அவள் ஒரு மோகனம்/நெஞ்சில் குத்திய முள்!

விக்கிமூலம் இலிருந்து


3. நெஞ்சில் குத்திய முள்!


ரேவதியைப் பொறுத்த மட்டில், அவளுக்கு அவள் பெயர்தான் உயர்வு; அந்த உயர்வு மனப்பான்மைதான் அவளுக்கு உயிராகவும் உலகமாகவும், வாழ்வாகவும் இருந்து வந்தது; இருந்து வருகிறது. ஆகவேதான், அவள் ஒரு தனிப்பிறவியாக மதிக்கப்பட்டும், விமர்சிக்கப்பட்டும். வருகிறாள்.

‘ரேவதி இல்லம்’ தளதளத்தது.

காலம் ஒரு புள்ளிமான் என்பது சரிதான்.

மணி எட்டு அடித்தது.

மணியோசை அடங்குவதற்குள், அவள் மாடியில் தனது அந்தரங்க அறையில் ‘டாண்’ என்று வந்து நின்றாள்.

ஒளி விளையாடுகிறது.

காற்று விளையாட்டுக் காட்டுகிறது.

‘ஸ்டெதஸ்கோப்’ இராப் பொழுதிலும் ஓய்வு காணத்தான் வேண்டும்.

ரேவதி புன்னகை செய்கிறாள். அவளது புன்னகையில் அவளே மயங்குகிறாள். கிறங்கவும் செய்கிறாள். இந்தப் புன்னகை சாமானியப்பட்டதா, என்ன?

நிலைக்கண்ணாடி நகர்கிறது.

அவளும் நகர்கிறாள்.

திறந்த வெளியில் சற்றே நடந்து, கீழ்ப்பக்கத்து சுவரில் சாய்ந்தபடி, சிந்தனை தடுமாற்றத்தை சமாளிக்க முயல்கிறாள். நெஞ்சின் அலைகளுக்கு ஓய்வு தேவை. ஒரு மாறுதலை வேண்டி, தனக்கு வெளியே தெரிந்த உலகத்தை சந்திக்க முனைந்தாள்.

மேற்குத் தாம்பரத்தின் பிலிப்ஸ் மருத்துவமனை. வித்யா தியேட்டர் பகுதிகளில் நெளிந்த அமைதியான இயற்கையின் அழகை நிதானமாக அனுபவிக்க அப்போதும் அவள் தவறி விடவில்லை.

ஆயா அங்கம்மா நின்றாள். அவள் கைகளில், உறைக் கடிதம் ஒன்று ‘தனிப் பார்வைக்கு’ என்ற எச்சரிக்கையோடு காணப்பட்டது.

இப்போது-

அந்த அந்தரங்கக் கடிதம், ரேவதியின் பரிபூரண அந்தரங்கத்துக்குப் பாத்திரமான ‘டூரோஃப்ளக்ஸ்’ மெத்தையில் சல்லாபமாகவோ சரசமாகவோ கிடக்கிறது!

டாக்டர் ரேவதிக்கு மட்டும்தான் இரவு-பகல் என்கிற வித்தியாசம் இல்லாமல் வாழ்க்கையின் பொறுப்புகளும், தொழிலின் கடமைகளும் காத்துத் தவம் கிடக்கும் என்பதில்லை.

குமாரி ரேவதிக்கும் அப்படித்தான்!

அப்படியென்றால்....

டாக்டர் ரேவதிக்கும் குமாரி ரேவதிக்கும் வித்தியாசம் ஏதும் கிடையாதென்று பொருளா?

'ஊகூம்.. நான் வேற; டாக்டர் ரேவதி வேறதான்! இப்படிப்பட்ட வித்தியாசத்திலேதான், எங்கள் இரண்டு பேரோட உயர்வும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு மின்ன முடியுது. ஆனாலும், இந்த உயர்வுப் போட்டியிலே வெற்றி யாருக்கு தோல்வி யாருக்கு என்கிற சிக்கலே எங்கள் இரண்டு பேருக்கும் ஊடால நாளது வரையிலும் ஏற்படாதது அதிசயம்தான்! அதிசயம் என்ன அதிசயம்?... மனத்துக்கு மனம்தான் சாட்சியாகும்! எங்களோட கதையும் அப்படித்தான்!’ - எதிர்ப்புறத்துச் சுவரில் அழகு கொட்டிக் கொண்டிருந்த நாடிக் குழலைப் பெருமையோடு பார்த்துப் பெருமையோடு சிரித்தவளாக நடை தொடர்ந்தாள் ரேவதி. வெள்ளைக்கல் மூக்குத்தி பளீர் என்றது.

தொலைக்காட்சிப் பெட்டி அன்புடன் அழைக்கிறது.

“நேரமில்லை.”

‘வீடியோ’ ஆர்வத்தோடு கூப்பிட்டது. அமர்த்தலாக, “இப்போ என்னால் வரமுடியாது!” என்கிற பாவனையில் தலையைக் கிழக்கு மேற்காக அசைத்து விட்டு நடையைத் தொடர்ந்தாள், ரேவதி.

அந்தி நேரத்துச் செய்திகளில் சூடு இன்னமும் ஆறாமல் இருக்கலாம்.

“சமதர்ம சமுதாயம் உருவாக, பாரதத் தாயின் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு உன்னத இந்தியாவை உருவாக்குவோம்!”

குடியரசுத் தலைவரின் 38-வது குடியரசு விழாச் செய்தி விரிந்தது.

விரிந்த மனத்தோடும் திறந்த மனத்தோடும் செய்தியில் ஒன்றினாள், ரேவதி. ஓர் அரைக்கணம் கண்களை மூடினாள்; மூடிக் கொண்டாள்! புதிய பாரதத்தில், புதிதான பாரத சமுதாயம் அழகாகவே தரிசனம் தந்தது. கண்கள் மெல்ல மெல்ல திறக்கின்றன.

அங்கே ஊதுவத்தியிலே தாழம்பூவின் அழகான மணம் ஆனந்தமாக எரிந்தது.

மெய் மறக்கிறாள். ரேவதி.

“குட் ஈவினிங், மேடம்!”.

அந்தரங்கச் செயலர் ராவ் கைகளில் கொத்துக் கடிதங்களுடன் முத்துநகை தெளித்து நின்றார்!

இடது கை விரல்களை மயில் மாதிரி ஒயிலாக அசைத்து, உதவியாளரின் இரவு வணக்கத்தை ஆமோதித்து ஏற்றுக் கொண்டவளாக, “89 பிப்ரவரி நாலில் நான் நடத்தப் போற காதல் சுயம்வரத்துக்கு, இன்றைக்கு எத்தனை ஆண் சிங்கங்கள் மனு பண்ணியிருக்காங்க?” என்று விசாரணை செய்தாள், அவள்.

கேள்வியில் அலட்சியமானதொரு விசித்திரப் போக்கு குரல் கொடுக்காமல் இல்லை. ஆனாலும், கவர்ச்சியான அவளது கண்களில் மட்டும் ஒரு சித்திரமான கற்பனை ஆசையுடனும் ஆதங்கத்துடனும் வலைப் பின்னிக் கிடக்கிறதே!

“இன்று பத்தோடு நின்னு போச்சுங்க, மேடம்” என்னும் விடையையும் அவள் கணப்பொழுதில் சீரணித்துக் கொள்ளவும் செய்தாள். “மிஸ்டர் ராவ், உங்கள் மனைவி உங்களுக்காகக் காத்திருப்பார்! நீங்கள் போகலாம்” என்று விடை கொடுத்தாள்.

ரேவதி நெற்றியைத் தடவிக் கொண்டாள். நெற்றிக் கண்ணைத் தேடியிருப்பாளோ! ‘தனிப் பார்வைக்கு’ என்பதாக ஒரு கடிதம் வந்திருந்ததே! நடந்தாள், பதட்டமும் கூடவே நடந்திருக்க வேண்டும்.

உறை தாறுமாறாகக் கிழிகிறது.

தியாகராயநகர்,
25–1–1988

“அம்மா ரேவதி அவர்களே! உங்கள் க்ஷேமலாபம் எப்படி?
நீங்கள் நலம்தானே!

உங்கள் மனமும் நலமாய் இருக்கிறதுதானே?
இப்படிக்கு,
உங்கள் மனசாட்சி”

ரேவதியின் ஊதாச் சோளி நனைந்து, ஈரம் ஆயிற்று; பற்களை ‘நறநற’வென்று கடித்துக் கொண்டாள். “மிஸ்டர்! கேலி பண்றீங்களா?... உங்களுக்கு இத்தனை நெஞ்சுத் துணிச்சலும் நெஞ்சழுத்தமும் வந்திடுச்சா? மறுபடியும் நான் ஞாபகப்படுத்துகிறேன். நான் ரேவதி... மிஸ் ரேவதியாக்கும்!” விழிகளில் ரத்தம் சூடேற்றியது; ஆத்திரத்திலும் கூட, முகப்பருக்கள் கவர்ச்சியை சிந்த மறக்கவில்லை!

அந்தரங்கக் கடிதமும் சுக்கல் நூறாகக் கிழிந்தது.

விதியின் எழுத்துக்கள் காற்றில் பறந்தன!

ரேவதி சிரித்தாள்.

சிரித்தது ரேவதிதானா? ரேவதியேதானா!...

எழுந்தாள்.

நடந்தாள்.

பீரோவின் இரகசியமான டிராயரை இழுத்தாள்.

அந்தத் திருமணப் படத்தை திரும்பவும் எடுத்து திரும்பவும் பார்த்தாள். ஆத்திரமும் சோகமும் முட்டி மோத, நெடுமூச்சு நீளமாக வெளியேறியது.

அந்தக் கடிதத் துண்டுகள் காற்றில் தத்தளித்தன.

“மனசாட்சியாம்... மனசாட்சி! இந்த மனுஷன் குழிப் பிணத்தைத் தோண்டியெடுத்து ஒப்பாரி வைக்கிறதாட்டம், தான் அடைஞ்சிட்ட தோல்வியோட ஆத்திரத்திலே என்னமோ கிறுக்கியிருக்கார்! இந்த ஏழு வருஷத்திலே இது எட்டாவது கடிதம்.” நடந்தாள் ரேவதி.

கணங்கள் பூ நாகங்களாக நெளிந்தன.

அவளுக்கு இப்போது தேவை : வடிகால்.

‘ராயல் டெப்ளமட்’ தேடி வந்தது.

ராஜதந்திரமா தேடல்தான்!

இரண்டுக்கு மூன்று வாயாக சுவைத்துச் சுவைத்துப் பருகினாள்.

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியிருந்த டாக்டர் சத்தியன் டாக்டர் ரேவதிக்கு அளித்த பரிசு அது. சத்தியன் தங்கமானவர்; இருதய நோய் அறுவைச் சிகிச்சை நிபுணரும் கூட. இதயம் உள்ள ‘ஸ்பெஷலிஸ்டு’ மனிதர். காலையிலேயே காந்தி நகரிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொள்வதாகச் சொல்லியிருந்தார்; வாக்குத் தவற மாட்டார்!

செக்கச் சிவந்த உதடுகள் மறுபடி ஈரம் ஆயின.

விழிகள் மேலும் சொக்கின.

மேனி சிலிர்த்திட மெய்மறந்தாள் ரேவதி. அவள் சுதந்திரம் அப்படித்தான்!

'பிப்ரவரி நாலு'. அவள் மனச்சாட்சி தேதியை சுட்டிக் காண்பித்தது. மூடித் திறந்த கண்களில் காதல் சுயம்வரம் நடந்து காட்டியது; நடித்துக் காட்டியது.

பத்திரிகையில் ‘மணமகன் தேவை’ விளம்பரத்தை கொடுத்தாலும் கொடுத்தாள். இறுதித் தேதி முடிவதற்குள் ஏகப்பட்ட விண்ணப்பங்கள்; கோப்புக் கொள்ளாமல் நிரம்பி வழிந்துவிட்டன! சோதனைதான்! அவள் சோதிக்காத சோதனைகளா?... சோதனை இப்போது யாருக்காம்? அவளுக்கா? அவள் மனத்திற்கா? அல்லது, அவள் மனச்சாட்சிக்கா?

“பிப்ரவரி நாலில் வெறும் ரேவதியான நான் திருமதி ரேவதி ஆகி விடுவேன்!... ஆ... அம்மா...”

துடித்தாள் ரேவதி. நெ(ரு)ஞ்சி முள் குத்தியிருக்குமோ?!