நல்ல தோழிதான்/தோழி நல்ல தோழிதான்!
தோழி, நல்ல தோழிதான்!
"உந்தன் மனநிலையை நான் தெரிந்து கொண்டேனடி தங்கமே தங்கம்!" என்று சொல்லி, வளைகள் கலகலக்கும்படியாகக் கைகொட்டி, களி துலங்கும் குலுக்குச் சிரிப்பு சிந்தினாள் ராஜம்மா.
"என்னைத்தையடி கண்டு விட்டாய் பிரமாதமாக?" என்று சிடுசிடுத்தாள் தங்கம்.
அவள் சிநேகிதி சிரித்தபடி சொன்னாள்: "நெல்லுக்குள்ளே அரிசி இருக்கிறது. எள்ளுக்குள்ளே எண்ணெய் கலந்திருக்கிறது. உன் மனசுக்குள்ளே காதல் புகுந்திருக்கிறது. இதை எல்லாம்தான்."
தங்கம் பதில் பேசவில்லை. தோழியின் விழிகளைச் சந்திக்க மறுத்த அவளுடைய அஞ்சனம் தோய்ந்த கண்களும், செம்மை படர்ந்த முகமும், தலை தாழ்ந்து கொண்ட நிலையும் 'ராஜம்மா பொய் சொல்லவில்லை' என்று விளம்பரப்படுத்தின.
"என் அருமைத் தங்கம் டாக்டரிடமும், தோழியிடமும் உள்ளதை உள்ளபடி சொல்லிவிட வேண்டும், தெரியுமா? மனசில் உள்ளதை வெளிப்படையாகச் சொன்னால்தான் நன்மை பிறக்க வழி ஏற்படும். அதனாலே, என்னிடம் சொல்வாய் தோழி. உன் உள்ளம் கவர்ந்த கள்வன் யாரோ? என்ன பேரோ? எந்தத் தெருவோ?" என்று நீட்டி நீட்டிப் பேசினாள் ராஜம்மா.அவள் இருக்கிற இடத்திலே சிரிப்பும் துணை இருக்கும். ஹுய்-ஊய்ய் என்ற கூச்சலும் கீச்சொலியும் விஜயம் செய்து போகும். குஷியும் கும்மாளியும் வளையமிட்டுக் கொண்டே இருக்கும். அமைதி என்பதை அறிந்து கொள்ளாத அழகி ஆவள். மெளனம் என்பதைக் கலையாகவோ, பண்பாகவோ போற்ற விரும்பாத குமரி அவள்.
அவளுடைய தோழி தங்கம் "சாதுக் குழந்தை." "அடித்தால் கூட அழத் தெரியாத பாப்பா, இல்லை இல்லை; அழ விரும்பாத பேதை" என்று ராஜம்மா கிண்டலாகக் குறிப்பிடுவது உண்டு. சிநேகிதிகளை சாதாரணமாகவே கெண்டை பண்ணி மகிழும் சுபாவம் உடைய ராஜம்மா குத்திக் குத்தி கேலி செய்வதற்கு விஷயம் கிடைக்கிற போது சும்மா இருந்து விடுவாளா?
"தங்கம் உன்னுடைய... உம், வந்து. உம். உன்னுடைய... என்னவென்று சொல்ல?. ஆமா ஆமா... காதலர் எப்படிப்பட்டவர் என்று நான் சொல்லட்டுமா?" "ஆவாரா" ஸ்டைலில் டிரஸ் செய்து கொண்டு, திலீப் குமார் மாதிரி கிராப் வளர்த்துக் கொண்டு, ஜிப்பி பாணியில் வேலைத்தனங்கள் செய்து...
"சீ போ!" என்று சீறிப் பாய்ந்தாள் தங்கம்.
'தெரியும் தங்கம்!' என்று இழுத்தாள் தோழி. ஒரு நபரைக் காணாத போதெல்லாம் எங்கள் தங்கத்தின் மையுண்ட கண்கள் காற்றில் அலைபட்ட கருமேகங்கள் போல அங்கும் இங்கும் உருண்டு புரண்டது எங்களுக்குத் தெரியாதா? பஸ் ஸ்டாப்பிலே தவம் செய்ததும், கடலோரத்திலே காத்து நின்றதும், ரோட்டிலே ஏங்கி நடந்ததும் நாங்கள் அறிய மாட்டோமா? அந்த நபர் வரக் கண்டதும் எங்கள் தங்கத்தின் முகம் செந்தாமரையாக மாறியதும், அவள் கண்கள் படபடத்ததும், இதழ்க் கடையிலே குறுநகை பூத்ததும் நாங்கள் அறியாத விஷயங்களா? அந்த துஷ்யந்த மகாபுருடரும் எங்கள் சகுந்தலை அம்மாளும் கண்களை புறாக்கள் ஆக்கிக் காதல் தூது விட்டு மகிழ்ந்து போவதைத்தான் நாங்கள் தெரிந்து கொள்ளவில்லையா?.......
“ஐயோ ராஜம், சும்மா இரேன்!” என்று தங்கம் கெஞ்சினாள்.
“சும்மா இருந்தால் ஆகாதடி தங்கம். காதல் வளர வேண்டுமானால் தோழியின் தயவு தேவை. நீதான் இலக்கிய ரசிகை ஆயிற்றே; உனக்குத் தெரியாத விஷயமா இது?” என்று ராஜம்மா சொன்னாள்.
இப்படிப் பேசிப்பேசி அவள் தங்கத்தின் உள்ளத்தில் வளர்ந்த ரகசியத்தை உணர்ந்து விட்டாள். “தங்கத்துக்கு துணிச்சல் கிடையாது. அச்சம், மடம், நாணம் வகையறா அளவுக்கு அதிகம் இருக்கிறது!” என்பது தோழியின் அபிப்பிராயம். ஆகவே, தன் சினேகிதிக்குத் துணைபுரிய வேண்டியது தனது கடமை என்று ராஜம்மா தானாகவே முடிவு செய்து, செயல்திட்டத்திலும் ஈடுபட்டு விட்டாள். புதுமைப் பெண் அவள். பயம், தயக்கம் போன்றவை அவள் பக்கம் தலைகாட்டத் துணிவதில்லை.
ராஜம்மாளின் உதவியினால் தங்கமும், அவள் பார்வைக்கு இனியனாக விளங்கியவனும் பேச்சு பரிமாறிக் கொள்ளும் நிலைபெற முடிந்தது.
ஒரு சமயம் ‘பஸ் ஸ்டாப்’பில் தங்கமும் ராஜாம்மாளும் நின்ற வேளையில், அவனும் சிறிது தள்ளி நின்று கொண்டிருந்தான். ராஜம் தன் சிநேகிதியோடு சிரித்துப் பேசி மகிழ்ந்ததை அவனும் ரசித்தான். அப்போழுது வேகமாக ஒரு டாக்ஸி வந்தது. ரஸ்தாவில் மழைநீர் தேங்கிக் கிடந்தது. டாக்ஸியின் வேகம் தண்ணீரில் அதிர்ச்சி உண்டாக்கியது. நீர்த்துளிகள் மேலெழுந்து எங்கும் சிதறித் தெறித்தன.
இந்த விபத்தை, ராஜம்மா மட்டுமே முன்கூட்டி, உணர்ந்தாள். டாக்ஸ்யியின் சக்கரங்கள் நீரில் பாய்ந்ததுமே, அவள் ‘ஊஊ... ஊய்ய்!’ என்று கீச்சிட்டு ஒரு துள்ளுத்துள்ளி பின்னால் விலகிக் கொண்டாள். மற்ற இருவரும் திடுக்கிட்டு அவளை நோக்கிய வேளையில், நீர்த்துளிகள் அவர்கள்மீது பட்டு விட்டன.
‘ஐயே!’ என்றாள் தங்கம்.
‘செச்சே!’ என்று வருத்தப்பட்டான் இளைஞன்.
‘டாக்ஸி ஹோலி-ரங்க ஹோலி கொண்டாடி விட்டு ஓடுகிறது. பரவால்ல. காய்ந்ததும் சரியாகிவிடும்’ என்று ராஜம்மா சொன்னாள். அவனையும் தங்கத்தையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டே பேசினாள் அவள்.
அவன் அசட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டு மேலும் கீழும் பார்த்தபடி நின்றான். பிறகு ‘என்ன இருந்தாலும் இந்த டாக்ஸிக்காரங்க செய்வது அநியாயம். இப்படியா கண்ணை மூடிக் கொண்டு வேகமாகப் போவது?’ என்றான்.
“அது சரிதான், நமது கண்களும் சரியாகக் கடமையை செய்வதில்லை. சில சமயங்களில், ஏதாவது ஒரு காரியத்தில் தீவிரமாக ஆழ்ந்து, சுற்றுப்புறத்தைக் கவனிக்க மறந்து விடுகின்றன” என்று வம்பளந்தாள் ராஜம்.
“சும்மா இருக்க மாட்டியா, ராஜம்?” என்று தங்கம் முணுமுணுத்தாள்.
இவள் பெயர் தெரியவில்லையே என்று பார்க்கிறீர்களா? இவள் தங்கம்! என்று அவனுக்கு எடுத்துச் சொன்னாள் தோழி.
“போடி என்று எரிந்து விழுந்த தங்கம் கீழே பார்வையைச் செலுத்தி நின்றாள்”.
“தங்கத்துக்குக் கோபம். அவள் பெயரைச் சொல்லி விட்டேனே என்பதனால் அல்ல. உங்கள் பெயரைக் கேட்டுச் சொல்லவில்லையே என்று தான்” எனக் கூறிய சிநேகிதி, இல்லையா தங்கம்? என்று கேட்டாள். ஒய்யாரமாகச் சிரித்தாள்.
அவளுடைய சாதுர்யத்தை வியந்து ரசித்து, மகிழ்ந்தான் அவன். ‘என் பெயர் சந்திரன்’ என்று அறிமுகப் படுத்திக் கொண்டான்.
அதன் பிறகு அவர்கள் சந்திப்பதும், பேசிக் களிப்பதும், உலா போவதும் நித்திய நிகழ்ச்சிகள் ஆகிவிட்டன. அத்தகைய சந்தர்ப்பங்களில் எல்லாம் ராஜம்மாவும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று தங்கம் வற்புறுத்தினாள். தோழியும் உடன் வருவதனால் தான் பொழுது பொன்னாகக் கழிகிறது; பேச்சு சுவையாகக் கனிகிறது என்றே சந்திரனும் உணர்ந்தான்.
ஒருநாள், சில செடிகளில் அழகு மயமாகப் பூத்து விளங்கிய புஷ்பங்களை அவர்கள் கண்டு ரசிக்க நேர்ந்தது.
“இந்தப் பூக்கள் ரொம்ப அழகாக இருக்கின்றன; இல்லையா?” என்றாள் தங்கம்.
“செடியில் பூத்துக் குலுங்குகிறபோது மலர்களின் அழகு தனிதான்” என்று சந்திரன் சொன்னான்.
"இருக்கலாம், ஆனாலும், அந்நிலையைவிட அதிகமான அழகை அதே புஷ்பங்கள் பெறுவதும் உண்டு” என்று ராஜம்மா கூறினாள்.
அவ்வேளையில் அவள் கண்களிள் பார்வை மிகவும் வசீகரமாக இருந்தது. குவிந்த மலர் போன்ற இதழில் சிலிர்த்து நகை கவர்ச்சிகரமாகத் திகழ்ந்தது. அவளுடைய முகமே முழுதலர்ந்து இளம் வெயிலில் மினுமினுக்கும் அருமைான புஷ்பம் போல் மிளிர்ந்தது.
அம் முகத்தை வெகுவாக ரசித்த சந்திரன் கேட்டான் ‘எப்போது?’ என்று.
“காதலுக்கு உரியவளின் கூந்தலிலே கொலுவிருக்கிற போதுதான், வேறு எப்போது?” என்று கேட்டு அருவிச் சிரிப்பை அள்ளி வீசினாள் தோழி.
தங்கத்தை வெட்கம் பற்றிக் கொண்டது. சந்திரனின் உள்ளத்தில் ஆனந்தம் பொங்கிப் பொங்கி வழிந்தது.
அவன் கைநிறைய புஷ்பங்களைக் கொய்து தங்கத்திடம் கொடுத்தான். அவற்றை வாங்கிக் கொண்ட தங்கம் கைகளில் ஏற்றியபடியே நின்றாள்.
“ஏன் தலையில் சூடிக்கொள்ளவில்லை?” என்று அவன் விசாரித்தான்.
“தானாக வைத்துக் கொள்வதைவிட, காதலனே புஷ்பங்களைக் காதலியின் கூந்தலில் சூட்டுகிற போது அதிக இன்பம் உண்டாகும். பூக்களும் தனிச் சிறப்பைப் பெறும்” என்று ராஜம்மா சொன்னாள்.
‘சந்திரனும் அப்படியா!’ என்று கேட்டுச் சிரித்தான்.
‘போடி வாயாடி!’ என்று சீறிய தங்கம் மலர்களைத் தோழியின் மீது விசிறி அடித்தாள்.
“ஐயோ பாவம்! பூக்கள் வீணாய்ப் போச்சு. அவற்றை என்மேலே விட்டெறிந்ததற்கு பதிலாக அவர்மீது வீசி இருந்தாலாவது ஜாலியாக இருந்திருக்கும்” என்று தோழி தெரிவித்தாள்.
“ஐயோ! என்று முணங்கிய தங்கத்தின் முகம் செக்கச் சிவந்து விட்டது.
இத்தகைய இனிமைகளை ரசிக்காமல் இருந்து விட துடியுமா சந்திரனால்?
தோழி இல்லாத சமயங்களில், அவனுக்கும் தங்கத்முக்கும் என்ன பேசுவது என்றே புரியாமல் போய் விடுவதும் உண்டு. ராஜம்மா உடனிருந்தால் விஷயப் பஞ்சம் ஏற்படவே ஏற்படாதே என்று அவன் எண்ணுவான்.
தங்கம் சங்கோஜம் உடையவள். கலகலப்பாகப் பேசிப்பழகும் சுபாவம் அவளிடம் இல்லை. அதனால் சந்திரன்தான் பேச்சுக்குப் பொருள் தேடித் திண்டாட வேண்டிய அவசியம் ஏற்படும். சிலசமயம் அவன் பேச்சு அவளுக்கு ‘போர்’ அடித்துவிடும். ஆனால் அவளுடைய மெளனமே அவனுக்குப் பெரிய ‘போர்’ ஆக இருந்தது.
ராஜம்மா திடீரென்று தனது ஊருக்கப் போக நேர்ந்தது. திரும்பி வருவதற்குள் தங்கத்தின் காதல் வெறும் அரும்பு நிலையிலேயே இருக்காது என்று அவள் நினைத்தாள். இதங்குள் மலர்ச்சியுற்றிருக்கும். மனம் பரப்பும் நிலை வந்திருக்கும் என்று அவள் ஒரு கடிதத்தில் எழுதினாள். எல்லாம் வழக்கம் போல் தான் என்று தங்கம் எழுதிய பதில் தோழிக்கு திருப்தி தரவில்லை. ஆகவே அவள் சந்திரனுக்குக் கடிதம் எழுதினாள்.
“நான் எவ்வளவோ காதல் கதைகள் படித்திருக்கிறேன். சினிமாவிலும் நாடகங்களிலும் பலரகமான காதல் ஜோடிகளைக் கண்டிருக்கிறேன். வாழ்க்கையிலும் அநேக காதலன் காதலிகளையும், அவர்கள் காதல் முடிவுகளையும் பற்றி அறிந்தது உண்டு. எனக்கு சந்திரன்-தங்கம் காதல் அதிசயமாகவே தோன்றுகிறது. இன்னும் ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறதே அது! இதை அறியும்போது சிரிப்பதா அனுதாபப்படுவதா என்றே எனக்குப் புரியவில்லை” என்று அவள் எழுதினாள்.
சந்திரன் பதில் எழுதினான். அவள் தனது பண்பின்படி கேலி செய்தும் சுவையான விஷயங்கள் சேர்த்தும் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தாள். சுவாரஸ்யமில்லாமல் பதில் எழுதி வந்த தங்கம் நாளடைவில் கடிதம் எழுதுவதையே விட்டு விட்டாள். அவளைப் பற்றிக் குறைகூறியும் மனம் கசந்தும் எழுதி வந்த சந்திரன், ராஜம்மாளைத் துதி பாடத் தொடங்கியிருந்தான். அடிக்கடி அவளுக்குக் கடிதம் எழுதுவதில் ஆர்வம் காட்டினான் அவன்.
ரசமான பொழுதுபோக்கு என்று மகிழ்ச்சியோடு இவ் விவகாரத்தில் ஈடுபட்ட ராஜம்மா உண்மையை உணர்ந்து கொண்டாள். சந்திரன் தங்கத்தின்மீது கொண்டிருந்த காதல் கருகிவிட்டது; காதல் பயிரை அவள் சரியாக வளர்க்கத் தவறிவிட்டாள் என்பது புரிந்தது.
இனி என்ன செய்யலாம் என்ற யோசனை ராஜத்தை அலைக்களித்தது. அவள் சந்திரனின் கடிதங்களுக்குப் பதில் எழுதாமலே இருந்து விட்டாள். அவன் எதிர்பார்க்கவில்லை சந்திரன் அவளைத் தேடி அவள் இருக்குமிடத்திற்கே வந்து விடுவான் என்று.
அவன் அவ்விதம் வந்தது ராஜத்துக்கு மகிழ்ச்சி தான் அளித்தது. எனினும் தன் சிநேகிதிக்காக அவள் பரிந்து பேசினாள். பலன்தான் கிட்டவில்லை.
ராஜம்மாளுக்குச் சந்திரனைப் பிடிக்காமல் இல்லை. அவன் தோற்றமும் குணங்களும் பேச்சும் அவளுக்குத் திருப்தியே தந்தன. “தங்கம் காதலில் வெற்றி பெறவில்லை என்றால், அது தங்கத்தின் தவறுதான். சந்திரன் என்மீது அளவிலாக் காதல் கொண்டு விட்டதற்கு நானா பழி?” என்று அவள் தன் நெஞ்சோடு கூறிக்கொண்டாள்.
சந்திரன் ராஜம்மாளைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறான் என்ற செய்தி அறிந்ததும் தங்கம் பெருமூச்செறிந்தாள். அவள் உள்ளத்தில் பொறாமையும் ஆத்திரமும் ‘திகு திகு’ வென்று எரிந்தது.
“இந்த நோக்கத்தோடுதான் அவள் சிரித்துக் குலுக்கி அவன் கூட வலியவலியப் பேசினாள் போலிருக்கிறது!” என்றுதான் அவளால் எண்ணமுடிந்தது.
“தங்கம், நீ என்மீது வருத்தம் கொண்டிருக்கலாம். கோபப்படலாம். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? தலைவி சிறந்தவள் என்று நம்ப வேண்டிய காதல் தலைவன் தோழிதான் நல்லவள் என்று நினைக்க நேர்ந்துவிட்டால், அது யார் பிசகு? தலைவன் மீது தவறா? தலைவி பேரில்தான் தவறா? இதற்கு விடையை நீயேதான் கண்டு கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்த வரையில் நான் ஒன்று கூற விரும்பிகிறேன். உனக்காக நான் எவ்வளவோ வாதாடினேன். கடைசி வரையில், தோழி நல்ல தோழியாக விளங்கவே பாடுபட்டாள். அவ்வளவுதான்’ என்று ராஜம்மா எழுதினாள்.
அந்தக் கடிதத்தை ஆத்திரத்தோடு கிழித்தெறிந்தாள் தங்கம்.
சந்திரன் என்ன நினைத்தான் என்றும் தெரிந்து கொள்ள வேண்டியதுதானே? அவள் தங்கமாக இருக்கலாம். ஆனால், தங்கத்தின் தோழி வெள்ளியாக இருக்கவில்லையே! இணையில்லாத மாமணியாக அல்லவா வாய்த்துவிட்டாள். அதனால்தான், தங்கத்தின் தோழியை நான் என்னுடைய தோழியாய்–துணையாய் வாழ்வின் ஒளியாய் ஏற்றுக் கொண்டேன்’ என்று அவன் எண்ணினான்.
தான் செய்த முடிவுக்காகச் சந்திரன் வருத்தம் கொள்ள நேர்ந்ததே இல்லை. ●
★ ‘மாத மலர்’–செப்டம்பர் 1988