காஞ்சி வாழ்க்கை/போரும் வாழ்வும்

விக்கிமூலம் இலிருந்து
8. போரும் வாழ்வும்

உலகம் என்றும் அமைதியில் வாழ்ந்ததில்லை–இனி வாழவும் போவதில்லை என அறிகிறோம். மனிதன் தோன்றிய நாள் தொட்டு–ஏன் ?–உயிரினம் தோன்றிய நாள் தொட்டு ஒன்றை ஒன்று விழுங்கப் பார்க்கும் போராட்டம் நடை பெற்றுக் கொண்டேதான் இருக்கின்றது. ஆயினும் வென்றவர் யார் ? தோற்றவர் யார்? விடை காண முடியாது. ஏதோ மேல் போக்காக வெற்றி தோல்வி என்று கூறப்பெறினும் உலக சமுதாயக் கண்ணோடு பார்ப்பின் அவை வெற்றியுமன்று தோல்வியுமன்று என்பது விளங்கும். இந்த உண்மையை உணர்ந்து கொண்டே தான் மனிதன் ஒரு தலைமுறையிலேயே பல போர்களை உண்டாக்கிச் செத்து மடிகிறான். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் உண்டான உலகப் போரின் ஓய்வு ஓர் இடைக்கால ஓய்வாகவே அமைந்து விட்டது. 1939-ம் ஆண்டு மறுபடியும் உலகப்போர் மூண்டு விட்டது. அப்போது தொடங்கப்பெற்ற தமிழ்க்கலையில் நான் அப்போர் மூள வேண்டிய சூழ்நிலை, காலம், இயற்கை நிலை, நினைத்தால் தடுத்திருக்கக்கூடிய வாய்ப்பு எல்லாவற்றையும் விளக்கி எழுதி இருந்தேன்.

அப்படியே நம்நாட்டில் பிற்காலத்தில் நடைபெற்ற எல்லைப் போராட்டத்தில் (தமிழ்நாடு–ஆந்திரம் பிரிந்த காலை) மேற்கொள்ள வேண்டிய முறை–எல்லை–காரணம் ஆகியவைகளை ஆராய்ந்து புள்ளி விவரங்களோடு வெளியிட்டேன். ஒருசில ஆண்டுகள் கழித்துத் தமிழக ஆந்திர எல்லைகள் இறுதியாக வரையறை செய்யப்பெற்றபோதும், நான் சில ஆண்டுகளுக்குமுன் குறிப்பிட்ட அதே எல்லையில்தான் அவை அமைந்தன. அறிந்த அன்பர்கள் பலர் பாராட்டினர். அப்படியே போர் பற்றி அக்காலத்தில் நான் எழுதிய கட்டுரையைப் படித்த பல அறிஞர்கள் அதைப் பாராட்டிக் கடிதம் எழுதினர். சென்னையில் வெளிவந்த ஒரு தினசரியில் அதுபற்றி தெளிந்த விமரிசனம் தீட்டியிருக்கக்கண்டேன். இவ்வாறு அக்காலத்திய போர் நிலையை நாம் ஆய்ந்துகொண்டிருந்த வேளையில் மேலை நாட்டில் ஜெர்மனி நாடு ஒவ்வொரு நாடாக விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண்டே இறுதியாக ஆங்கில நாட்டின் மேலும் போர்க்கொடி உயர்த்திவிட்டது.

எனவே ஆங்கிலேயர் கீழ் இருந்த நம் நாடும் நேரடியாகப் போரில் கலக்க வேண்டிய தேவை உண்டாயிற்று. அந்த நிலையில் கிழக்கே ஜப்பான் நாடும் ஜர்மனியோடு சேர்ந்து போரிட உலகப் போரே உருவாகிவிட்டது. பிறகு ரஷியாவையும் ஜர்மனி, ஜப்பான் ஆகிய இரு நாடுகளும் இருபுறமும் போருக்கு ஈர்த்தன. இந்நிலையில் நாட்டிலும் உலகிலும் போர்க் குழப்பங்கள் மிகுந்த வேளையில் எனது மனத்திலும் பல்வேறு குழப்பங்கள் புகுந்து கொண்டன.

எனது அன்னையர் இருவரும் மறைந்த பிறகு என் செலவெலாம் ஓய்ந்துவிட்டன. பள்ளிப் பணிக்கு ஓராண்டு விடுமுறை மேற்கொண்டேன். வெளியே அரசியல் கூட்டங்களுக்காயினும் சரி-சமயக் கூட்டங்களுக்காயினும் சரி-வேறு எதற்காயினும் சரி எங்கும் செல்வதில்லை. மாவட்டக்கழகக் கூட்டங்களுக்கும் சரியாக செல்வதில்லை. மூன்று கூட்டங்களுக்கு வாராவிட்டால் உறுப்பினர்ப் பதவி நீங்கப்பெறும் நிலையும் உண்டாகி, மறுபடியும் சேர்த்துக்கொள்ளப் பெற்றேன். எனது ஊரில் உள்ள நிலபுலன்களைக் கண்காணிக்க வேண்டியிருந்தது. எனது பெரிய அன்னையாரும் அவருடைய நிலபுலன்களையெல்லாம் என் பெயரிலும் என் மனைவி சந்திரமணியின் பேரிலும் எழுதிவைத்துச் சென்றனர். எனவே அவைகளையும் காண்காணிக்க வேண்டியிருந்தது. ஊரில் ஓரிரு மாதங்கள் தங்கி எல்லா நிலங்களையும் அளந்தோம். அப்போது பல உண்மைகள் வெளியாயின.

எங்கள் நிலங்களைப் பல ஆண்டுகளாக மற்றவர் குத்தகைக்குப் பயிரிட்டுக் கொண்டிருந்தமையின் பக்கத்தில் இருந்த நிலச் சொந்தக்காரர்கள் மெல்லமெல்ல வெட்டி வெட்டித் தம் நிலத்தோடு சில பகுதிகளைச் சேர்த்துக் கொண்டிருந்தனர். ஒருவர் ஒரு பெரும் வயலையே தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டிருந்தார். நான் அளந்து இந்த உண்மைகளையெல்லாம் கண்ட பிறகு அவர்கள் அனைவரும் உரியவற்றை ஒதுக்கி விட்டுவிட்டார்கள். ஒருவர் மட்டும் வாதாட நினைத்தோ ஏனோ காஞ்சிபுரம் சென்று வழக்கறிஞர்களைக் கலந்துகொண்டுவந்து பிறகே ஒப்படைத்தார். ஊரில் வெற்றிடமாயிருந்த சிலவற்றை மாற்றித் தென்னங்கன்றுகள் மாங்கன்றுகள் இட்டு வளர்த்தேன். அம்மா, பெரியம்மா பிரிவால் பிரிந்திருந்த பல நிலங்களை ஒன்றுபடுத்தி பயிரில் சில மாற்றங்களைச் செய்ய நினைத்தேன். ஊரிலேயே நல்ல முறையில் ஒற்றுமையை உண்டாக்கி, நல்ல வகையில் பயிர்த்தொழிலை மேற்கொண்டு மக்களை ஒன்றுபடுத்த முயன்றேன்.

பல கூட்டங்களை ஊரில் கூட்டினேன். எனினும் அவை ஒன்றும் பயன்படவில்லை. மாறாக ஊரில் பயிரிடும் பண்பு குறைந்து வந்தது. பிற்காலத்தில் நானும் என் நிலத்தின் பல பகுதிகளை விற்று, சென்னையில் ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒவ்வொரு வீடுவாங்கித் தந்துவிட்டேன். தற்போதும் எல்லா வசதிகளும் இருந்தும் ஊரில் பயிர்த்தொழில் சரியாக நடைபெறவில்லை. பள்ளியில் எனக்கு விடுமுறை கிடைத்ததால் ஊரில் சில நாட்கள் தங்க வாய்ப்பு உண்டாயிற்று. எனினும் விரைவில் நான் காஞ்சிபுரம் வந்துவிட்டேன், அப்போது நமது நாடும் தீவிரமாகப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. ஆகவே அக்காலத்தில் சென்னை மாநிலமும் தன் பங்கைத் தந்துகொண்டிருந்தது, மாவட்டக் குழுக்கள்-வட்டக்குழுக்கள் இவ்வாறு பல்வேறு குழுக்கள் அமைக்கப்பெற்றிருந்தன. என்னைக் கேட்காமலே அதிகாரிகள் அந்தக் குழுக்களில் என்னை உறுப்பினராக்கி இருந்தார்கள். நான் குடும்பச் சூழ்நிலையில் அமைதியாக இருக்க நினைக்கிறேன் என்று கூறி வேண்டியும் அவர்கள் விடவில்லை. அவர் தம் விருப்பப்படி அவற்றின் உறுப்பினனாக இருந்து செயலாற்றினேன்.

செங்கற்பட்டு மாவட்டம் முழுதும்—சிறப்பாக காஞ்சி வட்ட ஊர்கள் அனைத்திலும் நான் சென்று சொற்பொழிவாற்றினேன். உலகப்போரின் நிலை பற்றியும் அதில் நம் நாடு கலந்துகொள்ள வேண்டிய தேவை நேர்ந்தமை பற்றியும் நம் நாட்டு மக்கள் பொன்னாலும் பொருளாலும் மக்களாலும் பிற தியாகங்களாலும் எவ்வெவ்வாறு உதவ வேண்டும் என்பது பற்றியும் விளக்கமாகப் பேசினேன். ஒவ்வொரு ஊரிலும் எண்ணற்ற மக்கள் அப்பேச்சுக்களைக் கேட்டு உதவ முன்வந்தனர். அக்காலத்தில் காஞ்சியில் துவாரகா நாத ஐயர் என்பவர் தாசில்தாராக இருந்தார் என எண்ணுகிறேன். இன்னும் பல அதிகாரிகளும் நல்ல தொண்டு ஆற்றினர். எப்போதும் என்னை அவர்கள் தங்கள் காரிலேயே எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்வார்கள். நானும் இந்த ஈடுபாடுகளினால் ஓரளவு குடும்பச் சூழ்நிலையை எண்ணி எண்ணி ஏங்க நேரமில்லா வகையில் அமைதியாக வாழ்ந்து வந்தேன்.

ஒரு காலத்தில் ‘சென்னை மாநிலத்தின்’ போர் உதவிக் குழுவின் கூட்டம் ஒன்று சென்னையில் நடைபெற்றது. கூட்டம் பெரும் அளவில் கிண்டிக் குதிரைப் பந்தய மைதானத்தில் நடைபெற்றது. மாநில ஆட்சித் தலைவர் கவர்னர் தலைமை வகித்தார். பலர் பங்குகொண்டனர். நானும் அதில் பேச வேண்டி இருந்தது. காஞ்சிபுரம் தாசில்தார் உட்பட பல அதிகாரிகளும் நானும் இன்னும் சில முக்கியமானவர்களும் அந்த கூட்டத்திற்காகச் சென்னை வந்தோம். குதிரைப் பந்தயத்தின் கொடுமையைப் பல முறையில் கேட்டிருக்கிறேன். நானே என் தமிழ்க் கலையில் அது பற்றி எல்லாம்–அதனால் மக்கள் நைந்துபோகும் நிலைபற்றி எல்லாம் எழுதி இருக்கிறேன். காங்கிரஸ்காரர்களும் தாங்கள் பதவிக்கு வந்தால் அதையே முதலில் ஒழிக்கப்போவதாகச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் இருபது ஆண்டுகள் பதவியில் இருந்த காலத்து அதை வளர்த்து வந்தார்களேயன்றி வேறு ஒன்றும் செய்யவில்லை. இன்றைய அரசாங்கமும் அதை வளர்க்கவே துணை நிற்கின்றது. அதை நடத்துகின்றவர் நாட்டிலுள்ள பெருஞ் செல்வர்கள் என்றும் அவர்தம் தயவை நாடியே எந்த அமைச்சரவையும் செயலாற்றுகிறதென்றும் ஆகவே யார் வந்தாலும் அதை ஒன்றும் செய்ய முடியாது என்றும் பலர் காரணம் கூறக் கேட்டறிந்தேன். அந்தக் காலத்திலெல்லாம் அதன் கொடுமையை மட்டும் ஓரளவு உணர்ந்திருந்தமையின் அங்கே நடைபெற்ற கூட்டத்துக்குச் செல்ல அஞ்சினேன். எனினும் மற்றவர்களோடு சென்று கூட்டத்திலும் கலந்துகொண்டேன். கவர்னருக்கும் அறிமுகம் செய்துவைக்கப் பெற்றேன். அக்காலத்திலெல்லாம் கவர்னர்களைக் காணுவதோ பேசுவதோ அவ்வளவு எளிதன்று. எனவே எனக்கு அது பெருமை என்று பலர் கூறிக்கொண்டனர். ஊரில் உள்ள உறவினர் பலர் பாராட்டினர். எனினும் நான் அவற்றை பொருட்படுத்தவில்லை.

அதுகாலை செங்கற்பட்டு மாவட்ட ஆட்சியாளர் (Collector) திரு. செட்டூர் என எண்ணுகிறேன். என் கூட்டங்கள் பலவற்றிற்கு அவர் தலைமை வகித்துள்ளார். அவர்கள் எனது பணிகளை யெல்லாம் கண்டு என்ன நினைத்தார்களோ அறியேன். ஒருநாள் தாசில்தார் துவாரகா நாதஐயர் அவர்கள் திடீரென என் வீட்டிற்கு வந்தார்கள். காலையில் ஏதோ பணியில் ஈடுபட்டிருந்தேன். என்னைப் பெயரிட்டு உரிமையோடு அவர்கள் அழைப்பார்கள். அவர் தம் அழைப்பைக் கேட்டு வெளியில் வந்தேன். நாற்காலியில் உட்கார்ந்தோம். அவர் என் பெயர் ‘இராவ்சாகிப்’ பட்டத்துக்கு சிபார்சு செய்யப்பெற்றுள்ளது என்றும் காஞ்சிபுரம் வட்டத்துக்கு இவ்வொரு பெயர் தான் என்றும் கூறிவிட்டு, என்னை வாழ்த்திச் சென்றார். என் பதிலுக்குக்கூட அவர் எதிர்பார்க்கவில்லை. அவர், நான் மறுப்பேன் என்று எண்ணியிருக்கக்கூடும். அக்காலத்தில் உண்டான பல போர் பற்றிய அரசாங்கப் பதவிகளை நான் வேண்டாம் என ஒதுக்கியதை அவர் அறிவார். எனவே அவர் விரைந்து சென்றுவிட்டார். நான் அன்றுமட்டு மன்று– இன்றுவரை எனக்குப் பலர் பட்டம் பதவி அளிக்க வருவதை வேண்டாம் என ஒதுக்கியே வந்துள்ளேன். அப்படியும் இரண்டொரு நண்பர்கள்–தட்ட முடியாத நிலைமையில் எனக்கு அளித்த பட்டங்களை நான் சூட்டிக்கொள்வதுமில்லை. அதே பட்டங்களைச் சிலர் தம் பெயர்த்தாளில் (Letter head) பொறித்து வைத்துப் பாராட்டுவதைக் காட்டி, அன்பர்கள் என்னையும் அதுபோல் செய்யச் சொல்வர். எனினும் எனது படிப்பு, பணிபற்றி அமைந்த பட்டங்களைத் தவிர்த்து நான் வேறு எதையும் இட்டுக்கொள்வதில்லை. பிற்காலத்தில் அவைகளையும் விட்டுவிட்டுப் பெயரளவிலேயே நிற்கிறேன்.

இந்த நிலையில் அன்று நான் எப்படி ‘இராவ் சாகிப்’ பட்டத்தை ஏற்றுக்கொள்வேன்? நாட்டுக்கு பணியாற்றும் கடமைக்காக–உலக அமைதிக்குப் பாடுபடும் கடமைக்காக நான் அன்று பணிபுரிந்தேனேயன்றிப் பட்டம் பதவிக்காக அன்று, நான் விரும்பி இருந்தால் அன்று அரசாங்கத்தில் உயர்ந்த பதவி பெற்றிருப்பேன். இன்று தலைமைச் செயலகத்திலோ வேறு அரசாங்க இடத்திலோ உயர்ந்த பதவியில் இருந்திருப்பேன். ஆயினும் என் மனம் அவற்றிலெல்லாம் நாட்டம் கொள்ளவில்லை, அமைதியையே நாடிற்று. ஆகவே அப்பட்டத்தைவேண்டாம் என்று கூற விழைந்தேன். தாசில்தார் அவர்களிடம் கூறினால் அவர் என் சொல்லை என்னிடம் கொண்ட அன்பின் காரணமாக ஏற்றுக்கொள்ள மாட்டார் என அறிவேன். எனவே, மறுநாளே சென்னைக்கு வந்தேன். மாவட்டக் கலெக்டர் திரு. செட்டூர் அவர்களைக் கண்டேன். என்னைக் கண்டதும் வரவேற்று அவர்களும் அச்செய்தியைச் சொன்னார்கள். நான் அதுபற்றிப் பேசவே வந்திருக்கிறேன் என்றும் எனக்கு அப்பட்டம் எவ்வாற்றானும் தேவை இல்லை என்றும் கூறினேன். அவர்கள் ஏற்குமாறு வற்புறுத்தினர். நான் வேண்டாமென்றும் மீறித் தரப்பெறுமாயின் ஏற்றுக்கொள்ளாமல் மறுக்கப்பெறும் என்றும் மேலும் எக்கூட்டத்துக்கும் தொடர்ந்து வரமாட்டேன் என்றும் சொன்னேன். அவ்வாறு அப்பட்டத்தைத் திருப்பித்தரின் அதைக் கவுரவக் குறைவாக அன்றைய ஆங்கில அரசாங்கம் எண்ணிற்று. பிற்காலத்தில் பலர் அப்பட்டங்களை உதறித் தள்ளினர். சிலர் இன்றும் அந்த அடிமைச் சின்னங்களை அணிந்து கொண்டு பெருமைப்படுகின்றனர். நான் அன்று மறுப்பேன் என்று கூறிய ஒன்றை நன்கு உணர்ந்த செட்டூர் அவர்கள் என் பெயரை அரசாங்கத்துக்கு அனுப்பவில்லை என்று உறுதி அளித்தார். மிக்க மகிழ்ச்சியோடு நான் காஞ்சிபுரம் திரும்பி நேரே தாசில்தார் வீட்டிற்குச் சென்று நடந்ததைக் கூறினேன். அவர் உரிமையோடு என்னைக் கடிந்து கொண்டார். எனினும் அது பற்றி மேலே அவர் ஒன்றும் பேசவில்லை. இதை அறிந்த என் நண்பர்கள் புலர் பின்னால் என்னைக் கடிந்து கொண்டார்கள். நான் எதற்கும் செவி கொடாது எப்போதும் போல அன்னைத் தமிழுக்கும் நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் என்னால் ஆன பணிகளைச் செய்து கொண்டு காலம் கழித்துவந்தேன்.

போருக்கு இடையில் நாட்டில் கொந்தளிப்பு அதிகமாக இருந்தது. அண்ணல் காந்தி அடிகளார் இந்திய நாட்டை நேரடியாகப் போரில் ஈர்ப்பது ஆங்கில ஆட்சிக்குப் பொருந்தியது ஆகாது என விளக்கினர். அவர்கள் இவர் தம் பேச் சினைக் கேட்கவே இல்லை. காங்கிரஸ் மாகாசபை பல வகையில் மாற்றுச் செயலாற்ற முற்பட்டது. அதனால் சில தலைவர்கள் சிறையில் தள்ளப்பெற்றனர். நாடு முழுவதும் கொந் தளிப்பு ஏற்பட்டது. மாநில மத்திய அரசாங்கச் சட்டசபை உறுப்பினர்களும் அமைச்சர்களும் மாவட்ட நகர் மன்றச் கழகங்களும் எதிர்ப்புக் காட்டும் முகத்தால் உடனே ‘இராஜி நாமா’ செய்து வெளியேற வேண்டுமென்றும் திட்டம் தீட்டினர். அதன் விளைவால் நாடெங்கும் காங்கிரஸ் ஆட்சியினர் பதவியினை இராஜிநாமா செய்து வெளியேறினர். ஏறு முன் கண்டனக் கூட்டங்களில் தீர்மானம் இட்டு, ஆங்கிலேயர் தம் அடாத செயலைக் கண்டித்து வெளியேற வேண்டும் என்ற முடிவும் இருந்தது. நாட்டுத் தலைவர்களும் அவையாளரும் அவ்வாறே செய்தனர். எனது செங்கற்பட்டு மாவட்டக் கழகமும் அவ்வாறு செயல்படத் திட்டமிட்டு, கூட்ட நாளும் குறித்தது, நாங்கள் எதிர்க் கட்சியில் இருந்ததை முன்னரே குறித்துள்ளேன். எங்கள் தலைவர் திரு. சண்முகம் பிள்ளை அவர்கள் என்னை அந்தக் கூட்டத் தில் காங்கிரஸ்காரர் ‘வெள்ளையனை வெளியேறு’ என்று தீர்மானம் இட்டுத் தாங்கள் இராஜிநாமா செய்ய இருப்பதையும் எதிர்க்கட்சிக்காரர்களாகிய நாங்கள் அதை எதிர்க்க வேண்டுமெனவும், அவ்வாறு எதிர்த்தால் தொடர்ந்து நியமனம் செய்யப்பெறும் அவையில் நாங்களெல்லாம் இடம் பெறுவோம் எனவும் அதற்காக அரசாங்கம் சட்டம் தீட்டியுள்ளதெனவும் எழுதியிருந்தார். எனினும் அவ்வாறு செய்ய என் உள்ளம் இடம் தரவில்லை. அண்ணல் காந்தி அடிகளார் போன்ற பெருந்தலைவர்களெல்லாம் அல்லல்பட்டு ஆற்றாது நாட்டுக்காகப் பாடுபடும் வேளையில் நமக்குப் பதவி எதற்கு எனவே ஒதுங்கி நின்றேன்.

எனவே அந்தக் குறிப்பிட்ட கூட்டத்துக்கு நான் செல்லவில்லை. அவருக்கும் பதில் எழுதவில்லை. கூட்டம் முன் ஏற்பாட்டின்படி தீர்மானத்தை நிறைவேற்றிக் கலைந்து விட்டது. மாவட்டக் கழக ஆட்சி கலெக்டர் கையில் வந்தது. உடன்–ஒருவாரத்துக்குள் என எண்ணுகிறேன்–மாற்றுக் கழகம் பொறுப்பேற்குமெனவும் அதில் உறுப்பினர் யார் யார் என்றும் பத்திரிகைச்செய்தி வரக்கண்டேன். நல்லவேளை அதில் என்பெயர் இல்லை. பின்பு ஒரு கூட்டத் தில் என்னைக் கண்ட ‘கலெக்டர்’ அக்கூட்டத்துக்கு வந்திருந்தால் நானும் தொடர்ந்து உறுப்பினனாக இருந்திருக்கலாமே என்று சொன்னார். நான், அதனாலேயே நான் அக்கூட்டத்துக்கு வரவில்லை என விளக்கினேன். என் உள்ளம் அவர் நன்கு அறிந்த ஒன்றாதலால் அவன் புன்சிரிப்போடு அமைந்துவிட்டார்.

அதே காலத்திற்குச் சற்றுமுன் நடைபெற்ற மற்றொன்றும் நிழலிடுகின்றது; அவ்வாறு கழகம் கலைக்கச் சில தினங்களுக்குமுன் என எண்ணுகிறேன். தாம்பரம் நகர் அமைப்பு எங்கள் கழகச் சார்பில் அமையத் தொடங்கிற்று. பல ஏக்கர் நிலங்களை வாழ் மனையாக்கிப் பலருக்குப் பகிர்ந்து கொடுத்து, புதுப்புதுத் தெருக்கள் அமைத்தனர். அத் தெருக்களுக்கெல்லாம் அக்காலத்தில் கழக உறுப்பினர்களாகிய எங்கள் பெயர்களை இடவேண்டுமெனவும் முடிவு செய்தனர். ஆயினும் நான் தனியாக எங்கள் கழகத் தலைவர் திரு. துரைசாமி ரெட்டியார் அவர்களை, ஆலந்தூரில் அவர்கள் வீட்டில் கண்டு என் பெயரை எந்தத் தெருவிற்கும் வைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டேன். அவர்கள் முதலில் மறுத்த போதிலும் பிறகு இசைந்தார். அதனாலேயே தாம்பரம் பெரியார் நகரில் என்னுடன் இருந்த உறுப்பினர் பெயர்களிலெல்லாம் தெருக்கள் இருக்க என் பெயரில் மட்டும் தெரு இல்லா நிலை தோன்றிற்று, பின் கேட்ட பல அன்பர்களுக்கு இதுபற்றியெல்லாம் விளக்கம் கூறினேன்.

போர் வரவர அதிகமாகிக் கொண்டே வந்தது. உலக மக்கள் அனைவரும் அஞ்சினர். மக்கள் வாழ்க்கைப் பொருள்கள் கிடைக்கா நிலை உண்டாயிற்று. பொருளாதார நெருக்கடி காரணமாகப் போருக்குமுன் மக்கள் குறைந்த விலையில் எல்லாப் பொருள்களையும் பெற்று வந்த நிலைமாறி, அனைந்தும் விலை ஏறியும் கிடைக்கா நிலைமை உண்டானமையால் மக்கள் வருந்தினர். அரசாங்கம் எவ்வளவோ முயற்சிகள் செய்து கூடிய வரையில் மக்கள் வாழ்வின் இன்றியமையாத் தேவைகளைத் (உடை, உணவு) தந்து உதவினர். எனினும் உலகிலும் ஊரிலும் வீட்டிலும், உள்ளத்திலும், உணர்விலும் எங்கும் அமைதியற்ற பெருநிலையே காணப்பெற்றது.

நானும் அவற்றினிடையே பள்ளிப் பணியையும் போர் மாற்ற அமைதிப் பணிகளையும் ஆற்றிவந்தேன்.

இந்த நிலையில் எனக்கு ஓய்வு அதிகமே கிடைத்தது. வீட்டில் குழந்தை மங்கையர்க்கரசியோடு விளையாடிப் பொழுது போக்குவேன். நேரம் அதிகமாக வீணாவதைக் குறித்துப் பலநாள் எண்ணியதுண்டு. அச்சகத்திலும் பொறுப்பாளர் இருவர் இருந்தமையின் எனக்கு அச்சகப் பணிகள் இல்லை. போரின் காரணமாகத் தாள் தட்டுப்பாடு உண்டாக, தமிழ்க்கலை வெளியீடும் நிறுத்தப்பெற்றது. எனினும் நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. அந்த நிலையில்தான் மேலே படித்தால் என்ன என்ற எண்ணம் உண்டாயிற்று. 1942-ல் மேலே படிக்கத் திட்டமிட்டேன். எனினும், இடையில் சில ஆண்டுகள் வேறு துறைகளில் கழிந்துவிட்டமையின் படிப்பில் கருத்துச் செல்லுமோ என அஞ்சினேன். அதிலும் ஆங்கிலப் பாடங்கள் அதிகமாகப் பயிலவேண்டியதை நினைந்தேன். ஆரம்பத்தில் கிராமப் பள்ளிகளிலேயே படித்த காரணத்தால் எனக்கு ஆங்கில அடிப்படை இல்லை. எனவே பயிலத் தயங்கினேன். எனினும் சிறிய காஞ்சிபுரத்தில் இருந்த ஓர் ஐயங்கார்–அவர் தனிப்பாடம் சொல்லியே வாழ்பவர் எனக்குத் தந்த உணர்வே படிக்கலாம் என்று தோன்றிற்று. முதலில் இடை நிலை (Inter) வகுப்பு ஆங்கிலத்தில் தேர்ச்சிபெறவேண்டும். அவர் வீட்டிற்கு வந்து அந்தப் பாடங்களையெல்லாம் நன்கு சொல்லிக் கொடுத்தார். நானும் ஒரு மாணவனாகவே இருந்து பயின்றேன். எனவே ஒருமுறை தவறினாலும் அடுத்த முறையில் (செப்டம்பர்) வெற்றி பெற்றேன்.

நான் தேர்வு எழுதிய அந்த நாட்களில் தான் கிழக்கே ஜப்பானியர் பேயாட்டம் தலைவிரித்தாடிற்று. சிங்கப்பூர், மலேயா, பர்மா அனைத்தையும் அவர்கள் விழுங்க, நம் நாட்டு மக்கள் நைந்து வாடி வந்த வகைகளை யெல்லாம் கேட்டுக் கேட்டுக் கண்ணீர் வடித்தேன். சென்னையிலும் அவன் குண்டுவரும் என்று பயந்துதான், அந்த ஆண்டு சென்னையில் எழுத இருந்த மாணவர்களை, அவர்தம் தேர்வுகளை வெளியூர்களில் எழுதப் பல்கலைக் கழகத்தார் ஏற்பாடு செய்துவிட்டனர். அந்த இடமாற்றம் நாட்டுக்குழப்பம் முதலியன என்னை முதலில் தேர்வுபெறாமல் செய்துவிட்டது. பிறகு செப்டம்பரில் வேலூரில் சென்று தேர்வு எழுதி வெற்றி பெற்றேன்.

பிறகு "பீ. ஓ. எல் படிக்க விரும்பினேன். அதற்குரிய ஆங்கிலப் பாடங்களை மினர்வா கல்லூரியில் பயின்றேன். அப்போதுதான் அறிஞர் திரு. பரசுராமன் எனக்கு அறிமுக மானார்கள். அவர்தம் பன்மொழிப் புலமையையும் ஆழ்ந்த அறிவையும் தெளிந்த சிந்தையையும் விளக்கப் பேச்சையும் எண்ணி எண்ணி வியந்தேன். அவர்களும் நான் ஆசிரியனாக இருந்து பயில வந்தமையின் எனக்குத் தனிச்சலுகை தந்து காத்தனர். அவருடன் இருந்த சர்வோத்தமராவ் என்பாருடைய ஆங்கில வகுப்பு மிகச்சிறந்தது. அவர்களிடம் பயின்ற நான் தேர்வில் வெற்றிபெற்றேன் என்று சொல்ல வேண்டுவதில்லை. மூன்றாவது பிரிவையும் தனிமையாகப் பயின்றேன். இதற்கிடையில் காஞ்சி ஆண்டர்சன் பள்ளியில் தலைமை ஆசிரியர் மாறி வேறு ஒருவர் அப்பதவியைப் பெற்றார். தமிழாசிரியர் ஒருவர்-எனக்கு ஆசிரியராக இருந்தவர்-என் கீழே பணிசெய்ய வந்தார். எனவே அங்கே தொடர்ந்து பணியாற்றுவதில் சில சிக்கல்கள் முளைத்தன. போர் தொடர்ந்து நடைபெற்று வந்தது. நானும் என் பணிகளுக்கிடையில் போர் அமைதிப் பணிக்கும் ஆவன செய்துகொண்டே வந்தேன்.