உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலமரத்துப் பைங்கிளி/பால் சுரந்த சக்தி

விக்கிமூலம் இலிருந்து

6

பால் சுரந்த சக்தி

முதல் பிரம்மா பெருமூச்செறிந்தார்.

முதற் பூ மடலவிழ்ந்தது.

முதல் குரல் புறப்பட்டது.

குழந்தை அழுதது; அழுதது; அப்படி அழுதது.

அபாயங்களைத் தன்னுள் அடக்கிக் கிடந்த காடு. கூப்பிடு தொலைவில் ஒரு காட்டாறு. கருக்கல் பொழுது.

புல் தரை; பிறந்த மேனியாய்க் கிடந்தது பச்சை மண். பச்சை ரத்தம் மேனியை வெட்டிப் பாய்ந்தோடத் துடித்துக் கொண்டிருந்தது. குழந்தையின் உடல் துடிதுடித்தது. நஞ்சுக் கொடி துவண்டு கிடந்தது. ரத்தத் துளிகள் பல கோடுகளில், பல கோணங்களில் சிந்திக் கிடந்தன. பன்னீர்த் துளிகள் அந்தக் குருதிப் புனவில் இரண்டறக் கலந்தன.

புள்ளி மான்கள் ஓடிவந்தன. வண்ணப் பறவைகள் நாடி வந்தன. வாயில்லாப் பிராணிகள் வாய்விட்டுப் புலம்பின.

அந்தக் குழவியின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. குழந்தைத் தெய்வம் அழுதது; அழுது கொண்டேயிருந்தது. ‘மன்றுளே மாறியாடு மறைச் சிலம்படிகள்’ நடுங்கின; ‘வென்றுளே புலன் களைந்தார் மெய்யுணருள்ளந் தோறுஞ் சென்றுளே அமுதமூற்றுந் திருவருள்’ திகைத்தது; சிவன் சிந்தித்தார்.

‘கவுணியர்க்குப் பால் சுரந்த சக்தி’ தடுமாறினாள்; ‘பங்கயற்கணரிய பரம். பரனுருவே தனக்குரிய படிவமாகி, எண்ணிறந்த சரா சரங்களீனின்றுந் தாழாக் கொங்கயற் கண் மலர்க் கூந்தற் குமரி பாண்டியன் மகள்’ செயலிழந்தாள். சிவசக்தி சிந்தித்தாள்.

“தேவி, பூலோகம் வர வர உருப்படாமல் போய்க் கொண்டிருக்கிறது. பார்த்தாயா, அந்தப் பச்சை மண்ணை? கேட்டாயா, அதன் தீனக்குரலை? ‘குவா, குவா’ என்று கதறி அழும் அதன் வேதனையிலே, ‘தெய்வமே, தெய்வமே!’ என்ற எதிரொலி கேட்கிறதே? பாவம்!...படைப்பு புதிர் என்று சொல்லுகிறார்கள் மண்ணிலே. ஆனால், அவர்களே படைப்பைப் புதிராக்கி, அத்துடன் வாழ்க்கையையும் புதிராக்கிக் கொண்டு விடுகிறார்கள்; அது மட்டுமா? நீயும் நானும் கூடத்தான் அந்தப் புதிர்ப்பிணைப்பில் இணைக்கப்பட்டுப் பேசப்படுகின்றோம். விந்தைமிகு மக்கள்—மக்களா? மாக்கள்!”

பிறை சூடியின் குரலில் எரிமலை கனன்றது.

அன்பரே, உங்கள் வாய்மொழி முற்றும் உண்மை. கடந்த பத்து நாழிப் பொழுதாக நான் உறக்கம் கொள்ளவில்லை. முதற் குரல் எதிரொலித்தது— திடுக்கிட்டு விழித்தேன். சிசுவின் வினைப் பயன் அப்படியோ? பாவம், பிறந்த குழந்தை பிறந்த மண்ணில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதோ, பொழுது புலர்ந்து விட்டது. காட்டு வழி நடப்பவர்கள் ஓடோடி வருகிறார்கள்: குழந்தையைப் பார்க்கிறார்களே! ஆ, என்ன கொடுமை? ஐயோ, அவர் கள் எல்லோரும் போய் விட்டார்களே, மதலையை மறந்து...! ஒரு சொட்டுக் கண்ணீருக்குக் கூடப் பஞ்சமாகி விட்டதே? சே, பாழ் உலகம்! இதயமிழந்த பாவிகள்!"

இமயவல்லியின் இமைபாவா - விழிகளிலே கோபம் கொந்தளித்தது.

"உமையவளே! சினம் தவிர். பூலோகம் விசித்திரமானது- அது நம் இருவருக்கும் புரியாததல்லவே? குழந்தையைக் கண்டவர்கள் வறிதே சென்றார்களல்லவா? அப்போது, அவர்கள் உதடுகள் உதிர்த்தத் தீர்ப்பை மறுமுறையும் நினைத்துப்பார்: "ம்....! யார் பெற்ற குழந்தையோ? நமக்கு எதற்கு இந்த வம்பு? எல்லாம் இதன் தலை விதிப்படித்தானே நடக்கும்?" என்று சொல்லிப் பயந்தோடி விட்டார்களே! அர்த்தமற்ற, நெஞ்சற்ற வார்த்தைகளின் அநியாயத்தைப் பார்த்தாயா?" என்று கேள்விக் குறி எழுப்பினார் மங்கை பாகன்.

"ஆ! நெஞ்சு வெடிக்கக் கதறுகிறதே? பிறந்தது முதல் குமுறிக் குமுறி அழுகிறதே?... தேவா, குழந்தையின் முடிவு என்னாவது?" என்று கவலையுடன் வினவினாள் மாதா.

"பெற்றவளே குழந்தையைப் பற்றித் துளி கூட அக்கரைப்படாதபோது, நீ ஏன் கவலைப்பட வேண்டும். சங்கரி?" என்று வினயமாகக் கேட்டார் சுடலையாடி.

"மறுபடியும் என்னைப் பரீட்சை செய்ய ஆரம்பித்து விடாதீர்கள், பிரபோ! இந்தக் குழந்தைப் பிரச்னையை முதலில் தீருங்கள். நல்ல தீர்ப்பு நவிலுங்கள்!" என்று வேண்டிக் கொண்டாள் காமக்கோட்டி.

"ஆகட்டும். நீவீணே பதட்டப் படாதே" - ஆறுதல் மொழி தந்தார் பிஞ்ஞகன். "நன்றி! ஆனால்?"

“ஐயப்பாடா?"

"அல்ல. ஆனால் , அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் ...? ஈரைந்து மாதம் சுமந்து பெற்ற அந்த அன்னை ...?" என்று எதிர் வினா விடுக்கலானாள் நாரி.

பிறப்பிலி பெருமூச்செறிந்தார்:

"பூலோகத்தில் காதலுக்குப் புது மாதிரியான பொருள். - கவியாணத்துக்கு முன் னும் கலியாணத்துக்குப் பின்னும் கூட 'காதல்' என்ற ஒன்று உதயமாவதே கிடையாது. ஆனால், அவர்கள் வாய் என்னவோ, 'எல்லாம் உணர்ந்த மாதிரி, எடுத்ததெற்கெல்லாம் 'காதல், இன்றேல் சாதல்!' என்ற ஒரே பல்லவியைத் தான் பாடித் தொலைக்கிறது. பூலோகக் காதலை தேவலோகக் காதலாக ‘ரசாயன மாற்றம்' செய்வதாக உறுதி சொன்னான் அவன் -ஆமாம்; இந்தக் குழந்தையின் தகப்பன். அவள்பிள்ளைக்கனியின் தாய் உண்மையென்று நம்பினாள். உயிரும் உயிரும் ஒன்றாயின. உடலும் உடலும் முதல் இரவு விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடின. இருள் சிரித்த அந்தக் காட்டிலே., பூலோக சுவர்க்கத்தைத் தரிசித்தனர் காதலர்கள்.. ஆனால், காலம் சிரித்தது; ஊர் சிரித்தது; சமூகம் சிரித்தது. கண் கண்ட பூலோக சுவர்க்கமாம்" இக் குழந்தையைக் கையால் எடுக்கத் தெம்பீன்றி, அவளைப் பரபர வென்று இழுத்துக் கொண்டு "ஓடோடி விட்டான் அந்தப் பாவி! தேவலோகத்தில் மலர வேண்டிய பாரிஜாத மலர் வழி தவறிப் பூலோகத்தில் பூத்துவிட்டது!" என்றார். பார்வதி கொழுநன், கண்ணீருடன்.

"ஆதியே! பாரிஜாதம் கருகிவிடும் போலிருக்கிறது. நல்ல முடிவு காட்டுங்கள், துரிதப் படுத்துங்கள்!" என்று ஆதுரப்பட்டாள் சிவை. “”திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளுக்குச் சிரிக்கத் ' தானா தெரியாது.......?

உதயம். தெய்வச் சந்நிதியில் தெய்வகானம்;

சாதிகுலம் பிறப் பிறப்புப் பந்த முத்தி.
      அரு உருவத் தன்மை, நாமம்
ஏதுமின்றி எப்பொருட்கும் எவ்விடத்தும்
      பிரிவற நின்றியக்கஞ் செய்யும்
சோதியை மரத்தூரவெளியே மன தவிழ
      நிறைவான துரிய வாழ்வேத்
தீதில் பரமாம் பொருளைத் திருவருளே

      நினைவாகச் சிந்தை செய்வோம்!

தெய்வக் குழந்தையின் அழுகையொலி வர வரத் தேய்ந்து கொண்டிருந்தது.

இதய முள்ள யாரோ ஒரு செம்படவன் வந்தான்; குழந்தையைப் பார்த்தான்; அவனுடைய கண்ணீர்த் துளிகள் பேசும் பொற் சித்திரத்தைக் குளிப்பாட்டின. “குழந்தை! மேலுலகத்துப் பாரிஜாதப் பூ! ஆண்டவனே உன் மகிமையே மகிமை. எங்கள் பிள்ளைக் கலி தீர்ந்து விட்டது!” என்று ஆனந்தக் குரலைத் திக்கெட்டும் திசை பிரித்து வீட்ட வண்ணம், சேயும் கையுமாகப் பறந்தான்.

முக்கண்ணி சிரித்தாள்!

முக்கண்ணன் சிரித்தான்!

பாரிஜாதம் சிரித்தது!

இருட்டு—மை இருட்டு.

வண்ணக் களஞ்சியத்தை வாரியணைத்துக் கொஞ்சி மகிழ்ந்தவாறு வாசலில் அமர்ந்திருந்தான் அந்தச் செம்படவன். மெய்ம்மறந்திருந்தாள் அவனுடைய மனையாட்டி.

"அண்ணே , அண்ணே ! ஓடியா, ஓடியா! பாவம், யாரோ ஒரு பொம்பளை காட்டாத்திலே விழுந்திட்டா . நாங்க படகிலே காப்பாத்தினோம். பொனைக்கிறாளோ, என்னமோ, சங்கிலிக் கருப்பனுக்குத்தான் தெரியும்!"

அந்தப் பெண் மெல்ல மெல்லக் கண் திறந்தாள். கண்ணிர் வெள்ளம் புரண்டோடியது. அவள் கதறினாள் : "கடவுளே! நான் செஞ்ச குற்றத்துக்கா என் குழந்தையை என் கிட்டேயிருந்து பிரிச்சே? என்னை ஆசை காட்டிமோசஞ் செஞ்சவனைக் கொன்னுப்பிட்டு, என் குழந்தைக்காக ஓடோடி வந்தேனே....! பெற்ற வயிறு துடிச்சுச் சாகுதே? ஐயோ, என் ஆருயிர்ச் செல்வமே, இனி உன்னை எப்பிறப்பிலே கண்ணாலே காணப் போறேனோ?...என்னை மன்னிச்சிட மாட்டியா, தாயே? உனக்குத் தாயாகக் கொடுத்து வைக்காத பாவியாகிப்பிட்டேனே?- கொலைகாரி யாகிப்பிட்டேனே? ஐயோ....!"

அவளது விம்மிய மார்பகத்திலிருந்து பால் வெள்ளம் சுரந்தோடியது.

அவள் கண்கள் மூடிக் கொண்டன.

குழந்தை வீரிட்டு அழுதது!