உள்ளடக்கத்துக்குச் செல்

அவள் ஒரு மோகனம்/யார் அந்த ஆள்?

விக்கிமூலம் இலிருந்து

4. யார் அந்த ஆள்?


ருமை நிறக் கண்ணனாக வடிவம் அமைத்துக் கொண்டிருந்த கங்குலின் கருக்கல் பொழுது கழிய, விடியல் வேளை கண் சிமிட்டுகிறது.

முழுமையான இரவிலே, கடுகத்தனை நேரம் கூட, ரேவதி கண் அயரவில்லை. பட்டுத் தலையணையை தலைமாட்டிலும் இரப்பர் பஞ்சுத் துண்டுகளை கால்மாட்டிலும் பக்கவாட்டிலுமாகப் பரப்பிப் போட்ட வண்ணம், வண்ணக் கலாப மயிலென மல்லார்ந்து படுத்திருந்தவளுக்கு உடல் மாத்திரமல்ல, உள்ளமும் பரபரப்புக் கொள்ளவே, மாடிக் கூடத்தின் தாழ்களை விலக்கி, வெளியே வந்தாள்.

இயற்கையான காற்றில் அவளது பெண்மை இதமாகவும் ஆறுதல் அடைந்தது. திறந்த வெளியிலே, திறந்த மனத்தோடும் திறக்காத மேனியோடும் அங்கும் இங்கும் நடை பழகினாள். என்னவெல்லாமோ ஞாபகங்கள் காலத்தையும் தூரத்தையும் பொய்க் கணக்காக ஆக்கி சிலிர்த்து வெடித்தன.

கீழ்த் தளத்தில் பூங்குயில் ஐந்து முறை, லயம் தவறாமல் ‘குக்கூ’ வென்று கூவியது.

ரேவதி நின்றாள்.

அரசினர் பொது மருத்துவமனையிலே அவள் ஆறு மணி பணிக்குப் போனால் போதும்! இன்றைக்குச் சற்று முன்னதாகவே கிளம்பினால் கூடத் தேவலாம். மனம் இருப்புக் கொள்ளாமல் தவித்தது. நெற்றியில் வம்பு பண்ணிக் கொண்டிருந்த சுருள் அலை பாய்ந்த முடிகளை அடக்கி ஒதுக்கிக் கோதி விட்டாள். வெள்ளையாக என்னவோ தெரிந்தது! - நல்லவேளை, நரை இல்லை; மூக்குத்தியை திருகினாள். மார்பகத்தில் உறுத்திக் கொண்டிருந்த கழுத்துச் சங்கிலியைச் சற்றே தளர்த்தி விடலானாள். சங்கிலியில் தாலியா நிழலாடுகிறது! ஊகூம்; பதக்கமே தான்!

காலம் கரைவதாலேதான், காக்கையும் கரைகிறது போலும்!

பால்காரர் வந்து விட்டார் போலிருக்கிறது.

காப்பி ஞாபகம் வந்ததுதான் தாமதம்; ரேவதிக்கு உற்சாகமும் வந்து விட்டது. துண்டும் கையுமாகக் குளியலுக்குத் தயாரானாள்.

வழியிலே, நந்தியாக நின்ற பீரோவுக்குக் கீழே கால்களில் என்னவோ இடறவே, குனிந்தாள். கையில் தட்டுப்பட்ட பொருளைக் கையில் எடுத்தாள்; பார்த்தாள். பார்த்தவள், அதிர்ந்தாள்.

அதிர்ந்தவளுக்கு நெஞ்சத்திலே சுருக்கென்றது. மீண்டும் நெஞ்சில் முள் தைத்து விட்டதோ? நெஞ்சைத் தடவிக் கொண்டே சடுதியில், மீண்டும் பார்த்த போது, அவளைப் பார்க்க விடாமல் தடுத்தது சுடுநீர்க் கண்ணீர்! “இந்தத் திருமணப் படம் பீரோவிலிருந்து வெளியிலே எப்படி வந்திச்சாம்? ஏன் வந்திச்சாம்? ராத்திரி போதை மயக்கத்திலே, போதம் தவறி, என்னவோ தவறு நடந்து விட்டிருக்கலாம்! சரி...சரி... நான் புதிய ரேவதியாக ஆகித்தான் ஏழு ஆண்டு கனவு மாதிரி ஓடிப் போய் விட்டதே! இனி மேல் என்னவாம்?... பணிக்கடன்களை நிறைவேற்ற நாழிகை ஆகி விடவில்லையா?”

பூவின் மணமும் காபியின் மணமும் ஒன்றில் ஒன்றாக கூடிக் குலவிய நேரம்.

செக்கச்சிவந்த பிறை நெஞ்சில் குங்குமம் பளிச்சென்று சிரித்தது; மேல் மருவத்தூரில் அன்னை ஆதிபராசக்தியை தரிசித்த போது கிடைத்த அருள் பிரசாதம்.

இளமை மதர்ப்பு மாறாத எழிலார்ந்த மார்பகத்தில் பச்சை மண்ணாகக் கள்ளங்கவடு இல்லாமல் தவழ்ந்து கிடந்த நாடிக்குழல் அந்த நேரத்திலே அவளது மனத்தின் நாடியைப் பரிசோதித்திருக்கலாமோ? இல்லை, அவளது மனச்சாட்சியை நாடி பிடித்து சோதித்துப் பார்த்திருக்குமோ, என்னவோ? காபியைப் பருகி முடித்ததும் கூட, இன்னமும் அவள் ‘சப்பு’க் கொட்டினாள்.

மறக்கத் தெரிந்த உள்ளத்திற்கு நினைக்கவும் ஏன்தான் தெரிகிறதோ?

பறந்து போய் புதுக்கோட்டையில் நின்ற ரேவதி, பறந்து வந்து மேற்கு தாம்பரத்தில் நின்றாள். சிலிர்ப்பு அடங்கவில்லை. மார்பகம் எம்பி எம்பித் தணிய, தன் நினைவு கொண்டாள். அவள் கண்கள் திறந்தன; திறந்த கண்களில் கொட்டு முழக்கில் மணப்பந்தல் நின்றது; நடந்து முடிந்த மணவினைக்குச் சாட்சி சொன்ன நெருப்பும் நின்றது. “மிஸ்டர்...மிஸ்டர்!” பெயரைச் சொல்லி அழைக்க இயலாத தயக்கத்தோடும் தவிப்போடும் வலது பக்கத் தலையை திசை திருப்பினாள். சூடு பொறுக்காமல் சூன்யத்தில் தவித்தாள். கண்களை கசக்கிக் கொண்டாள். ஊகூம்; அவள் அழவில்லை!- அவள் ஏன் அழப் போகிறாள்? ரேவதியா, கொக்கா?-சிரித்தாள்!...

கூர்க்கா ‘சல்யூட்’ அடித்தான்.

புதிதாக மலர்ந்த ரோஜாப்பூவாக, ரேவதி டாக்டர் தலை வாசலில் நின்றாள்.

சரேலென்று பாய்ந்து பறந்து கொண்டிருக்கிறது, ‘மாருதி’!

சோளிக்கு இணை சேர்த்துக் கிளிப் பச்சையில் பிணை நின்ற ‘ஆர்கண்டி வாயல்’ சேலை நெகிழாமல், கால் மேல் கால் போட்டுக்கொண்டு, தனக்கே உரித்தான கருவத்துடனும் களிப்புடனும் துடுக்காகவும் மிடுக்காகவும் சாய்ந்திருந்தாள், டாக்டர் ரேவதி. மகப்பேறு நிபுணராகப் பொதுமக்கள் மத்தியில் பேர் பெற்றிருந்த பெருமையின் பெருமிதம், அவளது தோற்றப் பொலிவில், பளிச்சிட்டது.

கனவுகளுக்கும் காட்சிகளுக்கும் அப்பாற்பட்டவளாக, மனத்தை சமன் செய்து கொண்டு, கையில் பிரித்து விரித்திருந்த பேறு காலப் பிரச்சினை தொடர்பான புதிய ஆங்கில மருத்துவ ஆராய்ச்சி நூலை ஆர்வத்தோடும் அக்கறையோடும் வாசித்துக் கொண்டிருந்தாள். சங்கிலியின் பதக்கத்தோடு விளையாடிய விரல்களை திடு திப்பென்று உதறி, ‘பலே’ என்றாள். குரலில் உடன்பாடு தழுவிய ஓர் ஆமோதிப்பு இருந்தது. லண்டன் பேராசிரியர் டாக்டர் கிளேயர்ரெய்னர் தெரியப்படுத்திய ஆய்வுக் கருத்தின் வரிகளில் மறுபடி தமிழ் மனத்தைச் செலுத்தினாள். “நாடுகளிடையே நடந்த பெரும்பாலான மருத்துவக் கருத்தரங்குகளிலே பெரும்பான்மை பலம் பெற்ற கருத்து இது. அதாவது-கருவுற்ற மனைவி பேறு காலத்தை எட்டிக் கொண்டிருக்கிற கடைசி ஏழெட்டு வாரங்களிலேயே அவளது விருப்பத்துக்கு விரோதமாக கண்வன் அவளை உடலுறவுக்குக் கட்டாயப்படுத்துவதோ, துன்புறுத்துவதோ தீவினையாக முடியக் கூடும்; இத்தகைய அசம்பாவிதம் காரணமாக, கருச் சிதைவு ஏற்படவும், அதன் தீய விளைவாக, மனைவியின் உயிருக்கே ஆபத்து ஏற்படவும் ஏதுவாகலாம்!

‘டக்’ என்று மூடினாள், நூலை. இதயத்தை என்னவோ செய்வது போன்ற உணர்வு ஏற்பட்டது: மார்பின் இடது புறத்தில் இடக்கை விரல்களால் தடவிப் பார்த்தாள் மறுநொடியில் சலனம் கண்டிருந்த அவளது முகத்தில் ஓர் அலட்சியம் படர்ந்தது. முகக் குறிப்பில், எதையும் தாங்கும் மனப்பக்குவம் அவள் சார்பில் குறி சொல்லியிருக்க வேண்டும்!

விரல்களிலே திடீரென்று ஈரம் பரவ, நிமிர்ந்து அமரலானாள். இமை விளிம்புகளை தொட்டுப் பார்த்தவள், திடுக்கிட்டாள். “நான் அழுதேனா?”-ஈரம் உலர அரை வினாடி போதும்!

‘மாருதி’ அதற்குள் சைதாப்பேட்டையைத் தாண்டி விட்டது.

உள்ளத்தை ஒரு நிலைப்படுத்தியபடி கைப்பெட்டியில் ஒரு கையைச் சாய்த்துக் கொண்டு, கால்களைச் சரளமாக நீட்டி ஆசுவாசப்படுத்திக் கொண்டாள், அவள்.

என்ன இரைச்சல்?

குழந்தை வீறிட்டு அழுகிறதே!

பதைப்புடன் சுற்றி நோக்கினாள், ரேவதி.

கண்ணாடிச் சிறையில் சூனியம்தான் கைகொட்டிச் சிரித்தது.

உந்திக் கமலத்தில் விம்மல் வெடித்தது.

அவள்-ரேவதி-செல்வி ரேவதி தனது வயிற்றை, அடி வயிற்றைத் தன்னை மறந்த நிலையில், தன்னை மீறிய நிலையில் தடவிக் கொண்டாள்.

“உங்கள் கிட்ட எத்தனை முறை கெஞ்சிக் கூத்தாடினேன்? நீங்கள் கேட்கல்லே. மோக வெறி கொண்டு, வாயும் வயிறுமாக இருந்த என்னைப் பட்டப் பகலில் கட்டாயப்படுத்த, வைத்தியம் படித்ததாலே நானும் வலுக்கட்டாயமாக உங்கள் கிட்டேயிருந்து தப்பிச்சேன். அதுக்காக என்னை- “தேவதை”, “தேவதை”ன்னு வாயாரப் புகழ்ந்த என்னை-எப்படி உதைச்சுத் தள்ளி விட்டு ஓடிட்டீங்க? கடைசியிலே என்ன நடந்தது. ஆமா... ஆமாங்க... ஞானசீலன்!...” வாய்விட்டுச் செருமினாள், டாக்டர் ரேவதி.

சொகுசான கார், சொகுசை விட்டு கிறீச்சிட்டு நின்றது.

“அம்மா உங்கள் உடம்புக்கு ஒண்ணும் இல்லீங்களே?”

ஏறிட்டு விழித்தாள்; பதற்றம்; சோகப் பெருமூச்சு. கண்கள் தளும்பின. சமாளித்துக் கொண்டு “எனக்கு எதுவும் ஆகிடல்லே; ஆகவும் விட மாட்டேன். வண்டியை வேகப்படுத்துங்க, பெரியவரே!” என்று ஆணையிட்டாள் ரேவதி.

அவளுக்கு இப்போது சுதந்திரமான வெளிக் காற்று தேவைப்பட்டது.

கண்ணாடிகளை இறக்கினாள்.

மனித மந்தை கிளை பரப்பி முட்டி மோதிக் கொண்டும், முட்டாமல் விலகிக் கொண்டும் தன்னை போர்வைக்குள் முடங்கியபடி நகர்ந்தது; விரைந்தது; ஓடியது.

அதோ, ரேவதி மருத்துவ மனை.

வாசலில் என்ன கூட்டம்?

பொது நல மருத்துவப் பணியின் உயிர்ப் பண்பான மனிதாபிமான உணர்வுகள் இப்போதும் டாக்டர் ரேவதியிடம் மேலோங்கி நிற்கவே, வெகு பதட்டத்தோடும் மிகப் பரபரப்போடும் இறங்கினாள்.

‘யாருக்கோ, என்னவோ விபத்து ஏற்பட்டிருக்க வேணும்! தெய்வமே; அவரோட உயிருக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லாமல் நல்லபடியாக காப்பாத்திக் கொடுத்திடு!’-ஜப மாலைக்குப் பதிலாகத்தான் அவள் அப்போது தனது கழுத்துச் சங்கிலியை உருட்டியவளாகப் பிரார்த்தித்துக் கொண்டாளோ?

கண்கள் கலங்க, கூட்டத்தைத் துழாவினாள்.

கூட்டத்தில் நின்றவர்களிலே யாருக்கும் எந்த அடியும் பட்டதாகத் தெரியவில்லை! அப்படியென்றால், ஏன் இந்தக் கூட்டம்?

பார்வையைத் திருப்பினாள். பகீரென்றது. அந்தக் கறுப்பு நிற வாடகைக் கார் வெறுமையாகக் காட்சி தரவே, அவளது இதயத் துடிப்பு அதிகரித்தது.

“யாரோ ஒருவர் என் வண்டியிலே சவாரி வந்தாருங்க; மனிதர் பின் கதவை சரியாகச் சாத்திக்கிடல்லே போலிருக்கு . போதும் போதாததுக்குப் போதையில வேற இருந்திருக்காரு. பனகல் பூங்கா முக்கத்திலே வண்டி வேகமாய்த் திரும்பறப்ப, கதவு படார்னு தன்னாலே திறந்துக்கிடுச்சி. அவர் உருண்டு கீழே விழுந்திட்டார். பாவம், அடிபட்ட ஆளை இப்பத்தான் உள்ளாற கைத்தாங்கலாய் அழைச்சிக்கிணு போயிருக்காங்க, அம்மா!”

வண்டி ஓட்டுனர் இரக்கத்தின் விலங்கு பூட்டியிருந்த கைகளைப் பிசைந்து கொண்டு கலவரத்தோடு நின்றார்.

நெருப்பில் இடறி விழுந்து விட்டவளைப் போன்று பதை பதைத்த வண்ணம் உள்ளே விரைந்தாள் டாக்டர் ரேவதி.