காஞ்சி வாழ்க்கை/அரசியல் அலைகள்—தேர்தலும் தெளிதலும்

விக்கிமூலம் இலிருந்து
6. அரசியல் அலைகள்:-
தேர்தலும் தெளிதலும்

நான் காஞ்சியில் வாழ்ந்திருந்த காலம் ஓர் அரசியல் மாற்றக் காலம். ஆங்கிலேயர் மக்களுக்கு ஓரளவு சுய ஆட்சி நல்கி ஆங்காங்கே தேர்தல் நடத்தி, சட்டசபைகளை அமைத்து, அமைச்சர்களைத் தேர்ந்தெடுத்த காலம். இந்தியா முழுவதிலும் அந்தக் கொந்தளிப்பும் தேர்தல் ஆரவாரமும் நிறைந்திருந்தன. நான் செங்கற்பட்டுப் பள்ளியில் பயின்றிருந்த காலத்தில் என் ‘இளமையின் நினைவில்’ குறித்தபடி, ஒருபுடை அரசியலிலும் மேல்போக்காகப் பங்கு கொண்டிருந்தேனாயினும் பிறகு அதில் தலையிடவில்லை. எனி னும் காஞ்சி வாழ்க்கை என்னைத் தலையிட வைத்துவிட்டது.

தமிழகத்தில் எங்கும் தேர்தல் முழக்கம். காங்கிரஸ் நாடெங்கும் பெருவெற்றி பெற்றமை போன்றே இங்கும் பெற்றது, அதன்பயனாக திரு. ச. இராசகோபாலாச்சாரியார் அவர்கள் ‘சென்னை மாநிலத்தின்’ முதலமைச்சரானார். பல ஆந்திரர்களும் கன்னட மலையாள நண்பர்களும் அந்த அமைச்சரவையில் பங்குகொண்டிருந்தனர். மொழி வழி மாநிலம் பிரியாத அந்தக் காலத்தில் எல்லா மொழியினரும் ஆட்சியில் பங்குகொண்டிருந்தனர். அந்தக் காலத்தில் தமிழைப் பற்றி அதிகமாகப் பேசுவோரும் எழுதுவோரும் சிலர். ஆங்கிலத்தில் பேசினால் சிறப்பு–இந்தி பயின்றால் ஏற்றம்–சமஸ்கிருதம் கற்றால் சிறப்பு என்றெல்லாம் சிலர் எண்ணிக்கொண்டு செயலாற்றிய காலம் அது. எனவே முதலமைச்சர் பதவி ஏற்ற ஆச்சாரியார் தமிழ் நாட்டிலும் பிற சென்னை மாநிலப் பகுதிகளிலும் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினர். ஒவ்வொருவரும் இந்தி படித்தாலன்றி வாழ்வில்லை என்ற நிலையை உண்டாக்கிவிட்டார் அவர். இன்று அவர் பேசுவதையும் எழுதுவதையும் அறிபவர் அன்றைய அவர் செயலைக் கேட்டால் கொதிப்பர். நாடு முழுவதும் கிளர்த்து எழுந்தது. ‘இந்தி எதிர்ப்புப் போர்’ தமிழ்நாட்டில் வீறுகொண்டு நடைபெற்றது. பெரியார் அதில் முன்னணியில் இருந்தார். இன்றைய அமைச்சர் பலர் பிறவாத அந்த நாளில்—தமிழ் முழக்கம் செய்யும் நல்லவர் காணாத அந்த நாளில், ஆச்சாரியார் செயலுக்கு உள்ளாகி அல்லலுற்றார் பலர், காஞ்சியிலும் அத்தகைய கிளர்ச்சி எழுந்தது. பல கூட்டங்கள் நடைபெற்றன. நானும் பலவற்றில் பேசினேன். சிலவற்றில் தலைமை வகித்தேன். அதுபோது காஞ்சி நகரசபை காங்கிரஸ் ஆதிக்கத்தில்—திரு. டாக்டர் சீனிவாசன் அவர்கள் தலைமையில் இயங்கிற்று என எண்ணுகிறேன். நான் இந்தி எதிர்ப்புக் கூட்டத்திற்குத் தலைமை வகித்ததை அவர் பெருங்குற்றமாகக் கருதினார். படிக்கும் காலத்தில் நான் காங்கிரஸ் சார்பில் இருந்து, காந்தி அடிகள் தண்டி உப்புச் சத்தியாக்கிரகத்தின்போது செங்கற்பட்டில் பல கூட்டங்கள் நடத்தினேன். எனினும் பிறகு நான் அரசியலில் அதிகமான பங்குகொள்ளவில்லையானாலும் காங்கிரஸ் சார்பிலேயே இருந்தேன். அக்காலத்தில் நன்கு தெளிந்த, பொதுமக்களொடு தொடர்பு கொண்ட வேறு கட்சிகள் இல்லையாதலால் நான் மட்டுமின்றிப் பலரும் அவ் வண்ணமே இருந்தனர். எனினும் எதிலும் தீவிரமாகப் பங்கு கொள்ளவில்லை. இந்தி நுழையத் தொடங்கிய காரணத்தால், அந்த அடிப்படையில் அதைப் புகுத்திய கட்சிக்கு எதிராக நான் பல கூட்டங்களிலும் மாநாடுகளிலும் கலந்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால் அந்தப் பங்குகொள்ளும் நிலை காஞ்சியில் வாழ்ந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு–சிறப்பாக டாக்டர் சீனிவாசன் அவர்களுக்கு என்பேரில் வெறுப்புகொள்ளக் காரணமாயிற்று. அக் காலத்தில் அவர் சிறந்த மருத்துவராக இருந்ததோடு, நகர சபைத் தலைவராகவும், நிறைந்த செல்வாக்கு உடையவராகவும் இருந்தார். மேலும் அவர் அத்தொகுதி எம், எல். ஏ. வாகவும் இருந்தார் என எண்ணுகிறேன். எனவே அவரது சொல்லை மேலுள்ள இராசகோபாலாச்சாரி முதல் யாவரும் கேட்டனர். எனினும் நான் தனியார் பள்ளியில் பணியாற்றியமையால் என்னை அவர்கள் ஒன்றும் செய்ய இயலவில்லை.

ஒருநாள் ஒரு கூட்டத்தில் (வைகுண்ட பெருமாள் கோயில் அருகில் என எண்ணுகிறேன்) நான் தலைமை வகித்துப் பேசினேன். எனது நண்பர் மாகறல் திருநாவுக்கரசு என்பவர் என்னைத் தேடிக்கொண்டுவந்து, வீட்டில் நான் கூட்டத்துக்குப் போயிருந்ததைக்கூற, அங்கே வந்து வெளியே நின்று கொண்டிருந்தார். அவர் காஞ்சி நகராட்சியில் ஆசிரியப் பணிபுரிந்து வந்தார். கூட்டம் முடிந்ததும் அவரும் நானும் பேசிக்கொண்டே போனோம். அதற்குப் பிறகு ஒருசில நாட்களில் நகராட்சி ஆணையர்களிடமிருந்து அவர் ‘இந்தி எதிர்ப்பு’க் கூட்டத்தில் கலந்து கொண்டது தவறு என்றும் அவர்மேல் நடவடிக்கை எடுக்கப்பெறும் என்றும் கடிதம் வந்தது. அவர் சற்றும் அஞ்சவில்லை. எனினும் உத்தியோகம் அல்லவா! மேல் உள்ளவரிடம் வாதாடினார்–எழுதிக் காட்டினார். மேலதிகாரிகளுக்கு விண்ணப்பம் செய்தார். முடிவில் அவருக்கு ஓராண்டு உயர்வு ஊதியம் நிறுத்தப்பட்டேவிட்டது. கூட்டம் பற்றி எண்ணமே இல்லாது என்னைத் தேடிவந்த அவருக்கு வெளியில் நின்றிருந்தவருக்கு இந்தத் தண்டனை–ஆனால் அந்த அதிகாரி களால் என்னை ஒன்றும் செய்யமுடியவில்லை, காரணம் என் நிலை அன்று அப்படி.

திருநாவுக்கரசு அவர்களை நினைத்தபோது மற்றொன்றும் நினைவுக்கு வருகின்றது. அவரும் நானும் எப்போதும் இணைந்தே இருப்போம். எங்கள் இருவருக்கும் உரிய நண்பர் ஒருவர் ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு இவரை அழைத்துக் கொண்டு வந்தார். அப்போது அவர் பஞ்சாயத்து பார்வை  பார்வையாளராக இருந்தார். அங்கம்பாக்கம் பஞ்சாயத்தைப் பார்வையிட வேண்டும் என்றும் நாங்களும் உடன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நானும் ஊர் செல்வதற்கு மகிழ்ந்தேன். இரவில் எல்லாவற்றையும் முடித்துவிட்டு மறுநாள் காலை பள்ளிக்குத் திரும்பிவிடலாம் என்று எண்ணிப் புறப்பட்டோம், பெரிய அன்னையாரிடம் சொல்லிவிட்டு ஊருக்குச் சென்றோம். ஊரில் எனது அன்னைமார் எங்களுக்கு உணவு ஆக்கிப் படைத்தார்கள். ஊர்க் கோயிலில் பஞ்சாயத்துக் கணக்கெல்லாம் பார்த்துவிட்டு, அப்படியே கோயிலில் இறைவனை வணங்கிவிட்டு, இரவு வீட்டிற்கு வந்து உணவுண்டு படுத்துக்கொண்டோம்.

எங்கள் பேச்சு பலவகையில் சென்றது. பஞ்சாயத்துப் பணிசெய்யும் நண்பர் அத்துறையில் வளர்ச்சிக்கு வழி இல்லை எனவும் கல்வித்துறையில் சென்றால் முன்னேறலாம் எனவும், ஆனால் அந்த ஆண்டு ஆசிரியப் பயிற்சிக்கு விண்ணப்பம் செய்யவில்லை எனவும் அடுத்த ஆண்டு விண்ணப்பம் செய்து சேர்வதற்குள் எத்தனையோ மாற்றங்கள் வந்து தன் முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டையாகலாம் எனவும் கூறினார். எனக்கு அப்போது ஒருவர் நினைவில் தோன்றினார். எங்கள் ஊரை அடுத்த நெய்க்குப்பத்தில் பிறந்து நிலநூல் பேராசிரியராகி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றிய திரு. சுப்பிரமணிய ஐயர் என்ன நன்கு அறிவார். எங்களுக்கும் அந்த ஊரில் நிலம் இருந்தமையின் பலவகையில் எங்களுக்குள் கொடுக்கல் வாங்கல் முதல் நல்ல வகையில் உறவு இருந்தது. அப்போது சூலை இறுதி அல்லது ஆகஸ்டு முதல் என எண்ணுகிறேன். அவரால் ஏதாவது செய்யக்கூடுமானல் நான் நண்பரை அழைத்துச் செல்வதாகக் கூறினேன். ஆயினும் நண்பர் பாடம் வேறுபட்டது என்றும் நிலநூல் தரமாட்டார்கள் என்றும் தயங்கினர். நான் ஐயர் அவர்கள் எல்லாம் வல்லவர் ஒன்றும் என்பொருட்டு எதையும் செய்வார் என்றும் முயற்சியில் கெடுதல் இல்லை என்றும் மறுநாட்காலையிலேயே செல்லலாம் என்றும் சொன்னேன். வற்றிய. வரண்ட காட்டில் முற்றிய மழை பெய்ததென அவர் மகிழ்ந்தார். காலையில் என் பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை கடிதம் எழுதித் திருநாவுக்கரசு அவர்கள் வழியே அனுப்பிவிட்டு நான் இரெயிலில் நண்பருடன் சைதாப்பேட்டைப் பயிற்சிக் கல்லூரிக்கு வந்து சேர்ந்தேன்.

அப்போது மணி 10க்கு மேலாகி இருந்தது, திரு. ஐயர் அவர்கள் பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். நாங்கள் அவர் அறையில் காத்துக்கொண்டிருந்தோம். வகுப்பு முடிந்ததும் வந்தார். உலகம் சுற்றிப் புகழ்பெற்ற அந்த ஐயர் அவர்கள் என்னிடம் காட்டிய, பரிவு மறக்கற் பால தன்று. ‘எங்கே வந்தாய்?’ என்று கேட்டார், நான் எல்லாவற்றையும் கூறி அவர் விண்ணப்பம் செய்யாததையும் விளக்கினேன். அவர் அதை யெல்லாம் பொருட்படுத்தாது, ‘நீ ஏன் இதற்காக இவ்வளவு தூரம் வந்தாய்? இவரிடமே கடிதம் அனுப்பியிருந்தால் போதாதா ? நான் இவனை நிலநூல் பிரிவில் சேர்த்துக்கொள்கிறேன்’ என்று என்னிடம் கூறி, ‘உனக்குச் சம்மதமா?’ என்று அவரைக் கேட்டார். அவரும் ‘சரி’ எனத் தலையாட்டினார். உடனே ஐயர் அவர்கள் இவன் இங்கேயே இருக்கட்டும், நான் அடுத்த வகுப்பை முடித்து வந்து ஏற்பாடு செய்து கொள்ளுகிறேன், நீ போகலாம். என்று கூறிவிட்டு அடுத்த வகுப்பிற்குச் சென்றுவிட்டார். நான் நண்பரை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். வழிநெடுக அந்த அந்தணாளர் தம் அன்பையும் பண்பையும் பரிவையும் தெளிவையும் எண்ணி எண்ணி வியந்தபடியே நின்றேன். நண்பரும் பிறகு நிலநூற்பிரிவில் இடம் பெற்று அந்த ஆண்டிலேயே ஆசிரியப் பயிற்சியை முடித்து வெற்றி பெற்று அரசாங்கக் கல்வித்துறையில் பணி ஏற்றார். பிறகு அவர் தம் உழைப்பாலும் முயற்சியாலும் தமிழகக் கல்வித்துறையில் மிக உயர்ந்ததாகிய பதவியினையும் அடைந்தார். அவர் உயர்வை எண்ணி எண்ணி நான் மகிழ்ந்த காலமெல்லாம் பலப்பல. ஆயினும் அவர் உயர்ந்த பதவியில் இருந்தகாலை என்னிடம் மாறுபட்டு எனக்கு ஓர் தீங்கிழைத்தார் எனப் பிறர் எண்ணுமாறு ஒரு காரியம் செய்தார். ஆனால் என் வரையில் அவர் செய்த அந்தச் செயல் எனக்கு நன்மையாகவே முடித்தது. அவர் மட்டும் அன்று அதைச் செய்யாதிருந்திருப்பாரானால் இன்று என் மக்கள் வாழும் நல்வாழ்வினை எல்லாம் நான் காணமுடியாது. அவர்கள் எந்தெந்த நிலையிலோ சென்றிருப்பார்கள்—நானும் எப்படி இருந்திருப்பேன் என்று சொல்லமுடியாது. ஆகவே அவரிடம் நான் மாறுபட்டது இல்லை. மாறாக அதற்குப் பிறகு அவரைப் பாராட்டிப் போற்றியே வருகிறேன். இவை பற்றிப் பின் சென்னை வாழ்வைப் பற்றி எழுதும் போது விளக்கமாக எழுதுவேன்.

அரசியல் அலை வீசுவது பற்றியன்றோ பார்த்துக் கொண்டு வந்தோம். இடையில் திருநாவுக்கரசர் நம்மை வேறு எங்கோ ஈர்த்துச் சென்றார். சென்னை சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற்று அமைச்சர் அவை அமைந்த பிறகு நாட்டின் மாவட்டக் கழகங்கள் நகராட்சி மன்றங்களின் தேர்தல்களை நடத்தத் தொடங்கினர். அந்த அரசியல் சூழலில் சிக்கிய நானும் செங்கற்பட்டு மாவட்டத் தேர்தலில் போட்டியிட நினைத்தேன். எனினும் அவ்வளவு தீவிரமாக வேலைசெய்யவில்லை. எனது பள்ளியின் தலைவரோ, அரசாங்கம் தடுத்தாலும் நான் நிற்பதற்கு இசைவு தருவதாகக் கூறினார். அவருக்கு மேலுள்ள ஆங்கில நாட்டுச் செயலாளரும் இசைவும் வாழ்த்தும் தந்தார். என்னிடம் பயின்ற என் மாணவர் கூட்டம் அப்படியே ஊர் ஊராகப் புடை எடுக்கத் தயாராகக் காத்து நின்றது. இத்தனைக்கும் இடையில் நான் தேர்தலில் நிற்க முடிவு செய்தாலும், நான் அதுவரை சார்பு பற்றி இருந்த காங்கிரஸ் அடிப்படையிலேயே நிற்க நினைந்தேன். எனவே அதற்கென விண்ணப்பம் செய்தேன்; ஆனால் நான் இந்தி எதிர்ப்பில் பங்கு கொண்ட காரணத்தால் மறுக்கப்பெற்றது. எனவே நான் தனியாக நிற்க முடிவு கொண்டேன். இடையில் மற்றொரு சிக்கலும் இருந்தது.

செங்கற்பட்டு மாவட்டக் கழகத்துக்கு அத்தொகுதியின் சார்பில் பதினைந்து ஆண்டுகளாக உறுப்பினராக இருந்த ஒருவர் மறுபடியும் போட்டியிட நினைத்தார். காங்கிரஸ் சார்பில் ஒருவர், இவர், இவர்களுக்கிடையில் நாம் ஏன் தலையிட வேண்டும், ஒதுங்கிவிடலாம் என்று நான் எண்ணிய வேளையில் எனது அன்னையர் இருவரும் ஒருசேர நான் நின்றே ஆகவேண்டும் என வற்புறுத்தியதோடு பல ஊர்களிலிருந்து முக்கியமானவர்களை வரச்சொல்லி நான் நிற்கப் போவதையும் கூறிப் பறைசாற்றி விட்டார்கள். எவ்வளவு செலவானாலும் நின்று வெற்றிபெற வேண்டும் என அவர்கள் தீவிரமாக இருந்தார்கள். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

தொடர்த்து உறுப்பினராக இருந்து மேலும் நிற்க விரும்பியவரும் அவரைச் சேர்ந்தவர்களும் என்னையும் என் குடும்பத்தையும் இழிவாகப் பேசினர். வீட்டில் ஆண் துணை இன்மையாலும் நானும் இளையவனாய் எங்கோ பள்ளியில் ஆசிரியனாய் அதிலும் ‘தமிழாசிரியனாய்’ இருந்தமையாலும், நாங்கள் பெருஞ்செல்வர்கள் அல்லர் ஆதலாலும் ஊர்தொறும் அவர்கள் ஏளனப் பேச்சு அதிகமாயிற்று. அவற்றுள் ஒன்று–எங்கட்குத் தேர்தலுக்குச் செலவு செய்யப் பணம் கிடையாதென்றும் எனது அன்னையர் கழுத்தில் இட்டிருக்கும் நகைகளை (செயின்) விற்றுத் தான் செலவிட வேண்டுமென்று கூறியது. இக் கூற்றே என் அன்னையரை வெகுண்டெழச் செய்தது. சில ஊர்களுக்கு அவர்களே வந்து கூட எனக்கென வாக்குகள் கேட்டனர். மும்முனைப் போட்டியில் அந்த இருவரும் ஒருசேரப் பெற்ற வாக்குகளைக் காட்டிலும் நான் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றியுற்றேன். ஆனால் இந்த வெற்றிக்கு உதவியவர் எத்துணையர்–பெற்ற அனுபவம் எத்தகையது! பல காட்சிகள் இன்னும் என் உள்ளத்தில் நிலைத்துள்ளன. ஊருக்கு உதவ என்று நூற்றுக்கணக்கில் பணம் வாங்கி ‘ஏப்பம்’ விட்டவர்கள் இன்னும் உள்ளனர். ஐம்பத்தாறு ஊர்கள் கொண்ட அந்தத் தொகுதியில் எத்தனை எத்தனை வகையான மக்களைக் காண நேர்ந்தது. எனக்கு வேலை செய்வதாகப் பணம் வாங்கிக்கொண்டு, எதிரிக்கு வேலை செய்ய நினைத்த துரோகிகளும் இன்னும் வாழ்கின்றனர்.

நாங்களும் ஒவ்வொரு ஊரிலும் கூட்டமிட்டு, எங்கள் கொள்கைகளைத் திட்டமாக விளக்கினோம். மற்ற இருவேட்பாளர்களைக் காட்டிலும் நானே மேடை ஏறி மக்கள் உள்ளங்கொள்ளப் பேசிய தன்மை அனைவரையும் கவர்ந்தது. எனது மாணவ நண்பர்கள் ஊருக்கு இருவராக இராப்பகலாகத் தங்கி, அவ்வூர் வாக்காளர்களிடம் பரிந்து பேசி வாக்குகளைப் பெற முயன்றனர். அவர்கட்கெல்லாம் அவ்வவ் ஊரார் மகிழ்வோடு உணவு அளித்துக் காத்தனர். எனது உக்கல் மாமனார் திரு. கோபால முதலியார் அவர்களும் அவர்தம் குடும்பமும், முழுக்கமுழுக்கப் பத்து பதினைந்து நாட்கள் தேர்தல் களத்திலேயே மூழ்கி இருந்தனர். இவர்களையன்றி உதவிய பல பெரியவர்களை இன்னும் என்னால் மறக்க முடியாது. அவருள் முக்கியமானவர் திரு. காளப்பர் அவர்கள். அவர் தம் தேர்தல் உறவே பின் நான் காஞ்சியில் அச்சகத் தொழில் தொடங்க உதவியாக நின்றது. இன்றும் அவர் அதே தமிழ்க்கலை அச்சகத்தை ‘முத்தமிழ் அச்சகம்’ என்ற பெயரில் நடத்தி வருகிறார். அவரை யன்றிக் காவாம்பயர் திரு. இராசகோபால் முதலியார், மாகறல் திருமாகறல் முதவியார், இளையனார் வேலூர் சின்னசாமி முதலியார், நடேச முதலியார், காவாந்தண்டலம் பச்சையப்ப முதலியார், வாடாதவூர் மலைக் கொழுந்து முதலியார், அவளூர் துரைசாமி நாயகர் போன்ற பல அன்பர்கள் என் தேர்தலில் வெற்றி பெற உதவினர். எனது கிராமத்தில் எனக்கு உற்றவர் என்பவரே எனக்கு மாறுபட்டு நிற்க, அவருக்கு வாய்ப்பூச்சாகச் சில வெண்பொற்காசுகள் வழங்க நேர்ந்தது. இத்தேர்தல் களத்தில் நேராகவே பேரறிஞர் அண்ணா அவர்களும் சட்டமன்றத் தலைவராக இருந்த புலவர் கோவிந்தன் அவர்களும் எங்களுடன் கலந்து கொண்டு ஊர் ஊராக வந்து ‘ஓட்டு’ கேட்ட காட்சி இன்றும் என்முன் நிற்கின்றது, அக்காலத்தில் (1935) காங்கிரஸ் ‘கட்சிக்கு எதிராக’ வேறு நல்ல அரசியல் கட்சிகள் இல்லையாதலாலும், ஒரு தமிழாசிரியர் அரசியலில் போட்டி இடுவது அதுவே முதல் தடவை ஆனதாலும், பேரறிர் அண்ணா அவர்கள் மகிழ்வோடு கலந்து எனக்கு வழிகாட்டியாக உதவினர். இவ்வாறு எத்தனையோ வகையில் அனைவர் தம் உதவியையும் பெற்றுத் தேர்தலிலே வெற்றி பெற்றேன். காஞ்சிபுரத்தில் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் முடிவை அறிவித்ததும் முதல் முதல் என்னைப் பாராட்டிக் கைகுலுக்கிப் பெருமைப்படுத்தியவர் டாக்டர் சீனிவாசன் அவர்கள் தாம். ஆம்! அதனால் அவர் தம் அரசியல் அறிவையும் தன்மையையும் அவர் புலப்படுத்திக் கொண்டார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதோடு நான் கற்றுக்கொண்ட பாடங்கள் பல.

அன்று நான் ஒரு திட்டமான முடிவினை மேற்கொண்டேன். ‘வருங்காலத்தில் இனி எக்காரணம் கொண்டும் எந்த வகையான தேர்தலிலும் என் ஆயுளில் போட்டி இடமாட்டேன்’ என்ற உறுதியே அது. அந்த உறுதியை இன்று வரையில் தளராது மேற்கொண்டு வருவதாகவே நான் எண்ணியுள்ளேன். பிற்காலத்தில் பல நிலையங்களில் பல வகையான இடங்களுக்குப் போட்டி இடவேண்டிய தேவைகளும் இன்றியமையா நிலைகளும் உண்டானபோதிலும் அவற்றையெல்லாம் தள்ளியே விலகி வருகிறேன். கல்வித் துறையிலும் கல்லூரிச் சார்பில் பல்கலைக்கழகப் பணிக்குச் செல்லும் நெறியிலும் கூட மிக எளிதாக போட்டி இல்லாமலும்கூட வரக்கூடிய வாய்ப்புகள் எங்கள் கல்லூரியிலும் பிற இடங்களிலும் இருந்தும் நான் அவற்றில் தலையிடுவதேயில்லை. பல்கலைக் கழக அறிஞர்குழு (Academic Council) விற்குக் கல்லூரிச் சார்பில் போட்டி இடுமாறு அன்பர் பலர் வற்புறுத்தினர்; நான் மறுத்தேன். எனினும் அரசாங்மே–கவர்னர் நியமனத்தால் அக்குழுவிற்கு மூன்றுமுறை (ஒன்பது ஆண்டுக்கு) என்னை நியமித்தது. அவர்களுக்கு நன்றியுடையேன். உரிமை பெற்ற பின்பு முன்னைய ஆட்சியாளர்களும் இன்றைய ஆட்சியாளர்களும் சட்டசபைக்கு என்னைப் பலமுறை பல இடங்களுக்குப் போட்டி இடச் சொன்ன போதெல்லாம் இதே காரணம் காட்டியே விலகினேன். இதற்காக எனது அன்பர் - உடனிருந்த ஆசிரியர் திரு. க. அன்பழகன் அவர்கள் கூட என்னை ஒருமுறை கடிந்து கொண்டார்கள். அவர் ஒருமுறை (1957 என எண்ணுகிறேன்) சட்டசபைக்கு நின்றபோது என்னையும் உத்திரன் மேரூர்த் தொகுதியில் நிற்கக் கேட்டார்கள். நான் மறுத்துவிட்டேன். திரு. V. K. இராமசாமி முதலியார் போன்ற பெரியவர்களெல்லாம், பின் பல இடங்களுக்குச் சுலபமாக வரும் வகையில் என்னைப் போட்டி இடச் சொன்னார்கள். ஆயினும் அவர்கள் வேண்டுகோளையெல்லாம் மிகத் தாழ்மையோடு மறுத்துவிட்டேன் நான். இவ்வாறு இத் தேர்தல் விழா–வெற்றி–என் வாழ்நாளிலேயே ஒரு நிலைத்த கொள்கையை நான் மேற்கொள்ள உதவி செய்தது. அதைப் போற்றுவதன்றி வேறு என்செய வல்லேன்?

நான்கைந்து ஆண்டுகள் நான் மாவட்டக் கழக உறுப்பினனாக இருந்தேன். அதுபோது திருவாளர் முத்துரங்க முதலியார் அவர்களும் எங்களோடு அதே சபையில் உறுப்பினராக இருந்தார். ஆதம்பாக்கம் திரு. துரைசாமி ரெட்டி யார் அவர்கள் தலைவராக இருந்தார். நாங்கள் எதிர்க்கட்சிக்காரர். எங்கள் தலைவர் திருவொற்றியூர் சண்முகம் பிள்ளை அவர்கள். எங்களால் முடிந்த அளவு நாங்கள் கூட்டங்களில் ஈடுகொடுத்தோம். திரு. துரைசாமி ரெட்டியார் நல்லவராதலின் எங்கள் வேண்டுகோள்களையும் ஏற்று அவ்வப்போது வேண்டிய உதவிகளை எங்களுக்கும் செய்துவந்தார். எனவே எங்கள் பணி செவ்வையாக நடைபெற்றது. எனினும் சில தலைவர்கள் எங்களை வேற்றுக்கண்ணோடே நோக்கிய நிலை வருந்தத் தக்கதாக இருந்தது.

நான் தேர்தலில் வெற்றிபெற்றதும் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி என் நினைவுக்கு வருகிறது. என்னொடு முதலில் கைகுலுக்கி என்னை வாழ்த்திய அன்பர் அத்துடன் நிற்கவில்லை. அன்றைய அரசாங்கத்தில் அவர் செல்வாக்கு மிக்கவராக இருந்தமையின் அரசாங்க வழியே தொல்லை கொடுக்க முயன்றார். நான் பணியாற்றிய பள்ளி அரசாங்க மானியம் பெறுகின்ற பள்ளி ஆனமையின் நான் அதில் பணி செய்துகொண்டே, மாவட்டக் கழகத்தில் உறுப்பினறாக இருக்க முடியாதென்றும், இரண்டில் ஒன்றை விட்டு விட வேண்டுமென்றும் ஓலை அனுப்ப ஏற்பாடு செய்தார். ஆயினும் எனது தலைமை ஆசிரியர் அதற்கெல்லாம் சளைக்கவில்லை. பல ஆண்டுகளாகத் தலைமை ஆசிரியராக இருந்து எல்லா நுணுக்கங்களையும் அவர் அறிந்திருந்தவராதலின் அவர்கள் அதுபற்றிக் கலங்கவில்லை. பதிலுக்கு இரண்டையும் வைத்துக்கொண்டிருந்தால் என்ன நடக்கும் என்று பதில் ஓலை விடுத்தார். ஆனால் அதற்கு நேரடியாகப் பதில் எழுத முடியாத அரசாங்கம், கல்வித்துறையிலுள்ள ஒரு மேலதிகாரியை அனுப்பி நான் தொடர்ந்து இரண்டையும் வைத்திருந்தால் அரசாங்கம் பள்ளிக்குத் தரும் மானியத் தொகை நிறுத்தப்படும் என்று சொல்லவைத்தது. தலைமை ஆசிரியர் விதிகளை யெல்லாம் நன்கு அறிந்தவராதலின் சற்றும் தயங்காது ‘அவ்வாறு சட்டம் இருப்பின் செய்து கொள்ளட்டுமே’ என்று திட்டமாகச் சொல்லிவிட்டார். ஆனால் அதற்குமேல் அவர்களால் ஒன்றும் செய்ய இயல வில்லை, அத்துடன் அவர்கள் அந்தப் ‘பணி’யை விட்டு விட்டார்கள். நானும் வெளிப்படையாகவே அரசியலில் கலந்துகொண்டு தொண்டாற்றினேன். பின் நடைபெற்ற பல இந்தி எதிர்ப்பு மாநாடுகளில் பங்குகொண்டேன். அதே வேளையில் பள்ளிப் பணிக்கு யாதொரு இடையூறுமில்லாமல் பார்த்துக்கொண்டேன். இவ்வாறு பள்ளிப்பணி அமைதியாச் சென்றது.