பர் கூறக்கேட்டு நான் கதறி அழுதேன். அன்னையை இத்தனை அல்லலுக்கு இச் செயல் உள்ளாக்கும் என அறிந்திருந்தால் அதை மேற்கொண்டே இருக்கமாட்டேன். எனினும் இதனால் பயன் விளையும் என்று எதிர்பார்த்த இடத்தில் பயன் விளையவில்லை என அறிய மேலும் நடுங்கினேன். இச்செய்தியைக் கேட்ட எனது மாமனார் வீட்டில் உள்ள அனைவரும் 'ஒரு சனியன் விட்டது' என்று கூறியதோடு, மகிழ்ச்சியோடு வேறு பல பேசினர்கள். அவர்கள் கவலை கொண்டதாகவே தெரியவில்லை. ஆம்! அவர்கள் அனைவருக்கும்-அந்த மனைவி உட்பட அனைவருக்கும் நான் 'ஒரு சனியனா'கவே இருந்தேன். இன்று அவருள் வாழ்வார்க்கும் அப்படியே இருக்கிறேன்.

குணமங்கலத்தை-எனது கற்பனை ஊர் உண்மையாக நின்ற நல்லூரை-அன்று முதல் காணவேண்டும் என்று எண்ணுவேன். ஆயினும் பல ஊர்களைச் சுற்றித் திரிந்த எனக்கு அந்த ஊருக்குச் செல்ல வாய்ப்பு இல்லை. இன்னும் அந்த எண்ணம் விடவில்லை. மேலும் நான் கனவு கண்ட அந்த நல்ல ஊரிலுள்ள பெண் ஒருத்தியை அந்த வேளாண் குலத்தில் மணக்காவிட்டாலும், அதே மாவட்டத்தில் அத்தகைய வேளாளர் நிறைந்த ஊரில் பிறந்த பெண் ஒருத்தியை எனக்கு மருமகளாக்கிக்கொண்ட நிலையின - என் மகன் மெய்கண்டானுக்கு மனைவியாக ஏற்ற நிலையினை - இன்று எண்ணி மகிழ்கின்றேள். விரைவில் அந்த ஊரைச் சென்று காண்பேன் என எண்ணுகின்றேன்.

ஊரே கொந்தளிக்கும் இந்த நிகழ்ச்சி அவர்களுக்கு எந்துணையும் மாற்றத்தை உண்டாக்காததோடு, நான் மறுமணம் புரிந்துகொள்வதில் மகிழ்ச்சிகொண்ட அவர்கள் நிலை கண்ட அனைவரும் என்னை உடனே மறுமணம் புரிந்து கொள்ளுமாறு வற்புறுத்தினர். நான் அந்த எண்ணத்தைத் தள்ளி வைத்துக்கொண்டே வந்தேன்.

ஊரிலிருந்து வாலாஜாபாத் திரும்பி இரண்டொரு நாட்கள் நான் என் ஊர்சென்று அன்னையாரைக் காணவில்லை. எனக்கு அச்சம் ஒருபுறமும் கண்டு மன்னிப்புப் பெற வேண்டும் என்ற ஆசை ஒருபுறமும் எழுந்தது. அதற்குள் ஊரிலிருந்த பலர் என் புது மனைவியைக் காணச் சாரி சாரியாக வாலாஜாபாத் வந்தனர். அவர்கள் வழி எல்லாம் எனது அன்னையாரின் அவலநிலை உணர்ந்தேன். உடனே எனது ஆசிரிய நண்பர்கள் இருவரை உடன் அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றேன். சென்று தாழ்வாரத்தில் இருந்த பலகையில் உட்கார்ந்தேன். சோகமே உருவாக உட்கார்ந்திருந்த அன்னையார் அப்படியே வந்து கட்டிக் கொண்டு அழுதார்கள். ஊரே திரண்டுவிட்டது. நான் மணம் செய்துகொள்ளவில்லை என்று எவ்வளவோ சொல்லியும் அவர்கள் ஆறுதல் பெறவில்லை. அந்த நாளையும் அவர்கள் நிலையையும் இன்று நினைத்தாலும் நடுக்கம் உண்டாகின்றது. பிறகு ஒருவாறு தேற அனைவரும் விடை பெற்றுச் சென்றனர். அன்னையார் அன்று இரவெல்லாம் என்னை மணம் பற்றிப் பலமுறை கேட்டு 'இல்லை' என்பதை ஒருவாறு தெளிந்து அமைதியுற்றனர்.

வருந்தவேண்டியவர் வருந்தா நிலை கண்ட ஊராரும் உற்றாரும் எனக்கு மறுமணம் செய்துவைக்க வேண்டியதே முறை என்ற முடிவிற்கு வந்தனர். நண்பர் பலரும் என்ன வற்புறுத்தினர். எனது அன்னையார் விரைவில் பெண்தேட முயன்றனர். நான் மறுபடி எங்கே உண்மையில் வேறு யாரையேனும் மணம் செய்துவிடுவேனே என்று அச்சம். ஆனால் நான் 'சற்றே பொறுங்கள்' என்று சொல்லி, வேண்டாம் என்னாது, அவர்கள் விழைவைப் பின் சிறிது காலத்தில் நிறைவேற்றலாம் என ஆறுதல் கூறினேன். அவர்களும் ஒருவாறு அமைந்தார்கள்.

இந்துமத பாடசாலையில் ஆசிரியராக இருந்தபோது நடைபெற்ற நிகழ்ச்சிகள் இன்னும் பலப்பல உள்ளத்தே உருண்டோடி வருகின்றன. அப்போது ஊரின் நடுவில் ஒரு சிறு அளவில் 'வள்ளலார் இல்லம்' என்று விடுதி இருந்தது. சுமார் 15 அல்லது 20 பிள்ளைகளே அதில் தங்கியிருந்தனர். அவருள்ளும் பெரும்பாலோர் இலவசமாகச் சேர்க்கப் பெற்றவரே. அந்த நாளில்தான் 'பெரியப்பா' பஞ்சாட்சர முதலியாருடைய முயற்சியால் ஊருக்கு மேற்கேயுள்ள தோட்டங்கள் விலைக்கு வாங்கப்பெற்றன. அப்போது அங்கே ஒரே ஒரு பழைய ஓட்டுக் கட்டடம் இருந்தது. சிறு மாற்றத்துடன் இன்னும் அது இருக்கிறது என எண்ணுகிறேன். அப்பாவும் பெரியப்பாவும் விடுதியைத் தனியான அந்த இடத்துக்கு மாற்றத் திட்டமிட்டனர். விடுதிக் காப்பாளனாக இருக்குமாறு என்னைக் கேட்டனர். நான் என் நிலைத்த வாழ்வு எது என்று திட்டமிடாத அந்த நாளில் ஒத்துக்கொள்ளவில்லை. எனினும் அந்த ஆண்டே ஆசிரியப் பயிற்சியில் தேர்ச்சியுற்று அங்கேயே நிலைத்த பணியாற்ற வந்த திரு. தணிகை ராயன் (இன்றைய அண்ணா தணிகை அரசு) அவர்கள் அப் பொறுப்பில் ஓரளவு பங்குகொண்டார். நான் ஊருக்குப் போகாத நாட்களில் விடுதியில் தங்கி வேண்டிய உதவிகளைச் செய்து வந்தேன்.

விடுதியைப் புது இடத்துக்கு மாற்றத் திட்டமிட்டார்களே ஒழிய, என்று மாற்றுவது என்று என அவர்கள் முடிவு செய்யவில்லை. நான் ஒரு நல்ல நாள் பார்த்து, அன்று விடுதிக் காப்பாளராகிய 'தணிகைராயருடன்' சென்று அந்தப் புதிய இடத்தைச் சுத்தம் செய்து, 'ஸ்டவ்' மூட்டி உப்புமாவு கிண்டி, பால் காய்ச்சி வந்திருந்த அனைவருக்கும் கொடுத்தேன். அந்த நாளே இன்றைய பரந்த இடத்தின் பள்ளியின் கால்கோள் விழா ஆற்றிய நாளாகும். செய்துவிட்டேனே ஒழிய, அப்பாவும் மற்றவரும் என்ன சொல்வரோ என்ற அச்சம் என் உள்ளத்தில் இருந்தது. அன்றோ மறுநாளோ அவர்கள் வந்தபோது, மெல்ல புது வீட்டிற்குச் சென்று பால் காய்ச்சிப் பலகாரம் செய்து சாப்பிட்டு நல்ல நாள் கொண்டதைக் குறித்தேன். இருவரும் மிகவும் மகிழ்ந்தார்கள், அன்றே அந்த இடத்தை முழுதும் பார்வையிட்டு, மறு நாளே எல்லா மாணவர்களைரும் அப்புது இடத்துக்குப் புகுமாறு பணித்தார்கள். அவர் தம் அன்பின் திறனே அப்போது என்னால் உணர முடிந்தது.

ஓராண்டு இந்துமத பாடசாலையில் வேலை செய்த போது பல அறிஞர்கள் எனக்கு அறிமுகமானர்கள் என்றேன். அவருள் இன்று ஐதராபாந்தில் இருக்கும் திரு. மணி கோடிஸ்வர முதலியார் ஒருவர். அவர் அதுகாலை சென்னை கோவிந்த நாயகர் இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தார் செயலாற்றலும் பேச்சுத்திறனும் பெற்றவராக விளக்கினர். அவர் அடிக்கடி பள்ளிக்கு வருவார்....அப்பாவின் உறவினரும் ஆவர். அவர் வரும்போதெல்லாம் என்னை மேலே பயிலுமாறு ஊக்குவார். எனக்கு நல்ல எதிர்காலம் இருக்தின்றது என்றும் படியாமல் வீணே காலங் கழிக்கக் கூடாது என்றும் சென்னையில் பல்கலைக்கழகத்துக்குத் தனியாகப் படித்துச் செல்லலாம் என்றும் கூறி அவ்வாறு படிப்பதற்கு வேண்டிய வழித்துறைகளில் எனக்கு உதவுவதாகவும் வாக்களித்தார். அவர் சொற்படி நான் படித்து உயர்ந்தபோது என் வளர்ச்சியைப் பாராட்டினார். ஐதராபாத் உஸ்மானியப் பல்கலைக்கழகப் பேராசிரியனாகத் தமிழக அரசாங்கம் என்னை அனுப்பியபோது, அங்கே என்னே வரவேற்று விருந்தளித்துப் பல பெரியவர்களை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். என் வளர்ச்சியை விரும்பும். நல்லவர்களில் ஒருவராக அவர் உள்ளார்.

இவ்வாறே எனக்கு அறிமுகமான பலரும் எனக்கு அறிவுரைகூறி, மேலே படிக்கவேண்டும் என்று வற்புறுத்தினர். எனது அன்னையாருக்கும் நான் வீட்டிலேயே இருந்து படித்து பட்டம் பெறுவதில் கருத்துவேறுபாடு இல்லை. எனவே எனது ஓய்வுநேரங்களில் சென்னைப் பல்கலைக்கழகப் பாடத்திட்ட அடிப்படையில் அமைந்த சில இலக்கிய இலக்கண நூல்களைப் பயிலத்தொடங்கினேன், தமிழ்த்துறையில் வல்லவர்களாய் எனக்கு வழிகாட்டிகளாய் நிற்க அங்கே யாரும் இல்லையேனும் நானே பல நூல்களை வாங்கி வைத்துக்கொண்டு மெல்லமெல்லச் சில ஆண்டுகள் படித்துக்கொண்டே வந்தேன். ஓராண்டு பள்ளியில் பணி செய்த பிறகு வீட்டிலேயே தங்கி, அதிகமாகப் பயில வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டேன். அங்கங்கே நடக்கும் அறிஞர்கள் கூட்டங்களுக்குச் சென்று கலந்துகொண்டு அறிவுரைகளைப் பெற்று வருவேன்.

ஆண்டுகள் ஒன்றன்பின் ஒன்றாகக் கழிந்தாலும் என் இல்வாழ்வில் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. மணம் நடைபெற்று ஐந்தாறு ஆண்டுகள் கழிந்தபோதிலும் ஒருதரமாவது ஐந்தாறு நாட்கள் சேர நாங்கள் வாழ்ந்ததில்லை. எனவே எனது பெற்றேரும் மற்றோரும் என்னை மறுமணம் செய்துகொள்ளுமாறு தூண்டினர். சில பெண்களைப் பெற்றோரும் தாமே வலியவந்து பெண் கொடுக்கவும் முன் வந்தனர். எனக்கும் பெரிய சங்கடமாகிவிட்டது. என் அன்னையோ நாள்தோறும் கண்ணீரைப் பெருக்கிக் கொண்டிருந்தனர். தந்தையார் ஏக, பாட்டியும் அகல, நானும் சுற்றிக்கொண்டிருக்க அவர்கள்தான் எத்தனை நாட்கள்எத்தனை ஆண்டுகள் தனியாக வீட்டைக் காவல் காத்துக் கொண்டிருப்பார்கள். பக்கத்து வீட்டிலேயே பெரியப்பாவும் பெரியம்மாவும் இருந்தபோதிலும் அவர்களும் தனியாக இருந்தமையின் இரண்டு வீடுமே களையற்றிருந்தன. எனவே வீட்டில் 'நடமாடும் இலக்குமி'யாக மருமகள் வரவேண்டும் என அவர்கள் விழைந்ததில் தவறு இல்லையே. அந்த எண்ணத்திலேதான் என் இளவயதையும் கருதாது அப்போதே எனக்குத் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் அதுவோ பயனற்றுக் கழிந்துவிட்டது. எனவே அவர்கள் எனக்கு மறுமணம் செய்து வைப்பதில் தீவிரமானர்கள். நான் ஒருமுறை அவர்களோடு வாதாடி மறுத்தேன். அதன் காரணமாக என்னே அவர்கள் வைதார்கள். எனவே எனக்கு உலக வாழ்வே துச்சம் என்கின்ற நிலை உண்டாயிற்று, அனைத்தையும் துறந்து எங்காவது சென்றுவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

ஒரு நாள் விடியலில் எழுந்து அம்பட்டன் வீட்டிற்குச் சென்றேன். குடுமி எனக்கு நிறைய இருக்கும். அனைத்தையும் நீக்கி மொட்டை அடித்துக்கொண்டேன். ஆற்றில் மூழ்கி வீட்டிற்கு வந்து உணவு உண்டேன். பிறகு என் கையில் உள்ள சிறு தொகையை எடுத்துக்கொண்டு, வாலாஜாபாத் சென்று மறுநாள் வருவதாக அன்னையிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். மேலே ஒரு துண்டு, இடுப்பில் ஒரு வேட்டி, மடியில் சிறு தொகை, சில தாள் ஒரு எழுதுகோல் இவற்றோடு புறப்பட்ட நான் நேரே திருத்தணிகைக்குச் சென்று எங்கள் குலதெய்வமாகிய முருகனை வழிபட்டு அவனிடம் வரம் வாங்கிக்கொண்டு பிறகு அவன் காட்டிய திசையில் செல்ல முடிவு செய்தேன். தணிகை முருகன் எங்கள் குடும்பத்தின் தோன்றாத் துணையாய் நின்று எல்லாக் காலத்திலும் அருள் செய்யும் நிலையினை நினைந்தேன்;வாய் அவன் புகழ் பாடிற்று.

ரெயிலில் டிக்கெட் எடுத்து உட்கார்ந்தேன். வண்டி நகரத் தொடங்கிற்று. என் உள்ளமும் எண்ணாததெல்லாம் எண்ணிற்று. இந்தத் துறவு நிலக்குமா? என்ற கேள்வி பிறந்தது. ரெயிலில் எனது முன்பலகையில் ஒரு குடும்பம் திருப்பதிக்குப் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தது; இளந்தம்பதிகள் - இரு குழந்தைகள் - உடன் வந்த மூதாட்டி. இவர்கள் குடும்பம் நல்ல சமயப்பற்றுடையதாகத் தெரிந்தது. என்னைச் சிறிதுநேரம் உற்று நோக்கிய அவர்கள் என்னிடம் பேசத்தொடங்கினர். நான் பெரும்பாலும் கண் மூடிக்கொண்டு - முருகன் புகழ் பாடிக்கொண்டு - இடையிடையே கண்ணீர்விட்டுக்கொண்டு கசிந்து சென்றேன். என்னைப் பற்றி என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. பேசினர் - யார் பேசினர் என்பது நினைவில்லை. என்னை உண்மைத் துறவி என்றே நம்பினர். நானும் துறவிதான் என்றும் தணிகைக்கு வழிபடச் செல்லுகிறேன் என்றும் அடுத்து எங்கே செல்வேன் என்பது எனக்கே தெரியாது என்றும் எனக்கு 'யாதும் ஊரே யாவரும் கேளிரே' என்றும் சொன்னேன். அவர்கள் இந்த இளம் வயதில் மொட்டை அடித்துத் துறவி என நின்ற என் கோலத்தில் ஏதேனும் தெய்வஒளி கண்டார்களோ என்னவோ நானறியேன். குழந்தைகளே என் காலில் கிடத்தி வாழ்த்த வேண்டினர். அவர்கள் குழந்தைகளுக்கு மொட்டை அடித்துக் காது குத்துவதற்காகத் திருப்பதிக்குச் செல்வதாகக் கூறினர். என்னையும் அவர்களுடனேயே வருமாறு கேட்டுக்கொண்டனர். எனினும் நான் முருகனை முதலில் கண்டபிறகுதான் பிற இடங்களுக்கு வரமுடியும் என்று சொல்லிவிட்டேன். எனவே அவர்கள் மேலும் வற்புறுத்தாமல் அவர் ஊர் முகவரி முதலியவற்றைச் சொல்லி, அங்கேயே வந்து தங்கி மடம் அமைத்துக்கொண்டு இருக்குமாறு கேட்டுக்கொண்டனர். (என் பிற்கால வாழ்விலும் எங்கள் மரபுடன் தொடர்பு கொண்ட ஒரு மடத்துக்குத் தலைவனாக இருக்குமாறு என் நண்பர்கள் வற்புறுத்தினர்கள். எனினும் அப்போதும் நான் அந்த வாழ்வினை மேற்கொள்ளவில்லை). என் உள்ளத்தில் உண்மையில் போ ரா ட் ட ம் நிகழ்ந்தது. கையில் வைத்திருந்த தாளில் எழுது கோலால் அவர் தம் முகவரியை வாங்கிக்கொண்டேன். இறைவன் வழிகாட்டினால் அப்படியே வருவதாகவும் வாக்களித்தேன். நான் இறங்குமுன் அவர்கள் சிற்றுண்டி உண்டனர். எனக்கும் பக்தியோடு அதில் ஒருபகுதி தந்தனர். நானும் மறுக்காமல் ஏற்று உண்டேன். அவர்கள் என்ன நினைத்தார்களோ! நான் தணிகையில் இறங்குமுன் என்னிடம் ஒரு ரூபாய் காசைத் தயக்கத்தொடு நீட்டி, வழிச் செலவுக்கு வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். நான் புன்சிரிப்போடு 'வேண்டாம்' என்று சொல்லி, 'இறைவன் தேவையைத் தருவான்’ என்று அவன் மலையைக் காட்டினேன். அந்நேர வேளையில் இரெயில் அவன் சன்னதிக்கு நேராகக் கிழக்குத்திக்கில்-தெற்கில் இருந்து வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தது. நான் காட்டிய திசையில் திரும்பிய அவர்கள், கோயில் காட்சியை நேரே கண்டதும் திகைத்தனர். என்னிடம் கொண்ட அவர்கள் பக்தி அதிகமாயிற்று. நான் ஊர் பேர் அற்றவனுதலால் அவர்களால் தேட முடியாது என்ற காரணத்தால் அவர்கள் விலாசத்தை நினைவூட்டிக் கட்டாயம் அவர்கள் ஊருக்கு வந்து மடம் அமைக்குமாறு வேண்டிக் கொண்டனர். அவர்கள் யாரோ? பிறகு அவர்களை நான் காணவே இல்லை. ஆயினும் அவர்கள் காட்டிய பரிவும் பாசமும் பக்தியும் பண்பும் இன்றும் என்முன் நிழவிடுகின்றன . அந்தத் துறவு நிலையிலே நான் நிலைத்திருப்பேனாயின் தற்போது எவ்வாறு இருப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. எங்கோ இமயமலைச்காரலில் சிவானந்தர் ஆசிரமத்தில் நானும் ஒரு சிவானந்தமாகத் தங்கி இருந்திருப்பேனே அன்றி வேறு எங்கிருந்திருப்பேனோ?

தணிகையில் இறங்கினேன். மாலை 8 மணி இருக்கும். மலைக்குப் போகும் வழியில் அஞ்சல் நிலையம் இருந்தது. அங்கேயே உட்கார்ந்துகொண்டு எடுத்துச்சென்ற தாளில் எழுதுகோலால் நான்கைந்து பக்கங்கள் என் உள்ளக்கிடக்கைகளை யெல்லாம் கொட்டி எழுதி, நான் துறவியாக முடிவுசெய்துவிட்டேன் என்பதையும் விளக்கி, என்னைத் தடுக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டு அழுத நிலையில் ஒரு உறைவாங்கி அதில் இட்டு அன்னையாரின் முகவரியையும் எழுதிப் பெட்டியில் இட்டுவிட்டேன்.

தணிகை முருகன் என் நினைவு தொடங்கப்பெற்ற நாளிலிருந்து நெஞ்சில் இருப்பவன். இன்பம் துன்பம் இரண்டும் அவன் அளிப்பவை. எனவேதான் அங்கே முதலில் சென்று அவன் அருள்பெற முனைந்தேன். குளத்தங் கரையில் வந்ததும் என் நிலை தளர்வுற்றது. படியில் சிறிது நேரம் உட்கார்ந்தேன். பிறகு மேல் எழுந்து கால் கழுவித் தூய்மை செய்துகொண்டு மெல்ல மலைமேல் ஏறினேன். வழிநெடுக உள்ள குரங்குகளும் பறவைகளும் ஒலி எழுப்பிக்கொண்டிருந்தன. மாலை வேளை பூசைக்குரிய ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன, நல்ல அந்த வேளையில், அவனேயன்றி வேறென்று அறியா நிலையில் நான் உச்சியை அடைந்து கோயிலை வலம்வந்து உள் சென்றேன். அப்போது தீபாராதனை நடந்துகொண்டிருந்த நேரம் என நினைக்கிறேன். தீபாராதனை முடியும் வரை நின்றிருந்தேன். கூட்டம் கலைந்தது, முருகன் அருகில் சென்று அழுதேன்....அலறினேன். அருகில் இருந்த ஐயர் கூடத் தவறாக எண்ணி இருப்பர். நான் என்ன செய்வது ? அடுத்துச் செய்ய வேண்டியது அறியா நிலையில் நான் வேறு என்ன செய்ய முடியும். வாய் பாடிற்று, கண் அவனைக் கண்டு நின்றது. கருத்து ஒரு வழிபட்டது என எண்ணுகிறேன் யாரும் பக்கத்தில் இல்லை. ஏதோ ஓர் அசைவினை உளத்தில் பெற்றேன். எங்கோ பேசுவது கேட்டது. 'வீட்டிற்குத் திரும்பிப்போ' என்ற ஒலியாக அது என் காதில் விழுந்தது. தலைதூக்கி நிமிர்ந்தேன். முருகன் முன்னே சிரித்துக்கொண்டிருப்பது போன்ற நிலை உணர்ந்தேன். திரும்பிச் செல்ல வேண்டுமோ? என்று உள்ளம் கேட்டது. 'ஆம்' என்று உள்ளத்திலிருந்தே ஒலி கிளம்பிற்று. அப்படியே நெடுநேரம் நின்றிருப்பேன். பலர் வந்து சென்றிருக்கக் கூடும். அடுத்த பூசைக்கு நேரமானதால் என்னை வெளியே செல்லச் சொன்னர்கள். நான் அன்னையர் இருவரையும் வணங்கி, மறுமுறை அத்தனுக்கு வணக்கம் செலுத்தி மும்முறை வலம் வந்து வெளி மண்டபத்தில் உட்கார்ந்தேன். அப்போது தான் சுய உணர்வு வரப்பெற்றேன். உடன் எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உருண்டன. திருப்பிப் போகவா ? என்ற கேள்விக்கு விடையும் பெற்றேன்.

தணிகை முருகன் முன் மண்டபத்தில் நான் உட்கார்ந்திருந்த நிலையில் என் உள்ளம் அங்கம்பாக்கம் சென்றது. 'என் கடிதத்தைக் காண்பார்களாயின் அன்னையின் உள்ளம் எவ்வளவு கொந்தளிக்கும்-கொதிக்கும்-வாடும்-வருந்தும் என எண்ணினேன். முருகன் எதையோ நினைந்துத்தானே–வருங்காலத்தை அறிந்த காரணத்தால்தானே–திரும்பச் சொல்லியுளான் என எண்ணினேன். உடனே திரும்ப வேண்டும் என முடிவு செய்தேன். நல்லவேளை அன்னை யாரிடம் ‘மறுநாள் காலையில்தான் வருவேன்’ என்று சொல்லி வந்தது பொருத்தமாயிற்று. உடனே இரெயிலைப்பிடித்து மறுநாள் காலை வாலாஜாபாத் அஞ்சல் நிலையத்தே அந்தக் கடிதத்தை நானே வாங்கிக் கிழித்துப்போட வேண்டுமென முடிவு செய்தேன். ஒன்றும் சாப்பிடவில்லை; சாப்பிட மனமும் செல்லவில்லை. விடியற் காலை 3-30க்கு இரெயில் என்றனர். எனவே இரெயிலடியில் வந்து படுத்துக் கொண் டேன். உறக்கம் வரவில்லை. ‘பம்பாய் மெயில்’ 3-30க்கு வந்தது. அரக்கோணத்தில் சிறிது நேரம் தங்கி, செங்கற்பட்டு வண்டியைப் பிடித்து வாலாஜாபாத்திற்கு காலை எட்டு மணிக்கு வந்து சேர்ந்தேன். நான் எழுதிய தபாலும் அதே வண்டியில்தான் வந்துகொண்டிருக்கும். எனவே பள்ளியில் சிறிது நேரம் நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்து அஞ்சலகம் சென்றேன். எங்களூருக்கு ஒரு வயதான ஐயர் அக்காலத்தில் தபால் கொண்டுவருவது வழக்கம். அவரிடம் சென்று ‘என் அம்மாவின் பெயருக்குத் தபால் வந்திருக்கிறதா?’ என்று கேட்டேன். அவர் உடனே அந்த உறையை எடுத்து என்னிடம் கொடுத்தார். உடனே ஒரு பெருமூச்சு வந்தது. இன்னும் சில மணி நேரத்தில் அது அன்னையின் கையில் சேர்ந்திருந்தால் என்னவாயிருக்கும் என எண்ணிய போது நடுக்கமே உண்டாயிற்று. அக்கடிதத்துடன் விரைந்து ஊருக்குப் புறப்பட்டேன். வழியில் சாலை ஓரத்திலுள்ள மர நிழலில் உட்கார்ந்து அக்கடிதத்தை இரண்டு மூன்று முறை படித்தேன். முன்னாள் இருந்த மன நிலைக்கும் அப்போதைய மனநிலைக்கும் பெரிய வேறுபாடு தெரிந்தது. அதை உடனே கிழத்துவிட எண்ணினேன். எனினும் சிறிது காலமாவது அது இருக்கட்டும் என்ற தெளிவோடு அதை எடுத்துக்கொண்டு அமைதியாக வீடு சென்றேன்.
மறு நாட்காலையில் வந்துவிட்டதால் அன்னையும் என்னிடம் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. நான் தணிகை சென்றதோ, கடிதம் எழுதியதோ ஒன்றும் அவர்கட்குத் தெரியாது. அக்கடிதத்தை மிகப் பாதுகாவலாக ஒரு உள் அறையில் வைத்துப் பூட்டினேன். எனினும் ஓரிரு ஆண்டுகள் கழித்து, நானே அதுபற்றி மறந்திருந்தவேளையில், வேறு எதையோ தேடிய அன்னையார் கையில் அக்கடிதம் சிக்கியது. நான் அப்போது ஊரில் இல்லை. என் கையெழுத்தோடு கூடிய அவர்கள் பெயரொடு உறையிட்ட– தபால் முத்திரையும் பெற்ற அக்கடிதம் அவர்களுக்குப் படிக்க வேண்டும் என்ற அவாவைத் தூண்டிற்று. ஒருசில வரிகள் படித்ததும் கண்ணீர் வடித்தார்கள் போலும். அந்த வேளையில் மாணிக்கம் என்ற நண்பர் என் வீட்டிற்குவர அவரிடம் கொடுத்து அதைப் படிக்கச் சொன்னார்கள். அவர் படிக்கப் படிக்க அன்னையார் அலறல் அதிகமாயிற்று. அதை முடித்த அவர் மேலுள்ள தேதியைப் பார்த்து–தபால் முத்திரைத் தேதியைப் பார்த்து, அது எப்பொழுதோ எழுதப்பெற்றது என்பதையும் அப்போது அதுபற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்பதையும் விளக்கியும் அன்னையார் ஆறுதல் பெறவில்லை. நான் வீடு திரும்பிய பிறகு அதை என்னிடம் கொடுத்து அதன் காரணம் என்னவென்று கேட்டார்கள். நான் ஊமையானேன். பதிலுக்குக் கண்ணீரைப் பெருக்கினேன். எனவே மேலும் ஒன்றும் கேட்க வேண்டாம் என்ற நிலையில் என்னை விட்டுச் சென்றனர். நான் அக்கடிதம் மேலும் அங்கிருந்தால் இன்னும் தொல்லைகள் விளையலாம் என்ற எண்ணத்தில் அதைக் கிழித்தெறிந்தேன். அக்கடிதத்தைப் படித்த மாணிக்கம் என் மாமியார் வீட்டுக்காரர். இந்த நிகழ்ச்சியை அவர்களிடம் அங்கேசென்று சொன்ன போதும், அவர்கள் எப்போதும் போலக் கேலியும் கிண்டலும் செய்து மகிழ்ந்தார்கள் என அறிந்தேன். ‘இதுவோ எனை ஆளுமாறு’ என இறைவனை எண்ணி அமைந்தேன். நாளும் மெல்லக் கழிந்து கொண்டே இருந்தது.

வீட்டில் ஓய்வாக இருந்துகொண்டு பாடங்களை முறையாகப் படித்துக்கொண்டிருந்த நாளில் எனது பெரிய தந்தையார் அம்பலவாணர் திருக்கோயிலுக்கென ஊரின் மேற்கே ஓர் அழகிய மண்டபம் அமைத்தார்கள். எனது "இளமை நினைவுகளின்' தொடக்கத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை ஞாயிறு விழாவினைப் பற்றியும் இறைவன் அம்மேலைத் தோப்பிற்கு எழுந்தருளுவது பற்றியும் குறித்திருந்தேன். அத்திருவிழாவுக்கெனவே இந்த மண்டபம் அமைக்கப்பெற்றது. அவர்கள் தம் முழு ஊக்கத்தையும் கொண்டு கட்டி, அடுத்த கார்த்திகையில் அங்கே விழாவை நடத்தவேண்டும் என்று பெருமுயற்சி செய்தனர். எனினும் இறைவன் திருவுள்ளம் வேறாக இருந்தது. வேலே நடந்து கொண்டிருக்கும்போதே அவர்கள் 'வாந்தி பேதி'யால் பீடிக்கப்பட்டு ஒரே நாளில் மறைந்துவிட்டார்கள். அவர்கள் மறைவு எங்கள் குடும்பத்துக்கு மேலும் பேரிடியாக அமைந்தது. எனது தந்தையார் இறந்த பிறகு தனித்து நின்ற எங்கள் குடும்பத்துக்கு இருந்த ஒரே ஆண்துணையும் மறைந்தது. எனது பெரிய அன்னையாரும் துயரே வடிவமாக நின்றர்கள். இந்நிலையில் எங்களை ஏய்க்கும் சிலருக்கு இது கொண்டாட்டமாகவும் அமைந்தது. எனினும் எனது அன்னையாரும், பெரியன்னையாரும் செயலாற்றிய திறத் தினால் நாங்கள் ஒருவாறு உயர்ந்தோம். நான் அதுபோது தக்கதொரு வயதைத் தொட்டுக்கொண்டிருந்தேன். என்றாலும் பெற்றோரின் கீழ் அடங்கிய பிள்ளையாதலின் அதிகமாக உலக விவரங்களை அறிந்துகொள்ளவில்லை. நல்ல வேளை எங்கள் இருவருடைய நிலங்களும் குத்தகைக்கு விடப்பட்டிருந்தன. குத்தகைக் காரர்களும் நல்லவர்களாகவே அமைந்த காரணத்தால் எங்கள் வாழ்க்கை ஒரளவு அமைதியாகக் கழிந்தது. நானும் தேர்விற்குப் படிக்க முடிந்தது.

பெரிய தந்தையார் தொட்ட பணியினை நான் முடிக்க வேண்டும் என்பது எனது பெரிய அன்னையார் அன்புக் கட்டளை. எனவே அத்துறையில் நான் வல்லவன் அல்லன் ஆயினும் எப்படியோ முயன்று ஒரிரு திங்களில் மண்டபப் பணியை நிறைவு செய்தேன். அந்த இறைபணி பற்றிய கட்டிடத் தொடக்கமே பின் பல கட்டிடங்களைக் கட்ட எனக்கு உறுதுணையாயிற்று. ஆயினும் அந்த ஆண்டு கார்த்திகை ஞாயிறு வருவதற்குள் அப்பணி முடியவில்லை. எனவே அவ்விழாவைத் தை மாதத்தில் வைத்துக்கொண்டோம். மண்டபத் திறப்பு விழாவை வைதீக முறையில் நடத்த வேண்டும் என்று பலர் சொன்னலும் எனது அன்னையர் நான் சொன்னதற்கே செவிசாய்த்தனர். காஞ்சி குமரன் அச்சகத்தில் திரு. வி. க. அவர்களைக் கண்டபின் எப்படியாவது அவர்களை 'நம் ஊருக்கு அழைத்து வர வேண்டும்’ என்ற எண்ணத்தில் இருந்த எனக்கு அவ்விழா உதவி செய்தது. மண்டபத்தை அவர்களே திறக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். அவர்களும் இசைந்தார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்றன.

திரு. வி. க. முன்னாள் மாலையே ஊருக்கு வந்துவிட்டார்கள். அன்று மாலை பாலாற்று மணலில் அவர்கள் இருந்துகொண்டு நாற்புறமும் நோக்கி, இயற்கையில் தம்மை மறந்து மகிழ்ந்தார்கள். பல நாட்கள் அங்கேயே தங்கவும் விரும்பினர்கள். தூரத்தே தெரிந்த 'திருமுக்கூடலுக்கு" மறுநாள் காலை குளியலுக்குச் செல்ல வேண்டும் என்றார்கள். பாலாறும் சேயாறும் இணைந்து கலக்கும் கூடல் அது. அங்குள்ள பெருமாள் கோயில் பழையது; சோழர் காலத்தியது. அங்கே எடுத்த கல்வெட்டுப் படியால் அங்கே ஒரு பெரிய மருந்தகமும் மருத்துவக் கல்லூரி, வடமொழிக் கல்லூரி போன்றவையும் இருந்தனவென அறிகிறோம். அத்தகைய இயற்கைச் சூழலும் வரலாற்று முக்கியமும் கொண்டதுமான முக்கூடல் திரு. வி. க.வை ஆட்கொண்டது. அதிசய மல்லவே !

விழா அன்று ஊரே அலங்கரிக்கப்பெற்றது. அந்த நாட்களில் ஊரில் ஒருவர் வீட்டில் சிறப்பு என்றால் ஊரார் அனைவரும் தத்தம் சிறப்பெனவே க்ருதி எல்லாப் பணிகளையும் விரும்பிச் செய்வர். அப்படியே அவர்கள் அனைவ்ரும் சிறப்பாளர் வீட்டில் வேறுபாடில்லாது கலந்து உண்பர். இன்று முன்விடும் பின் வீடும் பிணங்கும் நாகரிகத்தில் வாழும் நமக்கு இவையெல்லாம் புரியாதன. மண்ட்பத் திறப்பு விழாவிற்கு வெளியிலிருந்தெல்லாம் பல பெருமக்கள் வந்திருந்தனர். 'திரு. வி. க. வருகிறார் என அறித்து பல அன்பரும் அறிஞரும் கூடினர். அன்று ஒரு மணவிழாவினை ஒத்த சிறப்பு ஊரில் நடைபெற்றது. வாலாஜாபாத் பள்ளியிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட சிறுவர்கள் சாரணர் உடையுடன் வந்து சிறக்கக் தொண்டாற்றினர். பின் இறைவன் திருவுலாவின் போது சாலை இருமருங்கிலும், வரிசையாக அணி வகுத்து அவர்கள் சென்ற காட்சி சிறந்தது. இவ்வாறு அம்மண்டப விழா சனவரி இறுதியில்-தையில் இனிது நிறைவேறிற்று.

அடுத்த மார்ச் அல்லது ஏப்ரலில் நான் வித்துவான் தேர்வு எழுத என்னை ஆயத்தம் செய்துகொண்டிருந்தேன். குடும்பச் சூழலின் காரணத்தாலும் 'மேலே காட்டிய பல மாறுபாடுகளாலும்' பெரிய தந்தையார் பிரிவாலும் மண்டபப் பணியாலும் நான் நன்கு படிக்கவே இல்லை எனலாம். எனினும் தேர்வு நாற்பது ஐம்பது நாட்களில் உள்ளமையின் எப்படியும் படித்து வெற்றிபெற வேண்டுமென்று விரும்பினேன். எனது அன்னையர் இருவரும் அவ்வாறு செய்யலாம் என்றும் ஆனால் பிறகு எங்கும் வேலைக்குச் செல்லக் "கூடாது என்றும் விரும்பினர். நானும் எப்படியாவது முடித்தால் போதும் என்ற உணர்வில் 'இசைந்தேன். உடனே ஒரு திங்கள் தில்லை அண்ணாமலை நகரில் தங்கினால் எனது பழைய ஆசிரியர்களிடமும் பழகிய நண்பர்களிடமும் சில புரியாத பாடங்களைக் கேட்டுக்கொள்ள முடியும் என்று நம்பி அதையும் அன்னயாருடன் கலந்தேன். இருவரும் முதலில் மறுத்த போதிலும் ஒருதிங்கள் தானே என இசைந்தனர். நான் அங்கே சென்று அந்த ஒரு திங்களிலும் மெளன சுவாமிகள் மடத்தில் தங்கி, நாள்தோறும் அண்ணாமலை நகர் சென்று அறியாதனவற்றைக் கேட்டு வந்தேன். அதுபோது ஒருநாள் நாவலர் சோமசுந்தர பாரதியார் கவி அரசர் சுப்பிரமணிய பாரதியாரைப் பற்றிப் பேசிய பேச்சைக் கேட்டு, அதே மயக்கத்தில் அருகில் இருந்த ஒரு அறையில் தங்கி, பாரதியின் வாழ்க்கையைப் பாட்டாக 'பாரதி வாழ்வு' என்று ஐம்பது பாட்டில் எழுதி முடித்தேன். அதுவே எனது முதல் நூலாகவும் வெளிவந்தது.

அண்ணாமலையில் பல ஐயங்களைப் போக்கிக் கொண்ட நான் சென்னையில் தேர்வு எழுத வந்தேன். எனக்குச் சென்னையில் பத்து நாட்கள் தங்க உதவுபவர் யார் எனச் சிந்தித்தேன். அப்போது லா. தி. பஞ்சாட்சர முதலியார் அவர்கள் மாம்பலத்தில் தமது மக்கள் படிப்பின்பொருட்டு வந்திருந்தார். என்னே அவர் வீட்டிலேயே இருக்கப் பணித்தார். என்னொடு மற்றொரு நண்பரும் இருந்தார், அந்த அன்னயார் இருவரையும் தம் மக்களே போன்று ஏந்தி, வேண்டுங்கால் வேண்டும் உணவளித்து தேர்வு எழுத நாள்தோறும் வாழ்த்தியனுப்புவர். நான் படித்த வலத்தினைக் காட்டலும் அந்த அன்ளேயார் உண்பித்த உணவு வலத்தாலும் வாழ்த்தின் திறத்தாலுமே தேர்வில் சிறக்க வெற்றி பெற்றேன் என்பது உறுதி. அவர்தம் கான்முளைகளும் இன்றும் என்னொடு இயைந்து அன்புடையவர்களாகவே உள்ளனர். இவ்வாறு எப்படியோ பல இன்னல்களுக்கும் கொடுஞ் சூழல்களுக்கும் இடையில் பயின்று வித்துவான் தேர்வில் வெற்றிபெற்றேன். இச்செய்தி என் அன்னையர் இருவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது. இந்த இன்பத்தில் நாங்கள் பிற அனைத்தையும் மறந்து அமைதியில் வாழ்ந்தோம்.