உள்ளடக்கத்துக்குச் செல்

நெருப்புத் தடயங்கள்/ஒரு சொல்

விக்கிமூலம் இலிருந்து


ஒரு சொல்

வாசக நண்பர்கள், நான் வழிமறிப்பதற்காக மன்னிக்கவேண்டும். பொதுவாக என் படைப்புக்களுக்கு நான் முன்னுரைப் பீடிகை எதையும் போடுவதில்லை. என்றாலும், இந்த நாவலுக்கு, ஒரு சொல், சொல்லாமல் இருக்க முடியவில்லை.

இந்த நாவல், பிரபல வாரப்பத்திரிகையான தேவி”யில், தொடர்கதையாய் வெளிவந்தது. தொடர்கதை வேறு, நாவல் வேறு என்று மாறுபட்ட இந்தக் கால கட்டத்தில் இதை நாவல் வடிவாகவோ தொடர்கதை வடிவாகவோ, இன்றைய இலக்கியத் தமிழ்ப் பண்டிதர்கள் போல் டெக்னிக்கலாகப் பார்க்காமல், உள்ளதை உள்ளபடி சித்தரிக்கவே முயற்சி செய்திருக்கிறேன்.

நாட்டில் குறிப்பாக கிராமங்களில் நடைபெறும் அன்றாட அவல நிகழ்ச்சிகளில், நான் கேள்விப்பட்ட ஒசைப் படாத ஒரு நிகழ்ச்சிக்கு, யதார்த்தக் குறைவு ஏற்படாமல், கலைவடிவம் கொடுத்திருக்கிறேன். இந்தச் சமயத்திலும், ‘அந்த ’ நிகழ்ச்சியை நினைக்கும்போது, அதை எதிர்க்காமல், குற்றவுணர்வில், பேணா வீரத்தைக் காட்டியிருக்கிறேனே என்றுகூட எனக்குத் தோன்றுகிறது. ஆனாலும் அந்த நிகழ்ச்சி, சமூகத்தைப் பிடித்துள்ள ஒரு நோயின் அறிகுறி தானே அல்லாது, நோயல்ல என்று கருதியும், நோயை விரட்டினால், அறிகுறிகள் அடையாள மற்றுப் போய்விடும் என்ற நம்பிக்கையோடும் உங்களிடையே, சோகத்தை சுவையாக்காமல், அதில் ஒரு தார் மீகக் கோபத்தையும், யதார்த்த சித்தரிப்பில், தோல்வி மனப்பான்மையை ஏற்படுத்தாமல், எதிர்ப்புணர்வையும், எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த சமூக அமைப்பின் போலித்தனம் புரியவைக்கப் பட்டிருந்தால், அப்போது தான், நான், இந்த படைப்புபற்றி பெருமிதப்படலாம். இந்த நாவலில் வரும் கலாவதி போன்றோர் காலாவதியாகிறார்களே தவிர, இவர்கள் மீது எய்யப்படும் கொடுமைகள் காலாவதியாகவில்லை. இன்றைய வர்த்தகக் கலாச்சார சமூகம் பாழ்பட்டுப்போய், வர்க்க பேதமற்ற புதிய சமூகம் உருவாகும்போது, இன்றைய கொடுமைகள், அன்றைய தடயங்களாகத்தான் இருக்குமே தவிர, தடமாக இருக்காது என்று நம்புவதும், நான் இந்த நாவலுக்கு 'நெருப்புத் தடயங்கள்' என்று பெயரிட்டதற்கு ஒரு காரணம்.

'தேவி'யில் தொடர்கதைக்கு, கதைச் சுருக்கம் கொடுத்தபோது இந்த நாவலில் நடமாடும் தாமோதரனை, போலீஸ்காரர்களுக்கே இயல்பாகவுள்ள முரட்டுத்தனத்தோடுதான் படைத்திருந்தேன். 'தேவி' ஆசிரியர் திரு. ராமச்சந்திர ஆதித்தன், அந்த கேரெக்டருக்கு மனிதாபிமானம் கொடுக்கலாம் என்று பரிந்துரைத்தார். நானும் யோசித்துப் பார்த்தேன். 'எரிகிற வீட்டில், பிடுங்குவது ஆதாயம்' என்று ஆகிவிட்ட இந்தக் காலத்தில் எல்லாத் துறைகளும், 'துரைத்தனமாகத்தான்' நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள், இதர துறைகளை மோதினால், பணத்திற்குத்தான் 'ரிஸ்க்', அதே சமயம் காவல் துறையென்றால், உயிருக்கே ரிஸ்க் என்பதால் அது, அரசின் வெளிப்பாட்டு சக்தியாக (Visible power) இயங்கு கிறது. இங்கேயும், தனிப்பட்ட முறையில், எத்தனையோ நல்லவர்கள் உள்ளார்கள். அதோடு, மூடத்தனத்தை தன்மானமாகவும், போக்கிரித்தனத்தை வீரமாகவும் கொண்டுள்ள நிலப்பிரபுத்துவக் குடும்பத்தில், அரசுப் பணிக்கு முதன்முதலாகச் செல்லும் இளைஞன், அந்தக் குடும்பத்தின் வறட்டுக் கௌரவத்திற்கு பகடைக்காயாவதுண்டு. இதில் அவனுக்கு உடன்பாடு உண்டா, இல்லையா என்பது தான் பிரச்னை, உடன்பாடு காண முடியாதவன். சிந்தனை சித்ரவதைக்குள் அகப்படுவதைத் தவிர, வேறு வதைகளுக்கும் உட்படுவான். இப்படிப்பட்ட இளைஞர்களில் ஒருவனாக, தாமோதரனை சித்தரிக்கலாம் என்றும், நான் 'பின்யோசனை' செய்தபோது தோன்றியது.

இப்போது நினைத்துப் பார்த்தால், தாமோதரனை, மனிதாபிமான விரோதியாகக் காட்டியிருந்தால் சரியாய் இருக்காது என்றே கருதுகிறேன். பாவப்பட்ட இந்தக் காலத்தில், பத்திரிகை ஆசிரியர்களின் பார்வை விரிசலாகிக் கொண்டிருக்கும்போது, விரிவான பார்வையோடு, முழுச் சுதந்திரமாய், என்னை எழுதவைத்த, ‘தேவி’ ஆசிரியர், திரு. இராமச்சந்திர ஆதித்தன் அவர்களுக்கு, மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். முன்பும், ‘ஊருக்குள் ஒரு புரட்சி’ அவரது முன்னோடிப் பார்வையால்தான் உதயமானது. இதேபோல், தேவியின் உதவியாசிரியர் திரு. ஜேம்ஸ், அத்தியாயம் அத்தியாயமாய் விழர்சித்து, எனக்கு அதிக யோசனைகள் வழங்கினார். ‘தேவி’யில் வந்த இரண்டு தொடர்கதைகளின் வெற்றிக்கான காரணங் களில், ‘ஜேம்ஸ்’ என்ற உச்சரிப்பும் ஒன்று. ‘தேவி’யில் படித்து முடித்ததும் அந்த பத்திரிகைக்கும் எனக்கும் கடிதங்கள் எழுதிய ஆயிரக்கணக்கான வாசகர்களுக்கு, என் நன்றி.

வழக்கம்போல், என் ஆஸ்தான பதிப்பகம் மணிவாசகர் பதிப்பகமே, இந்த நாவலையும் வெளியிடுகிறது. எழுத்தாளன் படைப்புகள், நூலகங்களுக்கு ‘ஆர்டரானால்’தான் அரங்கேறும் என்ற நிலை எனக்கு எப்போதும் வந்ததில்லை என்றால், அதற்கு ஒரு காரணம் ஒரே காரணம் திரு. ச. மெய்யப்பன் அவர்கள் தான். நான் பெறும் வெற்றியை தான் பெற்றதாக நினைக்கும் இனிய நண்பர். பதிப்பகத் துறையின் ஒரு சில அத்திப் பூக்களில் ஒரு பூ.

இதேபோல், திரு. ச. மெய்யப்பனின் உதவியாளர்களான பிரபல நாவலாசிரியரும், பத்திரிகையாளருமான, திரு. க. நாராயணன் அவர்களும், திரு. குருமூர்த்தி அவர்களும் பல படைப்புக்கள், அச்சேறுவதற்கு முன்பே, அரும் பெரும் யோசனைகளைச் சொன்னவர்கள். ஒவ்வொரு கட்டத்திலும், என்னைக் கலந்தாலோசிக்கும் இலக்கிய சகாக்கள். இவர்களுக்கும் கடப்பாடுபட்டுள்ளேன். படைப்பு என்பது ஒரு கூட்டு முயற்சி என்பதாலேயே மேலே சில விவரங்களையும், நண்பர்களையும் கோடிகாட்டி இருக்கிறேன்.

நல்லது; படித்துப் பாருங்கள்; பிறகு, நல்லது, கெட்டதை, எழுதிப் போடுங்கள்.

அன்பன்,
சு. சமுத்திரம்.