நெருப்புத் தடயங்கள்/அணிந்துரை
அணிந்துரை
டாக்டர் மா. இராமலிங்கம், எம். ஏ., பி எச். டி.,
“எழில் முதல்வன்’
தமிழ்த் துறைத் தலைவர்,
அரசு ஆடவர் கல்லூரி, கும்பகோணம்
I
சிக்கலும் குழப்பமும் நிறைந்த இன்றைய வாழ்க்கையில் ஏற்படும் எந்தப் பிரச்சினையையும் விவாதிக்க இடம்தரும் பொதுமேடையாக நாவல் ஒன்றே பயன்பட்டு வருகிறது. இலக்கிய வடிவங்கள் பலவற்றுள் எல்லார்க்கும் உரிய மக்கள் இலக்கிய வடிவமாக இதுவே விளங்கிவருகிறது. எனவே, பெரும்பாலான மக்களோடு உறவாட நினைக்கும் இலக்கியக் கலைஞன் இதனையே தம் வெளியீட்டு ஊடகமாக மேற்கொள்கிறான்.
தோழர் சமுத்திரம் சமூக நனவுடைய ஒர் எழுத்தாளர். தாம் அடைய வேண்டிய இலக்கையும் செல்ல வேண்டிய நெறியையும் அவர் தெளிவாகவே உணர்ந்திருக்கிறார். வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கி, மனித உறவுகளையும், அவற்றிடையே விளையும் போராட்டங்களையும் உள்ளது உள்ளவாறே வெளிக் கொணருகிற அவரது கூரிய ஆற்றல் அவரை மிகச் சிறந்த மனித நேயராக நமக்கு இனம்-காட்டுகிறது. பல ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய காகித உறவு” என்னும் சிறு கதையைப் படிக்க நேர்ந்தபோதே அவரது படைப்புகளோடு எனக்கு இலக்கிய உறவு ஏற்பட்டு விட்டது. "நெருப்புத் தடயங்கள்" மூன்று குடும்பங்கள் சம்பந்தப்பட்ட கதை. காதலர் இருவர் உடன்போக்காகச் சென்று விட்டதையும், அதனால் விளைந்த சிக்கல்களையும் கதை சித்திரிக்கிறது. இந்தச் சிக்கலையும் குடும்ப வட்ட அளவினதாக அதன் பரிமாணத்தைக் குறுக்கிவிடாமல், சமுதாயம் தழுவிய மாபெரும் போராட்டமாக சமுத்திரம் உருப்பெருக்கிக் காட்டுகிறார். அதிகார வர்க்கத்திற்கும் அப்பாவியான பொது மக்களுக்கும் இடையே நடக்கும் 'பாரதப் போர்' என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
மனித வாழ்க்கை இடையறாத போராட்டங்களின் சங்கிலிப் பிணைப்பாகவே விளங்குகிறது. இப் போராட்டக் களத்தில் சாதாரண மனிதனே கூட வெறும் பார்வையாளனாக நிற்க முடியவில்லை; பங்கு பெறுவோனாக மாற வேண்டியுள்ளது. இந்த நிலையில் இலக்கியக் கலைஞன் வாளா இருக்க முடியுமா? ஏதோ ஒரு பக்கத்திற்காகக் களத்தில் இறங்கியே ஆதல் வேண்டும். தோழர் சமுத்திரம் இந்த நவீன பாரதப் போரில் யார் பக்கம் நிற்கிறார் என்பதை நான் சொல்லியா நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்? அவர் மக்கள் பக்கமே. போராட்டத்தின் இறுதியில் மக்கள் சக்தியே வெற்றி பெறும் என்னும் நம்பிக்கையை ஊட்டும் வகையில் நாவலின் முடிவு அமைந்துள்ளது.
உணர்ச்சி மயமான நாடகக் காட்சிகளைப் படைத்துக் காட்டி, அக் காட்சிகளின் வாயிலாகவே கதையை நகர்த்திச் செல்வது சமுத்திரத்தின் பாணியாக உள்ளது. மனத் தடத்தில் அழுத்தமாகப் பதியும் கதை மாந்தர்கள். அவர்தம் இயல்பான பேச்சு வழக்குகள்-இவை இரண்டும் சமுத்திரத்திற்கு இலக்கிய வெற்றியை ஈட்டித் தரும் கூறுகளாக விளங்குகின்றன. கதையின் மையப் பாத்திரமாகிய தமிழரசி சமூகக் கொடுமைகளோடு போராடும் போராட்டச் சக்தியின் குறியீடாகப் படைக்கப்பட்டுள்ளாள். அப்பாத்திரத்தின் மனவளர்ச்சியையும் மாற்றத்தையும் ஆசிரியர் படிப்படியே நுணுக்கமாகக் காட்டிச் செல்கிறார். பட்டிமன்றத்து வாய்ச்சொல் வீராங்கனையாக இருந்த அவள்-மகிஷாசுரர்களை வதைக்கவல்ல பராசக்தியாக எப்படி மாறினாள் என்பதைச் சமுத்திரம் காட்டும் திறம் போற்றத்தக்கது. 'பைத்தியக்கார தர்மரு' என்று கூறப்படும் மாடக்கண்ணு கதையில் அதிகம் பேசவே இல்லை. அதிகம் பேசாத அப்பாத்திரமே கதையின் வலிவிற்கு அழுத்தம் கொடுக்கிறது. இதுவும் சமுத்திரத்தின் வெற்றியோ!
III
V
ஆசிரியர் கதை மாந்தர் கூற்றாக ஆங்காங்கே சுட்டிச் செல்லும் சில நடைமுறை இலக்கிய விவகாரங்கள் தேவையற்றவை; சிலவற்றில் எனக்கு உடன்பாடும் இல்லை. “தக்காரும் மிக்காரும் இல்லாத தனிப்பொருள் (தனிப் பெரும்) படைப்பாளியான விந்தன் திறனாய்வாளர்களாலும் முட்டாள் வாசகப் பரப்பாலும் அமுக்கப்பட்டு விட்டதாக (பக்., 117) சமுத்திரம் குற்றம் சாட்டுகிறார். யாரும் யாரையும் அமுக்கிவிட முடியாது. திறமான புலமையெனில் எத்தனை பேர் சேர்ந்து அமுக்கினாலும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு விடும் ஆற்றல் அதற்கு உண்டு.
V
இறுதியாக ஒரு குறிப்பு–
நம் நாட்டுப் புராணங்கள் சிலவற்றில் வடமுகாக்கினி என்பது பற்றிச் சில குறிப்புகள் வருகின்றன.
வடமுகாக்கினி என்பது குதிரையின் முகம் போன்ற வடிவுடைய தீ! அது சமுத்திரத்தின் உள்ளே இருந்து புறப்பட்டு மெல்ல மெல்ல வந்து கொண்டிருக்கிறதாம். அது முழுமையாக வெளிப்பட்டு விட்டால் மகா பிரளயம். நிகழ்ந்து புதிய உலகு தோன்றுமாம்.
“சமுத்திரத்'தின் நெருப்புத் தடயங்களை நான் ஒரு. வடமுகாக்கினியாக உருவகம் செய்து பார்க்கிறேன்.
ஒரு மகத்தான சமுதாயப் புரட்சியையும், அதன் விளைவான புதிய உலகத்தையும் நமக்கு நினைவூட்டி நம்பிக்கை கொள்ளச் செய்கிறார் சமுத்திரம்!
தோழர் சமுத்திரம் வாழ்க! அவரது இலக்கியப் படைப்புகள் வெல்க!