காஞ்சி வாழ்க்கை/தோயாவாம் தீவினையே

விக்கிமூலம் இலிருந்து

9. தோயாவாம் தீவினையே

காஞ்சி வாழ்வில் சமய ஈடுபாடு அதிகம் பெற்றேன். சமயநெறி போற்றும் கிறித்துவப் பள்ளியில் பணியாற்றியதும் அதற்கு ஒரு கரரணமாகலாம். நான் என் உயர்நிலைப் பள்ளிப் படிப்பினைச் செங்கற்பட்டுக் கிறித்துவப் பள்ளியில் படித்து முடித்தேன். அப்பொழுதே கிறித்துவ நூல்களைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு உண்டாயிற்று. எனினும் அதில் அதிகமாக நான் ஆழ்ந்து பயின்றது கிடையாது. அங்கிருந்த ஆசிரியர்கள் அப்பாடங்களைக் கட்டாயமாக்கியமை அதற்கொரு காரணமாகலாம். ஆயினும் காஞ்சியில் பணி ஏற்றபின் அவர்தம் சமய நூல்களை விரும்பிப் படித்தேன். பல கருத்துக்கள் என்னை ஈர்த்தன. சிலவற்றைப் பற்றிக் கிறித்துவ ஆசிரியர்களிடமும் வாதிடுவேன். நம் சமயத்தில் சொல்லாதனவற்றை அதில் சொல்லி இருக்கிறது என்ற எண்ணம் எனக்குக் கிடையாது. அந்த நாளிலேயே ஒரளவு சைவ வைணவ இலக்கியங்களையும் சமய சாத்திரங் களையும் பயின்றவனாதலின் அவற்றில் சொல்லாதனவற்றை விவிலிய நூல் கூறுகிறது என்று நான் கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் அந்நூலைப் போற்றும்முறை, பயிலும் முறை முதலியவைகளைப் பாராட்டினேன். இயேசு பெருமான் பல உண்மைகளைச் சில தெளிந்த உதாரணங்களால் எடுத்துக் காட்டும் சிறப்பினைப் போற்றினேன். என்றாலும் எனக்ரு உள்ளத்தில் ஒரு எண்ணம் உண்டு. எந்தச் சமயத்தவனும் அவ்வச்சமய உண்மைகளை உணர்ந்து பின்பற்றவில்லை என்பதுதான் அது. ஒருபுறம் கிறித்துவ நெறிபற்றிய நூல்களில் நான் ஈடுபாடு கொண்டேன் என்றாலும் மறுபடியும் சில கிறித்தவர் தம் வாழ்க்கை நெறியைக் கண்டு-அதுவும் வழிகாட்ட வேண்டியவர் வழுக்கிவிழும் வழியைக் கண்டுவெறுக்கவே செய்தேன். இந்தநிலை எல்லாச் சமயங்களிலும் இருப்பதறிந்து ‘நீக்க வழியில்லையா ?’ என நெடிது நினைந்து நைந்த நாட்கள் பல.

நான் காஞ்சியில் சேர்ந்தபோது பள்ளிப் பொறுப்போடு கிறித்து பெருமான் அன்புச் சமயப் பணிகளையும் ஏற்று இருந்தவர் ‘மக்ளின்’ என்னும் துரைமகனார் ஆவர். அவரும் அவர்தம் துணைவியாரும்-மக்கள் இல்லை என நினைப்பு-இராப்பகல் அற்ற நிலையில் தம் சமயம் வளர்க்கப் பாடுபட்டனர். காஞ்சி விழவறாகக் காஞ்சி அல்லவா ! ஆகவே எப்போதும் ஏதேனும் திருவிழாக்கள் நடைபெற்றுக் கொண்ட இருக்கும். சில வேளைகளில் இலட்சக்கணக்கான மக்கள் கூடுவர். பல வேளைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வருவர். அனைவரும் சைவ வைணவ சமயத்தவர் களே. அவர்களுக்கு இடையில் இந்த ‘மக்ளின்’ தம்பதிகள் தம் சமயப் பிரசாரத்தைச் செய்வர்; துண்டுப் பிரசுரங்கள் வழங்குவர்; விவலிய நூல்களைத் தருவர்.

எளிய முறையில் நடுத்தெருவில் நின்று அவர்கள் சமயப் பணியைச் செய்துகொண்டிருப்பர். அவர்தம் பொறுமைக்கு எல்லைகாண முயன்ற சில நிகழ்ச்சிகளும் நடை பெற்றன. ஆயினும் அவர்கள் உளம் கலங்காது ‘கர்த்தர்’ தொண்டினைச் செம்மையாகச் செய்துவந்தனர். சிலமுறை அவர் தரும் தாள்களையும் நூல்களையும் கிழித்து அவர் தலையிலேயே போடுவார்கள். அவர் புன்சிரிப்போடு அதை ஏற்றுக்கொள்வார். சில வேளைகளில் தண்ணிரைக் குடம் குடமாக அவர் தலையில் ஊற்றுவர்; அதனால் அவர் பணியில் தளர்ச்சி அடைந்தது கிடையாது. ஒருமுறை ‘சாணி’யைக் கரைத்து அவர் தலையில் ஊற்றினர். அவர் வாய் ‘இயேசுவே, அவர்கள் அறியாது செய்யும் பிழைகளை மன்னியும்’ என்று வேண்டிற்று. இவ்வாறு அவர்தம் அன்புப் பணி இனிது நடைபெற்றது. நான் அவருடன் சில நாட்கள் பேசுவதுண்டு. ஒருசிலவற்றில் மாறுபட்டாலும் எல்லாச் சமய அடிப்படை உண்மைகளும் ஒன்றே என்பதை அவர் ஏற்றுக்கொள்வார். அவர் அன்பளிப்பாகத் தந்த மரப் பெட்டியை (பீரோ) காஞ்சியில் இருந்தவரை வைத்துக் கொண்டிருந்தேன். பிறகு சென்னைக்கு எடுத்துவர இயலாத நிலையில் நண்பருக்குத் தந்து வந்தேன்.

அவர் வயதானவர்; எனவே தாய்நாடு திரும்பிச் சென்றார். பின் அவருக்குப் பதிலாக இளம் தம்பதிகள் அந்தப் பணியினைச் செய்யக் காஞ்சிபுரம் வந்தனர். ‘நியுபிகின்’ என்ற பெயருடைய அவர் வருகை காஞ்சிக் கிறித்தவ உலகுக்குப் புதுத் தொடக்கமாகவே இருந்தது. அந்த ‘நியுபிகின்’ அவர்கள் தாம் இன்று சென்னைச் திருச்சபையின் தலைவராக உள்ளனர். அவர் வந்த போது தமிழ் அறியாதவராக இருந்தார். என்னிடம் தமிழ் பயில வேணடும் என விரும்பினர். வாரத்தில் மூன்று நாட்கள் அவர் என் வீட்டிற்கு வருவார். மொழிபெயர்க்கும் வகையிலும் தமிழ் எழுத்தினைப்பயிலும்வகையிலும் அவர் வாதிடுவர். விரைவில் நன்கு தமிழைக் கற்றுக்கொண்டார். அவர்தம் துணைவியாரும் தமிழ் பயில விரும்பினார்; ஆயினும் விரைந்து கற்றுக்கொள்ள வில்லை, ‘நியுபிகின்’ மெல்லமெல்லத் தமிழ்க் கூட்டங்களில் பேச ஆரம்பித்தார். அவர் உணர்ச்சியும் வேகமும் அவருக்குக் கை கொடுத்து உதவின.

ஒருமுறை அவர் நண்பர் எழுதிய இயேசுவின் வரலாற்றைத் திருத்தித்தருமாறு எனக்குப் பணித்தார். அது பாவால் ஆயது; நடையும் நன்கு அமைந்திருந்தது. அதைக் கண்டு திருத்தித் தந்தேன். அவர் பயிலுவதற்கும் இத்தகைய பணிகளைச் செய்வதற்கும் அவ்வப்போது நான் மறுத்தாலும் கேட்காது ஊதியம் தந்துவிடுவார். நானும் அதனால் எனக்குத் தேவையான நூல்களைப் பெற்றுக்கொள்வேன்.

அவர்களோடு பழகிய காரணத்தால் நானும் அடிக்கடி கிறித்தவக் கோயிலுக்குச் செல்லுதல் வழக்கமாயிற்று. அங்கு அவர்களோடு நானும் வணங்குவேன். ஆயினும் அங்கேயும் என் ஆறுமுகனே காட்சி தருவான். இயேசுவின் வாழ்வினைப் பற்றிப் பத்துப்பாடல்கள் பாடி, அதை அப்போது வந்த ‘தமிழ்க்கலையில்’ வெளியிட்டேன். எத்தனைச் சமயங்களில் புகுந்து தேடினும் காணப்பெறும் ஈசன் ஒருவனே என்ற உண்மை எனக்கு அப்போது புலனாகும். அந்த அடிப்படையிலே கிறித்து பிறந்த நாள், கிறித்தவ ஆண்டுப் பிறப்பு முதலியவற்றையும் அவர்களைப் போன்று நான் வீட்டில் கொண்டாடுவதுண்டு. கிறித்தவ ஆண்டு முதல்நாளில் தேவார திருவாசகங்களைப் படித்து, அவற்றுள் நூலிட்டுத் தெளிவேன். அப்படி ஒராண்டு தெளிந்து பெற்ற விளைவை உடன் பின்னே காட்ட இருக்கின்றேன். இவ்வாறு கிறித்தவ அன்பர்தம் உறவால் அவர்தம் சமய நெறியை நன்கு கற்றுக் கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றேன். அப்படியே எனக்கு மகமதிய நண்பர் இரண்டொருவரும் அமைந்தனர். பெரிய காஞ்சிபுரத்தில் நகை வாணிபம் செய்து வந்த ‘பாட்சா’ என்பவரும், எங்கள் பள்ளியிலேயே உருது ஆசிரியராக இருந்த அன்பரும் உற்ற நண்பர்களாக இருந்தனர். அவர்களுடன் அவர்தம் சமயம் பற்றி ஆராய்வேன். திரு. பாட்சா என்பவர் பெரிய காஞ்சி மசூதி ஆட்சிப் பொறுப்பில் முக்கியப்பங்கு கொண்டவர். எனவே அவருடன் பலமுறை அந்த மசூதியில் சென்று அவர்தம் தொழுகையில் கலந்து கொண்டிருக்கிறேன். இவற்றுக்கிடையில் எங்கள் பள்ளியில் எழுத்தாளராக இருந்த திரு. தேவராசமுதலியார் அவர்களுடைய நாத்திகவாதப் பேச்சுக்களையும் கேட்டுக் கொள்வேன். அவருக்கு எப்படியோ இளமையிலிருந்தே-பெரியாரைப் பின்பற்றியதாலோ ஏனோ-அந்தக் கொள்கை ஊன்றிவிட்டது. ‘காஞ்சிப் பெரியார்’ என்றே நாங்கள் அவரை அழைப்பது வழக்கம். அவர் கொள்கையை மறுக்கும் வகையில் நான் பலப்பல வாதங்கள் புரிவேன். இப்படிப் பலசமய நெறிகளுக்கு இடையில் நான் என் சைவ சமய ஒழுக்கத்திலிருந்து சிறிதும் வழுவாமல் வாழ்ந்து வந்தேன். அது அனைவருக்கும் வியப்பாகவே இருந்தது.

பழங்காலத்தில் சிறந்தோங்கி வாழ்ந்து காஞ்சி நகரையே தம் கொள்கையின் கீழ் அடக்கிவைத்திருந்த சமணமும் பெளத்தமும் தற்போது அவ்வளவாக இவ்லை. ஊருக்கு வெளியே ‘சீன காஞ்சி’ என்ற கோயில் வேகவதி ஆற்றங்கரையில் உள்ளது. அதன் பொறுப்பாளர் காஞ்சி பச்சையப்பர் பள்ளியில் பணியாற்றிய அப்பாவு நயனார் என்பவராவர். அவர் மகன் ‘பானு’ பள்ளியில் என் மாணவன். எனவே அவர்களோடு அந்தச் ‘சைனர் சினகரத்’ துக்கும் அடிக்கடி செல்வேன். கோயில் பெரியது-துாய்மையானதுபோற்றி வணங்கத் தக்கது. நாட்டின் பல பகுதிகளிலிருந்து வரும் மக்கள் அக்கோயிலை வணங்காமல் செல்வதில்லை. காஞ்சியின் பல பகுதிகளிலும் ஆழ்ந்திருக்கும் நிலப்பகுதிகளில் சிற்சில சைன பெளத்தச் சிலைகள் இன்னும் அகப்படுகின்றன. மணிமேகலை ‘அறப்பெருஞ் செல்வியாய்’ வாழ்ந்த தெகு அதே பெயரால் இன்றும் வழங்குகின்றதே. ஆயினும் அங்கே பலருக்கு ‘அரப்பணஞ்சேரித்தெரு’ என்றால்தான் புரியும். இவ்வளவு உருமாறியுள்ளது அத்தெருவின் பெயர். இத்தனைச் சமயங்களுக்கிடையிலும் தொன்மைச் சமயங்களாகிய சைவம் வைணவம் இரண்டும் காஞ்சியில் தழைத் தோங்கி நின்றன-நிற்கின்றன-நிற்கும் என்பதும் உறுதி.

காஞ்சியில் சைவ சமயத்தை வளர்க்கப் பல சங்கங்கள் தோன்றி வளர்ந்தன. அவற்றுள் ஒன்று-முக்கியமானது நான் இருந்த காலத்தில் பணியாற்றி வந்தது. அதுவே ‘மெய்கண்டார்’ கழகம் என்பது. சிவஞான போதத்தை உலகுக்குத் தந்த அறிவொளிச் செம்மலின் பெயரால் அக் கழகம் அமைக்கப்பெற்றுச் சிறக்கப் பணியாற்றிற்று. பச்சையப்பரில் பணியாற்றிய திருவாளர்கள் வச்சிரவேலு முதலியார், திருஞானசம்பந்த முதலியார் ஆகியோர் அதன் உயிர் நாடியாக இருந்தனர். பின்னவர் தம் வாழ்நாளே அதற்கே அர்ப்பணித்தார் எனலாம். நான் எதிலும் ஒதுங்கி இருப்பது போன்று, அதிலும் அதிகப் பங்கு கொள்வதில்லை. ஆயினும் அவர்கள் அழைக்கும்போதெல்லாம் அவர்கள் குறிக்குமிடத்துக்குச் சென்று சொற்பொழிவாற்றி வருவேன். அவர்கள் என்பால் அன்றும் இன்றும் அன்புடையவர்களாகவே உள்ளனர். என் வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைச் சான்றாக இன்றும் திருஞான சம்பந்த முதலியார் கூட்டங்களில் என் பெயரைச் சொல்லி எடுத்துக்காட்டிக் கொண்டே இருக்கிறார் என்பதையும் ஈண்டு எண்ண வேண்டியுள்ளது.

இவற்றுக்கிடையில் நான் முன்னரே காட்டிய நாாாயண சேவாச்சிரமத்தில் ஆண்டுதோறும் குரு பூசைப் பணி செம்மையாக நடைபெறும், பல அறிஞர்கள் சமயச் சொற்பொழி வாற்றுவார்கள், நான் காஞ்சிபுரம் சென்று சேர்ந்த அதே ஆண்டில் திரு.சேதுப்பிள்ளை அவர்கள் அண்ணுமலையிலிருந்து சென்னைக்கு வந்து சேர்ந்தார்கள். என்னைச் சேவாச்சிரமத்து அடிகளார் அழைத்து எப்படியும் அந்த ஆண்டிற்குச் சேதுப்பிள்ளையை அழைத்து வரவேண்டுமென்று கட்டளையிட்டார்கள். நானும் மகிழ்வோடு சென்னை சென்று அவர்களை வருமாறு வேண்டி ஏற்பாடு செய்து வந்தேன். அவர்கள் அந்த ஆண்டு வந்து ஆற்றிய சொற்பொழிவு மிகமிக உருக்கமாக இருந்தது. அவரை அனைவரும் பாராட்டினர். அதுதான் அவருக்கு முதல் தடவை காஞ்சிபுரப் பயணமும் பேச்சும். அந்தப் பேச்சு முடிவில் நன்றி கூற வந்த முன்னாள் நகர்மன்றத் தலைவர் பிள்ளையார்பாளையம் திரு. சுவாமிநாத முதலியார் அவர்கள் மிக உருக்கமாகவும் அழகாகவும் நன்றி கூறினர். ‘இந்தச் சேதுவைக் கண்டால் பாவும் போமே ஜனகன் பெண்ணே-இகபர சித்தியாமே!’ என்று கவிராயர் இராம நாடகக் கீர்த்தனையில் சேதுவைக் காட்டி இராமன் சீதைக்கு தலப் பெருமையை விளக்கியதைச் சுட்டி, அப்படியே ‘இந்தச் சேதுவைக் கண்டால் யாவும் பெறலாம்’ என்று போற்றி, சேதுப்பிள்னையைச் சிறப்பித்து நன்றி கூறினார். அடிகள் மிகவும் மகிழ்ந்தார்கள். முடிவில் பிள்ளை அவர்கள் உடவில் உள்ள நீங்காத நோய்க்கு அடிகளார் மருந்து தந்தார்கள். அதனால் முற்றும் குணமடைந்த பிள்ளை அவர்கள் தாம் வாழ்ந்த நாள்வரை ஒவ்வொரு ஆண்டும் தவறாது மடத்துக் குரு பூசைக்குவந்து தம் கடமையாகிய சொற்பொழிவை ஆற்றிச் சென்றனார். ஒரு காலத்தில் திரு. கா. சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் தலைமை தாங்க இவர் பேச இருவரும் ஒருவரை ஒருவர் இராமாயணப் பாடல்கள் வழியே ஏத்தியும் தாழ்த்தியும் இரட்டுற மொழிந்தும் பேசிய பேச்சுக்கள் மக்கள் மனதை மகிழ்வித்தன. இவ்வாறே ஏகாம்பரநாதர் விழாவில் பன்னிரெண்டு நல்ல பல அறிஞர்கள் பேச்சுக்கள் நடைபெறும். நான் அவைகளிலெல்லாம் கலந்துகொண்டு பேசியும் பெரியவர்கள் பேசக் கேட்டும் நிரம்பப் பயன்பெற்றேன். சமய உண்மையை ஓரளவு உணர என் காஞ்சி வாழ்க்கை எனக்குத் துணையாயது.

அறிஞர் கா. சுப்பிரமணிப் பிள்ளை அவர்களை நாடு அறியும். அவர்தம் புலமையை உலகு அறியும். இருந்தும் கடைசிக் காலத்தில் அவர் வாழ்க்கை செம்மையாக அமைய வில்லை. அவரை ஆதரிப்பார் அற்ற நிலையில் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார், என் வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்தார். அப்போது நான் அவரிடம் பல பாடங்களைக் கேட்டு அறிந்துகொண்டேன். ஆயினும் அவரால் முழுப் பயன் பெற்றவர் திரு.வச்சிரவேலு முதலியார் அவர்களாவர். எப்படியோ அவரைத் தம் வீட்டிற்கு அழைத்துச்சென்று, அவரிடம் சமய நூல்கள் - சாத்திர நூல்கள் பலவற்றைக் கற்றுக்கொண்டார். இன்று அவர்கள் சமய சாத்திர விற்பனராக இருப்பதற்கு அதுவே அடிப்படைக் காரணம் என்றால் மிகையாகாது.

ஒரு முறை திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் அவர்கள் காஞ்சிபுரம் வந்து தங்கி, பல நாட்கள் சமய, சாத்திரச் சொற்பொழிவுகள் செய்தனர். அவர்தம் ஆழ்ந்த புலமையும் சமயத்தில் தளரா நம்பிக்கையும் நாடறிந்தவை. மிக உயர்ந்த சைவ சிந்தாந்தக் கருத்துக்களையும் இளங்குழந்தைகளும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கிச் சொல்லும் திறனே அவரன்றி வேறு யாரால் பெற முடியும் ? பல நாட்கள் அவருடைய சொற்பொழிவைக் கேட்ட நான் தெளிந்த சமய உணர்வினைப் பெற்றேன். அவர்தம் சொற் பொழிவுத் தொடர் சென்னே ‘செயிட்காலணி’யில் நடைபெற்ற போதும் நான் சில நாட்கள் பயன் பெற்றேன். பேச்சாற்றல் பெற்றதோடு இறைவனிடத்தில் தளரா நம்பிக்கையும் மன உறுதிபாடும் கொண்டு அடிகளார் வாழ்ந்து வந்தார். அவர்தம் நம்பிக்கையும் உறுதிப்பாடுமே அவர்தம் இறுதி நாளினை இனிமையாக அமைத்தன. பழநியில் பங்குனி விழாவில் முருகனை வழிபட்டுத் திரும்பிய அடிகளாரின் நல்லுயிர் முடிய பல்லக்கில், அடுத்த ஊரில் சென்று திறப்பதற்குள், இறையருளில் அவர் ஒன்றிய நிலையினை நாடே போற்றிப் பரவிற்று.

காஞ்சியில் மட்டுமன்றி வெளியூர்களில் நடக்கும் பல விழாக்களின் சார்பான சொற்பொழிவுகளுக்கும் நான் சென்று வந்தேன். அப்போது செய்யாறு என வழங்கும் திருவோத்தூரில் அவ்வை. துரைசாமிப் பிள்ளையவர்கள் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிக்கொண்டிருந்தனர். என்னை அவர் தம்பி எனவே கொண்டு போற்றுவர். அவ்வூர் விழாப் பேச்சுக்களில் என்னைக் கேட்காமலே நாளும் பொருளும் குறித்து அனுப்பிவிடுவர். மாலே பள்ளிவிட்டுச் சென்றால் மறுநாள் பள்ளிக்குத் திரும்பிவிடலாம். எனவே நானும் மறுக்காது அவர் கட்டளையை ஏற்றுப் பணி செய்வேன். அவ்வாறே ஒரு முறை வட ஆர்க்காடு மாவட்டத் தமிழாசிரியர் மாநாட்டை ஆரணியில் கூட்டி அதற்கு என்னைத் தலைமை தாங்க வைத்தார்கள். இவ்வாறே வேறு பல அன்பர்கள்-திருச்செந்தூர் தொடங்கிச் சென்னை வரையில் பலப்பல சமயச் சொற்பொழிவுகள் ஆற்ற அழைப்பார்கள். நானும் எதையும் தட்டாமல் ஏற்று என்னலான பணிகளைச் செய்து வந்தேன். ஒய்வு நேரங்களில் காளப்பருடன் இருந்து, அவரை இனிய தேவாரத் திருவாசகப் பாடல்களைப் பாடச்சொல்லிக் கேட்டு மகிழ்வேன். சில நாட்களில் இரவெலாம் பாட்டொலி கேட்டுக்கொண்டிருக்கும். அந்தச் சமய அடிப்படையிலேதான் என் வாழ்க்கையே அமைந்தது. ஆம்! நான் நம்பிக்கை அடிப்படையிலேயே வாழ்க்கையை அமைத்துக்கொண்டேன். 'நம்பினார் கெடுவதில் நாலு மறை தீர்ப்பு' என்ற பாரதியார் வாக்கை முழுதும் நம்பினேன். இன்றும் நம்புகிறேன். அந்நம்பிக்கை வீண் போவதில்லை.

இந்த வாழ்க்கை வரலாற்றை நான் ஏர்க்காட்டில் என் குறிஞ்சி மனயில் எழுதிக்கொண்டிருந்தபோது அடிக்கடி உள்ளே ஊர்ப் பக்கம் செல்லுவேன். வழியில் உள்ள கிறித்துவக் கோயிலைக் கடந்தே செல்ல வேண்டும். அதன் உச்சியில் 'The Just Shall have Him on Faith' என்று எழுதப் பெற்றுள்ளது. அது எவ்வளவு உண்மை என்பது எனக்குப் புலனாகும். ஆம். நல்லவர் வாழ்வெல்லாம் அந்த நல்ல நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்து வளர்ந்தது தானே. எனவே நானும் அந்த நம்பிக்கை அடிப்படையிலேயே வாழ்வை அமைத்துக்கொண்டேன்.

கிறித்து பிறந்த நாளையும் ஆண்டுப் பிறப்பையும் போற்றிய வகையை மேலே காட்டினேன். அந்நாட்களில் தேவாரத்தில் கயிறு சார்த்திப் படிப்பதை மேலே கூறினேன். அதில் வரும் பாடல்கள் வழி. அந்த ஆண்டு நிகழ்ச்சியை அமைத்துக் கொள்வேன். வீட்டில் என் செல்வி மங்கை வளர்ந்து வந்தாள். அவளுக்கு மூன்று ஆண்டுகள் முடியும் நிலையில் எங்கள் உள்ளத்தில் 'மகன்' இல்லையே. என்ற குறை உண்டாயிற்று. முன்னவள் வழி இருந்த மகனும் மறைய, நம் குடிக்கு நல்ல மகன் தோன்ற வேண்டுமே என்ற எண்ணம் தலைதூக்கிற்று. அதுகாலையில்தான் கிறித்தவப் புத்தாண்டு தொடங்கப் பெற்றது. அந்த ஆண்டின் தொடக்க நாளில் நான் சம்பந்தர் தேவாரத்தில் கயிறு  சாத்தினேன். கேடிலியப்பருக்குக் கிடைத்த அதே வெண்காட்டுப் பதிகம் எனக்கும் கிடைத்தது. அப்பதிகம் அனைவரும் அறிந்ததே. அதிலும் அப்பாடல் எல்லாரும் அறிந்த ஒன்றே. என்றாலும் எழுதுகிறேன்.

'பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினேடு உள்ளநினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண்டா வொன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குலநீர்
தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே’

என்ற பாடலே அது. வெண்ணெய் நல்லூர்க் கேடிலியப்பப் பிள்ளைக்கு மகப்பேறு இன்மையின் தேவாரத்தில் கயிறு சார்த்தி இப்பாடலைப் பெற்றனர் என்றும் உடனே திருவெண்காடு சென்று முக்குள நீரில் மூழ்கி, வெண்காடு விகிர்தனை வழிபட்டனர் என்றும் அதன் காரணத்தாலேயே மெய் கண்டார் தோன்றினார் என்றும் அவரது சிவஞானபோதமே சைவசிந்தாந்தத்தின் அடிப்படை என்றும் உலகம் அறியுமல்லவா. ஆம்! அத்தகைய அருட்பாடல் அன்று எனக்குக் கிடைத்தது.

நானும் கேடிலியப்பரைப் பின்பற்றினேன். குடும்பத்தோடு அந்தச் சனவரித் திங்களிலேயே திருவெண்காடு சென்று இறைவனை வழிபட்டேன். சீகாழியில் இறங்கி, அங்கிருந்து மாட்டு வண்டியில் சென்று ஓர் இரவு அங்கே தங்கி இறைவனுக்கு வழிபாடாற்றித் திரும்பினோம். அப்போது திரு. பாலசுப்பிரமணிய முதலியார் அவர்கள் (திரு. பக்தவச்சலம் அவர்தம் மைத்துனர்) அங்கே அறக்காப்பாளராக இருந்தனர். அவர்கள் எங்கட்கு வேண்டிய வசதிகளைச் செய்து அளித்தனர். வெண்காட்டு வேந்தையும் அன்னையையும் முக்குள நீர் தோய்ந்தபின் தரிசனம் செய்து வரம் பெற்றுத் திரும்புகையில் புள்ளிருக்குவேளுர், சீகாழி, சிதம்பரம் ஆகிய தலங்களையும் கண்டு கண்டுவந்து சேர்ந்தோம். அதே நிலையில் சந்திராமணி கருவுற்றாள். பத்தாமாதம் ஆண் மகவு பிறந்தது. அனைவரும் மகிழ்ந்தனர். என்னே அதற்கு முன் கேலி செய்த திரு. தேவராஜ முதலியார் போன்றவர்களெல்லாம் கூட வியந்தனர். ஆம்! அந்த மகனுக்கு நான் 'மெய்கண்டான்' எனவே பெயரிட்டேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை என்பதை உலகம் உணர்ந்து கொண்டது.

இந்த நிகழ்ச்சி முதலில் யாருக்கும் தெரியாதிருந்தும், பிறகு பலருக்கும் தெரிந்துவிட்டது. காரணம் மெய்கண்டார் கழகமும் அதன் அச்சாகிய திருஞானசம்பந்த முதலியாருமே யாவர். அவர்கள் ஒவ்வொரு கூட்டத்திலும் அந்த மெய்கண் டார் பிறப்பின் சிறப்பை விளக்கி, அது வெறும் கட்டுக்கதை அல்ல என்றும் இன்றும் நம்பினால் அதே பயன் உண்டாகும் என்றும் விளக்கி, சான்றாக என் பெயரைச் சொல்லி நான் பெற்ற வாழ்வை விளக்குவார்கள். இன்றும் காஞ்சியில் அவர் பேச்சைக் கேட்டு வருகின்ற அன்பர்கள் அதை என்னிடம் சொல்லிச் சொல்லிச் செல்வர், எனினும் நான் அதைப் பெருமையாகவோ விளம்பரமாகவோ யாரிடமும் சொல்லவில்லை-சொல்வதுமில்லை. எப்படியோ நம்பிக்கை யின் அடிப்படை--உண்மையின் எதிரொலி-உலகுக்கு அறிமுகமாகி விடுகின்றது. ஆம் அந்த மகனே இன்று வளர்ந்து உடன் இருந்து உற்றுழி உதவுகிறான். 'தீவினை தோயா' என்ற நம்பிக்கையிலேயே என் வாழ்வும் நடை பெறுகிறது. அந்த நம்பிக்கையிலே என் மகன் வாழ்வும் அமைகின்றது.

ஒரு சில திங்கள் கழித்து நாங்கள் மறுபடியும் குடும்பத்தோடு திருவெண்காடு சென்று இறைவனுக்கு வழிபாடாற்றிப் போற்றி, நன்றி தெரிவித்துத் திரும்பினோம். பிறகு

நான் அந்தப் பக்கம் எங்கு சென்றாலும் திருவெண்காடு சென்றே வருவேன். எனது மகன் வயது வந்த பிறகு அப்பக்கம் சென்றால் திருவெண்காடு சென்றுவரச் சொல்லுவேன்.

அண்மையில் அவன் மணம் முடிந்த பிறகு இருவரும் வெண்காடு சென்று வணங்கி வந்தனர். அதே வேளையில் எனது ஊரில் என் முன்னோர்கள் ஏற்பாடு செய்த அறக்கட்டளைகளெல்லாம் செம்மையுற நடைபெறுகின்றதா எனக் கண்டு வரவும் எனது ஊர் நிலங்களின் விளைவு பற்றி அறிந்து வரவும் அடிக்கடி அங்கம்பாக்கம் செல்வேன். ஊரில் முன்னிருந்த பல பெரியவர்கள் மறைய மறைய புதிதாக வருபவர்கள் ஊரின் ஒற்றுமையிலும் வளர்ச்சியிலும் அவ்வளவு அதிகமாகக் கருத்திருத்தாமையின் ஊர் வளம் குன்றத் தொடங்கிவிட்டது. ஒரு காலத்தில் எல்லா வகையிலும் சிறந்திருந்த எங்கள் ஊர், எல்லாவற்றிலும் நிலை குலையத் தொடங்கிய தன்மையை நினைத்து வருந்தினேன். சில சமயங்களில் ஊரில் உள்ள பெரியவர்களையெல்லாம் ஒன்று சேர்த்து எப்படியும் ஊரை வளம் பெறச் செய்ய முயல்வேன். பல சமயக் கூட்டங்களுக்கும் கோயில் விழாக்களுக்கும் ஏற்பாடு செய்வேன். என்றாலும் அவற்றாலெல்லாம் பயன் விளையக் காணவில்லை. அடுத்த நெய்க்குப்பம் கிராமத்திலும் எனக்கு நிலபுலன்கள் இருந்தமையின் அதையும் வளமாக்க முயன்றேன். அதற்குள் நெல் விலை உயர உயர மக்களிடம் பயிரிட ஆர்வம் பெருகுமென எதிர்ப்பார்த்தேன். 'நெய்க்குப் பத்தில் அந்த ஆர்வம் ஒருவாறு இருந்தது என்றாலும் அங்கம்பாக்கத்த்தில் அவ்வளவாக இல்லை. இருப்பினும் எப்படியாயினும் தாழ்ந்த கிராமங்களை தலைநிமிர்த்த முயன்றேன்; முடியவில்லை.

இடையில் மற்றொரு ஏற்பாடும் நடைபெற்றது. எங்களூர் பாலாற்றின் தென்கரையில் உள்ளது. அடுத்த வடகரையில் சாலையும் இரெயில் பாதையும். உண்டு; அதை அடுத்துச் சுமார் 20 ஏக்கர் நிலம் இருந்தது. அதில் பாதி சமுதாய நிலம்; பாதி அரசாங்கத்துடையது. அவற்றைப் பெற்றால் அங்கே மறைந்த என் அன்னையின் பேரால் ஏதாவது கைத்தொழிற் பேட்டையோ கல்விச் சாலையோ அமைக்கலாம் என எண்ணினேன். என் முயற்சி ஒரளவு வெற்றியும் தந்தது. முக்கியமாக உள்ள சில அன்பர்கள் தாமே முன்வந்து, குறித்த ஒரு சிறு விலக்குத் தத்தம் சமுதாய நிலத்தை எனக்கு எழுதித் தந்துவிட்டனர். மற்றவை. வாங்கிய பிறகு அரசாங்க நிலத்தையும் பெற்றுத் தொடர்ந்து செம்மைப்பணி ஆற்றத் திட்டமிட்டேன். எனினும் அந்தப் பணி இன்னும் தொடங்கப் பெறவில்லை. என் ஆயுட் காலத்துக்குள் அப்பணியைத் தொடங்கி நடத்துவேன் என்ற எண்ணத்தோடு வாழ்ந்து வருகின்றேன். அதற்கிடையில் தற்போது சென்னையிலும் இங்கே ஏர்க்காட்டிலும் வேறு வகையான பணிகளை என் சொந்த முயற்சியில் தொடங்கத் திட்டமிட்டுச் செயலாற்றவும் தொடங்கியுள்ளேன். இந்நிலையில் அந்தப் பாலாற்றங்கரைப் பணி எப்போது தொடங்கப் பெறுமோ அறியேன்.

மகன் பிறந்த மகிழ்ச்சியில் எங்களூர்க் கோயில் விழாவாற்றியது மட்டுமின்றி எங்கள் குலதெய்வமாகிய ஆட்டுப் புத்துார் அம்மனுக்கும் விழா எடுத்தோம். எந்தச் சிறப்பு நடந்தாலும் அத்தெய்வத்தை வழிபடாது நாங்கள் செயலாற்றுவதில்லை. கடைசியாகச் சென்ற ஆண்டு என் மகனின் மணத்தின் போதும் அத்தெய்வத்திற்கும் வழிபாடாற்றினேன். நான் அங்கம்பாக்கமாயினும் எங்கள் வீட்டை 'ஆட்டுப்புத்துாரார் வீடு' என்றே அழைப்பர். ஒருவேளை எங்கள் முன்னோரில் யாராவது அவ்வூரிலிருந்து இங்கே வந்திருப்பார்கள் என எண்ணினேன். அங்கேயும் எங்கள் உறவினர் இருப்பதால் சில காலங்களில் செல்வதுண்டு. பொதுவாக இவ்வாறு பலவகையில் சமய நெறியிலும் தெய்வப்பணியிலும் காலங்கழித்து வந்த நான் மேலே படிப்பதைப் பற்றியும் சிந்தித்து வந்தேன். எப்படியும் அந்த ஆண்டில் 'பீ. ஓ. எல்.' தேர்வு எழுதி வெற்றி பெற

வேண்டும் என்று முயன்றேன். பள்ளியில் விடுமுறை பெற்றுப் பயின்று வந்தேன். மினர்வா பரசுராமன் அவர்கள் எனக்குப் பெரிதும் உதவினர். எல்லோருடைய வாழ்த்தின் வளத்தாலும், நம்பிக்கையின் உறுதியாலும் ஆழ்ந்து பயின்ற வகையாலும் நான் எழுதிய 'பீ. ஓ. எல்.' தேர்வில் சிறக்க வெற்றி பெற்றேன். அதே வேளையில் காஞ்சியின் சூழலும் என் பட்டமும் என்னை மேலிடத்திற்குச் சென்னையில் ஏதேனும் ஒரு கல்லூரியில் பணிசெய்யும் நிலைக்குப் போகுமாறு அமைந்து வழிகாட்டின. இறையருள் நம்பிக்கையில் அதன் வழி சென்றேன்.