காஞ்சி வாழ்க்கை/காஞ்சி வாழ்க்கைத் தொடக்கம்

விக்கிமூலம் இலிருந்து

5. காஞ்சி வாழ்க்கைத் தொடக்கம்

தேர்வில் வெற்றிபெற்றபின் என் செய்வது என எண்ண மிட்டேன். அன்னையாரோ உடன் இருக்க வேண்டும் என வற்புறுத்துகின்றார், வீட்டில் வேறு யாரும் ஆண்கள் இல்லாமையால் இருபத்தைந்தாண்டு தொடும் . ஒர் இளைஞன் வீட்டுப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று தான் பலர் சொல்லுவர். எனக்கு அத்தகைய அறவுரை கூறியவர் பலர். என்றாலும் எனக்குமட்டும் ஏதாவது ஆசிரியப் பணி செய்தால் என்ன?’ என்று எண்ணம் தோன்றிற்று. மண வாழ்வில் வெறுப்புற்று, சொந்தமான பயிர் வேலையும் இல்லாது, நாள் முழுதும் இப்படிச் சோம்பலாக வீட்டில் முடங்கிக் கிடப்பது எனக்கு வேதனையாக இருந்தது. மேலும் நான் தேர்விற்குப் பயிலும்போது தான், படிக்க வேண்டிய பகுதிகள் இன்னும் எத்தனை எத்தனையோ மடங்குகள் உள்ளன என அறிந்தேன்; அறிதோ றறியாமை கண்டற்றல் என்ற குறளின் பொருளை உணர்ந்தேன். எனவே எங்காவது நகரங்களில் பணியாற்றினால், என் அறிவைத் தக்கார் வழி வளர்த்துக்கொள்ள இயலும் என எண்ணினேன். ஆகவே ஊருக்கு அருகிலேயே காஞ்சிபுரத்திலோ செங்கற்பட்டிலோ உள்ள பள்ளி ஒன்றில் தமிழாசிரியராகப் பணியாற்ற நினைத்தேன். அதுபோது என்னுடன் வாலாஜாபாத் இந்துமத பாடசாலையில் பணியாற்றிய அன்பர் ஒருவர் காஞ்சிபுரம் சென்று தாம் பயின்ற ஆண்டர்சன் உயர்நிலப் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கே ஒரு தமிழாசிரியர் தேவை என அறிந்துவந்தார். அவர் தலைமை ஆசிரியரிடம் என்னைப் பற்றிக் கூறியதாகவும் என்னை உடன் அழைத்து வரும்படி அவர் சொன்னதாகவும் சொன்னர். எனினும் அன்னையின் உத்தரவு வாங்காது நான் எப்படிச் செல்ல முடியும் ?

 காஞ்சிபுரம் 'கற்றார் வாழ் காஞ்சி' எனப் போற்றப் பெறினும் மற்றாரும் அதில் மலிந்திருந்தனர்-இருக்கின்றனர். அங்கே நடந்த-நடக்கும் பல கொடுமைகளை அன்றும் பாடினர். இன்றும் பார்க்கின்றனர். அதே வேளையில் பெரும் பாணாற்றுப்படையும் மணிமேகலையும் பிற பிற்கால இலக்கியங்களும் காஞ்சியின் புகழ்பாடுவதைக் கேட்டுள்ளோம். எனினும் எனது அன்னையாருக்குக் காஞ்சிபுரம் என்றாலே நடுக்கம், 'பதியிலாக் குலத்துவந்த பான்மையார் பலர்' அக்காலத்து, காஞ்சியில் இருந்தமை முக்கிய காரணம். மேலும் எங்கள் உறவினர் பலர் காஞ்சியில் வாழ்ந்து கெட்டனர் எனக் காட்டினர் அன்னையார். இந்த நிலையில் அவர்கள் என்னைக் காஞ்சிபுரம் செல்ல விடுவார்களா என்பது ஐயத்துக்குரியதேயாகும். அதிலும் தனியாகச் சென்று. 'ஓட்டலில்' உண்டுகொண்டு இருக்கச் சம்மதிக்க மாட்டார்கள். அவர்களோ பிறந்த மண்&ணவிட்டு வரமாட்டார்கள். பெரிய அன்னையாரோ, பெரிய தந்தை யார் இறந்து ஓராண்டு கழியுமுன் வெளிவரல் இயலாது. எனவே பெரும்பாலும் இசைவு கிடைக்காது என்றே எண்ணினேன். எனது அன்னயாரிடம் இதுபற்றி சொன்னபோது, அவர்கள் ஊரிலேயே பயிர்த் தொழிலச் செய்யலாம் என்றார்கள். ஆனால் அதே வேளையில் நான் பிறந்த மூன்றாம் நாளில் எனது "சாதகத்தை’க் கணித்த ஊர் வள்ளுவர் 'இவர் உத்தியோகத்தில்தான் இருப்பாரே யன்றி உழவுத் தொழில் செய்ய்மாட்டார்' என்று கூறியதையும் நினைவூட்டினார்கள். எங்க குடும்பத்தில் நான்கைந்து தலைமுறையில் யாரும் படித்து உத்தியோகத்துக்குப் போகவில்லை. எனவே அந்தச் சோதிடன் சொன்னது பலிக்கும் என யாரும் நம்ப வில்லை. ஆயினும் பிறகு நடந்த பல நிகழ்ச்சிகளையும் அவர் அந்தப் பிறந்த முன்றாம் நாளில் எழுதியதையும் ஒத்து நோக்கும்போது அவர் எழுதிய அனைத்தும் சரியாக உள்ளமை அறிந்தோம். எனக்குச் சோதிடத்தில் நம்பிக்கை உண்டோ இல்லையோ-பற்றுமட்டும் கிடையாது. எனவே தான் எனது மக்களில் ஒருவருக்கும் பிறந்தநாள் குறிப்பினைக் கூட நான் வைத்துக்கொள்ளவில்லை. ஆயினும் எனது சோதிடக் குறிப்பில்'-கல்லா வள்ளுவன்’ கால்படி அரிசியும் பழந்துணியும் பெற்று எழுதித் தந்த அந்தக் குறிப்பில் - உள்ள அத்தனையும் கால வேறுபாடும் இன்றி, அப்படியே என் வாழ்நாளில் இன்றுவரை ஒன்றுகூடத் தவறாமல் நடப்பதை எண்ணத் திகைப்பும் வியப்பும் கொள்வேன். எனது அன்னையார் அதைக் கண்டு, அதில் அந்தக் காலத்தில் இடமாற்றம் குறித்திருப்பதால் நான் எப்படியும் வெளியூர் செல்வேன் என்று கூறினார்கள். அதே வேளையில் எனது நண்பர்கள் பலரும்-சிறப்பாக என்னைக் காஞ்சிபுரம் அழைந்துச் செல்ல இருந்த நண்பரும் அன்னைக்கு ஆறுதல் சொல்லினர். காஞ்சிபுரம் பக்கத்தில் உள்ளதால் நாள் தோறும் சென்று கூடத் திரும்பலாம் எனக்காட்டினர். (பிறகு அவ்வாறே ஒரு திங்கள் இரெயில் வழி காலை சென்று மாலை திரும்பினேன். பின் எனது சோர்வு கண்டு காஞ்சியிலேயே இருக்கப் பணித்தனர் அன்னையர்). எனவே அன்னையர் இருவரும் ஒருவாறு இசைவு தந்தனர். உடனே காஞ்சிபுரம் சென்றேன்.

அக்காலத்தில் காஞ்சிபுரம், செங்கற்பட்டு, அரக்கோணம் ஆகிய மூன்றிடத்தில் உள்ள பள்ளிகளும் ஒரே அமைப்பின் கீழ் (Church of Scotland Mission) இருந்தன' U. F C. M. உயர்நிலைப்பள்ளி என்றே அவற்றிற்குப் பெயர். பின்னரே அவை தனித்தனியாகப் பிரிந்து காஞ்சிப் பாட சாலை 'ஆண்டர்சன் உயர்நிலைப்பள்ளி' எனப் பெயர் பெற்றது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியரை ஒருநாள் காலை அவர் வீட்டில் என் நண்பருடன் சென்று கண்டேன். என்னைக் கண்டதும் அவர் பலநாள் பழகியவர் போன்று அன்புடன் ஏற்று இன்சொற் கூறினர். அவர்தம் அன்பும் ஆதரவும் அப்பள்ளியில் பணியாற்றிய கடைசி நாள்வரை எனக்கு இருந்தன. அவர் உடனே என்னைப் பணியை ஏற்றுக் கொள்ளச் சொன்னார். பள்ளி திறந்த நாளிலேயே சேர்ந்து  விடுமாறும் கூறினர். அதற்கென விண்ணப்பமோ உத்தரவோ தேவை இல்லை என்றார்,

எனினும் எனது நியமனத்தில் சிறிது சிக்கல் ஏற்பட்டது எனப் பின்னால் அறிந்தேன். அந்த ஆண்டிலேயே நான் பயின்ற செங்கற்பட்டுக் கிறித்தவப் பாடசாலையிலும் ஒரு தமிழாசிரியர் பதவி காலியாகி இருந்தது. அதன் தலைமை ஆசிரியர் திரு. 'ஜோப்' என்பவர். ஆண்டர்சன் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. 'ஞானாதிக்கம்' அவர்கள். இப்பள்ளிகளுக்கெல்லாம் நியமனங்கள் ஒரே குழுவினாலேயே நடைபெறும். சில ஆங்கிலேயரும் மூன்று பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் அதில் உறுப்பினர்போலும். எனது நியமனம் பற்றிய பேச்சுத் தொடங்கியதும் 'ஜோப்" என்பார், 'அவன் என் மாணவன், ஆகவே அவனை நானே எடுத்துக் கொள்வேன்’ என வாதிட்டாராம். ஆனால் ஞானாதிக்கம் அவர்கள் 'அவன் என் வட்டத்தைச் (காஞ்சிபுரம்) சேர்ந்தவன்; மேலும் நான்தான் அவனை வரவழைத்து எல்லா ஏற்பாடும் செய்தவன், எனவே நான் விடமாட்டேன்’ என்றாராம். இருவரும் சுமார் பதினைந்து நிமிடம் வாக்கு வாதம் செய்தார்களாம். பிறகு ஆங்கிலேயர் தலையீட்டால் முன்னரே முயன்ற ஞானதிக்கத்தின் சொல் வென்றதாம். இதை இருவரும் பிறகு என்னிடம் சொல்லித் தட்டிக் கொடுத்து வாழ்த்தினர். இருவரும் வயதானவர்கள்-எனவே அவர்களுடைய மகனைப் போன்று இருந்தமையின் இருவரும் என்ன வாழ்த்தினர். காஞ்சியில் உள்ள கிறிஸ்தவப் பள்ளியில் இவ்வாறு முதலாவதாக என் முறையான தமிழ்ப் பணி தொடங்க ஏற்பாடாயிற்று.

நான் அதுவரையில் கிராமத்தில் சாதாரண நிலையில் இருந்தவன். இந்துமத பாடசாலையில் பணியாற்றியபோதும் அது என் வீடெனவே நின்றது. எனவே அதுவரை உத்தியோகத்துக்கெனத் தனி உடையோ பிற ஆடம்பரங்களோ தேவை இல்லாதிருந்தன. சாதாரண 'ஜிப்பா' அணிந்தே  வாழ்ந்து வந்தேன். அக்காலத்தில் ஜிப்பா, கூலி உட்பட எட்டணாவில் அடங்கும். பாடி மூன்றணா. ஒரு வேட்டியும் துண்டும் எட்டணா. எனவே மிக எளிய நிலையிலேயே பலருடைய வாழ்க்கையும் அமைந்தது; என்னுடையதும் அப்படியே. எப்போதும் உடையிலோ பிறவற்றிலோ நான் எளிமையைக் கையாள அன்றே பழகிக்கொண்டேன். எனினும் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்வதால் கோட்டும் சூட்டும் அணிந்து, கிராப் வாரி விட்டுக்கொண்டு செல்ல வேண்டும் என்றனர் அன்பர்கள். அதுவரை குடுமியாண்டியாகயும், ஒட்டவெட்டிய மொட்டையயுைம் இருந்த நான் சில நாட்களில் 'கிராப்பு' சீவி சிங்காரிக்கும் நிலைபெற்றேன். இரண்டு சூட் தைக்க ஏற்பாடு செய்தேன். நல்ல துணியில் ஒரு சூட் முழுவதும் தையல் கூலியுடன் ஐந்து ரூபாய்தான்.

எனவே பள்ளிக்கூட முதல் நாளில் டை கட்டிக் கொண்டு சூட் அணிந்துகொண்டு வாலாஜாபாத்திலிருந்து இரெயில் வழி காஞ்சிக்குப் புறப்பட்டேன். வாலாஜாபாத்தில் உள்ள அனைவரும் என் புதுத் தோற்றத்தைக் கண்டு வியந்தனர். காஞ்சிபுரம் பள்ளியில் காலெடுத்து வைத்து முதலில் தலைமையாசிரியரைக் கண்டேன். அவர் என் தோற்றத்தைக் கண்டு வியந்தார்; போற்றினர். அக்காலத்தில் தமிழாசிரியர் சூட் அணிவதென்றால் அது ஆச்சரியப்படத்தக்க ஒன்று. எனவே என்னை மாணவரும் பிற ஆசிரியர்களும் ஏதோ காட்சிப் பொருளைப் போன்று கண்டு கண்டு சென்றனர். தலைமையாசிரியர் மட்டும் 'அவ்வாறு வருதல்தான் நல்லது' என அறவுரை கூறினர்; முன்னரே அங்கிருந்த வயதான தமிழாசிரியரை எனக்கு அறிமுகப்படுத்தி, அவருடன் செல்லுமாறு பணித்தார். அவரும் என்னை ஆசிரியர் அறைக்கு அழைத்துச் சென்று பிற ஆசிரியர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். நான் நடத்த வேண்டிய பாடங்களைப் பற்றிக் கூறினர். ஓரிருநாள் கழித்து வகுப்பிற்குச் செல்லலாம் என்றார். இவ்வாறு எனது வாழ்க்கைப் பணி-தமிழ்ப் பணி தொடங்கியது.

காஞ்சிவாழ்க்கை ஒருசில ஆண்டுகளே அமைந்தன என்றாலும் பல நூற்றாண்டுகளில் பெறத்தக்க அனுபவங்களை நான் அங்கே பெற்றுவிட்டேன். பின் எனது சென்னை வாழ்வுக்கு அங்கே பெற்ற அனுபவங்கள் எனக்குக் கைகொடுத்து உதவின. என் உடன் இருந்த ஆசிரியர் பலரும் என்னிடம் நன்கு கலந்து பழகினர். அப்படியே என்னிடம் பயின்ற உயர்வகுப்பு மாணவர்களுள் பலரும், நான் வயதில் இளைஞனாக இருந்த காரணத்தால், நெருங்கிப் பழகினர். ஊரில் உள்ள அன்பர் பலரும் என்னிடம் அன்பொடு ப்ழகினர். எனவே நான் காஞ்சியில் பல நல்ல அன்பர்களிடையே வாழ்ந்து வந்தேன். ஓரிரு திங்கள் ஊரிலிருந்தே நாள் தோறும் ரெயிலில் வந்தபோது சோர்வும் பல தடங்கல்களும் உண்டான் காரணத்தால் என் அன்னையர் என்னைக் காஞ்சியிலேயே இருக்குமாறு பணித்தார்கள். அதே வேளையில் மறுமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் அங்கே இருக்கவேண்டும் எனவும் வற்புறுத்தினர். எனது இத்துணை மாற்றங்களுக்கு இடையிலும் எனது மாமியார் வீட்டில் மாற்றமொன்றுமில்லாத வாழ்வினைக் கண்டேன். இரண்டொரு திங்கள் கழித்து, பள்ளிக்கு அருகிலேயே முதலில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டேன். பிறகு என் மாணவ நண்பர் ஒருவர் வழியே வேறு நல்ல இடமாக அவர்கண்ட ஓரிடத்துக்கு மாற்றிக்கொண்டேன். அங்கே அந்த ஆண்டு எல்லைவரை--சுமார் ஐந்தாறு திங்கள் இருந்தேன். அதற்குள் மறுமண ஏற்பாடுகள் நடை பெற்றன.

பள்ளியில் பல நல்லாசிரியர்கள் இருந்தனர். உயர் வகுப்புகளை எடுத்த திருவாளர்கள் பாக்கியநாதன், பால் ஜோசப், எட்வட்சாமுவேல், அதிசயம் போன்றோர் அனுபவ மிக்க நல்லாசிரியர்களாய் இருந்தனர். அப்படியே இடை நிலை வகுப்புக்களில் மத்தேயு, சாலமன், ராஜமணிச் செல்லையா போன்ற பலரும் எனக்கு நன்கு அறிமுகமாயினர். அவர்களுள் சிலர் தமிழ் பயிலவேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்தனர். அந்த நாட்கள் தமிழுக்கு மலர்ச்சி உண்டாகத் தொடங்கிய காலம். எனவே பலர் பள்ளியிலும் வெளியிலும் தமிழ் பயில வேண்டுமென ஆர்வத்தோடு வந்தனர். ஏழெட்டு அன்பர்கள்—பிள்ளை பாளையத்திலிருந்தும் பிறவிடங்களிலிருந்தும் நான் தங்கியிருந்த இடத்துக்கு வந்து தமிழ் பயின்றனர். பள்ளியிலும் பல ஆசிரியர்கள் தனியாகத் தமிழ் பயின்றனர். மாணவருள் சிலரும் திருக்குறள் போன்றவற்றைத் தனியாக மாலைவேளையில் என்னிடம் பயின்றனர். நானும் மற்றவர்களுக்கு விளக்கிச் சொல்லும் பேராற்றல் பெற்றவன் அல்லனாயினும், பல நூல்களைப் பயின்று, பொருள்கண்டு, கூடியவரை அவர்கள் வெறுக்கா அளவில் பாடல்களைச் சொல்லிக்கொண்டு வந்தேன்.

அதுபோது காஞ்சியில் என் உள்ளம் கலந்த சில பெரியவர்களைப்பற்றி எண்ணவேண்டியுள்ளது. அவருள் பெரும்பாலோர் இன்னும் வாழ்கின்றனர். அவர்களுள் ஒரு சிலர் என் உள்ளத்தில் நிலைத்த இடத்தைப் பெற்றுள்ளனர். இரட்டை மண்டபத்தை அடுத்துள்ள மாளிகையில் காலை 6 மணிக்கே மூழ்கி, நீறு அணிந்து, ஒளி பொருந்திய முகப் பொலிவுடன் தம் ஆசனத்தில் உட்கார்ந்து வருவார்க்கெல்லாம் வழிகாட்டியாக நிற்கும் விசுவநாத ஐயர் அவர்தம் வாழ்வும் போக்கும் என்னைக் கவர்ந்தன. கோடையிலும் குளிரிலும் எந்த நாளிலும் நேரந் தவறாது அன்று நான் கண்டமை போன்றே இன்றும் ஆங்கே உட்கார்ந்து வருவார்க்கு வழிகாட்டுகின்றனர். அவர் வழக்கறிஞர்-எனினும் நேரிய பண்பாளர், உண்மையாக நேரிய வழக்குகளுக்கே வாதிடுவர், கூடியவரை இருவரையும் ஒற்றுமைப் படுத்தவே அவர் உள்ளம் விரும்பும். அவர் மாலை வேளைகளிலும் குறித்த நேரம் தவறாது, ‘டென்னிஸ்’ ஆடச் செல்வது காண்பதும் சிறந்ததாகும். அவருடைய பிள்ளைகளில் சிலர் என்னிடம் பயின்றனர்.

கச்சபேச்சுரர் ஆலயத்துக்கு அடுத்து, அரிய மருத்துவத் தொண்டு செய்துவரும் ஆத்மானந்த அடிகளார் என் உள்ளங்கலந்த பெரியராவர், ஏழைகளுக்கெல்லாம் இலவச மருத்துவம் செய்தும், பலவகையில் மக்களுக்கு உதவியும் நின்ற உண்மைத் துறவியார் அவர். என்றும் கடுத்த முகமே காட்டி அறியாது அமைதியாகப் பேசும் அறிவும் பொலிவும் கூடிய முகத்தோற்றத்துடன் அவர் விளங்குவர். இன்று தளர்ந்த நிலையிலும் அவர் தோற்றத்தில் அந்த ஆக்கப் பொலிவைக் காணமுடியும். இவர்களையன்றி இன்னும் எண்ணற்ற அன்பர்கள் என் கண்முன் நிழலிடுகிறார்கள். அவர்களைப்பற்றியெல்லாம் ஈண்டு எழுதின் காலமும் எல்லையும் கணக்கிடாது நீளும். அவ்வப்போது பின்வரும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப சிற்சிலரை ஆங்காங்கே காட்டி அமையலாம் என எண்ணுகிறேன். ஓராண்டில் பல பொதுக்கூட்டங்களிலும் பேசினேன். ஆக, காஞ்சியில் என் முதலாண்டு பலனுள்ளதாக, நல்லவர் பலரை உற்றாராகப் பெறும் வகையில் அமைந்து என் வாழ்வுக்கு வழிகோலியது என்பது பொருந்தும்.

காலம் நமக்கென நிற்காது ஓடிக்கொண்டிருக்கிறது; அப்படியேதான் கடிமணமும் போலும், நான் வேண்டாம் என்று தள்ளிக்கொண்டே வந்த மறுமணம் முடியும் நாளும் வந்துவிட்டது. எந்த வகையிலும் எனது மாமியார் வீட்டார் என் வாழ்வை மலரவைக்க விரும்பவில்லை என அறிந்ததாலும் வேறு பிற சூழல்களாலும் நான் மறுமணத்துக்கு இசைய வேண்டிய நிலை உண்டாயிற்று. முன்னைய நிகழ்ச்சிகளால் நான் மறுமணம் செய்துகொள்வதிலும் துறவியாவதிலும் அவர்கள் வருந்தவில்லை என்பதை அறிந்த பிறகும், அன்னையும் பிறரும் வேண்டிய நிலையிலும் நான்வேறு என்ன செய்ய முடியும்? மேலும் ஓரிரு சூழ்நிலைகளும் அதற்குக் காரணமாக அமைந்தன.

நான் இருபத்தைந்து வயது நிரம்பிய வாலிபன். எனினும் பலர் என்னிடம் தனியாகவும் வீட்டிற்கு வந்தும் பாடம் பயின்றார்கள்கள் என்றேன். அவருள் உயர் வகுப்பில் பயிலும் இரண்டொரு மணவியரும் இருந்தனர். அவர்கள் அவ்வாறு வந்து பயிலும் போது, எங்கள் ஊரில் எங்கள் தெருவில் இருந்து ஒருவர் என்னைக் காணவந்தார். அவர் அந்தப் பெண்களைப் பார்த்ததும் என்ன எண்ணினாரோ! நேரே ஊருக்குச் சென்று ‘நான் கெட்டுவிட்டேன்’ என்று என் அன்னையிடமே கூறிவிட்டார். அவர் தனக்கென இருக்கும் மனைவியைவிட்டு, பிறர் மனைவியர் மேல் மனம் வைத்துச் சுற்றித் திரிபவர். வயது ஐம்பதுக்கு மேலாகியும் அந்த வாழ்வில் இன்பம் கண்டவர். என் அன்னையார் அவர் சொல்லை அப்படியே நம்பாவிடினும் நான் போன போது கண்டித்தார்கள். நான் ‘அவரவர் புத்தி அவருக்கு’ என்று கோள் சொல்லியவரைப் பற்றிக் குறிப்பாகக் காட்டினேன். என் அன்னையாரும் உடனே அவரிடம் நான் சொல்லியதைச் சொல்விவிட்டார்கள். அது முதல் அவர் இறக்கும் வரையில், என்னிடம் மரியாதையாகவே நடந்து கொண்டார் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.

நிற்க, இந்த நிகழ்ச்சியும் செயலும் என் அன்னையார் உள்ளத்தில் புது வேகத்தை உண்டாக்கிவிட்டது. நான் ஒருவேளை மறுபடியும் உண்மையிலேயே வேறு யாராவது பெண்ணை மணம் செய்துகொள்வேனோ என அஞ்சினார்கள். முன்னமே ‘காஞ்சி’க்கு அனுப்ப அஞ்சிய அன்னையார் இதற்குப்பின் வெகு வேகமாக எனக்கு மணம் செய்து வைப்பதில் முயன்றார்.

அதற்கேற்ப, காஞ்சியிலும் என் மாணவ நண்பர் ஒருவர் போக்கு என்னைத் திகைக்க வைத்தது. அவர் தற்போது இல்லை. படிப்பு முடியும் முன்பே மறைந்துவிட்டார். ஒன்பதாம் வகுப்பில் பயிலும்போதே அவருக்கு இருபதுக்கு மேல் வயது இருக்கும். அவருக்கு ஏற்ப நான் தங்கியிருந்த வீட்டில் ஒருவர் அவருக்கு உறவானார் போலும், என்னொடு எனக்குத் துணையாக இருந்த அந்த மாணவர், அவருக்கும் துணையானார் போலும். அதை ஓரளவு மறைமுகமாக கண்டிக்கும் போது, அவர் என்னையும் அவருக்கு உறவாக்க முயல்வாரோ என்ற ஐயம் பிறந்தது. தனிமையில் வாழ்வதில் இத்தனைச் சங்கடங்கள் இருக்கின்றதென்பதை அப்போது தான் நான் அறிந்தேன். எனவே அன்னையார் ஏற்பாடு செய்த மணமுயற்சிக்கு இணங்கினேன். மேலும் ஊரில் இருந்த என் அன்னையாரும் பெரிய அன்னையாரும் தனித் தனியாகச் சமையல் செய்துகொண்டு, தனித்தனியாகப் பக்கத்தில் பக்கத்தில் வாழ்ந்த நிலை எனக்கு வருத்தத்தைத் தந்தது. இருவரும் உடன்பிறந்தவர்களாக இருந்தும், ஏன் ஒன்றாகவே சமைத்து உண்ணக்கூடாது என்று பலமுறை கேட்பதுண்டு. அவரவர் போக்கு அப்படி என்று ஆறுதல் பெறுவதும் உண்டு. மணம் செய்து கொண்டு, காஞ்சியில் வாழ்க்கை தொடங்கினால் பெரும்பாலும் பெரியம்மா அவர்கள் என்னொடு காஞ்சிபுரம் வந்துவிடுவார்கள் என்ற நிலையிருந்ததால் அதன்பிறகு அத்தகைய குழப்பம் உண்டாகாது என்று எண்ணியும் இசைந்தேன். நான் இரு குடிக்கும் ஒருமகனாக நின்றமையின் அக்குடிவளர மணம் செய்து கொண்டு இல்லறம் ஏற்கவேண்டுமென்றனர் பலர்; அதனாலும் இசைந்தேன். என் இசைவினை அறிந்தபின் அன்னை யார் இருவரும் ஏற்பாட்டிற்கு முனைந்தனர். உறவினர் ஒருவரின் மகளையே மணம் பேசினர். அவர்களையே முன்னரே எனக்கு மணம் முடிக்க இருந்தார்களென்றும் எனது விருப்பப்படிதான் வேறு இடத்தில் முந்திய மணம் முடிந்ததென்றும் பிறகு அறிந்தேன். இந்த மண ஏற்பாட்டிலும் ‘அவர்கள்’ சிறிதும் மனம் வருந்தியதாகவோ மாறுபட்டதாகவோ காணவில்லை. எனவே எனது அன்னையர் முடிவே சரியென அனைவரும் கூறினர். அவர்கள் அனை வரும் முன்னின்று மணத்தை ஏற்பாடு செய்தனர். எனது சாதகக் குறிப்பிலும் அதுபற்றிக் குறித்திருந்தது. எனவே அனைவர் விருப்பினை ஏற்றும், குடிநலம் புரக்கக் கருதியும் மணத்துக்கு இசைந்தேன். ஆம்! அந்த மணமும் நல்ல வேளையில் நடைபெற்றது.

மணம் நடந்த அதேவேளையில் அந்த ஊரில் ஒருவீட்டில் ஓர் ஆண்மகவு பிறந்தது. அதன் தந்தை என்னிடம் ஈடுபாடு கொண்டமையாலோ ஏனோ அத்குழந்தைக்கு என் பெயரையே இட்டார். இது நெடுநாட்களுக்குப் பிறகே எனக்குத் தெரிந்தது. அவரோ மற்றவரோ அப்பெயர் பற்றி எனக்குக் கூறவில்லை. ஆயினும் சில ஆண்டுகள் கழித்து என் பெயரைப் பற்றிய ஆராய்ச்சி உக்கலில் வேடிக்கையாக நடைபெற்றபோது, அந்த உண்மை வெளியாயிற்று. என் பெயர் எங்கும் வேறுயாருக்கும் கிடையாது என வாதிட்டேன் நான். ‘பரமசிவம்’ ‘சிவானந்தம்’ ‘பரமானந்தழ்’ ‘ஆனந்தம்’ போன்று பலபெயர்கள் இருக்கலாம் என்றாலும், ‘பரமசிவானந்தம்’ என்ற முழுப்பெயர் யாருக்கும் கிடையாது என்றேன். அந்தப் பிள்ளையினுடைய தந்தையாரும் உடன் உட்கார்ந்திருந்தார். அவர் அமைதியாகத் சூழ் மகனுக்கும் அப்பெயரிட்டிருப்பதையும் காரணத்தையும் காட்டினார். எனது மணம் நடந்த அதேவேளையில் பிறந்தமையாலும் இளமையிலேயே தன் முயற்சியால் நான் முன்னுக்கு வந்துள்ளதாக அவர் கருதியமையாலும் அப் பெயரை இட்டமையைக் கூறினார். நான் என்னை இவ்வளவு பின்பற்றக் கூடியவர்களும் உளரா என வியந்தேன். மேலும் அவர் அப்போதே என்னை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அப்பிள்ளையைக்காட்டி என்னை வாழ்த்துமாறு பணித்தார். நானும் உளமார வாழ்த்தினேன். அவர்— அந்தப் பரமசிவானந்தம் — தற்போது வடஆற்காடு மாவட் டத்தில் ஆசிரியப் பயிற்சிபெற்று ஒருபள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் என அறிகிறேன்.

பழங்கால மணமுறைப்படி எனது திருமணம் நடந்தது. மணம் நடைபெற்ற மறுநாள் வேடிக்கையாகப் பிள்ளை பெண்ணுக்கும் பெண் பிள்ளைக்கும் ‘நலங்கு’ வைத்தல் மரபு. அப்படியே எனக்கும் நடைபெற்றது. ஆனால் எதிர்பாராத வகையில் சடங்குகளில் ஒன்றாகிய ‘அப்பளம் தட்டும்’ நிகழ்ச்சியில் நான் அதிர்ந்துபோனேன். அப்பளத்தை வெறுங்கையில் தட்டுவதற்குப் பதில், அதை என் கன்னத்தில் ஓங்கித்தட்டி அறைய அதிர்ந்தேன். உடனே எழுந்து அப்படியே ஓடிவிடலாமா என்று எண்ணினேன். நான் முன்னரே மணமானவன் ஆனமையின் அந்தப் பெண் என்மேல் காட்டிய வெறுப்போ அந்த அடியென நினைத்தேன். அன்றி முன்னவர்போன்று இவளும் வேறு யாரையாவது மணக்க நினைத்து நான் குறுக்கிட்டமையால் கொண்ட கோபத்தின் பயனோ அது என எண்ணினேன். பிற சடங்குகள் எப்படியோ நடைபெற்றது. எனக்கு மட்டும் அதன் காரணத்தை அறிந்துகொள்ள அவா உண்டாயிற்று. அக்காலத்தில் மணமான உடனே கைகோத்துப் பேசும் வழக்கம் இல்லை—இருந்தால் கேட்டிருப்பேன். பிறகு நேரில் கேட்கவேண்டிய காலத்தில்—நேரம் நேர்த்த நாளில் அது பற்றி விளக்கம் கேட்டேன். முன்னரே எனக்கு அந்தப் பெண்ணைக் கொடுக்க அவர்தம் பெற்றோர் இசைந்ததாகவும் அவளும் மனமுவந்ததாகவும் என் பெற்றோருக்கும் அது ஏற்றதாக இருந்ததாகவும், அவ்வளவு இருந்தும் நான் வேறு திசையில் சென்றதால் அது தடைப்பட்டு, நான் முன், வேறு மணம் செய்ய நேர்ந்ததாகவும் கூறி, அக்கோபமே அந்தச் செயலாக உருவெடுத்ததெனக் காட்டி, மன்னிப்பு வேண்டிய நிலையில் உண்மை உணர்ந்து உளம் தேறினேன். அடுத்த ஆண்டு வாழ்வு— காஞ்சியில் இரண்டாம் ஆண்டு வாழ்வு-எனது இல்லற வாழ்வாகத் தொடங்கிற்று. எனது பெரிய அன்னையாரும் உடன்வந்து எங்களோடு எங்கட்கு உதவியாக இருந்தனர்.

எனது இல்லறவாழ்வு காஞ்சி அரசவீதியில் ஒரு வீட்டில் தொடங்கியது. நான் குடிசென்ற பிறகுதான் அந்த வீட்டின் சிறப்பை உணர்ந்தேன். ‘கச்சி உலா’ வில் அதன் ஆசிரியர், இறைவன் உலாவரும் தன்மையைக் கூறிக் கொண்டு வருகின்றபோது, இறைவனாம் ஏகம்பன் மாடவீதிகள் மூன்றைக் கடந்து பின், கச்சபாலயம் கடந்து, கம்பன் வீடு தாண்டி, குமரகோட்டம் தாண்டிச் சென்றதாகக் குறிக்கின்றார். ஆகவே கம்பன் வாழ்ந்த வீடு காஞ்சிபுரம் அரச வீதியில் கச்சபாலயத்துக்கும் குமர கோட்டத்துக்கும் இடை யில் இருந்தது என்பது தேற்றம், அக் “கம்பன்” என்ற பெயரே ‘ஏகம்பன்’ என்ற காஞ்சியிற்கடவுள் பெயரின் முதற் குறை என்றுதானே அறிஞர் காட்டுவர். எனவே கம்பர் காஞ்சியில் வாழ்ந்தார் என்று கொள்வதில் தவறு இல்லை. ‘கற்றார் வாழ் காஞ்சி’ 'கம்பர் வாழ்ந்ததால் பெருமையுற்றிருக்குமன்றோ ! ஆம்! ஆனால் அவர் எந்த வீட்டில் வாழ்ந்தார்? அதைத்தான் உலா உணர்த்துகின்றது. அவர் வழிபாடாற்றிய கலைமகளும் இன்னும் அங்கேயே இருக்கிறது. தெருவின் மேலண்டை வாடையில் உயர்ந்து வளர்ந்த வேப்பமரத்தின் அடியில் அக்கலைமகள் வீற்றிருக்கிறாள். இன்றும் பலர் அவருக்கு வழிபாடாற்றுகின்றனர்.

கம்பர் அக்கலைமகளை வழிபட்டுக்கொண்டு அந்த வீட்டிலேயே குடி இருந்தார் என்று அறிஞர் கூறினர். அது எந்த வீடு? ஆம்! நான் குடியிருந்த வீடே அது. அந்த வீட்டின் வாயிலிலேயே அக்கலைமகள் வேம்பின் அடியில் காட்சி தருகிறாள். இன்றும் எப்போதாவது அந்தப்பக்கம் செல்வேனாயின் என்னையுமறியாது என் கரங்கள் அத்தெய்வத்துக்கு அஞ்சலிசெய்யும்–மனம் வழிபாடாற்றும். அன்றுதொட்டு நான் எங்கே குடிபோனாலும் சொந்த வீடு கட்டினாலும் வீட்டின் புறத்தே வேம்பினை நட்டு வளர்த்து வருகிறேன். அதன்கீழ் உள்ள கலைமகள் எனக்குத் தோன்றாத் துணையாய் அமைகிறாள் என நம்புகிறேன்.

நான் அரச வீதியில் தங்கிய ஞான்று எனக்குப் பல புதிய அன்பர்கள் நண்பராயினர், பச்சையப்பர் உயர் நிலைப் பள்ளியில் பணியாற்றிய திரு. துரைசாமி ஐயர் என்பார் அவருள் ஒருவர், அவர்தம் காலங்கடவாக் கடப்பாடும், பழகும் முறையும் பண்பும் என் உள்ளங்கவர்ந்தன. காஞ்சியில் நெடுங்காலம் பொதுப்பணி செய்து சிறந்த பரமசிவ முதலியாரும், அவர் மகனார் கலியாணசுந்தரனாரும் எனக்கு அறிமுகமாயினர். முன்னரே வாலாஜாபாத் வா. தி. மா. அவர்களால் அறிமுகமான கச்சபாலய முதலியார் நெருங்கிய அன்பரானார். அவரே நான் முதல் முதல் உபயோகப்படுத்த சிறு நாற்காலியும் மேஜையும் செய்து தந்தார். அம் மேசையை நான் இன்னும் சென்னையில் பயன்படுத்தி வருகிறேன். நான் பணியாற்றிய ஆண்டர்சன் பள்ளித் தலைமை எழுத்தர் திரு. தேவராச முதலியார் என்பவர் அந்தப்பக்கத்தில் வாழ்ந்தவர்தாம். அவர் அடிக்கடி வீட்டிற்குவந்து வேண்டிய உதவிகளைச் செய்வார். அவருடன் பள்ளியிலும் நல்ல பயனுள்ள பல பணிகளைச் செய்ய முடிந்தது. ஆண்டு தோறும் பள்ளி ஆண்டுவிழாவில் அவரது முயற்சியால் நாடகங்கள் நடைபெறும், அடுத்த வீட்டிலிருந்த ‘இராசம் செட்டி & சன்ஸ்’ உடன் பிறந்தார் எனக்கு உற்றுழி உதவினர். இன்னும் உதவிய அன்பரும் மாணவரும் பிறரும் பலர். அத்துணை நல்லவர்களோடு நான் காஞ்சியில் ஒருசில ஆண்டுகளே பணியாற்றினேன் என்றாலும் அக் காஞ்சி வாழ்வு என் நாட்களில் என்றும் ஒளிவிடும் தொடக்க நல்வாழ்வாக அமைந்துவிட்டது.