காஞ்சி வாழ்க்கை/தமிழ்க்கலையின் தோற்றம்

விக்கிமூலம் இலிருந்து
7. தமிழ்க் கலையின் தோற்றம்

அரசியலும் மொழியியலும் வாழ்வியலில் சிக்கிய பிறகு ஓய்வுகொள்ள இயலுமா? அவற்றுடன் சமய இயலும் என் வாழ்வில் இடம்பெற்றது. சைவசித்தாந்த மகாசபைக் கூட்டங்களுக்குத் தவறாது சென்று வந்தேன். அத்துடன் வெளியூர் திருக்கோயில் விழாக்களில் நடைபெறும் சொற்பொழிவுகளிலும் பங்குகொண்டேன். ஒருமுறை திருச்செந்தூர்ச் சென்று இரண்டு மூன்று சொற்பொழிவுகள் ஆற்றி வந்தேன். அப்படியே கோவை முதலிய இடங்களுக்கும் சமய மாநாடுகளுக்குச் சென்றுவந்தேன். இவற்றுக்கிடையில் பள்ளிப்பணிக்கு மட்டும் நான் சோர்ந்ததே இல்லை. பள்ளியில் விடுமுறை எடுத்துக்கொண்டு வேறு பணிக்குச் செல்லவில்லை. மாவட்டக்கழகக் கூட்டங்கள் பெரும்பாலும் பள்ளி நாட்களில் வரும். அதற்கென மட்டும் திங்களுக்கு ஒருமுறை மாலை வேலைகளில் நான் விடுமுறை பெற்றுச் செல்வது வழக்கம்.

தேர்தலுக்குப் பிறகு பல நண்பர்கள் எனக்கு அறிமுகமாயினர். அவருள் ஒருவர் காளப்பர். அவர் காஞ்சிபுரம் ‘பஸ்’ நிலையத்தில் கட்டணம் வசூலிக்கும் பணியில் ஊதியம் பெற்றுக்கொண்டிருந்தார். அவருடைய தமிழ்ப்பற்றும் தேவாரப் பாடல்களை இனிமையாகப் பாடும் திறனும் என் உள்ளத்தில் பதிந்தன. அவரை உயர்த்த வேண்டுமெனத் திட்டமிட்டேன். அப்படியே என்னிடம் பயின்ற இராசகோபால் என்பவர் படித்தபின் வேலையற்று இருந்தார். (அவர் இன்று இல்லை, இளமையிலேயே மறைந்துவிட்டார்). எனவே நாங்கள் மூவரும் சேர்ந்து அச்சகம் ஒன்றினை நிறுவலாம் என நினைத்தோம். அதற்கு முன்னரே, தேர்தல் முடிந்த உடனேயே நான் என் சொந்தப் பொறுப்பில் என்  மைத்துனர் உக்கல் வடிவேலு அவர்களைப் பதிப்பாளராக்கி நான் ஆசிரியராக இருந்துகொண்டு, தமிழ்க் கலை' என்ற திங்கள் இதழைத் தொடங்கி நடத்தி வந்தேன். அக்காலத்தில் அதிக இதழ்கள் இல்லாமையும் இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் வலுவும் சேர்ந்து என் இதழுக்கு ஏற்றம் தந்தன. இத் தமிழ்க்கலை இதழினைப் பற்றிப் பேரறிஞர் அண்ணா அவர்கள், "நாட்டில் நம் கொள்கையைப் பரப்ப நல்ல இதழ்கள் இல்லை’ என்று நைந்து கடிதம் எழுதிய கலைஞர் T. K. சண்முகம் அவர்களுக்குப் பதில் எழுதியவகையில் குறிப்பிட்டார். (அது பற்றி T. K. சண்முகம் அவர்தம் மணி விழா மலரைப் பார்த்த பிறகே நான் அறிந்து கொண்டேன்.)

நான்கைந்து திங்கள் நடத்திய பிறகுதான் பிற அச்சகங்களில் அச்சிடுவதால் உண்டான சில தவிர்க்க முடியாத தொல்லைகள் புலனாயின. எனவே நமக்கெனவே ஓர் அச்சகம் நிறுவ நினைத்தேன். அதே வேளையில்தான் காளப்பரும் இராசகோபாலரும் நினைவில் வந்தனர். அவர்களோடு என் மைத்துனரையும் இணைத்துக்கொண்டேன். வேறு ஒரு காங்கிரஸ் பிரமுகர் தாமே வலிய வந்து அச்சகத்தில் பங்கு பெறுவதாகக் கேட்டார். மறுத்தால் தொல்லை விளையுமே என்று அஞ்சிச் சேர்த்துக்கொண்டோம். அவரால் சில சமயங்களில் தொல்லை அடைவோம். நல்லவேளை "தமிழ்க் கலையைத் தனியாகவே வைத்திருந்தமையால், அவரால் அதைப்பற்றி ஒன்றும் கேட்க முடியவில்லை. சில இதழ்களில் இந்தி எதிர்ப்பின் வலு நன்கு காட்டப்பெற்றிருக்கும். அது கண்டு அவர் அலறுவார். அதற்கு நான் என் செயக் கூடும்? சில ஆண்டுகள் கழியுமுன்பே அவரே விலகிக் கொண்டார். எங்கள் எல்லோரைக் காட்டிலும் அவர் சற்றே செல்வத்தில் உயர்ந்தவராக இருந்தமையால் நாங்களும் தூரவிலகுவதே நல்லதென்ற முடிவில் அவரை அனுப்பி வைத்தோம். அதனாலேயே இன்றளவும் அவர் எங்கள் நண்பராகவே இருந்து வருகிறார், 7 தமிழ்க்கலை நாட்டிற்கும் மொழிக்கும் நல்ல சேவை செய்தது. அப்படியே தமிழ்க்கலை அச்சகமும் நன்கு பொதுமக்களுக்கு உதவிற்று. அதைத் தொடங்கும் போது குமரன் அச்சக உரிமையாளர் திரு. தவசி. குப்புசாமி முதலியார் அவர்களை அணுகினேன். அவர்கள். அதைத் தொடங்குவதற்கு வேண்டிய எல்லாத்துறைகளையும் விளக்கி, வேண்டிய உதவியையும் செய்து, அவரிடம் முன்னரே பணிபுரிந்திருந்த நல்ல சிலரை எனக்கு உதவுமாறும் அனுப்பி வைத்ததோடு, தொடங்கிய வேளையில் உடன்இருந்து வாழ்த்தியருளினர். நல்லவர் வாழ்த்த அச்சகம் நன்கு வளர்ந்து வந்தது. பொருளாதார முட்டுப்பாடு தொடர்ந்து வந்திருந்த போதிலும் அச்சகம் நன்கு வளர்ந்தே வந்தது. திங்கள் இதழும் சிறக்க ஓங்கிற்று. காஞ்சியில் இருந்த பல அன்பர்கள் விளம்பரம் தந்தும் உதவினர். நான் கடைசியில் சென்னைப் பச்சையப்பரில் பணி ஏற்க வரும் வரையில் அச்சகம் கூட்டாகவே இயங்க, நான் வரும்போது அதைத் திரு. காளப்பருக்கு உரிமையாக்கி, பெயரை மட்டும் நான் ஏற்று வந்தேன். பிறகு சென்னையிலேயே அதே பெயருடன் தமிழ்க்கலை இதழ் நான்கு ஆண்டுகள் நடைபெற்றது. இடையில் உண்டான போரின் காரணமாகக் காஞ்சியில் நடைபெற்று வந்த இதழ் நான்காண்டுகள் கழித்து நிறுத்தப்பெற்றது. பிறகு அச்சகம் மட்டும் தொழிற்பட்டு வந்தது. போரின் காரணமாகத் தாள் விலை ஏறிய காலத்தில் ஒருசிறு தொகையை மூலதனமாக வைத்து, தாள்களை வாங்கி வைத்திருந்தாலும் நாங்கள் பெருஞ்செல்வர்களாயிருப்போம். ஆயினும் எங்களில் ஒருவரும் பெருஞ் செல்வர் அல்லராகிய காரணமும் அத்தகைய வாணிப நுணுக்கம் அறியா நிலையும் எங்கள் வாழ்வை அன்று உயர விடவில்லை. எப்படியோ அச்சகம் நன்கு நடைபெற்று வந்தது.

அச்சகப்பணி செம்மையாக நடைபெற்ற காலத்தில் நானும் காளப்பரும் நன்கு பழகினோம். இருவரும் உடன்  பிறந்தவர்களோ எனப்பலரும் வியந்தனர்-சிலர் எண்ணினர். எங்கள் இருவர் குடும்பமும் ஒன்றி வாழ்ந்ததெனலாம். இருவர் வீட்டு உறவினர் பலரும் இருவரையும் ஒத்து நோக்கியே போற்றினர். எங்க்ள் வீட்டுச் சிறப்பு அவரின்றி நடைபெருது-அவர் வீட்டுச் சிறப்பும் அப்படியே. பிற்காலத்தில் நான் சென்னை வந்த பிறகும் அதே நிலை நீடித்தது. எனது பெண்கள் மண இதழில் அவர் பெயர் வரவேற்பாளர் வரியில் இடம் பெற்றிருந்தமையை அனைவரும் அறிவர். அவர் திருமகனார் திருமணத்துக்குச் சீகாழிவரையில் சென்று வாழ்த்தியும் வந்தேன். ஆயினும் ஏதோ காரணத்தால் எனது மகன் திருமணத்துக்கு அவர் வராது நின்றார். பிறகு எங்கள் நட்பு எங்கேனும் கண்டால் பேசுவது என்ற அளவில் நிற்கின்றது.

அச்சகத்தில் பணியாற்றிய காலத்தில் நடந்த சில நிகழ்ச்சிகள் என்முன் நிழலிடுகின்றன. எனது மைத்துணியின் வாழ்வில் ஒரு நீக்கமுடியாத களங்கம் ஏற்பட்டது. எனது மாமனாரும் மற்றவர்களும் அதே சோக நிலையில் செய்வதறியாது மூழ்கினர். அந்த வட்டாரத்தில் அவர்கள் குடும்பம் சிறக்க வாழ்ந்த குடும்பம். அதில் சிறு குறைகண்டாலும் பெரிதாகுமே என வருந்தினர். அந்த வேளையில் நான் எனது நண்பர்கள் துணைகொண்டு அந்தக் களங்கத்தை நீக்கப் பாடுபட்டு வெற்றியும் கண்டேன். அவரை எனக்கு முன்னமே உறவு வழியில் அறிமுகமான ஒருவருக்கு-அவரே விரும்பிக் கேட்க-மணம் முடித்து வைத்தேன். அவர்கள் இன்றும் இனிமையாக வாழ்கிறார்கள். அந்த முயற்சியில் நானும் அன்பர் காளப்பரும் அடைந்த தொல்லைகள் பலப்பல. சிலவிடங்களில் பெரும் அச்சமும் கொள்ளவேண்டி இருந்தது. எப்படியோ எங்கள் முயற்சி வெற்றிபெற்றது. எனது அன்னையர் இருவரும் அதுபோது காஞ்சியிலேயே இருந்தனர், அவர்கள் என் செயல்கண்டு மகிழ்ந்தனர்-போற்றினர். எனது மாமனார் வீட்டார் என் தேர்தல் காலத்தில் செய்த அத்துணைப்  பேருதவிகளுக்கும் மாற்றாக இந்த உதவி அமைந்துவிட்ட தென்று அவர்கள் கூறினர். ஆம்! யாருக்கும் அவர்கள் உதவி செய்த கடனை வைத்துக்கொள்ளக் கூடாது என்பதும் அது எப்படியும் எவ்வகையும் திருப்பித்தரப் பெறவேண்டும் என்பதும் அன்னையாருடைய அசைக்க முடியாத நம்பிக்கை -அப்படியே வாழ்ந்தும் வந்தனர்.

மற்றொரு நிகழ்ச்சியும் நிழலிடுகின்றது. எனது நண்பர்கள்-காளப்பர் உட்பட எனது மைத்துனரை இளையனார் வேலூர் கோயிலுக்கு அறக் காப்பாளராக்க வேண்டுமென முயன்றனர்-முயன்று வெற்றியும் பெற்றனர். முதலில் அதுபற்றி என்னிடம் சொன்னால் நான் ஒருவேளை மறுத்து விடுவேனோ என்ற அச்சத்தால் யாரும் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் எல்லாம் முடிந்து அவரும் பதவி ஏற்ற பிறகே காளப்பர் என்னிடம் கூறினார்-நான் சீறினேன். எனது மைத்துனர் பதவி ஏற்கக் கூடாது என்ப தல்ல என் வாதம். பொதுவாகச் சிவன்கோயில் அறக் காப்பாளர் வேலைக்கே நம்மவர்-நல்லவர் யாவரும் செல்லக் கூடாது என்பது எனது கொள்கை. நான் காஞ்சியில் வாழ்ந்திருந்தபோது, அறநிலையப் பொறுப்பாளராகப் பணியாற்றிய திரு. C. M. இராமச்சந்திரஞ் செட்டியார் அவர்கள் என்னை வற்புறுத்தி ஏகாம்பரநாதர்கோயில் அறக்காப்பாளராக்க முயன்றார், என் தீவிர எதிர்ப்பினலேயே அது நின்றது. அப்படியே நான் சென்னை வந்த பிறகும் அமைந்த கரை ஏகாம்பரநாதர் கோயிலுக்குத் திரு. சண்முக முதலியாரின் முயற்சியால் என்னை அறக்காப்பாளராக நியமித்து ஆணையும் வந்தது. வந்த மறுநாளே நான் அதை மறுத்து எழுதிவிட்டேன். எங்களுர்க் கோயிலைச் செம்மைப்படுத்த வேண்டுமென ஒவ்வொரு இந்து சமய அறநிலைய ஆணையாளரை வேண்டும் போதும், அவர்கள் நான் ஏன் அறக் காப்பாளராக இருக்கக்கூடாது என்றே கேட்பார். நான் அதற்குத்தக்க பதில் அளித்து, தப்பித்துக்கொள்வேன். இவ்வாறு என்றும் சிவன்கோயில் அறக்காப்பாளர் பதவி  வேண்டாம் என்பது என் எண்ணம், இந்த எண்ணத்தை ஊட்டியவர் என் அன்னையும் பாட்டனரும் ஆவர். நாம் கோயிலுக்குக் கொடுக்கப் பிறந்தோமே ஒழிய எடுக்கப் பிறக்கவில்லை என்பது அவர்கள் வாதம். (கோயில் பொருளைப் பாதுகாப்பது பற்றி என் பாட்டனார் கொண்ட கொள்கையினை என் இளமையின் நினைவுகள் என்ற நூலில் முன்னமே எழுதியுள்ளேன்.) அதுமட்டுமின்றி அன்றுதொட்டு இன்றுவரை எங்களுர்க் கோயில் அறக்காப்பாளராக இருந்தவர்கள் நிலையில் தாழ்ந்தார்களே அன்றி உயரவும் இல்லை-முன் உற்ற வாழ்வையும் பெற வில்லை. இவற்றை யெல்லாம் விளக்கியே எனது மைத்துனர் ஏற்ற பதவியை உடன் ராஜினமா செய்யச் சொன்னேன். ஆனால் அவரோ அவர் தந்தையோ மற்றவரோ அதைப் பொருட்படுத்தவில்லை. அதுபோது எனக்கு மங்கையர்க்கரசியும் மெய்கண்டானும் பிள்ளைகள். மெய்கண்டான் மூன்று திங்கட் குழந்தை. எனினும் நான் அவர்கள் தொடர்பையே விட்டுவிட்டேன். எனது மனைவி சந்திராவும் என் சொல்லை மாருது தாய் வீடு செல்லவில்லை. நாங்கள் தனியாக இருந்து பெற்ற அல்லல் பல. எனினும் கொள்கை அளவில் நிலைத்தே நின்றேன். இரண்டொரு திங்களில் எனது மாமனார் மற்றவருடன் வந்து சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர். எனினும் அவர் கோயில் பணியை விடவில்லை. நானும் அதற்குமுன் பலமுறை அக்கோயிலுக்குச் சென்றேன் என்றாலும் அன்று தொட்டு இன்றுவரை அக்கோயிலுக்குச் செல்லவில்லை. எனது மைத்துனர் வாழ்வும் அதனால் ஒரளவு சரிந்ததேயன்றி நிமிர்ந்தது என்று சொல்ல முடியாது. என்றாலும் அன்று நான் சொல்லிய அனைத்தும் அவர்கட்கு வேம்பாகக் கசந்தது. காளப்பர் போன்றாரும் என்னோடு மாறுபட அதுவும் காரணமாயது. இவ்வாறு பல நிகழ்ச்சிகளுக்கு இடையில் காஞ்சியில் எனது வாழ்க்கை மெள்ளக் கழிந்து கொண்டு வந்தது. இதற்கிடையில் முன்னவள் வந்து சென்ற நாடகத்தையும் இங்கே காட்ட வேண்டும் என எண்ணுகிறேன்.  காஞ்சியிலே எங்கள் வாழ்க்கை அமைதியாகச் சென்று கொண்டிருந்தது, ஒரு முறை எனது அன்னேயார் எங்களைக் காணவந்து எங்களோடு தங்கி இருந்தார்கள். எதிர் பாராதபடி அவர்கட்கு உடல் நோய் உண்டாயிற்று. நோயின் வெம்மைமிக, ஒரு எல்லையில் அவர்கள் உயிர் பிரியும் நிலையும் வந்துற்றது. பிறகு சற்றே தெளிவும் பெற் றனர். அந்த வேளையில் அவர்கள் பேசினர்கள். எப்படியும் தனது முதல் மருமகளைக் காணவேண்டும் எனவும் தனது கடைசி விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுவது எனது கடமை எனவும் கூறினர்கள். நான் செய்வதறியாது திகைத் தேன். எத்தனையோ ஆண்டுகள் கழித்து, மறுபடி எப்படி அவர்கள் வீட்டிற்குச் சென்று அழைப்பது என எண்ண மிட்டேன். இதிலெல்லாம் காளப்பர் முன்னின்று செயலாற்ற வல்லவர். பிரிந்தாரைக் கூட்டிவைப்பதிலும் மாற்ருரை மாற்றுவதிலும் வல்லவர். அவர் உடனே என்னை அழைத் துக்கொண்டு அங்கம்பாக்கம் புறப்பட்டார். நாங்கள் இரு வரும் அவர்கள் வீட்டில் போய் மூன்று மணிநேரம் வாதாடி ளுேம். அவர்கள் என்னையும் என் குடும்பத்தாரையும் வைததை இன்று நினைத்தாலும் குலேநடுங்குகிறது. அவர் களே வணங்கி வேண்டினேன். என் அன்னையார் இறுதி ஆசையை நிறைவேற்றிவைக்க வேண்டுமென முறையிட் டேன். எத்தனையோ கட்டுபாடுகள் விதித்து என்னுடன் என் மனைவி என்பாரை அனுப்பிவைத்தனர். காஞ்சிபுரம் வந்து சேர்ந்து, என் அன்னமுன் நிறுத்தினேன். அன்னே யார் கண்ணிர் வடித்தார்கள். பிறகு இரு மருமக்களையும் ஒரு சேரக் கண்ட மகிழ்ச்சியோ என்னமோ அவர்கள் நன்கு தெளிவு பெற்ருர்கள். பிறகு இரண்டு ஆண்டுகள் வாழ்ந்து, எனக்கு மேலும் வழிகாட்டியாக இருந்த பிறகே அவர்கள் காஞ்சியிலேயே மறைந்தார்கள். வந்தவளே இருந்தவள். நன்கு வரவேற்ருள். இருவருக் கும் எங்கே பூசல் கிளம்புமோ என அஞ்சிய எனக்கு அவர் கள் பழகிய பழக்கம் மன ஆறுதலாக இருந்தது. எனினும்  அது என்றும் அப்படியே இருக்குமோ என்று எண்ண அச்சந்தான் உண்டாயிற்று. பின்னவள் பலவகையால் விட்டுக் கொடுத்தமையினாலேயே அவர்கள் உறவும் அவர்கள் இருவரிடையில் என் உறவும் இனிமையாகக் கழிந்தது. நானும் எல்லாம் இனிமேல் சரியாகிவிடும் என்ற எண்ணத்தில் இருவரோடும் யாதொரு வேறுபாடும் இல்லாமல் பழகினேன். அவர்கள் இருவரும் சிலவேளைகளில் எனக்குச் சோதனை காட்டுபவர்கள். பெரும்பாலும் நான் அவற்றில் வெற்றி பெறுவதுண்டு. ஒன்றே தற்போது நினைவில் உள்ளது. ஒரு பொருளை......என்ன வன்பது நினைவில் இல்லை-அவர்களுக்கு எட்டாத உயரிடத்தில் வைத்து விட்டு இருவரும் என்னனை அழைத்தனர். ஒருவர் அதை எடுத்துத் தம் கையில் தரவேண்டும் என்றனர். மற்றவர் அவ்வாறு செய்யக்கூடாது என்றனர். எதை மேற்கொள் வது என்று தடுமாறினேன். கடையில் அந்தப்பொருளை அங்கிருந்து எடுத்துச் சற்றே தாழ்வான இடத்தில் வைத்து விலகிவிட்டேன். இருவர் சொன்னதையும் செய்தும் விட்டேன்-செய்யவும் இல்லை என்று இருவரும் திருப்தியுற்றதாக என்னிடம் கூறி நான் சோதனையில் வெற்றி பெற்றதாகப் பாராட்டினர். ஆம் ! அந்த நல்ல மகிழச்சிக்கிடையிலே இருவரும் கருவுற்றனர். அது என் அன்னையர் இருவருக்கும் பெருமகிழ்ச்சி தந்தது. எட்டாவது மாதம் செய்யும் சிறப்பு இருவருக்கும் நடைபெற்றது. அடுத்தடுத்த நாட்களில் எங்கள் ஊரில் என் இல்லத்தில் தொடர்ந்து நடைபெற்ற அந்த விழாக்களில் ஒருவர் மாற்றி ஒருவர் எல்லாப் பொறுப் பினையும் ஏற்றுச் சிறக்கச் செய்தனர் இருவரும். வந்தவர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். ஒருநாள் மாலை நடைபெற்ற சொற்பொழிவில் புரிசை சு. முருகேச முதலியார் அவர்கள் அவர்களைப் பாராட்டி அப்படியே என்றும் இருக்க வேண்டும் என வாழ்த்தினர். ஆனால் அந்த நிலை தொடர்ந்து இல்லை. இருவரும் மகபேற்றுக்காக அவரவர் தாய் வீடு சென்றனர். முன்னவள் பிறகு திரும்பவே இல்லை. பிள்ளை பிறந்  ததையும் கூட அவர்கள் எனக்குச் சொல்லி அனுப்பவில்லை. கருவளர் சிறப்பு நடைபெற்றபடியே, மக்களும் இன்று ஒருவர் நாளை ஒருவராகப் பிறந்தனர். பின்னவளுக்கு பெண்மகவு பிறந்த செய்தியைச் சொல்லி அனுப்ப எனது முதல் மகளைக் காண விரைந்து உக்கலுக்குச் சென்றேன். இளங்குழந்தையைக் கண்டேன். எனது பெரிய அன்னையார் அங்கேயே இருந்தனர். நான் அங்கே சென்ற அதே நாளில் முதல் குழந்தை பிறந்த மறுநாளில் முன்னவளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அதை அவர்கள் வீட்டார் சொல்லி அனுப்பவே இல்லை. உடனே ஊரில் இருந்த என் அன்னை யார் எனக்கு ஆள் அனுப்பினார். அவர்கள் எவ்வளவு வெறுத்தும் தான் சென்று பேரனைக் கண்டுவந்தனர். அனுப்பிய ஆள் வந்து செய்தியைச் சொன்னபோது நான் எண்ணெய்த் தேய்த்துக் கொண்டிருந்தேன். அந்த வேளையில் நல்ல செய்தி கேட்டால் பயன் விளைவதில்லை என்று எப்படியோ ஓர் எண்ணம் என் உளத்தில்முளைத்தது, எனவே நான் அஞ்சினேன். (அப்படியே இரண்டு ஆண்டுகளுக்குள் அவன் மறைந்தான்). இருவரும் முன்னரே தத்தம் குழந்தைகளுக்கு என்ன பெயர் வைக்கவேண்டும் என்று முடிவு செய்திருந்ததை நான் அறிவேன். அவர்கள் விருப்பில் நான் குறுக்கிடவில்லை. மகள் மங்கையர்க்கரசி எனவும் மகன் மயில்வாகனன் எனவும் பெயர் பெற்றனர். மங்கையர்க்கரசியும் தாயும் சில திங்கள் கழித்து காஞ்சிபுரம் வந்து குடும்பத்தில் ஒன்றிவிட்டனர். ஆனால் மயில்வாகனனோ அவன் தாயாரோ திரும்பி வீட்டுக்கு வரவே இல்லை.

ஊரில் இருந்த என் அன்னையார் மட்டும் பேரனைக் காணவேண்டும் என்ற அவாவினால் யாரிடமாவது சொல்லி அனுப்பி எடுத்துவரச் சொல்லி, கண்டு மகிழ்வர். ஆனால் அதுவும் நெடுநாள் நிலைக்கவில்லை. சில திங்கள் கழித்து, பிள்ளையைக் கொடுத்தனுப்ப முடியாது என மறுத்து விட்டனர். எனது அன்னையாரும் அக்கொடுமையைத் தாங்க மாட்டாது எங்களோடு காஞ்சிபுரம் வந்து சேர்ந்து விட்டார்கள்.

அடுத்த ஆண்டிலே அன்னையர் இருவரையும் மைந்தனையும் ஒரு சேரப் பிரிய வேண்டிய சோகநிலை உருவாயிற்று. இறைவன் ஏனோ எனக்கு உறுதுணையாயிருந்த அன்னையர் இருவரையும் ஒருசேர எடுத்துக்கொண்டார். அவர்கள் இருவரும் இருந்த காரணத்தால் நான் குடும்பப் பொறுப்பையோ வேறு விளை நிலங்கள் கொடுக்கல் வாங்கல் ஆகிய பிற பொறுப்புக்களையோ எண்ணிக்கூடப் பார்ப்பதில்லை. இறைவன் நானே முயன்று என் காலிலேயே நிற்க வேண்டிய பொறுப்பை உணர்த்தத்தானோ அவ்வாறு செய்தான் என எண்ணவேண்டியிருந்தது. எனது அன்னையாருக்கு காலில் கட்டிகண்டது. ஊரில் வைத்தியம் செய்து பயனடையாமல் போகவே, காஞ்சிபுரம் வந்து வீட்டிலிருந்து கொண்டே நல்ல மருத்துவமும் அறுவை சிகிச்சையும் செய்தோம். எனினும் ஒன்றும் குணமாகவில்லை. தை மாதத்தில் ஓர் வெள்ளிக்கிழமையில் அவர்கள் மறைந்தார்கள். அவர்கள் மறையுமுன் அவர்கள் கூறிய சொல் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தூரத்தே நின்றிருந்த என்னை அருகேஅழைத்து நான் வருகிறேன், தேங்காய் உடை, கற்பூரம் கொளுத்து என்றனர். அவர்கள் சொல்லியதைச் செய்து முடிப்பதற்குள் அவர்கள் தலை சாய்ந்தது. மலை என வளர்ந்த என் வாழ்வும் மங்கியது; வாடினேன். பெரிய அன்னயாரும் பிறரும் தேற்றினர். ஏனோ தெளிவு பிறக்கவில்லை. பிறகு அந்த ஆண்டு முழுதும் நான் பள்ளிக்கூடம் செல்லவில்லை. உலகமே திரண்டு வந்து வாடிய அந்த நாளிலும் முன்னவளும் பேரனாகிய மயில்வாகனனும் அருகில் கூட வரவில்லை.

அன்னயாரின் இறுதிச் சடங்குகள் விழாவென நடைபெற்றன. திரு. வி. க., தெ. பொ. மீனுட்சிசுந்தரனார்ர, C. M. இராமச்சந்திரன் செட்டியார், ரா. பி. சேதுப்பிள்ளை,  சுந்தர ஒதுவா மூர்த்திகள், சச்சிதானந்தம் பிள்ளை, புரிசையார் இன்னும் பல பெரியவர்கள் அந்த இறுதிநாள் சடங்கில் பங்குகொண்டு அதை ஒரு பெரு விழாவாக எங்களுரில் கொண்டாடினர். எனது ஆற்ற முடியாத துன்பத்தை அத்தகைய பெரியவர் தம் வருகையாலும் வாழ்த்தாலும் ஓரள்வு பொறுத்துக்கொண்டேன். எனது பள்ளியின் தலைமை ஆசிரியர் என் துன்பத்தைக் கண்டு நான் அந்த ஆண்டு முழுவதும் பள்ளிக்கு வரவேண்டாம் என்று சம்பளத்துடன் விடுமுறை அளித்தார். அன்னையின் மறைவுக்குப் பின் நான் எங்கும் அதிகமாக வெளியில் செல்லுவதில்லை. எந்த விழாவிலும் பங்குகொள்ளவதில்லை. வீட்டிலேயே முடங்கிக் கிடப்பேன். அடிக்கடி என் பெரிய அன்னயார் கூறிய ஆறுதல் ஓரளவு தேற்றும் . இதற்கிடையில் ஊரில் மகன் வாழ்வு மங்கி வருவதை அறிந்தேன். அவர்கள் வறுமையுற்ற காரணத்தால் சரியான உணவைத் தாராததோடு தக்க வைத்தியமும் செய்யவில்லை என அறிந்தேன். ஒருமுறை நான் பார்க்க அவர்கள் வீட்டிற்கு வருவதாகச் சொல்லி அனுப்பினேன். அவர்கள் வரக் கூடாது எனத் தடுத்தனர். சென்றால் வேறு கொடுமைகள் நிகழுமென அஞ்சித் திரும்பினேன். மற்றொரு முறை நான் தெரு வழியாகச் சென்றபோது அவன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். நான் எங்கே கண்டு கொண்டுவந்து விடுவேனோ என்று கருதி அவன் பாட்டனார் என்னைத் தூரத்தே கண்டதும் எடுத்து உள்ளே ஓடிவிட்டார். இப்படி என் மகனை நானே பார்க்க முடியா நிலையில் இருந்தேன், கடைசியாகக் கண்ட இடம்? அவனைப் பிணமாகத் தான் என்னால் காண முடிந்தது.

மைந்தன் பிறந்ததை எப்படிச்சொல்லி அனுப்பவில்லையோ அப்படியே இறந்ததையும் அவர்கள் சொல்லி அனுப்பவில்லை. எனினும் ஊரில் எங்கள் நிலங்களைப் பார்த்திருந்த பெரியவர் உடனே ஆளை அனுப்பினார்.நானும் பெரிய அன்னையாரும் சென்று, அவனை பொசுக்கி விட்டுத் திரும்பினோம். அவர்கள் வீட்டிற்குச் சென்று பிள்ளையின் பிணத்தைக் கண்டு கலங்கிய போதும் அவர்கள் வாய் திறக்கவில்லை. நாங்கள் திரும்பக் காஞ்சிபுரம் வந்துவிட்டோம்.

காஞ்சிபுரம் வந்த ஒரு திங்களில் எனது பெரிய அன்னை யாருக்கும் கட்டி கண்டது. அவர்களும் அதிலிருந்து தப்ப முடியவில்லை. அவர்கள் உயிர் பிரியச் சிறிது நேரமே இருந்தது. என்னை அருகழைத்து ‘நான் சிறிது பொழுதில் மறைந்து விடுவேன். நீ மட்டும் அழுதுக்கொண்டிருக்காதே. இனி உன்னைத் தேற்றுவார் யாரும் இல்லை. நீயாக எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு முன்னுக்கு வர வேண்டும்’ என்றார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் உயிர் பிரிந்தது. அவர்கட்கும் காஞ்சியிலேயே முறைப்படி செய்யவேண்டிய சடங்குகளை யெல்லாம் செய்துமுடித்தேன். என் துன்ப மிகுதியைக் கண்ட எனது தலைமை ஆசிரியர் அந்த ஆண்டின் பிற்பகுதியையும் சம்பளத்தோட விடுமுறையாக அளித்தார். இந்த கொடுமைகளை யெல்லாம் தாங்கிக் கொண்டு காஞ்சியில் கடைசி சில ஆண்டுகளை நடைப் பிணமாகக் கழித்தேன் எனலாம். இதற்கிடையில் அச்சகப் பணியும் காளப்பர் போன்ற நல்லவர் உறவும் உக்கலில் வாழ்ந்த பெரியவர்தம் ஆறுதலும் என்னை மனிதனாக வாழ வைத்தன. காஞ்சி வாழ்க்கையில் நடைபெற்ற இன்னும் சில நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து காணலாம் என எண்ணி இப்பகுதியை இம்மட்டோடு முடிக்கின்றேன்.