உள்ளடக்கத்துக்குச் செல்

நெருப்புத் தடயங்கள்/எழுத்தாளரும் பதிப்பாளரும்

விக்கிமூலம் இலிருந்து

எழுத்தாளரும் பதிப்பாளரும்

பேராசிரியர்

ச. மெய்யப்பன், எம். ஏ.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

சு. சமுத்திரம் அவர்கள் சமீப காலத்தில் புகழ் பெற்றுவரும் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். இவரது மூன்று சிறுகதைத் தொகுதிகளை ஒருசேர ஒரே நேரத்தில் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டது. சிறந்த திறனாய்வாளர்களாகிய டாக்டர் கைலாசபதி, டாக்டர் சிவத்தம்பி, டாக்டர் நா. வானமாமலை ஆகிய அறிஞர் பெருமக்கள் மிகச்சிறந்த மதிப்பீடுகளை சிறு கதைகளுக்கு அளித்துள்ளனர். அவை இவர்தம் படைப்பாற்றலுக்குக் கட்டியம் கூறுகின்றன. ஆசிரியர் சமுத்திரத்தின் பத்து நூல்களைத் தொடர்ந்து மணிவாசகர் பதிப்பகம் மிகுந்த பெருமையுடன் வெளியிட்டுள்ளது.

எழுத்தாளருடைய எழுத்தும் கருத்தும் பரவுவதற்குப் பதிப்பகங்கள் பல்வகையில் துணை செய்கின்றன. இந்த ஆசிரியரின் நூலை இந்தப் பதிப்பகம்தான் வெளியிடும் என்ற நம்பிக்கையினை உண்டாக்கி, அவ்வாசிரியரின் புதிய படைப்புக்களை வரவேற்பதற்கான சூழ்நிலையை உண்டாக்குவன பதிப்பகங்கள். ஆசிரியரது நூல்களைத் தொடர்ந்து வெளியிடுவதன் மூலம் ஆசிரியரின் வளர்ச்சிக்கு உதவு:கின்றன. சிறந்த ஒரு பதிப்பகம் ஒரு ஆசிரியரின் நூலைத் தொடர்ந்து வெளியிடுவதால், மிகப் பெரிய வாசகர் குழுவினையும் எழுத்தாளருக்கு மதிப்பினையும் பெருகச் செய்வதுடன் படைப்பதற்கு ஊக்கத்தையும் அளிக்கிறது. நல்ல பதிப்பகங்களே நல்லாசிரியரை இனங்கண்டு நாட்டிற்கு அறிமுகப்படுத்த முடியும். ஆசிரியரின் தொண்டு தொடர்வதற்குத் துணையாக நிற்கும்.

சுத்தானந்த பாரதியாருக்கு ஓர் அன்பு நிலையமும், வெ.சாமிநாத சர்மாவுக்கு பிரபஞ்சஜோதி பிரசுராலயமும், பாவேந்தர் பாரதிதாசனருக்கு செந்தமிழ் நிலையமும் பேரறிஞர் அண்ணுவுக்குத் திராவிடப் பண்ணையும். ம. பொ. சி அவர்களுக்கு பூங்கொடிப் பதிப்பகமும், தமிழ் வாணனுக்கு மணிமேகலைப் பிரசுரமும், வாரியாருக்கு வானதி பதிப்பகமும், அறிஞர் மு. வ. வுக்குப் பாரி நிலையமும், சிந்தனையாளர் ஜெயகாந்தனுக்கு மீனாட்சி புத்தக நிலையமும் களமாய் தளமாய் அமைந்தது போல, சமுத்திரம் அவர்களுக்கு மணிவாசகர் பதிப்பகம் இலக்கிய மேடையாக அமைந்துள்ளது.

'நான் வரவேற்கும் இலக்கியப் போக்குகள் கொண்ட படைப்புக்களை விரிவாக விமரிசனம் செய்வது என் வழக்கம். உணர்ச்சிக்கு ஆரோக்கியமான உணவாகவும் அறிவெல்லையை விஸ்தரிக்கிற சமூக ஆய்வாகவும் ஒரளவேனும் விளங்கினால் அக்கலைப் படைப்பை நான் வரவேற்பேன். சமுத்திரத்தின் கதைகள் பொதுவாக தற்காலச் சமுதாய அமைப்பின் முரண்பாடுகளையும் அவற்றின் நியாய அநியாயங்களையும் அலசிப் பார்க்கிற சமுதாய ஆய்வு நிரம்பியதாக உள்ளது. இவ்வாய்வின் விளைவுகள் கற்பனை, கலையுணர்வு, கலைத்திறன் ஆகிய ஊடகங்களின் வழியே கலைப்படைப்பாகின்றன. ஒரு தத்துவார்த்தக் கண்ணோட்டம் இருப்பதால் இப்படைப்புக்கள் வக்கரித்து நிற்பதில்லை. புற உண்மைகளை கலை உண்மைகளாக மாற்றுவதில் வெற்றி பெறுகின்றன' என டாக்டர் நா. வானமாமலை அவர்கள் சமுத்திரத்தின் கதைகளைத் திறனாய்வு செய்கிறார்.

சமுத்திரத்தின் படைப்புக்களைப் பல்கலைக் கழகங்கள் பாடநூலாக ஏற்றுக்கொண்டுள்ளன. பத்திரிகைகள் இவரது படைப்புக்களை விரும்பி வெளியிடுகின்றன. இவர் சிறந்த வாசகர் அணியினை உருவாக்கி வருகிறார். இவரது படைப்புக்கள் பல்கலைக்கழக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் படுகின்றன. சமூகப் பொறுப்புடன் எழுதும் சமுத்திரம் படைப்புக்களில் சமூகப் பார்வை மிகத்துல்லியமாக உள்ளது. பிரச்னைகளை அணுகும் முறையில் தனித்தன்மை காணப்படுகின்றது. ஆசிரியரின் கருத்து வெளிப்பாடு குழப்பமின்றி தெளிவான நடையில் உள்ளது. ஆழங்காண முடியாத மக்கள் சமுதாயத்தின் உணர்வு அலைகளை ஓவிய மாக்குவதில் சமுத்திரத்தின் படைப்புக்கள் சமுத்திரம் போன்று அகன்று பரந்து விரிந்து உள்ளது.

மேல் மட்டத்தில் வாழ்பவரது ஆதிக்க எண்ணங்கள், சர்வாதிகாரப் போக்குகள், எண்ணத் தடிப்புகள், ஏழை எளிய மக்களை எவ்வாறு சுட்டெரிக்கின்றன, வாட்டி வதைக்கின்றன என்பதனை ‘நெருப்புத் தடயங்கள்’ ஓவியமாக்குகின்றது. மனிதனின் வாழ்வு தாழ்வு மட்டுமல்ல; எண்ணக் குமுறல்கள் எழுத்தோவியம் ஆக்கப்பட்டுள்ளது. படுபாதாளத்தில் பரிதவிக்கும் மக்கள் கூட்டத்தின் மன நோவுகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன.

நவநவமான சிந்தனைகளைத் தமிழுக்கு வழங்கி வரும் சமுத்திரம், தமிழ் இலக்கியத்திற்கு கிடைத்த சமுத்திரம் ஆவார்.